வேலூரில் தோற்றால், யாருக்கு பாதிப்பு அதிகம் ….? ஸ்டாலினுக்கா… எடப்பாடியாருக்கா….?


பேருக்கு தான் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல்…
ஆனால், தேசிய கட்சிகள் இரண்டுக்கும் இங்கு அட்ரஸையே
காணோம்.

நிழலிலும், நிஜத்திலும் – போட்டி,
திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான்..

இன்னும் சொல்லப்போனால், போட்டி, திரு.ஸ்டாலினுக்கும்,
திரு.எடப்பாடியாருக்கும் தான்.

இந்த தேர்தலில், ஜெயிக்கப்போகிறவர் யார் என்பதை விட,
தோற்கப்போகிறது யார் என்பது தான் முக்கியமான
விஷயமாக இருக்கப்போகிறது.

எடப்பாடியாரைப் பொருத்த வரை, இதுவே சட்டமன்ற
தேர்தலாக இருந்தால், தோல்வி, அவருக்கு பெரும் அளவில்
பாதிப்புகளை ஏற்படுத்தும்…

ஆனால், எம்.பி. தொகுதி என்பதால்,
அதிமுக இங்கே தோற்றால் –
பத்தோடு பதினொன்று என்கிற மாதிரி, ஏற்கெனவே
28 தொகுதிகளில் கிடைத்த முடிவு தானே என்று மக்கள்
சகஜமாக எடுத்துக்கொள்ளக்கூடிய மனநிலையில் தான்
இருப்பார்கள்.

ஆனால் -ஏற்கெனவே 28 எம்.பி. தொகுதிகளில் ஜெயித்து
வெற்றி முகத்தோடு, “அடுத்த முதல்வர்”
தோற்றத்துடன் இருக்கும் ஸ்டாலினுக்கு –
இந்த தேர்தலில் தோற்றால், வரப்போகும் சட்டமன்ற
தேர்தலைப் பொருத்த வரையில், மக்களிடையே
அவரது இமேஜ் பெருத்த அளவில் சரியக்கூடும்.

திமுகவினருக்கு – கட்சிக்குள்ளேயே கூட
அத்தகைய தோல்வி ஒரு பெருத்த அவநம்பிக்கையை
ஏற்படுத்தி விடும்.

வேலூரில் சிறுபான்மையினருக்கு கணிசமான ஓட்டுகள்
இருக்கின்றன. அதில் பெரும்பகுதியைப் பெற
இரண்டு கட்சிகளுமே தங்களால் ஆனது அனைத்தையும்
செய்கின்றன.

சுமார் 14.5 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் தொகுதியில்,
கிட்டத்தட்ட 4 லட்சம் சிறுபான்மையினர் இருக்கின்றனர்
( 2.5 லட்சம் இஸ்லாமியர்களும், 1.5 லட்சம் கிறிஸ்தவர்களும்…)

தேசிய பாதுகாப்பு முகமை எனப்படும் என்.ஐ.ஏ.வுக்கு
கூடுதல் அதிகாரம் கொடுக்கும் மசோதாவுக்கு –
நாடாளுமன்ற மக்களவையில் திமுக கடந்த வாரம்
ஆதரவளித்தது அந்த கட்சிக்கு எதிர்மறையாகப் பார்க்கப்படுகிறது.

அதே சமயம், முத்தலாக் சட்டத்திற்கு லோக் சபாவில்
அதிமுக ஆதரவு தெரிவித்தது – அந்த கட்சியையும்
நெகடிவ் பார்வையில் வைக்கிறது.

இது போல், இரண்டு கட்சிகளுக்கும் – பாதகமான
விஷயங்கள் இருக்கவே செய்கின்றன.

மைனாரிடி சமூகத்தினர் இந்த இரண்டு கட்சிகளையும்
நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். இந்த தேர்தல்
ஆட்சியை பிடிப்பதற்கான/நிர்ணயிப்பதற்கான தேர்தல் அல்ல
என்பதால், யாரும் உணர்ச்சி வசப்பட்டு ஓட்டு
போடப்போவதில்லை.

