தன்னம்பிக்கையை இழந்த தளபதி ….. ஸ்டாலின் ….!!!பார்க்க – வித்தியாசமாக இருக்கிறது –
என்று சொல்ல முடியவில்லை –

– மகா அருவருப்பாக இருக்கிறது –
என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

தலைவர் ஆகி விட்டாலும்,
இன்னமும் தளபதியும் அவரே தானே…?

திரு.ஸ்டாலின் அவர்களைச் சுற்றி
இன்று யார் யார் இருக்கிறார்கள் ..?

ராஜ கண்ணப்பன்,
செந்தில் பாலாஜி,
வி.பி.கலைராஜன்,
தங்க தமிழ்ச்செல்வன் –

– எத்தனை நாட்களாக இவர்கள் எல்லாம் திமுகவில்
இருக்கிறார்கள்…? ( முன்பே சேர்ந்து விட்டவர்களை
விட்டு விடுவோம்…)

இவர்கள் எல்லாம் திமுகவின் கொள்கைகளின் மீது,
லட்சியங்களின் மீது கொண்ட பற்றின் காரணமாக
திமுகவில் சேர்ந்திருக்கிறீர்களா…

அல்லது ஸ்டாலின் அவர்களின் உயர்ந்த பண்புகளையும்,
தலைமையையும் போற்றி திமுகவில் இணைந்திருக்கிறார்களா..?

வெறும் சுயநலம்….

-அத்தனை பேரும் முன்னாள் அதிமுகவினர்.
நேற்று வரை – திமுகவையும், அதன் தலைமையையும்
கன்னாபின்னாவென்று வசை பாடியவர்கள்.
தங்கள் செயலுக்கு எந்தவித வருத்தமும்
தெரிவிக்காத நிலையிலேயே, அவர்களுக்கு
வெற்றிலை-பாக்கு வைத்து அழைத்து திமுகவில்
சேர்த்துக் கொள்கிறார் ஸ்டாலின்.

ஏன்… என்ன காரணம்..?

ஜெ. அவர்கள் உயிரோடு இருக்கும்போதே,
2016 சட்டமன்ற தேர்தலில், மிகக்குறைந்த –
சில லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் தான்,
ஆட்சியை பிடிக்கும்வாய்ப்பை திமுக இழந்தது என்று
சொல்லி வாதித்து வந்த ஸ்டாலின்,

இப்போது ஜெ. இல்லாத, பிளவு பட்ட –
பல துண்டுகளாக சிதறிவிட்ட – அதிமுகவை
எதிர்க்க சக்தியில்லாமல் இப்படி திணறுவாரென்று
யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஜெ.மறைந்த பிறகு, 2-3 மாதங்களுக்கு மேல்
அதிமுக ஆட்சி நீடிக்காது என்றே பலராலும்
கருதப்பட்டு வந்தது.

ஸ்டாலினோ, கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக
2 வாரம், ஒரு மாதம், 2 மாதம் என்று மாற்றி மாற்றி
அதிமுக ஆட்சிக்கு கெடு வைத்து வருவதோடு சரி….

உருப்படியாக எதுவும் நடக்கவில்லை…!

தஞ்சாவூர் பொம்மை கூட கவிழ்ந்தாலும் கவிழும்,
அதிமுக/எடப்பாடியார் ஆட்சி ஆடாமல், அசையாமல் –
சிரித்துக்கொண்டே மிதந்துகொண்டு செல்கிறது…

இந்த ஆட்சி தனது முழுக்காலத்தையும் முடித்து,
சாதாரண முறையிலேயே அடுத்த சட்டமன்ற தேர்தல்
வந்தாலும் கூட, அதில் தான் ஜெயிப்போம் என்கிற
நம்பிக்கை ஸ்டாலின் அவர்களுக்கு இல்லையோ என்று
தான் தோன்ற வைக்கிறது அவரது நடவடிக்கைகள்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில்,
திமுக இத்தனை எம்.பி.சீட்டுகளை ஜெயித்தது கூட
அவருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தவில்லையா…?

தான்/திமுக ஜெயித்தது “மோடி எதிர்ப்பு அலையினால் தான்” என்று

மற்றவர்கள் சொல்வதைத்தான்
ஒருவேளை ஸ்டாலினும் நினைக்கிறாரோ…?

