அவர் ….. தலைவர் …!!!

கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் நினைவாக சில துளிகள்….அவரது குணாதிசயங்களுக்கு – ஒரு சாம்பிள்….

————

முனைவர், செ. செல்வராஜ் எழுதிய, ‘காமராஜர் நினைவலைகள்’
நுாலிலிருந்து:

————-

முதல்வர், காமராஜரின் அலுவலகத்திற்கே தேடி வந்தார்,
ஒருவர். ஏழ்மையை பறைசாற்றும் வேட்டி, சட்டை; கையில்
ஒரு மஞ்சள் பை. அவரை அழைத்து, அருகில் அமர வைத்த,
காமராஜர்,

‘என்ன ரெட்டியாரே… ஏதாவது, முக்கிய சேதியா, இல்ல,
சும்மா பார்க்க வந்தீரா…’ என்று கேட்டார்.
வந்தவருக்கு தயக்கம்.

‘பரவாயில்ல சொல்லுங்க, ரெட்டியார்…’ என்று,
மீண்டும் கேட்டார், காமராஜர்.

‘ஒண்ணுமில்ல… என் மகனுக்கு கல்யாணம்… அதான்…’
‘இதுக்கு ஏன், ரெட்டியாரே தயங்கணும். நல்ல விசேஷம் தானே…’
என்று தட்டிக்கொடுத்து, பாராட்டி, ‘நான், என்ன பண்ணணும்…’
என்றார், காமராஜர்.

‘இல்ல… கல்யாணத்துக்கு, நீங்க தான் தலைமை தாங்கணும்…
ஊரெல்லாம் சொல்லிட்டேன்; பத்திரிகை கொடுக்க, நேர்ல
வந்தேன்…’ என்று தயங்கினார்; ‘நீங்க வருவீங்கன்னு,
எனக்கு நம்பிக்கை. அதனால, அப்படி சொல்லிட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க…’ என்று இழுத்தார்.

கோபத்தில் முகம் இறுகி, ‘எந்த நம்பிக்கையில், நீங்க
முடிவெடுத்தீங்க… யாரை கேட்டு, மத்தவங்ககிட்ட சொன்னீங்க…’
என்று கடுமை காட்டினார், காமராஜர்.

கலங்கிய கண்களுடன், ‘தப்பா நினைச்சுக்காதீங்க… அன்னிக்கு,
உங்களுக்கு, வேலுார்ல ஒரு கூட்டம் இருக்கு… பக்கத்துல தான்,
என் ஊர். அதனால, கல்யாணத்துக்கு கூப்பிட்டா, கட்டாயம்
வருவீங்கன்னு நினைச்சுட்டேன்…’ என்றார், ரெட்டியார்.

‘உங்க வீட்டு கல்யாணத்துக்கு, வர்றதா முக்கியம்… அதுவா
என் வேலை; வேற வேலை இல்லையா… வர முடியாது…
நீங்க போயிட்டு வாங்க…’ என, பட்டென்று கூறி அனுப்பி
விட்டார், காமராஜர்.

முகத்தில் அடித்தது போல் ஆனது, ரெட்டியாருக்கு. நடந்ததை
வெளியில் சொல்லவில்லை. கல்யாணத்தை அவர் வீட்டில்
எளிமையாக நடத்தினார்; அவரது வசதிக்கு அப்படித்தான்
முடியும். கடைசியில், காமராஜர் வரமாட்டார் என்பதும்,
ஜனங்களுக்கு புரிந்தது.

‘என்னமோ, நானும், காமராஜரும் ஒண்ணா சிறையில்
இருந்தோம்… கூட்டாளிங்க… என் வீட்டு கல்யாணத்துக்கு
வருவார்ன்னு பெரிசா தம்பட்டம் அடிச்சுகிட்டாரு…
பார்த்தீங்களா அலம்பல…’ என்ற ஏளன பேச்சு கூடியது;
வந்து, போனவர்கள் எல்லாம் புறம் பேசினர்.

மனம் உடைந்த, ரெட்டியாருக்கு, உடல் கூனிப்போனது.
வீட்டிற்குள் சுருண்டு படுத்து விட்டார். அந்த வீடே வெறிச்சோடி
போனது. சற்று நேரத்திற்கெல்லாம், காரில் வந்த ஒருவர்,
‘முதல்வர், காமராஜர் வரப்போகிறார்…’ என்ற செய்தியை
சொன்னார்.

