டாக்டர் சுப்ரமணியன் சுவாமியை, நிதியமைச்சராக்க வேண்டும்…


யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அடுத்த
5 ஆண்டுகளுக்கு மோடிஜி தலைமையிலான பாஜக ஆட்சி
தான் என்பது உறுதியாகி விட்டது.

இந்த நிலையில், நாட்டில் நல்ல நிர்வாகத்தை உருவாக்கிட
எதெது உதவும் என்பதைத்தான் யோசிக்க வேண்டி இருக்கிறது.

பொருளாதாரம் சீர்குலைந்திருப்பதும், வேலையின்மை
பெருகி இருப்பதும் கவலை தரும் விஷயங்கள். ரூபாயின்
மதிப்பில் கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக 4% வீழ்ச்சி
அடைந்திருக்கிறது.

பாஜகவில் பொருளாதாரம் தெரிந்தவர்கள் மிகக்குறைவு.
திரு.அருண் ஜெட்லியின் மறைவிற்குப் பிறகு,
யெஸ்வந்த் சின்ஹாவும் வெளியேறி விட்ட நிலையில்,
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ஒருவரே எஞ்சுகிறார்.

டாக்டர் சுவாமி, பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து,
அடிக்கடி பல யோசனைகளை, தெரிவித்து வருகிறார்.
இதுவரை, மோடிஜி அரசு அவற்றில் எதையும் காதில்
போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை.

நேற்றைய தினம் சண்டிகரில், செய்தியாளர்களிடம்
பேசும்போது, 3 முக்கியமான யோசனைகளை தெரிவித்திருக்கிறார்…

1) வருமான வரி முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.

2) வங்கிகளில் போடப்படும் நிரந்த வைப்புத் தொகையின்
( fixed deposits in bank ) வட்டிவிகிதத்தை 9 சதவிகிதமாக
உயர்த்த வேண்டும்.

3) வங்கிக் கடன்கள் மீதான வட்டிவிகிதத்தையும்
9 சதவிகிதமாக குறைக்க வேண்டும்.

இவை மூன்றுமே அற்புதமான யோசனைகள் தான்
என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இவற்றால் பொருளாதாரம் மேம்படும் என்பதும் உண்மை தான்.
ஆனால், இதைச் நடைமுறைப்படுத்துவது எப்படி
என்பது சுப்ரமணியன் சுவாமி மட்டுமே அறிந்த வித்தை.

– எனவே, அவரைப் பயன்படுத்திக் கொள்வது
பாஜக ஆட்சிக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் நல்லது
என்று தோன்றுகிறது.

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி நீண்ட நாட்களாகவே தன்னை
நிதியமைச்சராக நியமிக்கும்படி கேட்டுக் கொண்டே இருக்கிறார்.
ஆனால், மோடிஜி – பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,
சிறந்த பொருளாதார நிபுணருமான இவரை அமைச்சரவையில்
சேர்த்துக் கொள்ள தயங்குவது ஏன் என்பது புரியாத புதிராகவே
இருக்கிறது.

அருண் ஜெட்லி இருந்த வரை, இவரை சேர்க்காமல்
இருந்ததற்கு ஓரளவு காரணம் இருந்தது.

ஆனால், இனியும் டாக்டர் சுவாமியை ஒதுக்கி வைப்பது சரியாக
இருக்காது. நாட்டின் பொருளாதாரம் சீரடைய, டாக்டர் சுவாமியை
அரசு நிர்வாகத்தில் பயன்படுத்திக் கொள்வதே சரியாக இருக்கும்.

டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைப்பற்றி, நமக்கு பலவித
விமரிசனங்கள் உண்டு. இந்த தளத்திலேயே நிறைய
விமரிசனங்களை முன்வைத்திருக்கிறோம்.

இருந்தாலும், நாட்டின் இன்றைய பொருளாதாரம் நம்மை
கவலைக்கு உள்ளாக்குகிறது. எனவே, நமது விருப்பு, வெறுப்புகளை
தனியே ஒதுக்கி வைத்து விட்டு, மோடிஜி அரசுக்கு வேண்டுகோள்
விடுக்கிறோம் – ” டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் திறமையை
பயன்படுத்திக் கொள்ளுங்கள்… அவரை மத்திய நிதியமைச்சராக
நியமியுங்கள் ” என்று….

மோடிஜி தயங்குகிற அளவிற்கு, அப்படியென்ன பாதிப்பை
சு.சுவாமியால் ஏற்படுத்தி விட முடியும். ஒருவேளை சுவாமியின்
யோசனைகள் எதிர்பார்க்கும் பயனைக் கொடுக்கவில்லையென்றால் –
அல்லது அவரால் வேறு வித பிரச்சினைகள் உருவானால்,
அவரை எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றி விடலாமே…?
அந்த அதிகாரம் பிரதமரிடம் எப்போதும் இருக்கிறதே…

டாக்டர் சுவாமிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்க வேண்டும்
என்பதே நமது விருப்பம்.

