மொரார்ஜி தேசாய் -துக்ளக் ஆசிரியர் “சோ” கூறியதும் – என் நினைவுகளும் ….

மொரார்ஜி தேசாய் -துக்ளக் ஆசிரியர் “சோ”
கூறியதும் – என் நினைவுகளும் ….

morarji desai-2

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் குறித்து பலருக்கு
மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.

நேர்மையான மனிதர். உண்மையான காந்தீயவாதி.
வெள்ளைக்காரர் காலத்தில்,1930ல் – தனது ஐசிஎஸ்
பதவியை தூக்கி எறிந்துவிட்டு இந்திய சுதந்திர
போராட்டத்தில் ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகி
என்று ஒரு பக்கமும் –

பழமைவாதி. பிற்போக்காளர். பிடிவாதக்காரர்.
யாருடனும் ஒத்துப்போக மாட்டார் – என்று மறுபக்கமும்
அவர் குறித்து விமரிசனங்கள் உண்டு.

இந்த இரண்டு வித கருத்துக்களுமே அவருக்குப் பொருந்தும் –
என்பது என் கருத்து.
பிப்ரவரி மாதம் 29ந்தேதி பிறந்ததாலோ என்னவோ –
மிகவும் வித்தியாசமான மனிதர்.

இறுதி வரை சத்தியத்தைக் கடை பிடித்தவர்,
விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் தன் கொள்கைப்படியே
இறுதி வரை நடந்தவர் – தற்கால அரசியலுக்கு சற்றும்
பொருத்தம் இல்லாதவர் என்றும் சொல்லலாம்.

துவக்கத்தில், அவரை எனக்குப் பிடித்ததில்லை.
அவர் conservative ஆக இருந்தார்.
மிகவும் பிடிவாதக்காரராக இருந்தார்.

ஆனால் அவரிடம் நேர்மை இருந்தது.
எளிமை இருந்தது.
சத்தியம் இருந்தது.
தான் நினைப்பதை வெளிப்படையாகச் சொல்லும்
தைரியம் இருந்தது.
இந்த குணங்களே பிற்காலத்தில் நான் அவர் மீது
பெரும் பற்று கொள்ளக் காரணங்களாக இருந்தன.
இந்த காலத்தில்  அரசியல்வாதிகளிடம் இத்தகைய
குணங்களை எங்கே காண முடிகிறது ?

1966-ல் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி
திடீரென்று காலமானதும், காங்கிரஸ் கட்சி
புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில்
இருந்தது. தலைவர் காமராஜ் அவர்கள் தான் அப்போது
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பில்
இருந்தார். இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் இருவருமே
பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர். ஒருவேளை காமராஜர்
மொரார்ஜியை ஆதரித்திருந்தால், மொரார்ஜி
பிரதமர் ஆகி இருப்பார். காமராஜரின் வார்த்தைக்கு
அந்த அளவு அப்போது செல்வாக்கு இருந்தது.
உண்மையில், திருமதி இந்திராவை விட அதிகமாகவே
மொரார்ஜி பிரதமர் பதவி வகிக்க தகுதியுள்ளவராக
இருந்தார்.

ஆனால் –
மொரார்ஜி பிடிவாதக்காரர் – மற்றவர்களை
அனுசரித்துப்போக மாட்டார் என்கிற ஒரே காரணத்திற்காக,
தலைவர் காமராஜர் இந்திராவை ஆதரித்தார்.
இந்திராவும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(பிற்பாடு, காமராஜரே ஒரு சமயத்தில் இதை
வெளிப்படையாகக் கூறினார் )

இருந்தாலும், கட்சியில் நல்ல செல்வாக்கு உடையவராக
இருந்த மொரார்ஜி தேசாயும் அமைச்சரவையில்
பங்கு பெற வேண்டும் என்கிற கருத்து
நிலவியதால், மொரார்ஜி தேசாய் துணைபிரதமராகவும்,
நிதியமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மொரார்ஜி தேசாயை வெளியே தள்ள தகுந்த சந்தர்ப்பத்திற்காக
காத்திருந்த திருமதி இந்திரா காந்தி,14 பெரிய வங்கிகளை
நாட்டுடைமை ஆக்கும் சமயத்தில்,மொரார்ஜியை
பிற்போக்குவாதி என்று குற்றம் சாட்டி, மொரார்ஜியுடன்
கலந்து ஆலோசிக்காமலே நிதியமைச்சர் பொறுப்பை
அவரிடமிருந்து பிடுங்கிக் கொண்டார். சுயமரியாதையை
காத்துக் கொள்ள மொரார்ஜி தேசாய் தன் பதவியை ராஜினாமா
செய்ய வேண்டியதாயிற்று.

இவர் இனி தன் வாழ்நாளில் மீண்டும் அமைச்சர் ஆகவோ,
பிரதமர் பதவி குறித்தோ கனவு கூட காணவோ இயலாது
என்பது தான் அப்போது பெரும்பாலானவர்களின் கருத்தாக
இருந்தது.

அதன் பின்னர், 1975-ல் திருமதி இந்திரா காந்தியின்
தேர்தல் செல்லாது என்று அலகாபாத் உயர்நீதி மன்றம் தீர்ப்பு
அளித்ததும், அதையடுத்து இந்திரா காந்தி எமெர்ஜென்சியை
கொண்டு வந்ததும் பரபரப்பான நிகழ்வுகள்.

26 ஜூன் 1975 அன்று உள்நாட்டு எமெர்ஜென்சி
அறிவிக்கப்பட்டதும், ஜெயபிரகாஷ் நாராயண் தொடங்கி,
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள்
அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மொரார்ஜியும் அடக்கம்.

எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்ட மறுநாள் பெரும்பாலான
செய்தித்தாள்கள் வெளிவரவில்லை. மக்கள் செய்தி அறிய
துடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது தொலைக்காட்சிகளும்
கிடையாது. ஆல் இந்திரா ரேடியோ என்று கூறப்பட்ட
அகில இந்திய வானொலி தருவது தான் செய்தி …!

நான் அப்போது மத்தியப் பிரதேச தலைநகரான போபாலில்
இருந்தேன்.  ஒரு ஓட்டலில் தங்கி இருந்தேன்.
பரபரப்பான சூழ்நிலை – நான் பக்கத்து அறையில் தங்கி
இருந்தவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு
இந்தி பத்திரிகையைச் சேர்ந்த செய்தியாளர் என்று தெரிய
வந்தது.  முதல் நாள் இரவு மொரார்ஜி தேசாய் கைது
செய்யப்பட்ட காட்சியை அவர் கீழ்க்கண்டவாறு வர்ணித்தார்.

இரவு(அதிகாலை..?) 2 மணிக்கு மொரார்ஜியின்
இல்லத்தை போலீஸ் சூழ்ந்திருக்கிறது. உறக்கத்திலிருந்த
அவரை எழுப்பி, நாட்டில்  எமெர்ஜென்சி
பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் கைது
செய்யப்படுவதாகவும் கூறியுள்ளனர் போலீஸ் அதிகாரிகள்.

அவர்களிடம் –அதிகாலை ஆகிவிட்டதால், குளித்து –
பூஜை முடித்துக்கொண்டு வர  அரை மணி நேரம் அவகாசம்
கேட்டிருக்கிறார் மொரார்ஜி. அவர்கள் ஏற்றுக் கொண்டதும்,
தன் காலைப்பணிகளை முடித்துக் கொண்டு, அவர்களுடன்
சிறைக்கு புறப்படத் தயாராக வெளியே வந்திருக்கிறார்.
அதற்குள்ளாக சில பத்திரிகை நிருபர்கள் எப்படியோ அங்கு
வந்தடைந்து, மொரார்ஜியிடம் நாட்டில் எமெர்ஜென்சி
பிரகடனம் செய்யப்பட்டுள்ளது பற்றி கருத்து கேட்கிறார்கள்.
அதற்கு மொரார்ஜி சொன்ன இரண்டே வார்த்தைகள் –
“விநாச காலே – விபரீத புத்தி”.

இந்த விவரங்களையும், அதைத் தொடர்ந்து நாட்டில்
நிலவிய கடுமையான சூழ்நிலையும் திருமதி இந்திராவின்
மீது கோபமும், எரிச்சலும் உண்டாக்கினாலும், மொரார்ஜி
தேசாயைப் பொறுத்த வரை அரசியல் எதிர்காலம்
ஒரு முடிவுக்கு வந்து விட்டது என்றே அப்போது தோன்றியது.

ஆனால் – இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் எமெர்ஜென்சி
விலக்கிக் கொள்ளப்பட்டதும், அதன் பின்னர் நடந்த
தேர்தலில்  மொரார்ஜி தேசாய் பிரதமராக
தேர்ந்தெடுக்கப்பட்டதும் – மொரார்ஜி தேசாய்க்கு கிடைக்க
வேண்டிய நியாயம் கிடைத்து விட்டது என்றே தோன்றியது.

என்ன தான் பழமைவாதியானாலும், பிடிவாதக்காரரானாலும் –
அரசியலில் அவரைப் போன்ற  நேர்மையான மனிதர்களைக்
காண்பது மிகவும் அரிது என்றே சொல்ல வேண்டும்.

இனி –

220px-Cho_ramasamy

அண்மையில் – துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்கள்
ஒரு பேட்டியில், மொரார்ஜி தேசாய் அவர்களைக் குறித்த
தன் நினைவுகளைச் சொல்லி இருக்கிறார். அதிலிருந்து
குறிப்பிடத்தக்க சில பகுதிகள் –

———
மொரார்ஜிக்கும், சரண்சிங்கிற்கும் அப்போது கருத்து
வேறுபாடு. அவர் தன்னை மதிக்கவில்லை என்பது
சரண்சிங்கின் மனக்குறை. அவர்கள் இருவருக்கும் இடையில்
சமாதானத்தை உருவாக்க நான் முயற்சித்தேன்.
சரண்சிங்கை சந்தித்துப் பேசினேன். அப்போது மொரார்ஜியைப்
பற்றி அவர் சொன்ன ஒரு விஷயம் அதிர்ச்சி அளித்தது.

“மொரார்ஜி எனக்கு ஏன் மரியாதை தரவில்லை தெரியுமா ?
அவர் பிராமணர் – நான் பிராமணன் இல்லை. அதுதான்
காரணம்”.

மொரார்ஜி பிராமணராக இருந்தாலும் பூணூல் போடுவதில்லை.
பல சடங்கு, சம்பிரதாயங்களில் அவருக்கு நம்பிக்கை இல்லை.

சுதந்திரத்திற்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொரார்ஜி
போட்டியிட்டபோது, அவர் பூணூல் அணியாததைக் குறிப்பிட்டு
அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் பிரச்சாரம் செய்தபோது,
மொரார்ஜி மேடை ஏறிப் பேசினார்.