நம்பிக்கையற்று உட்கார்ந்திருந்தார், ரெட்டியார். சில
நிமிடங்களில், அடுத்த காரில், இரண்டு பெரிய கேரியரில்,
சாப்பாட்டோடு வந்து இறங்கினார், காமராஜர்.

ரெட்டியாரால் நம்ப முடியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம்
கூட்டம் சேர்ந்து விட்டது. முதல்வரை தழுவியபடி, குலுங்கி
அழுதார், ரெட்டியார்.

தட்டிக்கொடுத்து, சமாதானப்படுத்திய காமராஜர்,
‘சுதந்திர போராட்டம், ஜெயில்ன்னு எல்லாத்தையும் இழந்துட்ட,
உங்க கஷ்டம் எனக்கு தெரியும், ரெட்டியாரே… பையனுக்கு,
கல்யாணம்ன்னு சொன்னப்பவே, நான் வர்றதா சொல்லியிருந்தா,
நீர், இருக்குற கஷ்டத்துல, கடன் வாங்குவீர்…
‘முதல்வர் வர்றார்ன்னு ஏதாவது பெரிசா செய்யணும்ன்னு
போவீர்… அதான், அப்படி சொன்னேன்; மன்னிச்சிடுப்பா…
உன் வீட்டு கல்யாணத்துக்கு வராம, எங்க போவேன்…’
என்று, ஆரத்தழுவினார்.

கண்ணீர், ஆனந்த கண்ணீரான நேரம் அது.
பிறகு, வாசலில் பாய் விரித்து, எடுத்து வந்த சாப்பாட்டை
அனைவருக்கும் போடச் சொல்லி, அக்குடும்பத்தாரோடு தானும்
அமர்ந்து சாப்பிட்டார்.

சாப்பாட்டு சுமையை கூட அவருக்கு கொடுத்துவிட கூடாது
என்று, தன் பணத்தை கொடுத்து, வாங்கி வந்தார் என்றால்,
ரெட்டியாரின் நிலை எப்படியிருக்கும் என்பதை கூற
தேவையில்லை.

நிலை மாறினால், குணம் மாறலாம் என்று,
மாறிப்போன மனிதர்களுக்கு மத்தியில்,
நட்பை போற்றிய ஒரு பெருந்தகை – காமராஜர்.

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to அவர் ….. தலைவர் …!!!

 1. Selvarajan சொல்கிறார்:

  அய்யா ..! காமராஜரை நேரில் பார்த்தது — அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது — அவர் அளித்த கல்வியைப் பயின்றது — மதிய உணவை உண்டது — சீருடையை அணிந்தது … அவரின் எளிமையை ரசித்தது – கடைபிடிப்பது என்று எம்மை போன்றவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறோம் இன்றுவரை … உம் செயல் அத்தகையது — நெஞ்சம் மறக்க மறுக்கிறது … !

  காமராஜரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி — ஆனால் சத்திய சரித்திரம் இவரின் வாழ்க்கை …

  **சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்பதை உணர்ந்திருந்த காமராஜர் … விவசாயம் — உலகத்திற்கே உணவளிக்கும் உழவர்கள் வாழ்க்கை பேம்பட வேண்டும் என்று
  வைகை …மணிமுத்தாறு ….கிருஷ்ணகிரி ..பரம்பிகுளம்-அழியார் கீழ் பவானி சாத்தனூர்
  அணைகள் எல்லாம் அவரால் கிடைத்த ” நீர் ஆதார கொடைகள் ” நமக்கு ….!! …இன்று இருப்பதையும் அழித்துவிட்டு — மண்ணையும் மலடியாக்க துடிக்கிறது ஒரு கூட்டம் …!

