அதிமோசமான ஒரு போதை …


கொஞ்சம் கொஞ்சமாக, விளையாட்டுத்தனமாக ஆரம்பித்த
பழக்கம் இன்று பல சிறுவர், சிறுமிகளை, இளைஞர்களை
ஏன் மத்திய வயதுக்காரர்களைக் கூட பைத்தியமாக்கி விட்டது.
போதை வஸ்துக்கள் எப்படி மனிதரை அடிமையாக்குகிறதோ
அதே போல், இந்த பழக்கமும் மனிதரை தின்று தீர்த்து விடுகிறது.

தமிழக காவல்துறை இயக்குநர், முனைவர் செ.சைலேந்திரபாபு,
ஐ.பி.எஸ்., அவர்கள் இதுகுறித்து மிக விவரமாகவும்,
தெளிவாகவும் வெளியிட்டிருக்கும் ஒரு எச்சரிக்கை கீழே –
நண்பர்கள் இதை அவசியம் படிப்பதோடு, தங்களுடைய
தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் அனுப்பி வையுங்கள்.
உங்கள் இல்லத்தில் இருப்பவர்களையும்
படிக்க வையுங்கள்…

இந்த மிக மோசமான போதைப் பழக்கத்திலிருந்து நமது மக்களை
விடுவிக்க நாம் அனைவரும் முனைந்து செயல்பட வேண்டிய
காலம் உருவாகி இருக்கிறது….

—————————————————–

கைப்பேசி விளையாட்டு போதை

Facebook Twitter Mail Text Size Print வாட்ஸ் அப்,
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஏதேனும்
செய்திகள் வந்துள்ளதா என்று அடிக்கடி செல்பேசியை திறந்து
பார்ப்பதே ஒரு கட்டாயச் செயலாகிவிட்டது.
இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடவே முடியாது போலிருக்கிறது.

கடமையாற்ற வேண்டிய அலுவலர்கள் கூட கைப்பேசியை
உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அங்காடி,
பஸ், பஸ் நிலையம், ரெயில், ரெயில் நிலையம் என்று
எல்லா இடத்திலும் இதுதான் நடக்கிறது. பள்ளிகளில்
செல்பேசியை எடுத்துச்செல்ல தடை உள்ளது. ஆனாலும் சில
மாணவர்களிடம் செல்பேசிகள் உள்ளன.

சிறைச்சாலைக்குள் கைப்பேசிகள் இருப்பதைப் போலத்தான்
தடை செய்யப்பட்ட பள்ளி விடுதியிலும் கைப்பேசிகள் உள்ளன.
சில வேளைகளில் பெற்றோர்களே ரகசியமாக பிள்ளைகளுக்கு
கொடுத்துவிடுகிறார்கள்.

மாணவர்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டரில் விளையாடிய
விளையாட்டை இப்போது கைப்பேசியில் விளையாட வசதி
வந்துவிட்டது. இதனால் இளைஞர்கள் கைப்பேசியில் தீவிரமாக
புகுந்து விளையாட ஆரம்பித்துவிட்டார்கள்.

இது ஒரு வகை போதை. இந்த போதைக்கு அடிமையானவர்களுக்கு
தினசரி கடமைகளை செய்து முடிக்க முடியாமல் போய்விடுகிறது. காலப்போக்கில் எந்த தொழிலையும் செய்து முடிக்கும் திறமையும்,
மனமும் இல்லாமல் போய்விடுவதால் அந்த இளைஞர்களின்
எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுகிறது.