” நான் பூணூல் போடுவதில்லை. அது மட்டுமில்லை.
மற்ற ஜாதியினரை விட பிராமணன் உயர்ந்தவன் என்று
நான் நம்பவில்லை. பூணூலுக்கு தான் ஓட்டு என்றால் –
என்னை எதிர்த்து நிற்கும் வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள்.
நேர்மைக்கு ஓட்டு என்றால் எனக்குப் போடுங்கள் ”

இப்படிப்பட்ட மொரார்ஜியைப் பற்றி சரண்சிங் சொன்னதும்
நான் அவரிடம் சொன்னேன் –

“நீங்கள் என்னிடம் மட்டும் எப்படி மனம் விட்டு பேசுகிறீர்கள் ?
நானும் பிராம்மணன் தான்”

நான் சொன்னதும் என்னுடைய கையைப் பிடித்து இழுத்து
தன் நெஞ்சில் வைத்துக் கொண்டார் சரண்சிங்.

“நீ நல்ல பிராமணன்”

எனக்கு சிரிப்பதா, அழுவதா – என்று தெரியவில்லை !

………

(ஒரு முறை)  நான் டெல்லியில் தங்கி இருந்த ஓட்டலுக்கு
போன் வந்தது. மும்பையிலிருந்து மொரார்ஜி பேசினார்.

“நாளைக்கு காலையில் நான் மெட்ராஸுக்கு போறேன்.
நீ வந்தால் நன்றாக இருக்கும்”

எனக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படியோ டெல்லியில்
இருந்த நண்பர் மூலம் விமான டிக்கெட் வாங்கி அன்றிரவே
சென்னைக்கு திரும்பி, மறுநாள் காலை ஏர்போர்ட்டுக்குப்
போய் விட்டேன். அன்றைக்கு மொரார்ஜிக்கு சென்னையில்
ஒரு கூட்டம் இருந்தது. ஜனதா கட்சிக்காக அவர் பேசுவதாக
இருந்தது.  திமுக வுடன் அப்போது ஜனதா கூட்டணி
வைத்திருந்தது.

ஏர்போர்ட்டில் என்னைத் தவிர வேறு யாருமே அவரை
வரவேற்க வரவில்லை. ஜனதா கட்சிப் பிரமுகர்கள்
யாரும் வராதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
“என்ன .. ஜனதா கட்சியிலிருந்து யாரும்
வந்திருக்கிறார்களா” என்ற அவர், நான் “இல்லை”
என்றதும், என்னைப் பார்த்தபடி “எதுக்கு உன்னை
வரச்சொன்னேன் -புரிகிறதா ” என்றார் சிரித்தபடி …

“நான் உன் வீட்டிலேயே தங்கிக்கறேன். வா போகலாம்”
என்று சொல்லிக்கொண்டே என்னுடைய காரில்
ஏறிக் கொண்டார்.

…..

திமுக வுடன் ஜனதா அப்போது கூட்டணி வைத்திருந்தாலும்,
திமுக வுக்காக தான் பிரச்சாரம் பண்ண மாட்டேன் என்று
திடமாகச் சொல்லி விட்டார்.
மொரார்ஜி தமிழகத்திற்கு வந்து –
ஒரு ஜனதா கட்சிக் கூட்டத்தில் பேசினால்,
ஒரு திமுக கூட்டத்திலும் பேச வேண்டும்.
இல்லையென்றால் அவர் எங்கும் பேசக்கூடாது என்று
சொல்லி விட்டார்கள். உடனே தமிழகத்தில் இருந்த
எல்லா ஜனதா கட்சித்தலைவர்களும் அதை ஆமோதித்து
ஒதுங்கி விட்டார்கள். மொரார்ஜி கலந்து கொள்ள இருந்த
போஸ்டர்கள் கூட கிழிக்கப்பட்டு, அன்று மாலையில்
நடக்கவிருந்த கூட்டத்திற்கான அறிகுறியே தெரியாமல்
பண்ணி விட்டார்கள்.
நெல்லை ஜெபமணியும் மற்றவர்களும் இதை சங்கடத்துடன்
மொரார்ஜியிடம் விளக்கிச் சொன்னார்கள்.
“இது எதிர்பார்த்தது தான். அதனால் தான் சோவை
டெல்லியிலிருந்து இங்கே கிளம்பி வரச் சொன்னேன்”
என்ற மொரார்ஜி என்னிடம் “இன்றைக்கு சாயந்திரமே
பம்பாய்க்கு ப்ளைட் டிக்கெட் வாங்கி விட முடியுமா”
என்று கேட்டார்.

நானும் அவருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து ஏர்போர்ட்டுக்கு
அவருடன் காரில் போனேன்.

“நான் ப்ரைம் மினிஸ்டராக இருந்தபோது எத்தனை தடவை
என்னைப் பார்க்க வந்திருப்பே ?”

“தெரியாது. பல தடவை வந்திருக்கேன்.”

ஒரு தடவையாவது என்னை பார்க்க வர்றப்போ ஒரு
பூச்செண்டோ, பொன்னாடையோ கொண்டு வந்திருக்கியா?”

“இல்லை”

“ஏன் கொண்டு வரலை ?”

“அது ஒரு போலித்தனமான மரியாதங்கறது என்னோட
அபிப்பிராயம். அந்த வழக்கம் எனக்கில்லை. அதோடு
அப்படி எல்லாம் நடந்துக்கறது எனக்கு கூச்சமா இருக்கும்”.

