(பகுதி-2) ஜப்பானியர் மலேசிய தமிழருக்கு இழைத்த கொடுமைகள் …

Railway work

Trucks identical to these were used to transport prisoners of war (POWs) from Singapore to Thailand for the construction of the railway

இரண்டாம் உலகப்போரின்போது –
ஜப்பானியரின் இந்த கொடுமையான ரயில்பாதை திட்டத்தில்
சிக்கியவர்களில் மேற்கத்திய நாடுகளின் ராணுவத்தைச்
சேர்ந்த “போர்க் கைதிகள்” ( prisoners of war ) தான்
ஓரளவு படித்தவர்கள், சூழ்நிலையை எதிர்கொள்ளக்கூடிய
மனோதைரியம் உள்ளவர்கள். கொஞ்சம் தந்திரம்
தெரிந்தவர்கள்…. பிரிட்டிஷார், ஆஸ்திரேலியர்கள், அமெரிக்கர்கள், டச்சுக்காரர்கள் அடங்கிய இவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டும்.

மற்ற ஆசிய இனத்தவர் அத்தனை பேரும் அப்பாவிகள்.
(கிட்டத்தட்ட 3 லட்சம் பேர்). ஏமாற்றியும், மிரட்டியும்
ரயில்பாதை திட்டத்திற்கு கொண்டு வரப்பட்டவர்கள்.

இவர்களை உருட்டி, மிரட்டி, துப்பாக்கி முனையில்
சித்திரவதை செய்து வேலை வாங்கினர் ஜப்பானியர்.
அதிகாலையிலிருந்து, இரவு வரை – வெளிச்சம் இருக்கும்
நேரங்கள் முழுவதும் கடுமையான உடல் உழைப்பு.

photo_thailandrailway (1)

இவர்கள் தங்கும் இடங்கள் மகாமோசம். காடுகளின் ஊடே,
விஷ ஜந்துக்களின் நடமாட்டத்துக்கு இடையே, போதிய
வெளிச்சமும் இன்றி, குளிக்கவோ, மலம் கழிக்கவோ கூட
தனி இடமின்றி – நரக அவஸ்தைக்கு உள்ளாயினர்.
3 லட்சம் பேர் திறந்தவெளியில் தான் மலம் போக
வேண்டுமென்றால் …?
இதில் நோய்வாய்ப்பட்டவர்களை கவனிக்க எந்தவித
மருத்துவ மனைகளும் இல்லை.காய்ச்சலுடன் வேலை
செய்ய பணிக்கப்பட்டனர்.

thangum idam

மிகக் கடுமையான நோய் வசப்பட்டவர்களை,
மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறி,
தனியே அழைத்துக் கொண்டு போய் தொலைவில்
ஒரு கொட்டகையில் விட்டு விட்டு வந்து விடுவர்
ஜப்பானிய ராணுவத்தினர்.
நோய் முற்றி, கவனிக்க ஆளின்றி, உணவின்றி,
மருந்தின்றி, அவர்கள் அங்கேயே அநாதைகளாக
மரணத்தை சந்தித்தனர்.

சில நாட்களுக்கு பின் ஜப்பானிய ராணுவத்தினர் அத்தகைய
இடங்களுக்குச் சென்று, மொத்தமாக பெரிய பெரிய
குழிகளைத் தோண்டி இறந்தவர்களையும், குற்றுயிராகக்
கிடப்பவர்களையும் சேர்த்தே புதைத்து விட்டு வந்து விடுவர்.
சில சமயங்களில் மொத்தமாக குவித்து, டீசலை கொட்டி
எரித்தும் விடுவர்.

உணவுக்கோ கடும் பஞ்சம். அவர்களுக்கு வரவேண்டிய
சப்ளை முழுவதும் க்வாய் நதியில், படகுகளின் மூலமே
வர வேண்டியிருந்தது.

லட்சக்கணக்கான கூலியாட்களுக்கு
அது பத்து சதவீதம் கூட பத்தவில்லை. விளைவு –
அத்தனை பேரும் எலும்புகூடுகளாயினர்… கால்வயிற்றுக்கு போதுமான சுண்ணாம்பு போட்ட அரிசி
மட்டும் ஒவ்வொருவருக்கும் ரேஷனாக கிடைத்தது.
அபூர்வமாக அவர்களுக்கு கிடைத்தவை – மரவள்ளிக்
கிழங்கும் கருவாடும்.

