அடடா….எத்தனையெத்தனை உத்தமர்கள் இங்கே….!!!

தமிழகத்தில் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட
“குட்கா” வகையறா புகையிலை பொருட்களை
எந்தவித தடங்கலும் இல்லாமல் பயிர் செய்யவும் –

அறுவடை செய்த பொருளை
இடம் விட்டு இடம் –
ஊர் விட்டு ஊர் – எடுத்துச் செல்லவும்,
குட்டி குட்டி பெட்டிக் கடைகளில் –
சோதனை, வேதனையின்று விற்கவும்,
பெரும் முயற்சி மேற்கொண்ட குட்கா தயாரிப்பாளர்கள்….

கொடுத்த சம்பளம், கிம்பளம் அத்தனைக்கும்
பட்டியல் போட்டு, சுத்தமாக டைரியில்
கணக்கு வைத்த ஆடிட்டர்….

அரசு கொடுக்கும் சம்பளத்தை
ஒரு பக்கம் வாங்கிக்கொண்டே,
கிம்பளம் கொடுக்கும் குட்கா தயாரிப்பாளர்களுக்கு
நேர்மையாக, நாணயமாக நடந்து கொண்ட –

4 மாதத்தில் 60 லட்சம் வாங்கிய
உயர் போலீஸ் ‘பெரிசு’கள் முதற்கொண்டு,
அடிமட்ட காவலாளர் வரை –

சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளிலிருந்து,
வழக்கமாக சோதனை செய்யும் மூன்றாம் கட்ட,
நான்காம் கட்ட ஊழியர்கள் வரை –
35 லட்சம் வாங்கி, தடை உத்தரவை
நடைமுறைப்படுத்தும் பொறுப்பை
திறம்பட நிறைவேற்றிய
உணவு பாதுகாப்பு துறையினர் உட்பட –

டாக்டருக்கு படித்து, சுகாதாரத்துறைக்கே அமைச்சராக
பொறுப்பு வகித்துக் கொண்டு, தமிழகத்தின்
பள்ளிப் பிள்ளைகளும், இளைஞர்களும் நாசமாய்ப்போக
4 மாதத்தில் மட்டுமே, 42 லட்சம் வாங்கிக்கொண்டு

உறுதுணையாக இருந்த அமைச்சர் முதல் –

வானமே இடிந்து விழுந்தாலும், யாரையும் எதுவும்
கேட்க மாட்டேன்… எனக்கு வர வேண்டியது
உரியபடி வந்து விட்டால் போதும் என்றிருக்கும்
மௌனச்சாமி முதல்வர் வரை –

ஜூலை, 2016-ல் சும்மா தலைமைச்செயலருக்கு ஒரு
கடிதத்தை அனுப்பி விட்டு,

பின்னர் அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது
என்று மறந்தும் விசாரிக்காத மத்திய அரசின் வருமான
வரித்துறை சீனியர் அதிகாரிகள் முதல்,

மாநில, மத்திய – விஜிலன்ஸ் துறை ஆணையர்கள்,
அதிகாரிகள் முதல் – போதைப்பொருள் தடுப்பு இலாகா
அதிகாரிகள் வரை –

எது எதையோ தொடர்ந்து,
திருட்டு, இருட்டு காமிரா வைத்து
படுக்கை அறை வரை சென்று அலசி ஆராய்ந்து,
விடாமல் விவாதம் நடத்தும் தொலைக்காட்சி, பத்திரிகை
ஊடகங்கள், புலனாய்வு பத்திரிகைகள் இதனை மட்டும்
கண்டும் காணாமலும் இருந்த விதத்தில் –

தமிழ்நாட்டின் நிர்வாகத்தை எங்கோ 2000 கி.மீ. தள்ளி
உட்கார்ந்து கொண்டு, மிகவும் பொறுப்பாக, கவனிக்கும்
மேன்மை தங்கிய ….. முதல்,

