சிறையில் அடைக்கப்பட்ட புகழ்பெற்ற நட்சத்திரங்கள் …. (பகுதி-4) – ( மா.உ – மு.கே…)


சிறையில் அடைக்கப்பட்ட புகழ்பெற்ற நட்சத்திரங்கள் ….
( பகுதி -4– மாயா உலகம் – முடிவில்லாத கேள்விகள் …)

—————

இந்த தலைமுறை இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லாத சில சுவாரஸ்யமான விஷயங்களையும் இந்த தொடரில் ஆங்காங்கே சொல்ல விரும்புகிறேன்.

வெறும் தத்துவ விசாரணைகளை மட்டுமே மேற்கொண்டால்,
இறுதியில் இந்த இடுகைத்தொடரை
நானும், நண்பர் அப்பண்ணசுவாமியும் ( 🙂 🙂 )
மட்டும் தான் படித்துக் கொண்டிருப்போம் என்பதை நான்
நன்கு அறிவேன் என்பதால், ஆங்காங்கே திடீரென்று சுவாரஸ்யமான
திருப்பங்கள் வரும் என்பதை அறிக…..!

———————-

கர்மா அதாவது வினைப்பயன் –

ஒருவன் ஒவ்வொரு பிறப்பிலும் செய்யும்
நல்வினைகள்(புண்ணியம்),
தீய வினைகள் (பாவம்) – ஆகியவை

– இயற்கை விதித்த விதியால் கணக்கில் கொள்ளப்படுகின்றன.

புண்ணியம் என்பது ஒருவனது வங்கிக் கணக்கில்
சேரும் “சேமிப்பு” போன்றது…

பாவம் என்பது அவன் வங்கியில் வாங்கும் “கடன்” போன்றது…

சேமிப்பு கூடுதலாக இருந்தால், அடுத்த பிறவி சிறப்பானதாகவும்,
கடன் கூடுதலாக இருந்தால், அடுத்த பிறவி மோசமானதாகவும்
இருக்கும் என்பது அடுத்த நம்பிக்கை….

….

சனாதன தர்மம் இதை பிரபஞ்ச நியதி என்று வரையறுக்கிறது…
( ஒரு நண்பர் கூட ஏற்கெனவே ஒரு பின்னூட்டத்தில் சித்தர்களின் நியதி
என்பது குறித்து விளக்கமாக எழுதி இருந்தார்….)

கர்மா என்கிற பிரபஞ்ச நியதி, காரணம் மற்றும் விளைவு ஆகிய இரண்டின் அடிப்படையில் செயல்படுகிறது.

நன்மையை விளைவிக்கும் செயல் புண்ணியம் என்றும்,
தீமையை விளைவிக்கும் செயல் பாவம் என்றும் கொள்ளப்படும்.

கர்மா 3 வகைப்படுகிறது….

ஒன்று – முந்தைய பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள –
நல்ல மட்டும் தீய கர்மாக்களின் மொத்த வடிவம் –
அதாவது sum total of earlier births. ( plus as well as minus ) –
இதை சஞ்சித கர்மா என்று சொல்கிறார்கள்.

இரண்டு – இப்படி சேர்த்து வைக்கப்பட்டு,
இந்த பிறப்பின் துவக்கத்தில் ஒருவன் சுமந்துகொண்டு
வந்துள்ள மொத்த சஞ்சித கர்மாவிலிருந்து
ஒரு பகுதி இந்த பிறப்பில் அனுபவிப்பதற்கு என்று ஒதுக்கப்படுகிறது..
அதாவது EMI for the current birth.
இதை பிராரப்த கர்மா என்று சொல்கிறார்கள்.
இதில் நல்லதும் (awards- உம்) உண்டு;
கெட்டதும் (punishments -உம்) உண்டு. இவையெல்லாவற்றையும்
நாம் இந்த பிறப்பில் அனுபவித்தே கழிக்க வேண்டும்…!!!

மூன்று – இந்த பிறப்பில் ஒருவன் செய்யும் நல்ல மற்றும்
தீய செயல்களின் மொத்த வடிவு…
( sum total of activities during this birth )
இதை ஆகாமி கர்மா என்று சொல்கிறார்கள்…
இந்த பிறப்பின் இறுதியில் இந்த கணக்கு முடித்து வைக்கப்பட்டு
இதன் மொத்தமும் –
பல பிறப்புகளாக நாம் சுமந்து கொண்டு வரும் சஞ்சித கர்மா’வோடு
சேர்த்து இணைக்கப்பட்டு, அடுத்த பிறப்புக்கு எடுத்துச் செல்லப்படும்….

