தேவை இன்னும் பல என்கவுண்டர்கள் ……


நேற்றிரவு, சென்னையில் ரவுடி ஆனந்தன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதை வரவேற்று எழுதி இருந்தேன்….

தமிழக மக்கள் அமைதியாக வாழவேண்டுமானால், இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்றும், சட்டத்தை கிள்ளுக்கீரையாக நினைத்து அட்டகாசம் செய்யும் ரவுடிகளை அடக்க தேவைப்பட்டால் மேலும் சில என்கவுண்டர் நடவடிக்கைகளையும் காவல் துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட எழுதியிருந்தேன்.

குறைசொல்லும் “போலி” மனித உரிமை ஆர்வலர்களையும்,
இந்த ரவுடிகளிடம் பணம் வாங்கித் தின்னும் கிரிமினல் லாயர்களையும்
பற்றி கவலைப்படாமல் காவல்துறை செயல்பட வேண்டும் ….
உண்மையான, அவசியமான என்கவுண்டர்களை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் எழுதியிருந்தேன்.

அதை நியாயப்படுத்துவது போல், மற்றொரு கிரிமினல் நிகழ்வு நிகழ்ந்துள்ளது இன்று செய்திகளில் வெளியாகியுள்ளது….
அந்த செய்தி கீழே –

————————————————————

துப்பாக்கி முனையில் ரவுடிகள் கைது : சினிமாவை மிஞ்சிய போலீசாரின்
அதிரடி நடவடிக்கை

ஜூலை 05, 2018 00:37

சென்னை: லாரி அதிபரை கடத்தி, 25 லட்சம் ரூபாய் கேட்டு, அவரது நகத்தை பிடுங்கி சித்ரவதை செய்த, ரவுடி கும்பலை, துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, செங்குன்றம் அடுத்த, பாடியநல்லுாரைச் சேர்ந்தவர், கணேசன், 55; சொந்தமாக லாரி வைத்துள்ளார்.

ஜூலை, 2ம் தேதி இரவு, 8:30 மணிக்கு, போலீஸ் சீருடை அணிந்து வந்தவர் உட்பட நான்கு பேர், ‘விசாரணை’ என அழைத்து, கணேசனை, ‘இனோவா’ காரில் கடத்தினர்.

அவரிடம், 25 லட்சம் ரூபாய் கேட்டு, ‘கட்டிங் பிளேயரால்’ விரல் நகத்தையும் பிடுங்கி சித்ரவதை செய்துள்ளனர்.

கும்முடிப்பூண்டியில் காரை நிறுத்திய மர்ம நபர்கள், கணேசனின் அலைபேசியில் இருந்து, அவரது உறவினர் ராமச்சந்திரனிடம் பேசி, ஏழு லட்சம் ரூபாய் பெற்றனர். ‘மீதி தொகையை உடனடியாக ஏற்பாடு செய்; போலீசாரிடம் தெரிவித்தால், கணேசனை பிணமாகத்தான் பார்க்க முடியும்’ என மிரட்டினர்.

இதற்கிடையே, நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு, கணேசன் கடத்தப்பட்ட விபரம் தெரிய வந்தது. அந்த பகுதியில் உள்ள, கண்காணிப்பு கேமரா பதிவுகளிலும், துப்பு கிடைக்கவில்லை. அவரது அலைபேசியும், ‘சுவிட் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.மேலும், ராமச்சந்திரனின் நடவடிக்கையிலும்,
போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை, போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.

இதற்கிடையே, இரவு முழுவதும், கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு என, பல இடங்களில் சுற்றிய மர்ம நபர்கள், நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு, ராமச்சந்திரனை தொடர்பு கொண்டு, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த, கனகம்பட்டு கிராமத்திற்கு, பணத்துடன் வருமாறு கூறினர். பின், காஞ்சிபுரம் மாவட்டம், அனுமந்தபுரம் கிராமத்திற்கு அழைத்துள்ளனர்.