என்ன நடந்தாலும் சரி,
ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை
எதையுமே கண்டு கொள்ள மாட்டோம்
எங்கள் காரியம் எங்களுக்கு முக்கியம் என்று

படுசுட்டித்தனமாக இயங்கும்
மத்தியில் ஆளும் தலைமை வரை –

இங்கே …

ஓ – இருங்கள், இருங்கள் –
இன்னும் சிலர் விடுபட்டு விட்டனர் –
எங்கே தவறினாலும் தவறலாம், பாராட்டுவதிலும்,
நன்றி கூறுவதிலும் மட்டும் யாரையும் தவற விடக்கூடாதே –

16 லட்சம் தனியாக வாங்கிய மத்திய வரித்துறை அதிகாரி,
30 லட்சம் தனியாக வாங்கிய செங்குன்றம் காவல் சீனியர்,
14 லட்சம் தனியாக வாங்கிய உள்ளூர் கவுன்சிலர்….

அடடா….
எத்தனை எத்தனை உத்தமர்கள் இங்கே….!!!
என்ன சொல்லி பாராட்டுவோம் இவர்களை…???

********************

” தூ ….மானங்கெட்ட ஜென்மங்களே……..!!! ”

********************

( விஷயம் இப்படி சந்தி சிரிப்பதைப் பார்த்து யாராவது
வெட்கி, தொங்கி இருப்பார்களோ என்று –

இன்று காலை அவசர அவசரமாக செய்தித்தலைப்புகளை
பார்த்த அத்தனை பேரையும் முட்டாள்களாக்கியவர்களை
வேறு எப்படி அழைப்பது…? )

——————————————————–

பின் குறிப்பு –

ஆளும்கட்சியில் தான் அத்தனையும் காசு தேடும்
கொள்ளிவாய் பிசாசுகள் என்றாகி விட்ட பிறகு…
எதிர்க்கட்சிகளுக்கு என்ன வந்தது….?

மன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை என்றால், உடனே
வெளிநடப்பு செய்து பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து
விட்டு போய்விட்டால், பிரச்சினை தீர்ந்ததா…?

சம்பந்தப்பட்ட அமைச்சரை வெளியேற்றும் வரை –
நாங்கள் அவையை விட்டு வெளியேற மாட்டோமென்று
உள்ளேயே அமர்ந்திருக்க வேண்டியது தானே …?
வன்முறையில் ஈடுபடுவது தானே தவறு…?
அன்றைய கூட்டம் முடிந்த பிறகும்,
வெளியேறாமல், தங்கள் இருக்கையிலேயே
அமர்ந்திருந்தால்…?
இரவு முழுவதும் அங்கேயே தங்கினால்…. ?

ஏன் செய்யவில்லை…?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to அடடா….எத்தனையெத்தனை உத்தமர்கள் இங்கே….!!!

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  //….கூட்டம் முடிந்த பிறகும், வெளியேறாமல், தங்கள் இருக்கையிலேயே
  அமர்ந்திருந்தால்…? இரவு முழுவதும் அங்கேயே தங்கினால்…. ? ஏன் செய்யவில்லை…?//
  ராமாவரத்திற்கு பெட்டியுடன் சென்றால் “கோபாலபுரம் சென்று வந்தாகிவிட்டாரா?” என்று முதலில் கேட்கப்படும் என்று ஒரு பழக்கம் பொதுவாக இருந்துவந்ததாக சொல்லப்படும், அந்தக்காலத்தில். அதுபோல இப்போது என்னென்ன யாராருக்கு எப்படியெப்படி எங்கெங்கே தரப்பட்டதோ! திருடனுக்கு தேள் கொட்டியதை போல இருக்கும்.
  சனி கிழக்கே போனால் என்ன வடக்கே போனால் என்ன, நம்மள பிடுங்காம இருந்தால் சரி என்பதுதானே சமயோசித முடிவு!