சாப்பாடின்றி எலும்பும் தோலுமாக...

இந்த கொடூரங்கள் எல்லாம் முழுவதுமாக வெளியுலகிற்கு
தெரியாமலே போயிருக்கும் – சில புத்திசாலிகளான
மேற்கத்திய யுத்தக் கைதிகள் மட்டும் அவற்றை திருட்டுத்
தனமாக, ஆவணப்படுத்தா விட்டால்…..!

அவற்றில் ஒன்று தான் –
அங்கு அடைபட்டுக் கிடந்த பிரிட்டிஷ் யுத்தக்கைதிகளில்
ஒருவரான Reuben Kandler மிக மிக ரகசியமாக எழுதி
வைத்திருந்த டைரி, மற்றும் அவர் சொல்லிய
மரணக்கதைகளின் அடிப்படையில் அவரது மகன்
Richard Kandler எழுதிய The Prisoner List
என்கிற புத்தகமும் ஒரு குறும்படமும்.

book - the prisoners list -2

3.5 mts -silent movie

https://youtu.be/QlhIwYCxbP4

2.43 minutes – news reel

https://youtu.be/SQ-Sw1aHhY4

ஒரு டைரியில், அங்கு அடைபட்டுக் கிடந்த, யுத்தக்கைதிகள்
பற்றிய விவரங்களை இயன்ற வரை சேகரித்து
எழுதி இருந்தார் கண்ட்லர்.
சிவப்பு மையில் எழுதி இருந்தால், அந்தக்கைதி
அங்கேயே இறந்து விட்டார் என்று பொருள்.
இதன் கூடவே அவர் சேர்த்து வைத்த பொக்கிஷங்கள் –
ஜப்பானியரிடமிருந்து திருடப்பட்ட ஒரு நியூஸ் ரீல்,
மற்றும் ஒரு சிறு பெட்டியில் சில ஜப்பானிய கரன்சிக்கள்.
காவலில் இருந்த ஜப்பானிய ராணுவத்தினரிடமிருந்து
அவ்வப்போது ஒளித்து வைத்து, புதைத்து வைத்து –
கடைசி வரை படு ஜாக்கிரதையாக காப்பாற்றி இருக்கிறார்.

prisoners list

இவர்கள் கட்டிக் கொண்டிருந்த ஆற்றுப் பாலத்தின் மீது
அவ்வப்போது, நேச நாடுகளின் விமானங்கள் வந்து
குண்டுமழை பொழிந்து, பாதையை செயலற்றதாக்கி விட்டுப்போகும். மீண்டும் மீண்டும், இந்த கைதிகள்,
கூலிகள் அவற்றைச் செப்பனிட்டு எழுப்ப வேண்டும்.
சில சமயங்களில் குண்டு வீச்சுக்கு பலியாகி கொத்து
கொத்தாக இறந்தவர்களும் உண்டு.

RAF_aircraft_attack_bridges_on_the_Burma-Siam_railway

ரயில் பால வேலைகள் முடிவடைந்த பிறகு, அதன்
ரெகுலர் மெயின்டெனன்ஸ் வேலைகளுக்காக மட்டும்
சில கைதிகளை வைத்துக் கொண்டு –

சிக்கன நடவடிக்கையாக, மற்ற யுத்தக்கைதிகள்
அனைவரையும் ஆகஸ்ட் இறுதியில் தீர்த்து விடத்தீர்மானித்திருந்தது ஜப்பானிய ராணுவம்.
அதிருஷ்டவசமாக, கடைசி கடத்தில் –
1945, ஆகஸ்ட் 15-ந்தேதி, ஜப்பான் யுத்தத்தில் தோல்வியை
ஒப்புக்கொண்டு சரண் அடைவதாக அறிவித்தது.
கைதிகளின் உயிர் தப்பியது.

கூலிகளாக வந்திருந்த மலேசியத் தமிழர்கள் மற்றும்
பிற இனத்தவரில், உயிர் பிழைத்திருந்தவர்கள் மட்டும்,
அவரவர் ஊருக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். தாங்கள்
பத்திரமாகச் சேர்த்து வைத்து, உடன் கொண்டு வந்திருந்த நோட்டுக்கள் அனைத்தும் செல்லாத நோட்டுக்கள்
என்று ஊர் திரும்பிய பிறகு தான் தெரிந்தது அந்த அப்பாவிகளுக்கு.