எனவே, மைனாரிடி சமூகத்தினரின் ஓட்டு யாருக்கு என்பது
இங்கே கடைசி வரை சஸ்பென்ஸாகவே இருக்கப் போகிறது.
இந்த ஓட்டுகள் நிச்சயமாக பிரியும்… அதில் யாருக்கு எத்தனை
சதவீதம் என்பது ஒரு முக்கியமான கேள்வி.

வேட்பாளருக்கான, தனிப்பட்ட செல்வாக்கு என்று பார்த்தால்,
திருவாளர் துரைமுருகனின் மகனுக்கு பாசிடிவ்’வாக எந்தவொரு
இமேஜும் இல்லை… துரைமுருகன் பெருத்த சுயநலவாதி
என்றே காட்பாடி மக்கள் புரிந்து வைத்திருக்கின்றனர்.
திமுக கட்சிக்காரர்களும் இங்கே பெரிய அளவில்
உற்சாகத்தோடு வேலை செய்யவில்லை…

ஆனால், திரு.ஏ.கே.ஷண்முகம் இங்கே, உள்ளூர் மக்களிடையே
மிக நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார்.
அவருக்கு எந்தவித நெக்டிவ் இமேஜும் இல்லை…
தேர்தலுக்காக, தாராளமாக செலவும் செய்கிறார்…!!! கூடவே,
ரஜினி ஆதரவாளர்களும் அவருக்காக களத்தில் இறங்கி,
ஆர்வத்துடன் உழைக்கிறார்கள்.

———————–

மற்ற 39 பாராளுமன்ற தொகுதிகளில் நடந்ததுபோல்,
இங்கு பாஜகவுக்கோ, மோடிஜிக்கோ- எந்த விதத்திலும்
முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை… கிட்டத்தட்ட
அவர்களைப் பற்றிய பேச்சே இல்லை என்று சொல்லலாம்.

இந்த தேர்தலின் முடிவில் மற்றொரு விஷயமும் தெளிவாகும்…

பாராளுமன்ற தேர்தலில், திமுக 28 தொகுதிகளில்
வெற்றி பெற்றது –

தமிழக மக்களிடம் ஸ்டாலினுக்கு இருந்த செல்வாக்கு /
காரணமாகவா…?

அல்லது –

தமிழக மக்களிடம் மோடிஜி-மீது இருந்த எதிர்ப்பு உணர்வு

காரணமாகவா..?

-என்பதும் இந்த தேர்தலில் தெரிய வரலாம்…!

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to வேலூரில் தோற்றால், யாருக்கு பாதிப்பு அதிகம் ….? ஸ்டாலினுக்கா… எடப்பாடியாருக்கா….?

 1. புதியவன் சொல்கிறார்:

  நான் அப்படி நினைக்கவில்லை கா.மை. சார்…..

  இந்தத் தடவையும் வேலூர் பாராளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றே நினைக்கிறேன். 2 லட்சத்துக்கு மேல் வாக்கு வித்தியாசம் இருக்கும். (இந்த வெற்றியைத் தனதாக்கிக்கொள்ள உதயநிதி மட்டும் பிரச்சாரம் செய்ய ஸ்டாலின் அனுமதிப்பார். கனிமொழிக்கு பிரச்சாரத்துக்கு வருவதற்கு அனுமதி கிடைக்காது என்றே நான் நம்புகிறேன். இனி கனிமொழி, சீனியம்மாள், சுப்புலட்சுமி போன்றவர்களைப்போல பொதுக்குழு உறுப்பினர் என்ற நிலையை நோக்கி நகர்த்தப்படுவார்)

  அதிமுக, அனேகமாக ஓபிஎஸ்ஸை கழற்றிவிட்டுவிட்டு, ஒற்றைத் தலைமைக்கு (அனேகமாக சசிகலா) திரும்பும் என்று நினைக்கிறேன். இதற்கு ஓரிரு வருடங்களாகலாம். ஓ.பி.எஸ்., அதிமுகவுக்கு கெடுதல் நினைக்கிறார், கெடுதலைச் செய்கிறார் என்று நான் நம்புகிறேன்.

  தான் மூன்று தடவைகள் முதல்வராகியாச்சு… எடப்பாடியை ஒற்றைத் தலைமை என்று ஏற்றுக்கொண்டிருக்கலாம். இல்லை… தினகரனையே ஏற்றுக்கொண்டிருக்கலாம். அதைச் செய்யத் தவறிவிட்டார்.

  வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் திமுகதான் வெற்றிபெறும் (பெரிய வெற்றி பெறலாம் என்று தோன்றுகிறது.). ஆனால் அதற்கு அப்புறம் அதிமுக மிக வலிமை பெறும் (ஒற்றைத் தலைமையில்) என்று நினைக்கிறேன்.

 2. புதியவன் சொல்கிறார்:

  //தமிழக மக்களிடம் மோடிஜி-மீது இருந்த எதிர்ப்பு உணர்வு// – தமிழக அரசியல் கட்சிகள், பா.ஜ.கவை பக்கத்திலேயே சேர்க்கக்கூடாது. மோடி அவர்களுக்கு தமிழகத்தில் வாக்களிக்கும் சமுதாயத்தில் பெரிய எதிர்ப்பு இருக்கிறது. அதிமுக அவர்களுடன் சேர்ந்துகொண்டு, அதிமுகவின் வாக்குகளை இழந்ததுதான் மிச்சம்.

  2014ல், ஊழல் திமுக+காங்கிரஸ் மீது மக்கள் கடும் கோபம் கொண்டிருந்தனர். அதனால்தான் பாஜகவுக்கு கொஞ்சம் வாக்கு தமிழகத்தில் வந்தது. ஆனால் பாஜக, தமிழகத்துக்கு எந்த விதமான நன்மையையும் செய்யவில்லை (செய்தே என்று விவாதத்துக்காகச் சொல்வதை ஒதுக்கித் தள்ளிவிடலாம்). எந்த விதமான வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டு வரவில்லை. வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் தமிழக செண்டிமெண்டுக்கு எதிராகத்தான் பாஜக நடந்துகொண்டுள்ளது. (6 வழிச் சாலை, புயல் சேதம், காவிரி ஆணையம், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், ஹிந்தித் திணிப்பு….. என்று சொல்லிக்கொண்டே போகலாம்).

  தமிழக அரசியல் கட்சிகளுக்கு என் வேண்டுகோள்…. பேசாம பாஜக, நோட்டாவோடு மட்டும் போட்டிபோட்டு கடுமையாகத் தோற்கட்டும். அந்தத் தேவையில்லாத மூட்டையை நீங்கள் சுமந்துகொண்டு, உங்கள் வாக்கு சதவிகிதத்தை கடுமையாக இழக்காதீர்கள். பாஜக நம்பிக்கைக்கு உரிய கட்சி இல்லை. (அதாவது கூட்டாளிகளுக்கு நன்மை செய்யும் கட்சி இல்லை. அவர்கள் நம்புவது உங்கள் ஊழலை மட்டுமே. அதை மட்டுமே லகானாக வைத்துக்கொண்டு உங்களை ஆட்டுவிக்கும், மக்கள் ஆதரவு அதற்கு எள்ளளவும் கிடைக்காது)

 3. Selvarajan சொல்கிறார்:

  // வேலூரில் தோற்றால், யாருக்கு பாதிப்பு அதிகம் ….? ஸ்டாலினுக்கா… எடப்பாடியாருக்கா….? // இருவருக்குமே இல்லை .. வாக்கு அளிக்க துடிக்கிற மக்களுக்கு தான் …!

  இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றுக்கு …. எம்.பி . எண்ணிக்கை ஒன்று கூடுதலாகும் — வேறு என்ன நடந்துவிட போகிறது … ? மாநிலங்களின் அனைத்து உரிமைகளையும் தன் வசமாக்குகிற மத்திய அரசை இந்த எண்ணிக்கை என்ன செய்து விட போகிறது …? மாநிலங்களில் அதிகாரமற்ற பொம்மை அரசுகள் வருங்காலத்தில் இருப்பதைவிட இந்த மாநில அரசுகளே இல்லாமல் இருந்து விடலாம் …?

  அதை நோக்கித்தான் காரியங்கள் நடக்கிறதோ என்கிற சந்தேகம் வந்தால் அவன் தான் ஜனநாயக வாதி …!

 4. Ramnath சொல்கிறார்:

  குழப்புகிறீர்களே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.