இவற்றை எல்லாம் எப்படி நம்புவது….?
என்று கேட்கலாம்…
அந்த உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு..
இதையெல்லாம் scientific theories போல் நிரூபிக்க வழியில்லை…

நாம் வாழும் வாழ்க்கை தான் சோதனைச்சாலை (laboratory)
இங்கே நமக்கு நேரும் நல்லதும், கெட்டதுமான
அனுபவங்கள் தான் experiments…
ஒவ்வொருவரும் தனக்கு நேரும் அனுபவங்களைக்கொண்டு
இது உண்மையா இல்லையா என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இதற்கு மேல் என்னால் விவரிக்க இயலாது….
நான் இவற்றை ஏறக்குறைய நம்புகிறேன்…
அங்குமிங்குமாக சில தவறான புரிதல்கள் இருக்கக்கூடும்;
ஆனால் original theory -ஐ நான் ஏற்கிறேன்.

இல்லையேல் – வாழ்க்கையில் நாம் சந்திக்கும்
நல்லது கெட்டதுகளுக்கு அர்த்தமே இல்லை….!

இந்த இடுகைத்தொடரின் முந்தைய பகுதிகளில் சொன்னது போல்,
இந்த பிறப்பில் நாம் அறிய எந்த பாவமும் செய்யாத சிலர்
சொல்லவொண்ணா துன்பங்களை அனுபவிப்பதும்….

அயோக்கிய சிகாமணிகள், அமர்க்களமாய்
சகல சௌக்கியங்களுடனும்,
ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதும் எப்படி…?

இது உண்மையாக இருக்குமா என்று சந்தேகப்படுபவர்களுக்கு –

இது உண்மையாகவும் இருக்கலாம்.
உண்மை அல்லாமலும் இருக்கலாம்.
ஆனால் உண்மை என்று வைத்துக் கொள்வதில்
நமக்கு நஷ்டம் ஏதும் இல்லை…
மாறாக லாபம் தான்.

பாவத்திற்கு அஞ்சி, அடுத்த பிறவியை எண்ணி,
மனிதனை நேர்மையாகவும், நியாயமாகவும் செயல்பட வைக்க
இந்த நம்பிக்கை உதவுகிறதே…!

தற்காலத்தில், சட்டத்தின் பிடியிலிருந்து மனிதன் தப்புவது சுலபம்.
நீதிமன்றங்களை ஏமாற்றும் வழிகளையும் மனிதன்
நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறான்.

பணம், செல்வாக்கு, அதிகாரம், அரசியல் அணுகுமுறை என்று
அதற்கு ஏகப்பட்ட வழிமுறைகள் இருக்கின்றன.
நாம் அவற்றை கண்ணெதிரே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால், தவறு செய்பவன், பாவம் செய்பவன் –
சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினாலும்,
நீதிமன்றங்களின் சந்துபொந்துகளில் புகுந்து தப்பித்து விட்டாலும் –

விதியின் வலிய பிடியிலிருந்து அவன் தப்ப முடியாது
என்கிற நிலை ஒன்று (நம்பிக்கை ஒன்று) இருக்குமேயானால்,
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும், தான் செய்யும் பாவங்களுக்கு
தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்றால் –
அந்த பயத்திலாவது மனிதன் ஓரளவிற்கு நியாயமாக நடப்பானல்லவா..?

—————————————————–

சுவாரஸ்யமான, பல வருடங்களுக்கு முன் தமிழகத்தில் நடந்த சம்பவம்
ஒன்றை இன்றைய இளைய சமுதாயத்திற்காக சொல்ல விரும்புகிறேன்.

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் –
ஜொலிக்கும் நட்சத்திரமாக மின்னியது 1940-களில் ……

ஒளியும், ஒலியும் தனித்தனியே பதிவு செய்யும் டெக்னாலஜி இங்கே
அறிமுகம் ஆவதற்கு முன்னர், நன்றாக பாடத்தெரிந்தவர்களுக்கு
மட்டும் தான் இங்கே திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கும்…
பலருக்கு, குரல் நன்றாக இருந்தால் – தோற்றம் சுகப்படாது.
தோற்றம் நன்றாக இருந்தால் – குரல் வளம் இருக்காது;பாட வராது.