Japanese Invasion Money Malay 1 dollar note

ஆஸ்திரேலியாவும், பிரிட்டனும், தங்கள் ராணுவத்தைச்
சேர்ந்த யுத்தக் கைதிகள், ஊர் திரும்பியதும், அவர்களுக்கு
ஓரளவு நஷ்டஈடு கொடுத்து, அத்தனையையும் ஆவணப்
படுத்தினார்கள். இன்றும் ஆஸ்திரேலியா மற்றும்
பிரிட்டனில் இது சம்பந்தமாக பல ஆவணங்கள் பத்திரமாக
பாதுகாப்பில் இருக்கின்றன.

BBC, London இது குறித்து 55 நிமிடங்கள் ஓடக்கூடிய
ஆவணப்படம் ஒன்றினைத் தயாரித்தது. இந்த இடுகையின்
கடைசியில் அதற்கான லிங்க் கொடுத்திருக்கிறேன்.
நேரமும், ஆர்வமும் இருப்பவர்கள் பார்க்கலாம்….

இதில் பெரும் உயிரிழப்புக்கும், பாதிப்புக்கும் உள்ளான
இந்திய வம்சாவளியினரான மலேசியத் தமிழர்கள் தான்
எந்தவித நஷ்ட ஈடோ, அங்கீகாரமோ இல்லாமலே
காணாமல் போனார்கள்.

இவர்கள் பட்ட கொடுமைகள் வெளியில் தெரியாமல்
போனதற்கு காரணமாக யாரைச் சொல்வது….?
இந்திய அரசைச் சொல்ல முடியாது – ஏனெனில்
இந்தியா அப்போது சுதந்திரம் பெற்றிருக்கவில்லை.
பிரிட்டிஷ் அரசு தான் இந்தியாவிற்கு பொறுப்பேற்றிருந்தது.

பொதுவாக யுத்தக்கைதிகள் பற்றிய விவரங்கள்,
ஆவணங்கள் அந்தந்த நாட்டில் இருந்தன…

கூலிக்கு இழுத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் பற்றிய
விவரங்கள் யாரிடமும் இல்லை… யார் யார் சென்றார்கள்..
அதில் யார் யார் அங்கேயே செத்துப்போனார்கள்..
எத்தனை பேர் முழுசாகத் திரும்பினார்கள்…
கிட்டத்தட்ட இதில் எந்த கேள்விக்கும் முழுவதுமான
பதில் இல்லை.

இறுதியாக –

தமிழர்களின் இந்த கொடுமையான சரித்திரத்தை
வெளியுலகிற்கு தெரியப்படுத்த –
” சயாம்-பர்மா மரண ரயில் பாதை ” என்கிற
ஒரு ஆவணப்படத்தை தாங்கள் பத்து ஆண்டுகள்
கடுமையாக உழைத்து தயார் செய்ததாகக் கூறும்
குழுவினர் – உண்மையில் இந்த ஆவணப்படத்தை
தயாரித்ததன் நோக்கம் என்ன…?

இந்த தமிழர்கள் பட்ட கொடுமையை வெளியுலகிற்கு,
குறைந்த பட்சம் இந்தியா முழுமைக்குமாவது,
தெரியப்படுத்துவதா அல்லது

வரிசையாக film festival நடைபெறும் நாடுகளுக்கு மட்டும்
எடுத்துச் சென்று அங்கு திரையிட்டு, தங்களுக்கு
பெயரும், புகழும், பணமும் – தேடிக்கொள்வதா…?

இந்த ஆவணப்படத்தை முதன் முதலில் அவர்கள்
பாரீஸில் -ஒரு film festival -ல் திரையிட்டு,
இரண்டு ஆண்டுகள் கடந்து சென்று விட்டன…
ஆனால் இன்று வரை தமிழ்நாட்டு
மக்களுக்குகூட இவற்றைப் பற்றிய விவரம் தெரியாது.
selected audience-ஐ அழைத்து, தங்களுக்கு விளம்பரம்
தேடிக்கொண்டால் போதுமா..?

