…
…
…
“பிரபாகரன் காலத்தில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்”
———-
“உடலில் நிறைய நகையணிந்து, இளம்பெண் ஒருவர் நள்ளிரவில் என்று தனியே தெருவில் நடந்துபோக முடிகிறதோ, அந்த நாள் தான் இந்தியா உண்மையாகவே சுதந்திரம் பெறும் நாள்” என்று
காந்திஜி ஒருமுறை சொன்னார்….
தலைவர் பிரபாகரன் நிர்வாகத்தில் தமிழ் ஈழம் இருந்த (கொஞ்சமே) நாட்களில், அங்கிருந்த நிர்வாக கட்டமைப்பை கண்டு உலகம் கற்றுக் கொள்ள வேண்டியது இவர்களிடம் நிறைய இருக்கிறது என்று நான் நினைத்தேன்….
அமைதியான, நேர்மையான, கண்டிப்பான நிர்வாகம். சாராயம், கள், பீடி, சிகரெட், போதைப்பொருட்கள், சண்டை சச்சரவு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ரவுடித்தனம் – எல்லாம் பற்றி நினைத்தே பார்க்காத மக்கள் / நிர்வாகம்,
கட்டுப்பாடான காவல் படை, ஜாதி,மதபேதமற்ற சமுதாயம்… இருப்பதை அனைவருக்கும் பங்கு போட்டுக் கொடுத்த ஆட்சிமுறை –
குறைவாக இருந்தாலும், மக்கள் நிறைவாக வாழ்ந்த காலம் அது….
இந்தியாவில் இத்தகைய ஒரு பொற்காலம் எப்போதாவது வருமா என்று அந்த நாட்களில் நான் நினைத்ததுண்டு. ஆனால், குறை ஆயுளில் கலைந்து போனது அந்த ஆட்சி….
என்னென்னவோ நடந்து விட்டது….
தற்போது, இலங்கை முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையை
எதிர்கொண்டிருக்கிறது…
இரண்டு நாட்களுக்கு முன்னர் வட மாகாண முதலமைச்சர்
திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மனம்திறந்து வெளிப்படையாக அனுப்பி இருக்கும் செய்தியிலிருந்து சில பகுதிகள் கீழே –
(https://www.bbc.com/tamil/sri-lanka-44713488)
இன்று “பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமுடியாது” என இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திங்கள்கிழமையன்று
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்றைய சூழலில்
தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடையது முக்கிய நோக்கம் என சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார்.
அது, மத்தியில் உள்ள அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி, சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அவரது கருத்து தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“நாங்கள் எங்கள் உரிமைகள் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ
பேசும் போது எம்மைப் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் அழைப்பதை நிறுத்துமாறு கோருகின்றேன். வடமாகாணத்தின் தற்காலப் பாதுகாப்பற்ற நிலையையும் முன்னைய பாதுகாப்பான நிலையையும் பற்றி விமர்சிக்க எவருக்கும் உரிமை உண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“நான் விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொண்ட கூட்டத்தில் இருந்தேன். ஆனால் கௌரவ விஜயகலா கூறிய சொற்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஒலிவாங்கியில் ஏதோ பிழை இருந்தது. பின்னர் அவரிடமே கேட்டறிந்தேன். இன்றைய பாதுகாப்பற்ற நிலை மாறி பாதுகாப்பான சூழல் ஏற்பட வேண்டும் என்று அவர் கூறியதில் என்ன பிழை என்று எனக்குத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“முன்பு எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள் என்பது உண்மை. போர்க்காலத்தில் ஒரு பெண் தனிமையில் நகை நட்டு அணிந்து கொண்டு சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வீடு நோக்கி நடந்து சென்றால் அவருக்கு எந்தத் தொந்தரவோ பாதிப்போ ஏற்படாதிருந்தது என்பது உலகறிந்த உண்மை.