 2. தமிழன் சொல்கிறார்:

  கா.மை சார். உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். வியாபாரிகள் அவர்கள் விஷயத்தில் சரியாக நடந்துகொள்வார்கள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தவளைபோல் கத்துகின்ற கட்சிகள் (திருமா, பாமக) போன்ற அனைவருக்கும், அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்றபடி பட்டுவாடா நடத்திவிடுவார்கள். எனக்குத் தெரிந்து அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டும் கொடுப்பதில்லை என்று நினைக்கிறேன். (இன்னமும் பிழைக்கும் வழி அவர்களுக்குத் தெரியவில்லை, அந்தக் கட்சிகளில் கடந்த 20 வருடங்களாக சிற்சில புற்று நோய்கள் கொண்ட ஆட்கள் தென்படினும்)

  சும்மா அரசியலுக்குக் கூவும் எதிர்க்கட்சி, ரொம்ப அதிகமாகக் கூவமாட்டார்கள். ஸ்டாலின், அமைச்சரை மட்டும்தான் சொல்லுவார், எந்த குட்கா எந்தக் கம்பெனி என்று (இந்த நாசூக்கு இல்லாத வை.கோ போல, ஸ்டெரிலைட் கேஸில் அவர் நடந்துகொண்டதுபோல), SOURCEஐத் தாக்கமாட்டார்கள். ஏனென்றால், அன்பளிப்பு வாங்குவது இந்த அரசியல்வாதிகளுக்குப் புதுசா?

  குட்கா போல் இன்னுமொன்று நடந்ததையும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். லாட்டரிச் சீட்டு ஜெ.வினால் ஒழிக்கப்பட்டது. அப்புறம் அதன் தாக்கத்திலிருந்து வெளிவரவும், வேறு போர்வையில் கள்ளத்தனமாக லாட்டரியைப் புழக்கத்துக்குக் கொண்டுவந்து லாபம் பெறவும், நேரடியாக மார்ட்டினிடமிருந்து லஞ்சம் வாங்காமல், ஊழல் கருணானிதி, இளைஞன் என்ற படத்துக்கு கதை வசனம் எழுதின வகையில் 50 லட்சம் பெற்றுக்கொண்டார். தோற்ற படத்தைத் தயாரித்தது மார்ட்டின் என்று சொல்லவும் வேண்டுமோ? இப்படிப்பட்ட திமுகவை நீங்கள் எழுதிய லிஸ்டில் விட்டுவிட்டீர்களே. நிச்சயம் குட்கா பணத்தில் நல்ல பங்கு ஸ்டாலின் கும்பலுக்குப் போயிருக்கும்.

  அதான் ஈழத் தமிழர்களுக்காக வாய் (இன்னும் என்ன என்னவோ) கிழியப் பேசி, போராடி, மனிதச் சங்கிலி, ஏசி பெட் இணை துணை, டெசோ பசோ என்றெல்லாம் கூட்டம், அல்லக்கைகள் வீரமணி, சுப,வீ போன்றவர்கள் சூழ கூட்டங்கள் – அப்புறம் கனிமொழி, திருமா ராஜபக்ஷேயை சிரிக்கச் சிரிக்கப் பார்த்துப் பேசி, பெட்டி வாங்கி, நல்லா சாப்பிட்டுட்டு, திரும்பி தமிழகம் வந்து, பழையபடி, ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டம் போன்றவற்றில் ஈடுபட்டதைத்தானே பார்த்தோமே.

  குட்கா செய்தியெல்லாம் ஒரு நாள் அல்லது ஒரு வாரம். ரெட்டி செய்தியே எங்க போச்சுன்னு தெரியலை. அதுக்கு முன்பு, இடைத்தேர்தல் லஞ்சம், ரெட்டை இலை லஞ்சம், அதுக்கு முன்னால 11 மாடிக் கட்டிடம் இடிந்துவிழுந்த செய்தி. போகப் போக ஏகப்பட்ட கொள்ளையடித்த செய்திகள். அவைகள் செய்திகள் மட்டும்தான். அதைப் பார்த்து பொதுமக்கள் வயிறு எரிந்ததுதான் மிச்சம்.

