கொலைப்பழியுடன் சிறை சென்ற MKT + NSK -யின் விதியும், கதியும், ((பகுதி-5) – ( மா.உ – மு.கே…)


(பகுதி-5) மாயா உலகம் – முடிவில்லாத கேள்விகள்…..
கொலை வழக்கில் சிறை சென்ற MKT பாகவதர்+NSK ஆகியோரின்
விதியும், கதியும் ….

——————-

1940-களில் தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் MKT பாகவதர் தான். அவருடைய கணீரென்ற குரலுக்கு மட்டுமல்லாமல், மனதைக் கவரும்
தோற்றத்திற்கும் மக்கள் அடிமைப்பட்டு கிடந்தனர்.

இன்றைய, செல்போன், வீடியோ, டெலிவிஷன், போன்ற டெக்னாலஜி எதுவும் அன்று இல்லை… கிராமபோன் இருந்தால், ரிக்கார்டுகளில் குரலை மட்டும் கேட்கலாம். உருவத்தையும் பார்க்க வேண்டுமானால், திரைப்படங்களை பார்த்தால் தான் உண்டு. எனவே, பாகவதர் நடித்த திரைப்படங்கள் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஓடின…

திரையில் பாகவதரை பார்த்தாலே போதும் – மக்கள் மெய் மறந்து கிடந்தனர். பாகவதர் நடித்த ஹரிதாஸ் படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 110 வாரங்கள் ஓடிய சாதனையை இன்று வரை வேறு எந்த தமிழ்ப்படமும் முறியடிக்கவில்லை….

1944 அக்டோபர் 16-ந்தேதி திரையிடப்பட்ட படம், 1944, 1945 மற்றும் 1946 என்று 3 தீபாவளிக்கும் தொடர்ச்சியாக அந்த தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது…

அவர் நடித்து வெளியான சிந்தாமணி படத்தைத் திரையிட்ட ராயல் டாக்கீஸ், அதில் கிடைத்த வசூலை வைத்தே சொந்தமாக தியேட்டர் ஒன்றை வாங்கி அதை சிந்தாமணி தியேட்டர் என்று பெயரிட்டது. .

அவர் குரல் மட்டுமல்ல, சிகையலங்காரமும் அந்தக்கால இளைஞர்களியே பிரபலம் அடைந்திருந்தது. பாகவதர் ஸ்டைல்…! அதற்கு முன்னதாக தமிழ்த் திரையுலகை இவர் அளவுக்கு ஆட்டி வைத்தவர் வேறு யாருமில்லை…

செல்வத்தில் மிதந்தார்….
தங்கத் தட்டில் உணவு உண்கிற அளவிற்கு வசதி…
ஹரிதாஸ் படம் ரிலீசாகி ஹிட்’ ஆனவுடன்,
உடனடியாக அவருக்கு 12 படங்கள் புக்’ ஆயின….
தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் பணத்துடன்
அவர் வீட்டு வாயிலில் காத்துக் கிடந்தனர்…

ஆனால், எத்தனை நாளைக்கு…..?

இத்தனை புகழும், செல்வமும் பெற்ற அவரது வாழ்க்கை ஒரே நாளில்,
ஒரு கொலைவழக்கினால் – தலைகீழானது….

NS கிருஷ்ணன் – அதே சமகாலத்தில், பிரபலமாக இருந்த இன்னொரு நடிகர்…பிற்காலத்தில் கலைவாணர் என்று அழைக்கப்பட்ட NSK மேடை நாடகம், வில்லுப்பாட்டு, திரையுலகம் என்று பல துறைகளிலும் பிரசித்தி பெற்றவர். திரைப்படத்தில் தான் பங்குபெறும் நகைச்சுவை காட்சிகளுக்கு தானே வசனமும் எழுதி காட்சிகளும் அமைப்பார். பல படங்களில் இவருக்கு ஜோடியாக பெண் கதாபாத்திரத்தில் நடித்த டி.எம்.மதுரம், NSK-யின் நிஜ வாழ்க்கையிலும் துணைவியாக ஆனார்.

திரைவானில் வெற்றிக்கொடிகட்டி பறந்து கொண்டிருந்த இவர்களது
வாழ்க்கையையும் அதே கொலை வழக்கு தாக்கி சின்னாபின்னமாக்கியது.

‘சினி கூத்து’ என்கிற பெயரில், சினிமா பத்திரிகை நடத்துகிறேன் என்று
சொல்லி ஒரு மஞ்சள் பத்திரிகையை நடத்தி வந்தான் லட்சுமிகாந்தன் என்கிற ஒரு ஆசாமி.

சினி கூத்தில் சினிமாவைப்பற்றிய விமர்சனம் மட்டுமல்லாது சினிமாக்காரர்களைப் பற்றிய விமரிசனமும் இடம்பெற்றது. எந்த நடிகருக்கும் எந்த நடிகைக்கும் தொடர்பு போன்ற ‘சுவாரஸ்யமான’ செய்திகள், பரபரப்பான கிசுகிசுக்கள் இதில் இடம் பெற்றன. நடிகர், நடிகைகளுடைய ‘தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்கள்’ என்ற பெயரில் பல கற்பனையும், உண்மையும் கலந்த கட்டுரைகள் அதில் அச்சேற்றப்பட்டன.

