மறக்க முடியாத – சூலூரும் – வடுவூரும்….!!!என் 12-13 வயதில், ஒரு பத்து மாதங்கள்,
எங்கள் குடும்பம் கோவைக்கு அருகேயுள்ள சூலூர்
என்கிற கிராமம் (அ) சிற்றூரில்
( இப்போது எப்படியோ…!!! ) வசிக்க வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டது… என் தந்தைக்கு 3 மாதங்களுக்கு
என்று சொல்லி அங்கே மாற்றலாகி, அது 10-12 மாதங்கள்
வரை நீடித்தது.

இதன் காரணமாக என்னால் பள்ளிப்படிப்பை
தொடரமுடியாமல் ஒரு இடைவெளி விழுந்தது.
அப்போதெல்லாம், கல்வி ஆண்டின் இடையில் எங்கும்
சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்…!

எனவே, அந்த காலகட்டத்தில் நான் பள்ளிக்குச்
செல்ல முடியவில்லை. புதிய ஊர் என்பதால்,
நண்பர்களும் கிடையாது… வேறு யாரையும்
தெரியாது…கிராமம் என்பதால் வேறு பொழுதுபோக்கு
வசதிகளும் கிடையாது…

ஒன்றும் புரியாமல், என்ன செய்யலாம் என்று 12 வயதில்
அந்த சிற்றூரை தெருத்தெருவாக சுற்றி வந்தபோது,
தெய்வமே நேரில் தோன்றியது போல் ஒரு அரசு நூலகம்
கண்ணில் பட்டது.

அந்த வயதிலேயே எனக்கு வாசிப்பதில்
பெரும் ஈடுபாடு உண்டு.

ஏற்கெனவே எங்கள் வீட்டில் – கல்கி, ஆனந்த விகடன்,
கதிர் போன்ற வார இதழ்களை, அப்பா வாங்கிக்
கொண்டிருந்தார். அதைத்தவிர நானும் என்
அண்ணா’க்களுமாக சேர்ந்து எங்கள் சொந்த
வரும்படியிலிருந்து ( …??? அது தனிக்கதை –
எப்போதாவது சந்தர்ப்பம் வாய்த்தால் சொல்கிறேன்…)
தமிழ்வாணனின் “கல்கண்டு” வாங்கிக்கொண்டிருந்தோம்.
(அப்போதைய விலை இரண்டணா…!!!)

ஆனால், இவையெல்லாம் என் பசிக்கு போதவில்லை..!
ஆர்வமாக நூலகத்திற்குள் நுழைந்தேன்… அவ்வளவு தான் –
அடுத்த 10-12 மாதங்களுக்கு ( நாங்கள் அந்த ஊரை விட்டு
கிளம்பும் வரை ) அந்த நூலகமே கதி.

எனக்கு இரண்டே நாட்கள் தான் பிடித்தது – அந்த
நூலக காப்பாளரின் நட்பைப் பெற….அவருக்கு சுமார்
35-40 வயதிருக்கும்…மாநில அரசு ஊழியர்….
என் வயதையொத்தவர் எவரும் உள்ளேயே நுழையாத
அந்த நூலகத்தில் நான் நாளும் குடியிருப்பது
அவர் கவனத்தை கவர்ந்தது…

அவருடன் பரிச்சயத்தை ஏற்படுத்தி கொண்டேன்.
என்னைப்பற்றிய விவரங்களை சொன்னேன்.
வாசிப்பதில் எனக்குள்ள ஆர்வத்தையும் தெரிவித்தேன்…
வரவேற்றார். வெகு சீக்கிரத்தில் நாங்கள் இருவரும்
நல்ல நண்பர்கள் ஆனோம்.. வயது இங்கே குறுக்கிடவே
இல்லை… ஒருவருக்கொருவர் உதவியாக இருந்ததால்
நட்பு பலப்பட்டது.

அவருக்கு சிறு அளவில் உதவிகள் செய்து கொடுத்தேன்.
புத்தகங்களை பட்டியல் போடுவது, சீரமைத்து தலைப்பு
வாரியாக அலமாரிகளில் வரிசையாக அடுக்குவது,
முதல் பக்கத்தில் தாள் ஒட்டி, விவரங்கள் எழுதுவது,
புத்தகங்களை இரவல் பெற்றுச் செல்வோருக்கான
ரெஜிஸ்டரை மெயின்டெயின் செய்வது –
அவர் அவ்வப்போது, சின்னச்சின்ன காரியங்களுக்காக,
அரை/முக்கால் மணி நேரங்க்ளுக்கு வெளியே
செல்ல வேண்டி வரும்போது, நூலகத்தை
பார்த்துக்கொள்வது — இப்படியான உதவிகள்.
அவருக்கு மிகவும் மகிழ்ச்சி.