“ஏன் இதைக் கேட்டன்னா நீ அன்னைக்கும் அப்படித்தான்
வந்தே. இன்னைக்கும் அப்படித்தான் வந்திருக்கே.
ஆனா இங்கே உள்ள மத்தவங்க எப்போ என்னை பார்க்க
வந்தாலும் பொன்னாடை, பூச்செண்டோட தான் என்னைப்
பார்க்க வந்திருக்காங்க. அவங்க தான் இன்னைக்கு வரலை.

அவங்க மரியாதை காட்டியது எனக்குக் கிடையாது.
நான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு”  – என்று
சொல்லி விட்டு சிரித்தார்.

அவரிடம் எப்போதும் மனதில் உள்ளதை பேசலாம்.
விவாதம் பண்ணலாம். பிரதமர் பதவியில் இருந்தபோதும்,
இல்லாத போதும் ஒரே மனநிலை தான். சொன்னபடியே
வாழ்ந்த உயர்ந்த மனிதர் அவர்.

அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன்னால் அவரைப்
பார்தபோது கூட ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருந்தார்.

பிரதமர் பதவி வரை பல பொறுப்புகளை வகித்த
மொரார்ஜி கடைசி வரை வாடகை வீட்டிலும்,
அரசு ஒதுக்கித்தந்த வீட்டிலும் தான் வாழ்ந்தார் … !!!

——————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

31 Responses to மொரார்ஜி தேசாய் -துக்ளக் ஆசிரியர் “சோ” கூறியதும் – என் நினைவுகளும் ….

 1. ஜோதிஜி சொல்கிறார்:

  தொடர்ந்து இது போல் எழுதுங்களேன்.

  நேரம் கிடைக்கும் போது இதை கேட்டுப் பாருங்கள். இதில் உள்ள சில சம்பவங்கள் இவர் பேசியுள்ளார்.

  https://plus.google.com/u/0/communities/111627536687519891951

  https://plus.google.com/u/0/108861639970432914204/posts/EWUSySfA7KE

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மிக்க நன்றி ஜோதிஜி.

   என்னால் இயன்ற வரை
   அவசியம் எழுதுகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. சாந்தன் சொல்கிறார்:

  இப்படிப்பட்டவர் பிரதமராக இருந்தபோதுதான் ஈழப்போர் கல்லெறியும் நிலையில் இருந்து கைத்துப்பாக்கிக்கு மாறி இருந்தது. ”இந்தியாவில் இருந்து போய் குடியேறியோர் எப்படி தனிநாடு கேட்கலாம்” என ஈழப்போராட்டம் பற்றி இவர் ”திருவாய் மலர்ந்தருளியதை’ அன்றைய ஜெயவர்த்தனே அரசு செலவில் அச்சிட்டு ஈழத்தமிழர் முகத்தில் எறிந்தார். அந்தளவுக்கு இந்திய வம்சாவழித்தமிழருக்கும் ஈழத்தமிழருக்கும் வேறுபாடு தெரியாதவராக இருந்தார். ஒருவேளை இந்த ‘ஆலோசனை’ சோ கொடுத்ததாய் இருக்குமோ????

  • GOPALASAMY சொல்கிறார்:

   HE MIGHT NOT BE KNOWING ABOUT SRILANKAN TAMIL’S PROBLEM.
   KARUNA KNOWS MORE ABOUT SRILNKAN TAMIL’S PROBLEM.
   BUT THE ISSUE HERE IS WHETHER MORARJI DESAI IS A HONEST PERSON OR NOT.
   MORARJI WANTED TO UNITE PONDICHERY WITH TAMIL NADU.
   HIS VIEWS ARE DIFFERENT. BUT NOT ANTNATIONAL. HE IS NOT A CORRUPT PERSON. HE IS NOT HAVING ACCOUNT IN SWISS BANK.
   THAT IS WHY SOME PEOPLE NOT CONSIDERING HIM AS GOOD LEADER.
   KARUNA, SONIA, RAUL ARE ENOUGH FOR US.

   • Rajagopalan.R. சொல்கிறார்:

    தடங்கலுக்கு மன்னிக்கவும்.

    serious விஷயத்திற்கு நடுவே ஒரு நிஜ joke –
    நேற்றிரவு, திருவாரூரில் பேசுகையில்
    கருணாநிதி கூறியது –

    “சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் வந்தே
    தீர வேண்டும் என்பது என் அருமை
    நண்பர் MGR கண்ட கனவு.

    தமிழர்களுக்காகவே வாழும் திமுகவை இப்படி
    அறவே தோற்கடிக்காமல் இருந்திருந்தால்,
    இந்நேரம் சேது சமுத்திரத் திட்டம்
    நிறைவேறி இருக்கும்.

    இந்த சேது சமுத்திர திட்டத்திற்காக என்னையே
    நான் அழித்துக் கொள்ளத் தயாராக இருக்கிறேன் “

  • BC சொல்கிறார்:

   சாந்தன், மொரார்ஜி போன்ற நேர்மையானவர்கள் இந்திய பிரதமராக தொடர்ந்து இருந்தால் எங்கட பெடியன்களுக்கு துவக்கு கொடுத்து குண்டு கொடுத்து நாசமாக போக விட்டிருக்க மாட்டார்கள் அல்லவா!

   • சாந்தன் சொல்கிறார்:

    நேர்மை அல்ல இங்கு சிக்கல். பக்கத்து நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினையில் கருத்துச் சொல்லும் போது நேர்மையுடன் உண்மையையும் பேசவேண்டும்! அதேபோல அடுத்த நாட்டுக்காரன் தனது அறியாமையை இன்னொரு இனத்தை ஒடுக்க பயன்படுத்தாமல் இருக்கவும் பார்த்துக்கொள்ளவேண்டும்.

