பெரிய பெரிய வரத்தக நிறுவனங்களும்,
பெரும் தொழிலதிபர்களும்,
அரசியல் கட்சிகளுக்கு பெரிய அளவில் தொகைகளை
“டொனேஷன்” ( நன்கொடை ) என்கிற பெயரில் அளிக்கின்றன.
இவ்வாறு கொடுக்கப்படும் “கொடை”களுக்கு வருமான
வரியிலிருந்து விலக்கு வேறு அளிக்கப் படுகிறது.
அந்த கட்சி, இந்த கட்சி என்றில்லாமல் கிட்டத்தட்ட
அகில இந்திய அரசியல் கட்சிகள் அனைத்துமே
( கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர ) பெரிய அளவில்
“நன்கொடை” பெறுகின்றன.
அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரையில் “டொனேஷன்”
என்கிற பெயரில் அவை 20,000 ரூபாய்க்கு மேல் ஒரே நபர்
அல்லது நிறுவனத்திடமிருந்து பெறும் தொகைகள் பற்றிய
விவரங்களை மட்டும் கொடுத்தால் போதும் என்கிற
தேர்தல் கமிஷனின் விதிகள் –
பெரும்பாலான அரசியல் கட்சிகள், தங்களுக்கு கிடைக்கும்
கருப்புப் பணத்தை 20,000 ரூபாய்க்கு கீழ் வருமாறு
துண்டு துண்டாகப் பிரித்து, பொய்க்கணக்கு கொடுக்க
பெரும் உதவியாக இருப்பது ஒரு பக்கம் என்றால் –
இந்த நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் – எதற்காக
அரசியல் கட்சிகளுக்கு “நன்கொடை” அளிக்க வேண்டும்
என்கிற கேள்வி அடுத்து எழுகிறது.
அனேகமாக பெரிய கம்பெனிகள், கட்சி வித்தியாசம் இல்லாமல்
பெரிய கட்சிகள் அனைத்திற்கும்
நன்கொடை கொடுக்கின்றன என்றாலும் –
கொடுக்கப்படும் தொகையில் பெருத்த வித்தியாசம் இருப்பதை
காணலாம். தேர்தலுக்கு முந்திய ஆண்டு வரை – ஆளும் கட்சிக்கு
அதிகம் கொடுக்கும் கம்பெனிகள்,
தேர்தல் ஆண்டுகளில் மட்டும் அடுத்து எந்த கட்சி
ஆட்சிக்கு வரும் என்பதை யூகித்து, அந்த கட்சிக்கு அதிகமாக
கொடுப்பதைப் பார்க்க முடிகிறது.
சில தேசிய கட்சிகளுக்கு 2012-13 மற்றும் 2013-14-ல்
“நன்கொடை”யாக கிடைத்த தொகை பற்றிய ஒரு கிராப் கீழே –
2012-13-ல் பாஜக பெற்ற தொகை – 83.19 கோடி.
2013-14-ல் அதே பாஜக பெற்ற தொகை – 170.86 கோடி…!
2012-13-ல் காங்கிரஸ் பெற்ற தொகை – 11.72 கோடி.
2013-14-ல் -ல் அதே காங்கிரஸ் பெற்ற தொகை – 59.58 கோடிகள்..!!
பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க – பாஜகவின் மீது
எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க – பாஜக விற்கு கிடைத்த
“டொனேஷன்”களும் அதிகரித்துள்ளது தெரிய வருகிறது …!!!
இதிலிருந்து தெரிய வருவது …?
வரத்தக நிறுவனங்களும்,
பெரும் தொழிலதிபர்களும்,
ஆளும் கட்சியை,
ஆளப்போகும் கட்சியை ஆதரித்து – பெரிய அளவில்
“டொனேஷன்”களைக் கொடுப்பது, தேர்தல் முடிந்து ஆட்சிக்கு
வந்த பின் அந்தந்த கட்சித்தலைவர்கள் மூலம்
தங்களுக்கு வேண்டிய காரியங்களை சாதித்துக் கொள்ளும்
முயற்சிகள் நடக்கின்றன என்பதைத்தானே ?
இதில் இன்னும் சில விவரங்களும் வெளியாகின்றன.
2013-14-ல் கொடுக்கப்பட்டுள்ள மொத்த “டொனேஷன்”களில்
சுமார் 69 %- பாஜக விற்குப் போய் விட்டது.( எதிர்பார்ப்பு….!! )
பாஜக விற்கு கிடைத்த மொத்த ‘டொனேஷனில்’
92 % பெரிய பெரிய கார்பொரேட் நிறுவனங்களிலிருந்து
கிடைத்திருக்கிறது.
