நாகேஷ் ப்ளஸ் டி.எஸ். பாலையா …!!!


இது நாகேஷின் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து –
அவரது சொந்த வார்த்தைகளில் –

————–

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, ‘சரவணா பிலிம்ஸ்’
வாயிற்கதவை, நானும், நண்பர் வீரப்பனும் நெருங்கினோம்.

கூர்க்கா, விசாரிக்கும் முன், ‘மிஸ்டர் வேலுமணி இருக்காரா…’
என்று நான் முந்திக் கொண்டேன்.
இந்தியில், ‘ம்… இருக்காரு…’ என்றான், கூர்க்கா.

உள்ளே உட்கார்ந்திருந்தவரிடம், ‘மிஸ்டர் வேலுமணியை
பார்க்கணும்…’ என்றேன்.

‘ம்… அதோ இருக்காரே, அவர் தான்…’ என்று, அவர்
சுட்டிக் காட்டிய திசையில், வெள்ளை வேட்டி, சட்டையில் மிக
கண்ணியமான தோற்றத்தில் உட்கார்ந்திருந்தார், ஒருவர்.

நேரே அவரிடம் போய், ‘வேலுமணி சார்…
நான், நாகேஷ்; நடிகன். என்னை பற்றி, உங்களுக்கு
தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலும் இருக்கலாம்…
நான் உட்காரலாம் இல்லையா?’ என்றேன்.
‘ஓ… தாராளமாக உட்காரலாம்…’ என்றார்.

நாற்காலியில் உட்கார்ந்தவுடன், மேஜை மேல் இருந்த,
விலை உயர்ந்த சிகரெட் பெட்டியிலிருந்து, ஒரு சிகரெட்டை,
அவர் அனுமதியுடன் எடுத்து, பற்ற வைத்தேன்.

‘சார்… நான் ஒரு பழைய கார் வாங்கலாம்ன்னு இருக்கேன்.
காரின் சொந்தக்காரர், 6,000 ரூபாய் சொல்கிறார். ஆனால்,
என்னிடமோ, 3,000 ரூபாய் தான் இருக்கு. ‘மீதி, 3,000 ரூபாயை,
நீங்க கொடுத்து உதவி செஞ்சீங்கன்னா, ரொம்ப சவுகரியமா
இருக்கும். என் போன்ற நடிகர்கள், காரில் போனா, உங்களை
போன்ற தயாரிப்பாளர்களுக்கு கவுரவமாக இருக்கும்…’
என்றேன்.

‘யார் இவன்… நடிகன் என்று அறிமுகப்படுத்தி, நம்மிடம்,
கார் வாங்க, கடன் கேட்கிறானே…’ என்று, மனதிற்குள்
நினைத்து இருப்பார்.

ஆனாலும், அதையெல்லாம் அவர் வெளிக்காட்டிக்
கொள்ளவில்லை. ‘நீங்க கொடுக்கிற, 3,000 ரூபாயை,
அடுத்த, இரண்டு அல்லது மூன்று மாதங்களில் திருப்பி
கொடுத்து விடுகிறேன் அல்லது படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள்.
நடித்தே, கடனை கழித்து விடுகிறேன்…’
என்றேன்.

சில வினாடிகள் யோசித்தவர், சட்டென்று காசாளரை கூப்பிட்டு,

‘நாச்சிமுத்து, இவருக்கு, 3,000 ரூபாய் கொடுங்க…’ என்றார்.
அடுத்த சில நிமிடங்களில், 3,000 ரூபாயை, என்னிடம்
கொடுத்தார், நாச்சிமுத்து.

ஆச்சரியம் தாங்க முடியவில்லை, வீரப்பனுக்கு.
‘எப்படி, நாகேஷ்… நீ பாட்டுக்கு தடாலடியா உள்ளே புகுந்து,
வேலுமணி சாரிடமிருந்தே, 3,000 ரூபாயை வாங்கிகிட்டு
வந்துட்டே…’ என்று, கேட்டார்.

