நடிகர் சிவகுமார் தப்பான உதாரணத்தைத் தரலாமா …?

உயிர்க்கொலை செய்து உணவாக அருந்துவது
பாவம் இல்லையா…? என்கிற கேள்விக்கு சிவகுமார் அவர்கள் கூறும் பதில் இது – ( விகடன் மேடை …)

————-

“தர்ம வியாதர்னு ஒரு துறவியை கௌசிக முனிவர் சந்திச்சு பல தத்துவ விளக்கங்கள் கேட்கிறார். அதே தர்ம வியாதர் காலையில் சந்தையில் மாட்டு இறைச்சி விக்கிறார்.
‘அய்யா, உயிர்க்கொலை பாவம் இல்லையா ?’னு கௌசிக
முனிவர் கேட்டார். ‘எங்க பரம்பரை தொழிலை நான் செய்றேன். இதில் தப்பு இல்லை. …….
ஒரு ஆட்டைக் கொலை பண்ணா, ஒரு உயிரு தான் போகுது. ஒரு கை சாதத்துல உயிருள்ள சுமார் 500 நெல் வெந்து அரிசியாகியிருக்கு. ஒரு நெல்லும் உயிருள்ளது தான். ஒரு ஆடும் உயிர் உள்ளது தான். நெல்லுக்கு உயிர் இருக்குன்னு நாம சாப்பிடாம இருக்க முடியுமா ?…
உயிர்க்கொலை தவிர்க்க முடியாது’ன்னு சொன்னாராம். இது மகாபாரத கூற்று.

என்னைக் கேட்டா, 40 வயசு வரைக்கும் உடல் பலத்துக்கு அசைவம் சாப்பிடுங்க. அப்புறம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சைவத்துக்கு மாறிடுங்க.. !’

—————–

சிவகுமார் அவர்களிடமிருந்து நான் இதை
சற்றும் எதிர்பார்க்கவில்லை…

திருவாளர் கி.வீரமணி அவர்கள் வேண்டுமானால் இத்தகைய உதாரணங்களைக் கூறலாம் – பொருந்தும்….!
சிவகுமார் கூறுவது அபத்தம்.

மகா பாரதம் உருவானது சைவம் – அசைவம் பற்றி
சொல்வதற்காக அல்ல. அதன் நோக்கமே வேறு.

சிவகுமார் அசைவத்திற்கு ஆதரவாக நிற்பதே எனக்கு
ஆச்சரியமாகப் படுகிறது.
சிவகுமார் பல வருடங்களாக யோகாசனம் செய்பவர் ….
பொதுவாக யோகாசனம் செய்பவர்கள் யாரும்
அசைவ உணவிற்கு ஆதரவாகப் பேச மாட்டார்கள்….!

அசைவத்திற்கு ஆதரவாக மகா பாரதத்தை நாடும்
சிவகுமார் சைவத்திற்கு ஆதரவான
திருக்குறளை படித்ததில்லையா ….?
வள்ளுவர் தனி அதிகாரமே போட்டிருக்கிறாரே….

“கொல்லான் புலால் மறுத்தானை எல்லா
உயிர்களும் கை கூப்பி தொழும்” .

“தன் ஊன் பெருக்கற்கு பிருதூன்
உண்பான் எங்கணும் ஆளும் அருள்” .

“தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை”.

“கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து”.

“கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று”.

சரி – வள்ளுவர் தான் நினைவிற்கு வரவில்லையென்றால்,
வள்ளலார் ராமலிங்க அடிகளார் கூடவா நினைவிற்கு
வரவில்லை …?

vallalar

“கொல்லா நெறியே குவலயம் ஓங்குக
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க” – என்று சொன்னாரே..!

அதுகூட இல்லையென்றால் –

“கொல்லாமல், கொன்றதைத் தின்னாமல்” –

என்று கூறிய பட்டினத்தார் கூடவா நினைவிற்கு
வரவில்லை …?

என்ன கொடுமை சிவகுமார் சார் இது ….?

தன் வாதத்திற்கு உதவும் என்பதால் –
வள்ளுவரும், வள்ளலாரும் சொல்வதை ஏற்றுக்கொள்ளாமல் சம்பந்தம் இல்லாமல் எவரோ வழியில் போகிற சாமியார் சொல்வதை உதாரணமாகக் கூறுவது சரியா …?

40 வயது வரை ருசித்து, ரசித்து பழக்கப்பட்ட அசைவத்தை
அதற்குப் பின் விட்டு விட, எத்தனை பேரால் முடியும் …?

உடல் வலிமைக்கு தேவையான அனைத்து சக்தியும்
சைவ உணவுகளிலேயே கிடைக்கிறது –
யானையை விடவா பெரிய உதாரணம் வேண்டும்….?

அடிப்படையில், அசைவ உணவு சாப்பிட்டால்
மட்டும் தான் உடல் வலுவுடன் இருக்கும் என்கிற
அணுகுமுறை தவறானது என்பது விஞ்ஞான ரீதியாக
நிரூபிக்கப்பட்ட ஒன்று.

தானியங்கள், காய் கனிகள் ஆகியவற்றை உண்பதால் –
கெடுதல் (negative effect ) எதுவும் உண்டாவதில்லை. ஆனால், மாமிச உணவைப் பொறுத்த வரையில், புதிதாக இல்லா விட்டாலோ, நோய்வாய்ப்பட்ட பிராணிகளாக இருந்தாலோ – பலவேறு உடற்கோளாறுகளுக்கு அவையே காரணமாகி விடுகின்றன.

