பெண் துறவிகளின் – விவசாயப் புரட்சி…!!!


இரண்டு நாட்களுக்கு முன்னதாக உளுந்தூர்பேட்டையில்
அமைந்துள்ள ஸ்ரீ சாரதா ஆசிரமம் செய்து வரும் அருமையான
பணிகளைப் பற்றி ” இதுவும் தமிழகத்தில் தான் நடக்கிறது….
சத்தமே இல்லாமல்…!!! ” என்கிற தலைப்பில் எழுதி இருந்தேன்.

அதன் தொடர்ச்சியாக இந்த இடுகை …

பல ஏக்கர் நிலங்களை பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டு,
ஒரு பக்கம் இயற்கை முறையிலும், மற்றொரு பக்கம் தற்போதைய செயற்கை உரம், பூச்சி கொல்லிகளின் உதவியுடன்
விவசாயமும் செய்து பார்த்து, சகலத்திலும் சிறந்தது இயற்கை முறை விவசாமே என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறார்கள் இந்த ஆசிரமத்துப் பெண் துறவிகள்…

கூடவே பாரம்பரிய நெல் விதைகளை சேகரித்து, பெருக்கி,
விவசாயிகளுக்கு கொடுக்கும் பணியிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஸ்ரீ சாரதா ஆசிரம பெண் துறவிகள் ஆர்வத்துடன் மேற்கொள்ளும் உழவுப்பணிகளைப்பற்றி பசுமை விகடன் இதழில்
சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அவற்றிலிருந்து
கொஞ்சம் கீழே –
(நன்றி : பசுமை விகடன் வார இதழுக்கு….)

————————–

இயற்கை விவசாயம்….

திரும்பிய திசையெல்லாம் ஓங்கி உயர்ந்த மரங்களுக்கு நடுவில்
வீற்றிருக்கும் அமைதியான அந்த ஆசிரமத்தில், ஆங்காங்கு பணி
செய்து கொண்டிருக்கிறார்கள், காவி மற்றும் வெள்ளை
நிறங்களில் ஆடையணிந்த சகோதரிகள். இங்கு, உழவுப்
பணிகளைப் பார்த்துக் கொள்வதற்காக ‘அக்ஷய கிருஷி கேந்திரா’
எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின்
மூலமாக சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு
இறையியலோடு, உழவியலையும் கற்றுக் கொடுத்து
வருகிறார்கள்.

அதைப் பற்றி நம்மிடம் உற்சாகமாகப் பேசினார்… கிருஷி
கேந்திராவின் இயக்குநர் எத்தீஸ்வரி ஆத்ம விகாச பிரியா
அம்பா’.

‘எங்க ஆசிரமத்துல பள்ளிக்கூடம், கல்லூரி, குருகுலம்னு
தனித்தனித் துறைகள் இருக்கு. ஆசிரமத்துக்குச் சொந்தமா
எண்பது ஏக்கர் நிலம் இருந்ததால, ‘விவசாயம் பண்ணலாமே’னு
ஆசிரமத்தோட தலைவர் சொன்னாங்க.

உடனே, மண் பரிசோதனை செஞ்சதுல, ‘இந்த நிலத்துல
சப்போட்டாவை மட்டும்தான் பயிர் செய்ய முடியும்’னு
விஞ்ஞானிகள் சொல்லிட்டாங்க. ‘மண் சரியில்லைனு நாமளே
இப்படி விட்டுடக் கூடாது’னு முடிவு பண்ணி எல்லாரும்
விவசாயத்துல இறங்கினோம்.

ரசாயன முறை, இயற்கை முறைனு ரெண்டு முறையிலும்
நெல் சாகுபடியை ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல ரசாயன
முறையில அதிக மூட்டை கிடைச்சாலும், போகப் போகக்
குறைய ஆரம்பிச்சுது. அதேசமயத்துல, இயற்கை முறையில
கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்க ஆரம்பிச்சுது. மூணு
வருஷத்துலேயே, ‘இயற்கை விவசாயம்தான் சரிப்பட்டு
வரும்’னு முடிவு பண்ணிட்டோம். அந்த மூணு வருஷத்துல
ரசாயன உரங்களுக்கு மட்டும் நாலரை லட்ச ரூபாய் செலவு
பண்ணியிருந்தோம்.