கைப்பேசி விளையாட்டுகள் சிலிர்ப்பையும், நடுக்கத்தையும்,
திகிலையும், ஆனந்தத்தையும் ஏற்படுத்துகிறது. இளைஞர்களை
கவர்ந்து ஈர்க்கும் விதமாகத்தான் விளையாட்டுகளை சுவாரசியமாக
வடிவமைத்திருக்கிறார்கள். வளர் இளம் பருவத்தினர் தேடும் புதுமை,
சாகசம், திரில், வெற்றியுணர்வு போன்றவை இந்த விளையாட்டில்
கிடைக்கிறது. பாலியல் உணர்வு, பலாத்கார உணர்வு போன்றவை
தூண்டப்பட்டு மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கப்பட்டு
உடல் முழுவதும் அது உற்சாக தீயாக பரவுகிறது. எனவேதான்
இந்த கம்யூட்டர் விளையாட்டை விட்டுப் பிரிய மனமில்லாமல்
மாணவர்கள் பல மணிநேரம் அதிலே விழுந்துகிடக்கிறார்கள்.
இவர்கள் இரவு முழுவதும் இந்த மாய விளையாட்டில் முடங்கிக்
கிடப்பதால் பகலில் அவர்களால் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்ல முடிவதில்லை. சென்றாலும் அங்கேயே தூங்கிவிடுகிறார்கள்.
பாடங்களில் இவர்கள் சாதாரணமாக தோற்றுவிடுகிறார்கள்.
அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதும் இல்லை.

இந்த சூழ்நிலையில் தான் பெரும்பாலும் பெற்றோர்கள்
விழித்துக்கொள்கிறார்கள்.

கல்லூரிகளிலிருந்தும் பெற்றோர்களுக்கு தகவல் வந்துள்ளது.
அதில் இப்போது ‘பப்ஜி’ என்ற ஆன்லைன் விளையாட்டுதான்
பெருவாரியாக மாணவர்கள் விளையாடும் கம்ப்யூட்டர் விளையாட்டு
என்றும், 40 கோடி இளைஞர்கள் உலகளவில் விளையாடுகிறார்கள்
என்றும், அதில் 8 கோடி பேர் இந்தியர்கள் என்றும்
தெரிவித்திருக்கிறார்கள். இது தடை செய்யப்பட்ட ஒரு கம்ப்யூட்டர் விளையாட்டு. ஆனால் இளைஞர்கள் எந்த தடையுமின்றி
விளையாடுகிறார்கள்.

இதற்கு முன்னர் தடை செய்யப்பட்ட ‘ப்ளு வேல்’ என்ற
விளையாட்டால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து
கொண்டதையும் சிலர் பெற்றோர்களை கூட கொலை
செய்ததையும் நாம் கேள்விப்பட்டோம்.

இன்று கிட்டத்தட்ட எல்லா கைப்பேசியிலும் இந்த
விளையாட்டுகளை விளையாடலாம். சராசரி இந்தியன்
ஒரு மணி நேரம் விளையாடும் அளவிற்கு கைப்பேசி விளையாட்டு வளர்ந்துவிட்டது. அதாவது எல்லாரும் விளையாடவில்லை
என்றாலும் ஒரு சிலர் பல மணிநேரங்கள் விளையாடுகிறார்கள்
என்பது அதன் பொருள்.

விளையாடும் நபர் தினமும் 2 முறையாவது விளையாடுகிறார்கள்.
இந்தியாவில் 25 கோடி மக்கள் இந்த கைப்பேசி வீடியோ
விளையாட்டு விளையாடி உலகில் முதல் ஐந்து இடத்தில்
நாம் இருக்கிறோம்.

நான் குறிப்பிட்ட பப்ஜி என்ற ஆபத்தான விளையாட்டு கடந்த
மார்ச் மாதம் தான் கைப்பேசியில் அறிமுகமாகி இருக்கிறது.
அதற்குள் அத்தனை பேர் பதிவிறக்கம் செய்துவிட்டார்கள்.