ராமச்சந்திரனும், நேற்று முன்தினம் இரவு, பணத்துடன் காரில் அனுமந்தபுரத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அவருக்கே தெரியாமல்,
சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர், பிரேம் ஆனந்த் சின்ஹா
தலைமையிலான தனிப்படை போலீசார், ராமச்சந்திரனின் மொபைல்
போன் சிக்னல் டவரை ஆய்வு செய்து, பின் தொடர்ந்தனர்.

இரவு, 8:30 மணிக்கு, அனுமந்தபுரத்தில், ராமச்சந்திரனிடம் இருந்து, மர்ம
நபர்கள் பணத்தை வாங்க முயன்றபோது, புழல் உதவி கமிஷனர் பிரபாகரன், புதுவண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜவஹர், புழல் எஸ்.ஐ., சதீஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், துப்பாக்கி முனையில், நான்கு பேரை கைது செய்தனர்.

கணேசன், பத்திரமாக மீட்கப்பட்டார். விசாரணையில், வட சென்னை மற்றும் செங்குன்றத்தைச் சேர்ந்த, பயங்கர ரவுடிகள், சுமன், 39, மதன்குமார், 27, கணேஷ், 27, அசோக், 35, என்பது தெரியவந்தது. இதில் சுமன் தான், போலீஸ் போல நடித்துள்ளான்.கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட, ரவுடி கும்பல் தலைவன், செங்குன்றம் அடுத்த வடகரைச் சேர்ந்த, சக்தி, 49, மற்றும் அவனது
கூட்டாளிகள் நான்கு பேர், வண்டலுார் அருகே பதுங்கி இருப்பது
தெரியவந்தது.இதையடுத்து, இரவு, 10:30 மணிக்கு, சக்தி மற்றும் அவனது
கூட்டாளிகளையும், போலீசார், துப்பாக்கி முனையில் பிடித்தனர். ரவுடி
கந்தன் தப்பிவிட்டார்.

இவர்களிடம் இருந்து, ஏழு லட்சம் ரூபாய், பட்டா கத்திகள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளன. வடகரை சக்தி யார் -வடக்கு மண்டல கூடுதல்
கமிஷனர் ஜெயராம் கூறியதாவது: வடகரை சக்தி மீது, கொலை உட்பட
13 வழக்குகள் உள்ளன. இவரது உறவினர்கள் வடைக்கடை
வைத்திருந்துள்ளனர். இதனால் ‘வடகடை சக்தி’ என அழைக்கப்பட்டவர்,
பின் ‘வடகரை சக்தி’ என மருவியது.

கைதானவர்களில் சிவா என்பவர் 12 வயதில் கணேசன் வீட்டில் வேலை
செய்துள்ளார். இவர் தான் ‘கணேசனை கடத்தி பணம் பறிக்கலாம்’ என
சுமனிடம் தெரிவித்துள்ளார். அதற்காக கணேசன் செல்லும் இடங்களை
சிவா ஒரு வாரமாக கண்காணித்து வந்தார். இதையடுத்து கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

(http://www.dinamalar.com/news_detail.asp?id=2055076)
——————————————————————————————————-

மிக வேகமாகவும், திறம்படவும் பணியாற்றி, இந்த கொடும் ரவுடி கும்பலை மடக்கிப் பிடித்த காவலர் குழுவிற்கு நமது வலைத்தளத்தின் சார்பில் பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த செய்தியை படிக்கும் ஒவ்வொருவரும், இதே சம்பவம் தனக்கோ,
தன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கோ நிகழ்ந்திருந்தால், தான் எந்த
அளவிற்கு பாதிக்கப்பட்டிருப்போம் என்கிற கோணத்தில் சிந்திக்க வேண்டும்.

அவர்களில் மோசமான இரண்டு பேரை அங்கேயே காவல்துறை “போட்டுத்தள்ளி” இருந்தால் சமுதாயத்திற்கு இன்னும் பலனுள்ளதாக இருந்திருக்கும்.