விமரிசனம் தள வாசக நண்பர்களும் இந்த கருத்தினை
ஏற்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

.
———————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to டாக்டர் சுப்ரமணியன் சுவாமியை, நிதியமைச்சராக்க வேண்டும்…

 1. புதியவன் சொல்கிறார்:

  சுவாமி நிறைய தெரிந்தவர்தான். இந்த சப்ஜெக்டில் ஆலோசனை சொல்ல சரியானவர்தான். ஆனா அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்த பிறகு என்ன பேசிச் சமாளிப்பார்னுதான் தெரியலை.

  வருமானவரி இல்லாம எப்படி நாட்டை நடத்த முடியும்? எந்த நாட்டிலும் இல்லாத புதுவிதமான ஐடியாவாகனா இது இருக்கு.

  வங்கி வட்டித்தொகையை அதிகமாக்குவது என்னைப் பொறுத்தவரையில் ஓய்வு பெற்றுவிட்டவர்களுக்கு உபயோகப்படும். பண மதிப்பு இழக்கும்போது வட்டி மட்டுமே அவர்களுக்குச் சோறிடுகிறது என்பதால் அதன் தாக்கம் அவர்களுக்கு இருக்கும்.

 2. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

  சார், வருமாண வரி ஒழித்துவிட்டால் அரசுக்கு வருமானம் எப்படி வரும், மற்ற இரண்டு ஆலோசனைகளும் வரவேற்க வேண்டியது அதன் மூலம் அரசின் கையிருப்பு உயரவும் நிறைய வாய்ப்பு இருக்கிறது, ஆனால் வருமான வரி இல்லாமால் எப்படி சார், கொஞ்சம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   ஜி.எஸ்.ஆர்.,

   டாக்டர் சுவாமியிடம் தான் இதற்கு முழுமையான
   விளக்கம் கிடைக்க முடியும்.

   எனக்கு கிடைத்த அனுமானம் + என்னுடைய கருத்தை
   நான் கீழே தருகிறேன் –

   பொதுவாக – மாத வருமானம் பெறுபவர்கள் மட்டும் தான்
   Tax Deduction at Source மூலம் ஒழுங்காக வருமான வரி
   கட்டுகிறார்கள். மீதி அனைத்தும் போலியே…

   வக்கீல்கள், டாக்டர்கள், நடிகர்கள், வணிகர்கள்,
   தொழிலதிபர்கள், என்று சமூகத்தில் பெரிய அளவில்
   சம்பாதிப்பவர்கள் யாரும் உண்மையான
   வருமானத்தை காட்டுவதில்லை; வரியும் ஒழுங்காக
   கட்டுவதில்லை.

   திரு.அருண் ஜெட்லி, 2 ஆண்டுகளுக்கு முன்பு
   பாராளுமன்றத்தில் சொன்னது –
   இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில்
   சுமார் 2 % மக்கள் மட்டுமே வருமான வரி
   செலுத்துகிறார்கள்.

   வருமானத்திற்கு வரி விதிப்பதற்கு பதிலாக,
   செலவிற்கு வரி விதிக்க – transaction tax -என்று ஒன்றை அறிமுகப்படுத்த சுவாமி விரும்புகிறார்.
   அதாவது, உயர் பணப்பரிமாற்றங்களுக்கு,
   மிகச்சிறிய அளவில் – ஒரு சதவீதத்திற்கும் கீழே –
   ஒரு வரியை அறிமுகப்படுத்த விரும்புகிறார்.

   இதன் மூலமாகவும் –
   சேமிப்பிற்கு அதிக ஊக்கம் (9% வட்டி…) கொடுப்பதன்
   மூலமாகவும், எந்தவித கட்டாயமும் இல்லாமல்
   மக்கள் தாங்களாகவே சேமிக்கும் பழக்கத்தை
   வளர்த்துக் கொண்டு விடுவார்கள்.

   இப்போதைய அரசு, மக்கள் தங்கள் சேமிப்பை
   பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டுமென்று
   விரும்புகிறது; மறைமுகமாக வற்புறுத்தவும் செய்கிறது.

   ஆனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்ய சாதாரண
   மக்கள் பயப்படுகிறார்கள். பங்கு மார்க்கெட்டில் அவர்களுக்கு
   நம்பிக்கை இல்லை. மாறாக, அவர்கள் வங்கியில்
   Fixed Deposit -ல் சேமித்து, அதை வங்கிகள் தங்கள்
   பொறுப்பில், வர்த்தக நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதை
   வரவேற்கிறார்கள்.

