வித்தியாசமான ஒரு தலைவர் …!!!


நேற்றே பதிவு போட்டிருக்க வேண்டும்..
நான் பார்க்கத் தவறி விட்டேன்…

நண்பர் செல்வராஜன் பின்னூட்டத்தைப் பார்த்த பிறகு தான்
நினைவிற்கு வந்தது…

இருந்தாலென்ன – நினைவிற்கு வந்தவுடன் நமது மரியாதையை
செலுத்தி விடுவோமே…

நேற்றைய தமிழ் இந்து, திரு. எஸ்.ராஜகுமாரன் எழுதிய மிக அழகான,
நிறைவான ஒரு கட்டுரையை பதிவு செய்திருக்கிறது… ஓமாந்தூர்
திரு.ராமசாமி ரெட்டியார் அவர்களின் இயல்புகளையும், சிறப்புகளைப்பற்றியும்
இதில் மிக விவரமாக சொல்லப்பட்டிருக்கிறது.

இதில் தரப்பட்டிருக்கும் சில தகவல்களை நான் கூட இப்போது தான்
தெரிந்து கொள்கிறேன்.

அதிலிருந்தே சில பகுதிகளை கீழே பதிவது சிறப்பானது என்று
நினைத்தேன்… கீழே தந்திருக்கிறேன்.

——————————————-

– நேற்று ( 1.2.2019 ) – ஒரு எளிய விவசாயியைப் போல் தோற்றமளிக்கும்,
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓமந்தூரார் அவர்களின் பிறந்த நாள்….

தமிழகத்தில் – திண்டிவனத்துக்கு அருகில் இருக்கும் ஓமந்தூர் என்ற ஊரில்
1-2-1895ம் ஆண்டு பிறந்தவர் ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார். இவர் தமிழக மக்களால் ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்டார்.

இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட அவர்,
காந்தியச் சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்.

சுதந்திர இந்தியாவில் – தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தின்
முதலாவது முதல்வராக பதவியேற்றவர் – ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.

காமராஜர் ஆதரவுடன் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வராக
ஓமந்தூரார் 1947-ம் ஆண்டு மார்ச் 23 முதல் 1949-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி
வரை பதவி வகித்தார்.

இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றினார். பாகிஸ்தானில் இருந்து
ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் ஆயுதங்கள் கொண்டு வரப்படுகின்றன
என்று பட்டேலுக்கு எச்சரிக்கை செய்தார். அதன்பின்னர் அங்கு ராணுவ
நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்திய தேசத்துடன் ஹைதராபாத் இணைக்கப்பட்டது.

சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற எண்ணம் கொண்டவர். விவசாயிகள், மற்றும் ஏழை, எளியவர்களின் முன்னேற்றத்துக்காக சிந்தித்து
பல முனைப்புகளை தொடங்கியவர்.

ஓமந்தூராருக்கு முன்பு சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த ஒன்பது
முதலமைச்சர்களும் அரச வம்சத்தையும், ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் உயர்கல்வி பயின்றவர்கள். ஓமந்தூரார்
சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 8-ம் வகுப்பு வரையே படித்தவர்.

ஓமந்தூரார் முதல்வர் பதவியில் இருந்தபோது – கட்சிக்காரர்களுக்கோ, தன்
குடும்பத்தினருக்கோ எந்த விதச் சிறு சலுகைகளோ வேலைவாய்ப்புகளோ
அவர் வழங்கவே இல்லை.

இரண்டாண்டுகள் மட்டுமே முதல்வர் பதவியில் இருந்த ஓமந்தூரார் – மிகவும் நேர்மையான ஆட்சியை இந்த இரண்டாண்டுகளில் வழங்கினார்.

ஆதிதிராவிடர்கள், ஹரிஜனர்கள் என அழைக்கப்பட்ட அந்தக் காலத்தில்,
அவர்களுக்கென்று தனித் துறை இல்லை. தொழிலாளர் நலத் துறையின் ஒரு
பகுதியாகவே ஹரிஜன நலத் துறை இருந்தது.

ஓமந்தூரார் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அந்தத் துறையை ஆதிதிராவிடர்
நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்து, தனித் துறையாகப் பிரித்து, அந்தத்
துறைக்கென தனியே ஒரு ஆணையரை நியமித்தார். எனவே அவர்
இன்றைக்கும் ஆதிதிராவிட நலத் துறையின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.

அரசாங்க நிலங்களைப் பொதுமக்களுக்கு வழங்கும்போது, ஆதி
திராவிடர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நடைமுறையை
அரசாணையாகப் பிறப்பித்தவர் ஓமந்தூரார்தான்.