சென்னையில் கிலோ 450 ரூபாய் என்கிற நிலையில் –
ராஜஸ்தானில் ஆட்டிறைச்சி கிலோ 150 ரூபாய் என்று
வாங்கி, 3 நாட்கள் புழுக்கத்தில் ரெயிலில் சென்னைக்கு  கொண்டு வந்து அழுகிப்போன ஆட்டிறைச்சியை வாங்கி சென்னை ஓட்டல்களிலும், பிளாட்பாரம் கடைகளிலும் சமைப்பதாக செய்திகள் வருகின்றன.
சுடச்சுட, மசாலா சேர்த்துக் கொடுப்பதில், அழுகல்
நாற்றம் தெரியா விட்டாலும், வயிற்றுக்குள் போய்
இவை என்னென்ன கெடுதல்களை விளைவிக்கும் …..?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில்
உயிரை விட்ட பெண்டகி சிக்கனை freezer-ல்
வைத்து இங்கு அலங்காரம் செய்யப்பட்ட மெக்டொனால்டில் இப்போது சாப்பிடுவதில் என்ன சத்து கிடைக்கப் போகிறது….?
மாறாக அதில் சேர்க்கப்பட்டுள்ள கெமிகல்களால்,
(preservatories ….) சாப்பிடுபவர் குடல்கள்
என்ன கதி அடையப்போகிறதோ …?

அதற்காக அசைவ உணவு சாப்பிடுவோர் அத்தனை பேரும் சைவ உணவு முறைக்கு மாற வேண்டும் என்பதில்லை என் வாதம் –

அது நடைமுறையில் சாத்தியமே இல்லாதது.

மீன், முட்டை, கோழி, வாத்து, ஆடு – இவற்றை நம்பி
எவ்வளவோ மனிதர்கள் உயிர் பிழைக்கிறார்கள்.
எத்தனையோ லட்சம் பேர்களின் ஜீவாதாரமாக இருக்கின்றன இவற்றின் உற்பத்தி, பராமரிப்பு, வியாபாரம் ஆகியவை….

எனவே, நமது உணவுப் பழக்கங்கள் இவற்றையும்
அடிப்படையாகக் கொண்டதாகத்தான் இருக்க முடியும் ..

இருந்தாலும், படிப்படியாக,
கொஞ்சம் கொஞ்சமாகவேனும்,
தானாகவே மனம் விரும்பி,
சைவ உணவுக்கு மாறுபவர்களின் எண்ணிக்கை
அதிகரிப்பது நல்லது என்பதே என் அபிப்பிராயம்.

.
நண்பர்களே –
எவ்வளவு பேர் இதற்கு ‘ஓ’ போடுவீர்கள் …..? 

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

31 Responses to நடிகர் சிவகுமார் தப்பான உதாரணத்தைத் தரலாமா …?

 1. siva சொல்கிறார்:

  நானும் 36 வருடமா சைவம் சாப்பிடுகிறேன் . இன்னும் இளமையா வலுவுடன் இருக்கிறேன் என வயது 60. தயவுசெய்து சைவத்தை தப்பா பேசாதீங்க . அசைவம் சாப்பிட்டா மூளை மழுங்கும்னு நடிகர் சிவகுமார் நிருபித்து விட்டார் …..

 2. N.Paramasivam சொல்கிறார்:

  மீடியா வெளிச்சம் என்ற புகழ் ஒளியில் தன் பேச்சை மக்கள் கேட்கிறார்கள் என்னும் புகழ்ச்சியில் மயங்கி திரு சிவகுமார் அவர்கள் உளற துவங்கி விட்டார். தனது பேச்சுகளில் மக்களை நல்வழி படுத்த முடியா விட்டாலும் அவர்களை தவறான பாதையில் திருப்பாமல் இருக்கலாம். திரு சிவா கூறி உள்ளது போல் அசைவத்தால் வந்த வினை இது தான்.

 3. Saravanan சொல்கிறார்:

  ivarudaya Pillaikal asaivaththai virumbuvarkalai irukkum – Sivakumar pillaikalal thaan suyamariyathaiyai ilakkirar sameeba kalamaka, ithuvum appadithano…

 4. ravikumar சொல்கிறார்:

  This is one more incident nowadays Sivakumar talks absurd once his sons became Hero and producer

 5. Rangarajan Rajagopalan சொல்கிறார்:

  சிவகுமார் நல்ல மனிதர் தான். ஆனால் துரதிருஷ்டவசமாக தான் ஒரு
  சகலகலாவல்லவன் என்றும் தனக்கு எல்லாம் தெரியும்
  என்று நினைத்துக் கொண்டு விட்டார்.
  கம்பராமாயணத்தை கரைத்துக் குடித்து விட்டதாக
  நினைத்து dvd வெளியிட்டார். இப்போது மகாபாரதம் dvd க்கு தன்னை
  தயார் செய்துக் கொள்வதாகத் தெரிகிறது. அதன் விளைவே
  மகாபாரதத்திலிருந்து தேவையே இல்லாமல்
  விவரமான quote. எப்போதும் மீடியா வெளிச்சத்திலேயே இருக்க எதையாவது செய்து கொண்டே இருக்க அவர் முயற்சிக்கிறார். தனக்குத் தெரிந்ததை செய்வது தான் இந்த வயதில் அவருக்கு பெருமையைத் தரும்.

  காவிரிமைந்தனின் சைவம் மற்றும் அசைவம் பற்றிய
  கருத்துக்கு என் ‘ஓ-கே’ உண்டு.

