நவோதயா – தவறு செய்கிறோமா …?


புதுச்சேரி, காலாபெட்டில் இயங்கி வரும்
நவோதயா பள்ளியிலிருந்து
ஒரு காட்சி ….

மத்திய அரசு நாடு முழுவதும் இரண்டு வித
பள்ளிகளை நடத்தி வருகிறது. ஒன்று கேந்த்ரிய
வித்யாலயா; மற்றொன்று நவோதயா.

கே.வி. பள்ளிகள், முக்கியமாக நாடு முழுவதும்
அடிக்கடி பணிமாற்றங்களுக்கு உள்ளாகக்கூடிய
மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதற்காக
உருவாக்கப்பட்டது.

ஒன்று முதல் 12 வரையான வகுப்புகள் உண்டு.
கல்வி ஆண்டின் நடுவில், அவர்கள் ஊர் மாறிச்
சென்றாலும், புதிய இடத்தில் உள்ள கே.வி.பள்ளிகளில்
அதே வகுப்பில், அதே பாடத்திட்டத்தில்(சிலபஸில் )
எந்தவித பிரச்சினையும் இன்றி படிப்பைத் தொடரலாம்.
என்னுடைய குழந்தைகள் இதில் தான் படித்தார்கள்.

நவோதயா பள்ளிகளின் நோக்கமும், நடைமுறையும்
இதிலிருந்து மாறுபட்டது.

நவோதயா பள்ளிகள் – இந்தியா முழுவதும்,
அனைத்து மாநிலத்திலும், மாவட்டத்திற்கு ஒன்றாக
உருவாக்கப்படுகிறது. மத்திய அரசு இந்த நவோதயா
பள்ளிகளை உருவாக்கி, இதனை தொடர்ந்து நடத்துவதற்கான
முழுச் செலவையும் தானே ஏற்கிறது.

இவை, முக்கியமாக – நல்ல உயர்கல்வி பெறும் வாய்ப்பு
அதிகம் இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கானது.
இதில், 75 % கிராமத்து மாணவர்கள் தான் சேர்க்கப்படுவார்கள்…

நவோதயா பள்ளிகளில்,6 -வது முதல் 12-ஆம் வகுப்பு
வரை மட்டுமே உண்டு.
மேலும் – இவை உண்டு, உறைவிடப்பள்ளிகள்.
மாணவர்கள் இங்கேயே தங்கிப் படிக்க வேண்டும்.
மாதத்தின் 2-வது சனிக்கிழமைகளில், பெற்றோர்கள்
வந்து பார்த்து விட்டுச் செல்லலாம்.

இன்னொரு முக்கியமான விஷயம்…
கே.வி.பள்ளிகளில் ஹிந்தி ஒரு கட்டாய பாடம்…
தமிழ் கிடையாது.

ஆனால், நவோதயா பள்ளிகளில், ஹிந்தி கட்டாயம்
கிடையாது. விருப்ப பாடமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், அந்தந்த மாநில மொழிகள் (தமிழ்நாட்டில்
தமிழில்… ) தான் பயிற்று மொழிகள். 9-வது வகுப்பு
வரை மாநில மொழியில் தான் பாடங்கள் சொல்லித்
தரப்படும்…. அதாவது பயிற்று மொழியாக இருக்கும்.

கே.வி.யில் அட்மிஷனில் நிறைய கோட்டா முறை
இருக்கிறது… நுழைவுத் தேர்வு எதுவும் கிடையாது.
ஆசிரியர்கள் அகில இந்திய அளவில்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பல மாநிலங்களைச்
சேர்ந்தவர்கள் ஒரே பள்ளியில் பணி புரியக்கூடும்

ஆனால், நவோதயாவில், நுழைவுத் தேர்வு மூலம்
மட்டுமே மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நவோதயா பள்ளிகளில் – அந்தந்த மாவட்ட மாணவர்களுக்கே
சேர்க்கையில் முன்னுரிமை. அதே போல் அந்தந்த
மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே – ஆசிரியர்களாக
நியமிக்கப்படுவார்கள்.

கே.வி.யில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றாலும் சரி;
இல்லையென்றாலும் சரி – ஆசிரியர்களுக்கு அதில்
எந்தவித பொறுப்பும்(accountability) கிடையாது…
மாணவர்களின் திறனுக்கும், முன்னேற்றத்திற்கும்
பெற்றோர்களே பொறுப்பு.

ஆனால், நவோதயாவில் – உண்டு உறைவிடப்பள்ளி
என்பதால், மாணவர்களின் திறனுக்கும், தேர்ச்சிக்கும்
முழுப்பொறுப்பும் ஆசிரியர்களுடையதே. எனவே,
ஆசிரியர்கள் அதிக அக்கறையுடன் செயல்படுவது
இங்கே அவசியமாகிறது.

துவக்க காலத்தில், நவோதயா பள்ளிகள் ஹிந்தியை
திணிக்கும் என்ற அச்சத்தை உண்டுபண்ணியதாலும்,
தமிழகம் மும்மொழித் திட்டத்தை நிராகரித்ததாலும்,
தமிழகத்தில் அவை அடியோடு ஒதுக்கப்பட்டன.

