தேர்தல் கமிஷனர் : சாப / பாப விமோசனமா…? – ஆளும் கட்சியில் சேர்ந்தால் …!


தற்போதைய அரசியல் சூழ்நிலையில் – முதுகெலும்புடைய,
சுயமாக இயங்கக்கூடிய, அரசு அதிகாரிகளை பார்ப்பது அபூர்வமாகவே இருக்கிறது….

நமது சிஸ்டத்தில், உயர் கல்வியறிவும், புத்திசாலித்தனமும் உடையவர்களே IAS அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சிறப்பான பயிற்சி கொடுக்கப்பட்டு, திறமையாக இயங்கும் தன்மை உடையவர்களாக உருவாக்கப்படுகின்றனர்.

ஆனால், அவர்களில் பெரும்பாலானவர்களை – அரசியல்வாதிகள்
தங்களது ஆளுகையின் கீழ் கொண்டு வந்து, தங்கள் வசதிப்படி இயங்க வைத்து, உருப்படாமல் போகச் செய்து விடுகின்றனர்.

அதையும் மீறி, அரசியல்வாதிகளின் influence ஐயும் தாண்டி,
இயங்கக்கூடிய தன்மையை ஒரு சில அதிகாரிகள் தக்க வைத்துக் கொள்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் திரு.பிரகாஷ் ரவாத்,
என்கிற தேர்தல் கமிஷனர்.

அண்மையில் குஜராத்தில், ராஜ்ய சபா உறுப்பினர்களை
தேர்ந்தெடுக்கும்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர்
கட்சி மாறி பாஜகவுக்கு ஓட்டு போட்டனர்.

துரதிருஷ்டவசமாக ( ? ), அவர்களில் இரண்டு பேர்
ரகசியத்தை காக்கத் தவறியதால், அவர்களின் ஓட்டுகள்
செல்லாது என்று தேர்தல் கமிஷன் ஒருமனதாக
தீர்மானித்தது… அதன் விளைவு – அனைவரும் அறிந்ததே…

திரு.அருண் ஜெட்லி தலைமையிலான அரை டஜன் மத்திய கேபினட் அமைச்சர்களின் பலமான அழுத்தங்களையும், எதிர்ப்புகளையும் தாண்டி –
இந்த மிக முக்கியமான முடிவை எடுத்த தேர்தல்
கமிஷனர்களில் ஒருவரான திரு.பிரகாஷ் ரவாத். அவர்
ஒரு உரையில் கூறுகிறார்….

——————————————-

தேர்தலில் ஜெயிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,
எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற ஒரு புதிய
சித்தாந்தம் இந்திய அரசியலில் உருவாகி இருக்கிறது.

“ஆளும் கட்சிக்கு இடம் மாறினால், அவர்களது
பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு, அவர்கள் புனிதமாகி
விடுகிறார்கள்…”

“ஜெயிப்பதற்காக எதைச் செய்தாலும் அது தவறல்ல…”

– என்கிற இந்த நம்பிக்கைக்கு எதிராக, அனைத்து அரசியல்
கட்சிகளும், அரசியல்வாதிகளும், மீடியா உலகமும், சமூக
அமைப்புகளும், அரசியல் சட்ட பதவிப் பொறுப்பில்
இருப்பவர்களும் தீவிரமாக நடவடிக்கையில் இறங்க
வேண்டும்….

—————————————————-

பொதுவாகவே, பதவியில் இல்லாத கட்சிகளிலிருந்து
ஆளும் கட்சிக்கு தாவுபவர்கள் தான் அதிகம்…

அவர்கள் அப்படி தாவுவதன் நோக்கம் என்ன….?

புதிய கட்சியின் கொள்கைகள் பிடித்துப்போய், லட்சிய
வேட்கையிலா கட்சி மாறுகிறார்கள்…?

– புதிய கட்சியில் அவர்களுக்கு காட்டப்படும்
பண ஆசை அல்லது பதவி ஆசை….

– தாங்கள் பழைய கட்சியில் இருந்தபோது செய்த
குற்றங்கள் மீதான நடவடிக்கைகளிலிருந்த தப்பிக்க …

– எதிர்காலத்தில் ஆளும் கட்சியில் இருப்பதால்
ஏற்படக்கூடிய அனுகூலங்களை அனுபவிக்க….

இப்படி கட்சி தாவுபவர்களை மட்டும் அல்லாமல் –
அந்த கட்சி தாவல்களை ஊக்குவிக்கும் கட்சிகளின் மீதும்
நடவடிக்கை எடுக்கும் வழிகளையும் தேர்தல் கமிஷன்
கண்டு பிடித்தாலொழிய, இந்த ” சுயநல தாவல்கள் ”
குறைய வழியில்லை…!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to தேர்தல் கமிஷனர் : சாப / பாப விமோசனமா…? – ஆளும் கட்சியில் சேர்ந்தால் …!

  1. புதியவன் சொல்கிறார்:

    திரு பிரகாஷ் ரவாத் போன்றவர்கள் பாராட்டப்படக்கூடியவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், நான் இதுவரை படித்தவரையில், ஒரு தடவை நல்ல மதிப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள், பிறகு, அவர்கள் அப்படிச் செய்தது, தங்கள் மனத்தில் இருக்கும் அரசியல் கட்சி, அல்லது தங்களுடைய தனிப்பட்ட நம்பிக்கைகள் காரணமாகவே என்பதைப் பார்த்திருக்கிறேன் (உமாசங்கர் போன்று பலர்). அதனால்தான் பிரகாஷ் அவர்கள் இப்படியே இருப்பாரா அல்லது அவரும் அடுத்த ‘உமாசங்கரா’ என்பதைக் காலம்தான் உணர்த்தும்.

    “தற்போதைய அரசியல் சூழ்நிலையில் – முதுகெலும்புடைய,
    சுயமாக இயங்கக்கூடிய, அரசு அதிகாரிகளை பார்ப்பது அபூர்வமாகவே இருக்கிறது….” – இதில், ‘தற்போதைய அரசியல் சூழ்’நிலையில்’ என்பதை எடுத்துவிட்டால், உங்கள் கருத்து முழுமையாக ஒப்புக்கொள்ளக்கூடியது. நினைவுவைத்துக்கொள்ளுங்கள், எல்லோரும் காலில் விழுந்தபோது கிரண்பேடி அவர்கள் மட்டும்தான், ‘இந்திரா என்றாலும் சட்டம் சட்டமே’ என்று அவரது காரை லாக் செய்தார். பிற்காலத்தில் கிரண்பேடி எப்படி நடந்துகொண்டார் என்பதையும் பாருங்கள்.

    ஆளும் கட்சிக்குத் தாவும் அரசியல்வாதிகளைப் (அல்லது சமீபத்தில் தேர்தல் நெருங்குவதால், யார் வெற்றி பெறுவார்கள் என்பதைக் கணித்து அதன்படி தங்கள் இருப்பிடத்தை மாற்றிக்கொள்பவர்களையும்) பற்றிய உங்கள் விமரிசனம், 100 சதவிகிதம் ஒப்புக்கொள்ளக்கூடியது. பாஜக குஜராத் ராஜ்ஜியசபா தேர்தலில் முயற்சி செய்தது யாராலும் ஒப்புக்கொள்ளக் கூடியதல்ல. (யாரோ எழுதியிருந்தார்கள், There is nothing wrong in war and love… something like this. அதை ஒருக்காலும் ஒப்புக்கொள்ள முடியாது)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.