முன்னாளும்….இந்’நாளும்….!!! சரித்திரம் திரும்பும் விந்தை அரசியல்….!!!


முன்னாள் – இந்’நாள் ஆவதும்,
இந்’நாள் – முன்னாள் ஆவதும் …

– அரசியலில் சகஜமே என்பதை நிரூபிக்க இதைவிட
வலுவான உதாரணம் இருக்க முடியுமா…?

இதை விவரிக்கும் சுவாரஸ்யமான செய்திக் கட்டுரை
ஒன்று பிபிசி செய்தித்தளத்தில் வெளிவந்திருக்கிறது.

நமது வாசக நண்பர்களின் வசதிக்காக,
அதை கீழே மறுபதிவு செய்திருக்கிறேன்….
( நன்றி – பிபிசி செய்தித்தளம் )

———————————————————

அமித் ஷா 2010-இல் கைது செய்யப்பட்டபோது
நடந்தது என்ன?

தீமன் புரோஹித்
மூத்த பத்திரிகையாளர் – பிபிசி குஜராத்திக்காக
22 ஆகஸ்ட் 2019

————

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால்
முன்னாள் உள்துறை மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம்
புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

முன்னதாக ப.சிதம்பரத்தை கைது செய்வதில் இருந்து
இடைக்கால விலக்கு அளிக்க மறுத்த டெல்லி உயர்
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் சார்பில் தாக்கல்
செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இந்திய உச்ச
நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க மறுத்தது.

அதை தொடர்ந்து, ஆகஸ்டு 21ஆம் தேதி, இரவு
9 மணிக்கு சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதற்கு முன்பு வரை, 27 மணி நேரங்களுக்கு அவர்
எங்கு இருந்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை.


ப.சிதம்பரம்

தன் அறிக்கையை படித்த அவர், செய்தியாளர்களின்
கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. செய்தியாளர் சந்திப்பு
குறித்து அறிந்த சிபிஐ அதிகாரிகள், காங்கிரஸ் கட்சி
அலுவலகத்திற்கு விரைந்த நேரத்தில், சிதம்பரம்
தன்னுடைய டெல்லி இல்லத்தை அடைந்தார்.
செய்தியாளர்கள் அவரின் வீட்டில் வாசலில் இருந்த
நிலையில், ப.சிதம்பரம் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்.

இதுவரை பார்த்திராத ஒரு நாடகத்தை தலைநகரம் அன்று
பார்த்தது. அத்தனை பிரச்னைகளுக்கு நடுவே ப.சிதம்பரம்
கைது செய்யப்பட்டார். அவரின் கைது குறித்த காட்சிகள்
தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

ப.சிதம்பரம் போன்ற ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர்
ஏன் இவ்வாறு செய்தார்?


அமித்ஷா

இந்த கேள்விக்கான பதில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு
முன்பு நடந்த சம்பவத்தில் உள்ளது. இதே போன்ற ஒரு
சம்பவம் கடந்த 2010 ஆம் ஆண்டின், ஜூலை 25ஆம் தேதி
நடந்தது.

தற்போதைய உள்துறை அமைச்சரான அமித் ஷா, அப்போது,
குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்தார்.
சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார்.
இந்திய பிரதமர் மோதி, குஜராத்தின் முதல்வராக இருந்தார்.

சொராபுதீன் ஷேக் என்பவர்
என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டது தொடர்பாக,
அமித் ஷா மீது அதிக அழுத்தம் இருந்தது.
அந்த சம்பவம் ஒரு போலி என்கவுண்டர்
என்ற முக்கிய குற்றச்சாட்டை
அவர் எதிர்கொண்டு வந்தார்.

சிதம்பரத்தை தேடியது போலவே, அன்று அமித் ஷாவை
கைது செய்ய, கைது ஆணையுடன் சிபிஐ தேடியது.

அந்த சூழலில், அமித் ஷா நான்கு நாட்களுக்கு
காணாமல் போனார்.

அவரின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட
நிலையில், 2010 ஜூலை 24ஆம் தேதி அவர் தனது
பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.


அமித்ஷா

அடுத்த நாள், கான்பூரிலுள்ள பாஜக அலுவலகத்தில்
ஒரு முக்கிய செய்தியாளர் சந்திப்பு இருப்பதாகவும், அதில்
பங்கேற்கும்படி, செய்தியாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

எனக்கு கிடைத்த தகவலின்படி, அந்த சந்திப்பில்
அமித் ஷா இருப்பார் என்று கூறப்பட்டது.

