கடைசீயில் இருக்கிறது வெடி ….!!!சீரியசாக நம்ப வேண்டும் என்பதற்காக அல்ல –
சுவாரஸ்யமாக இருக்கிறது என்பதற்காக இங்கே தந்திருக்கிறேன்.
ஆனால், இப்படியெல்லாம் யோசிப்பவர்கள் நிறைய பேர்
இருக்கிறார்கள் என்பதையும் நாம்
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்….!!!

படைத்தவர் யாரோ தெரியவில்லை…
பெற்றதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்…
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்…!!!

————————————————

கடவுள் மீது அதீத நம்பிக்கை வைத்து, எப்போதும்
உருகிப் பிரார்த்திக்கும் முருகேசுக்கு, ஒரு நாள் கடவுளிடம்
பேச சந்தர்ப்பம் கிடைக்கிறது….

முருகேசு: கடவுளே..! நான் உங்க கிட்டே ஒரு
விளக்கம் கேட்கலாமா.?

கடவுள் : தாராளமாகக் கேள் மகனே..

முருகேசு : பொறுமையாக, கோபப்படாமல்
பதில் சொல்வீர்களா..?

கடவுள் : கண்டிப்பாக..

முருகேசு : இன்றைய தினம், ஏன் எனக்கு
இப்படி ஒரு மோசமான நாளைக் கொடுத்தீங்க.?

கடவுள் : என்னப்பா சொல்ற நீ..?

முருகேசு : எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான்
இன்னைக்கு எழுந்திரிச்சதே ரொம்ப லேட்.. !

கடவுள் : ஆமாம்..! அவசரத்துல என்னைக் கூட
கும்பிடாம ஆபீஸ்க்கு புறப்பட்டுட்ட..

முருகேசு : கிளம்பினதே லேட்.. இதுல என்
பைக் வேற பஞ்சர் ஆகியிருந்தது.

கடவுள் : ஆமாம்.. எனக்குத் தெரியும்.

முருகேசு : சரி, பஸ்ல போலாம்னு பஸ்ஸை பிடிச்சா
வழியில ஏதோ ஆக்சிடெண்ட் போல.. ஒரே டிராஃபிக் ஜாம்.
ஆபீஸ்க்கு நான் ஒரு மணி நேரம் லேட்.

கடவுள் : ஆமாம்..! தெரியுமே..

முருகேசு : மதியம் சாப்பிடக் கொஞ்சம்
லேட் ஆயிருச்சு. அதுக்குள்ளே கேண்டீன்ல சாப்பாடு
காலியாயிருச்சு. கடைசில பசிக்கு ஏதோ கிடைச்சதை
அரைகுறையா சாப்பிட்டுட்டு வந்தேன்.

கடவுள் : ஆமாம், அதுவும் தெரியும்.

வங்கியில் பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருந்தேன்.
அது விஷயமா ஒருத்தர் கிட்டே இருந்து நான் ஃபோனை

எதிர்பார்த்திருந்தேன். சாயந்திரம் வீட்டுக்குத்
திரும்பும் போது அவர்கிட்டேயிருந்து எனக்குக் call
வந்தது. பேட்டரியில சார்ஜ் இல்லாம மொபைல்
அந்த நேரம் பார்த்து ஆஃப் ஆயிடிச்சு.

கடவுள் : ஆமாம், தெரியும்.

முருகேசு : அதைப் பிடிச்சி.. இதைப் பிடிச்சி..
முட்டி மோதி வீட்டுக்கு வந்து, கொஞ்ச நேரம் ரூம்ல
ஏ.சி.யில உட்கார்ந்து டி.வி.யை பார்த்து ரிலாக்ஸ்
பண்ணலாம்னா ஏ.சி. ரிப்பேர் போல. வேலையே செய்யல..

இன்னிக்கு எனக்கு எதுவுமே சரியில்லையே..!
எப்பவும் உங்களைக் கும்பிடுறவன்,
ஒரே ஒரு நாள் உங்களைக் கும்பிட மறந்ததுக்கு
இவ்ளோ தண்டனையா கடவுளே..?