அது தனது தலைமையிலான திமுகவுக்கு
கிடைத்த வெற்றி என்று அவருக்கே தோன்றவில்லையோ…?

அதிமுகவிலிருந்து ஒவ்வொருவராக இழுத்து வருவது
அவர்களுக்கு திமுகவில் (மாவட்ட செயலாளர் உட்பட)
முக்கிய பதவிகளை அளிப்பது எல்லாம் எதைக் காட்டுகிறது…?

அவரது தன்னம்பிக்கையையா –
அல்லது செயல்திறன் இல்லாமையையா…?
கடைசியாக, கூவத்தூர் முகாம் நடக்க முக்கிய காரணகர்த்தராக
இருந்த தங்கதமிழ்ச் செல்வனையும், இன்று திமுகவில் சேர்த்துக்
கொண்டிருப்பது கேவலத்திலும் மகா கேவலம்.. அடுத்து, திமுகவை
டெபாசிட் இழக்கச்செய்த தினகரனையும் சேர்த்துக் கொள்வாரோ…?

திமுக கே.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழக்க
காரணமானவர்களில் தங்க தமிழ்ச் செல்வனும் முக்கியமானவர்…

திமுகவுக்கு என்று ஒரு கொள்கையும் இல்லையா…?
திமுக தலைமையை மகா மட்டமாக விமரிசித்தவர்களை
எல்லாம் – அவர்கள் பேசியது இன்னமும் காற்றில்
உலவிக்கொண்டிருக்கும்போதே,
கட்டியணைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன…?

இவ்வாறு மாற்றுக்கட்சியினரை கட்சியில் இணைத்துக்கொண்டு,
அவர்களுக்கு முக்கிய பதவிகளையும் அளிப்பது, ஏற்கெனவே
திமுகவில் காலங்காலமாக தீவிர பணியாற்றி வரும்
கட்சியினருக்கு எத்தகைய வேதனையையும், மனவருத்தத்தையும்
உண்டு பண்ணும் என்பதை ஸ்டாலின் உணரவில்லையா…?
அல்லது அவற்றை லட்சியம் செய்யவில்லையா…?

அதையும் மீறி இவர்களை இப்படி இழுத்துக்கொள்ள வேண்டிய
அவசியமென்ன…? இப்போது உள்ள திமுகவை வைத்துக் கொண்டு
தன்னால் – அதிமுகவை ஜெயிக்க முடியாது என்று ஸ்டாலின்
நினைக்கிறாரா…?

அந்த அளவிற்கு தன்னம்பிக்கையே
அற்றுப் போய் விட்டாரா தளபதி ….?

.
————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to தன்னம்பிக்கையை இழந்த தளபதி ….. ஸ்டாலின் ….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  கா.மை.சார்… இது ஒரு ஸ்ட்ராடஜி. கருணாநிதியே, எ.வ.வேலு, கேகேஎஸ்.எஸ் ஆர் ராமசந்திரன், நெல்லை கருப்பசாமி பாண்டியன், ஜெகத்ரெட்சகன் என்று ஏகப்பட்ட அதிமுக ஸ்டால்வர்ட்ஸை தன் கட்சியில் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கு பதவிகளும் கொடுத்தார்.
  அதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் உண்டு.
  1. திமுகவிலேயே கோலோச்சும் பழம் பெருச்சாளிகள் ‘கொள்கை, கோட்பாடு, தன்மானம்’ என்று அவ்வப்போது பேசவாவது செய்வார்கள். ஆனால் அதிமுகவில் ‘தனிநபர் வழிபாடு’தான் முக்கியம். இப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளும்போது தனக்கு சரியான ஜால்ரா கிடைத்துவிடுகிறது, அடங்கிக் கிடப்பார்கள் என்பது.
  2. இரண்டாவது காரணம், எலெக்‌ஷன் நேரத்தில் தேர்ந்தெடுத்த வேட்பாளர்களின் தேர்தல் செலவைப் பார்த்துக்கொள்வார்கள், திமுக அவர்களுக்காக எதுவும் செலவழிக்கவேண்டாம், வேட்பாளராக தேர்ந்தெடுத்தற்காக அவர்கள் தரும் பணத்தை வாங்கிக்கொள்ளலாம். மொத்தத்தில் ஸ்டாலின் குடும்பத்தாருக்கு செலவில்லை, ஒன்லி வரவு.