அவர்களது நோக்கம் உண்மையானது என்றால்
அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்…?
இந்த ஆவணப்படத்தை நமது தமிழ் /ஆங்கில தொலைக்காட்சி
சேனல்களில் திரையிட ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் ஆவணங்கள் சானல்-4 -ஆல்
இந்திய தொலக்காட்சிகளில் திரையிடப்பட்டது போல….

இல்லா விட்டால், குறைந்த பட்சம் அதனை பொதுமேடையில்
youtube-ல் பதிவிட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால்
இதற்குள்ளாக லட்சக்கணக்கான மக்கள் இதை கண்டிருப்பார்கள்.
இவற்றைப் பற்றி எல்லாம் அறிந்திருப்பார்கள்…

முக்கியமாக, இந்திய அரசுக்கு இந்த ஆவணப்படத்தை
அவர்கள் அனுப்பி வைத்தார்களா…? பலியான இந்திய
வம்சாவளி மலேசியத் தமிழர்கள் குறித்த ஆவணங்கள்
சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டும், இந்த
தேசத்தில் அவர்களது இழப்புகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்
அதற்கான நினைவுச் சின்னம் ஒன்று ஏற்படுத்தப்பட
வேண்டும் என்று வேண்டுகோள் எதாவது விடுத்தார்களா..?

குறைந்த பட்சம் –
அனைத்து நாடுகளிலும் நடந்த,
இனி நடைபெறவுள்ள film festival நிகழ்வுகளில்
திரையிட்டு, சம்பந்தப்பட்டவர்கள்
பெற வேண்டியதை எல்லாம்
பெற்ற பிறகாவது
இந்த” ஆவணப்படம் “| “பொதுமேடை” யில், ஊடகங்களில்
வெளியிடப்படும் என்று நம்புவோமாக.

அதுவரையில் – இந்த இடுகைத் தொடரில்
கொடுக்கப்பட்டுள்ள ஆவணப்படங்களை பார்த்து
முடிந்த அளவு உண்மைகளை தெரிந்து கொள்வோமாக –

Building Burma’s Death Railway Moving Half the Mountain BBC Documentary 2014 -58 mts VIDEO

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to (பகுதி-2) ஜப்பானியர் மலேசிய தமிழருக்கு இழைத்த கொடுமைகள் …

 1. selvarajan சொல்கிறார்:

  ” சயாம்-பர்மா மரண ரயில் பாதை ” பல உயிர்களை பலி வாங்கி — ஜப்பானியர்களின் அடாவடித்தனத்தினால் உருவாக்கப்பட்டதின் பலனை அனுபவித்தார்களோ — இல்லையோ … போரில் தோல்வி அடைந்தது மட்டுமின்றி — ஜப்பானியர்களின் ” என்றும் மாறா ” நினைவாகிப் போன — ” ஹிரோஷிமா — நாகசாகி ” ஆகிய நகரங்கள் சுடுகாடாக — ” கொழுத்த மனிதன் ” என்கிற அணுகுண்டை அமெரிக்கா வீசி — நாசமாக்கியது — எல்லாமே வரலாறாக — இருந்தாலும் மாறாத வடுக்கள் தானே … ?
  ஆவணப்படம் — தயாரித்தவர்கள் …. // வரிசையாக film festival நடைபெறும் நாடுகளுக்கு மட்டும்
  எடுத்துச் சென்று அங்கு திரையிட்டு, தங்களுக்கு
  பெயரும், புகழும், பணமும் – தேடிக்கொள்வதா…? // — அதைத்தானே செய்துக் கொண்டு இருக்கிறார்கள் — செய்வார்கள் …. வேறு என்ன செய்வார்கள் …. ?

 2. Kurinjivendan சொல்கிறார்:

  கையில் ஒரு கணினியும் நான்கு எழுத்து எழுதத் தெரிவதால் மட்டுமே இப்படிச் சூரத்ததனமாகப் பேசும் மவுஸ் பூனைகளோடுப் பதில் லாவணி பாட நான் தயாரில்லை. சொந்தக்காசைப் போட்டு ஏதாவதுப் படைப்பை உலகிற்குத் தரும் நல்லுள்ளங்களுக்குத் தான் தெரியும். ஏன் இவ்வளவு பெரிய சிக்கலை இந்த விமர்சனவித்வான்கள் என் படம் வந்த பிறகு தானே எழுதுகிறார்கள். அதற்கு முன்பு கண்களில் படவில்லையா? நாலு நாடுகளைப் போய் பார்த்திருக்கணும் இல்லை நாலு நூலகமாவது சென்று படித்திருக்க வேண்டும். டவுன்லோட் செய்து எதையாவது கிறுக்குவதற்கும் காவிரி கர்நாடகா புத்திரன் என்று போர்வைக்குள் சொந்தபெயரை மறைத்து மண்வாரித்தூற்றும் நபர்களுக்குப் பதில் சொல்வது வீண்வேலை

