திருமதி கனிமொழி அவர்களின் பின்னணி ……!!!

k.mozhi

சட்டமன்ற தேர்தலில் இன்று திமுக வுக்காக மாநிலம் முழுவதும்
சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்கிறார் திருமதி கனிமொழி.

தற்போதைய மாநில அரசை கடுமையாக விமரிசிக்கும் கனிமொழி –
ஊழலில்லா நிர்வாகத்தை திமுகவால் மட்டும் தான் கொடுக்க முடியும்
என்றும், தூய நிர்வாகத்தை தர தனது தந்தையை தேர்ந்தெடுக்கும்படியும்
தொடர்ந்து பேசி வருகிறார்….

எதையும், யார் பேச்சையும், யார் புத்திமதியையும் – மக்கள் கேட்கலாம்.
ஆனால், சொல்வது யார் என்பதையும், அவரது பின்னணி என்ன
என்பதையும் யோசித்துப் பார்த்த பின்னர் தானே – அவரது வார்த்தைக்கு
எந்த அளவு முக்கியத்துவம் கொடுப்பது என்பதை தீர்மானிக்க முடியும்…?

ஒரு கசாப்புக் கடைக்காரர் –
கொல்லாமையை,
மாமிசம் உண்ணாமையை பற்றி உபதேசம் செய்தால் –

சர்வாதிகாரி ஹிட்லர் – ஜனநாயகத்தின் அவசியத்தைப்பற்றி
உபதேசம் செய்தால் –

லேடஸ்டாக உதாரணம் சொல்வது என்றால் —
விஜய் மால்யா, வங்கிகளில் கடன் வாங்குவது பற்றி உபதேசித்தால்

நமக்கு எந்த அளவிற்கு அதில் நம்பிக்கை வரும்….?

திருமதி கனிமொழி அவர்களின் பின்னணியைப் பற்றி,
நான் எழுதுவதை விட, புகழ்பெற்ற எழுத்தாளர், சமூக ஆர்வலர்
திரு.ஞாநி அவர்கள் சொன்னதை இங்கு எடுத்துப் போடுவது
சிறப்பாகவும், வலுவுள்ளதாகவும் இருக்கும் என்று நினைத்தேன்.

கீழே உள்ள கட்டுரை, திரு.ஞாநி எழுதி, கல்கி இதழில் வெளிவந்தது –

———————————————

கலைஞர் கருணாநிதி தன் 43வது வயதில் முதன்முறையாக
அமைச்சரானார். அதன் பிறகு தான் நிர்வாக முறைகேடுகள், ஊழல்,
லஞ்ச லாவண்யம், வழக்கு, கைது எல்லாம்…

அவர் மகள் கனிமொழி தன் 43வது வயதில் ஊழல் வழக்கில் கைதாகி
சிறையில் இருக்கிறார். இன்னும் அமைச்சர் பதவியைக் கூட
அடையவில்லை. இதைத்தான் தமிழ் மரபில் தாய் எட்டடி பாய்ந்தால்
குட்டி பதினாறடி பாய்கிறது என்கிறார்களோ!

அரசியலுக்கு வந்த கருணாநிதியின் வாரிசுகளிலேயே ஆழமானவர்,
ஆபத்தானவர் கனிமொழிதான் என்று நான் அவர் பொது வாழ்க்கையில்
நுழைந்த நாட்களிலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன். அழகிரியின்
அதிரடிகள் பகிரங்கமானவை. எனவே எளிதில் அம்பலமாகிவிடக் கூடியவை.
ஸ்டாலினுக்கு பொதுமக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்ற ஆசை
அவரை எப்போதும் எதிலும் அடக்கி வாசிக்கவே வைக்கிறது.

கனிமொழிதான் கருணாநிதியின் உண்மையான அரசியல் வாரிசு.
தன் அரசியல்ரீதியான அவப்பெயர்களையெல்லாம் மறைக்கும்
முகமூடிகளாக ஆரம்பத்திலிருந்து கருணாநிதி தமிழையும் பகுத்தறிவையும்
திறம்படக் கையாண்டு வந்திருக்கிறார். ஸ்டாலின், அழகிரி இருவரிடமும்
அப்படி எந்த முகமூடியும் இல்லை. எதுவும் அவர்களுக்கு
வசப்படவும் இல்லை.

கனிமொழியும் அப்பாவின் இலக்கிய முகமூடியையே தானும் அணிந்தவர்.
அப்பாவுக்கு சங்க காலம். மகளுக்கு சமகால கவிதை. கருணாநிதியின்
எழுத்தை எப்படி ஒருபோதும் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி,
அசோகமித்திரன், பிரபஞ்சன் போன்றோரின் தரத்துக்கு நிகராக வைத்துப்
பார்க்க முடியாதோ,

அதே நிலைதான் கனிமொழியின் கவிதையும் அவரது சம காலக்
கவிஞர்கள் பலரின் தரத்துக்குக் கிட்டவே நெருங்காதது.

