அக்காவுக்கு ஏன் இத்தனை கோபம்…? சூர்யா – அப்படி என்ன தப்பாகப் பேசி விட்டார் ….?


திரு.சிவகுமார் அவர்களின் குடும்பத்தினரால் இயக்கப்படும்
கல்வி அறக்கட்டளை நடத்தும் ஒரு நிகழ்ச்சி…

பல சிறுவர், சிறுமியர்க்கு, கடந்த 40 வருடங்களாக இந்த
அறக்கட்டளையின் சார்பாக பல்வேறு உதவிகளை
அவர்கள் செய்து வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சி அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி அல்ல.
முழுக்க முழுக்க கல்வி சம்பந்தப்பட்டது.

இங்கே சூர்யா பேசிய பொருள் — மத்திய அரசு அண்மையில்
வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை பற்றியது…
அதுவும் அவசியமான, அந்த நிகழ்ச்சிக்குதொடர்புடைய
விஷயம் தான்…

மத்திய அரசு இந்தியிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்ட
வரைவு அறிக்கையை, சமூக ஆர்வலர்கள் தமிழில் மொழி
பெயர்த்து வெளியிட, அதை மாநில அரசும் ஏற்று
தனது வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறது.

மத்திய, மானில – இரண்டு அரசுகளும் – அதன் மீது –

– வரைவு அறிக்கையை இறுதி செய்யும் முன்னர் –
ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள்,
பொது மக்கள் ஆகியோர் தங்கள் கருத்துகளை
கூறுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது….

இதனையொட்டி, இந்த நிகழ்ச்சியில், புதிய
கல்விக் கொள்கையை பற்றியும் ஆக்கபூர்வமான விவாதம்
நடைபெற்றிருக்கிறது. பல கல்வியாளர்களும்,
பெற்றோர்களும், சமூக ஆரவலர்களும்
தங்கள் கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள்…

இதில் சூர்யா பேசியதற்கு மட்டும் மிகக்கடுமையான
வார்த்தைகளால் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் தபாஜக தலைவர்.

அரசே கருத்து கூறுமாறு கேட்டுகொண்டிருக்கும்
ஒரு விஷயத்தில், சூர்யா கருத்து சொல்வதில் தபாஜக
தலைவருக்கு என்ன பிரச்சினை…?

அவர் சூர்யா மீது பொங்குவது பற்றி –
பத்திரிகைச் செய்தி கூறுகிறது –” சூர்யாவின் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம்
பேசிய தமிழிசை சவுந்திரராஜன்,
கிராமப்புற ரசிகர்களுக்காக உங்கள் படத்தின்
டிக்கெட் விலையை குறைப்பீர்களா. தங்கள் படத்தின்
விளம்பரத்துக்காகவும் அரசியல் நுழைவுக்காகவும்
அவசரமாக கருத்து கூறுகிறார்களா…? ”

வடிகட்டிய முட்டாள்தனமான பேச்சு இது.

அரசே விவாதத்திற்கான ஒரு பொருளை வெளியிட்டு,
கருத்து சொல்லுமாறு அனைவரையும்
கேட்டுக்கொண்டிருக்கும்போது
சூர்யா கருத்து சொன்னது எந்த விதத்தில் தவறு…?
எதற்காக அவர்மீது முட்டாள்தனமான ஒரு தாக்குதல்…?

சூர்யா தனி மனிதராக இந்த கருத்தை சொல்லவில்லை.
பெரும்பாலான தமிழக மக்களின், பெற்றோர்களின்,
கல்வியாளர்களின் – கவலையைத் தான், ஆதங்கத்தை தான்
அவர் பிரதிபலித்திருக்கிறார்.

சூர்யா என்ன பேசினார் என்பதை படித்தால் –
அக்காவின் கோபத்திற்கான காரணம் புரியலாம்.