  அதனால இதனை தன்னம்பிக்கை என்று பார்க்கக்கூடாது. மேலும், அதிமுக கரைந்தால், தனக்கு நேரடி எதிர்ப்பு என்று வாக்காளர்களுக்கு சாய்ஸ் இல்லாமல் போய்விடும் என்றும் நினைத்திருக்கலாம்.

  அடுத்த முறை சட்டமன்றத் தேர்தலில் திமுக 140 இடங்களுக்குமேல் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பு பிரகாசமாக இருக்கு.

 2. tamilmani சொல்கிறார்:

  அடுத்த தேர்தலில் அதாவது 2021ல் திமுக
  ஆட்சி அமைக்கும் என்று நம்ப சற்று சந்தேகமாக
  இருக்கிறது. ஏனென்றால் 2021 களத்தில் ரஜினி பிஜேபி
  அதிமுக பாமக தேதிமுக அணி சேர்ந்து தேர்தலை
  சந்திக்கும். மக்கள் நீதி மையம், நாம் தமிழர் களத்தில் கணிசமான
  வாக்குகளை நிச்சயம் பிரிப்பார்கள்.தினகரன் பலம் எவ்வளவு என்று தெரியவில்லை
  எனவே திமுகவின் வெற்றி எளிதல்ல என்பதே என் கருத்து .

  • புதியவன் சொல்கிறார்:

   @தமிழ்மணி – வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீங்க.

   பாஜகவுக்கு தமிழகத்தில் 2 சதவிகித பாசிடிவ் வாக்குகளும், அவங்களோட கூட்டுச் சேர்ந்தால் 15-20 சதவிகித நெகடிவ் வாக்குகளும் இருக்கு. அதுனால பாஜகவோட அதிமுக கூட்டுச் சேர்வது என்பது அதிமுக கட்சியை அழிக்கத் திட்டமிட்டிருப்பவர்களின் சதி. அதாவது பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்தால், கூட்டுச் சேரும் பெரிய கட்சியின் 15 சதவிகித வாக்குகள் பணால்.

   10 வருடம் அதிமுக ஆண்டுவிட்டது. அதனால் மக்கள் எதிர்ப்பு அதற்கு அதிகமாக இருக்கும். காசு கொடுத்தாலெல்லாம் மக்கள் வாக்களிக்க மாட்டாங்க (15 ரூபாய்தான் சாப்பாடு என்று சொல்லி குப்பையை இலையில் போட்டாங்கன்னா சாப்பிடப்போவோமா? சாப்பாடும் கொஞ்சம் நல்லா இருக்கணும். கட்சி தலைமையும், ஆட்சியும் நல்லா இருக்கணும், காசும் கொடுக்கணும்..அதுதான் வாக்காளர்களின் எதிர்பார்ப்பு).

   தேதிமுகவை கழட்டிவிடவேண்டும். பாஜக பக்கத்துலயே போகக்கூடாது. அதிமுக, பாமக, இஸ்லாமியக் கட்சி(கள்), தாழ்த்தப்பட்டவர்களின் கட்சி ஒன்று, – இந்த மாதிரி கூட்டணி இருந்தால்தான் அதிமுகவுக்கு சட்டமன்றத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக வாக்குகள் வரும். இல்லைனா கட்சி கரைந்துபோய்விடும். இப்போ ‘தேசிய’ அந்தஸ்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு, திமுக தயவினால் வந்துள்ளதால் சட்டமன்றத் தேர்தலில் திமுக பக்கம்தான் அவர்கள் இருப்பார்கள். அதிமுக திராவிடக் கட்சிகளில் நல்ல கட்சி என்ற நிலைப்பாட்டைத் தொடரணும்னா, பாஜக திசையைக்கூட அவங்க பார்க்கக்கூடாது.