முன் பின் தெரியாதவர் தான். ஆனால், அவரை
ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம், கொஞ்சம் கூட
கிடையாது. நேர்மையாக, நேரிடையாக அவரை கேட்டு
பார்க்கலாம்; உதவி கிடைத்தால் நல்லது. கிடைக்காமல்
போனாலும், அதனால், நமக்கு என்ன நஷ்டம்…
வேறு எங்கேயாவது முயற்சித்து பார்க்கலாம் என்ற,
உண்மையான அணுகுமுறைக்கு கிடைத்த பலன் தான், இது.

இதற்கிடையில், ‘என்னடா, சித்ராலயாவிலிருந்து
கொஞ்ச நாளா கூப்பிட காணோமே… ஒரு நடை சித்ராலயா
அலுவலகத்துக்கு போய் பார்த்து வரலாமா…

‘இல்லை, குறைந்தபட்சம், கோபுவுக்கு போன் பண்ணி,
‘நாகேஷ் என்று ஒரு நடிகன் இருப்பது நினைவில் இருக்கா…’
என, கேட்கலாமா?’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

அந்த சமயத்தில், சித்ராலயாவில் இருந்து தொலைபேசி
அழைப்பு வந்தது. பேசியவர், கோபுவே தான்.

‘நாகேஷ்… உனக்கு, ‘ஜாக்பாட்’ அடிச்சிருக்கு…’ என்றார்.
‘நான் சீட்டுக்கட்டு ஆடுவேன். ஆனால், ‘ரேஸ்’ பக்கம்
தலை வச்சு கூட படுக்க மாட்டேனே…’ என்றேன்.

‘இது, ‘ரேஸ் ஜாக்பாட்’ இல்லை; ‘சான்ஸ் ஜாக்பாட்!’
சித்ராலயா பேனரில், ஸ்ரீதர் ஒரு முழு நீள காமெடி படம்,
கலரில் எடுக்கப் போறாரு; உனக்கு பிரமாதமான
கதாபாத்திரம்… அதுல, நீ நடிக்கணும்னா ஒரு நிபந்தனை…
‘படப்பிடிப்புக்கு சரியா வந்துடணும். நாடகம் அது இதுன்னு
ஏதாவது சாக்கு போக்கு சொல்லி, ‘டிமிக்கி’ கொடுக்க
கூடாது…’ என்றார்.

அந்த சமயத்தில், நான், ‘பிசி’ ஆன நடிகன் இல்லை.
எனவே, சம்மதித்தேன். காதலிக்க நேரமில்லை என்ற
தலைப்பே, ரொம்ப வித்தியாசமாக இருந்தது; முழு நீள
காமெடி படம்.

காதலிக்க நேரமில்லை படத்தில், இயக்குனர் செல்லப்பாவாக,
நான், பாலையாவுக்கு கதை சொல்கிற காட்சி ரொம்ப பிரபலம்.
படம் வெளியாகி, பல ஆண்டுகளுக்கு பின்னரும், என்னை
பார்க்கிறவர்கள், ‘சார்… அந்த கதை சொல்ற காட்சி…’ என்று,
நினைவு கூர்ந்து பாராட்டினர்.

அந்த காட்சியில் எனக்கு உத்வேகமாக இருந்தவர்,
இன்னொரு, பிரபல இயக்குனர். சினிமா இயக்குனர்,
செல்லப்பாவாக நடிக்கும் நான், எடுக்க போகும் படத்தின்
கதையை சொல்ல வேண்டும். அதற்கு ஏற்றார் போல,
ஒரு கதை தயார் பண்ணுவது பற்றி இயக்குனர் ஸ்ரீதரும்,
கோபுவும் பேசிக் கொண்டிருந்தனர்.

‘காகம், கிழவியிடம் வடை திருடி போகிற கதையை
வைத்துக் கொள்ளலாமே?’ என்று, கோபு கேட்க, அதை
நிராகரித்தார், இயக்குனர்.