 6. sakthy சொல்கிறார்:

  //சிவகுமார் நல்ல மனிதர் தான். ஆனால் துரதிருஷ்டவசமாக தான் ஒரு
  சகலகலாவல்லவன் என்றும் தனக்கு எல்லாம் தெரியும்
  என்று நினைத்துக் கொண்டு விட்டார்.//

  கோவில்களில் நடக்கும் கொலைகளைப் பார்த்து சைவமாக சிறு வயதில் இருந்தே மாறி விட்டேன். வாழ்க்கையின் முதல் கால் நூற்றாண்டை முடித்து விட்ட எனக்கு சைவம் மன நிம்மதியை தருகிறது.

  ஐயா காவிரிமைந்தன் போல் தவறை சுட்டிக் காட்டவும்,நல்லதை பாராட்டவும் வேண்டிய சிவகுமார் அவர்கள் தன் மேதாவித் தனத்தை ,மன்னிக்கவும், வைத்து இந்த இடத்தில் மட்டுமன்றி பல இடங்களில் தவறான கருத்துக்களை சொல்லி வருகிறார். அவரின் சினிமா பின்னணி, அவரை ஊடகங்களும் தூக்கி நிறுத்திக் கொண்டாடுகின்றன.
  நல்லவர்கள்,அறிஞர்கள் கேட்க வேண்டாமா? கண்ணை மூடிக் கொள்வதா?

  இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ? சந்தேகம் தான்.

 7. reader சொல்கிறார்:

  மகாபாரதத்தில் (தமக்கு) ஒவ்வாத கருத்திற்கு ஆதாரம் தந்துவிட்டாரே என்ற பதட்டம் இடுகையிலும், பின்னூட்டங்களிலும் வெளிப்படுகிறது.

  மகாபாரதத்தில் அவர் காட்டிய மேற்கோள் தவறென்றால் அதைச் சுட்டிக் காட்டுங்கள்.

  அவர் என்ன படிக்கவேண்டும், உண்ண வேண்டும் என்று எப்படி அவரை வலியுறுத்த முடியும்?
  மற்றபடி அசைவம் உண்பதோ, சைவத்துக்கு மாறுவதோ அவரவர் விருப்பு.

  இளையராஜா, அப்துல் கலாம் போல இவரும் தன்னை நவபிராமணணாக வெளிப்படுத்தியிருந்தால் உளறல் என்ற வசவுகள் வந்திருக்காது.

  **
  சென்னையில் கிலோ 450 ரூபாய் என்கிற நிலையில் –
  ராஜஸ்தானில் ஆட்டிறைச்சி கிலோ 150 ரூபாய் என்று
  வாங்கி, 3 நாட்கள் புழுக்கத்தில் ரெயிலில் சென்னைக்கு கொண்டு வந்து அழுகிப்போன ஆட்டிறைச்சியை வாங்கி சென்னை ஓட்டல்களிலும், பிளாட்பாரம் கடைகளிலும் சமைப்பதாக செய்திகள் வருகின்றன.
  சுடச்சுட, மசாலா சேர்த்துக் கொடுப்பதில், அழுகல்
  நாற்றம் தெரியா விட்டாலும், வயிற்றுக்குள் போய்
  இவை என்னென்ன கெடுதல்களை விளைவிக்கும் …..?
  **
  அது அசைவம் தின்பவனின் கவலை ஐயா.
  நான் வழக்கமாக உண்ணும் சைவ உணவகங்களில் தொடர்ந்து பூச்சிகள் உள்ள உணவையே கொடுத்ததால் அவற்றைப் புறக்கணித்தேன். அங்கும் காய்கறிகளை கழுவாமலே சமைப்பதைக் கண்ணாரக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

  • todayandme சொல்கிறார்:

   கடைசிப் பின்னூட்டத்தில் மகாபாரத மேற்கோளைக் காட்டுகிறேன்.

   அவர் (சிவகுமார்) தான் படிப்பதோடு உண்ணுவதோடு (பாதிவாழ்நாள் அசைவம் மீதி வாழ்நாள் சைவம்) நிறுத்திக்கொண்டால் பரவாயில்லை. மற்றவர்களுக்கும் உபதேசம் என்றுகிளம்பும்போது உளறல் என்றால் உளறல் என்றுதான் சொல்லவேண்டும்.

   ஆமாம் ‘இந்தியாவின் பெருமை’ மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் ‘இந்தியாவின் மிகப்பெரிய விஞ்ஞானி, இந்தியாவின் முதல் குடிமகன்’ ஆவதற்கு சாதிமதபேதங்கள் தடையல்ல என நிரூபித்த கலாம் ஐயா மீது தங்களுக்கு ஏன் இந்த காண்டு.

   பதிவுக்கு தொடர்புடைய கமெண்ட்களை மட்டும் பின்னூட்டங்களில் போடுங்கள்.

   கா.மை ஐயா பதிவுக்கு மட்டுமில்லை. எங்கு பின்னூட்டமிடுவதென்றாலும்தான்.

 8. johan paris சொல்கிறார்:

  ஊரில் சொல்லுவார்கள் ” கருவாட்டில் புழு என்கிறாயே, கத்தரிகாயில் புழு இல்லையா?
  சிவகுமார் எதையுமே தவறாகச் சொல்லவில்லை. நாளைய உலகின் நிலையை உணர்ந்தே சொல்லியுள்ளார்.
  ஆனால் இப்பதிவும், சில பின்னூட்டங்களும் அவர் மேல் காழ்புணர்வால் எழுந்தவையாக உள்ளது.
  ஒரு நடிகன் பிரசங்கியானதும், புகழப்படுவதும்,பலருக்கு தாங்க முடியாத வருத்தம்.
  நான் மாமிசம் உண்பவன் ஆனால் வெள்ளி , கோவில் திருவிழாக் காலங்களில் சைவம் உண்பேன். அது சமச்சீரைப் பேணுவதற்கு உதவுகிறது.
  சைவம் உண்பவர்கள் நல்லவர்கள், இரக்கம் மிக்கவர்கள், புத்திசாலிகள் என உலகில் கூறும் ஒரே நாடு இந்தியா!!!
  உலகில் சைவமுண்போரின் சதவீதமென்ன?
  சைவம் உண்ணும் நாம் , நவீன உலகுக்கு என்ன கொடுத்தோம். ஆயிரம் தெய்வமும் , சாதியும்.
  இந்த இந்தியாவில் சைவம் உண்பவரை சைவம் உண்பவர் ஆள்வைத்து கோவிலுள் வெட்டிக் கொன்றார்கள்.
  சைவம் உண்பவர்கள் சக மனிதனை மனிதனாக மதிக்காததும் இந்த நாட்டில் தான்.
  உடல் உழைப்பின்றி அடுத்தவர் உழைப்பை உறுஞ்சுவோர் பலர் சைவமுண்போராகத் தானுள்ளார்கள்.
  இன்று முதல் உலகில் எல்லோரும் சைவமுண்டால், இந்த உலகம் தாங்குமா?
  சிவனுக்குக் கண்ணப்பர் கொடுத்தது சுவை மிக்க இறைச்சி.
  இராமருக்குக் குகன் கொடுத்தது மீன்.
  என் மூதாதையர் மாமிசமுண்டு. 80 வயது வரை வாழ்ந்தோர் அதிகம். காரணம் ஓயாத உடலுழைப்பு.அடுத்தவரைச் சுரண்டா வாழ்க்கை.
  அசைவ உணவகங்களில் உள்ள அதே முறைகேடுகள் யாவும் சைவ உணவகங்களிலும் உண்டு.
  எனவே உங்கள் உடலுழைப்புக்கும்,உடல் நலத்துக்கும் தகுந்த உணவை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.
  சைவம் சாப்பிட்டு சொர்க்கம் போகலாம் எனும் புழுகை நம்பாதீர்கள்.
  //உடல் வலிமைக்கு தேவையான அனைத்து சக்தியும்
  சைவ உணவுகளிலேயே கிடைக்கிறது –
  யானையை விடவா பெரிய உதாரணம் வேண்டும்….?//
  உதாரணம் சரியில்லை.
  ஏனெனில், இந்த யானையை ,இதைவிடச் சிறிய சிங்கம் தான் கொல்கிறது.
  மாமிசமுண்ணும் விலங்குகளின் புத்திக் கூர்மையும், வேட்டையாடும் திறனும்
  தாவரவுண்ணிகளுக்கில்லை என்பதையாவது ஒத்துக் கொள்ளுங்கள்.
  //அதற்காக அசைவ உணவு சாப்பிடுவோர் அத்தனை பேரும் சைவ உணவு முறைக்கு மாற வேண்டும் என்பதில்லை என் வாதம் –
  அது நடைமுறையில் சாத்தியமே இல்லாதது.//
  இந்த உண்மையை உரக்க, உறைக்க உரைத்ததற்காக இந்தப் பதிவுக்கு
  டபிள்- ஒகே போடுகிறேன்.
  இதைத்தான் நடிகர் பூடகமாக உணர்த்துகிறார்.

  • saawthan சொல்கிறார்:

   //..மாமிசமுண்ணும் விலங்குகளின் புத்திக் கூர்மையும், வேட்டையாடும் திறனும்
   தாவரவுண்ணிகளுக்கில்லை…/

   தாவரவுண்ணிகள் வேட்டையாட வேண்டிய அவசியமில்லை, மறைந்திருந்து தாக்கும் “புத்திக்கூர்மை” இல்லை என ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். 🙂

  • சிவா சொல்கிறார்:

   இந்த யானையை ,இதைவிடச் சிறிய சிங்கம் தான் கொல்கிறது. சரிதான் ஆனால் சிங்கம் தனியா யானையை கொள்வதில்லை . கூட்டமா சேர்ந்துதான் கொல்கிறது அதுவும் தந்திரமா கொல்லும், இதுவா பலம் ? …. காண்ட மிருகம் சைவம் தான் , அதுனுடைய பலம் சிங்கதிற்கு உண்டா?

  • todayandme சொல்கிறார்:

   //ஒரு நடிகன் பிரசங்கியானதும், புகழப்படுவதும்,பலருக்கு தாங்க முடியாத வருத்தம்.//

   நடிகன் நடிகனாக இருக்கமுடியாத நிலையில் எந்தவகையிலாவது இழந்த புகழை / காமிராவின் flashஐப் பெற இந்த மாதிரியாவது முயல்கிறார்கள் என்பதுதான் உண்மை. எதையாவது செய்து மீண்டும் பத்திரிகை டிவியில் தன்முகத்தைப் பார்க்கும் ஆனந்தம்.

   அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அது இல்லாத கொடுமை (புகழ் தந்த போதை, அது இல்லாத கொடுமையை அனுபவித்து அதை மீண்டும் பெற முயலும் திறமை என்று சொல்லலாம்.)
   ———–
   ///சைவம் சாப்பிட்டு சொர்க்கம் போகலாம் எனும் புழுகை நம்பாதீர்கள்.//

   சைவம் சாப்பிட்டு சொர்க்கம் போகலாமோ இல்லையோ, அசைவம் சாப்பிடுவதால் (அந்த மிருகத்தைக் கொல்லும்போது நீங்கள் உடனிருந்து பாரத்தால் தான் தெரியும் அதன் வேதனை) உண்டாகும் மனவேதனை (உங்களுக்கும்) சரீரவேதனை(மிருகத்திற்கும்) பெறும் இருக்காது.