 3. selvarajan சொல்கிறார்:

  ஊழல் பெருச்சாளிகளும் — ஊரை அடித்து தனது உலையில் போட்டுக்கொள்ளும் எத்தர்களும் — உன்மத்தர்களும் — அமைச்சர்களும் — அடிவருடிகளும் — பெரும் பண முதலைகளும் — ஆன்மிக ருத்ராட்ச பூனைகளும் ” உத்தமர்களாக ” காட்சிக் கொடுக்கும் காலம் இது — மஹா பெரிய கொள்ளைக் கூட்டம் அதிகாரத்தை கைப்பற்றி வைத்துக் கொண்டு கபட நாடகம் போடும் காலம் இது ….

  குற்றசாட்டு எழும் — எப் .ஐ.ஆரும் போடப்படும் — கண்துடைப்பு கைதும் நடக்கும் — மிரட்டி அடிமை நாயாக செயல்பட வைக்க ஒரு சில சொற்ப வருமான வரித்துறை இரவு – பகல் என்று தொடர் ரெய்டும் நடக்கும் — மீடியாக்களும் அவ்வளவு கரன்சியை வாரினார்கள் — கிலோ கணக்கில் வெள்ளி – தங்கம் – விலையுயர்ந்த கற்களை கைப்பற்றினார்கள் என்று கூவி — கூவி விவாதங்களும் — பக்கம் பக்கமாக எழுதியும் மக்களை அசரடிப்பார்கள் — அதன் பிறகு ஒருசிலர் கைது பின் ஜாமீன் — அப்புறம் ஜாலி என்று ஊரை சுற்றி வருவார்கள் — அமைச்சர்கள் — அதிகாரிகள் தொடர்ந்து பதவிகளை பெற்று — மீண்டும் அவர்களது ஊழலை தொடர்வார்கள் …. காலம் காலமாக பார்த்து – பார்த்து சலித்து போன விவகாரம் — இதில் ஆதங்கப்பட்டு என்ன ஆக போகிறது ….

  மாநிலத்தில் ஆட்சியில் இருப்பவனும் — மத்தியில் ஆட்சியில் இருப்பவனும் எப்போது போல பதவிக்காக அவனவன் ” காலை நக்கிக் கொண்டு ” திரிவார்கள் — இதில் எவனும் விதி விலக்கு கிடையாது — வெகு பரிசுத்தமான உத்தமர்கள் போல வேஷம் போட்டு மக்களிடம் வோட்டை பொறுக்கவும் — பிச்சை கேட்டு மீண்டும் வருவார்கள் … ஏமாளி காசுக்கு வோட்டை விற்கும் கூட்டம் அவங்களை மீண்டும் பதவியில் ஏற்றி கைத்தட்டி ஆரவாரம் போடும் — வெறுத்துப்போன காட்சிகள் ….

  குட்கா தடை செய்யப்பட்டது 2013 ல் — சி.பி.ஐ.க்கு புகார்கடிதம் வந்தது 2014 ல் — அதில் மாதவரத்தில் இயங்கி வரும் ஒரு சட்டவிரோத குட்கா தயாரிக்கும் நிறுவனம் கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்து வருவதாகவும், அந்த வரி ஏய்ப்பை மத்திய அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் அந்த புகார் கடிதம் தெரிவிக்கிறது. இந்த புகார் கடிதம், நீண்ட உறக்கத்திற்கு பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. 2015 ல் விசாரணை முடிக்கப்படுகிறது …