சமூகப் பொறுப்பில்லாத ‘சன்’டிவியில் நேற்றிரவு,
விவாத மேடை என்கிற பெயரில் “மனித உரிமை மீறல்” என்று ரவுடி ஆனந்துக்கு வக்காலத்து வாங்கி சில கூலிகள் காசுக்கு மாரடித்தன…
அவர்கள் இந்த சம்பவத்திற்கு மக்களிடம் என்ன விளக்கம் சொல்வர்கள்…?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to தேவை இன்னும் பல என்கவுண்டர்கள் ……

  1. பிங்குபாக்: தேவை இன்னும் பல என்கவுண்டர்கள் …… – TamilBlogs

  2. புதியவன் சொல்கிறார்:

    இந்த மாதிரி விஷயங்களில் ‘மனித உரிமை’, ‘விலங்கு உரிமை’ போன்றவற்றைப் பார்ப்பது எனக்கு ஏற்புடைய ஒன்றல்ல. என்னைப் பொறுத்தவரையில், ‘வேலை வெட்டி இல்லாதவர்கள்’தான் இதனைப் பற்றி விவாதித்து, ‘மனித உரிமை மீறல்’ ‘விலங்குகளின் உரிமை’ என்றெல்லாம் புலம்புவார்கள். காவல் துறையிலும் கருப்பு ஆடுகள் இருக்கலாம், இருந்தபோதும் சமூக நலனுக்காக அவர்கள் செய்யும் இந்த மாதிரி என்கவுண்டர்களை (இதில் என்கவுண்டர் நடக்காதபோதும்) பொதுமக்கள் வரவேற்கவேண்டும். ரவுடிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் காவல் துறையினரைப் பார்த்து பயம் இருக்கவேண்டும். 100 என் கவுண்டரில், 5 தவறாக முடியலாம், ஆனால், ரவுடியைச் சுற்றி உள்ள அவர்களது உறவினர்களும், அவனுடைய ரவுடித்தனத்தால் நன்மை அடைவதால் அவர்கள் பாதிப்படைந்தாலும் கவலைப்படக்கூடாது.

    25 வயதில் கடத்தல் கும்பல், டிரக்ஸ் விற்பவன்லாம் என்றைக்குத் திருந்துவது? இவர்களுக்கு சிறைச்சாலையில் இடத்தை ஒதுக்குவதை விட, அப்போதே என்கவுண்டர் செய்வது நல்லதுதான். பாப்புலர் ஒபினியனுக்காக, ‘அவர்களும் மனிதர்களே, திருந்துவார்கள்’ என்று சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது. இன்றைக்கு அவனவனே தன்னைத் திருத்திக்கொள்ள ஏகப்பட்ட விஷயம் இருக்கும்போது யாருக்கு அடுத்தவரைத் திருத்துவதற்கு நேரம் இருக்கு. ரவுடி கும்பலில் மெம்பர் என்றால், அவனைக் கண்டுபிடித்தபோதே என்கவுண்டர் செய்வது நல்லதுதான்.

    விலங்குகளைக் கொல்வது, புலால் உண்பது நல்லது. ஆனால், தெரு நாய்களைக் கொல்லக்கூடாது, ஜல்லிக்கட்டு கூடாது, சேவல் சண்டை கூடாது என்று சொல்லும் ‘விலங்கு நல ஆர்வலர்களைக் கண்டு எனக்குச் சிரிப்புதான் வருகிறது. எந்த விலங்கையும் கொல்லக்கூடாது, அஹிம்சைதான் நல்லது என்று சொன்னால் அர்த்தம் இருக்கு. கொன்று சாப்பிடலாம், ஆனால் துன்புறுத்தக்கூடாது என்பது என்ன மாதிரி லாஜிக்? அவ்வளவு ஆர்வம் இருப்பவர்கள், தங்கள் தங்கள் வீட்டில் தெரு நாய்கள் 50ஐ வளர்த்து, தெருவில் நாய்கள் இல்லாதபடி பார்த்துக்கொள்வதுதானே.

    திரைப்படங்களும், ‘ரவுடி’களின்மீது பெண்களுக்கு காதல் வருவதுபோல் எடுத்து சமூகச் சீரழிவுக்கு வித்திடக்கூடாது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.