இத்தகைய ஒரு சூழ்நிலையில் –
நல்ல பர்சனாலிட்டியும், அற்புதமான குரல் வளமும் –
அத்தனை பேரையும் கவரும் சிகைத் தோற்றமும் உடைய ஒருவர்…..

வெள்ளைக் குதிரையில் ஏறி “வாழ்விலோர் திருநாள்” என்று பாடிக்கொண்டே திரையில் அவர் தோன்றும் காட்சியில் தியேட்டர்கள் அதிர்ந்தன….மூன்று தீபாவளிகள் தொடர்ந்து சென்னையில் பிராட்வே திரையரங்கில் ஓடியது அவரது படம்….

தமிழ்த் திரையுலகின் – ராஜகுமாரனாக அல்ல முடிசூடா மன்னனாகவே
இருந்தார் ….

அவர் –
( இது 74 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வு, படம் என்பதை
நினைவில் கொள்ள வேண்டும்….!!! இல்லையேல் உங்களால்
இதை ரசிக்க முடியாது….. )

.
———————————————————————————————————-
( நாளைய தினம் (பகுதி-5-ல்) இதை தொடர்கிறேன்……)

இதற்கு முந்தைய பகுதியை பார்க்க …..

.
——————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to சிறையில் அடைக்கப்பட்ட புகழ்பெற்ற நட்சத்திரங்கள் …. (பகுதி-4) – ( மா.உ – மு.கே…)

 1. புதியவன் சொல்கிறார்:

  //அயோக்கிய சிகாமணிகள், அமர்க்களமாய் சகல சௌக்கியங்களுடனும்,
  ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதும் எப்படி…?//

  1. மக்களால் வெறுக்கப்பட்டு பல தோல்விகளை அடைந்து நடைப்பிணமாக இருப்பதில்லையா?
  2. கடைசி காலத்தில் தன் பவர் எல்லாம் போய், தன்னுடன் கூட இருந்தவர்களே தனக்கு எதிராகத் திரும்புவதைப் பார்த்து அழுது கண்ணீர் விடச் செய்யவில்லையா?
  3. எவ்வளவு புகழ் பெற்று இருந்தும், எவ்வளவு பணம் இருந்தும், இண்டஸ்டிரி ஆட்களே தன்னைக் கவனிக்காது, படங்கள் இல்லாது, தனிமையிலே வருத்தத்துடன் இருந்ததில்லையா?
  4. ஒய்யார அழகிகளுடன் இன்பமுடன் இருந்தபோதிலும், குடும்பத்துடன் சேரமுடியாமல், எங்கேயோ ஒரு தேசத்தில் அகதிபோல், சொந்த நாட்டில் பலருடைய குற்றச்சாட்டுகளைக் கேட்டுக்கொண்டு இருப்பதில்லையா?

  ஒவ்வொரு பகலுக்கும் ஒரு இரவு உண்டு. ஒவ்வொரு இரவும் நிச்சயம் விடியும்.

  இது (அயோக்கியர்கள் அட்டஹாசமாக இருப்பது) காட்சிப் பிழை என்றுதான் நான் நினைக்கிறேன். மனிதனாகப் பிறந்தவர்கள் எல்லோரும் எல்லாக் கஷ்ட நஷ்டங்களையும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். யாரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். வெளிப் பார்வைக்கு சந்தோஷமாக இருப்பதாகத் தோன்றும். அவ்வாறில்லை.

  இது எல்லோருக்கும் பொருந்தும்.

 2. பிங்குபாக்: சிறையில் அடைக்கப்பட்ட புகழ்பெற்ற நட்சத்திரங்கள் …. (பகுதி-4) – ( மா.உ – மு.கே…) – TamilBlogs

 3. புதியவன் சொல்கிறார்:

  உங்கள் அடுத்த பகுதியில் நீங்கள் எழுத நினைக்காததை எழுதுகிறேன்.

  ஒவ்வொரு சொல்லும் அதற்கான விளைவைத் தரும். அதை ‘அறச் சொல்’ என்று சொல்வார்கள். இதற்கு பல்வேறு உதாரணங்கள் படித்திருக்கிறேன்.