   மெதுவாக எனக்கு, அதிமுக கட்சியின் கரையான் ஓபிஎஸ் என்ற எண்ணம் வந்துகொண்டிருக்கிறது. அவர்தான் ‘தன்னை’க் காத்துக்கொள்ள, அதிமுக கட்சிக்கு எதிரானவைகளைச் செய்கிறார் என்று மனசில் படுகிறது. தினகரனுடைய நிலைப்பாட்டைப் பாருங்க… அவர் ‘ஜெ’யின் வழியில் பயணிக்கிறார் (தினகரன் நல்லவர் இல்லை என்றாலும்).

   ‘ரஜினி’, ‘கமல்’ – நீங்க ஜோக் அடிக்கலைதானே…. ரஜினி களத்துலயே இருக்கமாட்டார் (நான் சொல்வதை எழுதிவச்சுக்கோங்க). ‘கமல்’ வாக்குகளைப் பிரிக்கும் வாய்ப்பையே பெறுவது சந்தேகம். கமலுடைய வாக்குகள் ‘அதிமுக’வின் வாக்குகள். அதாவது அவை ‘திமுக’வுக்கு எக்காலத்திலும் வாக்களிக்க விரும்பாதவர்களின் வாக்குகள். பாஜகவுடன் அதிமுக சேர்ந்து தற்கொலையில் ஈடுபட்டதால்தான் அந்த வாக்குகள் அதிமுகவுக்கு வரவில்லை.

   அரசியலைக் கவனித்த விதத்தில் சொல்றேன். திமுக கூட்டணி 140 என்று சொல்லியிருப்பதே குறைந்த அளவு என்பது என் அபிப்ராயம். இது மாறவேண்டும் என்றால் அதிமுக பாஜகவை கழட்டிவிட்டால்தான், 40-50 சீட்டுகளாவது பெறும். இல்லையென்றால், மிக மிக மோசமாகத் தோற்கும். (20தைவிடக் குறைவாக சீட்டுகள் வாங்கி) – கா.மை. சார்..இதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 2021ல் என் அனுமானத்தைப் பாராட்டும் வாய்ப்பைக் கொடுத்துள்ளேன்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    //அடுத்த முறை சட்டமன்றத் தேர்தலில் திமுக
    140 இடங்களுக்குமேல் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். //

    // 2021ல் என் அனுமானத்தைப் பாராட்டும் வாய்ப்பைக் கொடுத்துள்ளேன். //

    ————————

    இந்த விஷயத்தில், உங்கள் நம்பிக்கையும்,
    அனுமானமும் நாசமாகப் போகட்டும்…
    நிறைவேறாமல் போகட்டும்… என்று –
    உளமாற வாழ்த்துகிறேன்… 🙂 🙂

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

     எழுதும்போது வருத்தமாத்தான் இருக்கு கா.மை. சார். ‘அதிமுக’ கட்சிக்கு ‘இரட்டை இலைக்கு’ என்று பாடுபடும் நிர்வாகிகள் (அடிமட்டம் வரை) வேகமாகக் குறைந்துகொண்டே வருகிறார்கள். ஜெ. காலத்துக்குப் பின் கட்சி சரியான திசையில் செல்லவில்லை. (கட்சி செயல்படுவது எப்படி என்று எழுதணும்னு ஆசை…எப்படி அடிமட்ட நிர்வாகி வரை கட்சி ஆட்சியில் இருக்கும்போது பெனெஃபிட் அடைகிறார்கள் என்று. அப்போதான் தேர்தலின்போது வெறியோடு உழைப்பார்கள். இல்லைனா எவனோ மஞ்சள் குளிக்க நாம் ஏன் கஷ்டப்படணும் என்று எதிர்கட்சிக்காரனிடம் காசு வாங்கி கம்மென்று இருந்துவிடுவார்கள் இல்லைனா யாருக்குமே வேலை பார்க்காமல், தேர்தல் செலவுக்கு வந்த காசை அமுக்கிவிடுவார்கள்). அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வந்தாகணும், அதுவும் வாக்குகளை ஈர்க்கும் ஒற்றைத் தலைமை வந்தாகணும், அது தினகரானாலும் சரி…இல்லை அஜீத் போன்றவர்களானாலும் சரி. அப்போதான் கட்சியின் கட்டுப்பாடு காப்பாற்றப்படும். அது நடக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கணும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   தமிழ்மணி,

   ஒருவேளை – ரஜினி அரசியலுக்கு வந்தால்,
   இவர்கள் யாருடனும் கூட்டு சேர மாட்டார் என்றே
   எனக்குத் தோன்றுகிறது..