இன்று அப்படியா? வாள்வெட்டு, வன்புணர்ச்சி, வன்செயல்கள், போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து வருகின்றன. இலஞ்ச ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன. அதனால்தான் நான் இராணுவத்தைத் திரும்ப அழையுங்கள், பொலிஸ் அதிகாரங்களை எமக்குத் தாருங்கள். சகல வன்முறைகளையும் நிறுத்திக் காட்டுகின்றோம் என்று கூறியுள்ளேன்” என அந்த அறிக்கையில் ஆவேசமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
“எமது பேச்சுக்களை விமர்சிக்காமல் எங்களுடன் ஒற்றுமையாகப் பேச
முன்வாருங்கள். சமஸ்டி அரசியல் அமைப்பொன்றை நிறுவ முன்வாருங்கள் என்று தெற்கத்தைய அரசியல்வாதிகளிடம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்”
“அத்துடன் அந்த நாள் இன்று வந்திடாதோ என்று கௌரவ விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிட முடியாது. புலிகள் காலத்தில் எம் மக்கள் (யுத்தத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களை விட) பொதுவாகப் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை.
ஆகவே கௌரவ விஜயகலா தனது கடமைகளைத் தொடர்ந்து பணியாற்ற அவரின் கட்சி இடமளிக்க வேண்டும். அவர் தேசியக் கட்சியில் இடம்பெறுவதால் தமிழச்சி என்ற அந்தஸ்தை இழந்தவராகக் கணிக்கக்கூடாது. கௌரவ விஜயகலா அவர்களின் சுதந்திரமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று தனது அறிக்கையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருக்கிறார்.
தனது கட்சியைச் சேர்ந்த விஜயகலா மகேஸ்வரன் சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்த நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அறிக்கை அந்த சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது.
————————————————————————-
நம்பியிருந்த அரசியல்வாதிகள் அனைவரும்
பதவி சுகங்களின் பின்னே போனபிறகு,
இன்றைய தினம் தமிழ் ஈழ மக்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் – ஒரே நம்பிக்கை நட்சத்திரம் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் தான்…
அவர் அடிப்படையில் ஒரு அரசியல்வாதி இல்லை என்பது தான் அதற்கான காரணமென்று தோன்றுகிறது….
.
—————————————————————————————————————
ஜனநாயகம் என்பது, இரண்டு கட்சிகள்தான் அனுமதிக்கப்படும், அதாவது வேறுபட்ட இரண்டு கொள்கைகள்தான், அதில் ஏதாவது ஒன்றை மக்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும் என்பது. இதுதான் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று நினைக்கிறேன்.
நிறைய கட்சிகள், குட்டிக் கட்சிகள், தலைவர்கள் (வியாபாரிகள்) இருப்பதால்தான் நம் நாட்டில் ஜனநாயகம் அவ்வளவாகத் தழைத்தோங்குவதில்லை. பெரிய பிரச்சனை வரும்போதுதான், மக்கள் எல்லோரும் (அனேகமா) குட்டிக் கட்சிகள்/தலைவர்களைப் புறக்கணித்துவிட்டு ‘பிரச்சனையை’த் தீர்க்கும் கட்சிக்கே முழுமையாக வாக்களிக்கின்றனர். மற்ற சமயங்களில் வாக்குகள் பிரிவதால் மக்கள்தான் அவதியுறுகின்றனர்.
ஈழத்திலும் இந்தப் பிரச்சனைதான் தமிழர்கள் முன்னேற முடியாமல் இருப்பதற்குக் காரணமோ? (அதாவது, சிங்களக் கட்சி, தமிழர் கட்சி என்று இரண்டு கட்சிகள் இல்லாமல், தமிழர்களிடையே ஏகப்பட்ட கட்சிகள்/தலைவர்கள் இருப்பது)
தமிழன்,
நீங்கள் சொல்வது சரியே.
ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒரே தலைமையின் கீழ் திரண்டால் தான்
bargaining power கிடைக்கும். தனித்தனியே 10 கட்சிகளை
வைத்துக் கொண்டு எதைச்சாதிக்க முடியும்….?
-காவிரிமைந்தன்
பிங்குபாக்: முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் – அற்புதமான, வரவேற்கத்தக்க கருத்து …. – TamilBlogs
“தலைவர் பிரபாகரன் நிர்வாகத்தில் தமிழ் ஈழம் இருந்த (கொஞ்சமே) நாட்களில், அங்கிருந்த நிர்வாக கட்டமைப்பை கண்டு உலகம் கற்றுக் கொள்ள வேண்டியது இவர்களிடம் நிறைய இருக்கிறது என்று நான் நினைத்தேன்…” அப்படித் தான் சிறப்பாக நிர்வாகம் இருந்ததை நானும் உறுதிப்படுத்துகிறேன்.
இலங்கையில் இருந்து யாழ்பாவாணன்