ஆகஸ்டு 22ஆம் தேதி (நேற்று), ப.சிதம்பரம்
செய்தியாளர்களை சந்தித்தது போலவே, அன்றும் ஒரு
செய்தியாளர் சந்திப்பு நடந்தது.

ஒரு செய்தி நிறுவனத்தின் மூத்த செய்தியாளர் என்ற
முறையில், பாஜக அலுவலகத்திற்கு நேரலை செய்யும்
வசதி கொண்ட ஓ.பி வாகனத்துடன் நான் சென்றேன்.

எனக்கு கொடுக்கப்பட்ட தகவல் சரியாக இருந்தது.
அமித் ஷா அந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார்.
சிதம்பரம் செய்ததை போலவே, அவரும் தன் மீதுள்ள
குற்றச்சாட்டுகளை மறுத்தார். அப்போது ஆட்சியில் இருந்த
ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது அவர் குற்றம் சாட்டினார்.

அவர் அளித்த பதில்களிலேயே மிகவும் சுவாரஸ்யமானது,
செய்தியாளர் சந்திப்பில் கடைசியாக நான் அவரிடம்
கேட்ட கேள்வி, `இத்தனை நாள் நீங்கள் எங்கு இருந்தீர்கள்
அமித்ஷா பாய்?` என்பதுதான்.

அதற்கு, `என் வீட்டில்தான் தீமந்த் பாய்` என்று அமித்
ஷாசாதாரணமாக பதிலளித்தார்.

மிகவும் முக்கியமான அந்த செய்தியாளர் சந்திப்பு, அவரின்
பெரிய சிரிப்பு சத்தத்துடன் நிறைவடைந்தது.

ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள்,
அவரின் வீட்டின் மதில்களில் ஏறிக் குதித்து அவரை கைது
செய்யவேண்டி இருந்தது.

ஆனால், தான் காணாமல் போன நான்கு நாட்களில்,
அவ்வாறு சிபிஐ அதிகாரிகளை தன் பின்னால் ஓடவிடாமல்,
செய்தியாளர் சந்திப்பை முடித்த பிறகு, தானாக காந்திநகரில்
உள்ள சிபிஐ அலுவலகத்தில் சரணடைந்தார் அமித் ஷா.

ஒரு முழு இரவை, சிபிஐ அலுவலகத்தில் கழித்துள்ளார்
சிதம்பரம், உச்சநீதிமன்றம் இவரின் வழக்கை ஆகஸ்டு
23ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விசாரிக்க உள்ளது.

அன்று, அமித் ஷா சரணடைந்தவுடன், அவரை மணிநகரில்
உள்ள நீதிபதியின் இல்லத்திற்கு சிபிஐ அழைத்து சென்றது.
அவரை பிணையில் வைக்க சிபிஐ கோரவில்லை. பிறகு,
சபர்மதி சிறையில் அவர் காவலில் வைக்கப்பட்டார்.

பின்னர், குஜராத்திற்குள் நுழையக்கூடாது
என்ற நிபந்தனையுடன் அவரை நீதிமன்றம்
விடுதலை செய்தது. அதைத்தொடர்ந்து,
அமித் ஷா டெல்லியில் இருக்க, வழக்கு
மும்பையில் இருந்தது.

அதன் பின்னர் நடந்த அனைத்துமே வரலாறு தான்.

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to முன்னாளும்….இந்’நாளும்….!!! சரித்திரம் திரும்பும் விந்தை அரசியல்….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்… எத்தனையோ நிகழ்வுகளில் இதுமாதிரி ‘ஆனைக்கு ஒரு காலம் வந்தால்’ கதை நடந்திருக்கிறது.

  பரவாயில்லை…உப்பைத் தின்றவரோ அவருடைய அப்பாவோ தண்ணி குடித்தால் சரிதான்.

 2. Prabhu Ram சொல்கிறார்:

  மீண்டும், முன்னாள், இந்நாளாகவும்
  இந்நாள் முன்னாள் ஆகவும் எதிர்காலத்தில்
  வாய்ப்பு இருக்குமா ?