   • சாந்தன் சொல்கிறார்:

    எங்கட பெடியன்களுக்கு துவக்கு கொடுத்து குண்டு கொடுத்து நாசமாக போக விட்டிருக்க மாட்டார் என்கிறீர்கள். தான் ஒவ்வொருநாளும் காலையில் குடிக்கும் ‘பதார்த்ததை’ கொடுத்திருப்பார் என்கிறீர்களா? வைத்திய உதவி கிடைக்காமல் இருக்கும் லட்சோப லட்சம் இந்தியமக்களுக்கே ‘சிறுநீர் பரிகாரம்’ பரிந்துரை செய்தவர் ஈழத்தமிழருக்கு குண்டுகள் கொடுத்திருக்க மாட்டார் என்பது உண்மைதான் பிசி அவர்களே!

    (புகழ்பெற்ற அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியான ”60மினிற்ஸ்” இல் கொடுத்த பேட்டியில்)

  • ilatchiyakudumbamt சொல்கிறார்:

   தனி ஈழம் கேட்பது தவறு,தனி மாநிலம் கேட்பது சரியானது என்பது என்று புரிகிறதோ அன்று இலங்கை தமிழர் பிரச்னை தீரும்.

   • சாந்தன் சொல்கிறார்:

    இதை சொல்லிச் சொல்லியே இந்தியா ஸ்ரீலங்காவுக்கு உதவி செய்தது. ஆனால் இப்பொ ஸ்ரீலங்கா என்ன செய்கிறது? இந்தியா கொடுத்த வாக்குறுதியை நிறவேற்றுங்கள் எனக் கெஞ்சவேண்டி உள்ளது!
    இதில் தமிழர் பிரச்சினை தீரும் என ஆரூடம் வேறு !

   • BC சொல்கிறார்:

    //தனி ஈழம் கேட்பது தவறு,தனி மாநிலம் கேட்பது சரியானது என்பது என்று புரிகிறதோ அன்று இலங்கை தமிழர் பிரச்னை தீரும்.//
    இலங்கை தமிழர்கள் தனி ஈழம் கேட்கவில்லை.
    புலம் பெயர்ந்து வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற இலங்க தமிழர்களில் ஒரு பகுதியினதும். தமிழ்நாட்டில் உள்ள ஒரு பகுதி தமிழர்களினதும் பொழுது போக்கு தனி ஈழம் கேட்பது.

    • சாந்தன் சொல்கிறார்:

     பிசி,

     இதனை ஒரு சவாலாகவே கேட்கிறேன். தமிழர் பகுதிகளில் சர்வதேச கண்காணிப்பின் கீழ் ஒரு பொதுசன வாக்கெடுப்பு நடத்தி நீங்கள் சொல்லும் இந்த ”புலம் பெயர்ந்து வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற இலங்க தமிழர்களில் ஒரு பகுதியினதும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பகுதி தமிழர்களினதும் பொழுது போக்கு தனி ஈழம் கேட்பது” என்பதை நிரூபித்து அவர்களின் முகத்தில் முதலும் கடைசியுமாக கரியைப்பூசலாமே ஸ்ரீலங்கா அரசும் அந்த ஒருபகுதியைச் சாராத மறுபகுதியினரும். முடியுமா?

 3. venkataramani சொல்கிறார்:

  பதவி வரும் போகும். ஏற்றுக் கொண்ட கொள்கைக்ளை
  நாற்காலிக்காக விட்டுவிட்டால்…. சரியென நம்பிய
  கொள்கைகளுக்காக் எதையும் துறக்க துணிந்த நல்ல
  மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  சரியெனப் பட்டதை பேசுவதற்கு கூட தைரியம் வேண்டும்.
  அது இந்த மனிதரிடம் இருந்தது.

  நற்காலி துண்டு. கொள்கை வேட்டி என்பதான விதாண்டா
  வாதமெல்லாம் கற்காததின் விளைவாக, சந்தர்ப்பம் வாய்த்த போது
  இரண்டையுமே, துறந்தவரில்லை.

  எங்கும் எதிலும் “ஈழத்தை”ப் பொருத்திப் பார்ப்பதென்பது
  “தமிழர்களின்” போக்காக மாறி பல காலமகிவிட்டது. சாந்தன்
  விதிவிலக்கல்ல.

  தேசாயின் ஜனதா ஆட்சியில் தான் புதுவை யூனியன் பிரதேச
  பகுதிகளை அவற்றின் அண்டை மாநிலங்களோடு, நிதி மற்றும்
  நிர்வாக நலன் “கருதி” முடிவெடுக்கப் பட்டது. அப்போது, புதுவை
  இணைப்பு போராட்டம் (திரு.டி.இராமச்சந்திரன் தலைமையில்
  என நினைவு) தீவிரமாக நடந்தது. புதுவை பகுதிகளிலே
  இரானுவமெல்லாம் சுற்றிக் கொண்டிருந்தது. துப்பாக்கி சூடு
  நடந்தது. 144 உத்தரவு பல நாட்கள் நடப்பில் இருந்தது. மாஹே
  மற்றும் ஏனாம் பகுதிகளில் தேசாய் முடிவிற்கு ஆதரவோ எதிர்ப்போ
  பெரிதாக் வெளிப்படவில்லை. காரைக்கால் பகுதி மக்கள் எப்போதுமே
  தங்களை தமிழக மக்களாகவே க்ருதினர். (இப்போது நிலை வேறு).
  எம்.ஜி.ஆரும் “இணைப்பை” (மறைமுகமாக) வரவேற்றார். திமுகவினர்
  என்னென்னவோ செய்தும் அவரது முடிவில் மாறுதல் தென்பட
  வில்லை. ஆனால் போராட்டம் ஓய்ந்து போகத் தொடங்கியது.
  ஜ்னதா உள்குத்து வேலைகளில் இவரது ஆட்சி போன பிறகு
  “இணைப்பும்” போயிற்று.