(கடவுள் பலமாகச் சிரிக்கிறார்.
சில வினாடிகள் கழித்துப்
பேச ஆரம்பிக்கிறார்)

கடவுள் : இன்னைக்கு உன் கர்மாவின்படி மிகவும்
மோசமான நாள். நீ காலை அசந்து தூங்கிக்கிட்டிருக்கும்
போதே மரணதேவன் உன்னை நோக்கி வந்து விட்டான்.
அவன் கூட வாக்குவாதம் பண்ணி உன்னைக்
காப்பாற்ற வேண்டி உன்னைக் கொஞ்சம் அதிக நேரம்
தூங்க வெச்சேன்.

முருகேசு : (அதிர்ச்சியுடன்) ஓ….!!!

கடவுள் : உன் பைக்கை பஞ்சராக்கினேன்.
ஏன்னா, நீ ஆபீஸ் போகும் போது.. நீ போற ரூட்ல
பிரேக் பிடிக்காம தாறுமாறா ஓடுற வேன் ஒண்ணு
உன் மேல இடிக்கிறதா இருந்தது. அந்த வேன்
ஆக்சிடெண்ட்டாகி தான் டிராபிக் ஜாம் ஆச்சு.
நீ பைக்ல போயிருந்தா அந்த வேன் மரணதேவன்
கணக்குப்படி உன் மேல இடிச்சிருக்கும்..

முருகேசு : அய்யோ …!!!

கடவுள் : மதியம் உனக்குச் சாப்பாடு கிடைக்காம
போனதுக்குக் காரணம், கடைசியா மிச்சமிருந்த குழம்புல
எலிக்கு வெச்சிருந்த எலி பாஷாணம் எப்படியோ
தவறி விழுந்துடிச்சு..! யாரும் அதைக் கவனிக்கல.
அதை நீ சாப்பிட்டிருந்தா என்னாயிருக்கும்..?

முருகேசு : (கண்கலங்கியபடி) ம்ம்..!!!

கடவுள் : சாயந்திரம் உன் அலைபேசி சுவிச் ஆப்
ஆனதுக்குக் காரணம், அந்த நபர் உனக்குத் தவறான
வாக்குறுதிகள் கொடுத்து இக்கட்டில் மாட்டி விட
இருந்தார். எனவே அதிலிருந்து காப்பாற்ற வேண்டி,
உன் ஃபோனை செயலிழக்கச் செய்து விட்டேன்.

முருகேசு : ம்ம்…

கடவுள் : அப்புறம், அந்த ஏ.சி. மெஷின் எர்த் கோளாறு
ஏற்பட்டு அதில் முறையற்ற முறையில் கரண்ட்
வந்து கொண்டிருந்தது. ஒருவேளை முகம்
கழுவிக் கொண்டு ஈரக் கைகளுடன் எப்போதும் போல
நீ சுவிட்சைத் தொட்டிருந்தால், அந்தக் கணமே தூக்கி

எறியப்பட்டிருப்பாய். ஆகையால் அதை செயலிழக்கச்
செய்தேன்.

என்னை வணங்க மறந்ததால் அன்று முழுதும்
நீ சோதனையை சந்தித்தாய் என்று என்னைத்
தவறாக நினைத்து கொண்டாய். ஆனால் அனுதினமும்
நீ என்னை வணங்கி வந்த காரணத்தால்
நீ என்னை மறந்த அன்றும் கூட –
நான் உன்னைக் காக்க மறக்கவில்லை.

முருகேசு : சாமீ…. இத்தனை ஆபத்துலேர்ந்து எல்லாம்
என்னை காப்பாத்துனீங்க.. ரொம்ப சந்தோஷம்…

ஆனா என் கல்யாணத்தன்னிக்கு நீங்க
எங்க போயிருந்தீக சாமீ…??? 🙂 🙂 🙂

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to கடைசீயில் இருக்கிறது வெடி ….!!!

  1. Subramanian சொல்கிறார்:

    நிஜமாகவே கடைசி வரி, வெடி – ச்சிரிப்பு தான்.

  2. D. Chandramouli சொல்கிறார்:

    Deadly hilarious punch at the end!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.