இந்த பப்ஜி விளையாட்டில் விமானத்திலிருந்து பாராசூட்டில்
குதித்து ஒரு தீவில் இறங்க வேண்டும். அங்கு கவசத்தையும்
வாங்கிக்கொண்டு துப்பாக்கியையும், எதிரிகளையும்
எதிர்கொள்ள வேண்டும். பின்னர் பாதுகாப்பான இடத்தில்
இருந்து கொண்டு ஒரு கமாண்டோ வீரர்போல எதிரிகளைச்
சுட்டுக்கொல்ல வேண்டும். அனைத்து எதிரிகளையும்
ஒழித்த பின்னர் இறுதியில் நாம் மிஞ்சியிருந்தால் நாம்தான்
வெற்றியாளர். நாம் சுடப்பட்டால் போர்க்களத்திலிருந்து
வெளியேறிவிட வேண்டும்.

ஒரு ரவுண்டு விளையாட 30 நிமிடம் என்று பத்து ரவுண்டு
விளையாடினால் என்னவாகும்? கிட்டத்தட்ட ஒரு 20 மதிப்பெண்
பாடம் படித்து முடிக்கும் நேரம் வீணாகிவிடும்.

ஆனால் பாடம் படிக்கும் ஒரு அயற்சியோ இதில் இல்லை.
இங்கு உலக மக்களை எதிர்கொள்ளவும், ராணுவப் போர்
புரியவும் வாய்ப்பு கிடைக்கிறது. வாய்மொழி உத்தரவு
பிறப்பித்துக்கூட எதிரியை சாகடிக்கலாம். இதில் போட்டிகள்
உண்டு. அதில் பதக்கங்கள் வேறு கிடைத்துவிடுகிறது.

எனவே மாணவர்கள் இதனால் கவரப்பட்டும், கவ்வப்பட்டும்,
விளையாடியும், தோற்றும், ஜெயித்தும் அடிமையாகி
விடுகின்றனர். தொடர்ந்து விளையாடுவது அவர்களின்
உயிரியல் தேவையாக மாறிவிடுகிறது. அதாவது
விளையாடவில்லை என்றால் குடிகாரர்களைப் போல
கை உதறல் ஏற்படும்.

கைப்பேசி விளையாட்டு போதைக்கு அடிமையான மாணவர்களை
எளிதில் கண்டுபிடிக்கலாம். இரவு முழுவதும் கம்ப்யூட்டர்
அல்லது கைப்பேசியுடன் உறவாடிக்கொண்டிருப்பார்கள்.
பெற்றோர் பார்த்ததும் சுதாரித்துக்கொண்டு பள்ளி அசைன்மெண்ட்
என்று சொல்லிவிடுகிறார்கள். காலையில் எழமாட்டார்கள்,
கல்லூரிக்கும் வழக்கமாக போகமாட்டார்கள். பகலிலும்
தூங்கிவழிவார்கள்.

வீடியோ விளையாட்டிற்கு அடிமையானவர்கள் கம்ப்யூட்டர்
விளையாட்டு உலகத்தில் மட்டும் இருந்து கொண்டிருப்பார்கள்.
இவர்களுக்கு தன்னை சுற்றி நடப்பது எதுவும் தெரியாது.
அவர்கள் விளையாட தேவையான நபர்கள் வரும் நேரத்திற்காக காத்திருப்பார்கள்.

அந்த நேரம் வந்ததும் துரிதமாக ஓடிச்சென்று அவர்கள்
விளையாட்டைத் தொடர்வார்கள்.

செய்ய வேண்டிய தினசரி கடமைகளையும் புறக்கணித்து
இந்த கம்யூட்டர் விளையாட்டில் மூழ்கிக் கிடப்பதால் இந்த
இளைஞன் பெரிய உடல்நலப்பாதிப்பிற்கும், மனநல பாதிப்பிலும்,
சமூக நல பாதிப்பிற்கும், அவமதிப்பிற்கும் உள்ளாகி விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையை கண்டதும் உடனே மனநல மருத்துவரை
அணுகுவது நல்லது. பெற்றோர், ஆசிரியர், உறவினர் என்று
தனித்தனியாகவும் கூட்டாகவும் இவனது செயல்பாட்டில்
தலையிட்டு இந்த விபரீத விளையாட்டை நிறுத்த முயற்சிக்கலாம்.
மாணவர்கள் மதிக்கும் ரோல்மாடல்கள் உண்டு. அவர்களிடம்
அழைத்துச்சென்று ஆலோசனை பெறலாம். ஒரு சுற்றுலாவிற்கு அழைத்துச்சென்று இந்த விளையாட்டிற்கு இடைவெளி ஏற்படும்
ஒரு சூழ்நிலையை உருவாக்கலாம்.