அப்பாவின் இலக்கிய வாரிசாகவே தன்னை கனிமொழி முதலில்
காட்டிக் கொண்டதால் அழகிரியும் ஸ்டாலினும் அவரைத் தங்களுக்குப்
போட்டியாகக் கருதவில்லை. முரசொலி மாறனின் வாரிசாக தயாநிதி மாறன்
அரசியலில் கொண்டு வரப்பட்ட பிறகு,

மெல்ல மெல்ல கூடாரத்தில் மூக்கை நுழைத்த ஒட்டகமாக கனிமொழியும்
நுழைவதை ஸ்டாலினும் அழகிரியும் தடுக்க முடியவில்லை. அவர்களின்
ஆசியுடன் அரசியலில் தான் இருப்பதாக ஒரு பிரமையையும் கனிமொழி
ஏற்படுத்தினார். ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இல்லாத –
ஒரு ஜாதி வளையமும் கனிமொழியின் உள்வட்டத்தில் இருந்தது.
எப்படி கருணாநிதி எப்போதும் மீடியாவுடன், பத்திரிகைகளுடன்
(எவ்வளவு எரிந்து விழுந்தாலும் கடிந்துகொண்டாலும்) நட்புறவை விடாமல்
வைத்துக் கொண்டே இருக்கிறாரோ அதே அணுகுமுறையை
சென்னையிலும் டெல்லியிலும் கனிமொழியும் கையாண்டு வந்திருக்கிறார்.

அவரைப் பற்றிய சாதகமான செய்திகள், குறிப்பாக ஆங்கில மீடியாவில்
வெளிவர, இந்த நட்பு பயன்பட்டிருக்கிறது. மாறன் சகோதரர்கள்
கருணாநிதியின் உடல்நலத்தைப் பொருட்படுத்தாமல் அவரை தேர்தல்
வேலைக்காக சிகிச்சையை தள்ளிப் போடச் செய்வதைப் பற்றி ஆங்கில
ஏடுகளுக்கு தகவல்கள், செய்திகள் கனிமொழி வட்டாரத்திலிருந்து தான்
கசியவிடப்பட்டன.

kanimozhi and raja

ஸ்பெக்ட்ரம், ஆனைக்கும் அடிசறுக்கிய வாழைப்பழத் தோலாகிவிட்டது.
அடுத்தடுத்து நடப்பவை கருணாநிதியையும் கனி மொழியையும்
மேலும் மேலும் அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
பெண்ணியவாதி பிம்பம், ஜாமீனுக்காக கோர்ட்டில் வைக்கப்படும் மன்றாடலில்
நொறுங்கிப்போய் விட்டது. பெண் என்பதால், தாய் என்பதால் கருணை காட்ட
வேண்டும் என்று ராம்ஜெத்மலானி மன்றாடினார்.
இன்னும் சில வாதங்கள் படுவிசித்திரமானவை.
நீதி மன்றத்தில் கண்ணியமாக நடந்து கொண்டதால், ஜாமீன் தரவேண்டுமாம்.
எந்தக் குற்றவாளியும் நீதிமன்றத்தில் ரகளை செய்வதில்லை.
அமைதியாக இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல
ண்ணியமாகத்தான் நடந்து கொள்வார்கள். மூன்று மாதமாக ராசா
கூடத்தான் நீதி மன்றத்தில் கண்ணியமாக நடந்து கொள்கிறார்.

தன் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், கனிமொழி சென்னையில்
பள்ளிக்குச் செல்லும் தன் மகனை கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது
என்பது இன்னொரு வாதம். அப்படியானால் இத்தனை ஆண்டுகளாக எப்படி
அவரால் டெல்லியில் எம்.பி.யாக இருக்க முடிகிறது? சென்னையில் மகனைக்
கவனிக்க வேண்டும்; டெல்லிக்கு எம்.பியாகச் செல்ல விரும்பவில்லை
என்று அவர் சொன்னதே இல்லையே?

மூன்று மாதங்களாக சிறையில் இருக்கும் ராசாவைப் பார்க்க டெல்லிக்குப்
போகாத கருணாநிதி, கனிமொழிக்காகப் பதறிக் கொண்டு செல்கிறார்.
குடும்பம்தான் தனக்கு எல்லாம், குடும்பத்துக்காகத்தான் தன் அரசியல்
எல்லாம் என்று திரும்பத் திரும்ப அவர் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

ஒரு கம்பெனியின் பங்குதாரரை அதன் எல்லா நடவடிக்கைகளுக்கும்
பொறுப்பாக்க முடியாது என்று வாதாடுகிறார் கருணாநிதி. இந்த வாதப்படி
அவர் அரசு, சசிகலா மீது ஒரு வழக்கு கூடப் போட்டிருக்கக் கூடாதே?
குற்றம் சாட்டப்பட்ட கம்பெனிகளில் அவர் பங்குதாரர் என்பதால்தானே
தி.மு.க அரசு வழக்கு தொடுத்தது?

ஒரு பாவமும் அறியாதவர் கனிமொழி என்றால் –
ஏன் அவர் ராசாவுக்கு மந்திரி பதவி வேண்டும்,
அதுவும் டெலிகாம்தான் வேண்டும் என்று
நீரா ராடியாவிடம் மன்றாடினார்?

