தினமலரில் – அதீதமான ஆர்வமும் – தவறான தகவல்களும்அண்மையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி
சில வித்தியாசமான செய்திகள் அடங்கிய கட்டுரை
ஒன்றை படித்தேன்… வாசக நண்பர்களும் படிப்பதற்காக
கீழே தந்திருக்கிறேன்…

இந்த கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் பல தகவல்களும்
புனையப்பட்டவையே என்று தோன்றுகிறது….

———————————
தினமலர் –
https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=48149&ncat=2

——————

நாசா வியந்த, மீனாட்சி அம்மன் கோவில்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை, செயற்கைகோள் மூலம்
கண்காணித்த போது, பல அறிவியல் அற்புதங்கள் அங்கு
மறைந்திருந்ததை, கண்டறிந்தனர், ‘நாசா’ விஞ்ஞானிகள்.

வாழ்க்கை ஒரு வட்டம், உலகமும் உருண்டை, கோள்கள்
சுற்றுவதும் நீள்வட்டம், இப்படி பிரபஞ்சமே வட்டத்தில்
இயங்கும் போது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று
மட்டும் தான், சதுர வடிவில் அமைந்துள்ளதை கண்டறிந்தனர்.

கோவில் மட்டுமின்றி, அதை சுற்றியுள்ள தெருக்களும்,
சதுர வடிவமாக அமைந்துள்ளது, மற்றொரு சிறப்பு. எல்லா
பக்கமும் சம அளவு என்பதே சதுரம். அது போல,
‘சமூகத்தில் எல்லாரும் சமமே…’ என, உணர்த்தும்
வண்ணம், உலகிற்கே, இக்கோவில் சான்றாய் விளங்குகிறது.
நீள் வட்டப் பாதையில் சுற்றுகிற, எந்த ஒரு செயற்கைகோளும்,
சதுர வடிவில் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலை
முழுவதுமாக படம் பிடிக்க இயலாது. ஏதாவது இரண்டு பக்கமே
படம் தெரியும்.

கடந்த, 1984ல், ஜெர்மனியைச் சேர்ந்த, மைக்கேல் கெப்ளர் என்ற
விஞ்ஞானி, இதற்காக, சதுர வடிவில் ஒரு சிறிய செயற்கைகோள்
செய்து, விண்வெளிக்கு அனுப்பினார்.

அது எடுத்த படத்தில், மீனாட்சி அம்மன் கோவில், வட்ட வடிவில்
இருந்தது. உடனடியாக, மதுரைக்கே வந்தார், கெப்ளர்.
மீனாட்சி அம்மன் கோவிலை, 68 நாட்கள் ஆராய்ச்சி செய்தார்.
அப்போது தான், விஞ்ஞானத்தின் பல முடிச்சுகள் அவிழ்ந்தன.

சதுரமான கோவில், வட்ட வடிவமாக தெரிய, கோவிலின்
மொட்டை கோபுரம் தான் காரணம் என்பதை கண்டறிந்தார்.
அதாவது, செயற்கைகோள், ‘சிக்னல்’களை கிரகிக்கும்
மற்ற கோபுரங்கள், அதை மொட்டை கோபுரத்திற்கு அனுப்பும்.
அந்த மொட்டை கோபுரம், ‘சிக்னல்’களை கிரகித்து,
குழப்பி அடித்து, புது, ‘சிக்னலை’ செயற்கைகோளுக்கு அனுப்புகிறது.

பாண்டிய மன்னர்களின், அறிவியல்பூர்வமான கட்டுமானத்தை
அறிந்து, வியந்தார், கெப்ளர். அதே போல, மொட்டை கோபுரத்தின்
மீது, எந்த, ‘ரேடாரும்’ வேலை செய்யாததையும் கண்டறிந்தார்.
ஆயிரங்கால் மண்டபம், உண்மையில், 965 கால்கள் உடையது
என்பதை அறிந்து, வியப்பின் உச்சிக்கே போனார். காரணம்,
965 என்பது, விண்வெளியில் தவிர்க்க இயலாத எண்.
விண்வெளி மையங்களை நிலை நிறுத்தும் உயரத்தை,
‘965 ஸ்டாண்ட்’ என, குறிப்பிடுவர். வான அறிவியல் வளர்ச்சி
பெற்றிருக்கும் இக்காலத்து விஞ்ஞானம் எல்லாம், அன்றே
இருந்ததை அறிந்தார்.