ஆதிதிராவிடர்கள் ஆலயத்தில் நுழைவதற்கான தடையை முழுவதுமாக நீக்கி, தமிழ்நாட்டின் பல முக்கியக் கோயில்களில் ஆதிதிராவிடர்களைப் பிரவேசிக்க வைத்த பெருமைக்குரியவர் ஓமந்தூராரே!

ஓமந்தூரார் – தான் முதல்வர் பதவியேற்றிருந்த காலத்தில் ஆலயப்பிரவேசத்தை எல்லாக் கோயில்களிலும் முறைப்படுத்த ஒரு தனிச் சட்டத்தையும் தோற்றுவித்ததை வரலாறு என்றைக்கும் நினைவில் வைத்திருக்கும்.

சென்னை மாகாணத்தில் இருந்த, திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க 1947-ம் ஆண்டுவரை ஆதிதிராவிடர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆலயப் பிரவேசச் சட்டத்தின் மூலம் அவர்கள் ஏழுமலையானைத் தரிசிக்க வைத்ததோடு நிற்கவில்லை. திண்டிவனம் ஆதிதிராவிடர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான குலசேகரதாஸ் என்பவரை, திருமலை-திருப்பதி கோயிலின் அறங்காவலராக நியமித்தார். ஆலயப் பிரவேச வரலாற்றில், இது
தனித்துவமிக்க ஒரு சாதனையாகும்.

ஓமந்தூரார் முதலமைச்சராகப் பதவியேற்றதும் பிறப்பித்த ஆணைகள்
அனைத்தும் கொண்டாடப்பட வேண்டியவை. அவர் பதவி ஏற்றதும் செய்த
முதல் வேலை – பாராட்டுக் கூட்டங்கள், வெற்றி விழாக்கள் ஆகிய அரசியல் ஆரவாரங்களுக்குத் தடை போட்டதுதான். ஆம், அதுவரை எந்த இந்திய மாகாண முதல்வர்களும் செய்யாத நடவடிக்கைகள் இவையாகும்.

மிக மிக அவசியமான தருணங்களில் மட்டுமே ஓமந்தூரார் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். தனிப்பட்ட பேட்டிகள், புகைப்படம் எடுப்பது போன்ற எதற்கும் அவரிடம் எளிதில் அனுமதி வாங்கவே முடியாது.

அதனாலேயே அவரின் புகைப்படங்கள் ஒன்றிரண்டு மட்டுமே இன்று நமக்குக்
கிடைக்கின்றன.

முதலமைச்சரைச் சந்திப்பதற்கென வழங்கப்படும் அனுமதிச் சீட்டில், என்ன
காரணத்துக்காகச் சந்திக்க வேண்டும் என ஒரு கேள்வியை இணைக்கும்படி
முதன்முதலில் உத்தரவிட்டவர் ஓமந்தூரார்தான். . நியாயமான
காரணத்துக்காக வருவோரை மட்டுமே சந்திப்பது என்பதை தான்
முதலமைச்சராகப் பதவி ஏற்ற நாள் முதலே வழக்கமாக்கிக்கொண்டார் அவர்.

தனிப்பட்ட சலுகைகள், பரிந்துரைகளுக்காக வருவோரை ஓமந்தூரார்
தன்னை சந்திக்க அனுமதிக்கவே மாட்டார்.

ஓமந்தூரார் முதலமைச்சராகப் பதவி ஏற்ற பிரிட்டிஷ் இந்தியாவில், அந்தக்
காலகட்டத்தில் மாகாண முதலமைச்சர்களின் அந்தரங்கச் செயலாளர்கள்
அனைவரும் அப்போது ஆங்கிலேய ஐ.சி.எஸ். அதிகாரிகளாகவே இருந்தனர்.

தான் பதவி ஏற்றவுடனேயே ஓமந்தூரார் ஓர் உத்தரவில் கையெழுத்திட்டார்.
அது என்ன தெரியுமா? ஐ.சி.எஸ். அந்தஸ்து இல்லாத ஏ.அழகிரிசாமி
என்பவரைத் தனது அந்தரங்கச் செயலாளராக நியமித்துக்கொண்டார்.

சென்னை மாகாண முதலமைச்சர்களின் அந்தரங்கச் செயலாளர்களில் முதல்
தமிழர் என்ற பெருமைக்குரியவர் ஏ.அழகிரிசாமி. பின்னாட்களில் அவர்,
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பிறகு, உச்ச நீதிமன்ற
நீதிபதியாகவும் பணியாற்றினார்.

ஓமந்தூராரின் ஆட்சியில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த மிக முக்கியமான
சட்டங்கள் -ஆலயப் பிரவேசச் சட்டம், ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம்,
இந்து சமய அறநிலையச் சட்டம் மற்றும் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்
போன்றவையாகும்.