  இதில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது ” தமிழக காவல் துறைதான் ” என்று கூறி இங்கே தள்ளிவிட்டு தன ஜோலியை முடித்துக் கொள்கிறது சி.பி.ஐ. — சென்னை அப்போதைய ஆணையர்
  மற்றும் குற்றப் பிரிவினர் நடவடிக்கை எடுத்து — மாதவரம் கோடோவுனில் இருந்து மூட்டை – மூட்டையாக குட்கா கைப்பற்ற பட்டு
  இடத்திற்கும் சீல் வைக்கப்படுகிறது — இது 08.06.2015 அன்று வரை நடந்த கூத்துக்கள் — ” நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து உத்தமர்களும் ” எவ்வளவுக்கு – எவ்வளவு வாரி ரொப்பிக் கொள்ள முடியுமோ அவ்வளையும் செய்து விட்டு அமர்த்தலாக பதவியிலும் நீடிக்கிறார்கள் —

  அதன் பிறகு பல கட்ட விசாரணை என்று நடந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா கோடவுனில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி ஒரு வருடம் முடியப் போகிறது. 7 ஜுலை 2016 அன்று அந்த சோதனை நடைபெற்றது…. சோதனை நடந்து ஓராண்டுக்கு பிறகு இதற்கு முக்கியத்துவம் எப்படி திடிரென்று வந்தது என்கிற கேள்வி எழும் — சோதனையில் அங்கே கிடைத்த ” ஒரே ஒரு பதிவேட்டில் ” இருந்த வில்லங்க விபரங்களினால் தான் இன்று சந்திக்கு மீண்டும் வந்து சிரிப்பாய் சிரிக்கிறது …
  நீங்கள் கூறியுள்ளது போல எதிர்கட்சியினர் உள்ளியிருப்பு போராட்டம் என்று துவங்கினால் அவர்களில் எத்தனை உத்தமர்கள் இருப்பார்களோ — யாருக்கு தெரியும் … வழக்கம் போல நாமும் படித்து — கருத்து பரிமாற்றம் செய்து நமது உள்ள குமுறலை கொட்டி விட்டு செல்வதை தவிர வேறென்ன செய்ய முடியும் — நடவடிக்கை எடுக்க வேண்டிய ” சிஸ்டமே ” பாழ்பட்டு கிடக்கும் போது — ஆண்டவனாலும் ” ஆள்பவர்களாலும் ” ஒன்றும் செய்ய முடியாது — அப்படித்தானே …. ?

 4. Rajamanickam Veera சொல்கிறார்:

  கா.மை அய்யா, இவை அனைத்தும் நிகழ்ந்தது நீங்கள் எப்போதும் விதந்தோதும் ஜெயலலிதா அம்மையாரின் ஆட்சி காலத்தில் நிகழ்ந்தது தான். இது அவருக்கு தெரியாமல் நிகழ்ந்திருக்கும் என்று நம்புகிறீர்களா? அல்லது உங்கள் கணக்கில் இதெல்லாமும் தங்க தாரகையின் சாதனை லிஸ்ட்டில் சேர்த்து விடுகிரிர்களா

  • புதியவன் சொல்கிறார்:

   அய்யா வீரா – லாட்டரிச் சீட்டை ஒடுக்கியவர் ஜெ. அவர்கள். ஆனால் தடைகள் இருந்து ஜெயில் வாசம் மார்ட்டினைப் போன்றவர்களுக்குக் கிடைக்கச் செய்தும், வசனம் எழுதினேன் என்ற பெயரில் 50 லட்சம் லஞ்சம் வாங்கிக்கொண்டவர் கருணானிதி. இதனை தமிழன் மேலே எழுதியிருக்கிறாரே.

   இதில் ஜெ. எங்கு வந்தார்? 1 வருடத்துக்குள்ளாகவே, 500 கோடி கன்டெயினருக்கு அருண் ஜெட்லி வக்காலத்து வாங்கினார். அதற்கப்புறம் ரெட்டி கைது, முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு (ஜெகத்ரெட்சகன்) போன்று பல சம்பவங்கள். எதுவும் அதற்கப்புறம் ஒரு developmentம் இல்லை.

   இந்த குட்காவிற்குக் காரணமான அனைவரும் கைது செய்யப்படவேண்டும் (ஸ்டாலின் முதற்கொண்டு) என்பதில் சந்தேகமேயில்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.