திருமதி சோனியாவின் (உணவு) பாதுகாப்பு அவசர சட்டம் !- திரு.குருமூர்த்தி கூறுவதென்ன .

திருமதி சோனியாவின் (உணவு) பாதுகாப்பு
அவசர சட்டம் !-
திரு.குருமூர்த்தி கூறுவதென்ன …

couds

கடந்த 2009 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது,
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உணவு பாதுகாப்பு மசோதா
நிறைவேற்றப்படும்’என, திருமதி சோனியா காந்தி
தலைமையிலான காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.

5 வருட ஆட்சி கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில்,
பாராளுமன்றத்தில் எந்தவித விவாதமும் இல்லாமல்,
எதிர்க்கட்சிகளின் ஆலோசனையையோ, இதை
நிறைவேற்ற வேண்டிய பொறுப்பிலுள்ள மாநில அரசுகளின்
கருத்துக்களையோ கேட்காமல் தன்னிச்சையாக
ஒரு அவசர சட்டத்தை வெளியிடுவதன் மூலம் அமுலுக்கு
கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு.

இந்த அவசர சட்டத்தில் மூல நோக்கமாக
(aims & objectives) சொல்லப்படுவது –

“மத்திய அரசால், (?) இந்தியக் குடியரசில்
உள்ள அனைத்து மக்களுக்கும்,
எந்நேரமும் தாங்கள் செயல்படுவதற்கும் (!)
நலமாக வாழ்வதற்கும் (!)
உறுதி செய்கின்ற  அளவிலான (?),
அளவிலும் தரத்திலும் போதுமான,(!)
பாதுகாப்பான, உணவினை, நேரடியாகவோ,
பணம் கொடுத்து வாங்கியோ (underline)
பெறும் கட்டுமான, பொருளாதார மற்றும்
சமூக அணுக்கத்தை உறுதி செய்கின்ற வகையில்
நிறைவேற்றப்படுகிற  ஒரு அவசர சட்டம்”.

திருமதி சோனியா காந்தி தலைமையிலான – தேசிய
ஆலோசனைக் குழுவில்
டிசம்பர் 17,  2011 அன்று விவாதிக்கப்பட்டு
தீர்மானிக்கப்பட்ட இந்த திட்டம்,

2013ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி மக்களவையில்
‘தேசிய உணவு பாதுகாப்பு மசோதா’
என்கிற பெயரில் விவாதத்திற்காக தாக்கல் செய்யப்பட்டு,

முதலில் தீர்மானித்த 19 மாத கால தாமதத்திற்கு
பின்னர் இப்போது எந்தவித விவாதமும் இல்லாத
நிலையிலேயே -அவசர அவசரமாக, அவசர சட்டமாக
நிறைவேற்றப்பட்டுள்ளது.

(இந்த உணவு பாதுகாப்பு மசோதாவை அவசர சட்டத்தின்
மூலம் நிறைவேற்றுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்
தனி நபர் ஒருவரால் மனு ஒன்று தாக்கல்  
செய்யப்பட்டுள்ளது.

அவசர சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி
தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் – நாடாளுமன்றம்
இன்னும் இரண்டே வாரங்களில் கூட உள்ள நிலையில்,

அவசரச் சட்டம் மூலம் உணவு பாதுகாப்பு மசோதாவை
நிறைவேற்ற வேண்டிய அளவுக்கு எந்தவித அவசரமோ,
தேவையோ உண்மையில் இல்லை. எனவே,
நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல்,
சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று உச்சநீதி மன்றம்
உத்தரவிட வேண்டும் என  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது )

நாடாளுமன்றத்தில் மசோதா பற்றிய விவாதங்கள் நடத்தப்பெற்று,
திருத்தங்கள் முன்மொழியப்பட்டால்
அவற்றையும் உள்ளடக்கி சட்டமாக்கப்படுவது
என்பதுதான் நடைமுறை வழக்கம்.

ஆனால், காங்கிரஸ் கூட்டணி அரசு, நாடாளுமன்றத்தின்
மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க
சில நாட்களே உள்ள நிலையில் இதை அவசர சட்டமாக
கொண்டு வந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும்
பெற்றுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரான
இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் அனைத்தும்
கடுமையாகக் கண்டித்திருக்கின்றன.

அவசரச் சட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு
எந்த சிரமும்  இல்லை.

ஆனால், அடுத்து பாராளுமன்றம் கூடும்போது,
இரண்டு அவைகளிலும் இதற்கு ஒப்புதல் வாங்கியாக
வேண்டும்.
இரண்டு அவைகளிலும், காங்கிரசுக்கு தனிப்பட்ட
முறையில் மெஜாரிடி இல்லை. காங்கிரசை வெளியே
இருந்து கொண்டு ஆதரிக்கும் கட்சிகள் கூட இந்த
சட்டத்தை எதிர்க்கின்றன.