ஓமந்தூராருக்கு முந்தைய பிரகாசம் ஆட்சியில் சென்னை மாகாணத்தில் எட்டு மாவட்டங்களில் மட்டுமே மதுவிலக்கு அமலில் இருந்தது. பக்கத்து
மாவட்டங்களில் கள்ளுக்கடைகள் இருந்ததால், அந்தச் சட்டத்தால் எந்தப் பயனும் இல்லை. ஓமந்தூரார் முதலமைச்சரானதும் எஞ்சிய 17
மாவட்டங்களிலும் மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தினார். இதனால் 25
மாவட்டங்களைக் கொண்ட சென்னை மாகாணம் முழுவதும், ஒரே நாளில்
கள்ளுக்கடைகள் இழுத்து மூடப்பட்டன.

முதல்வராக இருந்தபோது ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் போனதால்
அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஓமந்தூரார்.

மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அதே சிகிச்சைதான் எனக்கும் அளிக்க வேண்டும். தனிப்பட்ட சலுகைகளோ கவனிப்போ எனக்குத் தரக் கூடாது என்றும் வெளிநாட்டில் இருந்து மருத்துவர் மற்றும் மருந்துகளை வரவழைக்கக் கூடாது என்றும் நிபந்தனைகளை விதித்த எளிய அரசியல்வாதி இவர்.

அவரின் நேர்மையான ஆட்சியால் பாதிப்படைந்த ஜமீன்தார்களும்,
மடாதிபதிகளும், சில அரசியல்வாதிகளும் இணைந்து அவரைப் முதல்வர்
பதவியில் இருந்து இறக்கத் திட்டமிட்டனர். கட்சியின் நிர்ப்பந்தத்தால் பதவி
விலக நேரிட்டபோது அவர் சிறிதும் கவலை கொள்ளாமல் பதவியை
தூக்கியெறிந்தார்.

பதவி விலகிய அன்று பிற்பகலிலேயே அரசுக் குடியிருப்பான கூவம் மாளிகையில் இருந்து வெளியேறி, தனது சொந்த ஊரான ஓமந்தூருக்கு
சென்றுவிட்டார்.

முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய பின்னர், ஓமந்தூரார் அரசியல்
வாழ்வை முற்றிலுமாகத் துறந்தார். இதையடுத்து மனம் முழுமையாக
ஆன்மிகத்தில் லயித்துப் போக, வள்ளலார் வாழ்ந்திருந்தவடலூரிலேயே
வசிக்கத் தொடங்கிவிட்டார் – வாழத் தொடங்கிவிட்டார்.

ஆன்மிகத்தில் ஈடுபட்டாலும் – தனது மரபார்ந்த விவசாய வாழ்க்கையை
மீண்டும் வாழ ஆசைப்பட்டு, தனது வியர்வை சிந்தும் உழைப்பால் வடலூர்
பகுதியில் இருந்த தரிசு நிலங்களை எல்லாம் – விளைநிலங்களாக
மாற்றினார்.

இன்று அணையா ஜோதியாக வெளிச்சம் சிந்தும் – வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவ இவர்தான் முன்னின்றார். வடலூரில் வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அனாதைகள் இல்லம், ஏழை மாணவர்களுக்கான குடில், அப்பர் சான்றோர் இல்லம், ராமலிங்கத் தொண்டர் இல்லம் ஆகிய நிறுவனங்களை ஓமந்துரார் ஏற்படுத்தினார்.

25-8-1970 அன்று தனது 75 -வது வயதில் உடல்நலக் குறைவால் ஓமந்தூரார்
காலமானார்.

இவ்வளவு சாதனைகளை செய்துவிட்டு, நேர்மையின் நிழலாகவும், உண்மையின் தத்துவமாகவும், சாதாரண மனிதர்களின் மக்கள் தலைவராகவும் திகழ்ந்த ஓமந்தூராருக்கு – தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் ஒரு சிலைகூடக் கிடையாது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.

.
——————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to வித்தியாசமான ஒரு தலைவர் …!!!

  1. அறிவழகு சொல்கிறார்:

    என்ன வித்தியாசமான ஒரு தலைவரா? என்ன ஐயா புரியாம.

    அவர் ஒரு தேச துரோகியல்லவா? இன்று அவர் இருந்திருந்தால்! அல்லது அவர் ஆட்சி காலத்தில் செய்த பல புரட்சிகரமான திட்டங்களை இன்று செய்தால்?

    ஓமாந்தூர் திரு.ராமசாமி ரெட்டியார் அவர்களை பற்றி ஏற்கனவே படித்திருக்கிறேன். இதில் கூடுதல் தகவல்கள் அவர்களை பற்றி அறிய தந்தமைக்கு நன்றி.