‘ரொம்ப புதுமையா ஏதாவது செய்யணும், யோசி…’ என்றார்.
‘விக்கிரமாதித்தன் கதையை வெச்சுக்கலாமா?’

‘கதை சொல்லணும். ஆனா, அது கதை போல
இருக்கக் கூடாது… என்ன பண்ணலாம்…’ என்று, சட்டென்று,
புதிர் போல ஒரு விஷயம் சொன்னார், ஸ்ரீதர்.

‘இயக்குனர், தாதா மிராஸி, காட்சி சொல்லுவாரே,
அது மாதிரி பண்ணலாம்…’ என்றார், கோபு.
‘யோசனை பிரமாதம்…’ என, பாராட்டினார், ஸ்ரீதர்.

இயக்குனர், தாதா மிராஸி, கதை சொல்கிற பாணியே,
தனி தான். அவர் எப்போதும், கதையை சொல்கிறபோது,
இன்னென்ன கதாபாத்திரங்கள், இப்படி கதை ஆரம்பிக்கிறது,
இன்னென்னது நடக்கிறது, கடைசியில் இப்படி ஆகிறது
என்று, பட்டென்று கதையை சொல்ல மாட்டார்.

‘ஹீரோ, நடந்து வந்துகிட்டு இருக்காரு… தட்… தட்… தட்…
என, சத்தம். திடீரென்று மழை… ‘ஹீரோ’வுக்கு பயம்,

மனசு திக் திக்குன்னு அடிச்சுக்குது… மரத்தடியில்
ஒதுங்குகிறார். ஊ… ஊ… திடீரென மரத்திலிருந்து சத்தம்..
.
ஒரு கணம் கலங்கிப் போகிறார்.
‘ஜல்… ஜல்… கொலுசு ஓசை; இருட்டில் பயந்தபடியே
வருகிறார், ஹீரோயின்…’ என, இந்த ரீதியில்,
பின்னணி இசையுடன், அவர் பாட்டுக்கு கதை
சொல்லிக் கொண்டே போவார்.
மற்றவர்கள் சுவாரசியமாக கதை கேட்பர்.

சினிமா வட்டாரத்தில் அவரது கதை சொல்லும்
பாணி, பிரபலமானது.
அதே போல, காதலிக்க நேரமில்லை படத்தில்,
பாலையாவுக்கு, நான் சினிமா கதையை சொல்ல
வேண்டும் என்று முடிவானது. அதன்படி நடித்தது தான்,
இன்றும் மக்களால் பேசப்படுகிறது.
(நன்றி: எஸ். சந்திரமவுலி – கிழக்கு பதிப்பகம், சென்னை)

இவ்வளவு சொல்லி விட்டு, காதலிக்க நேரமில்லை
படத்தில் நாகேஷ்-பாலையா-வின் அட்டகாசமான
அந்த காட்சியை பார்க்காமல் போகலாமா…!!!

இந்த காட்சியின் வெற்றிக்கு நாகேஷ் எந்த அளவிற்கு
காரணமோ, அதே அளவிற்கு டி.எஸ்.பாலையாவின்
அற்புதமான அந்த re-action -உம் காரணம் அல்லவா…???

.
—————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to நாகேஷ் ப்ளஸ் டி.எஸ். பாலையா …!!!

 1. Prabhu Ram சொல்கிறார்:

  நாகேஷ் + டி.எஸ்.பாலையா – அருமையான காம்பினேஷன்.
  இருவரும் அற்புதமான கலைஞர்கள்.
  அவர்களுக்கு இணையாக அதற்குப் பிறகு இன்னமும்
  யாரும் வரவில்லை. இப்போது இருப்பவர்கள் முற்றிலும்
  வேறு மாதிரி.

 2. R.Gopalakrishnan சொல்கிறார்:

  I hae this film more than a dozen times in those days.

 3. yarlpavanan சொல்கிறார்:

  சிறப்பான பதிவு
  வரவேற்கிறேன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.