இவற்றிற்கு பதிலாக எனக்கு அங்கே கிடைத்த சுதந்திரங்கள் –
நூலகம் மூடும் சமயத்தில், அங்கே இருக்கும் எந்த
வார/மாத இதழ், நாவல்களை வேண்டுமானாலும் நான்
வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். அடுத்த வேளை
நூலகம் திறக்கும் வேளையில் நான் அவற்றை
தவறாமல் – திரும்பக் கொண்டு வந்து விடுவேன்.

அந்த 10-12 மாதங்களில் எனக்கு படிக்கக் கிடைத்த புத்தகங்கள் –
என் வாழ்நாளில் மறக்க முடியாதவை. நான் பிறந்ததிலிருந்து
அதுவரை – வட மாநிலங்களிலேயே இருந்து விட்டதால்,
தமிழ் நாவல்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை.

தமிழுலகில் நாவல்கள் வெளிவரத்துவங்கிய காலத்திலிருந்து –
1951-52 வரை வெளிவந்த, அந்த நூலகத்தில் இருந்த –
கிட்டத்தட்ட அத்தனை நாவல்களையும் அந்த 10-12 மாதங்களில்
படித்து முடித்து விட்டேன்…. அப்போதெல்லாம் நான் மிக
வேகமாகப் படிப்பேன்.

அந்த காலத்திய எழுத்தாளர்களில், மிகவும் முக்கியமானவர்கள் –
புகழ்பெற்றவர்கள் –
ஆரணி குப்புசாமி முதலியார்,
வடுவூர் துரைசாமி அய்யங்கார்,
வை.மு.கோ(தைநாயகி),
ஜே.ஆர்.ரங்கராஜூ,
சிரஞ்சீவி, மேதாவி, ஜெகசிற்பியன், போன்றோர்.

கல்கி, மு.வ., சாண்டில்யன் போன்றவர்களின் நாவல்கள் அப்போது
நூலகங்களுக்கு வரத்துவங்கவில்லை.

இங்கு முதலில் ஆரணி குப்புசாமி முதலியார் (1866 -1925) பற்றி
குறிப்பிட்டு விட வேண்டும். தமிழில் துப்பறியும் நாவல்களை
இவர் தான் அறிமுகப்படுத்தினார் என்றே சொல்லலாம்.
எக்கச்சக்கமான அளவில் துப்பறியும் நாவல்களை எழுதிக்
குவித்தார். அவரது நாவல்கள் பல பாகங்களாக வெளிவந்தன…
அவரது இரத்தினபுரி இரகசியம் என்கிற புத்தகம் 9 பாகங்களாக
வெளிவந்தன.

ஆனால், இவர் எழுதிய நாவல்கள் பெரும்பாலும் சிலஆங்கில
எழுத்தாளர்களின் புகழ்பெற்ற நாவல்களின் அப்பட்டமான
தழுவலாகவே இருந்தன… ஷெர்லக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தைத்
தழுவி ஆனந்த சிங் என்ற துப்பறிவாளர் கதாபாத்திரத்தை இவர்
உருவாக்கினார். இவரது படைப்புகள் ஆர்தர் கானன் டெயில்,
ஜார்ஜ் டபிள்யு. எம். ரேனால்ட்ஸ் போன்ற ஆங்கில
குற்றப்புனைவு எழுத்தாளர்களின் படைப்புகளைத் தழுவியே
அமைந்தன.

ஆனால், தழுவல் என்று இவர் எங்கும் சொன்னதாக
என் நினைவில் இல்லை. பெயர்களை மட்டும் தமிழ்ப்படுத்தி
விடுவார். சம்பவங்கள் நிகழும் இடம் – முறைகளுக்கும்,
நம் நாட்டிற்கும் எந்தவித சம்பந்தமும் இருக்காது. ஆனால் –
அவற்றைப்பற்றி எல்லாம் எனக்கென்ன கவலை. அவரது
நாவல்கள் அந்த வயதில் படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக
இருந்தன… அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது.

இவர் வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆரணி-க்காரர்.
முதலில் பள்ளி ஆசிரியராகவும், பின்பு கலால் துறையிலும்
பணியாற்றி, கடைசியில் “ஆனந்த போதினி” என்கிற
மாத இதழின் ஆசிரியராக பணியாற்றினார். இவரது எழுத்து,
தொடர்கதை, நாவல்கள் காரணமாகவே, அந்த காலத்திலேயே
ஆனந்தபோதினி 20,000 பிரதிகள் விற்றது. இவரது நாவல்கள்
அனைத்தும் ஆனந்தபோதினி மூலமாகவே முதலில்
வெளிவந்தன. நடுத்தர குடும்பத்தினரிடையே – வாசிக்கும்
பழக்கம் அதிகரித்ததில் இவரது எழுத்துக்கும் பங்குண்டு.