  சுதந்திரத்தின் போதே புதுவையின் பிறிதொரு பகுதியான
  சந்திரநாகூர், மேற்கு வங்க்கத்தோடு, மக்களின் விருப்பத்தின்
  பேரில், இணைத்து வைக்கப்பட்டது. அதற்கு புதுவையில் எங்கும்
  எவ்வித எதிர்ப்பும் இருந்ததாக தெரியவில்லை.

  புதுவையையும் இணைத்து விட்டிருக்கலாம். செய்யாமல் போனதால்
  புதுவையின் பழைய அழகு முகம், அரசியல்வாதிகளுடையதும்
  தான், காணாமல் போய்விட்டது.

  • சாந்தன் சொல்கிறார்:

   ஒரு தலைவனைப் பற்றிப்பேசும்போது அந்தந்த நாட்டு மக்கள் தமது கண்ணோட்டத்திலேயே பார்ப்பார்கள். ஒபாமா அமெரிக்கர்களுக்கு நல்லவராய் இருக்கலாம் ஆனால் ஈராக்கியர்களோ ஆப்கானிஸ்தானியர்களோ தமது கண்ணோட்டத்திலேயே சொல்வார்கள். அதிகம் ஏன் ஒபாமா பற்றி வெள்ளையர்களின் கண்ணோட்டம் கறுப்பினமக்களின் கண்ணோட்டத்தில் வேறுபடும்.
   மேலும் இந்தியா நோக்கிய அமெரிக்காவின் நடத்தைகளை அமெரிகாவில் வசிக்கும் இந்தியர்கள்கூட இந்தியக்கண்ணோட்டத்திலேயே பார்க்கும்போது நான் ஈழக்கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறா?

 4. peace சொல்கிறார்:

  நெருக்கடி நிலை முடிந்தவுடந்தான் தேசாயைப் பற்றித் தெரிய வந்தது. “பாத்திரம் ஒன்றைத் தூக்கிக் கொண்டு
  ********* குடிக்க வாருங்கள்” என்று வார இதழில் கவிதை கூட வந்திருந்தது. மகன் விவகாரம், குடும்பத்தில் தற்கொலைகள், இவர் வாழ்க்கையும் அமைதியாக இருந்ததாக நினைவில்லை. நான் இந்திராவின் விசிறியில்லை. அவருடைய இறங்குமுகம் சஞ்சய் தலையெடுத்தவுடன் தொடங்கியது. காமராஜரால், தேசாய்
  தெரிவு செய்யப்பட்டிருந்தால், 1971யில் சண்டை வந்திருக்குமா ? நேருவைப் போல, திணறியிருப்பார் என்றே
  நினைக்கிறேன். இந்திராவிடம் பிடித்தது அவருடைய போர்க்குணம். கிஸ்ஸிஞ்சர், இவரை வயதான சூனியக்காரி
  என்று வர்ணித்தாரம்! மகன் பாசம் அவருடைய முடிவுக்குக் காரணமாகியது.

 5. venkataramani சொல்கிறார்:

  நம்முடை சாபக் கேடே இதுதான். “சுக்கை மிஞ்சிய மருந்து
  இல்லை; சுப்ரமணியத்தை ஒக்கும் தெய்வமில்லை” என்கிற
  சொல்வடை போல, இவர்கள் எப்போதும் இந்திராவையும்
  காங்கிரஸையும் விடமாட்டார்கள். நம்மில் பலருக்கு இந்திய
  வரலாறு மட்டுமல்ல இந்திய தேசிய காங்கிரஸின் வரலாறும்
  தெரியாது போலிருக்கிறது.
  சுதந்திர இந்தியாவில் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக
  (இந்திரா) காங்கிரஸ் ஆட்சி அதிகாரதில் இருந்திருக்கின்ற
  காரணத்தினாலும், நேரு (இந்திரா) காந்தி குடும்பத்தின்
  தேசிய பங்க்களிப்பு பற்றி மிக அதிகமாக பேசப்பட்டு வருகின்ற
  காரணத்தினாலும், தேசாய் மட்டுமல்ல இன்ன பிற
  தலைவர்களின் அவர்கள் குடும்பத்தினரின் தியாகம்
  பற்றியெல்லாம் வெளியில் தெரியாமல் போய்விட்டது.
  தேசாய் மூத்திரத்தைக் குடிக்க சொன்னார் என்கிறதான்
  கிண்டல், “திராவிட” பங்களிப்பு. அவர் அவரது மூத்திரத்தைக்
  குடிக்கச் சொல்லவில்லை. சட்டமெல்லாம் இயற்றவில்லை.
  “நான் என் மூத்திரத்தைக் குடிக்கிறேன். அதனால் நலமுடன்
  இருக்கிறேன்” என்பது தான் அவரது கருத்து. இதையே
  வெளிப்படையாக சொன்னவர், எந்த அளவு வெளிப்படையான
  மனிதராக இருக்க வேண்டும்?
  மஞ்சள் துண்டு ரகசியத்தை பகிர்ந்து கொள்ள விரும்பாத
  பகுத்தறிவாளர்கள், “வெளிப்படையான” ஆசாமிகளைத்
  தாறுமாறாகத் தான் விமர்சிப்பார்கள்.