அதே போல, மீனாட்சி அம்மன் கோவிலில், பைரவர் சன்னிதியில்
இருந்து, வாணியன் கிணற்று சந்துக்கு செல்லும் கிணற்று சுரங்கத்தில்
இருந்த கல்லை, புகைப்படம் எடுத்து, பெரிதுபடுத்தி பார்த்த போது,
அலறியே விட்டார். அப்பாறையில் இருந்த வரி வடிவங்கள், அச்சு
அசலாக, ராக்கெட்டுகளின், ‘சர்க்யூட் பேனல்’களின் வடிவத்தில்
இருந்தன. மேலும், பொற்றாமரைக் குளத்தருகே, இரவில்,
அமாவாசை – பவுர்ணமி இரண்டு நாட்களிலும், ஒரே அளவுள்ள
வெளிச்சம் இருப்பதை பார்த்து அதிசயித்தார். அது எப்படி என்று,
இன்று வரை, அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மீனாட்சி அம்மன் கோவிலை சுற்ற சுற்ற, அவருக்கு,
பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. சித்தர், தட்சிணாமூர்த்தி மற்றும்
முக்குறுணி விநாயகர் சன்னிதிகள் எல்லாம், விண்வெளி வீரர்கள்
அமரும், ‘சேம்பர்’கள் வடிவில் கட்டப்பட்டிருந்தன. நாயன்மார்கள்
மற்றும் 108 லிங்கங்களின் பிரகாரங்கள், விண்கலத்தின் வடிவில் கட்டப்பட்டிருந்ததை கண்டார்.

இறுதியில், தன் ஆராய்ச்சி குறிப்பில், ‘உலகின் முதல், ‘நாசா’
மீனாட்சி அம்மன் கோவிலே… அனேகமாக, பாண்டியர்கள் காலத்தில், சூரியனுக்கே ராக்கெட் விட்டிருக்கலாம்… அது, இன்னும்
பயணித்துக் கொண்டிருக்கலாம்… உலகின் மெய்ஞானம் மட்டுமல்ல,
விஞ்ஞானத்திற்கும் அடையாளம் இக்கோவில்…’ என,
எழுதி வைத்தார்.

இவ்வளவு பெருமை வாய்ந்த, நம் நாட்டு பொக்கிஷங்களின்
பெருமையை நாமும் உணர்ந்து, சீரழிக்காமல் இருக்கலாமே!

– புஷ்பலதா

———————————————————————————

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் ஏற்கெனவே,
அதன் உண்மையான பெருமைகளுக்காகவே –
உலகப்புகழ் பெற்றிருக்கிறது. உலகின் பல்வேறு சுற்றுலா
பற்றிய தளங்களில், அவசியம் பார்க்கப்பட வேண்டும் என்கிற
இடங்களின் வரிசையில் மதுரை ஏற்கெனவே இருக்கிறது.

– ஒரு நாளைக்கு சுமார் 15,000 யாத்ரிகர்கள் இங்கே வருகின்றனர்.

– தமிழகத்திலேயே பெரிய கோவில் என்று புகழ்பெற்றிருக்கும்
இந்த கோவிலில் சுமார் 33,000 சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

– இந்த கோவிலின் மூலம் சுமார் 2500 ஆண்டுகள் பழையது.
கி.மு.5-6 வது நூற்றாண்டில் உருவானது.

– பின்னர் நாயக்கர் காலத்தில் (1623-1655) தற்போதைய வடிவத்தை
பெற்றது.

அதீதமான ஆரவம் காரணமாக பல புனையப்பட்ட தகவல்கள்
தினமலர் கட்டுரையில் தரப்பட்டிருக்கின்றன என்றே நினைக்கிறேன்.

மீனாட்சி அம்மன் கோவிலைப்பற்றி இத்தகைய தவறான தகவல்களை புனைவது, இட்டுக்கட்டி வெளியிடுவது என்பதெல்லாம், உண்மையில் –
அதன் புகழுக்கு கேடு விளைவிக்கக்கூடியது என்றே நினைக்கிறேன்.