பொது தேர்தலுக்கு போகும் சமயத்தில் –
எதிர்க்கட்சிகளை மட்டுமின்றி, காங்கிரசை வெளியேயிருந்து
ஆதரிக்கும் சமாஜ்வாதி போன்ற கட்சிகளையும்
தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குவது தான் காங்கிரஸ்
தலைமையின் மாஸ்டர் ப்ளான்.

சட்டத்தை எதிர்த்தால் கெட்ட பெயர் வரும் என்பதால்
வேறு வழி இல்லாமல் சில கட்சிகள் ஆதரிக்கலாம்.
சில கட்சிகள் எதையாவது சாக்கு வைத்து வெளிநடப்பு
செய்யலாம்.அப்போது சட்டம் நிறைவேறி விடும்.
சோனியா அரசு சாதனையாளராக மக்கள் முன் நிற்கும்.

துணிந்து சில கட்சிகள் எதிர்த்தால், மசோதா
தோல்வியுறும்.  அவசரச் சட்டம் செல்லாததாக
காலாவதி ஆகி விடும். இந்த நிலையிலும் சோனியா
அரசு  அப்பாவியாக மக்கள் முன் போய் நிற்கும்.
-நல்லது செய்ய எதிர்க்கட்சிகள் விடமாட்டேனென்கிறார்கள்
என்று பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும் !

அடுக்கடுக்காக காங்கிரஸ் ஆட்சியின் மீது சுமத்தப்பட்டிருக்கும்
ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து
மக்களை திசைதிருப்ப  திருமதி சோனியா வகுத்திருக்கும்
தேர்தல் உத்தியாகவே இது தெரிகிறது.

பாராளுமன்றத்தில், அவசர சட்டத்தை சட்டமாக
நிறைவேற்ற ஒத்துழைக்க மறுக்கும் எந்த கட்சியையும் –
காங்கிரஸ், மக்கள் விரோத கட்சி என்று பிரச்சாரம்
செய்யும்.
நாங்கள் அனைத்து மக்களுக்கும் நல்லது செய்ய
அற்புதமான திட்டத்தை  கொண்டு வந்தோம்.
ஆனால் மற்ற கட்சிகள்
மக்கள் நலத் திட்டங்களைக்கூட நிறைவேற்ற ஒத்துழைக்க
மறுக்கின்றன என்று சொல்லி –

அந்த சாக்கிலேயே, தனக்கு பாதுகாப்பான, சாதகமான
சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலை அறிவிக்க
காங்கிரஸ் தலைமை திட்டமிடுவதாகத் தோன்றுகிறது.

இல்லையேல் –
தேவைப்படும் உணவு தானியங்களை
எங்கிருந்து, எப்படி, எந்த அளவிற்கு,
எந்த விலைக்கு வாங்குவது –
எப்படி அதை மாநிலங்களுக்கு உரிய
நேரங்களில் கொண்டு செல்வது,
மாநில  அரசுகள் பயனாளிகளின் பட்டியலை தயாரிக்க
தேவைப்படும் அடிப்படை தகுதிகள் என்னென்ன,
மாநில அரசுகளின் மேல் விழும் அதிக நிதிச்சுமைக்கு
அவை என்ன செய்யப்போகின்றன ?

இந்த திட்டத்தை நிறைவேற்ற
ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும்
என்கிற நிலையில் –
கூடுதல் நிதி ஆதாரத்திற்கு  என்ன வழி  –
என்பதை எல்லாம் தீர்மானம் செய்யாமலே
அவசரச் சட்டத்தை கொண்டு
வந்ததன்  நோக்கம் வேறு என்னவாக இருக்க முடியும் ?

இந்த அவசரச் சட்டம் குறித்து –
பொருளாதார நிபுணர் திரு. குருமூர்த்தி, ஒரு வார
இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இது குறித்து
சில வித்தியாசமான கருத்துக்களைக் கூறியுள்ளார்.
அவை உங்கள் பார்வைக்கு கீழே –

—————————

“மக்களில் 75% பேருக்கு அரிசி, கோதுமை,
சிறுதானியங்கள் உள்ளிட்டவை தலா ஒன்று முதல்
மூன்று ரூபாய் விலையில் வழங்கப்படும்னு சொல்லி
இருக்காங்க.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நம் நாட்டில்
37.7   கோடிப்பேர் நகரங்களிலும்,
74.3   கோடிப்பேர் கிராமங்களிலும் வசிக்கறாங்க.