பெரிய அளவில் டொனேஷன் கொடுத்த சில நிறுவனங்கள் –
Bharti Group’s Satya Electoral Trust – of Rs.41.37 crore.
Sterlite Industries India Ltd. – Rs.15 crore.
Cairn India Ltd – Rs.7.5 crore.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் – இந்த கம்பெனிகளில் எதுவுமே,
இதற்கு முந்திய 2012-13 – வருடத்தில் பாஜக விற்கு டொனேஷன்
எதுவுமே கொடுக்கவில்லை….!!!
அதே போல், ஜெயிக்கும் குதிரையாக கருதப்பட்ட
பாஜக விற்கு 2013-14-ல் Rs.170.86 கோடி கிடைத்திருக்கிறது.
(அதற்கு முந்தைய ஆண்டு கிடைத்தது – Rs.83.19 கோடி மட்டுமே)
அனேகமாகத் தோற்று விடும் என்கிற நிலையில் இருந்த
காங்கிரஸ் கட்சிக்கு 2013-14 -ல் கிடைத்தது
ரூபாய் 59.58 கோடிகள் மட்டுமே….!
(அதற்கு முந்திய ஆண்டு வசூல் – 11.72 கோடி ரூபாய்.)
இந்த நிலை அனேகமாக அனைத்து கட்சிகளுக்கும் பொருந்துகிறது.
இதில் தப்பிப் போனவர்கள் – கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமே.
உறுப்பினர்கள் கொடுக்கும் சந்தா, கூட்டங்களில் உண்டியல்
வசூல், சிறிய அளவில் நன்கொடை வசூல் என்கிற வகையில்
அரசியல் செய்வது கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே.
சில கேள்விகள் எழுகின்றன –
பெரிய பெரிய கம்பெனிகள், வர்த்தக நிறுவனங்கள்,
தொழிலதிபர்கள் ஆகியோரிடம் கோடிக்கணக்கில்
நன்கொடை என்கிற பெயரில் பணம் பெற்றுக் கொள்ளும்
இந்த அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்துக்கு
வரும்போது – பதிலுக்கு அவர்களுக்கு
சலுகை காட்டாமல் இருக்குமா ?
இதில் கட்சிகளின் பெயரில், வெளிப்படையாக,
கணக்கில் வைத்து கொடுக்கப்படும் பணமும் உண்டு.
முக்கிய தலைவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கொடுக்கப்படும்
பெரும்தொகை பட்டுவாடக்களும் உண்டு.
முக்கிய தலைவர்களுக்கான-
விமானப் பயணங்கள், ஹெலிகாப்டர் பயணங்கள், அங்கங்கே
தங்கும் வசதிகள் ஆகிய “சேவை”களை கவனிப்பதும்
“ஸ்பான்சர்” செய்வதும் உண்டு.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள கம்பெனிகளின் லிஸ்டில்
முக்கியமான பெருந்”தலை”களான –
அம்பானிகள், அடானிகள், டாட்டாக்கள் எல்லாம் மிஸ்ஸிங்…!
அது எப்படி என்று தான் தெரியவில்லை.
யார் யாரோ கொடுக்கும்போது, “தலை”கள் எல்லாம்
கொடுக்காமல் இருக்குமா …? ஒரு வேளை இவர்கள்
எல்லாம் service provider களாக மாறி விட்டார்களோ ?
இவ்வாறு அரசியல் கட்சிகள் பெறும் பணம் அல்லது
sponsorship ஒழுங்காக கணக்கில் கொண்டு வரப்படுகின்றனவா …?
அனேகமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால், இந்த கட்சிகளின் வரவு-செலவு விவரங்களை
ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் கமிஷனுக்கு தர வேண்டும்
என்கிற விதி மட்டும் தான் இருக்கிறதே தவிர,
அந்த கணக்கு வழக்குகள் முறையாக இருக்கின்றனவா ?
சரியாக இருக்கின்றனவா ? – என்பதை verify செய்ய,
அதிகாரபூர்வமாக தணிக்கை (audit) செய்ய –
தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இல்லை….
கொடுக்கப்படும் விவரங்களை வாங்கி file செய்து கொள்வதோடு
தேர்தல் கமிஷனின் பொறுப்பு முடிவடைந்து விடுகிறது.
தேர்தல் நடக்கும் நேரங்களில் –
வேட்பாளர்களின் சார்பில் செய்யப்படும் செலவுகளுக்கு
மட்டுமே உச்ச வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின்
செலவு விவரங்களை கண்காணிக்கும் அதிகாரமும்
தேர்தல் கமிஷனுக்கு உண்டு.