  எம்.கே.டி அவர்கள், ‘நான் கைதியாவேன்’ என்று வசனம் பேசினாராம். அதற்கு மறுநாள் சிறைப்பட்டார். திரையுலகில் அறச் சொல்லையே பாடலிலோ தலைப்பிலோ வசனத்திலோ வைக்க ரொம்ப யோசிப்பார்கள். ஏவிஎம் அவர்கள்கூட இத்தகைய அறச் சொல்லைத் தலைப்பாக வைக்க அனுமதிக்கமாட்டாராம். கவிஞர்களும் புது இசையமைப்பாளருக்கோ, பாடகருக்கோ, ‘வளர்வது, வாழ்த்துவது’ போன்ற வரிகளையே வைப்பார்கள். எம்ஜியார் படங்களிலும் மற்றவர்கள் படங்களிலும் முதல் காட்சி ‘சக்சஸ்’ என்று வார்த்தை இருக்கும்படியான காட்சிகளையே எடுப்பார்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   //ஒவ்வொரு சொல்லும் அதற்கான விளைவைத் தரும்… அதை ‘அறச் சொல்’ என்று சொல்வார்கள். இதற்கு பல்வேறு உதாரணங்கள் படித்திருக்கிறேன்.//

   – உங்கள் வாழ்க்கையில், அனுபவத்தில் இதை கண்டிருக்கிறீர்களா…?
   உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் வாழ்க்கையில் ….?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    என் வாழ்க்கையில் சட் என்று எதுவும் ஞாபகத்துக்கு வரவில்லை. நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் பார்த்த ஞாபகமும் இல்லை.

    ஆனால், பதின்ம வயதில் நான் கோபத்தினால் நண்பர்களை நோக்கி ஏதேனும் எதிர்மறையாகச் சொன்னால் அது நடந்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன். நடந்த பிறகு அதைப் பற்றி வருந்தியிருக்கிறேன். எனக்கு கணிதம் ஒரு நண்பன் ஹாஸ்டலில் இருக்கும்போது முனைந்து சொல்லித்தந்தான். அவன் கணிதம் அருமையாகப் போடுவான் (10 வது இருவரும் படித்துக்கொண்டிருந்தோம்). அவன் முயற்சியில்தான் நான் 87 மதிப்பெண்கள் வாங்கினேன். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், தவறுதலாக (கோபத்தினால் இருக்கலாம், இப்போது நினைவில் இல்லை) என் வாயால், ‘நீ சென்’டம் வாங்க மாட்டாய்’ என்று சொல்லிவிட்டேன். கணக்குப் பாடத்தில் திறமையான அவன் 92 அல்லது 94 மதிப்பெண்கள்தான் வாங்கினான். அதேபோல், ‘என்னால்தான்’, ‘நான் செய்வேன்’ என்று நான் சொல்லிய விஷயங்கள் எதையும் என்னால் செய்ய முடிந்ததில்லை (அதாவது ‘நான்’ அல்லது அகம்பாவ எண்ணம் கொண்டு சொல்லும் எந்தச் செயலையும்). என் அண்ணன், இளநிலை (டிகிரி) 84% வாங்கினான். நான் 5 செமஸ்டர்களில் 86-88% வாங்கியிருந்தேன். நிச்சயம் சர்வ சாதாரணமாக உன்னைத் தோற்கடித்துவிடுவேன் என்று சொன்னேன் (ஆனால் அவன், நல்லா எழுதினா 88%விட அதிகமாக வாங்க முயற்சிக்கலாம் என்றான்). ரொம்ப நல்லா படித்திருந்தும் கடைசி செமஸ்டரில் நான் நன்றாக எழுதவில்லை, 83% overall வாங்கினேன். அப்போதுதான் ‘நான்’ என்ற எண்ணம் வரும்போது எனக்குத் தோல்வி வருகிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.

    Negative attitude attracts negative energy. எதிர்மறைச் சிந்தனை, கெடுதல்களை ஆகர்ஷிக்கும் சக்தி பெற்றது. என் டீமில் எப்போதும் எதிர்மறைச் சிந்தனை உள்ளவர்களை நான் சேர்த்துக்கொள்வதில்லை. ஒரு செயலை முழுமையாக திட்டமிடுவதற்கு முன்பு அதன் ‘சாதக பாதகங்களை’ அலசி ஆராய்வது எதிர்மறைச் சிந்தனை இல்லை. ஆனால் ‘இது முடியாது, தோல்வியுறுவோம்’ என்று தொடர்ந்து சொல்பவன், அதிலும் முடிவு எடுத்தபிறகு சொல்பவன், ‘தோல்வியைக்’ கொண்டுவந்துவிடுவான்.