  விவசாயத்தை பற்றிமட்டுமா சிந்தித்தார் பெரம்பூர் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை — ஆவடி டாங்குகள் — நெய்வேலி அனல் மின் நிலையம் — பி ஹெஜ் இ எல் — நீலகிரி பிலிம் தொழிற்சாலைகள் என்று எண்ணிலடங்கா — ” பொதுத்துறை நிறுவனங்களை ” கொண்டு வந்தவர் — அய்யா .. காமராஜரே நீர் மக்கள் நலனை எண்ணி கொண்டுவந்த பொதுத்துறை நிறுவனங்கள் இன்று- பெரு முதலாளிகளுக்கும் — கார்பொரேட் குபேரன்களுக்கும் — அந்நிய நாட்டவருக்கும் கூறு போட்டு விற்க துடிக்குது ஒரு வீணாப்போன ஆளும் கும்பல் —

  சிறுவயதிலேயே சுதந்திரத்திற்காக போராடி — சிறைகள் பல கண்டு — அந்நிய ஏகாதிபத்திய கயவர்களிடம் இருந்து மீட்டெடுத்து இந்திய மக்களின் ஜீவாதார உரிமைகளுக்கு உரம் இட்ட தாங்கள் என்றும் எமது நினைவில் —
  இன்று உம்மைப்போன்றவர்கள் இல்லையே இன்று ஏங்கி தவித்து — எங்களது உரிமைகளை — எம்மை ஆள்பவரே பறிப்பதை நினைத்து வெம்பி போய் — செய்வதறியாது திகைத்து போய் நிற்கிறோம் அய்யா … என்று கூறி புலம்புவதுதான் எங்களது வாழ்க்கையாகி விட்டது …!!

  ” காந்தியை தெரியாத இந்தியனும் காமராஜரை அறியாத தமிழனும் இருவருமே மனிதபிறவிகள் இல்லை “… காந்தியை பற்றி பேசிக்கொண்டே … அவரை கொச்சைப்படுத்தும் கும்பலுக்கு நடுவே –காந்தியின் கடைசி வாரிசும் இவர்தான் — காந்தியத்தின் இறுதி மிச்சமும் இவர்தான் என்று கூறுவதில் எமக்கு பெருமை …!

  இன்று … இன்று … இன்று மீண்டு பிறந்து விரைவாக வளர்ந்து எம்மை ஆட்கொண்டு இன்னல்களில் இருந்து காக்க வருவீரா — பெருந்தலைவரே .. ஏக்கமுடன் காத்திருக்கிறோம் …!!!

 2. புதியவன் சொல்கிறார்:

  கர்மவீரர் அவர்களைப்பற்றிய வாழ்க்கை வரலாறு, நிறைய நினைவலைகள், சாவி எழுதிய அனுபவங்கள் என்றெல்லாம் படித்திருக்கிறேன்.

  சம்பவம் அருமை. ஆனால் எழுதறவங்க, தங்கள் எழுத்து பாணியில் சம்பவத்தை அந்நியமாக்கிடறாங்க. காமராஜ் இந்த மாதிரி வார்த்தைகளோ உரையாடல்களோ உபயோகப்படுத்த மாட்டார் என்பது என் எண்ணம். அவர் மொழி வேறு. அதனால் அந்நியமாக, cooked upபோலத் தெரிகிறது.

  பெருந்தலைவர் வாழ்வில் நடந்த சம்பவங்களை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. எப்படி அவர், முதலமைச்சர் கோட்டாவிலிருந்து மருத்துவ சீட்டுகளை ஒதுக்கினார், எப்படி மற்றவர்களுக்கு உதவினார், எப்படி ‘சுயநலத்தோடு வருபவர்களை’ கட் செய்தார் என்பதெல்லாம் படித்துக்கொண்டே இருக்கலாம்.

 3. Selvarajan சொல்கிறார்:

  காமராஜரின் காலத்தையும் , அவர் செய்ததையும் — இன்றைய நிலையையும் ஒப்பிட்டால் சிலருக்கு குடையுது — எதற்கெடுத்தாலும் காங்கிரஸ் — கலைஞர் காலத்தை ஒப்பிடும் போது அந்நியமாகாமல் இனிக்கிறது — குற்றமுள்ள நெஞ்சம் கொதிக்கிறது — அவரவர் கருத்து அவரவருக்கு … !

 4. D. Chandramouli சொல்கிறார்:

  Kamaraj was the last statesman of Tamil Nadu, who thought about future generations.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.