உடலால் விளையாடும் ஓடுதல், சைக்கிள், கைப்பந்து,
கால்பந்து என்ற விளையாட்டுகளில் தினமும் 2 மணி நேரமாவது
ஈடுபடுத்தலாம். பெற்றோர்களாகிய நீங்களே பிள்ளைகளுடன்
நடைபயணம் செல்லலாம். விளையாட்டிற்காக ஒரு ஆண்டு
பள்ளிப்படிப்பு வீணானாலும் பரவாயில்லை. இது ஒரு சிகிச்சை
என்றே எடுத்துக்கொள்ளலாம்.

1996-ம் ஆண்டு முதல் போக்கிமேன் விளையாட்டை பல
மாணவர்கள் விளையாடி நேரத்தை வீணடித்து பள்ளி கல்வியை தவறவிட்டார்கள்.

அதில் சிலர் சுதாரித்துக்கொண்டு பின்னர் தங்களை
திருத்திக்கொண்டார்கள்.

உணவு போதை, சினிமா போதை, கிரிக்கெட் போதை,
புகை போதை, மது போதை, பாலியல் போதை என்ற வரிசையில்
இன்று இளைஞன் சீரழிவது இந்த கைப்பேசி போதையால்தான்.

மற்ற எல்லா போதைகளையும் விட கொடிய ஒரு நோய் இது
என்று சந்தேகமின்றி கூறிவிடலாம்.

மாணவர்கள் கைப்பேசி விளையாட்டிற்கு அடிமையாயிருப்பதை
அறிந்த தயாரிப்பு நிறுவனங்கள் 700 கோடி ரூபாய்க்கும் மேலாக
முதலீடு செய்திருக்கிறார்கள். எனவே இன்னும் அதிகமாக
போதை தரும் கவர்ச்சி விளையாட்டுகள் சந்தையில் விரைவில் வெளிவந்துவிடும்.

எனவே பெற்றோர்களே
விழித்துக் கொள்ளுங்கள்.
கஜா புயல் எச்சரிக்கை,
ஆசிய
சுனாமி எச்சரிக்கை போன்று
இந்த கைப்பேசி விளையாட்டு போதையின்
தீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை சீரியசாக எடுத்து கொள்ளுங்கள்.

மாணவர்களே –
இது வேண்டாம் நீங்கள் விளையாட வேண்டியது
கைப்பந்து, கூடைப்பந்து, ஓட்டம், நீச்சல் போன்ற
நிஜமான விளையாட்டுகள். மொபைல் கேம் என்ற
போலி விளையாட்டு விபரீதமானது. அது உங்கள்
நிகழ்காலத்தை கொல்லும். எதிர்காலத்தை
கேள்விக்குறியாக்கும்.

– முனைவர் செ.சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ்., காவல்துறை இயக்குனர்.

.
———————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to அதிமோசமான ஒரு போதை …

 1. Subramanian சொல்கிறார்:

  This should be circulated to all Schools and Colleges
  and should be read by Teachers in front of Students
  in every Class. This can also be read loudly
  with necessary explanations in the Morning Prayer Assembly.

  Timely issued article.