பத்திரிகையில் வெளியாகியிருக்கும் சூர்யாவின் பேச்சு கீழே –

———————————————————————
https://tamil.oneindia.com/news/chennai/tamilisai-soundararajan-asks-actor-surya-a-question-about-his-speech-357026.html


சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40வது ஆண்டு
விழாவில் கலந்து கொண்டு சூர்யா பேசினார். அப்போது
புதிய கல்விக்கொள்கை, அரசுப் பள்ளிகளின் அவலங்கள்,
நீட் நுழைவுத் தேர்வு உள்ளிட்டவை குறித்தும்
அவர் பேசியிருந்தார்.

அவர் பேசுகையில் புதிய கல்விக்கொள்கை குறித்து யாரும்
கவலைப்படாமல், கவனம் செலுத்தாமல் உள்ளனர். இது நாடு
முழுவதும் 30 கோடி மாணவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது.
புதிய கல்விக்கொள்கையில் ஓராசிரியர் பள்ளிகளை மூடும்
பரிந்துரையை கஸ்தூரி ரங்கன் குழு தெரிவித்துள்ளது.
இது ஏற்கப்பட முடியாதது.

பள்ளிகளை மூடும் கஸ்தூரி ரங்கன் பரிந்துரை தவறானது.
பள்ளிகளை மூடினால் மாணவர்கள் எங்கே போவார்கள்..?
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை மூட பரிந்துரைத்துள்ளனர்.
இது ஆச்சரியமாக உள்ளது.

ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளைத்
திணிக்கக் கூடாது. மாணவர்களால் அதை படிக்க முடியாது.

அரசுப் பள்ளிகள் மேலும் 5ம் வகுப்பில் அரசுத் தேர்வு என்று பரிந்துரைத்துள்ளனர். அப்படி செய்தால் பள்ளி இடை நிற்றல்
அதிகரிக்கும். யாரும் படிக்க மாட்டார்கள்.

நாடு முழுவதும் அரசுப் பள்ளிகள் மோசமான நிலையில்
உள்ளன. அடிப்படை வசதிகள் இல்லை. போதிய ஆசிரியர்கள்
இல்லை. பல மாணவர்கள் சிரமப்பட்டு படிக்க வரும் நிலையே
உள்ளது. அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை தேவை.

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள்
கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் இதை
எதிர்க்காவிட்டால் அவர்கள் மீது இது திணிக்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவர்களால் எத்தனை நுழைவுத்
தேர்வுகளுக்குப் படிக்க முடியும்..? எங்கு போய் படிப்பார்கள்..?

நுழைவுத் தேர்வை வைத்து தனியார் பயிற்சி நிறுவனங்கள்
தான் பெரும் பணத்தை சம்பாதிக்கின்றனர். கிட்டத்தட்ட
ரூ. 45,000 கோடி அளவுக்கு சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில் புதிய கல்விக் கொள்கையானது மாணவர்களுக்கு
பயன் தருவதாக இல்லை என்றார் சூர்யா.

———————————————

– கருத்து கூறிய சூர்யா மீது பொங்குவதற்கு பதிலாக,
தபாஜக தலைவர் –

எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கான –
கூறப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கான –
பதில்களைப்பற்றி விளக்கமாகப் பேசுவது நல்லது.

மக்கள் அதைத்தான்
மத்திய ஆளும் கட்சியின்
மாநிலத் தலைமையிடமிருந்து
எதிர்பார்ப்பார்கள்…

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to அக்காவுக்கு ஏன் இத்தனை கோபம்…? சூர்யா – அப்படி என்ன தப்பாகப் பேசி விட்டார் ….?

 1. Prabhu Ram சொல்கிறார்:

  சார்,

  நீங்கள் ” குரங்குகள் கையில் பூமாலை …
  முட்டாள்களா அல்லது மூர்க்கர்களா…?”
  என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரையில்,
  சொல்லப்பட்டிருப்பதை இன்று
  தபாஜக தலைமை உறுதிப்படுத்துகிறது.

  //பிள்ளைகள் எதைக் கற்க வேண்டும், எப்படி கற்க
  வேண்டும் என்பதை யார் முடிவு செய்வது…?