2004-ம் வருஷத்துல இருந்து எங்க ஆசிரமத்துக்கு ‘இயற்கை
வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் அடிக்கடி வர ஆரம்பிச்சார்.

அவர் மூலமா, நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டோம்.
‘கடன் இல்லாத, நஞ்சு இல்லாத, மண் வளம் இழக்காத,
நீர் வளம் குன்றாத நிலைத்த நீடித்த விவசாயம்’தான்
எங்க குறிக்கோள்” என்ற விகாச பிரியாவைத் தொடர்ந்தார்,
கேந்திராவின் உதவி இயக்குநர், சகோதரி சத்தியப்பிரனா.

‘நாங்க இயற்கை விவசாயத்துல தீவிரமான சமயத்துலதான்
‘பசுமை விகடன்’ வெளி வர ஆரம்பிச்சுது. ஆரம்பத்துல,
நம்மாழ்வார் கட்டுரைகளுக்காக அதை வாசிக்க ஆரம்பிச்சோம்.

படிக்கிறதோட மட்டும் விட்டுடாம, ‘பசுமை விகடன்’ல வர்ற
நிறையத் தொழில்நுட்பங்களை எங்களோட தோட்டத்துல
செயல்படுத்திக்கிட்டு இருக்கோம். பெரும்பாலான பாரம்பரிய
ரகங்களோட பெருமைகளை இந்தப் புத்தகம் மூலமாத்தான்
தெரிஞ்சுக்கிட்டு அந்த விதைகளைச் சேகரிச்சுட்டிருக்கோம்.
அந்த வகையில இதுவரைக்கும் 27 பாரம்பரிய நெல் ரகங்களைச்
சேகரிச்சுருக்கோம்.

இப்போ, நெல், கரும்பு, உளுந்து, தட்டைப்பயறு, கருவேப்பிலை,
மா, தென்னை, மரவள்ளினு நிறைய பயிர்களை சாகுபடி
செஞ்சுக்கிட்டிருக்கோம்.

அதோட, ஆசிரமத் தேவைக்காக 100 கறவை மாடுகளையும்
வளர்க்கிறோம். அசோலா வளர்ப்பு; பூச்சி, நோய் தாக்குதல்
விளக்கப்படம்; விதை மையம்; வானிலை முன்னறிவுப்புக்
கருவி; மண்புழு உரத்தொட்டி; மழை நீர் சேகரிப்பு மையம்…
விவசாயிகளுக்குத் தேவையான நிறைய விஷயங்களை இங்க
உருவாக்கியிருக்கோம்.

அது மூலமா, எங்க ஆசிரமத்தைச் சுத்தியிருக்குற இருபத்தஞ்சு
கிராம விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுத்துட்டிருக்கோம்.

எங்களுக்கு விவசாய முறைகளைத் தெரிஞ்சுக்க உதவுறதோட,
மத்த விவசாயிகளுக்குச் சொல்லித் தர்றதுக்கும் ‘பசுமை
விகடன்’தான் ரொம்ப உதவியா இருக்கு” என்று பெருமையோடு
சொன்னார் சத்தியப்பிரனா.

தொடர்ந்து பேசிய ஆசிரமப் பண்ணையின் மேலாளர் சிவக்குமார்,
”20 ஏக்கர்ல ஒரு போகம் நெல் சாகுபடியும், 16 ஏக்கர்ல ரெண்டு
போகம் நெல் சாகுபடியும் பண்ணிக்கிட்டிருக்கோம்.

இந்த வருஷம், சோதனை முயற்சியா…. 5 ஏக்கர்ல மாப்பிள்ளைச்
சம்பா, சீரகச் சம்பா, இலுப்பைப் பூ சம்பானு 27 பாரம்பரிய
நெல் ரகங்களையும் பயிர் செஞ்சிருக்கோம். அதில்லாம தனியா
15 ஏக்கர்ல ‘டீலக்ஸ்’ பொன்னி நடவு செஞ்சிருக்கோம்.