அதனால் பல நடிகர், நடிகைகளின் சமூக அந்தஸ்துக்கு மிகமோசமான பங்கம் ஏற்பட்டது.

லட்சுமிகாந்தனின் இந்த அடாவடிக்கு முற்றுப்புன்னகை வைக்க,
தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன், கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவின் உரிமையாளரும் இயக்குனருமான ஸ்ரீராமுலு நாயுடு
ஆகிய மூன்று பேரும் சேர்ந்து –

அப்போதைய சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஆர்தர் ஆஸ்வால்ட் ஜேம்ஸ் ஹோப் என்பவரிடம், லட்சுமிகாந்தனுக்கு சினி கூத்து பத்திரிக்கை
நடத்த வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என்று வேண்டி ஒரு மனுவைச் சமர்ப்பித்தனர். ஆளுநரும் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று, லட்சுமிகாந்தனுக்கு வழங்கப்பட்ட பத்திரிகை உரிமத்தை ரத்து செய்தார்.

ஆனால், லட்சுமிகாந்தன் இதோடு தன்னுடைய நடவடிக்கைகளை
நிறுத்திக்கொள்ளவில்லை. ஏற்கெனவே இயங்கி வந்த ‘இந்து நேசன்’ என்ற வேறொரு பத்திரிகையை விலைக்கு வாங்கி,
அதில்மீண்டும் தனது கிசுகிசுக்களை தொடர்ந்தான்…..

இதில் ஒரு வித்தியாசமாக – தனது கிசுகிசுக்களில் சினிமாக்காரர்கள்
மட்டுமல்லாமல் சமுதாயத்தில் உள்ள அந்தஸ்தான பெரும்புள்ளிகள்,
தொழில் அதிபர்கள் என்று பலரைப்பற்றிய ரகசியங்களையும்,
இட்டுக்கட்டப்பட்ட பொய்ச்செய்திகளையும், கிசுகிசுக்களையும் எழுதித்
குவித்தான்….

லட்சுமிகாந்தன் எழுதும் கிசுகிசுக்களுக்கு பயந்தவர்கள், அவனுக்கு ஏகப்பட்ட பணத்தை வாரி வழங்கினர். விளைவு – லட்சுமிகாந்தன் சொந்தமாக ஒரு அச்சகத்தையே விலைக்கு வாங்கிவிட்டான்.

தனக்கு எதிராக கவர்னரிடம் புகார் கொடுத்த தியாகராஜ பாகவதர்,
என்.எஸ்.கிருஷ்ணன், ஸ்ரீ ராமுலு ஆகியோர் மீது நிறைய கிசுகிசுக்களை
எழுதத் துவங்கினான். அந்தக் காலகட்டத்தில் இந்த மூன்று பேரைத் தாண்டி, லட்சுமிகாந்தனின் கிசுகிசுக்களால் பாதிக்கப்பட்ட பல சமூக அந்தஸ்துள்ள பிரமுகர்கள் அவனுக்கு எதிரிகளாயினர்….

இந்நிலையில், 1944 ஆம் ஆண்டு லட்சுமிகாந்தன் தன்னுடைய வழக்கறிஞர் நண்பர் வீட்டுக்குச் சென்று விட்டு சைக்கிள் ரிக்ஷாவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது சென்னை வேப்பேரி அருகே வந்து கொண்டிருக்கையில் அடையாளம் தெரியாத சிலர் அவனைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்று விட்டனர்.

கத்திக்குத்து காயத்துடன் அவன் மருத்துவமனைக்குச் செல்லாமல் அவனுடைய வழக்கறிஞர் நண்பர் வீட்டிற்குச் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தான். அவனுடைய நண்பர் அவனை மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். கூடவே தன்னுடைய ஜூனியரையும் லட்சுமிகாந்தனுக்கு துணையாக அனுப்பி வைத்தார்.

ஆனால் லட்சுமிகாந்தன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில்,
வேப்பேரி காவல் நிலையத்துக்குச் சென்று, நடந்த
சம்பவங்களைப் பற்றிப் புகார் ஒன்றை கொடுத்தான்.

தன்னை அடையாளம் தெரியாத யாரோ குத்திவிட்டதாகத்தான் தெரிவித்தான். தியாகராஜ பாகவதரையோ என்.எஸ்.கிருஷ்ணனையோ புகாரில் குறிப்பிடவில்லை.

கத்திக்குத்துக்குப் பிறகும், இவ்வளவு நடவடிக்கைகளை அவன்
மேற்கொண்டிருப்பதால், அந்த காயம் அவ்வளவு
சீரியசானதாக இல்லை என்றே யூகித்துக் கொள்ளலாம்.