 2. Selvarajan சொல்கிறார்:

  அய்யா .. ! எவன் ஒருவனா இருந்தாலும் இந்த வெள்ளித்திரை — கனவு உலகம் — என்றெல்லாம் கூறப்படுகிற திரைப்பட தொழிலில் ஈடுபட ஆசைக் கொள்வது — ஏன் மோகம் கொள்வது என்பது அன்றிலிருந்து இன்றுவரை தணியாமல் இருக்கிறது — ஒருவன் நடிக்க வாய்ப்புக்கேட்டு செல்லும் போது ஏதாவது உனக்கு தெரிந்ததை நடித்துக் காட்டு என்றால் — அவன் யாரை கருப்பொருளாக கொண்டு — யார் பேசியதை நடித்துக் காட்டுவான் என்று பார்த்தல் .அன்றும் சரி — இன்று இடுகையில் கூறியுள்ள கருவிகளின் காலகட்டத்திலும் கூட…

  இன்று நெஞ்சமெல்லாம் நினைக்கின்றவரின் நினைவு நாளான அவரை தான் இமிடேட் செய்து நடித்து — பேசி காட்டுவான் என்பதில் மாற்றம் இல்லை — அவர்தான் … அவரே தான் ” நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ” அவர்களின் — நினைவு நாள் … நெஞ்சம் மறப்பதில்லை .. அது நினைவை இழப்பதில்லை .. !!!

  • D. Chandramouli சொல்கிறார்:

   Absolutely. Sivaji was indeed a phenomenon. His screen presence was awesome. We just can’t take our eyes off him in any scene that he appears on screen. I have been an ardent fan of Sivaji for decades. There are many admirers who, in fact, go to the extent of treating him as God !!

 3. sakthy சொல்கிறார்:

  விழிப்புணர்வு மிகவும் அவசியம்.அதேசமயம் பெற்றோர்கள் ஏன் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை? விளையாட்டுகள்,செயலிகள் இருப்பது போல் அவற்றை குழந்தைகள்/பிள்ளைகள் பாவிக்காமல் இருக்கவும் தடுக்கவும் முறைகள்/ செயலிகள் உண்டு. பெற்றோர்கள் சுலபமாக தங்கள் கணினியில் இருந்தே கண்காணிக்க முடியும்.கணினி அறிவு இல்லாதவர்கள்,கணினி இல்லாதவர்கள் மற்றவர்கள் உதவியை நாடலாமே!
  ஏன் செய்வதில்லை? தேவையற்ற செயலிகளை பாவிக்காமல் தடுக்க நீக்க முடியும்.பிள்ளைகள் நன்றாக இருக்க செய்ய வேண்டும்.

 4. புதியவன் சொல்கிறார்:

  கம்ப்யூட்டர் Games – நான் 30 வருடங்களுக்கு முன்னாலேயே, இது கூடாது என்று நிறுத்திவிட்டேன். என் பசங்களுக்கும் இதையே சொல்லி வளர்த்திருக்கிறேன். 89-90களில், பெரிய அலுவலகங்களில் காண்டீன் பக்கத்தில் 3 பி.சி வைத்து அதில் கம்ப்யூட்டர் கேம்ஸ், உணவு இடைவேளையில் விளையாட வைத்திருப்பார்கள். நான் எப்போதும் அதன் அருகில் சென்றதில்லை. அதுவும் ஒரு போதைதான்.

  அப்புறம் கம்ப்யூட்டர் கேம் கன்சோல்கள் வந்தன. என் பசங்க சிறிய வயசில் கேட்டபோது நான் ஸ்டிரிக்டா வாங்கக்கூடாது, முடியாது என்று சொல்லிட்டேன்.

  பெற்றோர்கள் பங்குதான் இதில் மிக மிக அதிகம். அவங்க சீரியல்ல மூழ்கவும், பையனை கைகழுவி விடவுமே இதுமாதிரி செல்ஃபோன்களை வாங்கித்தராங்க. அப்புறம் சின்னப் பசங்களைக் குறை சொல்லி என்ன பயன்?

  டாஸ்மாக், சிகரெட், கம்ப்யூட்டர் கேம்ஸ் – இவைகளுக்கு வித்தியாசம் இல்லை. மூன்றும் எதிர்காலத்தை அழிப்பவை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.