அமுதக்கரைசல், பஞ்சகவ்யா, மீன் அமிலம், முட்டைக் கரைசல்,
மண்புழு உரம், பிண்ணாக்கு… மாதிரியான இயற்கை
இடுபொருட்களைத்தான் பயன்படுத்திட்டிருக்கோம்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்த புகையிலைக் கரைசலைப்
பயன்படுத்திட்டிருக்கோம். நெல் வயல்ல களைகளைக்
கட்டுப்படுத்துறதுக்காக அசோலாவை வளர்க்கிறோம். கறவை
மாடுகளுக்கு அசோலாவைக் கொடுக்கிறோம். இதன் மூலமா
பால் அளவு கூடுறதோட, மாடுகளும் ஆரோக்கியமா இருக்கு”
என்று சொன்ன சிவக்குமார்,

”பாரம்பரிய நெல் ரகங்கள்ல ஏக்கருக்கு இருபது மூட்டையில
இருந்து முப்பது மூட்டை (75 கிலோ) வரைக்கும் மகசூல்
கிடைக்குது. மத்த நெல் ரகங்கள்ல ஏக்கருக்கு இருபத்தஞ்சு
மூட்டையில இருந்து முப்பது மூட்டை வரைக்கும் மகசூல்
கிடைக்குது” என்று வரவுக் கணக்கையும் லேசாகத் தொட்டார்!

காசி.வேம்பையன்
படங்கள் : ஜெ.முருகன்
( பசுமை விகடன் – 10 Feb, 2012 )
——————————————————————-

1,000 ரகங்களைத் தேடி…
ஒரு ஆசிரமத்தின் பாரம்பரிய பயணம்!

‘விதைகளே பேராயுதம்’ என்பார், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார். ஆம்… அத்தனைக்கும் அடிப்படை ஆதாரம், விதைகள்தான். மண்ணுக்கேற்ற, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப விளையும் விதைகள்தான் நமது விவசாயத்தின் ஜீவாதாரம்.

ஆனால், பாட்டன், பூட்டன் காலம் முதல் ‘வாழையடி
வாழையாய்’ பயிர் செய்யப்பட்டு வந்த பாரம்பரிய நெல் ரகங்கள்
பலவும் கால ஓட்டத்தில் மறைந்து போக… அங்கொன்றும்
இங்கொன்றுமாக இருந்த சில ரகங்களும், நம் கையை
விட்டுப்போகும் நிலையில் இருக்கின்றன. இப்படிப்பட்ட
பாரம்பரிய ரக நெல் விதைகளைச் சேகரித்துப் பாதுகாக்கும்
பணியில், பல அமைப்புகள் களமிறங்கி இருக்கின்றன.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை, ஸ்ரீசாரதா ஆசிரமும்
இந்த இயற்கைப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்
கொண்டிருக்கிறது.

இங்கே கிட்டத்தட்ட 150 பாரம்பரிய நெல் ரகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த விதைகளைப் பெருக்கி, விவசாயிகளுக்குக் கொடுத்து வருகிறார்கள்.

இதைப் பற்றி நம்மிடம் பேசிய ‘அக்ஷய க்ருஷி கேந்திரா’
(வேளாண்மை மையம்) உதவி இயக்குநர் சத்திய பிரானா.

”பாரம்பரிய நெல் ரகங்கள் நம்முடைய தேசத்துக்குத் தேவைனு
இங்க இருக்குற எல்லா சகோதரிகளும் உணர்ந்திருக்கிறோம்.

இதுக்காக, எங்களுடைய கேந்திரா மூலமா, ஆரம்பத்துல 27
பாரம்பரிய நெல் ரகங்களோட விதைகளைச் சேகரிச்சு,
விளையவெச்சு, ஒவ்வொரு வருஷமும் 500 விவசாயிகளுக்கு
விதைகளைக் கொடுத்துட்டிருந்தோம்.

நாங்க, விவேகானந்தரின் போதனைகளைப் பின்பற்றுறோம்.
அதனால, அவரோட 150-வது ஜெயந்திக்கு சாரதா ஆசிரமத்தில்
இருக்குற எல்லா துறைகளுக்கும் பல்வேறுவிதமான பணிகளைப்
பிரிச்சுக் கொடுத்தாங்க. அதன்படி எங்க மையத்துக்கு
விவேகானந்தரின் 150-வது ஜெயந்தியை குறிக்கிறவிதமா 150
பாரம்பரிய நெல் ரகங்களோட விதைகளைச் சேகரிச்சு, பயிர்
பண்ணி, 1,500 விவசாயிகளுக்கு விதைகளைக் கொடுக்கச்
சொல்லியிருந்தாங்க. இதுக்காக ஒரு வருஷமா தமிழ்நாட்டுல
இருக்குற பல கிராமங்களுக்குப் போய் விதைகளைச்
சேகரிச்சோம். இதுல சில ரகங்கள் அழியுற நிலையில
இருக்கிறதையும் பார்த்தோம்.

