இரணிய கசிபுவும், சேட்டும்…..!!!

narasimha-statue-hampi

இரண்ய கசிபு –
பாகவத புராணத்தில் வரும் ஒரு பாத்திரம்..

இவருடைய சிறப்பு –
படைப்புக் கடவுளாக கருதப்படும் பிரம்மாவிடமிருந்து
பெற்ற ஒரு வரம் –

இவருக்கு அழிவு –
மனிதராலோ, மிருகத்தாலோ,
பகலிலோ, இரவிலோ,
மண்ணிலோ, விண்ணிலோ –
வசிக்கும் இடத்தின் உள்ளேயோ, வெளியேயோ,
பிரம்மனால் படைக்கப்பட்ட எந்த உயிரினாலுமோ,
எந்தவித ஆயுதத்தாலுமோ-
ஏற்படாது என்பது…!!!

இப்பேற்பட்ட அரிய வரங்களைப் பெற்ற
இரண்ய கசிபு படுத்திய பாட்டை
தாங்க முடியாமல், மக்கள் இறைவனை வேண்ட –
அத்தனை கட்டுப்பாடுகளுக்கும் அடங்கிய
ஒரு வித்தியாசமான அழிவை இறைவன்
ஏற்படுத்தியதாக பண்ணியதாக புராணம்….

மனித உடலையும், சிங்கத்தின் தலையையும் – கொண்ட,
தூணைப் பிளந்து கொண்டு தோன்றிய –
மனிதனும் இல்லாத மிருகமும் அல்லாத – ஒரு உருவம்,

வீட்டின் உள்ளேயும் இன்றி, வெளியேயும் இன்றி
வாசல்படியில் வைத்து –

பகலும் இல்லாத, இரவும் இல்லாத அந்தி நேரத்தில் –
மண்ணிலும் இல்லாமல், விண்ணிலும் இல்லாமல்,
தன் மடியின் மீது வைத்து –

எந்த வித ஆயுதமும் இன்றி,
தன் நகங்களாலேயே குத்திக் கிழித்து –
முடிவை ஏற்படுத்தியதாக கூறுகிறது புராணம்….!!!

இரண்ய கசிபு கதை தெரியாதவர்களுக்கு
இதனைப்பற்றி விளக்குவோமே
என்று நினைத்தேன் – அவ்வளவே…!
இந்த கதை இதோடு முடிந்து விடுகிறது….
இனி வேறு விஷயம் –

————————————————————————–

கலைஞர் முதல்வராக இருந்தபோது, உச்சத்தில்
இருந்த ஒரு போலீஸ் அதிகாரி –

கலைஞருக்கு நெருக்கமாக இருந்து,
பல விஷயங்களில் அவருக்கு தனிப்பட்ட
விஷயங்களில் உதவிசெய்து, அதன் பலனாக தனக்கும்
சட்டவிதிகளுக்கு அப்பாற்பட்டு பல பலன்களை
அடைந்ததாகச் சொல்லப்பட்டவர்.

ஆட்சி மாறியதும், அவர் சில முறைகேடுகளுக்காக,
தமிழ்நாடு அரசால் தற்காலிகமாக பணிநீக்கம்
( சஸ்பெண்ட் ) செய்யப்பட்டார்.

அப்போது அவர் மீது சொல்லப்பட்ட
குற்றச்சாட்டுகள் –

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம்,

பொய்த்தகவல்களைக் கொடுத்து
தன் மனைவி, மக்களுக்கென்று தனித்தனியே,
அருகருகே –
சில ப்ளாட்டுகளைப் பெற்றதும்,
பின்னர் தனியார் கட்டுமான நிறுவனம்
ஒன்றின் மூலம் அதில் வர்த்தக உபயோகத்திற்காக
கட்டிடங்கள் கட்டியதும் …..
என்று இப்படிப்போயிற்று –

அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு –
கிரிமினல் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதைத்தவிர,

பிப்ரவரி 2014ல், 2ஜி வழக்கில் ஆதாரங்களை அழிக்க
நடந்த முயற்சிகள் குறித்த உரையாடல்கள் அடங்கிய
ஆவணங்களை ( ஆடியோ டேப்) டெல்லியில்
சிபிஐ நீதிமன்றம் வசம் ஒப்படைத்த மூத்த வழக்கறிஞர்
பிரசாந்த் பூஷண் அது பற்றிய விவரங்களை
பொதுவெளியிலும் வெளியிட்டார்…..!!!
அது மூலமும் பல முறைகேடுகள் வெளிச்சத்திற்கு
கொண்டு வரப்பட்டன.