தினமலர், சரிபார்க்கப்படாத கட்டுரைகளை வெளியிடுவது சரியன்று.
அந்த கட்டுரையை திரும்பப்பெற வேண்டும்… மற்றும் வலைத்தளத்திலிருந்து நீக்க வேண்டும்.

—————————————————————————-
இது தனி –
…………………

கீழே – முதலில், ஒரு சுவாரஸ்யமான,
1945-ல் எடுக்கப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன்
கோவில் பற்றிய ஒரு காணொளி காட்சி –

– அதைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலின்
கண்களைக்கவரும் வண்ணப் புகைப்படங்கள் சில…

.
—————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to தினமலரில் – அதீதமான ஆர்வமும் – தவறான தகவல்களும்

 1. Siva Sankaran சொல்கிறார்:

  இந்த கதையை முன்னாடியே whatsapp forward message ஒன்றிலும் facebook பதிவிலும் படித்திருக்கிறேன்

 2. Gowri Gowrishankar சொல்கிறார்:
 3. Selvarajan சொல்கிறார்:

  முன்பு இது போன்று செய்தி ஒன்று : — // திருநள்ளாரில் செயற்கைக்கோள்கள் 3 நிமிடங்கள் செயலிழந்ததா ? // https://youturn.in/factcheck/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d.html … // பரவிய செய்தி
  திருநள்ளார் சனிபகவான் கோவிலை கடக்கும் போது நாசாவின் செயற்கைக்கோள்கள் மூன்று நிமிடங்கள் செயல் இழந்துள்ளது . இதனால் நாசாவே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது .// என்கிற கதையளப்பும் முன்பு ஊடகங்களில் வெளி வந்து பரபரப்பை உண்டாக்கியது — அந்தந்த திருக்கோயிலுக்கு — புண்ணியஸ்தலங்களுக்கும் ஒரு சிறப்பம்சம் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் — சிலர் இவ்வாறு சில செய்திகளை பரப்புவதால் என்ன பலன் — உண்மைநிலை தெரிந்து மனம் வருந்துவதை இவர்கள் ரசிக்கின்றார்களோ …?

 4. புதியவன் சொல்கிறார்:

  சார்…இதெல்லாம் ஒன்றும் தெரியாத, எதைச் சொன்னாலும் நம்புகிறவர்கள் வாட்சப் செய்திகளை உண்மை என்று நம்பி கட்டுரை எழுதுகிறார்கள். அதனையும் சரிபார்க்காமல் பத்திரிகைகள் வெளியிட்டுவிடுகின்றன.

  இதுபோலத்தான் திருநள்ளாறு, திருப்பதி என்று அவ்வப்போது புனையப்பட்ட செய்திகள் வரும்.

  ஒரு இடத்தின் பாரம்பர்யம், இயல்பான புகழ், அதன் சிறப்பைச் சொல்லும். மதுரை என்பது மிக மிக பழைமையான ஒரு ஊர் (பல்லாயிரம் ஆண்டுகள் பழமை. மத்ர என்று வெளிநாட்டு நூல்களில் குறிப்பிடப்பட்ட இடம்). அதுக்கு நாம புதுசா வெள்ளையடிக்க வேண்டாம் என்பதை இந்தச் செய்தி தயாரிப்பாளர்கள் புரிந்துகொண்டால் சரிதான்.

 5. புதியவன் சொல்கிறார்:

  காணொளி கண்டு மகிழ்ந்தேன்.

  அந்தக் காலத்தைவிட நாம் எந்த விதத்தில் வாழ்க்கையை பெட்டராக வாழ்கிறோம், வசிக்கும் இடத்தை, நீர் நிலைகளை, சூழலைக் கெடுத்ததைவிட?

  எனக்குத் தெரிந்து ஒரே ஒரு மாற்றம்தான் வந்திருக்கிறது. பொதுவாக சக மனிதர்களை மரியாதையாக அழைப்பதில் கொஞ்சம் முன்னேறியிருக்கிறோம் (மனதில் அந்தக் காலங்களில் இருந்த அன்பை வளர்த்துக்கொள்ளாதபோதும்)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   எனக்கு கூட இந்த காணொளி மிகவும் பிடித்தது.
   எவ்வளவு இயற்கையான சூழ்நிலை… பின்னணி.