  • புதியவன் சொல்கிறார்:

   வயது இல்லை. வாய்ப்பும் இல்லை என்றே நினைக்கிறேன். 2026ல் அல்லது அதற்கடுத்த வருடம் அமித்ஷா பிரதமராக ஆக வாய்ப்பு இருக்கிறதோ?

   செல்வராஜு சார்.. இந்தப் பின்னூட்டத்தையும் நினைவில் வைத்திருங்கள்.

   • Selvarajan சொல்கிறார்:

    உமது ஒரே மாதிரியான கிறுக்கலை நினைவில் வைக்க வேண்டிய தேவையில்லை …
    யாம் சுட்டிக்காட்டியதின் நாேக்கம் கா.மை அவர்களின் அந்த இடுகை பதிவும் மறுமாெழிகளின்விளக்கமும் மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் .என்பதற்குமட்டுமே …. !

    • புதியவன் சொல்கிறார்:

     @செல்வராஜன் – பரவாயில்லை. கிறுக்கல்களிலும் அர்த்தம் இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட பழைய பின்னூட்டங்களை நீங்கள் எடுத்துப் போட்டிருக்கிறீர்கள் நன்றி. பொதுவா தன் கட்சியை ஆதரிக்காதவர்களை ஒருவருக்குப் பிடிக்காதது இயல்புதான். மாற்றுக் கருத்துகள் சொல்லும்போது கசப்பாகத்தான் இருக்கும்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    // 2026ல் அல்லது அதற்கடுத்த வருடம்
    அமித்ஷா பிரதமராக ஆக வாய்ப்பு இருக்கிறதோ?//

    ஏன் – அத்துடன் நிறுத்திக் கொண்டீர்கள்…?
    அமீத்ஜீ, மோடிஜிக்கு – 75 வயதைத்தாண்டி
    விட்டாரென்று கூறி,
    கட்டாய ஓய்வு (compulsory retirement..)
    கொடுத்து விடுவாரென்று நினைக்கிறீர்களா…? 🙂 🙂

    ———

    பின்னூட்டங்கள் எங்கேயோ துவங்கி,
    எங்கெங்கோ பயணித்துக் கொண்டிருக்கின்றன.
    இருந்தாலும், பழைய விஷயங்கள்
    சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன…
    (செல்வராஜனுக்கு நன்றிகள்…!!!)

    ——————-

    ஒரு சந்தேகம் –
    இந்த வார முன் ஜாமீன் நகர்வுகள்
    கையாளப்பட்ட விதம் – கேரளா பேட்டர்னில்
    அடுத்து ஒரு ஆளுநர் உருவாகி விட்டாரென்று
    தோன்ற வைக்கிறதோ…?

    எதுவும் சாத்தியமே…
    அரசியலில் மட்டுமல்ல….
    எந்த ——— துறையிலுமே….!!!

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

     //கேரளா பேட்டர்னில் அடுத்து ஒரு ஆளுநர் உருவாகி விட்டாரென்று
     தோன்ற வைக்கிறதோ…?// – செயலுக்கேற்ற கூலி. தான் நினைத்ததை சாதிக்க உதவிய எம்.கே நாராயணனுக்கு சோனியா பதவி வழங்கினார். அதுபோலத்தான் சதாசிவம் அவர்களுக்கும் நடந்திருக்கும்.

     ஆனால் இப்போது நடப்பது அப்படி அல்ல என்று நினைக்கிறேன்.

     2026ஐப் பற்றி கேட்காதீர்கள். பிறகு பார்க்கலாம்.

     //எதுவும் சாத்தியமே… அரசியலில் மட்டுமல்ல…. எந்த ——— துறையிலுமே…// – கருணாநிதிக்கு நடு இரவில் ஜாமீன் கொடுக்கப்பட்டது நினைவிருக்கிறதா?

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      .

      புதியவன்,

      நன்றாகவே defend செய்ய முயற்சிக்கிறீர்கள்.
      வாழ்த்துகள்…

      ஆனால் –

      ———–
      // செயலுக்கேற்ற கூலி. தான் நினைத்ததை சாதிக்க
      உதவிய எம்.கே நாராயணனுக்கு சோனியா பதவி
      வழங்கினார்.//

      நாராயணன் அரசு அதிகாரியாக, செயலாளராக,
      பாதுகாப்பு ஆலோசகராகத்தான் இருந்தார்..

