மக்கள் செலவில் அரசியல்வாதிகளுக்கு விளம்பரமா ….? சுப்ரீம் கோர்ட் தலையீடு சரியா …?

.

இந்த வாரம் ….. தீர்ப்பு வாரம் …!!!
தீர்ப்புக்கு மேல் தீர்ப்பாக தந்து கொஞ்சம் வித்தியாசமான சூழ்நிலையை
உண்டு பண்ணிக் கொண்டிருக்கின்றன நீதிமன்றங்கள்…

அரசின் விளம்பரங்களில், முதல் அமைச்சர்கள், மற்றும் அமைச்சர்களின்
படங்கள் இடம் பெற தடை விதித்திருக்கிறது சுப்ரீம் கோர்ட்
.

சட்டக் கல்வி நிபுணர் டாக்டர் என்.ஆர். மாதவ மேனன்
( அந்த நாட்களில் – இவரிடம் ஒரு வருடம் சட்டம் பயிலக்கூடிய வாய்ப்பு
எனக்கு கிடைத்திருந்தது. இவரைப் பற்றி எனக்கு ஓரளவு அறிமுகம்
உண்டு. இடதுசாரி சிந்தனைகள் உடையவர் … )
அவர்களின் தலைமையில்
அமைக்கப்பட்ட குழுவின் சில பரிந்துரைகளை ஏற்று சுப்ரீம் கோர்ட்
கடந்த 12ந்தேதி இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

இது பற்றிய முழு செய்தியை – கீழே தனியாகத் தந்திருக்கிறேன்.
நிதானமாகப் படிக்கலாம்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவைப் பற்றி உடனடியாக சில
விமரிசனங்கள் வந்திருக்கின்றன.

கலைஞர் கருணாநிதி இந்த முடிவை கடுமையாக எதிர்த்திருக்கிறார்….
அதே சமயம் டாக்டர் ராமதாசும், விஜய்காந்த் அவர்களும் முழு மனதோடு
வரவேற்று, இன்னும் ஒருபடி மேலே போய் இன்னும் சில
கட்டுப்பாடுகளையும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

கலைஞரின் அறிக்கையிலிருந்து –

மாநில முதலமைச்சர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று
உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பு மாநில உரிமைகளை பறிக்கும்
செயலாகும்.

இந்திய அரசியல் சட்டத்தின்படி, கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில்
இந்தியப் பிரதமருக்கும், மாநில முதலமைச்சர்களுக்கும் சமமான
அந்தஸ்து தான். இன்னும் சொல்லப் போனால் மாநிலங்களிலே பிரதமரை
விட அந்தந்த மாநில முதலமைச்சருக்குத் தான் பொது மக்கள்
முக்கியத்துவம் தருகிறார்கள்.

கல்வியறிவு படைத்த மக்கள் குறைவாக உள்ள இந்தியா போன்ற நாட்டில்,
பக்கம் பக்கமாக வார்த்தைகளைக் கொட்டி விளக்குவதைக் காட்டிலும்
உருவப் படம் ஒன்றை வெளியிட்டு, சுருக்கமான வாசகங்களை
வெளியிடுவதன் மூலம் விளம்பரத்தின் நோக்கத்தினை மக்கள் புரிந்து
கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

எனவே, அரசு விளம்பரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்களின்
படங்கள் இடம் பெறுவது தவிர்க்க முடியாதது என்பது தான்
என்னுடைய கருத்தாகும்

டாக்டர் ராமதாஸ் அவர்களின் அறிக்கையிலிருந்து –

வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு வரவேற்கத் தக்கதாகும்.

உச்ச நீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு ஆளுங்கட்சிகளின்
விளம்பர மோகத்துக்கு கடிவாளம் போட்டிருப்பது பாராட்டத்தக்கது.

ஆட்சியைப் பிடிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின்
விளம்பர மோகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக மக்களின் பணத்தில்
விளம்பரம் தருவதையோ, திட்டங்களைத் தொடங்கி நடத்துவதையோ
இனியும் அனுமதிக்கக் கூடாது.