இப்படிக் கிடைச்ச விதைகளை ஆசிரமப் பண்ணையில
விதைச்சு, ஒவ்வொரு ரகத்தோட சாகுபடி காலம், மகசூல் அளவு,
ஏற்ற மண் இதுமாதிரியான விஷயங்களைத்
தெரிஞ்சுக்கிட்டோம். இதுல கிச்சிலி, தூயமல்லி, சீரகச்சம்பா,
பாசுமதி, மாப்பிள்ளைச் சம்பானு ஐந்து நெல் ரகங்கள் இந்தப்
பகுதி விவசாயிகளுக்கு ஏற்றதா இருக்கு. இந்த ஐந்து
ரகங்களோட விதைகளைப் பெருக்கி, 1,500 விவசாயிகளுக்குக்
கொடுத்தோம். இதில்லாம வெளியூர் விவசாயிகள் தினமும்
விதை வாங்கிட்டுப் போறாங்க. அவங்களயெல்லாம் கணக்குல
சேர்க்கல.

விதைகளோடு, தேவையான ஆலோசனைகளையும்
விவசாயிகளுக்குக் கொடுக்கிறோம். ஒவ்வொரு வருஷமும்
சிறப்பா விவசாயம் பார்க்குற 12 விவசாயிகளுக்கு ‘பலராமர்’
விருது கொடுக்கிறோம். இது பல விவசாயிகளுக்கு ஊக்கமா
இருக்கு. ஆசிரமத்துல இருக்குற பெரியவங்க, அடுத்த 3
ஆண்டுகள்ல ஆயிரம் பாரம்பரிய நெல் ரகங்களைச் சேகரிக்கச்
சொல்லியிருக்குறாங்க. இதுக்கான தேடுதல்ல இறங்கப்
போறோம்.

ஆசிரமத்தோட விருப்பமெல்லாம், இப்படி சேகரிச்ச பாரம்பரிய
நெல் ரகங்களை விவசாயிகளிடம் பரவச் செய்றதுதான்.

வருங்காலத்துல விழுப்புரம் மாவட்டத்தைச் சுற்றி இருக்குற
விவசாயிகள்கிட்ட பலவிதமான நெல் ரகங்கள் கிடைக்கும்கிற
நிலையை உருவாக்க நினைக்கிறோம். இதுக்காக 3 ஆயிரம்
விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களைக் கொடுக்க
இருக்கிறோம். விதைநெல் தேவைப்படுற விவசாயிகள், எங்கள்
ஆசிரமத்தை அணுகலாம்” என்று சொன்னார் ஆர்வத்துடன்!

ஆசிரமத்தின் பண்ணை மேலாளர் சிவக் குமார் பேசும்போது,
”150 நெல் விதைகளைச் சேகரிக்கச் சொன்னதும், ஒரு வருஷம்
முழுக்க மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், வேதாரண்யம்,
திருத்துறைப்பூண்டி, திருவண்ணாமலை, கல்வராயன்மலை,
செங்கல்பட்டுனு பல ஊர்களுக்கும் போனோம். ஒவ்வொரு
பகுதிக்குப் போகும்போதும், பசுமை விகடன் அறிமுகப்படுத்திய
நெல் விவசாயிகளோட தொடர்பு எண்களை எடுத்துக்கிட்டுப்
போனோம். அவங்க எங்களுக்கு சில ரகங்களைக்
கொடுத்ததோட, வேற நெல் ரகங்கள் வெச்சுருக்கிற
விவசாயிகளையும் அறிமுகப்படுத்தினாங்க.

ஒவ்வொரு ரகத்துலயும் 50 கிராம் விதையில இருந்து, 2 கிலோ
விதை வரைக்கும் வாங்கிட்டு வந்தோம். இந்த 150 நெல்
ரகத்தையும், மொத்தம் 6 ஏக்கர்ல தனித்தனியா சாகுபடி செஞ்சு,
அறுவடை செஞ்சு வெச்சிருக்கோம். இப்போ, 80 ரக விதைகள்
வினியோகத்துக்கு தயாரா இருக்கு.

உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார விவசாயிகளுக்கு இலவசமா
கொடுக்கிறோம். மற்ற பகுதி விவசாயிகளுக்கு கிலோ 40
ரூபாய்ங்கிற விலையில விற்பனை செய்கிறோம்” என்று
சொன்னார்.

காசி. வேம்பையன் படம்: தி. குமரகுருபரன்
( பசுமை விகடன் – 10 Aug, 2014 )

——————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to பெண் துறவிகளின் – விவசாயப் புரட்சி…!!!

 1. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்.

  இந்த இடுகை நிறைய வித்தியாசமான தகவல்களை தருகிறது.
  நன்றி.

 2. இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

  இந்த இடுகை நமக்கு மிகுதியான விஷயங்களை சொல்கிறது.
  இந்த தமிழ்நாட்டின் தேவை என்ன, அதற்கு என்ன செய்ய வேண்டும், அதற்கு சான்றோர் யார், எவ்வாறு செய்ய வேண்டும், என மேலும் பல்வேறு செய்திகளை சொல்லி தருகிறது.
  தேவை கடல் அளவு, ஆனால் வெகு சிலர் உழைப்பை வைத்து இதை ஈடுகட்ட முடியாது எனும்போது நாம் ஒவ்வொருவரும் நம் கிளைகளை வளர்க்க வேண்டிய நேரமிது. இதை சரி என்று நினைக்கும் நாம் இதை படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஒரு குழுவாக சேர்ந்து ஒரு முறை அந்த ஆஸ்ரமத்தை சென்று பார்வை இட்டு, இந்த நல் எண்ண விதையை வளர்க்க எதாவது செய்தால் என்ன??

  இது என்னுடைய கருத்து. சரி என்று பட்டால் மறுமொழியில் துயிலெழுங்கள்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நண்பரே,

   உங்கள் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன்….

   காவிரியில் கர்நாடகா தண்ணீர் விடவில்லை; பாலாற்றில் ஆந்திரா தடுப்பணை போட்டு விட்டது;
   பெரியாறில் கேரளம் பிரச்சினை செய்கிறது – என்றெல்லாம் வருந்திக்கொண்டிருப்பதை விட்டு விட்டு,
   நம்மிடம் இருப்பதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று யோசிப்பது ஒரு வகை.

   நமக்குரிய நீரைப்பெற தேவையான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்துகொண்டே
   இருக்கும் அதே நேரத்தில் –

   இயலாமை, சோர்வு ஆகியவற்றை தூர ஒதுக்கி வைத்து விட்டு,

   தடுப்பணைகள், கசிவுநீர் குட்டைகளை அமைத்து
   தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்வது,
   நிலத்தடி நீரின் மட்டம் குறையாமல் பார்த்துக் கொள்வது –

   தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, சொட்டு நீர் பாசனம் செய்வது, கிடைக்கும் தண்ணீரின் அளவிற்கேற்ப பாசனப் பயிர்களை மாற்றுவது, காய்கறி, கனிவகைகள், குறுகிய காலங்களில் பலன் தரக்கூடிய மரங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவது குறித்து நிறைய யோசித்து செயல்படலாம்…

   வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார்…
   அத்தனையும் எழுத்து வடிவத்திலும், உரை வடிவத்திலும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் உரிய வடிவத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

   துண்டு துண்டாக சிறிய அளவில் விவசாயம் செய்வதை விட, கிராம கூட்டுறவு விவசாயப் பண்ணைகளை அமைத்து, கிராம விவசாயிகள் அனைவரும் ஒன்றிணந்து பாடுபடலாம்.
   பெரிய அளவில் விவசாயத்திற்கு நிலப்பரப்பு கிடைக்கும்போது, மேலே இடுகையில் சொல்லப்பட்டுள்ள விவசாய முறைகளை மேற்கொள்வது எளிது. பலனும் அதிகம்.

   இந்த மாதிரி விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்கள் பலர், ஏற்கெனவே தமிழ்நாட்டில் செயல்படத் துவங்கி விட்டார்கள்.

   இப்படி கிடைக்கும் பயனுள்ள தகவல்களை எல்லாம் அவ்வப்போது சேகரித்து இந்த தளத்தில் பதிவிடுவதன் மூலம் என்னால் இயன்றதை செய்து கொண்டிருக்கிறேன்.