      தண்டனையிலிருந்து தப்புவிக்கும் நீதிபதி- யாக அல்ல…

      ———–

      //எதுவும் சாத்தியமே… அரசியலில் மட்டுமல்ல….
      எந்த ——— துறையிலுமே…// – கருணாநிதிக்கு
      நடு இரவில் ஜாமீன் கொடுக்கப்பட்டது
      நினைவிருக்கிறதா?

      -ஆஹா… தாராளமாக –

      ஆக “இப்போது நடப்பதும் அதேபோல் தான்;
      இரண்டுக்கும் வித்தியாசமில்லை” –
      என்று சொல்ல வருகிறீர்களா…? 🙂 🙂 🙂

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்…. நான் defend செய்கிறேன் என்று சொன்னால் பாஜக சார்பாக பேசுவதாக அர்த்தம். அப்படி இல்லை. ப.சிதம்பரம் தண்டனைக்குத் தகுந்தவரே. மாட்டிக்காமல் பல்லாயிரம் கோடி சொத்துக்கள் 5 வருடங்களில் சம்பாதிப்பவர்கள் யோக்கியர்கள் என்று நாம் ஏன் வாதாடவேண்டும்? என்ன தொழில் செய்து இவ்வளவு சொத்துக்களை (அதாவது கணக்கில் காண்பித்த 5 சதவிகிதம்) சம்பாதித்தார்? ‘அரசியல்வாதி’ என்ற தொழிலா? அவர் மகன் 5 வருடங்களில் எப்படி பெரும் தொழிலதிபராக 8000 கோடி சொத்துக்குமேல் சம்பாதிக்க முடிந்தது?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     புதியவன்,

     கேட்கும் கேள்விகள் உங்களுக்கு embarrassing ஆக
     இருக்குமானால் deviate செய்து வேறு பக்கம்
     இழுத்துச் செல்ல முயற்சிக்கிறீர்கள்… 🙂 🙂
     ஆனால் நான் விடுவதாக இல்லை…!

     -நேரடியாக பதிலுக்கு வாருங்களேன் –

     1) கிருஷ்ணரும், ராமரும் ஒன்றாக இருக்கலாம்.
     ஆனால் -நாராயணனும், சதாசிவமும் ஒன்றா ?

     2) கருணாநிதி விஷயத்தில் நீதிபதி செயல்பட்டது
     போலத்தான் இப்போதும் நடந்திருக்கிறது
     என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா…?

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

     உண்மை தெரியாமல் எழுத தயக்கமா இருக்கு. ஒருவேளை காங்கிரஸ் அழுத்தத்தையும் மீறி நேர்மையா செயல்பட்டதற்கு ஒருவருக்கு பரிசும், அதேபோல, காங்கிரஸுக்கு நன்றிக்கடனாக ஜாமீன் பல வருடங்களாகக் கொடுக்கப்பட்டு, கடைசியில் தான் செய்வது நியாயமல்ல என்று நீதிபதிக்கு உறுத்தியிருந்தால்? இதன் ஆப்போஸைட் தியரியும் சாத்தியமே. அதனால்தான் தீர்மானமாக எழுதத் தயங்கறேன். அரசியலில் ‘இவன்’ உத்தமன் என்று யாரையும் சொல்லமுடியாதது நமது துரதிருஷ்டமே. அதனால்தான் நமக்குப் பிடிக்காதவர்கள் செய்வதை விமர்சிக்கவும், நமக்குப் பிடித்தவர்களை கண்டுகொள்ளாமலும் செல்ல முடிகிறது. இந்தத் தவறு என் எழுத்திலும் இருக்கும்தான்.

     கருணாநிதி விஷயத்தில் என்ன நடந்தது என்று வெளிப்படையாக பொதுவெளில எழுத முடியலை. ஆனால் அறிவேன்.

     ஒன்றுக்கும் உதவாத பையன், பல்லாயிரம் கோடிக்கு அதிபதியானது கண்ணுக்கு முன்பே தெரிவதால், இது ஊழல் குடும்பம் என்று தீர்மானமாக எழுத முடிகிறது.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      இந்த செய்தியை படித்தீர்களா…?

      —————————–
      நீதிபதி சுனில் கவுர், ஆகஸ்ட் 23ஆம் தேதியோடு ஓய்வு பெற்றார். இந்த நிலையில் அவருக்குச் சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. வரும் செப்டம்பர் 23ஆம் தேதி மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராக அவர் பதவியேற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது. அவரின் கீழ் நான்கு உறுப்பினர்கள் செயல்படுவார்கள்.