    டி.எம்.எஸ். அவர்கள் எல்லாப் பேட்டிகளிலும் சொல்லியிருப்பது, ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என்ற பாட்டை டி.ஆர் இசையமைப்பில் தான் பாடியது தன் திரையுலக வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்தது என்று.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     புதியவன்,

     // அதேபோல், ‘என்னால்தான்’, ‘நான் செய்வேன்’ என்று நான் சொல்லிய விஷயங்கள் எதையும் என்னால் செய்ய முடிந்ததில்லை //

     இது ஒன்றிற்கு மட்டும் இங்கே ஒன்று சொல்ல விரும்புகிறேன்…
     நீங்கள் சொல்வது உண்மையே.
     எல்லாம் தன்னால் தான் நடக்கிறது என்று மனிதன் எப்போது நினைக்க ஆரம்பிக்கின்றானோ அப்போதே,
     அங்கேயே – விதி அவனுக்கு எதிராக வேலை செய்யத் துவங்கி விடுகிறது என்று நினைக்கிறேன்.

     பல வருடங்களுக்கு முன்னர், எனக்கு 38-40 வயது இருக்கையில், ஒரு இஸ்லாமியரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது
     அவர் “இன்ஷா அல்லா” என்கிற வார்த்தையை பயன்படுத்தினார்…அவரிடம் அது என்னவென்று விவரம் கேட்டேன்.

     அதிலிருந்த உண்மையை ஏற்கெனவே ஏற்றுக்கொண்டவன் தான் நான். இருந்தாலும், அன்று வரை அந்த மாதிரி
     ஒரு வார்த்தை இருப்பது எனக்குத் தெரியாது… ஆனால், அன்றிலிருந்து நானும் அந்த வார்த்தையை பயன்படுத்த துவங்கி விட்டேன்… எந்த மதமாக இருந்தால் என்ன…? எந்த மொழியாக இருந்தால் என்ன…?
     உண்மை ஒன்று தானே…?

     “இன்ஷா அல்லா” என்றால் “கடவுள் (கடவுளும்.. ?) விரும்பினால்…” ( God Willing … ) என்று பொருள்….!!!

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

     • புதியவன் சொல்கிறார்:

      என் அம்மா, ‘பிழைச்சுக்கிடந்தா பார்ப்போம்’ என்றுதான் எல்லாவற்றிர்க்கும் சொல்வார்கள். நான் 25 வருட அனுபவத்தினால் ‘இன்ஷா அல்லாஹ்’ (If God is willing. அதாவது ப்ராப்தம் இருந்தால் என்பது நம் equivalent) என்றுதான் சொல்வேன். அலுவலகத்திலும் பெரும்பாலும் இப்படித்தான் பேசுவோம்.

 4. புதியவன் சொல்கிறார்:

  படித்தவைகள்தான் என் ஞாபகத்துக்கு வருது. என் அம்மா சொல்வார்கள். நெல்லையில் பாகவதர் வந்தபோது, அவரது காலடி மண்ணைப் பூசிக்கொண்டவர்கள் ஏராளம். பாகவதர் சேலத்தில் தங்கத் தட்டில் சாப்பிட்டார் என்பதும், சென்னையிலிருந்து விமானத்தில் குறிப்பிட்ட உணவு அவருக்கு தினமும் (அல்லது அடிக்கடி) வந்தது எனவும் படித்திருக்கிறேன். (இதைப்போல்தான் பல திரையுலகச் சக்கரவர்த்திகளுக்கும்). ஆனால் கடைசியில் சென்னை பூங்காவில் அவர் கண்பார்வைக் குறைவுடன் இருந்தபோது, அவரைக் கண்டுகொள்ள யாருமில்லை. மிகுந்த ஏற்றத்தையும் மிகுந்த இறக்கத்தையும் அவர் பார்த்தார்.

  சந்திரபாபுவும், மாடி வரை அவரது படுக்கை அறைக்கு கார் வரும்படி பலர் வியக்கும்படி மாளிகை கட்டியவர். சாவித்திரியும் தங்கத்தில் கொலுசு போட்டுக்கொண்டார் என்று சொல்வார்கள். ஏவிஎம்மும் ஜெமினி பிக்சர்சும், பலருக்கு வாழ்க்கையளித்த தேவர் பிக்சர்சும் படு இறக்கத்தைச் சந்தித்தன. பலரைப் பற்றி எழுதலாம். காரணம் தெரியாது காலம் அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு மிகுந்த ஏழையாகவும் தனிமையாகவும் மரணிக்கவைத்தது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   //காலம் அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு மிகுந்த ஏழையாகவும் தனிமையாகவும் மரணிக்கவைத்தது.//

   அந்த “காலம்” அவர்களை மட்டும் அப்படி வதைத்த “காரணம்” என்ன…? கொஞ்சம் யோசித்து, உங்களுக்கு தோன்றும் விளக்கத்தைச் சொல்லுங்களேன்..