   மிக இயல்பான மனிதர்கள்.
   மாட்டு வண்டிகள், நடைவாசிகள்,
   காய்கறி விற்பவர், பழக்கூடை வைத்திருப்பவர்,
   கோவிலில் கற்பூரம் ஏற்றும் பெண்கள்,
   குழந்தைகள், அகலமான, நெரிசல் இல்லாத தெருக்கள்,
   சினிமா போஸ்டரை உடலிலேயே தாங்கிச் செல்பவர்,
   சல சலவென்று வேகமாக ஓடும் வைகை ஆறு,
   அங்கே மீன் பிடிப்பவர்கள். ….

   இயல்பான வாழ்க்கையை அருமையாக
   படம் பிடித்திருக்கிறார்- இதை எடுத்தவர்.
   அவருக்கு ஆயிரம் நன்றிகள் சொல்ல வேண்டும் நாம்.

   அவர் இதை பதிவிடவில்லையெனில்,
   இந்த ஒரிஜினல் மதுரை காட்சிகளை நாம் எங்கே காண்பது…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,

  இந்த கட்டுரையை தினமலரில் படிக்கும்போதே
  எனக்கு மிகவும் எரிச்சலாக வந்தது.
  வாட்சப் கதையை எல்லாம் இந்த பத்திரிகை
  செய்தி போல் போடுகிறதே என்று.

  வாட்சப் வந்தாலும் வந்தது,
  கணக்கில் அடங்காத அளவிற்கு,
  நம்ப முடியாத கதைகளும், வதந்திகளும் –
  உண்மையான செய்திகள் என்று வடிவம் பெற்று
  ஆயிரக்கணக்கான பேரை சென்றடைகின்றன.
  இதில் பல மத வெறியூட்டும் பிரச்சாரங்கள்…
  இன மோதல்களை உண்டுபண்ணக்கூடிய
  அளவிற்கு வெறித்தனமானவை.

  இது எங்கு சென்று முடியுமோ தெரியவில்லை.
  கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் வாட்சப்’பில்
  வரும் வதந்திகளையும், கட்டுக்கதைகளையும்,
  போட்டி போட்டுக்கொண்டு அனைத்து க்ரூப்புகளுக்கும்
  ஃபார்வார்ட் செய்யும் நண்பர்கள் (இதில் நண்பிகளின்
  பங்கும் அதிகம்…) தயவு செய்து தங்களுக்கு வரும் –

  முட்டாள்தனமான,
  உறுதிசெய்யப்படாத,
  எழுதியவர் என்று
  யாரும் பொறுப்பேற்றுக்கொள்ளாத
  வதந்திகளை/செய்திகளை
  தயவுசெய்து மற்றவர்களுக்கு ஃபார்வர்டு செய்வதை
  உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள்.

  அதுவே இந்த சமூகத்திற்கு நீங்கள் செய்யும்
  பெரும் உதவியாக இருக்கும்.

  இந்த அபத்தங்களுக்கு யாரும் தெரிந்தே
  துணைபோக வேண்டாம்.

  முடிந்தால், உங்களுக்கு இத்தகைய வதந்திகளை
  ஃஃபார்வார்டு பண்ணுபவர்களுக்கும் இந்த செய்தியை
  தெரிவியுங்கள். ஆதாரமற்ற செய்திகளை
  ஃஃபார்வார்டு செய்ய வேண்டாம் என்று அவர்களிடம்
  உறுதியாக கூறுங்கள்.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   கா.மை. சார்…. நான் இருப்பது ஒரு சில குழுக்களில்தான். அதில்தான் எத்தனை உறுதிப்படாத செய்திகள், பொய்கள், மதவெறிப் பிரச்சாரம், அடுத்தவன் வீட்டுத் திருமணத்தைப் பற்றின செய்திகள்….. சில பிரச்சாரங்களை நான் கேட்கும்போது, மாற்று மதத்தவரைப் பற்றிய கெட்ட அபிப்ராயமும், தேவையில்லாமல் மனது டென்ஷனாவதும் நடப்பதைப் புரிந்துகொண்டு, பல செய்திகளைப் படிப்பதே இல்லை. பெரும்பாலும் ஃப்ராடு விஷயங்கள்தாம். இதுல ஒரு அராஜகம், சமீபத்தில் கோவையிலிருந்து ஒருவர் சுதா ரகுநாதன் கணவருக்கு போன் போட்டு அவர் மகள் திருமணத்தைப் பற்றி விசாரித்து அதை ரெகார்ட் செய்து வாட்சப்பில் பரவ விட்டிருப்பது… அராஜகத்துக்கு அளவே இல்லை.

