இவருக்கேன் பாரத ரத்னா….? இவர் உதவியது யாருக்கு….?


நேற்றைய செய்தியிலிருந்து ஒரு புகைப்படம் –

இந்த பெருமகனாருக்கு எதற்காக பாரத ரத்னா பட்டம்
கொடுக்கப்படுகிறது, அவர் இந்த நாட்டின் நலனுக்காக
எந்தெந்த வழிகளில் சிறப்பாக செயல்பட்டார் என்று இந்த
வலைத்தள நண்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
அல்லவா…?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக –
இந்த வலைத்தளத்தில் 2011, மார்ச் மாதம் வெளியான
ஒரு இடுகையிலிருந்து சில பகுதிகள் கீழே –

—————————————————————————

ஹாசன் அலி வழக்கை விசாரிக்க எடுத்துக்கொண்ட
போது, உச்சநீதி மன்ற நீதிபதிகள் கேட்டது –
“what the hell is going on here ?”

அந்த அளவிற்கு நீதிபதிகள் வெறுத்துப் போகக்
காரணம் தான் என்ன ?

2007 ஆம் ஆண்டு துவக்கத்தில், வருமானவரி
இலாகா ஏதோ ஒரு தகவலின் அடிப்படையில்,

(மிகப்பெரிய திமிங்கிலம் ஒன்று மாட்டப்போகிறது
என்பது தெரியாமலேயே,)

மஹாராஷ்டிரா மாநிலம்,
புனே நகரத்தில் உள்ள ஹாசன் அலியின் வீட்டில்
சோதனை இட்டது. அந்த நேரத்தில் அவர்களுக்குத்
தெரிந்திருந்த விவரம் அவன் ஒரு பந்தயக்
குதிரைகளின் சொந்தக்காரன் என்பது மட்டுமே.

சோதனையின் போது –
அவன் பெரிய வருமான வரி மோசடியில்
ஈடுபட்டிருக்கக்கூடும் என்பதற்கான
அறிகுறிகள் கிடைத்தன !

அவன் யார், அவனது அரசியல் பின்புலம் என்ன
என்பது பற்றி எல்லாம் தெரியாத நிலையில்,
வருமான வரி இலாகா (தெரியாத்தனமாக)
அந்த ரெய்டு பற்றிய விவரங்களை வெளியில்
அறிவித்து விட்டது. அப்போது பிடித்த
சனியன் தான் – இன்னும் விடவில்லை
(வருமான வரி இலாகாவைத் தான் !)

யார் இந்த ஹாசன் அலி ?
என்ன அவன் பின்னணி ?

இந்தியாவிலேயே – அதிக வருமான வரி பாக்கி
வைத்திருக்கும் ( ரூபாய் 50,000 கோடிகள் மட்டுமே)
இந்த பெரிய மனிதன் – ஹைதராபாதைச் சேர்ந்த
ஒரு பதான்.

58 வயதாகும் இந்தப் புண்ணியவானை பெற்று –
இந்த நாட்டிற்கு பரிசளித்த தந்தை –
ஹைதராபாத் நகரத்தில்
எக்ஸைஸ் இலாகாவில் பணி புரிந்த
ஒரு சாதாரண அரசு ஊழியர் ஊழியர் தான்.

அவனது சுவிஸ் வங்கி கணக்கில் இருப்பதாகச்
சொல்லப்படும் தொகை உண்மை என்றால் –
ஆசியாவிலேயே பெரிய பணக்காரன் என்கிற
பெருமைக்கு சொந்தம் ஆவான் இந்த ஹாசன் அலி.

மூன்று மெர்சிடைஸ் பென்ஸ் கார் வைத்திருக்கும்
இந்த நபரின் வீட்டின் பெயரில் ஒரு வங்கியில்
கடனும் இருக்கிறது என்பது தான் வேடிக்கை.
என்னிடம் பணம் இருந்தால் நான் ஏன் வீட்டை
அடமானம் வைத்து கடன் வாங்குகிறேன்
என்பது விசாரணை அதிகாரிகளிடம்
இவன் கேட்ட கேள்வி !

இவனை கைது செய்யப் போனபோது – இவன்
அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியை கழற்றி
வீட்டிலேயே வைத்து விட்டு வந்தானாம்.
காரணம் அந்த மூக்குக்கண்ணாடியின் மதிப்பு
2 லட்சம் ரூபாய்.

இவனுடன் 24 மணி நேரமும்,
வாட்டசாட்டமான இரண்டு தடியன்கள்
(தனியார் பாடிகார்டுகள்) இருக்கிறார்கள்.