இவ்வளவு விவகாரங்கள் இருந்த போதிலும் –

அகில இந்திய பணியில் இருக்கும்
ஐபிஎஸ் அதிகாரி என்கிற முறையில்,
அவர் மீது நடவடிக்கைகள் எடுக்க, மத்திய அரசின்
அனுமதி தேவைப்பட்டது.

மத்திய கூட்டணி அரசில் முக்கிய அங்கம்
வகித்த கலைஞரின் செல்வாக்கின் காரணமாக,
முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு –

“அவர் மீது வழக்கு தொடுப்பதற்கு போதுமான
காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை”
என்று கூறி அனுமதி கொடுக்க மறுத்தது.

மாநிலத்திலும், மத்தியிலும் கிடைத்த
அதிகார மையத்தின் – பாதுகாப்பால் –
எத்தனை முறைகேடுகள் வெளிப்படையாகத்
தெரிந்தாலும் –

அந்த அதிகாரியை
தொடக்கூட முடியவில்லை…!!!
எந்த வழக்கிலும் முன்னேற்றமில்லை…

இந்த விஷயம் தொடர்ந்து, வருடக்கணக்காக,
மாநில-மத்திய அரசுகளுக்கிடையே தகவல்
பரிமாற்றங்களிலேயே தடுமாறிக் கொண்டிருந்தது.

அவர் பெற்ற வரம் ( !!! ),
அவரது அதிருஷ்டம் ( செல்வாக்கு…? )
புதிய பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்ற பிறகு,
புதிய அரசும் அதே நிலையை
தொடர்ந்து நிர்வகித்தது. ( கொள்கை முடிவு….!!! )

விளைவு –
மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், சஸ்பெண்ட் உத்தரவை
எதிர்த்து அவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்
மீதான விசாரணை முடிவில் –

இவரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு
பிறப்பித்த உத்தரவிற்கு, மத்திய அரசு அனுமதி
வழங்கவில்லை என்பதால் சஸ்பெண்ட் உத்தரவு
ரத்து செய்யப்பட்டு, இவர் மீண்டும் பணியில்
சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று உத்திரவாகியது…!!!

இது ஒரு பக்கம் இருக்கட்டும்…..

—————————————————————————–

A,B,C,D – என்பது போல் நால்வகை
அதிகாரிகள் பணிபுரிகிறார்கள்.
இவற்றில் D பிரிவினர் மீது மட்டும் அரசின் முன் அனுமதி
பெறாமலே, லஞ்ச ஒழிப்புத்துறை /காவல் துறையால்
எந்தவித கிரிமினல் நடவடிக்கைகள் வேண்டுமானாலும்
எடுக்கப்படலாம்.

ஆனால் ,
A,B,C பிரிவினர் மீது மட்டும் கிரிமினல் நடவடிக்கை
எதுவும் எடுப்பதானால், அரசின் முன் அனுமதியை
பெற வேண்டும் என்பது சட்ட விதி.
இந்த பாரபட்சமான நிலையை எதிர்த்து பொது மனிதர்
ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம்,
மாநில அரசிடம், இந்த விஷயத்தை பரிசீலிக்குமாறு
கூறியதன் பேரில் –

இனி, எந்தவித வேறுபாடும் இல்லாமல் –
A,B,C,D – எந்த பிரிவைச் சேர்ந்தவரானாலும்,
மாநில அரசின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே
வழக்கு தொடர முடியும் என்கிற வகையில்
மாநில அரசு ஒரு புதிய உத்தரவை வெளியிடுகிறது…!!!

அரசு ஊழியர்கள் எந்தப் பிரிவினைச் சேர்ந்தவர்களாக
இருந்தாலும், யார் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க
வேண்டுமானாலும்,
இனி முன் அனுமதி பெறத்தேவை இல்லை
என்று அரசு உத்தரவு வரும் என்று எதிர்பார்த்தவருக்கு –

அதற்கு நேரெதிராக -இப்படி,
எந்த பிரிவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றாலும் அரசின் முன் அனுமதியை பெற வேண்டும்
என்கிற விதியுடன் அரசு உத்தரவு வந்தது
அதிர்ச்சியைத் தரவே, அவர் மீண்டும் நீதிமன்றத்தை
நாடுகிறார்….