   ரஜினி தனியாக நின்றால் –
   நீங்கள் யார் பக்கம்…?
   பாஜக+அதிமுக etc.. பக்கமா அல்லது
   ரஜினி பக்கமா…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. Prabakar சொல்கிறார்:

  EVM act major part along with BJP & EC

 4. tamilmani சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார் , ரஜினி அரசியலுக்கு வருவார் என்றே எதிர்பார்க்கிறேன். அதற்கான
  உந்துதல் நிச்சயம் உண்டு. 2021 என்பது ஒரு முக்கியமான வருடம். தமிழகத்தின்
  தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் 2021ல் . பாராளுமன்ற தேர்தலில் 37 திமுக எம் பிக்கள்
  வெற்றி பெற்றும் தமிழகத்துக்கு எந்த பயனும் ஏற்படவில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள். ஏன் என்றால் சகல அதிகாரங்களும் மோடி என்ற தனி நபரின் கையில் உள்ளது. இந்த இரண்டு வருடங்களில் பிஜேபி தமிழகத்தில் நிச்சயம் காலூன்ற முயற்சிக்கும். இந்த இரண்டு வருடங்களும் அதிமுக அரசை எப்படியாவது
  காப்பாற்றி 2021ல் ஒரு level playing field வந்தவுடன் பிஜேபி தமிழகத்தில் அதனுடன் ஒத்து போகும்
  நபர்களுடன் கூட்டணி அமைத்து ( பன்னீர், ரஜினி உள்பட) வெற்றி பெற முயற்சிக்கும். 67க்கு
  பின் தமிழகத்தை மாறி மாறி ஆண்ட திமுகவும் அதிமுகவும் எதுவும் செய்யவில்லை என்ற
  கருத்துடையவர்கள் இதற்க்கு நிச்சயம் ஆதரவு தருவார்கள் .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   தமிழ்மணி,

   நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லையே…

   என் கேள்வி –

   .

   // ரஜினி அரசியலுக்கு வந்தால்,
   இவர்கள் யாருடனும் கூட்டு சேர மாட்டார் என்றே
   எனக்குத் தோன்றுகிறது..

   ரஜினி தனியாக நின்றால் –
   நீங்கள் யார் பக்கம்…?
   பாஜக+அதிமுக etc.. பக்கமா அல்லது
   ரஜினி பக்கமா…? //

   .

   பாஜக ஆதரவாளர்களின் மனப்போக்கை
   தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே
   மீண்டும் இந்த கேள்வியை வலியுறுத்துகிறேன்.

   அத்தகைய நிலையில் – நீங்கள் யார் பக்கம் இருப்பீர்கள் ….?
   பாஜக பக்கமா அல்லது ரஜினி பக்கமா…. ?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. tamilmani சொல்கிறார்:

  பொதுவாக அறுபதை கடந்த எல்லாருக்கும் குறிப்பாக காமராஜ் விரும்பிகளுக்கு
  திமுக அதிமுக இரண்டையும் ஆதரிப்பதில் விருப்பமில்லை. தேசிய கட்சியான
  பிஜேபி மத்தியில் உள்ளதால் தமிழகத்துக்கு சில நல்ல திட்டங்கள் கிடைக்கலாம்.. குறிப்பாக நதிநீர் இணைப்பு திட்டம் போன்றவற்றுக்கு மாநில அரசை நம்பி பயனில்லை. மத்திய அரசினால்
  மட்டுமே இது சாத்தியம். ரஜினி நதிநீர் திட்டம் கொண்டு வரும் அரசை ஆதரியுங்கள் என்று
  வெளிப்படையாகவே சொல்கிறார். ஆக ,ரஜினியும் பிஜேபியும் இந்த புள்ளியில்தான்
  இணைகிறார்கள் . அப்படி ஒரு கூட்டணி வரும் பட்சத்தில் யாரை ஆதரிப்பது என்பதில்
  பிரச்சனை இல்லை. ரஜினி பிஜேபி தனியாக போட்டி இட்டால் ஊழல் இல்லாத பிஜேபிக்குத்தான்
  எனது ஆதரவு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.