இதுவும் இந்தியா தான்… கொடுத்து வைத்த மக்கள்…!!!


கொளுத்தும் வெய்யில்; எங்கும் தண்ணீர்ப் பஞ்சம்.
யார் முகத்தைப்பார்த்தாலும், ஆத்திரம், கோபம், கவலை….
நமக்கு மழைக்காலம் வர இன்னும் குறைந்த பட்சம்
மூன்றரை மாத காலம் ஆகலாம் என்கிற நிலை…

மண்டையும் கொதிக்கிறது…
உடலும் கொதிக்கிறது…
காதில் விழும் செய்திகளும் கொதிப்பை அதிகரிக்கின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு இடுகை
( உறைய வைக்கும் ஒரு நிலச்சரிவு ….) பதிப்பிட்டபோது,
முன்னர் எழுதிய இன்னொரு இடுகை
கண்களில் பட்டது…. முழுவதுமாக படித்துப் பார்த்தேன்.
அதிலேயே குளிர்ந்தது… மனமும், உடலும்.

எவ்வளவு வித்தியாசம்… இங்கு நாம் அனுபவிக்கும்
சூழ்நிலைக்கும், இதே இந்தியாவின் மற்றொரு பகுதியில்
நிலவும் அந்த பசுமைக்கும், குளிர்ச்சிக்கும் …!!!

அந்த பசுமையையும், குளிர்ச்சியையும்
மற்ற வாசக நண்பர்களும் அனுபவிக்க வேண்டுமென்று
நினைத்து- இங்கே பதிப்பிக்கிறேன்…

——————————

ஏற்கெனவே பலமுறை இமயத்திற்கு சென்றிருந்தாலும்,
இமயப் பயணம் மட்டும் அலுப்பதே இல்லை.
பரந்து விரிந்து கிடக்கும் மலைப்பிரதேசங்களில்
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பக்கம் பயணம் !

சில தடவைகள் -ஹரித்வார், ரிஷிகேஷ் பக்கம்.
சில தடவை – சந்தீபானி – டல்ஹௌசி – தர்மசாலா பக்கம்.
இந்த முறை சண்டிகார், மண்டி, குலு, மணாலி வழியாக –

பியாஸ் நதியின் பிறப்பிடமான –
கடல்மட்டத்திலிருந்து 13,051 அடி உயரத்தில் இருக்கும்
“ரோதங் பாஸ்” வரை !

பியாஸ் நதி சின்னஞ்சிறிய ஓடையாக உற்பத்தியாகும்
இடத்திலிருந்து – அது
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 அடி உயரத்தில்  
சட்லெஜ் நதியுடன் இணைகின்ற இடம் வரையில்
சுமார் 400 கிலோ மீட்டர் தூரம் முழுவதும்
தொடர்ந்து சாலை வழியே பயணித்தேன்.

பச்சைப்பசேல் என்கிற மலைகளுக்கிடையே  வளைந்தோடும் நதி.
இரு புறமும் அற்புதமான இயற்கைக் காட்சிகள்.
மனதிற்குள் அப்படியே நிறுத்தி வைத்துக் கொள்ளவேண்டும்
போல் இருக்கிறது.

இமாசலப் பிரதேச மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
இயற்கையோடு இணைந்து வாழ்கிறார்கள்.
இந்த மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையே
வெறும் 60 லட்சம்  மட்டுமே.
அமைதியான, கள்ளம் கபடு அறியாத மக்கள்.
வற்றாத 6 ஜீவ நதிகள் – வருடம் முழுவதும் இமயத்திலிருந்து
குளிர் நீரைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன.
நீருக்கும் பஞ்சமில்லை. மின்சாரத்திற்கும் பஞ்சமில்லை.
பழத்தோட்டங்களுக்கும், காய்கறி – உணவுப்பொருட்களுக்கும்
பஞ்சமே இல்லை.

இது போன்ற ஒரே ஒரு ஜீவநதி இருந்தால் கூடப் போதும்
தமிழ்நாட்டிற்கு ! எவரிடமும் தண்ணீருக்காக சண்டை போட
வேண்டிய அவசியமே இருக்காது.

கிட்டத்தட்ட 40 % பிரதேசம் – அடர்ந்த காடுகளாலும்
மலைகளாலும் நிரம்பப்பெற்று இருக்கிறது. எங்கு நோக்கினும்
வானுயர்ந்த  தேவதாரு, ஊசியிலை மரங்கள்.
நகரங்களுக்குள்ளாகவே  குலை குலையாகத் பழுத்துத்
தொங்கும் ஆப்பிள் செடிகள்.

பியாஸ் நதி, குல்லு அருகே வரும்போது ராப்டிங் எனப்படும்
ரப்பர் படகுகளில் சவாரி செய்ய போட்டி போட்டுக் கொண்டு
அழைக்கிறார்கள். பெரும் வேகத்தோடு வரும் நீரில்,
ரப்பர் மிதவை – ஆற்றின் நடுவே இருக்கும் பெரும் கற்களில்
முட்டி மோதிக்கொண்டு பயணிப்பது இளைஞர்களுக்கு
அற்புதமான அனுபவம்.

அதே போல் ரோதங் பாஸிலிருந்து மணாலி வரும் வழியில்
பாரா க்ளைடிங்  – பாராசூட் மூலம் மலைப்பகுதியிலிருந்து –
மெதுவாகப் பறந்துகொண்டே பள்ளத்தாக்கில் இறங்குவது –
இன்னொரு வித்தியாசமான அனுபவம்.