எந்த திட்டத்திற்கும் தனி நபர்களின் பெயர்களையோ அல்லது
அவர்களைக் குறிக்கும் பெயர்களையோ சூட்டக்கூடாது. ஏற்கனவே
அவ்வாறு பெயர்கள் சூட்டப்பட்டிருந்தால் அந்தப் பெயர்களை நீக்கிவிட்டு
அனைத்துத் திட்டங்களும் அரசுத் திட்டங்கள் என்றே அழைக்கப்பட
வேண்டும். இதை உறுதி செய்வதற்காக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்

தேவையான விதிமுறைகளை மத்திய அரசு
வகுக்க வேண்டும்”

கலைஞர் தன் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றனவே – என்கிற எரிச்சலிலும்,
டாக்டர் ராமதாஸ் – தனக்கு கிட்டாதது மற்றவர்களுக்கும்
கிடைக்கக்கூடாது என்கிற தத்துவத்தின் அடிப்படையிலும்
கூறி இருக்கலாம்.

ஆனால் நாம் இந்த கருத்துக்களை எப்படி பரிசீலிக்கலாம் ….?

– மக்களின் வரிப்பணத்தில் அரசியல்வாதிகள் சுய விளம்பரம்
செய்து கொள்வதை தடை செய்வது நிச்சயமாக வரவேற்கத்தக்க
விஷயம் தான் …..

– ஆனால், இது சட்டமன்ற, பாராளுமன்றத்தின் அதிகாரத்துக்குள்
வருமா … அல்லது நீதிமன்றம் இதில் தலையிடுவது சரியா ….?

– கொள்கை அளவில் கட்டுப்பாடுகளை நீதிமன்றங்கள் விதிப்பது
வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், இந்த அளவிற்கு
விவரமான கட்டுப்பாடுகளை அறிவிக்கலாமா …?

– பிரதமருக்கு அளிக்கப்படும் சலுகை – மாநில முதல்வர்களுக்கு
மறுக்கப்படுவது சரியா … ?

– ஒரு அரசு சில திட்டங்களுக்கு தங்களுக்கு பிடித்தமான பெயரை
வைத்துவிட்டுப் போவதும், அடுத்த கட்சி ஆட்சிக்கு வந்ததும்
முந்திய அரசின் திட்ட பெயர்களை எல்லாம்
தங்களுக்கு பிடித்தவாறு மாற்றுவதற்கும் பதிலாக எல்லாவற்றிற்கும்
“மத்திய அரசு திட்டம்” அல்லது “மாநில அரசின் திட்டம்”
என்று பொதுவாக பெயர் வைத்து விடுவது நல்லது
என்று தானே தோன்றுகிறது….?

நண்பர்கள் இவை குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்….?
பின்னூட்டங்களில் தெரிவியுங்களேன்….

———————————————————————————————————————————————–

விவாதத்தில் குறிப்பிடப்படும் செய்தி கீழே –

அரசு விளம்பரங்களில் அரசியல்வாதிகள் படங்களை வெளியிட தடை விதித்து, சுப்ரீம்
கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

பொது நல வழக்கு
அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் படங்கள் இடம்பெறுவதற்கு எதிராக
‘காமன் காஸ்’ உள்ளிட்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், சுப்ரீம் கோர்ட்டின் மூத்த
வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்குகள் தாக்கல்
செய்திருந்தனர்.

அந்த வழக்குகளில், ‘ஆளும் கட்சி தலைவர்களும், மந்திரிகளும் பொதுமக்கள்
கஷ்டப்பட்டு சம்பாதித்து அளித்த வரிப்பணத்தில், தங்களை முன்னிலைப்படுத்தி
விளம்பரம் செய்வதை தடுக்கும் வகையில் விதிமுறைகளை வகுத்து வெளியிட
வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

வல்லுனர் குழு
இது தொடர்பாக பரிசீலித்து சிபாரிசுகள் செய்வதற்கு சட்டக்கல்வி நிபுணர்
என்.எஸ்.மாதவமேனன் தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவை கடந்த ஆண்டு ஏப்ரல்
மாதம் அப்போதைய தலைமை நீதிபதி பி.சதாசிவம் அமைத்தார். அந்த குழுவில்
டி.கே.விஸ்வநாதன் (பாராளுமன்ற முன்னாள் செயலாளர்), சொலிசிட்டர் ஜெனரல்
ரஞ்சித் குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த குழுவினர் தங்களது பல்வேறு பரிந்துரைகளை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு
அக்டோபர் மாதம் 6–ந் தேதி அளித்தனர். அரசு விளம்பரங்களில் தலைவர்களின்
புகைப்படங்கள் இடம்பெறுவதை ஒட்டுமொத்தமாக தடை செய்ய வேண்டும் என்று
மாதவமேனன் குழு பரிந்துரை செய்திருந்தது. மேலும் தேர்தல் காலத்தில் அரசு
விளம்பரங்கள் வெளியிடப்படக்கூடாது எனவும் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. அவற்றை
சுப்ரீம் கோர்ட்டு பரிசீலனை செய்து வந்தது.