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திரு.குறிஞ்சிவேந்தன் அவர்களுக்கு,

   ( மற்ற நண்பர்களுக்கு – அறிமுகம் செய்யாமலே இந்த பின்னூட்டத்தைப் பார்த்தவுடனேயே உங்களுக்கு
   தெரிந்திருக்கும் இந்த நண்பர் “ஆவணப்படத்துடன்” சம்பந்தப்பட்டவரென்று.. தானாகவே வந்து மாட்டிக்கொண்ட
   அவரிடம் கேட்க நமக்கு நிறைய கேள்விகள் உள்ளன…
   எதாவது விடுபட்டுப் போயிருந்தால், நீங்களும் பின்னூட்டம்
   மூலமாக சேர்ந்து கொள்ளலாம்….)

   1) ஏதோ உலகிற்கே தெரியாத விஷயத்தை நீங்கள் தான்
   முதன்முதலில் கண்டுபிடித்து படமெடுத்தது போல் விளம்பரம்
   செய்து கொண்டு அலைகிறீர்களே – நான் கேட்கும்
   கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்…

   2) மேலே நான் கொடுத்துள்ள அத்தனை ஆவணங்களும்
   உங்கள் so called ” ஆவணப்படம் ” தயாரிக்கப்படுவதற்கு
   முன்பே பொது தளத்தில் உள்ளவை தானே…?
   பிறகு நீங்கள் எப்படி “முதல் முதலாக ….” ஆவீர்கள்..?

   3) மலேசிய தமிழ் எழுத்தாளர் சண்முகம் 2007-ஆம்
   ஆண்டிலேயே எழுதி வெளிவந்த சயாம் மரண ரயில்
   தமிழ் நாவலில் உள்ள விஷயங்கள் தானே உங்களது
   so called ” ஆவணப்படத்திற்கு ” – அடிப்படை…?
   ஒன்பது வருடங்களுக்கு முன்னரே ஆவணமாக்கப்பட்டு
   வெளிவந்து விட்ட ஒரு விஷயத்தை நீங்கள் தான்
   புதிதாக கண்டறிந்து வெளியிடுவது போல் கூறுவது ஏன்…?

   4) பத்து ஆண்டுகள் உழைத்து தயாரித்ததாகச் சொல்கிறீர்களே
   அதற்கு தேவை என்ன….? ஏற்கெனவே இருக்கின்ற
   செய்திகளை, ஆவணங்களை பின் தொடர்ந்து,
   ஆறு மாதங்களில் தயாரிக்கக் கூடிய ஒரு செய்திப்படத்திற்கு
   பத்து ஆண்டுகள் உழைத்ததாக சொல்வது உங்களுக்கே
   ஓவராகத் தெரியவில்லை…?

   5) போலீஸ் தடைச் சிக்கலையும் மீறி வெளியிட்டதாக
   கூறிக்கொள்கிறீர்களே – முறையாகச் சென்றால், இதில்
   தடைக்கு எங்கே இடம்…?

   6) அந்தந்த நாட்டில், அந்த மக்களுக்கு நினைவுச்சின்னம்
   அமைக்கப்பட்டது. மலேசியத் தமிழர்களை யாரும்
   கண்டு கொள்ளவில்லை என்கிறீர்களே – இவர்கள்
   சென்ற மலேசியாவில் இவர்களுக்காக நினைவுச்சின்னம்
   எழுப்ப எதாவது முயற்சி எடுத்தீர்களா…?

   7) அல்லது இந்திய அரசிடம் முறையாக
   எதாவது வேண்டுகோள் வைத்தீர்களா …?
   உங்களிடம் உள்ள ஆவணங்களை சமர்ப்பித்தீர்களா…?