   எனவே, இதில் மக்களின் தன்னிச்சையான சேமிப்பு கூடும்.
   வர்த்தக நிறுவனங்களுக்கு, வங்கிகளின் மூலம்
   தேவையான முதலீடுகள் கிடைக்கும்.

   வருமானத்திற்கு வரியே இல்லை என்னும்போது,
   யாரும், எந்த வருமானத்தையும், மறைக்க வேண்டிய
   அவசியம் இருக்காது. கருப்புப்பணம் சுத்தமாக தொலைந்து
   விடும்.மக்கள் கையில் பணம் கூடுதலாக இருக்கும்.
   வாங்கும் சக்தி அதிகரிக்கும்.
   இறுதியில் இது – உற்பத்தியை பெருக்கும்.
   புதிய வேலைகளை உருவாக்கும்.

   ஒரு vibrant market உருவாகும்.
   consumer goods களின் விற்பனை அதிகரிக்கும்.

   அவர் மீது நமக்கு பல விஷயங்களில் குறைகள் இருக்கின்றன.
   ஆனால், அவற்றை ஒதுக்கி விட்டு பார்த்தால் –
   டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ஒரு சிறந்த பொருளாதார
   நிபுணர் என்பதில் ஐயம் இல்லை. எனவே,
   அவரது கொள்கைகளை முயற்சி செய்து பார்ப்பதில்
   தவறு இல்லை.

   பொருளாதாரமே தெரியாத, யார் யாரோ வந்து
   பொருளாதாரத்தை குட்டிச்சுவராக்கி விட்டார்கள்.
   இந்த நிலையில் சு.சுவாமி புதிதாக –
   எதைக் கெடுத்து விடப்போகிறார்..?

   அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்க வேண்டும்
   என்பதே என் கருத்து.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Subramanian சொல்கிறார்:

    நீங்கள் சொல்வது சரியே.
    டாக்டர் சுப்ரமணியன்சுவாமியின் மூலம்
    ஒரு வித்தியாசமான முயற்சியை நாம்
    செய்து பார்ப்பதில் தவறொன்றுமில்லை.

    எந்த வித கட்டாயமோ, பயமோ இன்றி,
    ஒளிவு மறைவு இல்லாமல் நம் வருமானம்,
    செலவு அத்தனையையும் வெளிப்படையாக
    மேற்கொள்ளலாம் என்கிற எண்ணமே
    ஒரு பெருத்த நிம்மதியையும்,
    சுதந்திர உணர்வையும் தருகிறது.

    வரவேற்க வேண்டிய முயற்சி தான்.
    ஆனால் பாஜக தலைமை அவரை
    அரசாங்கத்தின் உள்ளே நுழைய விடுமா ?
    முயற்சியில் வெற்றி பெற்றால்
    தலைமைக்கே வேட்டு வைக்கக்கூடியவர் ஆயிற்றே !

   • ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

    நன்றி சார், இப்ப ஓரளவுக்கு கிளாரிட்டி கிடைச்சுருக்கு ஆக சரியான திட்டமிடலுடன் முயற்சி செய்தால் பலன் கிடைக்கலாம்

 3. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

  வருமான வரி முறையை ஒழிப்பதாக இருந்தால், அரசு சேவைகள் அனைத்தும் கட்டணமயக்கபட வேண்டும் அதாவது கிராம நிர்வாக அலுவரிடம் ஒரு சான்றிதல் பெறுவதற்கு ஒரு தொகையை நிர்ணயிப்பார்கள், பஸ்கட்டணம், இரயில் கட்டணம், இப்படி அரசு சேவைகள் அனைத்தும் கட்டண சேவையாக மாற்றப்படும் போது வருமான வரி இழப்பை சரிக்கட்ட முடியும் என்று நினைக்கிறேன்,

 4. Jksmraja சொல்கிறார்:

  KM சார்,

  பொருளாதாரம் என்கிறீர்கள், மந்தநிலை என்கிறீர்கள், சீர்குலைந்திருக்கிறது என்கிறீர்கள், வேலை இல்லா திண்டாட்டம் பெருகி இருக்கிறது என்கிறீர்கள், எனக்கு ஒன்றுமே புரியமாட்டேன் என்கிறதே சார். ஒரே குழப்பமாக இருக்கிறதே சார்.

  டிவி விவாதங்களில் கலந்து கொள்ளும் வலதுசாரி சிந்தனையாளர்கள், நமது பொருளாதாரம் அமெரிக்காவை மிஞ்சிவிட்டது, ஆஸ்திரேலியாவை மிஞ்சிவிட்டது, அடுப்பங்கரையை மிஞ்சிவிட்டது, என்று அடித்து சொல்வதை பார்க்கும் போதும், தமிழ் நாட்டின் அடுத்த ஆளும் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ்ஸை சேர்ந்த உலக பொருளாதார மேதை முனைவர் பாட்சா போன்றவர்கள், ஆணித்தரமாக பேசுவதை பார்க்கும்போது, நீங்கள், உள் நோக்கத்தோடு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவேண்டும், என்பதற்க்காக எழுதும் ஆன்டி இந்தியன் என்பது புரிகிறது.