    ஹும்…! அந்த காலத்து மக்களுக்கு அந்த மாணிக்கம் போன்ற தலைவர்கள்.

    நாம் வாழும் காலத்தில் மோடி போன்ற தலைவர்கள் நமக்கு. நாம் என்ன அதிகம் பாவம் செய்திருப்போமோ…!?

  2. Selvarajan சொல்கிறார்:

    அய்யா…! ஓமந்தூரார் பெயரில்அரசினர் தாேட்டம் ஒன்று பல ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கிறது.. இங்கே தான் சுமார் பத்தாயிரம் அரசு ஊழியர்கள் குடியிருக்கிறார்கள் … சட்டமன்ற உறுப்பினர் விடுதி மற்றும கலைஞர் கட்டிய புதிய சட்டசபை கட்டடம் ஜெயாலலிதாவால் பல் நாேக்கு மருத்துவமனையாக மாற்றபட்டதும் இன்னும் பல அரசு சார்ந்த பள்ளி ..பாேன்றவைகள் இருப்பதும் இங்கே தான் ..என்பது கூடுதல் தகவல் … !

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      கூடுதல் தகவல்களுக்கு நன்றி செல்வராஜன்…

      ஓமந்தூராருக்கு எங்கேயாவது சிலை ……?

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. Selvarajan சொல்கிறார்:

    அய்யா ..! இன்று அறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் அதற்காக :
    // எனக்கு 12 வயது இருக்கும்போதே – ஒரு முறை
    அண்ணாவின் பேச்சைக் கேட்க ஆசைப்பட்டு திமுக
    கூட்டத்திற்கு சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு என்று சொல்லப்பட்டு
    இரவு 11 மணிக்கு பேசத்தொடங்கிய அண்ணா
    இரவு 12.45 வரை பேசினார். மது அருந்தும்
    வண்டாக மக்கள் அப்படியே மயங்கிப் போய் அமர்ந்து
    இருந்தனர். அப்படி ஒரு மயக்கும் பேச்சாற்றல்
    நிறைந்தவர் அண்ணா.
    அப்போதெல்லாம் திமுக வினரிடம்
    கொள்கைப் பிடிப்பு இருந்தது.
    வேகம் இருந்தது.
    பேச்சில் தெளிவு இருந்தது.
    அடுக்கு மொழிக்காக எதுகை,
    மோனையுடன் பேசினாலும்,
    சொல்லில் ஏற்றுக்கொள்ளக்கூடிய
    கருத்துக்கள் இருந்தன.

    ஆனால் – இப்போது ? // …. இந்த வரிகள் தாங்கள் எழுதியவை தான் ஜனவரி 25 — 2011 அன்று பதிவிட்ட இடுகையில் // திமுக வின் பேச்சாளர்கள் ….
    Posted on ஜனவரி 25, 2011 by vimarisanam – kavirimainthan // என்பதிலிருந்து …! வித்தியாசமான தலைவர்கள் ..!!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      அந்தக்கால தமிழர்களாகிய நாம், திமுக தலைவர்களின் கவர்ச்சிகரமான, அடுக்கு மொழி தமிழ்ப்பேச்சில் மனதை
      பறி கொடுத்து பல வருடங்கள் ஏமாந்தோம்….

      இந்தக்கால ஹிந்தி’யர்கள் ( !!! ) நமோவின் உணர்ச்சிகரமான, ஆவேசமான, மதவெறியை, இனவெறியை தூண்டுகிற பேச்சில் தங்கள் மூளையை பறிகொடுத்து…… ???

      ஆக – தொடர்ந்து, அரசியலில் – ஏமாற்றுபவர்கள் வந்துகொண்டே தான் இருக்கிறார்கள். ஏமாறுபவர்களும் இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள்… காலத்திற்கேற்ப ஆட்கள் தான் மாறுகிறார்கள்…!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  4. புதியவன் சொல்கிறார்:

    நான் ரொம்ப வருடங்களாகவே, ஏன் தமிழக தலித் கட்சிகள் கக்கன் அவர்களையோ மற்றவர்களையோ கொண்டாடாமல் ஜெய்பீம் என்ற முழக்கத்தை மட்டும் போடுகிறார்களே, ஏன் தமிழகத்தில் தலித் தலைவர்கள் போற்றக்கூடிய ஒருவர்கூடவா இல்லை என்று நினைத்தேன்.

    அறநிலையத்துறை, ஆலயப்பிரவேசம், அறங்காவலர் — இப்படிப்பட்ட சாதனைகளைப் புரிந்திருக்கிறாரே… மிமவும் போற்றப்படவேண்டியவர்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.