அதிரடி தீர்ப்பு
இந்த நிலையில், அந்த பொது நல வழக்குகளின் விசாரணை முடிந்து, சுப்ரீம்
கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு
நேற்று தனது தீர்ப்பினை வழங்கியது.

இந்த தீர்ப்பில், அரசு விளம்பரங்களில் பிரதமர், ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை
நீதிபதி ஆகியோரை தவிர்த்து, எந்தவொரு அரசியல் தலைவரின் படமும் இடம்
பெறக்கூடாது என அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அச்சு மற்றும் மின்னணு
(காட்சி) ஊடக விளம்பரங்கள் என இரண்டுக்கும் பொருந்தும்.

அதே நேரத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தி உள்ளிட்ட மறைந்த தலைவர்களின்
படங்களுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

முதல்–மந்திரிகள், கவர்னர்கள் படம்
அரசு விளம்பரங்களில் மாநில முதல்–மந்திரிகள், கவர்னர்கள் படங்கள் இடம்பெற தடை
விதிக்கப்பட்டுள்ளது.

அரசு விளம்பரங்களை பொறுத்தமட்டில், அவை ஒரு நோக்கத்தை கொண்டிருக்க
வேண்டும்; ஆளும் கட்சியின் அரசியல் நலன்களை அடிப்படையாக கொண்டிருக்க
கூடாது என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தலைவர்கள், மந்திரிகள் படங்களை வெளியிடுகிறபோது, அது தனிநபர்
துதிபாடலுக்கு வழிவகுத்துவிடும் வாய்ப்பினை கொண்டுள்ளது, இப்படி முதல்–மந்திரிகள்
உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அரசு திட்டங்கள் தொடர்பான பல்வேறு
விளம்பரங்களில் தங்கள் படங்களை வெளியிட்டு, அரசியல் ஆதாயம் பெறும்
வழக்கத்தினை கொண்டிருந்தனர் எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் கோடிட்டுக்காட்டி
உள்ளனர்.

சாதனை விளம்பரங்கள்
‘‘ஆட்சிக்கு வந்த இத்தனையாவது நாள் (100–வது நாள்), மாதம் (3 மாதம், 6 மாதம்),
ஆண்டு (ஓராண்டு, 2 ஆண்டு) என்கிற வகையில் எல்லாம் விளம்பரங்கள்
வெளியிடுகிறார்கள். இதில் அரசின் சாதனைகள் பட்டியலிடப்படுகின்றன. ஆனால்
அரசின் சாதனைகள் விளம்பரப்படுத்தப்பட வேண்டியவை அல்ல. அதை மக்கள் உணர
வேண்டும். இருந்தபோதிலும், அரசில் செயல்பாட்டை மக்களுக்கு தெரிவிக்க
பயன்படுவதால் இத்தகைய விளம்பரங்கள் அனுமதிக்கப்படும்’’ எனவும் நீதிபதிகள்
தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

அதே நேரத்தில், ‘பாட்னா ஐகோர்ட்டு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது’ என்பது
மாதிரியான விளம்பரத்தால் பலன் இல்லை என்பதால் அத்தகைய விளம்பரங்கள்
தவிர்க்கப்பட வேண்டும்’ என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

தீர்ப்பின் அம்சங்கள்
மாதவமேனன் குழு செய்திருந்த சில பரிந்துரைகளை நீதிபதிகள் மாற்றி அமைத்து
தீர்ப்பு அளித்துள்ளனர். அவற்றில் முக்கியமானவை வருமாறு:–

* அரசு விளம்பரங்களில் தனிப்பட்ட நபர்களின் படங்களை வெளியிடக்கூடாது என்ற
பரிந்துரையை, ‘பிரதமர், ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோரது
படங்களை, அவர்களது அனுமதி பெற்று வெளியிடலாம்’ என மாற்றி அமைத்துள்ளனர்.