எதிர்பார்த்தது போலவே, நீதிமன்றம்,
மாநில அரசின் புதிய உத்தரவில் உள்ள அந்த விதியை
ரத்து செய்து தீர்ப்பு அளிக்கிறது.

இதன் மூலம் – மாநில அரசு மட்டுமல்லாமல்,
மத்திய அரசின் அனுமதியையும் ( A பிரிவினருக்கானது )
பெறத்தேவையில்லை என்பது தான் இதில்
முக்கியமான விஷயம்….!!!

கோர்ட் உத்தரவை மட்டும் பார்த்தால்
இதன் முக்கியத்துவம் தெரியாது – கேட்காமல்,
தானாகவே கிடைக்கும் பயன் இது.

( மத்திய அரசிடமிருந்து A பிரிவினரைச் சேர்ந்தவர்
மீது வழக்கு தொடர அனுமதியைப்பெறுவது
இயலாமல் போவதால் –
A பிரிவினரைச் சேர்ந்தவர்கள் மீது கிரிமினல்
நடவடிக்கை எடுக்கும் முன்னர் மத்திய அரசின்
அனுமதி தேவையில்லை என்கிற
இப்படி ஒரு தீர்ப்பை நீதிமன்றத்திடமிருந்தே
பெற வேண்டும் என்பதே மாநில அரசின் நோக்கமாக
இருக்கும் என்பது எனது கருத்து.

இவர்களாகவே இப்படி ஒரு உத்தரவை போட்டால்,
சம்பந்தப்பட்டவர்கள் அதை எதிர்த்து நீதிமன்றம்
போவார்கள் – எனவே, நீதிமன்றமே
இப்படி ஒரு உத்தரவை இடுமாறு செய்து விட்டால்….??
இந்த யோசனை யாரிடமிருந்து வந்திருந்தாலும் –
இது ஒரு புத்திசாலித்தனமான யோசனை…. )

ஆக மொத்தம், இப்போது எந்த பிரிவினராக இருந்தாலும்,
விஜிலன்ஸ், லஞ்ச ஒழிப்பு மற்றும் காவல்துறை –

யாரிடமிருந்தும், ( மாநில அரசிடமிருந்து மட்டுமல்லாமல்,
மத்திய அரசிடமிருந்தும், எந்தவித ஒப்புதல் / அனுமதியையும்
பெறாமலேயே நடவடிக்கை எடுப்பது சாத்தியமாகி
இருக்கிறது….

கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்கு தடையாக
இருந்த “வரங்கள்” அனைத்தும் இவ்வாறு
தகர்க்கப்பட்டு விட்டதால், இனி ……

———————————————————

நான் தனித்தனியே சில விஷயங்களை
எனக்குத் தெரிந்த வகையில்
இங்கு கூற முயற்சித்திருக்கிறேன்….

நீங்கள் –
இதில் ஒன்றுடன் மற்றொன்றை தொடர்பு படுத்தி
வேறு மாதிரி யோசித்தீர்கள் என்றால்,
அதில் என் பங்கு ஒன்றுமில்லை –
அது உங்கள் கற்பனை வளத்தின்
சிறப்பைச் சொல்கிறது ..!!!
 

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இரணிய கசிபுவும், சேட்டும்…..!!!

 1. Jagannathan chellappa சொல்கிறார்:

  Excellant.

  ” உங்கள் கற்பனை வளத்தின்
  சிறப்பைச் சொல்கிறது ..!!!”

 2. unmai சொல்கிறார்:

  சாட்டை பலமாக சுற்றி இருக்கிறது …. சேட்டு…உனக்கு இருக்குடி ஆப்பு.

 3. gopalasamy சொல்கிறார்:

  Why Subramaniya samy did not give any statement against Settu. Why BJP supported Settu ?

 4. selvarajan சொல்கிறார்:

  இதுவே முடிவான ” உத்திரவாக ” இருக்க — அந்த இரணிய கசிபுவை சம்காரம் செய்த இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் ….. ! ஓட்டைகள் நிறைந்ததும் — இருட்டறை என்று கூறப்படுவதுமான — ஒன்றின் வழியே ரத்தாகவும் வாய்ப்புள்ளதல்லவா … ? எல்லாம் அவன் செயல் என்பது கூட தற்காலத்தில் மாற வாய்ப்பு இருக்கிறது .. தானே … ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.