அதே நேரத்தில், அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளின்
வரவு-செலவுகளை கண்காணிக்க அதிகாரம் கிடையாது…
தேர்தல் நேரத்தில் கட்சிகளின் செலவைக் கட்டுப்படுத்த
“உச்சபட்ச” வரம்பு நிர்ணயம் எதுவும் கிடையாது.
வகைதொகை இல்லாமல் தேர்தலில் பணம் தண்ணீராக
இரைக்கப்படுவதால் தான் – “ஜனநாயகம்” ஜெயிப்பதற்கு
பதிலாக “பணநாயகம்” ஜெயிக்கிறது. பண வசதி உள்ளவர்கள்
மட்டுமே தேர்தலில் நிற்க முடிகிறது.
தேர்தல் செலவுகளுக்கு கோடிக்கணக்கில்
பணம் தேவைப்படுகிறது என்பதுவும்,
அரசியல் கட்சிகள் ஊழலில் திளைக்கவும்,
லஞ்சம் வாங்கவும் ஒரு முக்கியமான காரணம்.
தேர்தல் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தால்,
பெரும் அளவில் நிலைமை சீர்படும்.
வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை அரசாங்கமே
மேற்கொண்டு – வேட்பாளர்களின் அறிமுகத்திற்கான,
குறைந்த பட்ச தேவைகளை மட்டும் நிறைவேற்றி,
தேர்தலை நடத்தினால், பணத்தின் செல்வாக்கு
கட்டுப்படுத்தப்படும்.
அனைத்து கட்சிகளுக்கும், அனைத்து வேட்பாளர்களுக்கும் –
ஒரே அளவில் விளம்பரம் செய்யப்படும்.
அவ்வாறு நடத்தப்படும் தேர்தல்களில் –
வேட்பாளர்களின் மீது தொகுதி மக்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு,
அரசியல் கட்சித்தலைவர்களின் செல்வாக்கு –
கட்சிகளின் மீது மக்களுக்கு உள்ள பிடிப்பு –
ஆகியவை மட்டுமே வெற்றிக்கான காரணிகளாக அமையும்.
பணத்தின் ஆட்சி ஒழிக்கப்படும்.
பெரும் வர்த்தக நிறுவனங்கள், கம்பெனிகள் ஆகியவை –
அரசியல் கட்சிகளுக்கு “டொனேஷன்” ( நன்கொடை )
கொடுப்பதை தடை செய்ய வேண்டும்.
பிற்காலத்தில், ஜெயித்து வரும் கட்சிகள்
அந்த கம்பெனிகளுக்கு காட்டும் சலுகைகள் இதன் மூலம்
ஓரளவு தவிர்க்கப்படலாம்.
கடந்த மாதம், பிரேசில் நாட்டிலிருந்து President of Brazil’s
Superior Electoral Court – Mr. Jose Antonio Dias Toffoli,
இந்தியா வந்திருந்தார். அவர் தேர்தல் சீர்திருத்தங்களைப்பற்றி
கூறும்போது –
பிரேசிலில், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு
கம்பெனிகள் கொடுக்கும் “டொனேஷனுக்கு” உச்சவரம்பே
கிடையாது என்றும், தேர்தல் செலவுகளில் 95 % கம்பெனிகளே
பார்த்துக் கொள்கின்றன என்றும் கூறினார்.
இது உச்சபட்ச லஞ்சஊழலுக்கு காரணமாக அமைகிறது
என்பதால், அந்நாட்டில் தேர்தல் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு
வரவிருக்கின்றன என்றும் – கம்பெனிகளின் டொனேஷனுக்கு
முற்றிலுமாக தடை கொண்டு வரப்படுகிறது என்றும்
கூறினார்.
நமது தேர்தல் கமிஷன் தான் – இத்தகைய
தேர்தல் சீர்திருத்தங்களுக்கும், தேர்தலில் பணத்தின்,
பணக்காரர்களின் – ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டவும்
முன் முயற்சி எடுக்க வேண்டும். இதற்கு அரசியல் கட்சிகளின்
ஆதரவு கிடைக்காவிடினும், மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.
இது விஷயத்தில் மற்ற நாடுகளில் பின்பற்றப்படும்
வழிமுறைகளைக்கூட நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.
இந்த “விமரிசனம்” வலைத்தளத்திற்கு உலகின் பல பகுதிகளிலும்
வாசக நண்பர்கள் இருக்கிறார்கள். இதில் ஆர்வம் உள்ளவர்கள்,
பின்னூட்டம் எழுதக்கூடியவர்கள் – தங்கள் நாடுகளில்
நிலவும் வழக்கங்களைப் பற்றி சுருக்கமாக பின்னூட்டங்களில்
எழுதினால் – நமக்கும் ஓரளவு விவரங்கள் கிடைக்கும்.