   8) உயிரை பலி கொடுத்த அந்த தமிழர்களின் கதையை
   வெளியுலகத்துக்கு எடுத்துச் சொல்லும் பணியையாவது
   ஒழுங்காகச் செய்தீர்களா…?

   film festival களில் காட்டி விட்டால்,
   பரிசும், பெயரும், பணமும் பெற்று விட்டால் –
   போதுமா…?

   உயிர் விட்டவர்களுக்கு நீங்கள் எந்த விதத்தில்
   மேன்மை செய்திருக்கிறீர்கள்…? அவர்கள் தியாகத்தை
   ஊரறியச் செய்திருக்கிறீர்களா…?
   film festival களில் எத்தனை லட்சம் பேர்
   படங்களை பார்க்கிறார்கள்…?

   9) உங்கள் “ஆவணப்படம்” தொலைக்காட்சிகளிலோ,
   யூ-ட்யூபிலோ போடப்படாததன் காரணம் என்ன …?
   எதை எதிர்பார்த்து நீங்கள் இந்த படத்தை இவ்வளவு
   பத்திரமாக பூட்டிப் பாதுகாத்து
   உங்களிடமே வைத்துக் கொள்கிறீர்கள்…?

   கடைசியாக, உங்கள் பின்னூட்டத்திலிருந்து –

   // மவுஸ் பூனைகளோடு பதில் லாவணி பாட
   நான் தயாரில்லை. //

   – பின் இப்போது நீங்கள் வேறு என்ன செய்து
   கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்…?

   // சொந்தக்காசைப் போட்டு ஏதாவதுப் படைப்பை
   உலகிற்குத் தரும் நல்லுள்ளங்களுக்குத் தான் தெரியும்.//

   உங்கள் சொந்தக்காசு எவ்வளவு போட்டீர்கள் என்று
   சொல்லுங்கள்… கூடவே அதில் எவ்வளவு ஊர்களை,
   நாடுகளை, film festival -களை பார்த்தீர்கள் என்றும்
   சொல்லுங்கள்… இதுவரை கிடைத்தது எவ்வளவு என்றும்
   சொல்லுங்கள்… மீதியை நானும் எனது வலைத்தள
   நண்பர்களும் சேர்த்துக் கொடுத்து விடுகிறோம் …

   அப்போதாவது இந்த “ஆவணப்படம் ” பொது மக்களின்
   பார்வைக்கு வரும் அல்லவா…?

   // நாலு நாடுகளைப் போய் பார்த்திருக்கணும்
   இல்லை நாலு நூலகமாவது சென்று படித்திருக்க
   வேண்டும் //

   – நான் எங்கெங்கே போயிருக்கிறேன்…
   கல்லூரியிலும், வாழ்க்கை அனுபவத்திலும்
   என்னென்ன படித்திருக்கிறேன் என்பதை
   எல்லாம் இந்த வலைத்தளத்தின் about பகுதியில்
   எழுதி வைத்திருக்கிறேன்..
   பார்த்து தெரிந்து கொள்ளலாம்..

   // காவிரி கர்நாடகா புத்திரன் என்று போர்வைக்குள்
   சொந்தபெயரை மறைத்து //

   “குறிஞ்சிவேந்தன்” என்று நீங்கள்
   அழைத்துக் கொள்ளும் பெயர்
   உங்கள் அப்பா-அம்மா வைத்த பெயரா …?
   என்பதைச் சொன்னால் என் பெயருக்கு உள்ள
   விளக்கத்தையும் சொல்கிறேன்.

   “லாவணி பாட நான் தயாரில்லை ” என்று
   சொல்லி தப்பியோட முயலக்கூடாது. உங்களை நான்
   இங்கு கூப்பிடவில்லை. தானாகவே இங்கு வந்து
   இவ்வளவு எழுதியவருக்கு,
   இதற்கான மறுமொழியையும்
   கூறும் பண்பும், துணிச்சலும் வேண்டும்.