   மனவேதனை என்பது மனம் என்ற ஒன்று இருப்பவர்களுக்கும், பலியைப் பார்க்கும்போதும் மட்டுமே என்பது பின்குறிப்பு.
   —-
   //உண்மையை உரக்க, உறைக்க உரைத்ததற்காக இந்தப் பதிவுக்கு
   டபிள்- ஒகே போடுகிறேன்.//
   விமரிசனம் வலைப்பூ இயன்றவரை உண்மைத்தன்மையையே கொண்டிருப்பதாக என் கருத்து.
   —–
   //இதைத்தான் நடிகர் பூடகமாக உணர்த்துகிறார்.//

   அடுத்து சிவகுமார் வெளியிடப்போகும் மகாபாரத டிவிடி சேல்ஸ் ப்ரோமசனை இன்-டைரக்ட் ஆகச் செய்கிறார். (மகாபாரதம் எல்லாத்தையும் கரைச்சுக்குடிச்சிட்டமாதிரி)

 9. halfbakedvimarsanam சொல்கிறார்:

  Another one of half-baked vimarsanam from KM.

  • விசு சொல்கிறார்:

   அதெப்படி சார் உங்களை நீங்களே கரெக்டா
   ‘அரை வேக்காடு’ ன்னு புரிஞ்சுக்கிட்டு
   half baked ன்னு பெயரையும் வெச்சுக்கிட்டீங்க ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே, (half ……….)

   என்ன செய்வது – ஏதோ எனக்குத் சமைக்கத் தெரிந்தது
   அவ்வளவு தான். சரியாக இல்லையென்றால் ஒதுக்கி
   விடுங்கள். அரைவேக்காட்டைச் சாப்பிட வேண்டாம்….

   நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீங்கள் நன்றாகச்
   சமைப்பீர்கள் என்று தெரிகிறது. உங்களுக்குத்
   தெரிந்ததை முழுத்திறமையுடன் சமைத்து
   விருந்துக்குக் கூப்பிடுங்களேன். சாப்பிட வருகிறோம்…!!

   (ஆமாம் – என் மீது உங்களுக்கு ஏன் இந்த கோபம்..?)

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • todayandme சொல்கிறார்:

    கா. மை. ஐயா,

    Halfbackedvimarisanam அவர்களுக்கு உங்கள் மீது கோபம் ஏதும் இருப்பதுபோல் தெரியவில்லை. உங்களைப் பற்றி அவர் Half baked ஆகத் தெரிந்துகொண்டிருப்பதால் இடப்பட்ட பின்னூட்டம் அது.

    உங்களது இன்னும் சில பதிவுகளைப் படித்தாரானால் Full baked ஆகிவிடுவார்.

    இல்லாவிட்டால் கவலையைவிடுங்கள் back வாங்கிவிடுவார்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பரே ( today and me ),

     அற்புதமான, ஆழ்ந்த பின்னூட்டங்கள்.
     உங்கள் அத்தனை விளக்கங்களுக்கும்
     சேர்த்து என் நன்றிகள்.

     உண்மையில், என் இடுகைகளால் அல்ல –
     இத்தகைய பின்னூட்டங்களால் தான் இந்த
     வலைத்தளம் சுவையும், பயனும் பெறுகிறது….

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 10. chandraa சொல்கிறார்:

  well let us remember that noble prizewinners sports world record holders eminent doctors in in foreign countries amd many brilliantpeople are NON VEGETARIANS only.. crmes cheating are done by pure vegetarians also.. dirty maintenance of pure veg hotels aso prevail throughoutindia. it is all how much you take consume food every day. personal hygine… environmental cleanliness are observed by non vegetarians also. incidentally i am a vegetarian… but i do not take any pridein saying so…..

  • todayandme சொல்கிறார்:

   அதிகமான ப்ரிலியன்ட் நான்-வெஜிடேரியன் ஆக இருக்கலாம். அவர்களிலும் பெரும்பான்மையோர் வெஜிடேரியன் ஆகவோ வேகன் ஆகவோ ஆனவர்கள்தாம். உலகப்புகழ்பெற்ற இந்தியக் கணிதமேதை ஆனாலும் சரி, தற்கால திரையுலகப் புகழ் வித்யுத் ஜாம்வால் ஆனாலும் சரி வெஜிடேரியன் என்று சொல்லிக்கொள்ள அல்லது அதனால் பெற்ற பயன்களை மறுப்பவர்கள் அல்லர். (என்று தணியும் இந்த அந்நியமோகம்?)

   ஒருவர் ஒரு காரியத்தைச் செய்வதால் ஒன்று அதனால் உங்களுக்குப் பெருமை வேண்டும் அல்லது உங்களால் அந்தக் காரியத்துக்குப் பெருமை வேண்டும். இரண்டும் இல்லாமல் உங்களுக்குப் pride ஆக இல்லாததை ஏன் நீங்கள் செய்யவேண்டும்.

 11. புது வசந்தம் சொல்கிறார்:

  சைவம்/அசைவம் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. ஆதி மனிதனின் உணவு அசைவமாகத்தான் இருந்தது. பிற்காலங்களில் சைவம்/அசைவம் என பிரிந்தது.
  தமிழ்கடல் அய்யா நெல்லை கண்ணன் ஈரோடு புத்தக திருவிழாவில் ஆற்றிய உரையில் சைவம் சமணர்களின் வழியாக வந்ததாக தெரிவித்தார். உணவு பழக்கத்தினால் ஒருவர் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை. பசித்தவனுக்கு உணவு கொடுப்பவன் உயர்ந்தவன், அந்த உணவை விரயம் செய்யாமல் உண்பவனும் உயர்ந்தவன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே (புது வசந்தம் )

   என் கருத்தை நான் சொன்னேன் – அவ்வளவு தான்.