      ———————

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

     • புதியவன் சொல்கிறார்:

      பார்த்தேன். எரிச்சல் பட்டதில் என் ஹெல்த் கெட்டதுதான் மிச்சம். நீதித்துறை, அரசியல், அதிகாரத்துறை, பத்திரிகைத்துறை – இந்த நாலிலிருந்தும் இன்னொரு துறைக்கு ஆட்களை ஓய்வுக்குப் பிறகு எடுக்கவே கூடாதுன்னு ஒரு சட்டம் போடணும். நாலுமே நாலு check and balance துறைகள். கவர்னர் வேலை என்பதும் அரசியல் வேலைதான். அதுபோல, பதிவி நீட்டிப்பு என்பதே தடை செய்யப்படணும். இப்படி இல்லைனா, எந்தத் துறைகளையும் manipulate பண்ணுவது சாத்தியம். ஆதாயம் அடைவது என்பது நேரிடையாக லஞ்சம் வாங்குவதற்குச் சமம். தற்போது நடந்திருக்கும் சம்பவம் கடுமையாக கண்டிக்கத் தக்கது. ‘லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம்’ என்பது சட்டமல்லவா?

      நாய்க்கு எலும்புத் துண்டு போட்டா வாலாட்டும் என்று தெரிந்தால் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் போடமாட்டார்களா (இல்லை போடப்போறேன் என்று ஆசை காண்பிக்க மாட்டார்களா?). நான் நிஜ pet animalsஐச் சொன்னேன் :–))

      இப்பப்பாருங்க…இந்திராணி முகர்ஜி தன்னை எப்படி எப்படியெல்லாம் ப.சி. உபயோகப்படுத்திக்கொண்டார்னு சொல்லியிருக்காங்க. ஹாலிவுட் மீன்களைப் போட்டு ப.சி. வசமாக மாட்டியிருக்கலாம், இல்லை இவராவே தூண்டிலை நோக்கிப் போயிருக்கலாம். அரசியல் எப்படி இருக்கு பாருங்க.

 3. c.venkatasubramanian சொல்கிறார்:

  ithellam sakajamappa arasiyalil

 4. Selvarajan சொல்கிறார்:

  எமக்கு பின்னூட்டாட்டம் இட விருப்பமில்லை …!

  முந்தைய ” இடுகை ” ஒன்றிற்கு பதிவாகிய ஐந்து ” மறுமொழிகள் மட்டும் வாசகர்களின் பார்வைக்காக …

  // 5 Responses to நீதிபதிகளின் புரட்சி – பல கோடி ரூபாய் பேரம் சம்பந்தமான குற்றச்சாட்டுகள்……..!!!

  புதியவன் சொல்கிறார்:
  11:23 முப இல் ஜனவரி 15, 2018
  இரண்டையும் படித்தேன். நேரடியாக எழுதாமல் எழுதுகிறேன்.

  இரண்டு குரூப் இருவேறு மாதிரியா சிந்திக்கிறாங்க. அதில் ஒரு குரூப் பாஜகவுக்கு ஆதரவா இருப்பதுபோலவும் இன்னொரு குரூப் எதிர்ப்பா இருப்பதுபோலவும் தோணுது. அப்போ, யார் சொல்வது சரின்னு எடுத்துக்கறது. அடுத்த குரூப், தங்களுக்கு வாய்ப்பளித்த காங்கிரசுக்கு சார்பா இதெல்லாம் செய்கிறார்கள் என்று ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது?

  ப்ரமோத் மஹஜன், பாஜக ஆட்சிக்கும் வரும் என்று நிலையிருந்தபோது கொல்லப்பட்டார் (அவருடைய சகோதரன், பிறகு மன’நிலை பிறழ்ந்தவர்னு சொல்லிட்டாங்க).

  நீதிபதி லோயா அவர்களின் மகனே, அந்த நிகழ்வில் சந்தேகம் இல்லைனு சொல்லிட்டார் (அதையும் நம்ப முடியாது. யாராவது அரசியல்வாதிகளை, அதிலும் பவர்ஃபுல் ஆட்களைப் பகைத்துக்கொள்வார்களா?)