   உங்களிடமிருந்து வரப்போகும் விளக்கங்களுக்காக,
   நானும், இந்த வலைத்தள நண்பர்களும்
   ஆவலுடன் காத்திருப்போம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • குறிஞ்சி வேந்தன் சொல்கிறார்:

    நீங்கள் உள்நோக்கத்துடன் மனசாட்சி இல்லாமல் பேசுவதற்குப் பதில் சொல்ல வேண்டிய தேவை இருப்பதாக நான் கருதவில்லை. என் நண்பர் ஒருவர் இதை அனுப்பி வைத்ததால் பார்த்தேன். இல்லாவிட்டால் அது கூட தெரிந்திருக்காது. நான் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் விஷயங்களைப் பார்ப்பதில்லை. என் பணிகளின் பின்னுள்ள் அறம் என்ன என்று சான்றோருலகிற்குத் தெரியும். மற்றபடி உங்கள் விமர்சன உலகில் நீங்கள் தூசி வாரித் தூற்றும் பணியைத் தொடருங்கள் மைந்தரே. நன்றி வணக்கம்

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  திருவாளர் குறிஞ்சிவேந்தன்,

  உங்கள் மறுமொழியிலிருந்து –

  // நீங்கள் உள்நோக்கத்துடன் மனசாட்சி
  இல்லாமல் பேசுவதற்கு //

  – எனக்கு இதில் என்ன உள்நோக்கம்….?
  வெளிப்படையாகச் சொல்லுங்களேன்…
  மற்ற வாசக நண்பர்களும்
  தெரிந்து கொள்ளட்டும்.

  என் மீது புழுதிவாரி இரைத்து விட்டு,
  கேவலமான வார்த்தைகளால் வசைபாடி விட்டு,
  பதில் சொல்ல
  உங்களால் முடியவில்லை என்பதால் –
  அவசியம் இல்லை
  என்று கூறி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறீர்களே –
  இது நியாயமா…?.

  //இணையத்தில் கொட்டிக் கிடக்கும் விஷயங்களைப்
  பார்ப்பதில்லை. என் நண்பர் ஒருவர் இதை அனுப்பி
  வைத்ததால் பார்த்தேன். இல்லாவிட்டால் அது கூட தெரிந்திருக்காது.//

  ஒரு பல்கலைப் பேராசிரியர், நான் இணையத்தில்
  எதையும் படிப்பதில்லை என்று கூறிக்கொள்வதை
  பெருமையாக நினைக்கிறீர்கள் போலும்.. சரி.

  நண்பர் அனுப்பி வைத்ததால் படித்தீர்கள் சரி…
  ஆனால் படிக்கிற வழக்கம் கூட இல்லாத நீங்கள் –
  படித்து விட்டு, என் மீது புழுதிவாரித் தூற்றி
  கடிதம் எழுதியது ஏன்…?

  ஒருவேளை நீங்கள் மறுப்பு தெரிவிக்க
  நினைத்திருந்தால் கூட –
  அதை அழகாக, நல்ல மொழியில்
  சாதாரணமாக எழுதி இருக்கலாமே…?

  ஒரு பல்கலையில் தமிழ்ப் பேராசிரியராக
  பணியாற்றும் ஒருவர், புதிதாக மற்றொருவருக்கு
  எழுதும் தனது முதல் கடிதத்திலேயே
  இவ்வளவு தரம் தாழ்ந்து எழுத முனைந்தது ஏன்…?

  உங்கள் ஆவணப்படத்தை -நாங்கள் யாரும் இன்னமும்
  பார்க்க முடியாததால், அதனைப்பற்றி சொல்ல
  எங்களுக்கு கருத்து எதுவும் இல்லை.

  ஆனால், அதனை இயக்கிய, தயாரித்த –
  உங்களைப்பற்றி –
  நீங்களே இந்த வலைத்தளத்தின் வாசகர்களுக்கு
  தெரிய வைத்து விட்டீர்கள்.

  இந்த வலைத்தளம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு
  உங்களால் பதில் சொல்ல முடியவில்லை என்பதை
  புரிந்து கொள்கிறோம்…. நன்றி.

  ( என்றாவது ஒரு நாள், அந்த ஆவணப்படத்தை
  தொலைக்காட்சியிலோ, யூட்யூபிலோ போட முடிந்தால்-
  அன்று தயவுசெய்து இந்த வலைத்தளத்தின்
  வாசகர்களுக்கு தெரிவிக்குமாறு உங்களிடம்
  தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். )

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 4. gopalasamy சொல்கிறார்:

  “நாலு நாடுகளைப் போய் பார்த்திருக்கணும் இல்லை நாலு நூலகமாவது சென்று படித்திருக்க வேண்டும்”. Whether he wants to submit our bio data to him ?I am very sorry to say that he simply exhibited his ignorance and arrogance !!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.