* அரசு விளம்பரங்கள் தொடர்பாக செயல்திறன் தணிக்கை நடத்த வேண்டும் என்ற
மாதவமேனன் குழுவின் பரிந்துரையை நீதிபதிகள் ஒப்புக்கொள்ளவில்லை.

* தேர்தல் நேரங்களில் அரசு விளம்பரங்களை தடை செய்ய தேவை இல்லை என
நீதிபதிகள் கூறி விட்டனர். ஆனால் அத்தகைய விளம்பரங்களை வெளியிடுவதில்
நேர்மை இருக்க வேண்டும்.

3 உறுப்பினர் குழு
தீர்ப்பு முறையாக அமல்படுத்தப்படுகிறதா, விளம்பரங்கள் பாரபட்சமற்ற முறையில்
ஊடகங்களுக்கு வழங்கப்படுகின்றனவா என்பதையெல்லாம் கண்காணிக்க 3
உறுப்பினர்கள் குழு ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவை சுப்ரீம் கோர்ட்டே அமைக்க வேண்டும் என்ற
வல்லுனர் குழு பரிந்துரையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக அமைந்துள்ளது.

(http://www.dailythanthi.com/News/India/2015/05/14024352/Government-advertisementsProhibits-the-
publication.vpf )

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to மக்கள் செலவில் அரசியல்வாதிகளுக்கு விளம்பரமா ….? சுப்ரீம் கோர்ட் தலையீடு சரியா …?

 1. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி,
  எனக்கு சில சந்தேகங்கள்.
  1. பிரதமர், குடியரசுத்தலைவர் சரி.
  உச்சநீதிமன்றத் தலைவர் ??
  2. பிரதமர் படத்தை உபயோகித்து வெளியிடப்படும் விளம்பரங்கள் மூலம் (மாநில) அரசின் எல்லா சாதனைகளும் தற்போதைய மையஅரசினது என்று (தவறான) விளம்பரம் ஆக மக்களிடம் போய்ச்சேராதா?
  3. குடியரசுத்தலைவர் படத்தை உபயோகித்து வெளியிடப்படும் விளம்பரங்கள் மூலம் (மாநில) அரசின் எல்லா சாதனைகளும் முந்தைய அல்லது அவரை நியமித்த மையஅரசினது என்று (தவறான) விளம்பரம் ஆக மக்களிடம் போய்ச்சேராதா?
  4. தேசப்பிதா உள்ளிட்ட தலைவர்கள் படங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்றால் அப்படங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளதா? அத்தலைவர்கள் கட்சிசார்ந்தவர்களா? இல்லையா?
  5. இந்தத் தீர்ப்பின் மூலம் மாநிலங்களின் உரிமை பறிக்கப்படுவதைப் போன்ற நிலை தோன்றுகிறதே? மாநிலங்களின் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறையின் கீழ் இவை வராதா?
  ————-
  பெரிய டவுட்
  விஜயகாந்தும் ராமதாசும் இதை வரவேற்றதோடு மேலதிக கருத்துக்களையும் கூறியிருப்பதால் தங்கள் தலைமையிலான அரசு இனி எப்போதுமே தமிழகத்தில் அமையப்போவதில்லை என்று அவர்களே ஒப்புக்கொள்கிறார்களா?

  இப்போதைக்கு என் சந்தேகங்கள் இவ்வளவுதான் யுவர் ஆனர். மீண்டும் வருவேன். சந்தேகங்களுடன். முடிந்தால் நீங்கள் / மற்ற நண்பர்கள் விளக்குங்கள்.
  🙂

  • srinivasanmurugesan சொல்கிறார்:

   அய்யா!!! மத்திய அரசின் விளம்பரம் என்றால் மத்திய/இந்திய அரசின் இலச்சினையும் மாநில அரசின் விளம்பரம் என்றால் அந்த அந்த மாநில அரசுகளின் இலச்சினைகளையும் பயன் படுத்தலாம்.தனிநபர் படங்களை தவிர்க்களாம்

 2. today.and.me சொல்கிறார்:

  Rs 780 crore spent by DAVP in 6 months till March 2015: Government

  http://articles.economictimes.indiatimes.com/2015-04-28/news/61615852_1_march-2015-davp-6-months

  தற்போதைய மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த ஆறு மாதங்களுக்குள்ளாக செய்தி&விளம்பரம் வகையில் செலவுசெய்த தொகை என்று இன்று நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதில் இது.