   உங்கள் கருத்தை தாராளமாக நீங்கள் இங்கு சொல்லலாம்.
   இது கருத்துப் பரிமாற்றத்துக்கான இடம் தான்.

   எல்லா கருத்துக்களையும் பார்த்து விட்டு,
   எது தேவை – எது தேவை இல்லை என்பதை
   சம்பந்தப்பட்டவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்பது
   தான் சரி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • todayandme சொல்கிறார்:

   புதுவசந்தம்,
   ஆதியில் அசைவம் தான். ஆனால் வெறும் அறிவு மட்டும் இல்லாமல் பகுத்தறிவும் வளர்ந்தபோது, இதனால் தீயவை அதிகம் உணர்ந்தபோது நீக்கப்பட்டவை அ. மீந்தவை சைவம்.

   உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது இங்கு கருப்பொருள் இல்லை.

   கா.மை. அவர்களின் சொல்பொருள் தவறாகப் புரிந்துகொள்ளப்படவில்லை என நினைக்கிறேன்.

   • முத்துராம் சொல்கிறார்:

    அவ்வாறு பெற்ற பகுத்தறிவினால் என்ன கிழித்தோம். பகுத்தறிவு என்று நாம் இப்போது நம்பிக்கொண்டு இருப்பது எல்லாம் இயற்க்கைக்கு மாறான விஷயங்கள்தான்.

 12. ramanans சொல்கிறார்:

  சைவம் உண்பதுதான் சரி என்றோ, அசைவம் உண்பது தவறு என்றோ காவிரி மைந்தன் சொல்லவில்லையே!

  ஓர் உயிரைக் கொன்று உண்ணுதல் சரியல்ல என்பதையே அவர் வள்ளுவரையும், வள்ளலாரையும் மேற்கோளாக்கி உரைக்கிறார்.

  இதற்கு நெல்லையும், ஆட்டையும் ஒப்பிடுதல் மிக மிக்த தவறான உதாரணம்.

  நெல் உயிர் என்றாலும் அது ஓரறிவுடைய ஓர் தாவரம். ஆடு, மாடுகள் அப்படி அல்லவே. ஐந்தறிவுடையவை. மனிதனைப் போலவே உணர்ச்சி மிக்கவை. அவை இறைச்சிக்காகக் கொல்லப்படும்போது தவிக்கும் தவிப்பை ஒருவர் பார்த்தால் அவரால் அசைவ உணவை விரும்பி உண்ண முடியாது என்றே கருதுகிறேன்.

  இணையத்தில் நிறைய வீடியோக்கள் உள்ளன. அவற்றை இங்கே பகிர்ந்து மன பாரத்தை ஏற்படுத்த விரும்பவில்லை.

  மற்றபடி சைவமோ, அசைவமோ அவரவர் விருப்பமாகவே இருக்கட்டும். வாழ்க!

  • todayandme சொல்கிறார்:

   இந்த ஓரறிவு ஈரறிவு எல்லாம் ஆறறிவுள்ளவர்களுக்கு மட்டுமே புரியக்கூடியது, எல்லாருக்கும் அல்ல.
   🙂

 13. todayandme சொல்கிறார்:

  கௌசிகன் தன்பெற்றோருக்கு ஒரே பிள்ளை. அவன் தன் சமய நெறிகளில் ஈடுபாடு கொண்டு காட்டுக்குச்சென்று தவம்செய்து இறைஅருள் பெறப்போவதாகத் தன் பெற்றோரிடம் சொல்கிறான். அவர்களோ அவனைப் பிரியமனமில்லாதவர்களாக நீயும் எங்களைவிட்டுச்சென்றுவிட்டால் எங்களுக்கு யாரும் இல்லையே கைவிடப்பட்டவர்களாகிவிடுமே என்று கலங்குகிறார்கள். கௌசிகனோ தான் பாதுகாத்துப் பராமாரிக்கவேண்டிய தன் பெற்றோரைவிட்டு நீங்கி காட்டில் சென்று மரத்தடியில் தவம்செய்கிறான். அவனுடைய தவத்தின் நடுவில் அவன் தலைமீது அந்த மரக்கிளையில் அமர்ந்திருந்த பறவை ஒன்று எச்சமிட்டுவிட்டது. (afterall – பறவை எச்சம் விழுவதால் தவம் கலையக்கூடுமானால் என்ன மனஓர்மை அவனுக்கு?) அதனால் தவம் கலைந்த அவன் கடும்கோபத்துடன் (தவம் பண்ணப்பண்ண கோபம் குறைந்து சாந்தம் வரவேண்டும். ஆனால் கௌசிகன் நிலையோ வேறே) பறவையைப் பார்க்க அது அவனுடைய தவவலிமையால் எரிந்து சாம்பலாகிவிட்டது. தன்னுடைய தவவலிமையைக் கண்டு அவனுக்கு கர்வம் வந்துவிட்டது. (பின்னே இவ்வளவு கவனமில்லாமல், கோபத்தோடு செய்யும் தவத்துக்கே ஒரு பறவையை எரிக்கிற அளவுக்கு பலன் இருக்கே, கர்வம் வராதா பின்னே.)