ஆனால், நாளடைவில் நவோதயா பள்ளி நடைமுறைகளில்
பல மாறுதல்கள் கொண்டு வரப்பட்டு விட்டன.
இன்றைய நாட்களில், எந்தவித ஹிந்தி திணிப்புக்கும் நவோதயா
பள்ளிகள் பயன்படுத்தப்பட மாட்டா என்கிற தெளிவு
ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தான் நவோதயா பள்ளிகள் இல்லை.
பக்கத்திலேயே புதுச்சேரியில் நவோதயா பள்ளிகள்
இயங்கி வருகின்றன. விசாரித்துப் பார்த்தேன்.
அங்கே தமிழ் தான் பயிற்று மொழியாக இருக்கிறது….

2017-ல் சென்னை உயர்நீதிமன்றத்தின், மதுரைக் கிளையில்
தொடரப்பட்ட ஒரு பொதுநல வழக்கில், அனைத்து
மாவட்டங்களிலும், நவோதயா பள்ளிகளை தமிழக அரசு
உடனடியாக துவங்க வேண்டும் என்று
தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இங்கு தமிழகத்தில் நிலவும் செண்டிமெண்ட்
காரணமாக, தமிழக அரசு இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்
(சுப்ரீம் கோர்ட்…) மேல் முறையீடு (அப்பீல்) செய்திருக்கிறது.

நீதிமன்றங்களில் வழக்குகள் எடுத்துக்கொள்ளப்படும்
முறை நமக்குத் தெரியும்…. குறைந்த பட்சம்
அடுத்த 10 வருடங்களுக்குள் இந்த வழக்கு வாதத்திற்கு
எடுத்துக்கொள்ளப்பட்டு, இதற்கு தீர்வு காணப்படும் என்கிற
நம்பிக்கை இல்லை…

பழைய செண்டிமெண்ட்டை யெல்லாம் தூக்கி எறிந்து விட்டு,
திறந்த மனதுடன் யோசித்தால் –

தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் உள்ள மேல்முறையீட்டை
திரும்ப பெற்றுக்கொண்டு –

நவோதயா பள்ளிகளை தமிழகத்தின் அனைத்து
மாவட்டங்களிலும் துவங்க ஏற்பாடு செய்வது தான் நல்லது
என்று தோன்றுகிறது.

தமிழகத்தின், கிராமத்து பிள்ளைகள், இலவசமாக,
நல்ல உண்டு உறைவிட பள்ளிகளில் தங்கியிருந்து
தரமான கல்வியை பெறக்கூடிய வாய்ப்பை –
நாம் ஏன் இழக்க வேண்டும்…?

மேலும், அந்தந்த மாவட்டத்திலிருந்தே
ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதால்,
மாவட்ட அளவில் கணிசமான எண்ணிக்கையில்
ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.

32 மாவட்டங்களில், 32 உயர்நிலைப்பள்ளிகளை
உருவாக்கி, அவற்றுக்கான கட்டமைப்புகளை
(infrastructure) ஏற்படுத்தி, ஆசிரியர்களை நியமித்து,
தொடர்ந்து அவற்றை நடத்துவதற்கான மத்திய அரசின்
நிதியை, அனைத்து மாநிலங்களும் ஏற்கெனவே பெற்று
அனுபவித்து வரும் ஒரு உரிமையை –
நாம் ஏன் இழக்க வேண்டும்…

சரியான புரிதல் இல்லாமலும், அரசியல்வாதிகளின்
எதிர்ப்புகளுக்கு பயந்தும் – இவற்றை தமிழக அரசு
இனியும் தவிர்ப்பது –

மேற்படி பின்னணிகளில் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் –
நமது ஏழை கிராமப்புற குழந்தைகளுக்கு நாமே செய்யும்
அநீதியாகவே இது தோன்றுகிறது.

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to நவோதயா – தவறு செய்கிறோமா …?

 1. Subramanian சொல்கிறார்:

  எதிர்க்கட்சிகளிடமிருந்து வரக்கூடிய எதிர்ப்புகளை நிராகரித்து விட்டு,
  தமிழக அரசு நவோதயா பள்ளிகளை துவக்குவது தான்
  நியாயமான, நல்ல முடிவாக இருக்கும்.

  • புதியவன் சொல்கிறார்:

   சொல்வது ரொம்ப சுலபம். தமிழகத்தில் 60% பேருக்கு சிந்தனை என்பதே கிடையாது. (வாக்களிப்பவர்களில்). அதனால்தான் யாரும் எதைச் சொன்னாலும் நம்பிவிடுவது, தலையாட்டுவது என்று இருக்கிறார்கள். இதை வைத்துத்தான் ஸ்டாலின், வைகோ, கனிமொழி போன்றவர்கள் தங்கள் சுயநல வியாபாரத்தை நடத்துகிறார்கள்.

   அதனால் நவோதயா பள்ளி திமுக ஆட்சியில்தான் வர வாய்ப்பு இருக்கு. அதுல அவங்களுக்கு லாபம் இருக்கும் என்றால், அவங்களே அவங்க குடும்பத்துல இந்த மாதிரி பள்ளிகள் நடத்த முடியுமான்னும் பார்ப்பாங்க.

   அதிமுக அரசு இதனைச் செய்யாது.

 2. Prabhu Ram சொல்கிறார்:

  // அதிமுக அரசு இதனைச் செய்யாது. //

  உண்மை தான்.
  ஆனால் சொல்கிறவர்கள் சொன்னால் செய்யும் !

 3. R KARTHIK சொல்கிறார்:

  உண்மை

 4. venkat சொல்கிறார்:

  We are also making a mistake in criticizing new education policy. See rangaraj pandey you tube video on this

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.