ஏன் அந்த டேப்புகள் பற்றி கருணாநிதியோ, கனிமொழியோ,
வக்கீல் ராம்ஜெத்மலானியோ எதுவுமே சொல்வதில்லை?

ஸ்பெக்ட்ரம் ஊழலில் பயனடைந்த டெலிகாம் கம்பெனிகள் ஏன்
கனிமொழி இருக்குமிடம் நோக்கியே செல்கின்றன?
கனிமொழி பங்குதாரராக இருக்கும் கலைஞர் டி.வி.க்கு
கடன் கொடுக்கின்றன ?
கனிமொழி டிரஸ்டியாக இருந்த தமிழ் மையத்துக்கு
நன்கொடைகள் அளிக்கின்றன?

ஆனால், கனிமொழி கைதானது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று
நிருபர்கள் கேட்டபோது, உங்கள் வீட்டில் உங்கள் பெண் ஒரு குற்றமும்
செய்யாமல் சிறைக்கு அனுப்பப்பட்டால், என்ன மனநிலையில்
இருப்பீர்களோ, அதே நிலையில் இருக்கிறேன் என்று தீர்ப்பை
எழுதத் தயாராகிறார் கருணாநிதி.

– ஒரு குற்றமும் செய்யாமல் 40 வருடங்களுக்கு முன்னால்
சிதம்பரத்தில் போலீஸ் வன்முறையில் செத்துப் போன கல்லூரி
மாணவன் உதயகுமாரின் அப்பாவின் ஞாபகம் கருணாநிதிக்கு
வராவிட்டாலும் நமக்கு வரவேண்டும்.

உதயகுமார் செய்த ஒரே குற்றம் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம்
அளிப்பதை எதிர்த்து அண்ணா மலைப் பல்கலைக்கழக மாணவர்கள்
நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டதுதான்.

இறந்து கிடக்கும் உதயகுமாரின் உடலைப் பார்த்து,
இது என் மகன் இல்லை என்று சொல்லும்படி கருணாநிதியின்
போலீசால் நிர்ப்பந்திக்கப்பட்ட உதயகுமாரின் தந்தையின்
மனநிலையை நாம் மறக்கமுடியுமா?

தி.மு.க.வை அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியது
அவரும் அவர் குடும்பமும்தான் என்றே வரலாறு குறிக்கும்.
இதிலிருந்து மீள வேண்டுமானால் கருணாநிதி உருவாக்கி
வைத்திருக்கும் ஒவ்வொரு மாயையிலிருந்தும்
தி.மு.க தொண்டன் விடுபடவேண்டும்.
ஒவ்வொரு மாயையாகக் கரைந்து கொண்டிருக்கிறது.

———————————

 

 

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to திருமதி கனிமொழி அவர்களின் பின்னணி ……!!!

 1. selvarajan சொல்கிறார்:

  // தி.மு.க.வை அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியது
  அவரும் அவர் குடும்பமும்தான் என்றே வரலாறு குறிக்கும்.
  இதிலிருந்து மீள வேண்டுமானால் கருணாநிதி உருவாக்கி
  வைத்திருக்கும் ஒவ்வொரு மாயையிலிருந்தும்
  தி.மு.க தொண்டன் விடுபடவேண்டும்ஒவ்வொரு மாயையாகக் கரைந்து கொண்டிருக்கிறது .// … என்று ஞானி 2011 – ம் வருடம் கூறுவதற்கு — பல ஆண்டுகளுக்கு முன்பே …… // கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.
  யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.
  ” பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடைசியில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.”” // …. என்று
  கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார் .. !!! கனிமொழி தன்னுடை மகளே அல்ல என்று சொல்லியது — ஒரு காலம் .. ! கனிமொழி தன் அப்பாவை மனதில் கொண்டு ” ஒரு கவிதை .? எழுதியுள்ளார் — அது : —
  “அப்பா சொன்னாரென
  பள்ளிக்குச் சென்றேன்
  தலைசீவினேன், சில
  நண்பர்களைத் தவிர்த்தேன்,
  சட்டைபோட்டுக் கொண்டேன்,
  பல்துலக்கினேன், வழிபட்டேன்,
  கல்யாணம் கட்டிக்கொண்டேன்,
  காத்திருக்கிறேன்
  என் முறை வருமென்று.” — இன்னுமா காத்திருக்கிறார் .. கனிமொழி .. ? மீண்டும் எதை சாதிக்க நினைத்து // சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்கிறார் // … ?

 2. seshadri சொல்கிறார்:

  She made (making) good money through Chennai port trust works. too much amount with the help of balu and vasan the looting started. still is going on. none of the media open their mouth.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப சேஷாத்ரி,

   நான் கூட முன்னர் இதுபற்றி சில செய்திகள் படித்திருக்கிறேன்.
   ஆனால், என் கைவசம் links இல்லை.
   உங்களிடம் மேலதிக தகவல்கள், பிரசுரங்கள் or links இருந்தால்
   கொடுங்களேன். இந்த தளத்திலேயே பிரசுரிக்கலாம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.