நான் மீண்டும் இதே தலைப்பில் வருகிறேன். அதற்குள்
வரக்க்கூடிய பின்னூட்டங்களையும் சேர்த்துக் கொண்டு
நாம் விவாதிக்கலாம்.
இது குறித்து, நண்பர்களின் கருத்துக்களையும் –
வழக்கம்போல் பின்னூட்டங்களில் எதிர்பார்க்கிறேன்.
தேர்தல் என்று ஒன்று இருக்கும் வரை இவை அனைத்தும் தொடரும்.
பிரச்சாரம் என்று சொன்னால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது.
அதனால்தான் இன்று தலைவர் தொண்டர்கள் தேநீர் குடிக்க தொண்டர்களிடமே நன்கொடை கேட்டிருக்கிறார் . இப்போது என்ன செய்வீர்கள் . நாக்கில் பல் பட கேள்வி முடியும்மா ?
காவிரிமைந்தன் ஐயா! அருமையான விவாதத்தைத் தொடக்கி வைத்திருக்கிறீர்கள். நன்றி!
அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத்தலைவராக இருந்தபொழுது நாட்டு வளர்ச்சிக்காக நான் ஓரிரு திட்டங்களை அவருக்கு அனுப்பியிருந்தேன். அவற்றுள் இது பற்றியும் ஒன்று உண்டு. இப்பொழுது எனக்கு அது முழுமையாக நினைவில் இல்லை. அனுப்பிய கடிதத்தின் நகல் வீட்டில் எங்காவது கிடக்கும். தேடியெடுத்துப் படித்துவிட்டு, பிறகு இங்கே கூறுகிறேன்.
சில நாட்கள் முன் நான் எழுதிய பின்னூட்டம் இந்த பதிவிற்குப் பொருத்தம் என நினைக்கிறேன். எது தவறு? எப்படி திருத்திக்கொள்வது?
அரசியல்வாதிகள் என்பவர்கள் ஊழல் செய்யாமல் பதவியில் இருக்கும்போதும் இல்லாத போதும் வருமானம் ஈட்ட வழி என்ன? பதவியில் இருக்கும்போது சம்பளம் வரும். பரவாயில்லை. இல்லாத போது? வைகோ அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த இருபது வருடத்துக்கு மேலாக எந்த பதவியிலும் இல்லை. கட்சி நடத்துகிறார். அதற்க்கு ஒவ்வொரு கூட்டத்திற்கும் எவ்வளவு செலவாகும்! அதே போல போராட்டங்களுக்கும். இவற்றிற்கெல்லாம் எங்கிருந்து பணம் வரும்?
நன்கொடை என்றால் அதனால் பின்னால் அவர்கள் மூலம் வரும் லாபத்திற்காக என்பது தான் உண்மை. இல்லையேல் சொந்த சொத்தை செலவழித்து கட்சி வளர்க்கும் ஏமாளிகளாக இந்த தலைவர்கள் இருக்க வேண்டும்! அது போல யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
நேர்மையான பதவியில்லாத அரசியல்வாதி எப்படி பிழைப்பு நடத்துவார்? இதற்க்கு வழி இல்லை என்றால் நேர்மையான அரசியல்வாதி வேண்டும் என்று நம்மால் எப்படி ஆசைப்பட முடியும்? நேர்மையாக யாராவது இருந்து எல்லா தியாகத்தையும் செய்து கட்சியை வளர்த்தால் நான் அவருக்கு ஓட்டு போடுவேன் என்பது என்ன லாஜிக்?
நண்பர் பந்து ( Bandhu )
3-4 நாட்களுக்கு முன்னர் உங்கள் முந்தைய பின்னூட்டம் வரும்போது,
நான் இந்த இடுகையைத்தான் எழுதிக்கொண்டிருந்தேன்.
அதனால் தான் பின்னர் விவாதிக்கலாம் என்று சொல்லி இருந்தேன்.
விவாதிப்போம்…. நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்….!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
I am Living in Australia, here also same as like an Indian parties all of them get donation from corporate company’s.Not any different America also same.
இன்று சட்டக் கமிஷன் மூலமாக,
தேர்தல் சீர்திருத்தங்களுக்கான
சில புதிய பரிந்துரைகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக நாளை விரிவான தகவல்களுடன்
வருகிறேன்.
நண்பர்கள் தங்கள் கருத்துக்களை
தொடர்ந்து தெரிவிக்கலாம்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்