பகுதி-2 – சூலூரும் வடுவூரும்…!!!


வடுவூர் துரைசாமி அய்யங்கார் ( 1880 – 1942 ) நான் பிறப்பதற்கு
முன்பே காலமாகி விட்டாலும் கூட, 1955-லும், அவர் தான்
தமிழில் top writer. அவர் புத்தகங்கள் அப்போதும் பேசப்பட்டு
வந்தன…சூடாக விற்பனையாகி வந்தன.

பகுதி-1 – மறக்க முடியாத – சூலூரும் – வடுவூரும்….!!!

முதலில் வடுவூராரைப்பற்றிய சுருக்கமான பின்னணி –

இவர் அந்த காலத்து B.A. பட்டதாரி.
தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். தந்தை கிருஷ்ணசாமி ஐயங்கார்.
அன்றைய அரசில் தாசில்தாராக விளங்கியவர். எழுத்து மோகத்தால்,

தன் எழுத்து தனக்கு சோறு போடும் என்கிற தன்னம்பிக்கையுடன்
அரசாங்க வேலையை விட்டவர்.

இன்றைய தினம் பாக்கெட் நாவல்கள் வெளிவருவதற்கு 70-80
வருடங்களுக்கு முன்பே இந்த concept -ஐ தமிழுக்கு அறிமுகம்
செய்து வைத்தவர் இவர். தம் நாவல்களைத் தாமே அச்சிட
ஒரு அச்சகமும், “மனோரஞ்சனி” என்ற மாத இதழும் தொடங்கி –
மாதம் ஒரு கதை நூல் என எழுதிக்குவித்தவர்.

நடுத்தர உயரம், ஒல்லியான உடல், சற்றே கறுத்த மேனி,
கழுத்து வரை பொத்தான் போட்ட கோட்டு, சரிகை
அங்க வஸ்திரம், பஞ்சகச்ச வேஷ்டி, தலையில் ஒரு குல்லா,
காலில் ஹாஃப் ஷூ, கையில் தடி, நெற்றியை எப்போதும்
அலங்கரித்த திருமண், வாய் நிறைய வெற்றிலை, புகையிலை.
மொத்தத்தில் கை நிறைய சம்பாதித்த கவலை இல்லாத
உல்லாச மனிதர்.

தமிழில் நாவல்கள் தோன்றிய ஆரம்ப கால கட்டத்தில்
இவர் எழுதிய புத்தகங்களைப் படிக்காதவர் இருந்திருக்க முடியாது.
புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தித் தனக்கென
பெரியதொரு வாசகர்கள் வட்டத்தை அமைத்துக் கொண்டவர்.

க.நா.சுப்பிரமணியம் அவர்கள், தமது “இலக்கியச் சாதனையாளர்கள்’
என்ற படைப்பில், இவரைப் பற்றி எழுதுவது:

” ரங்கராஜுவிற்கு அடுத்து வாசகர்களை வெகுவாகக் கவர்ந்தவர்
வடுவூர் துரைசாமி ஐயங்கார். 1923 முதல் 1927 வரை தஞ்சை
கல்யாண சுந்தரம் ஹைஸ்கூலில் நான் படித்துக்
கொண்டிருக்கும்போது, கலர் அட்டையில், டெமி சைஸில் அவரது
நாவல்களை, அப்பாவுக்குத் தெரியாமல், ரெயில்வே ஸ்டேஷன்
ஹிக்கின்பாதம்சில் வாங்கிப் படித்த நினைவிருக்கிறது.

கலைப் ப்ரக்ஞையுடன், சுலபமாகப் படிக்கக் கூடிய நடையுடன்,
விரசமான விஷயங்களையும் கூட அதிக விரசம் தட்டாமல்
எழுதியதில் வல்லவர்.