   களத்தில் இறங்கி செயல்பட முடியாத நண்பர்கள், இத்தகைய தகவல்களை பரந்த அளவிற்கு எடுத்துச்சென்று உதவலாம். அவரவர் தங்களால் இயன்ற வழிகளில் இதில் ஈடுபடலாம்.

   எனக்கு நம்பிக்கை இருக்கிறது….
   இன்றில்லா விட்டாலும் நாளையாவது –
   தமிழகம் விவசாயத்தில் –
   நாட்டிலேயே முதலிடத்தை பிடிக்கும்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Sundar Raman சொல்கிறார்:

    கா மை சார் , நல்ல பதிவு , ஆக்கபூர்வமான ஆலோசனைகள் . நானும் பசுமை விகடனின் வாசகன் , அவர்கள் இதன் மூலம் பல நல்ல கருத்துக்களை பரப்பி வருகிறார்கள் – வாழ்க அவர்களின் சேவை, வளர்க அவர்களின் முயற்சி .

    விதை பந்து , மற்றும் மியாவாக்கி காடு முறை மரம் வளர்ப்பு பெரிய அளவில் பேசப்படுகிறது , ஓரளவுக்கு செயல்படுத்தப்படுகிறது . இன்னும் சில வருஷங்களில் இந்தியாவின் நிலப்பரப்பையே மாற்றும் , என நம்பிக்கை வைப்போம் . உங்கள் மூலமாகவும் பல நல்ல உள்ளங்களை இது போன்ற கருத்துக்கள் சென்றடையும் .A big Thanks.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் செல்வராஜன் அவர்களிடமிருந்து
   கிடைக்கப்பெற்ற பின்னூட்டம்…

   ——————————–

   selvarajan singaram
   12:27 AM (12 hours ago)
   to me

   நண்பர் ” இன்றில்லாவிட்டாலும ” அவர்களே … // துயிலெழுங்கள் // என்று கூறினாலும் … ஆயிரம் சுப்ரபாதங்கள் பாடினாலும் … இது பாேன்ற இடுகை பதிவுகளுக்கு கருத்து கூற யாருக்கும் மனமிருப்பதில்லை …

   அரசு குத்தகை விவசாயத்தைச் சட்டபூர்வமானதாக்குகிறது. இந்த சட்டத்தின் படி விவசாயத்தில் நுழையப்போகும் குத்தகை விவசாயி பரம்பரையாக விவசாயம்செய்து வருபவர்கள் அல்ல …
   அரசுகளுக்கு வேண்டப்பட்ட பெருமுதலாளிகள் பாேன்றாேர்தான் புதிய குத்தகை சட்டத்தின் கீழ் உருவாக இருக்கும் புதிய குத்தகை விவசாயிகள்…..

   ஒரே ஒரு செண்ட் நிலம் வாங்காமல் சேற்றில் இறங்காமல் , வியர்வை சிந்தாமல் , காேமணம் கட்டாமல் , இடு பாெருட்ககளுக்கும் கடனுக்கும் அலையாமல் , விளைவித்த பாெருட்களுக்கு நல்ல விலைக்கு ஏங்காமல் …. அனைத்தையும் பராேபகார அரசாங்கமே செய்து ….” இந்த
   ஏழை விவசாய வேடதாரிகளுக்கு ” உதவ காத்திருக்கும் பாேது …. காெண்டாட்டம் தானே … இவர்களும் வருங்கால விவசாயிகள் முகமூடியில் இனி உலா வரப் பாேகிறவர்கள்….

   மானியங்களை பெறுவதாேடு …. வாங்கி ஏப்பம் விடும் விவசாய கடன்களுக்கும் பாேராட்டம் ஏதுமின்றி எளிதாக தள்ளுபடி பெற காத்திருக்கும் காேட் … சூட் உடுத்திய விவசாயிகள் ….

   விவசாயத்தில் பசுமை புரட்சி … பாரம்பரிய விதை பாதுகாத்து வரும் ….பெண் துறவிகளின் செயல்… ” புரட்சி தாெண்டு ” … ஆனால் அரசுகள்
   பரம்பரை விவசாய நிலங்களை விவசாயிகளிடம் இருந்து பறித்து கார்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க துடித்துக் காெண்டு இருப்பது … ” புரட்டு தாெண்டு ” … அப்படித்தானே …?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.