இரண்டையும் வேடிக்கை பார்த்ததோடு சரி.
அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை -வயதும்,
உடல் நிலையும் !

என்ன – சாலைகள் தான் பல இடங்களில் மிக மோசமான
நிலையில் இருக்கின்றன. மழைக்காலம் இப்போது தான்
முடிந்திருப்பதால், பல இடங்களில் நிலச்சரிவு காரணமாக
கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சாலைகளில் பயணிப்பது
பல சமயங்களில் அச்சத்தைத் தருகிறது.

ஆயிரக்கணக்கான அடிகள் உயரத்தில் மிகக் குறுகலான
பாதை. அவ்வப்போது எதிரே லாரிகளும், ட்ரக்குகளும்
வரும்போது – நிஜமான த்ரில்லிங் அனுபவம்.

கார்கில், லே, லடாக்  ஆகிய இடங்களுக்கு செல்ல,
ராணுவத்தினருக்கு இது ஒன்று தான் தரைவழிப் பாதை.
(NH 21)

நவம்பர் முதல் மார்ச் வரை சாலைகள் பனியால்
மூடப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் தடைப்படும்.
ஜூலை முதல் செப்டம்பர் வரை மழைக்காலம் –
பெரும் நிலச்சரிவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
மிச்சமிருக்கும் காலத்தில் தான் இந்த சாலைகளைப்
ஒழுங்குபடுத்தி, பராமரித்து -போக்குவரத்தை
சமாளிக்க வேண்டும்.

இந்தப் பாதை – முழுவதுமாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில்
இருக்கிறது. பாவம் – இந்த சாலைகளை பராமரிக்க வேண்டிய
முழுப்பொறுப்பில் இருக்கும் ராணுவத்தினரின் பாடு தான்
மிகவும் திண்டாட்டம்.

கடினமான பயணமாக இருந்தாலும் – அற்புதமான அனுபவம்.
இந்த அனுபவம் அடுத்த இரண்டு வருடங்களுக்காவது
போதும் என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு –
இருந்தால் பார்த்துக் கொள்ளலாம் !

நான் பார்த்த இயற்கைக் காட்சிகளில் சில –
உங்களுக்காக கீழே -புகைப்பட வடிவில் !

.
————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இதுவும் இந்தியா தான்… கொடுத்து வைத்த மக்கள்…!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  இடங்கள் மிக அருமை. எனக்கு ஹரித்வார், ரிஷிகேஷ் அதற்கு மேல்..எல்லாம் செல்லணும் என்று ஆசை…. அதிருஷ்டம் இருக்குமான்னு பார்க்கணும்.

  //இது போன்ற ஒரே ஒரு ஜீவநதி இருந்தால் கூடப் போதும் தமிழ்நாட்டிற்கு ! எவரிடமும் தண்ணீருக்காக சண்டை போட வேண்டிய அவசியமே இருக்காது//

  வட இந்தியா போனீங்க சரி…கோயமுத்தூர், நெல்லை, பாலாறு பாயும் வட மாவட்டங்கள் போயிருக்கீங்களோ? தாமிரவருணி என்பது ஜீவநதி. அதை எவ்வளவு மோசமாக அழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்திருக்கீங்களா? எங்க ஊரில், நான் தவழ்ந்து, குளித்து உண்டு விளையாடிய தாமிரவருணி நதியில், மணலே சுத்தமாக இல்லை, நதியை நாசம் செய்துள்ளார்கள். நான் நிறைய தடவை நினைப்பேன்… நமக்கு (தமிழர்களுக்கு) ஜீவ நதிகளையோ இல்லை நல்ல கோவில்களையோ பராமரிக்கும் திறமை கிடையாது. அதனால்தான் நம்மிடமிருந்து அவை விலகியே இருக்கின்றன என்று.

 2. c.venkatasubramanian சொல்கிறார்:

  GOD”S GIFT

 3. tamilmani சொல்கிறார்:

  Himachal people believe in god, God has given them his gift rivers that too perennial rivers
  Here in Tamilnadu people dont believe in god . They have got what they deserve

  • புதியவன் சொல்கிறார்:

   Sorry Tamilmani. Sorry to write opposite views here.
   God is neutral. He has given abundant water to Tamilnad. Very good rivers. Since TN people are ‘Lips Praying’, those rivers are in current status. மனசுல உண்மையான பக்தி இருந்தால், ஆறுகளைக் கெடுத்திருக்க மாட்டார்கள், எவன் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்று மணலைத் திருடியிருக்க மாட்டார்கள், கழிவுநீரை ஆற்றில் பாய்ச்சியிருக்க மாட்டார்கள் (அல்லது போராட்டம் நடத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்)

   தாமிரவருணி ஒன்று போதும் நெல்லைக்கு. பாலாறு, காவிரி, வைகை, அடையார் என்று ஏகப்பட்ட ஆறுகள் மற்றும் குளங்கள், ஏரிகள் தமிழகத்தில் உண்டு. அவை அனைத்தையும் காணாமல் போகச் செய்தவர்கள், தமிழக மக்கள் ஆதரித்த அரசியல்வாதிகள்.

   தமிழகத்தில் பெய்யும் மழை நீர், தென்னிந்தியாவிலேயே மிக அதிகம். அப்புறம் ஏன் தண்ணீர்ப் பஞ்சம்? யோசியுங்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.