ரெயினால்ட்சின் மட்டமான நாவல்களைத் தழுவி எழுதியவர்
என்றாலும், விக்டர் ஹ்யூகோவின் Les Miserables
என்ற நாவலை அற்புதமாகத் தமிழில் தழுவி எழுதியிருக்கிறார்.
அதே போல கிரேக்கப் புராணக் கதையான Eros and Psyche
என்ற கதையை வசந்த கோகிலம் என்ற நாவலாகப்
படைத்திருக்கிறார்.

அவர் பேசிய பல விஷயங்களிலே என் நினைவில் இருக்கும்
முக்கியமானதொன்று –

எகிப்தில் தலைமுறை தலைமுறையாக அரசாண்ட
ஃபாரோக்கள், தென்னாட்டிலிருந்து மிசிர தேசத்துக்குச் (எகிப்து)
சென்ற வடகலை அய்யங்கார்கள்தான் என்றும்,
அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும்,

அதைப்பற்றித் தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும்
சொன்னார்.. அந்த நம்பிக்கையில் ஆங்கிலத்தில்
Long Missing Links என்று ஒரு 900 பக்கப் புத்தகம் எழுதி,
தன் சொந்தச் செலவிலேயே அச்சிட்டு விற்க முயன்றார்.
புத்தகம் விற்கவில்லை. அதன் பிறகு அவர் பழைய
வேகத்தையோ சாதனையையோ எட்டவில்லை..

தமிழுக்கு அவர் சேவை சரியானபடி கணிக்கப்படவில்லை –
புரிந்து கொள்ளப் படவில்லை என்று தான் சொல்ல வேண்டும் ”

1931ல் தமிழ் சினிமா பேசத் தொடங்கியதற்குப் பிறகு,
துவக்கத்தில் எடுக்கப்பட்ட படங்களின் கதைகள் அனைத்துமே
புராண இதிகாசங்களிலிருந்து உருவப்பட்ட கதைகளையே
அடிப்படையாகக் கொண்டு சினிமாவாகத் தயாரிக்கப்பட்டவை.
பாடல்களுக்கிடையே கதையைத் திணித்துவிடுவார்கள். ஒரு
படத்தில் ஐம்பது அறுபது பாடல்கள் என்பது சர்வ சாதாரணம்.

கச்சேரி கேட்கப்போகிறேன் என்பதற்குப் பதிலாக கச்சேரி
பார்க்கப்போகிறேன் என்று சொல்லும் அளவில்தான்
அக்காலப் படங்கள் இருந்திருக்கின்றன.
(இவற்றில் சிலவற்றை நான் கூட பார்த்திருக்கிறேன்…!!! )

அம்மாதிரியான சூழலில் 1935 -ல் ‘மேனகா’ என்றொரு படம்
தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. அது சமகால சமூகப் படம்.

டி.கே.எஸ் சகோதரர்கள் முதலில் நாடகமாக
நடித்துக்கொண்டிருந்ததைத் திரைப்படமாகத் தயாரித்தார்கள்.

பிறகு 1950-ல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில்
வெளிவந்த திகம்பரசாமியார் மிகப்பெரிய ஹிட் படம்….
தமிழ்த்திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் நம்பியார்
திகம்பர சாமியாரில் கதாநாயகனாக, ஒன்பது வித
வேடங்களில் நடித்தார்…

வடுவூராரின் பல புத்தகங்கள் அல்லையன்ஸ் பதிப்பகத்தாரால்
2007 வாக்கில் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.
கடந்த வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் நான் கூட
சில புத்தகங்கள் கவர்ச்சிகரமான அட்டைகளுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை கவனித்தேன்.

வடுவூராரின் படைப்புகள் 2009-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

————–

திகம்பர சாமியார் திரைப்படம் யூ-ட்யூபில்
இலவசமாக காணக் கிடைக்கிறது…

அந்தக் காலத்து ரசனை எப்படி இருந்தது
என்று பார்க்க விரும்புபவர்கள்
கொஞ்ச நேரம் (மட்டும்) ஜாலியாக ரசித்துப் பார்க்கலாம் … !!!

———

———-

.
——————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.