  எம்.கே நாராயணன் அவர்கள், காவல் பணியிலிருந்து, பாதுக்காப்பு ஆலோசகராக 5 வருடங்கள் பணியாற்றி (அதாவது சோனியாவின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தார் என்று சொல்லலாமா?) மேற்கு வங்க ஆளு’நராக பதிவி பெற்றார். இதுபோல் ஏகப்பட்ட அதிகாரிகளுக்கு காங்கிரஸ் அரசு, பதவி விலகிய உடனே அரசியல் பதவி கொடுத்திருக்கு.

  முன்னாள் சிபிஐ இயக்கு’நர், யார் யாரையெல்லாம் (குற்றவாளிகளை) பார்த்தார் என்றெல்லாம் செய்திகள் வந்ததே. (அவரும் தன்னைப் பதவியில் அமர்த்திய காங்கிரஸ் சார்பான வேலைகளைத்தான் செய்துவந்தார்)

  நம்முடைய நிலைக்கு (அதாவது யார் சார்பா பேச நினைக்கிறோமோ அதன்படி) ஏற்றவாறுதான் இதையெல்லாம் புரிந்துகொள்கிறோம்னு நினைக்கறேன்.

  vimarisanam – kavirimainthan சொல்கிறார்:
  4:08 பிப இல் ஜனவரி 15, 2018

  புதியவன்,

  நான் வேறு முறையில் இதை அணுகுகிறேன்.

  ஒரு மிகப்பெரிய அரசியல்வாதி சம்பந்தப்பட்ட வழக்கு… ஒருவேளை, அதன் முடிவு எதிராக அமையுமானால் –
  அவரது எதிர்காலத்தை மட்டும் அல்லாமல், அவரது கட்சியின் தலைமையையும், அவரது கட்சியின் எதிர்காலத்தையும் தகர்க்ககூடிய ஒர் வழக்கு….

  ஒரே நீதிபதியின் கீழ் விரைவாக தொடர்ந்து நடத்தி முடிக்கப்படவேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்திரவுடன் துவங்கும் வழக்கு –

  முதலில் விசாரிக்கும் நீதிபதி, பாதியிலேயே மாற்றம் செய்யப்பட்டு, வழக்கிலிருந்து அகற்றப்படுகிறார்.
  காரணம் வெளிப்படையாகத் தெரியவில்லை…

  2-வதாக வரும் நீதிபதி – அகால வயதில் துர்மரணம் அடைகிறார்.

  மூன்றாவதாக வரும் நீதிபதி – 15 நாட்களுக்குள் வழக்கை விசாரித்து, குற்றம் ஏதும் நடக்கவில்லை என்று சாதகமாக
  தீர்ப்பளிக்கிறார்….

  இந்த நிலையில், சந்தேகங்களைப் போக்க –

  ஜஸ்டிஸ் லோயா அவர்கள் இயற்கையான முறையிலேயே மரணம் அடைந்தார் என்றாலும் கூட, மறு விசாரணை நடத்தி அவர் இறப்பைப்பற்றிய சந்தேகங்களை தீர்த்து வைப்பது தானே சம்பந்தப்பட்டவர்களுக்கு கூட நல்லது…?

  விசாரணை நடப்பதால் யாருக்கு, என்ன நஷ்டம்…? அதனை மறுக்கவும், தவிர்க்கவும் – தீவிரமாக முயற்சிகள்
  நடப்பது தானே பிரச்சினைகளின் மூல காரணம்…??

  சில விஷயங்களை ஓரளவிற்கு மேல் எழுத இயலாது…. நீங்கள் திறந்த மனதோடு இந்த விஷயத்தை ஆழ யோசித்துப் பாருங்கள்…..உங்களுக்கும் புதிய எண்ணங்கள் தோன்றக்கூடும்…

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  புதியவன் சொல்கிறார்:
  5:32 முப இல் ஜனவரி 16, 2018
  உங்க பாயின்ட் புரியுது கா.மை சார். நான் அவங்க பக்கத்துல இருந்து சிந்திக்கிறேன் (அவங்க point of view). அத்தனை காங்கிரஸ் சார்பான (அல்லது பாஜக எதிர்ப்பான) நீதிபதிகள் இருந்தபோதும், உண்மையின் சார்பாக நின்று (அல்லது நீதியைக் குலைக்காமல், தேவையில்லாமல் குழப்பாமல்) நடுனிலையாக நடந்துகொண்டிருந்ததால் சதாசிவம் அவர்களுக்கு கவர்னர் பதவி கொடுத்திருக்கலாமா (அப்போது எல்லா விதத்திலும் காங்கிரஸ் அரசு, குஜராத்துக்கு, அந்த மானில முதல்வர் மோடிக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்தது)