இவனுக்கு இருப்பதாகச் சொல்லப்பட்ட
வியாதிகள் ரத்தக் கொதிப்பும், சர்க்கரையும்.
(கைது செய்யப்பட்ட பின்னர் வந்தது
ஹார்ட் அட்டாக் !) சர்க்கரை நோய் காரணமாக,
தினமும் காலையிலும், இரவிலும் இவனுக்கு
40 யுனிட் இன்சுலின் தேவைப்படுகிறது.

இருந்தாலும் -இவன் ஒரு தொடர் புகையாளி
(செயின் ஸ்மோக்கர் ).
புகைப்பது 555 ஸ்டேட் எக்ஸ்பிரஸ் சிகரெட்.
நாள் தவறாமல் குடிப்பது பிளாக் லேபல் விஸ்கி.

இவன் குற்ற பின்னணி ஆரம்பித்தது
இவனது 28வது வயதிலேயே.
இளைய வயதில் அமைதியான, ஆனால்
கில்லாடி கிரிமினலாக இருந்திருக்கிறான்.

ஆரம்ப காலத்தில் இவன் தன்னை ஹைதராபாத்
நிஜாமின் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று
சொல்லிக்கொண்டு பழங்காலத்து கலைப்
பொருட்களை விற்பனை/ ஏற்றுமதி செய்வதில்
ஈடுபட்டவன்.

ஹைதராபாதில் இவன் மீது ஏமாற்றுதல்,
பயமுறுத்தி பணம் பறித்தல் போன்ற
10 வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில்
உள்ளனவாம்.ஆனால் அந்த வழக்குகளை
தொடர்வதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை !
(எல்லாம் பணம் படுத்தும் பாடு ?)

(வேடிக்க என்னவென்றால் 10 நாட்களுக்கு
முன்னர் இவனை கைது செய்து மும்பையில்
ஒரு மாஜிஸ்டிரேட் முன்பு ஆஜர் செய்த
அமுலாக்கப் பிரிவினர் –
எந்த ஒரு ஆதாரத்தையும் காட்டாத
காரணத்தால், அந்த மாஜிச்டிரேட் இவனை விடுதலை
செய்யச்சொல்லி உத்திரவு போட்டிருக்கிறார் !
(அதனைத் தானே அரசும் விரும்பியது !)

முதன் முதலில், சிங்கப்பூரில் UBS AG bankல்
(சுவிஸ் வங்கியின் சிங்கப்பூர் கிளை )
ஒரு வெளிநாட்டு வங்கியில் இவனை அறிமுகம்
செய்வித்து, இவனுக்காக கணக்கைத் துவக்கி
வைத்து இவனது தொழிலை விரிவாக்கம்
செய்ய உதவியவன் அத்னன் கஷொக்கி.

ஆம் – சவூதியைச் சேர்ந்த (சட்ட விரோத)
ஆயுத விற்பனையாளர் அத்னன் கஷொக்கி தான்
இவனை உருவாக்கிய கடவுள் (காட் பாதர் !).

35 வயதில் துவங்கிய அந்த உறவு நேற்று வரை
தொடர்ந்திருக்கிறது !
கூடுதல் தொழிலாக இவன் செய்தது ஹவாலா !
(சட்ட விரோதமாக, அரசுக்குத் தெரியாமல்,
வெளிநாடுகளில் இருப்பவர்களுடன் பண
பரிவர்த்தனை.) இவன் கணக்கில் இருக்கும்
பணம் அத்தனையும் இவனுக்குச் சொந்தமானதல்ல
என்பது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியும் !

செல்வாக்கான அரசியல்வாதிகளுக்கும்,
பெரும் வர்த்தகப் புள்ளிகளுக்கும் இதில் பெரும்
பங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கடந்த காலங்களில் -ஒரே சமயத்தில்
8 வெளி நாட்டு வங்கிகளில்
இவனுக்கு கணக்கும், பெரும் அளவில் பணமும்
இருந்திருக்கிறது. இவன் 5 வெவ்வெறு
பாஸ்போர்ட்டுகளும் வைத்திருக்கிறான
என்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

ஹாசன் அலியின் வீட்டில் 2007 ஆம் ஆண்டு
முதன் முறையாக சோதனையிட்டபோது
ஸ்விட்சர்லாந்து நாட்டின் யுபிஎஸ்
(UBS AG bank, Zurich) கணக்கில்
இவன் 8 பில்லியன் அமெரிக்க டாலர்
வைத்திருந்தது தெரிய வந்திருக்கிறது.