  தவம்செய்பவர்கள் பசித்தால்தான் சாப்பிடலாம் அதுவும் பிச்சை எடுத்துத்தான். பிச்சை எடுக்கப்போகிறான். ஒரு வீட்டில் ஒரு அம்மா இருக்கிறார்கள், பிச்சை கேட்கிறான். கொஞ்சம் பொறுப்பா இதோ வருகிறேன் என்று உள்ளே போகிறார்கள். இடையில் அந்த அம்மாளுடைய கணவர் வருகிறார். உள்ளே போன அம்மாவோ தன் கணவனைக் கவனித்து, வேண்டிய பணிவிடைகள் செய்து, அவருக்கு உணவிட்டு விட்டு, அதன்பின்பு கௌசிகனுக்கு வேண்டிய உணவை எடுத்துக்கொண்டு வெளியேவருகிறார்கள். இங்கே நம்ம கௌசிகன்தான் கோபத்தைக் குத்தகைக்கு எடுத்தவன் ஆயிற்றே. இதைப் பார்த்துக்கொண்டிருந்த கௌசிகனுக்கு தான் மிகவும் அவமானப்பட்டுவிட்டதாக எண்ணம். வெளியே வந்த அந்த அம்மாவைப் பார்த்து முறைக்கிறான். அந்த அம்மா மிகவும் கேசுவலாக என்னைக் கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? எனது தர்மம் முதலில் கணவனைக் கவனிப்பதுதான். பின்புதான் யாரானாலும் என்று விடுவிடுவென்று விடுகிறார்கள். அரண்டுவிட்டான் கௌசிகன். நான் பறவையை எங்கேயோ எரித்தது இங்குள்ள இந்த அம்மாவுக்குத் தெரியும் என்றால், என்னுடைய தவமோ, வலிமையோ ஒன்றும் இல்லை என அறிந்து முக்காலமும் அறிந்த அந்த அம்மையாரை தனக்கு போதிக்கும்படி வேண்டுகிறான். அந்த அம்மாவோ நான் உனக்கு உணவிடுவதற்காக வெளியே வந்தேன், அறிவுரை கூற அல்ல. போதனை வேண்டுமென்றால் நீ மதுராவிற்குச் சென்று தர்மவியாதரைப் பார் அவர் உன்னை வழிநடத்துவார் என்று கூறுகிறார்கள்.

  கௌசிகன் அவ்வாறே செய்கிறான். அவனுக்குப் பெரிய அதிர்ச்சி. அந்த தர்மவியாதர் ஒரு இறைச்சிக்கடைக்காரர். அவரோ இவனை வரவேற்று உபசரித்து தான் தனது வியாபாரத்தை முடித்துவரும்வரை இளைப்பாறும்படி வேண்டிக்கொண்டு தன் இறைச்சிவியாபாரத்தைச் செய்கிறார்.

  இதைப் பார்த்துக்கொண்டிருந்த கௌசிகனுக்கு ஒன்றும் புரியவில்லை. யாரோ ஒரு குடும்பஸ்திரீ தன்னை விட விவரமாக முக்காலமும் அறிந்திருப்பதும், இறைச்சி வியாபாரம் செய்பவன் தன்னை வழிநடத்தும் அளவுக்கு இருப்பானா என்பதும். கவலையோடு நேரத்தைக் கடத்துகிறான். கடைமுடிந்து வீடு வந்த தர்மவியாதர் தன் தன் சுத்தம் பேணி பெற்றோரை வணங்கி அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை ஆற்றிவிட்டு உணவருந்த கௌசிகனை அழைக்கிறார். கிடைத்தது சந்தர்ப்பம், விடுவானா கௌசிகன். தர்மவியாதரிடமே கேட்கிறான், இந்த கொலைத்தொழில் தவறில்லையா? பாபமில்லையா?

  நாம் நடக்கும்போது எத்தனையோ பூச்சிகள் நம் காலடியில் மிதிபட்டுச் சாகின்றன. (இதைத் தவிர்க்கவேண்டி இன்றும் சில புத்தபிட்சுக்கள் மயில்தோகையால் தரையைப் பெருக்கிக்கொண்டே நடப்பதாகக் கேள்வி). விவசாயியின் விவசாயத்தில் உழும்போதும் பயிரிடும்போதும் எத்தனையோ புழு பூச்சிகள் கொல்லப்படுகின்றன. அதனால் விவசாயி உழவை விட்டுவிட்டால் மனிதர் எவ்வாறு உணவுண்ண இயலும்.

  அவர் சொல்கிறார், என் குடும்பத்தொழில் இது. என் பெற்றோர், மனைவி மக்களைக் காப்பாற்ற இந்தத் தொழிலைச் செய்துவருகிறேன். நான் அவர்களைக் காப்பாற்றுவதால் நாங்கள் குடும்பமாக மகிழ்ச்சியாக இருந்துவருகிறோம். என்னால் என் பெற்றோருக்கு மகிழ்ச்சி. நான் கடமையைச் செய்கிறேன். எனது தர்மம் இது. என்னைப் பொறுத்தவரை என்பெற்றோர் என் கடவுள். அவர்களை நான் வணங்குகிறேன். அவர்களை அன்புடன் பராமரிக்கிறேன்.

  என்னைப்போலவே உன்னை இங்கு நடத்திய அம்மா தன் கணவனைத் தெய்வமாகக் கருதுபவர்கள். அவர்கள் தங்கள் கடமையைச் செய்தார்கள். அந்த தர்மத்தினாலேயே முக்காலமும் அறிகிற பலனைப் பெற்றார்கள். எவனொருவன் தன் கடமையைச் சரியாகச் செய்கிறானோ அந்தக் கடமையே அவனுக்கு தர்மம் ஆகிறது.

