உறைய வைக்கும் ஒரு நிலச்சரிவு ….


3-4 ஆண்டுகளுக்கு முன்னர் நான் குடும்பத்தோடு,
ஹிமாசல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றிருந்தேன்… (மணாலி)குல்லு’விலிருந்து – ரோதங்க் பாஸ்
என்னுமிடத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தோம்.
பொதுவாக மழைக்காலங்களில் அந்த பிரதேசங்களில்
பயணம் செய்வது கொஞ்சம் ரிஸ்க்கானது தான்

முழுவதும் மலைப்பாதைகளில் தான் பயணம் செய்ய
வேண்டியிருக்கும். திடீர் திடீரென்று, மலையுச்சியிலிருந்து
பாளம் பாளமாக – மண்ணும், சிறிதும் பெரிதுமாக
பாறைகளுமாக பெயர்ந்து சரிந்து விழும்.
( land slide என்று கூறுவார்கள்…) பாதையை
அடைத்துக் கொள்வதோடு அல்லாமல், சில சமயங்களில்
வாகனங்களையும் அடித்துச் சென்று, கீழே
அதல பாதாளத்தில் உருட்டி விட்டு விடும்.

அந்த பயணத்தின்போது, அத்தகைய சம்பவம் ஒன்றை நேரில்
பார்க்க முடிந்தது. எங்கள் காருக்கு சுமார் 70-80 அடிகளுக்கு
முன்னர், திடீரென்று தடதடவென்ற பலத்த சப்தங்களுடன்
பாறைகளும், மண்,சேறு குழம்புமாக சுமார் 400 அடி
உயரத்திலிருந்து சரிந்து விழுந்து ரோட்டை
மறித்துக்கொண்டு வந்து விழுந்தது.

எங்களுக்கும் அந்த சரிவுக்கும் இடையே இன்னும்
2 கார்கள் வேறு சென்று கொண்டிருந்தன. முன்னால்
சென்றவர்கள் ஒரு எச்சரிக்கை உணர்வுடனேயே சென்று
கொண்டிருந்தார்கள்.

அதிருஷ்டவசமாக, சரிவுகள் மேலேயிருந்து விழுவதை
பயணிகளில் ஒருவர் கவனித்து சொல்லவே, டிரைவர்
உடனடியாக காரை நிறுத்தி விட்டார்.

கொஞ்சம் அதிர்ச்சி அடங்கிய பிறகு காரிலிருந்து இறங்கி அருகே
சென்று பார்த்தோம்…. பெரிய பெரிய பாறைகள் 15-20 இருக்கும்.
கார் மீது விழுந்திருந்தால், யாரும் உயிர் தப்பி இருக்க முடியாது.

அது ஒருவழி மலைப்பாதை…அங்கே கொஞ்ச நேரம்
உதவிக்காக தாமதித்து காத்திருந்தால் – பின்னால்,
நூற்றுக்கணக்கான வாகனங்கள் சேர்ந்து விடும்.

பிறகு காரை முன்னாலும் எடுக்க முடியாது;
பின்னாலும் போக முடியாது; அந்த குளிரில், குழந்தைகளுடன்,
இரவில் மாட்டிக்கொண்டால் அதோகதி தான்.

எனக்கு இதுபற்றி ஓரளவு அனுபவமுண்டு என்பதால், அங்கே
வேடிக்கை பார்த்துக்கொண்டு, relief (உதவி வாகனங்கள்)
வருவதற்காக காத்திராமல், கொஞ்ச தூரம் பின்பக்கமாகவே
ரிவர்சில் வந்து, ஒரு வளைவில் காரை திருப்பிக்கொண்டு,
போன வழியிலேயே வேகமாக வெளியே வந்து விட்டோம். இதைச்செய்யவில்லை என்றால், அநேகமாக இரவு முழுவதும்
அந்த குளிரில், அந்த மலைப்பிராந்தியத்தில்,
குடிக்கத்தண்ணீரோ, உணவோ. வெளிச்சமோ – இன்றி
மாட்டி இருப்போம்.

கொஞ்ச நாட்களுக்கு அந்த சம்பவம் திகிலாகவே மனதில்
படிந்திருந்தது… பின்னர் தானாகவே மறந்து, மறைந்து போனது.
நேற்று திடீரென்று ஒரு செய்திச்சுருளை பார்க்கவும், அந்த அனுபவம்
மீண்டும் நினைவிற்கு வந்தது…

————————————————

சீனாவின் ஃபுஜியான் பிராந்தியத்தில் உள்ள ஊபிங் என்ற இடத்தில்
ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவு ஒன்றை தற்செயலாக ஒரு சிசிடிவி
கேமரா படம் பிடித்துள்ளது.

வீடியோவில் இடது புறத்தில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்படுவது
தெரிகிறது. இதைத் தொடர்ந்து அலை போல வேகமாக வரும்
மணலும் நீரும் – சாலையில் இருக்கும் கார்கள் உள்ளிட்ட
வாகனங்களை கண் இமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்கிறது.

ஊபிங்கில் இருக்கும் சியாங்ஷெங் சாலையில் – இந்த நிலச்சரிவு
ஏற்பட்டிருக்கிறது. இது நேரடியாக பதிவாகி, அந்த தகவல்
உடனடியாக உள்ளூர் அவசரகால சேவை அமைப்புகளுக்கு தெரிவிக்கப்படிருக்கிறது.

அவர்களும் உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணியிலும்
ஈடுபட்டதன் மூலம், பெரும் பாதிப்புகள் நிகழ்வது
தவிர்க்கப்பட்டுள்ளது…

கண நேரத்தில் என்ன நிகழ்ந்து விடுகிறது என்பதை பார்த்தால்,
இயற்கையின் சீற்றம் எத்தகைய வீர்யம் கொண்டது என்பதை
புரிந்து கொள்ளலாம்….

கீழே வீடியோவை பாருங்களேன்….

.
—————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.