மருத்துவமனையிலும் அவன் புறநோயாளியாகத்தான் அனுமதிக்கப்பட்டான். காவல் நிலையத்திலும் மருத்துவமனையிலும் அவன் எந்தவிதக் கவலையும் இல்லாமல் காணப்பட்டான். நகைச்சுவை உணர்வுடன் இருந்ததாகவும் சொல்வார்கள்.

மருத்துவமனையில் தனக்கு சிகிச்சை அளித்தவர்களிடம்
லட்சுமிகாந்தன் ஒரு கொலை விஷயத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறான். அப்போதைய காலகட்டத்தில், தனுஷ்கோடியிலிருந்து சென்னைக்கு வந்த போட் மெயில் ரயிலில், தேவகோட்டையைச் சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் கொலை
செய்யப்பட்ட சம்பவம் அது.

அந்தக் கொலையில் ஒரு பிரபல சினிமா நடிகை சம்மந்தப்பட்டிருப்பதாகவும், கொலை நடந்த ரயிலில் அவள் பயணம் செய்ததாகவும், கொன்ற பிறகு, ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டதாகவும் லட்சுமிகாந்தன் சொன்னான்.
அந்த நடிகைக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் அவள் மீது எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தான். தகுந்த
ஆதாரங்களைக் கொண்டு அந்த நடிகையைச்
சிக்கவைக்கப் போகதாகவும் கூறி இருக்கிறான்.

ஆனால் – மறு நாள் விடியற்காலையில் எதிர்பாராத விதமாக
லட்சுமிகாந்தன் உயிரிழந்தான். அதனையடுத்து, லட்சுமிகாந்தனை யார்
கொன்றிருக்கக்கூடும் என்னும் கேள்வி எழுந்தபோது, தியாகராஜ
பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன், பஷிராஜா ஸ்டுடியோ
ஸ்ரீராமுலு நாயுடு ஆகிய மூவரையும் (அவர்களுக்கு துணையாக இருந்ததாக இன்னும் 5 நபர்களையும் ) அதற்குப் பொறுப்பாளிகளாக்கியது காவல் துறை.

அதைத் தொடர்ந்து அந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது
கூட்டுச்சதி, கொலைக் குற்றம் ஆகியவற்றை முன்வைத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

..

..
குற்றவாளிகளுக்குப் பிரபல வழக்கறிஞர்கள் ராஜாஜி, வி.டி. ரங்கசாமி
ஐயங்கார், கோவிந் சாமிநாதன், கே.எம்.முன்ஷி, பி.டி.சுந்தர்ராஜன்,
சீனிவாச கோபால் மற்றும் பிரேடல் ஆஜரானார்கள்.

நீதிபதி மாக்கெட் தலைமையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

வழக்கு நடந்த சமயத்தில் ஜூரி முறை இருந்தது. (தற்போது, இந்தியாவில் இந்த ஜூரி முறை நடைமுறையில் இல்லை….)

ஜூரி முறை மேற்கத்திய நாடுகளில் அப்போது மிகவும் சகஜம்.
ஜூரி முறையில், பொது மக்களிலிருந்து 12 நபர்களைத் தேர்ந்தெடுத்து
ஒரு நடுவர் குழு அமைக்கப்படும். வழக்கு விசாரணையின் போது
நீதிபதியுடன் சேர்ந்து இந்த நடுவர் குழுவும் சேர்ந்து விசாரிக்கும்.
விசாரணை முடிவடைந்த பிறகு – குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளியா
அல்லது நிரபராதியா என்று இந்த நடுவர் குழு தான் தங்களுக்குள்
கூடி விவாதித்து முடிவெடுக்கும். அந்த முடிவை வைத்து நீதிபதி தகுந்த
தீர்ப்பை அளிப்பார்.

வழக்கு விசாரணையில் பங்கு கொண்ட நடுவர் குழு விசாரணையின் இறுதியில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் குற்றவாளிகள் தான் என்று யாரும் எதிர்பார்க்காத ஒரு தீர்ப்பை வெளியிட்டது.

..

..
அதே சமயம் ஸ்ரீராமுலு நாயுடு, குற்றம் ஏதும் இழைக்கவில்லை என்ற
முடிவையும் நீதிபதிக்குத் தெரிவித்தது. நடுவர் குழுவின் முடிவின்படி நீதிபதி, தியாகராஜ பாகவதருக்கும், என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் ஆயுள் முழுவதும் நாடு கடத்தப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். (சுதந்திர இந்தியாவில், இந்த நாடு கடத்தும் முறை அமலில் இல்லை…)

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

மேல் முறையீட்டிலும் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

.

( நாளைய தினம் (பகுதி-6-ல்) இதை தொடர்கிறேன்……)

இதற்கு முந்தைய பகுதியை பார்க்க …..

.
——————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to கொலைப்பழியுடன் சிறை சென்ற MKT + NSK -யின் விதியும், கதியும், ((பகுதி-5) – ( மா.உ – மு.கே…)

  1. பிங்குபாக்: கொலைப்பழியுடன் சிறை சென்ற MKT + NSK -யின் விதியும், கதியும், ((பகுதி-5) – ( மா.உ – மு.கே…) – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.