  யார் நேர்மையானவர் என்பதைக் கண்டுபிடிப்பதே சிக்கலாயிருக்கு நம்ம தேசத்துல. ‘கறை’ இல்லாமல் பெரிய இடங்களில் பதவிக்கு வருவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது (அது நீதித் துறையாக இருந்தாலும் சரி, அரசியல் பதவியாக அல்லது அதிகாரிகளுக்கான பதவியாக இருந்தாலும் சரி). கேள்விப்படும் விஷயங்கள் அதைத்தான் சுட்டுகின்றன.

  தமிழன் சொல்கிறார்:
  11:01 முப இல் ஜனவரி 16, 2018
  இந்தச் செய்தியைப் படித்திருப்பீர்கள். ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்றுகிறது. சமீபத்தைய ‘அரசு எதிர்ப்புப் பேரணி’, அதைத் தொடர்ந்த ‘பழைய வழக்குகள்’ உயிர் பெறுவது போன்றவை. தொகாடியா பெயரை, மோடி பெயரைக் கேள்விப்படுவதற்கு முன்னரே கேள்விப்பட்டிருக்கிறேன்.

  https://tamil.oneindia.com/news/india/encounter-conspiracy-against-me-says-togadia-308552.html

  vimarisanam – kavirimainthan சொல்கிறார்:
  3:48 பிப இல் ஜனவரி 16, 2018

  தமிழன்,

  நீங்களாகவே மீண்டும் என்னை கேள்வி கேட்க வைக்கிறீர்கள்…

  10 வருடங்களுக்கு முன்னதாக, தடையை மீறி பொதுக்கூட்டத்தில் பேசியதாக தொகாடியா மீது போடப்பட்ட வழக்குக்காக, தற்போது –
  ராஜஸ்தானிலிருந்து, குஜராத் வரை வந்து அவரை போலீஸ் துரத்தும் அளவிற்கு மிகச்சாதாரண பழைய வழக்குகளே தோண்டப்படலாம் என்றால்,

  3 வருடங்களுக்கு முன்னர், 2014-ல் செத்துப்போன ஜட்ஜ் லோயா அவர்களின் வழக்கை, சந்தேகம் தீர
  மீண்டும் ஒரு முறை விசாரிப்பதில் என்ன தவறு…?

  அதை ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு தவிர்க்கிறார்கள்….???

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  என்கவுன்ட்டர்கொலை வழக்கு — ஐ என் எக்ஸ் மீடியா வழக்கு இரண்டுக்கும் முடிச்சு …?

