பயோரியா பல்பொடியும், பாஜக பிரச்சாரமும்….!!!


சீரியசான விஷயம் தான்… ஆனால் நாம் சீரியசாக இருந்து என்ன
பலன்……? சம்பந்தப்பட்டவர்கள் சீரியசாக இல்லையே….
எனவே, காமெடியாக சொன்னால், டென்ஷன் இல்லாமல் படிக்கவாவது
செய்யலாம் அல்லவா…?

பல ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி இது… தற்கால டூத் பேஸ்ட்
வகைகள் அறிமுகம் ஆவதற்கு முன்னால், 50-60 களில், எல்லா
வீடுகளிலும் பல்பொடி தான் பயன்படுத்துவார்கள்.

என் நினைவில் இருப்பதிலிருந்து சொல்கிறேன். எதாவது சிறிய
தவறுகள் இருக்கக்கூடும். தெரிந்தவர்கள் ( ? ) சரி செய்யலாம்.


அப்போது நஞ்சன்கூடு பல்பொடி தான் அதிக பயன்பாட்டில் இருந்தது.
காகித பாக்கெட்களில் வரும். ரோஸ் கலரில் இருக்கும்…. தித்திப்பாக,
சுவையாக இருக்கும்.

அப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் பசங்கள் அதிகமாக
இருந்தார்கள்….எல்லாம் கடவுள் கொடுத்த வரம்…!!!
(குடும்பக்கட்டுப்பாடு பற்றிய சங்கதிகளே அறியப்படாத சமயம்….).

குடும்பத் தலைவர்களுக்கு இருந்த முக்கிய பிரச்சினையே சிறுவர்கள்
பல்தேய்க்கும்போது, பல்பொடியை சாப்பிடாமல் பார்த்துக் கொள்வது
தான்…. ஆமாம் … கவனிக்கவில்லையென்றால், சிறுவர்களை
பல்பொடியை சாப்பிட்டு விடுவார்கள்.

இந்த தொல்லையிலிருந்து விடுவிக்கவென்றே இன்னொரு பல்பொடி
வந்தது… அது வெள்ளையாக, நல்ல மணத்துடன் வரும். அதில்
பல்தேய்த்தால், வாய் வாசனையாக இருக்கும். ஆனால், காரமாக
இருக்கும் என்பதால், சிறுவர்கள் அதை சாப்பிட விரும்ப மாட்டார்கள்.
விறுவிறுவென்று பல்தேய்த்து விட்டு ஓடுவதிலேயே குறியாக
இருப்பார்கள். பெற்றோர்களின், பெரிய பிரச்சினையை பயோரியா
பல்பொடி தீர்த்து வைத்தது. ஆனால், பயோரியா கொஞ்சம் விலை அதிகம்.


பயோரியாவின் பாப்புலாரிடி, மற்றவர்களை தூண்டி விட்டது.
விரைவிலேயே டூப்ளிகேட் பயோரியா பல்பொடி மார்க்கெட்டுக்கு வந்து
விட்டது. இது ஒரிஜினலை விட விலை மலிவு. எனவே மக்கள் இதற்கு
தாவினார்கள்…. அப்போதெல்லாம் காப்பிரைட் சட்டம் எல்லாம் அந்த
அளவிற்கு வலுவாக இல்லை.

ஒரிஜினல் பயோரியா, தன்னுடைய வியாபாரத்தை தக்கவைத்துக்கொள்ள, தீவிரமாக விளம்பரங்களை வெளியிட ஆரம்பித்தது.

“டூப்ளிகேட் பல்பொடிகளை நம்பாதீர்கள்…
1431 எண்ணிட்ட ஒரிஜினல் பயோரியா பல்பொடியையே வாங்கி
பயனடையுங்கள்…. etc. etc…”

இப்போது பல்பொடியிலிருந்து பாஜகவிற்கு வருவோம்…

நேற்று பாஜக தலைவர் திரு.அருண் ஜெட்லி குஜராத் தேர்தலை முன்னிட்டு பேசுகிறார். இந்த நாட்டின் நிதியமைச்சர் …. எதாவது பொருளாதார விஷயங்களை மேற்கோள் காட்டி பேசுவாரென்று நினைத்தால்,

அவரோ, அந்தக்கால ஒரிஜினல் பயோரியா பல்பொடி விளம்பரத்தைப் போல் வார்த்தைகளை உதிர்க்கிறார் –

” ஒரிஜினல் இந்துத்வா கட்சி நாங்கள் (பாஜக) தான்.
காங்கிரஸ் எங்களைப்பார்த்து காப்பி அடித்து, டூப்ளிகேட் இந்துத்வா
கட்சியாகப் பார்க்கிறது…. ஒரிஜினல் இந்துத்வா நாங்கள் இருக்கையில்
டூப்ளிகேட் இந்துத்வா காங்கிரஸை யார் சீண்டுவார்கள் ….?? ”

———–
“Union minister and senior leader Arun Jailtey on Saturday asserted
his party’s Hindutva roots while taking a jibe at Congress vice-president
Rahul Gandhi…

Mr Jaitley said, “The BJP has always been a pro-Hindutva party.
So if an original is available, why one would prefer a clone?”
————

கேவலத்திலும் மகா கேவலமான சூழ்நிலை குஜராத் தேர்தலில் நிலவி வருகிறது.

இந்திய அரசியல் சட்டம், இந்த நாடு மதசார்பற்றது என்பதை மிகத்தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது.