   அதுதவிர, அறிவே கொஞ்சம் கூட இல்லாதவர்கள், புதுப் புதுச் செய்திகளை வாட்சப்பில் உருவாக்குகிறார்கள் (ஜப்பானில் கேன்சர் டாக்டர் சொன்னார், இதயவலிக்கு இதுதான் தீர்வு, மெப்ஸ் ஆஸ்பத்திரியின் அநியாயம், 1000 லேப்டாப்கள் இலவசம்-இந்த நம்பரைத் தொடர்புகொள்ளுங்கள்…… இந்த லிஸ்டுக்கு அளவே இல்லை. அதிலும் தசாவதாரக் காட்சிகளை எடுத்து, இந்து அறநிலையத்துறை அத்திவரதரை குளத்தில் ஸ்கேன் செய்தது என்றெல்லாம் நம்ப முடியாத அளவு ஃப்ராடு நியூஸ்). படிக்கிறார்களோ இல்லையோ, உடனே அடுத்தவர்களுக்கு ஃபார்வர்ட் செய்கிறார்கள். இப்படிச் செய்வதுமே சமூகக் கேடுகளுக்கு காரணமாகும்.

   என்னைக்கேட்டால், ஒவ்வொரு ஃபார்வர்டுக்கும் யாராவது (வாட்சப்போ இல்லை ஜியோ/ஏர்டெல் போன்றவர்களோ) 10 ரூபாய் வசூலித்தால், 95% ஃபார்வர்டுகள் காணாமல்போய்விடும். இன்னும் துர்வாசர் இதைப்பற்றி துக்ளக்கில் எழுதினாற்போல் தெரியலை…

 7. Ramnath சொல்கிறார்:

  // என்னைக்கேட்டால், ஒவ்வொரு ஃபார்வர்டுக்கும் யாராவது (வாட்சப்போ இல்லை ஜியோ/ஏர்டெல் போன்றவர்களோ) 10 ரூபாய் வசூலித்தால், 95% ஃபார்வர்டுகள் காணாமல்போய்விடும். //

  இந்த ஆலோசனையை நான் வரவேற்கிறேன்.
  செல் நிறுவனங்கள் செய்யா விட்டால்,
  அரசே ஒரு வரி மூலம் இதைச் செய்யலாம்.
  வரும்படிக்கு வரும்படி – முட்டாள்தனத்தையும்,
  வீண் வதந்திகளையும் ஒழிக்கவும் ஒரு வழி.

 8. உழவன் சொல்கிறார்:

  போலி ஜோதிடர்களும், இது போன்ற கற்பனைக்கெட்டாத புனைய பட்ட கதைகளும் தான் இன்று வரை இந்து மதத்தையும், கோவில்களையும் மிகவும் வாழ வைத்து கொண்டிருப்பதென்ப்பது உண்மையே.

  • candyman சொல்கிறார்:

   இது மிகவும் மோசமான, அர்த்தமற்ற மத துவேஷ பேச்சு… இப்படி புனைந்து கூறுவது தவறு என்று மட்டும் நிறுத்திருக்கலாம்…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உழவன்,

   நீங்கள் இந்த இடுகையை உங்களுக்கு சாதகமாக
   திரித்துக் கொள்ள பார்க்கிறீர்கள்.

   இந்த இடுகையின் சாராம்சமே,

   – இத்தகைய புனைக்கப்பட்ட செய்திகளால்,
   ஹிந்து மதத்தையோ, கோவில்களையோ –
   உயர்த்த முயற்சி செய்யவே வேண்டாம்.

   ஏற்கெனவே, அது தனது சொந்த value -க்களுக்காகவே,
   உயர்ந்த இடத்தை பெற்றிருக்கிறது. புனையப்பட்ட
   புகழ் அதற்கு தேவையில்லை என்பதே இடுகையின் கருத்து.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.