இதன் பிறகு பலவேறு வெளிநாட்டு வங்கிகளில்,
கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான
பணம் வைத்திருந்த வகையில் ரூபாய்
40,000 கோடி அளவிற்கு
வருமான வரி பாக்கியாக கட்ட வேண்டும் என்று
இவனுக்கு வருமான வரித்துறையால்
நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

ஐந்து பொய் பாஸ்போர்ட்கள் வைத்திருந்ததாக
இவன் மீது இருந்த வழக்கில், ஜாமீனில்
வெளிவர இவன் மும்பை உயர்நீதி மன்றத்தில் மனு
கொடுத்தபோது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல்
செய்வதில் அலட்சியமாக இருந்ததால்,
இவனுக்கு ஜாமீன் கொடுத்தது நீதிமன்றம்.

அவன் மனு கொடுத்து 6 மாதங்கள்
ஆகியும் அரசு தரப்பில் பதில் அளிக்க
எந்தவித அக்கரையும் காட்டப்படாததால்,
அவனைச் சிறையில் வைக்க
அரசாங்கத்துக்கே அக்கரை இல்லையென்றால்,
இந்த நீதிமன்றம் ஏன் தன் நேரத்தை வீண்டிக்க
வேண்டும் என்று நீதிபதி கேள்வி வேறு எழுப்பியது
அரசாங்கம் இவன் மீது நடவடிக்கை எடுப்பதில்
எந்த அளவு அக்கரை காட்டுகிறது என்பதற்கு
ஒரு அத்தாட்சி.

ஆகஸ்ட் 4, 2009 அன்று ராஜ்ய சபாவில்
அளிக்கப்பட்ட ஒரு தகவலின்படி வரி பாக்கி
வைத்திருப்பவர்கலின் பட்டியலில் ஹாசன் அலி
முதலாவதாக, சுமார் ரூபாய் 50,000 கோடி
பாக்கி இருப்பதாகக் காட்டப்படுகிறான்.

வருமான வரி இலாகா கணக்கீடு முறைகளின்படி,
இன்னமும் வசூலிக்கப்படாத இந்த வரி பாக்கி,
அபராதத் தொகைகள் சேர்த்து இப்போது
70,000 கோடியை தாண்டி இருக்க வேண்டும்.

ஆனால்,2010-11 பட்ஜெட்டுக்கான,
ஆதார ஆவணங்களில்(supporting documents),
தனி நபர் வருமான வரி பாக்கியாக
ரூபாய் 50,000 கோடி தான் காட்டப்படுகிறது.

ஹாசன் அலி வரி பாக்கியை இன்னும் கட்டாத
நிலையில், இந்த தொகை குறைந்தது எப்படி ?

தற்போது உள்ள வருமான வரி சட்டத்தின்
விதிகளின்படி, எந்த நபரின் மீது வருமான வரி
இலாகா ரெய்டு நடத்தி இருக்கிறதோ, அந்த நபர்
செட்டில்மெண்ட் கமிஷனுக்கு மனு கொடுத்து
தன் கணக்குகளை சரி செய்து கொள்ள முடியாது.

ஆனால் –

இந்த வருட பட்ஜெட்டில் நிதியமைச்சர்
கொண்டு வந்திருக்கும் ஒரு சட்ட திருத்தம்
இந்த நிபந்தனையைத் தளர்த்துவதாக இருக்கிற்து.
இந்த திருத்தம் முக்கியமாக, ஹாசன் அலிக்கு
உதவி செய்யும்பொருட்டு, அவனுக்காகவே
கொண்டு வரப்பட்ட திருத்தமா…?

ஹாசன் அலி வழக்கை சப்தம் கிளம்பாமல்
எளிதாக முடிப்பதற்காகவே இந்த சட்ட திருத்தம்
கொண்டு வரப்பட்டிருப்பது போல தோன்றுகிறது
என்கிறார்கள் நிபுணர்கள்.

2007 ஜனவரியில் ஆரம்பித்த இவன் வழக்கு
நான்கு வருடங்களைக் கடந்த நிலையிலும்,
எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது.
இவனது வரி பாக்கியும் வசூல் செய்யப்படவில்லை.
இவன் மீது கிரிமினல் வழக்கு எதுவும்
முறையாகத் தொடரவும் இல்லை.
இவன் பதுக்கி வைத்திருந்த பணத்தை வெளியே
கொண்டு வர எந்தவித உண்மையான முயற்சியும்
செய்யப்படவும் இல்லை.