 5. Shiva சொல்கிறார்:

  A forward received.
  Forwarded

  இன்று உலகமே எள்ளி நகையாடும் அளவுக்கு சட்டமன்றத்தையும், உயர் மற்றும் உச்ச நீதி மன்றத்தையும் கேலி கூத்தாக்கிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த பதிவு அவசியம் என தோன்றுகிறது. 1996 ல் அதிமுக படுதோல்வி அடைந்தது. நாடெங்கும் அதிமுகவை வெறுத்து ஒதுக்கினர். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஜெயலலிதாவை தூக்கி வைத்து கொண்டாடியவர்கள் ஓட்டம் பிடித்தனர். அப்போதுதான் திமுக தலைவர் முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஜெயலலிதாவை கைது செய்ய உத்தரவிட்டார்.
  ஒரு முன்னாள் முதல்வரை, ஒரு கட்சியின் தலைவியை கைது செய்யப்போகிறோமே என்று சற்றே பயத்தோடும் பதற்றத்தோடும் அந்த அதிகாலை பொழுதில் போஸ் கார்டனில் அடி எடுத்து வைத்தார் காவல்துறை ஆய்வாளர் சரஸ்வதி . ஜெயலலிதாவிடம் அவரை கைது செய்ய வந்த விஷயத்தை கூறி அதற்கான ஆர்டரை கொடுத்தார். அரெஸ்ட் வாரண்டை வாங்கி பார்த்த ஜெயலலிதா ஒரு பத்து நிமிடம் காத்திருக்க முடியுமா நான் தயாராகிவிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார். ஆய்வாளர் சரஸ்வதியும் சரி மேடம் என்று கூறியுள்ளார். சரி இங்கு அமருங்கள் என்று கூறிய ஜெயலலிதா தனது பணிப்பெண்ணை அழைத்து அவர்களுக்கு டீ கொடு என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். வந்த இடத்தில் டீ குடிக்க கூடாது என்றாலும் சொன்னவர் முக்கியமான நபர் என்பதால் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தட்டவில்லை. பின்னர் சொன்னபடி பத்து நிமிடத்தில் வந்த ஜெயலலிதா போகலாமா என்று கேட்க அவரை அழைக்க வந்த ஜிப்சி ஜீப்பின் பின்புறம் அமர்ந்து நீதிபதியிடம் அழைத்து செல்லப்பட்டார். அதன் பின்னர் 28 நாட்கள் சிறையில் இருந்தார். கைது என்றாலும், பதவி ஏற்பு என்றாலும் அனைத்திலும் ஒரு ஒழுங்கு முறையுடன் ஜெயலலிதா நடந்து கொண்டார். அவர் ஒரு சேலை கட்டிய பெண் சிங்கம். வேட்டி கட்டிய அசிங்கங்களை போல ஓடவில்லை, ஒளியவில்லை, ஒப்பாரி வைக்கவில்லை. இதற்கு காரணம் அவரது உள்ள உறுதி ஆகும் , அதனால் தான் அவரை இரும்பு மனுஷி என்று அழைக்கின்றனர். யார் என்ன சொன்னாலும் சரி… தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆளுமை என்றால் சட்டென்று நினைவுக்கு வருபவர் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா என்பதை, ஜெயலலிதாவைப் பிடிக்காதவர்கள் கூட ஒத்துக்கொள்வார்கள். ஆளுமை, துணிச்சல், தைரியம், தீர்க்கமான முடிவு, உறுதியாய் களம் காணும் வீரியம்… என ரவுண்டு கட்டி அரசியல் செய்த வீராங்கனை… ஜெயலலிதா. இன்று தங்களை அதிமேதாவி மாபெரும் பொருளாதார மேதை என்று கூறி கொள்பவர்கள் ஜெயலலிதாவை காலமெல்லாம் போராடியும் வெல்ல முடியாமல் தோற்றுத்தான் போய் விட்டார்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   ஷிவா,

   உண்மை தான்.
   ஒரு நல்ல நினைவூட்டல்.
   மிக்க நன்றி.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   மார்க்கண்டேய கட்ஜு சொன்னது நினைவிருக்கிறதா? ஜெயலலிதா ஒருவர்தான் நீதித்துறையில் தலையிடாமல் இருந்த முதலமைச்சர் என்று. இதை ஏற்றுக்கொள்ள மத்த faulty கட்சித் தலைவர்களுக்குப் பிடிக்கலை.

   அவர் ஒரு மெஜஸ்டிக் லீடர். எம்.ஜி.ஆரை விட மிகுந்த தைரியசாலி. 91-96ல் மட்டும் அவர் கேர்ஃபுல்லாக நடந்துகொண்டிருந்தால், இன்று அவர் ‘பாரத ரத்னா’.

   திமுக எப்போதும் தேச விரோதிகளைத்தான் தலைவர்களாக வைத்திருந்திருக்கிறது. இன்றைக்குக்கூட பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுத்த ஸ்டாலின், அது தன் கட்சிக்குக் கொண்டுவரப்போகும் அவமானத்தை நேற்று உணர்ந்து, தன் நிலையை மாற்றிக்கொண்டிருக்கிறார். கருணாநிதியும் இந்திய இராணுவத்துக்கு எதிரான நிலை எடுத்து ராணுவத்தை அவமானப்படுத்தியவர். அவருடைய நிழல் ‘ராஜீவ் கொலை’யில் இருந்தது என்பது அனைவரும் அறிந்ததுதான். ‘தேசவிரோதி’ வை.கோவைப் பற்றிச் சொல்லவேண்டிய தேவையே இல்லை.

   அதிமுக எப்போதும் தேசபக்தியில் திமுகவை விட பலமடங்கு அதிகமானது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.