தேர்தல் சட்டங்கள், ஜாதியையோ, மதத்தையோ குறிப்பிட்டு, தேர்தல் பிரச்சாரம் செய்வதை தடை செய்கின்றன. மீறி யாராவது, எந்த கட்சியாவது
செயல்பட்டால், அதை கண்டிக்கவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் தான் தேர்தல் கமிஷன் என்று ஒரு சட்டபூர்வமான அமைப்பே இருக்கிறது.

ஆனால், இங்கே தேர்தல் கமிஷனுக்கு கண்கள் பார்க்கா…
காதுகள் கேட்கா… வாய்….? பொத்திக்கொள்ளும்….!
தானாக எந்த வித நடவடிக்கையும் எடுக்காது… யாராவது புகார் செய்தால் மட்டுமே விழித்துக் கொண்டு செயல்படும்…

சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விட்டு, மீண்டும்……

இங்கே இரண்டு கட்சிகளும், ஒரே தவறைச் செய்வதால், யார் மீது யார் புகார் கொடுப்பார்கள்…?

ஜாதி, மதங்களை – அரசியலில், தேர்தல் சமயங்களில் பயன்படுத்துவதை
முற்றிலுமாக தடைசெய்து, அந்த தடை உத்திரவை – தீவிரமாக செயல்படுத்தினாலொழிய, நமது தேர்தல்கள் எல்லாம் வெறும்
கேலிகூத்தே…!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to பயோரியா பல்பொடியும், பாஜக பிரச்சாரமும்….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  “Mr Jaitley said, “The BJP has always been a pro-Hindutva party. So if an original is available, why one would prefer a clone?” – எனக்குப் பிடிக்காத பிரச்சாரம். பாஜக ‘ஹிந்துத்துவா’ என்பதற்காக வாக்களிக்கும் மக்கள் நிச்சயம் காங்கிரசுக்கு வாக்களிக்கப்போவதில்லை. பாஜகவைப் பிடிக்காத மக்கள், காங்கிரசைப் பிடித்த மக்கள், இதனால் மாறப்போவதில்லை. அதுவும்தவிர, பாஜக தலைவர்கள் (LEADERS, ie handful top leaders), தங்கள் பிரச்சாரங்களை கொஞ்சம் டீசன்டாக வைத்துக்கொள்வதுதான் கட்சியின் மரியாதைக்கு நல்லது. ஜெட்லியின் மேலே குறிப்பிட்ட பிரச்சாரம், மோடி அவர்களின் நேற்றைய பிரச்சாரம் (புல்லட் ரயில் திட்டம் பிடிக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியினர் மாட்டுவண்டியில் போகட்டும் என்பதுபோல்), மிகவும் தரம் குறைந்ததாக இருக்கிறது. (அதனால் எனக்கு வர வர, தில்லி போல்தான் குஜராத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என்று இன்னும் ஸ்டிராங்காகத் தோன்றுகிறது)

  என்னைப் பொறுத்தவரையில் இந்த மாதிரி பிரச்சாரங்களினால் விளையும் நன்மை, காங்கிரஸ், தனது கடந்தகால, ‘சிறுபான்மையினரைத் தன் பக்கம் வைத்துக்கொள்வதற்காகச் செய்த அநீதிகள்’, காலப்போக்கில் மறைந்து, இரண்டு கட்சிகளும் நாட்டிற்கு என்ன செய்யப்போகிறோம் என்பதை மட்டும் சொல்லும் காலம் வரும், அடுத்த தேர்தல் அதை நோக்கிச் செல்லும் என்பதுதான். காங்கிரஸ், கொஞ்ச நஞ்சமா சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக ‘ஹிந்துக்களைப் புறக்கணித்தது’.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நான் சொல்ல வருவது –

   பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே, தங்களது மதவாதத்திலிருந்து வெளியே வந்து, மதம் கலவாத அரசியலில் ஈடுபட வேண்டும். நமக்கு இந்துத்வா’வும் வேண்டாம்; போலி செகுலரிச’மும் தேவையில்லை.

   மெஜாரிடி மத அரசியலோ, மைனாரிடி மத ஆதரவு அரசியலோ – இரண்டிற்கும், மக்கள் நலனுக்கும் சம்பந்தமே இல்லை… அது வெறும் வாக்கு வங்கியை குறிவைக்கும் அரசியல். அரசியல் தனி, மதம் தனி என்றிருப்பதே
   நாட்டு மக்களுக்கு நல்லது.

   அரசாங்கம் மத சார்பற்றதாக அமைய வேண்டும்… அதற்காக, மதவிரோதமான அல்லது மதங்களை ஏற்காத அரசு என்று பொருளல்ல.. அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்கும் அரசு என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

   என்றைக்கு மதவாதத்தை விட்டு, ஜாதியவாதத்தை விட்டு அரசியல் வெளியே வருகிறதோ, அப்போது தான் நாம் உண்மையான ஜனநாயகத்தை பார்க்க முடியும்.

   இந்த இரண்டு அகில இந்திய கட்சிகளும் ஜாதி, மதம் சார்ந்த குறுகிய கண்ணோட்டங்களிலிருந்து வெளிவந்து, பொருளாதார, சமூக மற்றும் வளர்ச்சி சார்ந்த இதர கொள்கைகளின் அடிப்படையில் போட்டியிடட்டும்… மக்களின் நம்பிக்கையை பெறட்டும் என்று தான் நான் கூறுகிறேன்.

   -காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.