2011 ஜனவரி மாதத்தில் வெளிவந்துள்ள செய்தி –
ஸ்விஸ் வங்கிகள் ஹாசன் அலி தொடர்புடைய
விவரங்களை பகிர்ந்து கொள்ள மறுக்கின்றன.
காரணம் –
நிதி அமைச்சகம் ஸ்விஸ் நாட்டுக்கு இவனைப்
பற்றிய விவரங்களை அளிக்கும்போது, போர்ஜரி
செய்யப்பட்ட ஆவணங்களையும் சேர்த்து
இணைத்திருந்ததே.(விஷயத்தை கால தாமதம்
செய்ய வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சி ?)

இந்த 4 வருட காலங்களுக்குள், இவனது (மற்றும்
இவனது கூட்டாளியான காசிநாத் தபூரியாவின்) –
சுவிஸ் வங்கிகளில் இருந்த பணம் அத்தனையும்
வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு
சென்ற சுவடே தெரியாமல் போய் விட்டது.
இன்றைய தினம் ஸ்விஸ் வங்கியே
ஒத்துழைத்தாலும், பறிமுதல் செய்ய
அவன் கணக்கில் பணம் ஏதும் இல்லை.

இத்தனை நடந்தும், நிதிஅமைச்சர் எந்தவித
கவலையும் படாமல் – பதட்டப்படாமல்
பாராளுமன்றத்தில் பதில் கூறிக்கொண்டிருக்கிறார் –
இது விஷயத்தில் அரசு நிச்சயம் உரிய
நடவடிக்கைகளை எடுக்கும் என்று !

கடந்த மூன்று-நான்கு நாட்களாக மஹாராஷ்டிரா
சட்டமன்றத்தில் இந்த விஷயம் காரசாரமாக
விவாதிக்கப்பட்டு வருகிறது. ஹாசன் அலியை
கைது செய்வதில் முக்கிய பங்கு வகித்த டெபுடி
போலீஸ் கமிஷனர் ஒருவர் மூலமாக ஒரு செய்தி
பரவியதால் – அவர் தற்காலிக பணி நீக்கம்
(suspended)செய்யப்பட்டிருக்கிறார்.

அப்படி அவர் மூலம் பரவிய செய்தி
என்ன என்று கேட்கிறீர்களா ?

ஹாசன் அலியை கைது செய்து அவர் கஸ்டடியில்
வைத்திருந்தபோது அவன் – தன் வசம் உள்ள பணம்
எதுவும் தன்னுடையது அல்ல. ஆளும் கட்சியின்
செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதிகளின் பணம்.
அவர்கள் பணத்தைக் காப்பாற்றிக்கொள்ள அவர்களுக்கு
தெரியும். எனவே தான் இதைப்பற்றி அதிகம்
கவலைப்படுவதாக இல்லை என்று சொன்னானாம்.

இந்த விவகாரத்தில் –
ஆத்திரம் தாங்காமல் சில பொது நல விரும்பிகள்
தொடுத்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு
வந்தபோது நீதிபதிகள் கேட்டது தான் சிறப்பு….

“WHAT THE HELL IS GOING ON HERE ?”

———————————————————————————————————-

பின்னுரை –

இத்தனை வழக்குகள் பின்னணியில் இருந்தும்,
இந்த புண்ணியாத்மா, 2015 ஆகஸ்டில் மும்பை
உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தான்.
( எப்படியோ….? ) இன்று வரை சுகமாக வெளியே திரிகிறான்…!!!


2007-ல் அவன் மீது துவக்கப்பட்ட வழக்குகள் இன்று
(2019 செப்டம்பர்) வரை, 12 ஆண்டுகளைக் கடந்தும்,
சுகமாகத் தூங்கிக் கொண்டே இருக்கின்றன.
அவற்றை விரைவாக தொடரவோ,
முடித்து வைக்கவோ, யாருக்கும் ஆர்வம் இருப்பதாகத்
தெரியவில்லை…!!! ( எப்படி இருக்கும்….??? – கோடிகள்
பேசும்போது…? )

இந்த அலியைப் போல் இன்னும் எத்தனை
“வலி”கள் புதைக்கப்பட்டனவோ…?

இத்தகைய சேவைகளுக்காகத் தானா இந்த உயர் விருது…?

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இவருக்கேன் பாரத ரத்னா….? இவர் உதவியது யாருக்கு….?

  1. Subramanian சொல்கிறார்:

    காங்கிரஸ் முக்கிய தலைவராகவும்,
    பல ஆண்டுகள் மத்திய நிதியமைச்சராகவும்,
    பிறகு கங்கிரஸ் சார்பிலேயே ஜனாதிபதியாக
    ஆக்கப்பட்டவருமான ஒருவருக்கு
    பாஜக ஆட்சியில் ஏன் பாரத ரத்னா பட்டம்
    கொடுக்கப்படுகிறது ?
    இதில் ஏதோ மர்மம் இருப்பதாகவே தோன்றுகிறது.
    ஒருவேளை இண்று ஆட்சியில் இருப்பவர்களுக்கும்
    இவர் உதவியிருக்கிறாரோ ?