இதில் சிறு, குறு விவசாயிகளின்  எண்ணிக்கை தான்
மிக அதிகம். ஒன்றிரண்டு ஏக்கர் நிலம் வைத்து,
பயிர் செய்து வாழ்க்கையை கழிக்கறாங்க.
பெரு விவசாயிகள்  சொற்பமே.
ஆக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட
நம் நாட்டில், உணவுப்பொருட்களை இப்படி வழங்கறதால,
அந்த தொழில் நசிந்து போகுமா இல்லையா ?

சிறு, குறு விவசாயிகள், பயிர் செய்தால் கிடைப்பதை
விட அரசு தரும் இந்த உணவே போதும்னு நெனச்சு
தங்களது தொழிலைக் கைவிட்டால் நிலைமை என்னாகும் ?
அப்புறம் அரசு யாரிடம் போய் நெல், கோதுமையை
கொள்முதல் செய்யும் ?

55% முதல் 60% நபர்கள் வரை விவசாயத் தொழிலை
நம்பியிருக்கும் நம் நாட்டில் உணவுப் பாதுகாப்பு சட்டத்தை
அமல்படுத்துவதால் என்ன பயன் ?

அவசரச் சட்டம் என்பது தவறில்லை.
ஆனால் Food Security Act-க்கு இப்ப என்ன
அவசரம் என்பது தான் கேள்வி.
நான் கேட்கிறேன் – இதுவரை எதாவது நல்ல
காரியத்துக்காக இந்த காங்கிரஸ் அரசு ஏதாவது
அவசரச் சட்டத்தை நிறைவேற்றி இருக்கா? இல்லையே !

இது மத்திய அரசின் திட்டம் தான் என்றாலும்,
பயனாளிகளை இனம் காண்பது, பட்டியல் தயாரிப்பது
உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் மாநில அரசுகள்
தான் செய்ய வேண்டும். மாநில அரசுகளின் மீது
அதிக நிதிச்சுமை தவிர்க்க முடியாதது ”

————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to திருமதி சோனியாவின் (உணவு) பாதுகாப்பு அவசர சட்டம் !- திரு.குருமூர்த்தி கூறுவதென்ன .

 1. venkataramani சொல்கிறார்:

  தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதில் காணவேண்டிய
  வெற்றியைக் கருத்தில் கொண்டுதான் அரசின் திட்டங்கள்
  செயல்முறைக்கு வருகின்றன. அதனால் பொது ஜனங்களுக்கு
  விளையப் போகிற நன்மை அல்லது தீமை குறித்தெல்லாம்
  யாருக்கு கவலை?

  55 முதல் 60 சதவீதம் மக்கள் விவச்சயத்தைஸ் சார்ந்திருக்கின்ற
  நாட்டிலே திட்டத்தால் யாருக்கு லாபம்? என்கிற கேள்வியிலேயே
  மீதமுள்ள 40-45 சதவீதம் பேருக்கு என்கிற பதில் இருக்கிறது.

  நூறு நாள் வேலை உத்திரவாத திட்டத்தால் மட்டும் யாருக்கு
  பலன்? பாதிப்புகள் யாருக்கு? அரசியல் பிழைப்போரும் அலுவல்
  அதிகாரம் படைத்தோரும் பலடைய, பாதிப்பு விவசாயம், சிறு
  தொழில் அமைப்புகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கூலிக்கு
  ஆள் கிடைப்பதில்லை. அதனால் கிராமம் சார்ந்த தொழில்கள்
  பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

  சமீபத்தில் சொந்த கிராமத்திற்கு சென்றிருந்தேன். விவசாயம்
  பற்றிய கேள்விக்கு, ஒருத்தரைப் போல மற்றொருவர், நூறு நாள்
  திட்டத்தையும், இலவச அரிசியையும் சொன்னார்கள். பரந்து
  கிடக்கும் டாஸ்மாக்கும் விவசாய கூலிகளைப் பெரிதும் தன் வயப்
  படுத்தியுள்ளதை கண் கூடாக காண முடிகிறது.

  இதெல்லாம் ஆளும் கட்சிகளுக்குத் தெரியாமலா இருக்கும்?
  பின்னும் ஏன் “நூறு நாள்” நடைமுறைப் படுத்தப்படுகிறது?
  விடை வெரி சிம்பிள்: உள்ளாட்சியில் இருப்பவர்களுக்கு “பணம்”
  கிடைக்கிறது. உள்ளாட்சி அதிகாரம் மாநிலத்தை ஆளும் கட்சி
  வசமிருக்கிறது.

  காசு பணம் துட்டு மணி மணி… சங்கிலியாக இருந்து ஆளும் கட்சி
  எதிர்க்கட்சி என்று பாராது எல்லோரையும் இணைத்து விடும். புள்ளி
  விவர்ங்களோடு பேசுபவரும் எழுதுபவரும் “வெகுஜன விரோதி”யாக
  சித்தரிக்கப்படுவர்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.