  நீ நன்கு சிந்தித்துப்பார். உன்னையே நம்பியிருந்த உன் பெற்றோரை விட்டுவிட்டு நீ ஓடிவந்திருக்கிறாய். உன் கடமையைப் புறக்கணித்திருக்கிறாய். மகனான நீ உன்பெற்றோரைப் பாதுகாக்கவேண்டிய கடமை தர்மத்தை மீறிவிட்டாய். இதன்பிறகு நீ எதைப் படித்தால் என்ன? படிக்காவிட்டால் என்ன? தவம் செய்தால் என்ன? அதன் தவவலிமை பெற்றால் என்ன? எதுவுமே ஒன்றுமில்லாமைக்குச் சமம் என்று அறிவுறுத்துகிறார்.

  மனத்தெளிவு பெற்ற கௌசிகன் தன் பெற்றோரிடம் சேர்ந்து அவர்களை அன்புடன் பராமரித்து அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்கிறான். மகனைக் கண்டு அவன் பெற்றோரும் மகிழ்கின்றனர். தன் பெற்றோருடன் இருந்துகொண்டே கௌசிகன் தான் படித்த தன்னுடைய அனுஷ்டானங்களைச் செய்து மகிழ்வுடன் வாழ்கிறான்.

  இந்தக் கதையின் நீதி :

  செய்யவேண்டிய கடமையை அல்லது தர்மத்தைத் தவறவிட்டுவிட்டு ஆயிரம் படித்தாலும் பயன் இல்லை என்பது தான்.

  இதனை முழுக்கதையாக வேகவைத்து சாப்பிட்டாலும் பச்சையாக சாப்பிட்டாலும் சத்து-சாராம்சம் இதுதான். சில அரைவேக்காடுகள் தான் தனக்குப் பாதகமான இடத்தில் கட்டிங் ஒட்டிங் வேலை செய்து குழப்புவார்கள்-நீதியையே மாற்றிவிடுவார்கள்.

  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் காதுக்குள்ள கடப்பாறையவிட்டு கொடயுவீங்கடா என்று வடிவேலு ஜோக் ஒன்று உண்டு.

  இந்தக் கதைய இஷ்டத்துக்கு கட்டிங் செய்து பேச்சுக்குப் பயன்படுத்திய சிவகுமாரையும் அதைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களையும் என்ன சொல்வது.

 14. k.gopaalan சொல்கிறார்:

  பல வருடங்களுக்கு முன் படித்த, ஒரு ஆங்கிலேயர் வெஜ் ஆனது :

  இரண்டு புறாக்களாக இருந்த ஒன்றை கொன்றார். உடனே மற்றது கீழே இருந்த மிகச்சிறிய சில கூழாங்கற்களை வாயில் போட்டு விழுங்கிவிட்டு உயரப் பறந்து சென்று கீழே குதித்து மடிந்தது.

  கண்டதும் அவர் சைவத்துக்கு மாறினார்.

  கோபாலன்

 15. Ganpat சொல்கிறார்:

  இதை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம்:

  சைவம் vs அசைவம்:
  அரிசிக்கு உயிர் இருக்கு ,இலை தழைகளுக்கும் உயிர் இருக்கு எனவே அவையும் அசைவம்தான் என்ற அதிமேதாவித்தனமான வாதங்களை புறந்தள்ளி விட்டு பார்த்தால் வள்ளுவர் ,இராமலிங்க அடிகளார் சொல்வதே வேதம்.புலால் உண்ணுதல் தவறு.ஆனால் உடனே உலகமே சைவத்திற்கு மாறிவிடும் என்று எண்ணுவதும் தவறு.இந்த மாறுதல் மெதுவாக ஆனால் நிச்சயமாக வரும்.

  சிவகுமார்.:நாம் எப்பொழுதும் அறிவையும்,விவேகத்தையும் ஞாபகசக்தியுடன் தவறாக இணைத்துப்பார்த்து குழம்புவோம்.ஞாபக சக்தி அதிகம் இருப்பவர் அறிவாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.சிவகுமார் அசாத்திய ஞாபசக்தி உள்ளவர்.மிக நல்ல மனிதர்.ஆனால் அவர் சிந்தனா சக்தி அந்த அளவிற்கு செழுமை அடைந்தது இல்லை.எனவே அவரின் சில சொந்த கருத்துக்களில் அதிக விவாதம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

 16. ullathinosai சொல்கிறார்:

  நடிகர் சிவகுமாரின் வாதம் தவறானது…..

 17. k.gopaalan சொல்கிறார்:

  இது ஆத்திகர்களுக்கு மட்டும் :

  நான் கண்ட இந்து மதம் :

  தனக்குள் இருக்கும் கடவுளை உணர்பவன் உயர்ந்தவன்.

  மற்ற உயிர்களுக்குள் இறைவனைக் காண்பவன் மிகவும் உயர்ந்தவன் ஞானி. இறைவனை நெருங்கிவிடுகிறான்.

  மனிதன் மனிதனாக இருப்பதற்குத்தான் தகுதியாவன் என்று கூறும் சில மதங்கள். சைவத்தை நிந்திப்பவர்கள்.

  கோபாலன்

 18. AaKuvan சொல்கிறார்:

  Appalled to see such comments from people who do not understand the crux of this blog by KM ji.

  There are two distinctive points.

  One, Wrong example and trying to twist the MB story to Veganism. This needs to be condemned and criticized as it has now become fashion for people to infer wrong things from Hindu texts and propagate false meanings.

  Two. Preaching Veganism with false notions.

  And One and Two are linked by concoting two lies….which Mr. Sivakumar has done and KM ji points out.

  Appalled because, some readers are drifted away from the context and trivialize the issue with Brahminism, caste, Economics, Caste, rituals, communism etc.

  It will not only take Today and Me to explain this but for ever ( pun intented) these people will never change unless they do some soul searching!

  And for a fact, we waste 3 times the food/effort/money to up bring a livestock and consume!

  REgds
  AaKuvan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.