    • புதியவன் சொல்கிறார்:

      சுப்ரமணியன் சார்…. இவர் சோனியா, காந்தி குடும்பம் மீதிருந்த கோபத்தில், (தனக்குப் பிரதம மந்திரி பதவி கொடுக்காமல் மற்றவர்களுக்குக் கொடுத்ததில்..அதற்குக் காரணம்..ராஜீவ் பதவி ஏற்பதற்கு முன்பு, தனக்குத்தான் அந்தத் தகுதி இருக்கிறது என்பதுபோல அவிசுவாசமாகப் பேசியதால்..பிறகு பிரனாபிற்கு வாய்ப்பு தரப்படவில்லை) பாஜகவுக்கு சாதகமாக நடந்துகொண்டார்… அவ்வப்போது நடுநிலை என்று பாஜக சார்பாகப் பேசினார். மற்றபடி உள்விவகாரங்களும் இருக்கக்கூடும்.

      பிரனாப் எப்போதும் self respect நிரம்பப்பெற்றவர். கருணாநிதி, பிரணாப்பை அழைத்து நடத்திய ஒரு விழாவில் உட்கார்ந்தபடியே கருணாநிதி வணக்கம் சொன்னார் (கை கொடுத்தார்). பிரணாப் எழுந்திருக்கவே இல்லை. அவரும் உட்கார்ந்தபடியே கைகொடுத்தார். அந்த மஞ்சள் துண்டு அணிந்திருந்த காலத்தில் வட நாட்டுத் தலைவர்கள், சோனியா உட்பட எழுந்திருந்து கருணாநிதிக்கு மரியாதை செய்வது வழக்கம் (காரணம் நமக்குத் தெரியும்). தாஜா செய்ய, பிரனாப், பிராமணராக இருந்தும், அவரையே கருணாநிதி ஜனாதிபதி பதவிக்கு ஆதரித்தார், கலாமை அல்ல…

    • 123456 சொல்கிறார்:

      வெளியே சொல்லப்படாத ஒரு ஒப்பந்தம் அவர்களுக்குள்ளே
      (பாஜக+முகர்ஜி) ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
      முகர்ஜிக்கு பாரத ரத்னா கொடுப்பதில் பாஜக அரசுக்கு எந்த
      செலவும் இல்லை…
      ஆனால், பதிலுக்கு கிடைக்கப்போவது, மேற்கு வங்கத்தில்
      முகர்ஜியின் செல்வாக்கு ப்ளஸ் அவரது ஆதரவாளர்கள்,
      அபிமானிகள் அனைவரும் பாஜக வின் வெற்றிக்க்கு மடை மாற்றப்படுவார்கள்.
      அரசியலில் பலனை எதிர்பாராமல் எந்த moov ஆவது உண்டா ?

  2. புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்…. என்ன இப்படி அநியாயமாகக் கேள்வி கேட்கிறீர்கள்…. இதற்கு முன்பு சில பல பாரத ரத்னாக்கள் எதை வைத்து செலெக்ட் செய்யப்பட்டார்களோ அதே அளவுகோல்தான் பிரனாப் முகர்ஜிக்கும் என்று நினைத்துக்கொள்ளக் கூடாதா?

    சரி…உங்களுக்கு புரியும்படி விளக்கிவிட வேண்டியதுதான். அருண் ஜெட்லிக்கு எந்த தகுதிக்காக நிதிஅமைச்சர் பதவி வழங்கப்பட்டது? இதன் பின்னணி உங்களுக்குத் தெரிந்திருக்கும்தானே… அதே மாதிரி பின்னணிதான் இவர் விஷயத்திலும்.

    இதைப் பார்த்துத்தானே தைரியம் வந்து, ஆயிரம் கோடிக்கணக்கான ரூபாய் இருந்தும் அரசாங்கச் செலவில் ஓசியில் பல வருடங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து இறக்கிறவர்களுக்கு வெட்கமே இல்லாமல் பார்லிமெண்டில் சிலை அரசாங்கச் செலவில் வைத்துக்கொள்கிறார்கள்.. ஊழலின் சிகரம் கருணாநிதிக்கு ‘செய்த அளவிட முடியாத ஊழலுக்காக’ பாரதரத்னா கேட்கிறார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.