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    இதை simpleஆ பூர்வ ஜென்ம கர்மா என்று சொல்லிடலாம். ஆனால் அப்படிச் சொல்வது சரியா இருக்காது.

    நமக்கு நல்ல நேரம் வர ஆரம்பிக்கும்போது, நமக்கு நம் திறமையின் மீது நம்பிக்கை ஏற்படுகிறது, அதற்கு ஏற்றார்ப்போல் நாம் இன்னும் சிறப்பாகச் செயல்படுகிறோம். நமக்கு புகழ், பணம் அதீதமாக வரும்போது, நாம் தரையில் நிற்க முடியாமல், பறக்க ஆரம்பித்துவிடுகிறோம். அப்போ, நம்மை விட்டால் யாரு என்ற அதீத கர்வமும், பணத்தைத் தண்ணீராக வாரி இறைத்து அதீத படாடோபமும் காண்பிக்க ஆரம்பிக்கிறோம். நமக்கு காலம் இன்னும் புகழ், பணத்தை வழங்குகிறது. அப்போது நம்மை விட்டால் யார், நம்மால்தான் மற்றவர்கள் என்று முழு கர்வியாகவும், அகம்பாவியாகவும் மாறிவிடுவது மட்டுமல்ல, மற்றவர்களை ஏளனமாகப் பேசவும், ஏறி வந்த ஏணிகளை எட்டி உதைக்கவும், நம்மால்தான் மற்றவர்கள் என்ற இறுமாப்போடு அளவுக்கு அதிகமாக ஆட ஆரம்பிக்கிறோம். இப்படி நடக்கும்போது அதீத தவறுகளைச் செய்கிறோம், அது வெளியில் தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமல் போகலாம். அந்த சமயத்தில் விதி முழித்துக்கொள்கிறது. ‘மேலே புகழ்/பண ஏணியில் ஏற ஏற ஒருவனுக்கு நிதானம் அதிகமாக அதிகமாக ஆகவேண்டும். அப்படி ஆகவில்லை என்றால், அவனை அவனும், கூட இருப்பவர்களும் கவிழ்த்துவிடுவார்கள். எவ்வளவு தூரம் அவன்/அவள் மேலே ஏறியிருந்தார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் விழும் வேகம் அதிகம், அதனால் அவர்கள் படும் அவதிகளும் மிக அதிகம்.

    அப்போ, மிக நல்லவர்களாக இருப்பவர்கள் கஷ்டப்படுவதில்லையா, அல்லது கொடூர (அதாவது நம்மால் ஜீரணிக்கமுடியாதபடி) கடைசிக் காலத்தைச் சந்திப்பதில்லையா? சந்திக்கிறார்கள். அப்போது, ‘விதி’ / பூர்வ ஜென்ம கர்மா என்றுதான் காரணம் சொல்லத் தோன்றுகிறது. (அப்படிப்பட்டவர்கள் அதீத தவறு செய்திருந்து அது வெளியே தெரியாததனால் நாம் அவர்களை மிக நல்லவர்கள் என்றும் நினைத்திருக்கலாம்).

 5. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

  cause and effect theory always holds good

 6. Ganpat சொல்கிறார்:

  காமை ஜி,நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனை வினாக்களையும் நானும் பலமுறை கேட்டு பதில்களையும் தேடியுள்ளேன்.ஆனால் அவைகளுக்கு நம்மால் பதில் காண முடியாது என்ற ஒரு பதிலைத்தவிர வேறு எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை உலக ஜனத்தொகையில் கடவுளை நம்பாதவர்கள் எண்ணிக்கை ஐந்து சதவிகிதம் இருந்தால் அதிகம்.இது ஒன்றுதான் உலகை இயக்கி வருகிறது.might is right என்ற நிலைமை வந்தால் உலகம் நரகமாகி விடும்

 7. Mani சொல்கிறார்:

  You are Right Mr.Ganpat.

  // might is right என்ற நிலைமை வந்தால் உலகம் நரகமாகி விடும் //

  World exists only because of FAITH.

 8. பிங்குபாக்: கொலைப்பழியுடன் சிறை சென்ற MKT + NSK -யின் விதியும், கதியும், ((பகுதி-5) – ( மா.உ – மு.கே…) | வி ம ரி ச ன ம் 

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.