இவருக்கும் நிறைய வாசகர்கள் இருந்தார்கள்.
படிக்கும் ஆர்வம் இருந்த – ஆனால் ஆங்கில நாவல்களை
படிக்கக்கூடிய அளவிற்கு வசதியோ, புரிந்துகொள்ளும் திறனோ
இல்லாதவர்களுக்கு இவர் ஒரு வரப்பிரசாதமாக இருந்தார்….

கிட்டத்தட்ட 75 நாவல்களை இவர் எழுதி இருக்கிறார்.
ஒவ்வொன்றும் 500-600 பக்கங்கள் இருக்கும். இதில் குறைந்தது
50 நாவல்களையாவது நான் படித்திருப்பேன்.

……………..

அடுத்து அங்கே எனக்கு பழக்கமானவர் தான் ஸ்ரீமான்
வடுவூர் துரைசாமி அய்யங்கார்…!!!

வடுவூராரை அறிமுகப்படுத்த சில வார்த்தைகள் –

வடுவூராரின் நாவல்கள் அனைத்திற்குமே
அநேகமாக இரண்டு பெயர்கள் இருக்கும்…
மிக விநோதமாகவும் இருக்கும்….

உதாரணம் – கும்பகோணம் வக்கீல் அல்லது
திகம்பர சாமியார்… மிஸ்டர் பூச்சாண்டி எம்மே!
அல்லது நீக்கு பெப்பே! நீ தாத்தாக்குப் பெப்பே!
வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் – அதே சமயம்
திடுக்கிட வைக்கும் – துப்பறியும் நாவல்கள் என்கிற
காம்பினேஷனை யோசித்துப் பாருங்கள்…
அதுதான் வடுவூரார்.

அவரது நடை ரொம்ப தமாஷாக இருக்கும் …
ஆனால் அந்த காலகட்டத்தில், என் வயதிற்கு அது மிகவும் விறுவிறுப்பானதாகவும், பிடித்தமானதாகவும் இருந்தது…

ஆனால் – இப்போது படித்தால்… ???
இப்பவும் நிச்சயம் தமாஷாக இருக்கும். (ஆனால்
இப்போது படிக்க கொஞ்சம் பொறுமையும், நிறைய
ஆர்வமும் தேவை…) இந்த இடுகையின் இறுதியில்
சில சாம்பிள்கள் தருகிறேன்.
படித்துப் பாருங்கள்…!!!

( இங்கே தந்திருக்கும் சில தகவல்கள், புகைப்படங்கள்,
வலைத்தளத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வலைவீசி
தேடி கண்டுபிடிக்கப்பட்டவை… உரிமையாளர்களுக்கு
எனது நன்றிகள்…! )

இடுகை நீண்டு விட்டது –
அடுத்த பகுதியில் (பகுதி-2) தொடர்கிறேன்…

.
———————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to மறக்க முடியாத – சூலூரும் – வடுவூரும்….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  ஆரணி குப்புசாமி முதலியார் நாவல்கள் படித்ததில்லை.

  வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல் ஒரு சில ஓரிரு வருடங்களுக்கு முன்பு படித்தேன். ரசிக்க முடியும். அவருடைய நாவல்களை அல்லயன்ஸ் கம்பெனி வெளியிட்டிருக்கிறது (சமீபத்தில்)

  நானும் 6வது படித்தபோது, எங்கள் சிற்றூரின் லைப்ரரியில் பழியாகக் கிடந்து நிறைய நாவல்கள் படித்தது (தேவன் உள்பட) நினைவுக்கு வருகிறது.

 2. D Chandramouli சொல்கிறார்:

  When I was in High School In Thiruvarur, I used to visit my auntie’s house on week ends. She had a great collection of the then famous authors. I recall having read a novel by Vai Mu Kodhainayagi Ammal. There was one author Dr Lakshmi of South Africa who wrote Arakku Maligai. Of course, I was a regular reader of Kalkandu. Quite a few of Devan’s stories were a big draw then – Mr Vedantam, Thupparium Sambu. Devan’s Justice Jagannathan was another favorite of mine as the court room dramas resembled like Perry Mason’s. Somehow never heard of Arani kuppuswamy Mudaliar’s novels! Of course, it was a craze to read the weekly episodes of Ponniyin Selvan by Kalki and the pictures of the famous characters of this novel were great attractions. After my SSLC, I was engrossed with Akilan’s “Pavai Villakku’ in Kalki weekly. Then I was attracted to English novels ‘The Betsy’, followed by Arthur Hailey’s stories – a good lot of learning on various industries – Airports, Hotels, Hospitals and what not. I could access these English books from the Easwari Lending Library in Royapettah (Wonder if it still exists},

 3. Pingback: பகுதி-2 – சூலூரும் வடுவூரும்…!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.