  தன் வாழ்நாள் முழுவதும், சந்திரனையும், சூரியனையும்,
  நட்சத்திரக்கூட்டங்களையும் பார்த்துக்கொண்டிருந்த –
  விண்வெளி ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டிருந்த ஒருவர்
  தன் கட்சிக்கு சார்புடையவராக ஆகி விட்டால்,

  – அவருக்கும் எந்த மாநிலத்திலாவது கவர்னர்
  பதவி கொடுத்து அழகு பார்க்க வேண்டியது தானே…?
  அதிமுக்கியமான “கல்விக் கொள்கை”யை தீர்மானிக்கும்
  பொறுப்பை அவர்களிடம் ஏன் கொடுக்க வேண்டும்…?
  குரங்குகள் கையில் பூமாலையை கொடுப்பது போல்…?

  பெற்றோர்களுக்கும் நிம்மதி இல்லாமல்,
  கற்றுக் கொள்ளும் சிறார்களுக்கும்
  மனச்சிதைவை ஏற்படுத்தி,
  ஆசிரியர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில்

  தான்தோன்றித்தனமாக – மொழி விஷயத்திலும்,
  கல்வி விஷயத்திலும், அரசு சார்ந்த வேலை வாய்ப்புகள்
  விஷயத்திலும் – நடப்பது அனைத்தும் முட்டாள்தனமா
  அல்லது … மூர்க்கத்தனமா…? //

  தங்களை விமரிசனம் செய்வதை கொஞ்சம் கூட
  பொறுத்துக் கொள்ள இவர்கள் தயாரில்லை.

  மிக மிக அமைதியான முறையில்
  கவலை தெரிவித்த, சூர்யாவை இன்று இவர்கள்
  “வன்முறையை தூண்டுகிறார்” என்று
  முத்திரை குத்தி விட்டார்கள்.

  இவர்கள் பேசும் மொழியில் பேசுபவர்களும்
  தமிழ்நாட்டில் இருக்கவே செய்கிறார்கள்.
  கட்டபொம்மன் வாழ்ந்த இடத்திலேயே தானே
  எட்டப்பனும் வாழ்ந்தான்.

  தமிழக மக்கள் இவர்களுக்கு அமைதியான
  முறையிலேயே பாடம் புகட்டுவார்கள்.

 2. tamilmani சொல்கிறார்:

  கோவை மாவட்டத்தில் காசிக்கவுண்டன் புதூர் எனும் கிராமத்தில்
  ஏழை குடும்பத்தில் பிறந்து , சிறிய வயதிலியே தந்தையை இழந்து
  ஓவியம் படிப்பதற்காக சென்னைக்கு வந்து, பிழைப்புக்கு சினிமா
  பேனர்கள் வரைந்து சினிமா உலகுக்கு வந்து ஒழுக்கமான ,நல்ல நடிகர்
  என்ற நல்ல பெயரை வாங்கி தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை
  கல்வி அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்கள் உயர் கல்வி பெற உதவியவர்
  நடிகர் சிவகுமார் அவர்கள் . அவர் பெற்ற தவப்புதல்வர்கள் நடிகர்கள்
  சூர்யா .கார்த்தி அகரம் foundation மூலம் ஏராளமான ஏழை மாணவர்கள் உயர்கல்வி
  பெற உதவுகிறார்கள். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை இந்த மூன்று நல்லவர்களும்
  அவர்தம் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சேர்ந்து செய்கிறார்கள். புதிய கல்விக்கொள்கை
  பற்றி தம் ஆதங்கத்தை மிகவும் சாத்வீகமான முறையில் , சமூக அக்கறையுடன்
  சூர்யா வெளிப்படுத்தி இருக்கிறார் . அதற்க்கு அவருக்கு உரிமை உண்டு. அவர்கள்
  எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்லர். தாங்கள் சம்பாதித்த பணத்தின்
  ஒரு பகுதியை ஏழை மாணவர்களுக்கு செலவு செய்யும் இவரை குறை கூற
  எந்த அரசியல்வாதிக்கும் அருகதை கிடையாது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.