  மத்திய அரசு மட்டுமே இவ்வாறு செலவுசெய்து தன்னை அனைத்து மாநிலங்களிலும் நிலைநிறுத்திக்கொள்ள இயலுமே? இது எவ்வாறு?

 3. பிங்குபாக்: மக்கள் செலவில் அரசியல்வாதிகளுக்கு விளம்பரமா ….? சுப்ரீம் கோர்ட் தலையீடு சரியா …? | Classic Tamil

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  மாநில அரசின் முதலமைச்சர் படமும் இடம் பெற வேண்டும். எல்லா திட்டங்களும் மத்திய அரசை மட்டுமே சார்ந்தது ஆகாதே ? மாநில அரசின் திட்டங்களும் உண்டல்லவா ?. மற்றபடி, நண்பர் டுடே & மீ கூறுவது போல தேச தலைவர்கள் எந்த வகையில் வருவார்கள் ? ஆளும் மத்திய சர்க்கார் அவர்களுக்கான தனி தொகுப்பு மட்டுமே வைத்துக் கொள்வார்கள். அதில் பலர் நமக்கு பெயரளவில் தெரியாதவர்களும் இடம் பெறுவார்கள். நமது பிராந்திய தலைவர்கள் முடகப்படுவார்கள்.

 5. கோபாலன் சொல்கிறார்:

  ”மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லாப் (இலவச) பொருட்களில், அது மக்களின் வரிப்பணமாக இருப்பதால், அந்தந்தப் பொருட்களிலும் அவை வழங்கப்படும் இடங்களிலும் அந்த அரசின் சின்னமும் பெயரும் மட்டுமே இருக்கவேண்டும்” என்று இதே நீதிபதிகள் கூறும் நாள் என்று வருமோ. இதுபோன்ற தீர்ப்பு தமிழக அரசியலில் ஒரு வளமான திருப்பத்தை ஏற்படுத்துமல்லவா.

  பிரதமர் மட்டும் அதில் தெரியலாம் என்கிற அவர்கள் கருத்து ஏற்புடையதல்ல.

  கோபாலன்

 6. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

 7. today.and.me சொல்கிறார்:

  இன்னுமொரு சந்தேகம், மாநில அரசின் அரசியல்வாதிகள், மாநில அரசு அதிகாரிகள் ஆகியோரின் அறிவு / உடல் உழைப்பினால் விளையும் திட்டங்களுக்கு மத்திய அரசின் வர்ணம் பூசப்படுவது எவ்வாறு?

  தனிநபர் துதிபாடலாக மக்கள் வரிப்பணமோ அதனால் உருவாக்கப்படும் விளம்பரங்களோ அமைந்துவிடக்கூடாது என்று எண்ணும் அதேவேளையில் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மூவரை மட்டுமே அதிகப்படியான வகையில் முன்னிறுத்துவது போல ஆகாதா? கிட்டத்தட்ட சர்வாதிகார முறைபோல.

  இந்தத் தீர்ப்பின் போக்கு எளிதாகப் புரியும் அளவிற்கு எனக்கு அறிவு போதவில்லை என்றுகூடச் சொல்லலாம். தயவுசெய்து தனிஇடுகையாகவாவது விளக்கவும்.

 8. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சரியில்லை. அரசுக்கு விளம்பரம் வெளியிடவும் அரசியல்வாதிகளின் படத்தைப் போட்டுக்கொள்ளவும் உரிமை உண்டு (ஏனென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது). மத்திய அரசானாலும் மானில அரசானாலும் இதனைச் செய்யலாம். அரசின் பணம் என்பது மக்களின் பணம். இது விரயம் என்று எண்ணுவது சரியல்ல. இது விரயம் என்று நினைப்பவர்கள் ஃப்ளெக்ஸ், கட்டவுட் வைப்பதும் குற்றம் என்று சொல்லவேண்டும். எத்தகைய விளம்பரத்தையும் (மக்களின் நலத்துக்கான கான்ஸர், ஹெச்.ஐ.வி போன்ற விளம்பரங்களைத் தவிர) வெளியிடக்கூடாது (யாரும் எந்த இந்தியரும்) என்று சட்டம் வந்தால் அது சரி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.