  டிவி விவாதங்களில் எதிர் தரப்புதான் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கிறது என்று பிரதமரே சொல்லிவிட்டார், நிதி மாதிரியே சொல்லிவிட்டார் என்று கூக்குரல் இடுகிறார்கள். ஆட்டோ இண்டஸ்ட்ரி சரிகிறது, வேலைவாய்ப்பை இழக்கிறார்கள், என்று லபோ லபோன்னு கத்தும் போது சிரிப்பு சிரிப்பா வருது சார். அவனவன் இருபது லட்சம் முப்பது லட்சம் கொடுத்து எலக்ட்ரிக் கார் வாங்க, புக் பண்ணி நீண்ட வரிசையில் காத்துக்கொன்டு இருக்கும்போது பிஸ் கோத்து ஐந்து லட்சம், ஆறு லட்சம், மதிப்புள்ள கார் விற்பனை ஆகவில்லை என்பது எவ்வளவு பெரிய மடத்தனம். இன்றய classroom2007
  வலைத்தளத்தை பாருங்கள், புரியும்.

  பிஸ் கோத்து ன்னு எழுதும் போதுதான் நீங்கள் ஐந்து ரூபாய் பிஸ் கோத்து விற்கவில்லை என்று எழுதிய இடுக்கை நினைவில் வந்தது. நாளைக்கு tha same classroom2007
  வலைத்தளத்தை பாருங்கள். ஐந்து ரூபாய் பிஸ் கோத்தை நாய் கூட தின்னாது. அவனவன் நரேந்திர மோடி ஆட்சியில் ஐந்நூறு ரூபாய் பிஸ் கோத்து மட்டும்தான் வாங்கி சாப்பிடுவார்கள் என்று புள்ளிவிவரத்தோடு படித்ததில் வியந்தது என்று வரும். போங்க சார் நீங்களும் உங்கள் பொருளாதாரமும். மிகசிறந்த கற்பனை வளம் மிக்க எழுத்தாளர்கள் எங்களிடம் லட்சக்கணக்கில் உண்டு.

 5. சக்தி சொல்கிறார்:

  ஏற்கனவே வருமானவரி இல்லாத நாடுகள் சில செயல்படுகின்றன.அமெரிக்க பல்கலை ஒன்று சில வருடங்களுக்கு முன்னர் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெயிட்டு,இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்,உள் நாட்டு முதலீடு அதிகரிக்கும்,…என்று பலவற்றை பட்டியலிட்டிருக்கிறது. அலாஸ்கா,நெவடா மாகாணங்களை சுட்டிக்காட்டி ,பிற வருவாய் ஆதாரங்களை வைத்து செயல்படுகிறது என்கின்றனர்.சென்ற ஆண்டு அறிக்கையின்படி 18 நாடுகளுக்கு மேல் வரி இல்லாமல் சிறப்பாக செயல்படுகின்றன.

  இந்தியாவில் இல்லாத வளங்களா? சுரண்டுவது தடுக்கப்பட்டால் ஆதாரம் கிடைக்கும்.

  WTTC அறிக்கையின்படி இந்திய சுற்றுலாத் துறை வருமானம் சென்ற ஆண்டு 16.91 லட்சம் கோடி (240 பில்லியன் US D), 9.2% GDP,42.873 மில்லியன் வேலைவாய்ப்பு (8.1%) ……….இது பிற ஆதாரங்களில் ஒன்று.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சக்தி,

   உங்கள் தகவல்களுக்கு நன்றி.
   இந்தியப் பொருளாதார விஷயத்தைப் பொருத்த வரை
   எவ்வளவோ பரிசோதனைகளை பண்ணிப்பார்த்து விட்டோம்.

   இதுவும் கொஞ்சம் நம்பிக்கையூட்டுகிற விதத்தில் இருக்கிறது.
   முயற்சி செய்து பார்க்கலாம் என்பது தான் என் கருத்தும்.

   இரண்டு மூன்று வருடங்கள் நடைமுறைப்படுத்தி பார்த்தால் தான்
   விளைவுகள் தெரிய வரும். அப்படி எதுவும் மோசமாகி விடாது.
   அப்படியும் மீறி நிகழ்ந்தால் –
   இருக்கவே இருக்கிறது; எதாவது ஒரு வரியை போட்டு
   தற்காலிகமாக சரி செய்ய வேண்டியது தான்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.