  அவரவர் நோக்கிலே தான் பிரச்சனைகளை அணுகுவார்கள்
  என்பது சரிதான். அந்த நோக்கின் அடிபடையிலேதான்
  “ஒரு” கருத்தையும் அமைத்துக் கொள்கிறார்கள் என்பது
  உண்மையானால், ஈழத் தமிழ் மக்கள் பற்றிய தேசாயின்
  கருத்து அவரது நோக்கின்கால் அமைந்தது.

  • Rajagopalan.R. சொல்கிறார்:

   very interesting comments …!!

  • சாந்தன் சொல்கிறார்:

   ”…ஈழத் தமிழ் மக்கள் பற்றிய தேசாயின்
   கருத்து அவரது நோக்கின்கால் அமைந்தது…..”

   அருமையான அட்டகாசமான சுப்பரான கருத்து!
   ஒரு நாட்டின் (மிகப்பெரிய ஜனநாயக நாடு!!) தலைவர் பக்கத்து நாட்டில் அதுவும் 32 மைல் தொலைவில் இருக்கும் நாட்டினைப்பற்றி சொன்ன தவறான கருத்தை “அவரது நோக்கால்” அமைந்தது என சொல்லும் பதில் அட்டகாசம்!
   அடுத்த நாட்டில் என்ன நடக்கிறது எனத் தெரியாத தலைவர்…….இதில் ஒரு பிராந்திய வல்லரசாக வரும் என ஆசை வேறு!!!!

 6. peace சொல்கிறார்:

  U.S. Journalist Cleared of Libel Charge by Indian
  By DAVID MARGOLICK
  Published: October 07, 1989
  மறுபக்கம். பெரியண்ணனைப் பற்றி எல்லோருக்கும் இன்று தெரியும்! இது உண்மையா? கடவுளுக்கே வெளிச்சம்!

  A jury in Chicago ruled yesterday that Seymour M. Hersh, the investigative journalist, did not libel former Prime Minister Morarji Desai of India when he described him as a paid informer for the Central Intelligence Agency.

  After six hours of deliberations, the jury held that Mr. Desai had not shown that Mr. Hersh’s assertion was false, or that it was written with reckless disregard for the truth. To win a libel suit, a public figure must show not only that the offending statement is false, but also that the writer either knew it to be false or did not care whether it was true or not. The verdict came six and a half years after the former Indian official filed his $50 million suit against Mr. Hersh in Federal District Court in Chicago.

  In his 1983 book, ”The Price of Power: Kissinger in the Nixon White House,” Mr. Hersh wrote that Mr. Desai, India’s Prime Minister from 1977 to 1979, received $20,000 a year from the C.I.A. during the Johnson and Nixon administrations in exchange for information on Indian foreign policy and domestic politics. Mr. Hersh based his claim on information supplied by six confidential sources.

 7. ravikumar சொல்கிறார்:

  fantastic recall. keep recalling these type of instances

 8. GOPALASAMY சொல்கிறார்:

  SANTAN IS RIGHT IN HIS VIEW.
  SIMILARLY, PEOPLE LIKE LIKE SANTAN SPOILED TAMIL NADU’S ATMOSPHEREBECAUSE OPF THEIR POOR VISION, GREEDNESS AND IRRESPONSIBLE ATTITUDE. BECAUSE OF LTTE, SO MANY REFUGEES IN TAMILNADU, COSTING OUR EXCHEQUER.. THEY BROUGHT GUN AND BOMB CULTURE TO TAMIL NADU.
  IF SANTAN IS HAVING REASONS TO HATE HONEST PEOPLE , THEN WE ARE ALSO HAVING REASONS TO HATE PEOPLE LIKE SANTAN

  • எழில் சொல்கிறார்:

   I beg to differ except for your first line of comment. We people in Tamil Nadu can’t even think and vote for non-corrupt politician to the helm, can’t even question corruption, can’t even stand up for oppressed and cast based violence and you think we require someone to come from outside to spoil us? It was the people who wanted to save lives and preserve their Chastity came as refugees. If you are so concerned about taxpayers money and government revenues then we should spend more time on standing up to the government to get the black money in European banks back to us rather than whining for the money spent on people who had nowhere to go . For your information it was our governments who have them training and guns on the contrary to what you said. Santan just mentioned about his displeasure on Desai for his loose talk on Eelam Tamils issue and that doesn’t mean he hates honest people. You too have written something which is not agreeable to me but be assured I don’t hate you and as I have the maturity to take issues on their merit and not on the background of where you come from.

 9. venkataramani சொல்கிறார்:

  மகாத்மா பற்றி கூட பலரும் பல வண்ணம் எழுதி குவித்து
  இருக்கிறார்கள். பணம் “சம்பாதித்து” இருக்கிறார்கள். காந்தி
  வீட்டுக்காக உழைக்கவில்லை. வீட்டை, மனைவி மக்களை
  கவனிக்கவில்லை. அதனால் ஒரு பிள்ளை அவருக்கு
  கட்டுப்படாமல், திரிந்து மதுவுக்கு அடிமைப்பட்டு ஒரு
  அனாதை போல உயிர் இழந்தார் என்றெல்லாம்
  எழுதியிருக்கிறார்கள்.
  வாஜ்பாயின் தத்துப்பிள்ளை அவரது பெயரை சுயலாப
  நோக்குடன் பயன்படுத்தி சம்பாதித்து இந்தியாவில்
  பாதியை வாங்கிவிட்டார் என்று ச்ழுதியிருக்கிறார்கள்.
  தானாக பதவியை துறந்தவரை, எவராலும் தேர்தலில்
  எதிர்கொள்ள முடியாத ஜ்யோதிபாஸுவின் மகனைப்
  பற்றிக் கூட “இம்மாதிரி” எழுதியிருக்கிறார்கள்.
  பதவியிலிருந்த இரண்டாண்டுகாலமும் மாதம் தவறாமல்
  சி.ஐ.ஏவிடம் கையூட்டுப் பெற்றவரின் வாரிசுகள்
  இன்றும் கூட மகாராஷ்டிரத்தில் வாழ்ந்து கொண்டுதான்
  இருக்கிறார்கள். அவர்களின் “இன்றைய” பொருளாதார
  நிலை என்ன?
  இந்தியாவைப் போன்ற பரந்து விரிந்த ஜனநாயகத்தின்
  பிரதம அமைச்சர், இருபதாயிரம் டாலருக்கா “வெளியுறவு
  கொள்கைகளைப்” பற்றிய விவரங்களை, பகிர்ந்து
  கொண்டிருப்பார்? வேடிக்கையான வினோதமான
  விவரிப்பு. ஆங்கிலத்தில் இருப்பதினால் நம்பிய ஆட்களும்
  இருப்பார்கள்.

  பலகாலம் உங்கள் தெருவில் வாழும் உங்கள் பக்கத்து
  (இடது வலது இரண்டும்தான்) வீட்டுக்காரனின் பூர்வீகமெல்லாம்
  உங்களுக்கு முழுமையாக தெரியுமா?
  ஈழமக்களின் வேர் வரை நன்கறிந்த “தாய்த்தமிழ்” நாட்டின்
  தலைவர்கள் இதுகாறும் உங்களுக்காக செய்தது என்ன?
  அவர்கள் உங்களின் தேவைகள் குறித்து சொல்வதெல்லாம்
  உண்மைதானா? ஈழமக்கள் முற்றிலுமாக அவற்றை
  வரவேற்கிறார்களா?
  இப்போது பிரபாகரனோடு தாம் இருப்பது போல படங்களை
  வெளியிடும் “தலைவர்கள்” உண்மையில் அவரைப் பார்த்து
  பேசியிருக்கிறார்களா? எப்போது?
  தாய்த்தமிழ் நாட்டில் “உங்கள்” நலன் குறித்தே தலைவர்கள்
  சிந்திப்பதும் செயல்படுவதுமாக இருக்கிறார்கள் என்றால்,
  முகாமிகளில் இருக்கும் சகோதர சகோதரிகள் ஆஸ்திரேலியா
  நோக்கி செல்லத் துணிகிறார்களே ஏன்?

  • சாந்தன் சொல்கிறார்:

   இங்கே விவாதம் மொராஜி தேசாயின் தலைமைத்துவம் பற்றியது அன்றி “ஈழமக்களின் வேர் வரை நன்கறிந்த “தாய்த்தமிழ்” நாட்டின்
   தலைவர்கள் ” பற்றியதல்ல. மேலும் தமிழ்நாட்டின் தலைவர்கள் சொல்வதைக்கேளாமல் “சோ”வின் ஆலோசனை கேட்டால் இப்படித்தான் நடக்குமா என்பதுதான் எனது ஒரிஜினல் கேள்வி!

 10. BC சொல்கிறார்:

  இந்தியாவில் முன்பிருந்த மொரார்ஜி தேசாய் என்ற நேர்மையான பிரதமர் பற்றிதகவல்கள் தந்த காவேரி மைந்தன், வெங்கட்ராமனுக்கு மிக்க நன்றிகள்.
  புலம் பெயர்ந்து வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற இலங்க தமிழர்கள் சொல்வதை இலங்கை தமிழர்கள் கருத்தாக நீங்கள் ஒரு போதும் பார்க்க வேண்டியதில்லை. இதுவே பல பிரச்சனைகளுக்கு காரணம். வெளிநாட்டில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு சீமானை பிடிக்கும். இந்திய பிரதமராக சீமான் வந்தால் பிடிக்கும்.

  • சாந்தன் சொல்கிறார்:

   பிசி….மீண்டும்….
   இங்கே விவாதம் மொராஜி தேசாயின் தலைமைத்துவம் பற்றியது அன்றி சீமான் பற்றியதல்ல!!!!

 11. peace சொல்கிறார்:

  வினோத் மேத்தா என்ற இந்திய பத்திரிக்கையாளர் நினைவு கூர்கிறார். பணத்தை வாங்கியது கான்தி தேசாய்
  என்கிறார் ஹெர்ஷ்.

  Last year (2010), I had lunch at the Imperial Hotel with Seymour Hersh, who was investigating Pakistan’s nuclear arsenal and had stopped over in Delhi. I told him I was a great admirer of his work but he had cost me one job and some loss of professional reputation. Hersh recounted the entire spying saga in some detail and gave me the name of the Indian spy. “You can use the information when you write your memoirs, but not before.” I am keeping my word.
  Seymour Hersh reiterated that it was indeed Morarji Desai. I inquired if Morarji took the money from the CIA himself. “No. We paid his son Kanti Desai.” Did the old man know the CIA was paying his son? “Of course, he knew,” replied Hersh. Despite Hersh’s categorical claim, I find it hard to believe that Desai would betray his country, and that too for the paltry sum of $20,000 a year.
  கான்தி தேசாய் குறித்த பல புகார்கள் நெல்லிக்காய் மூட்டையாய் இருந்த ஜனதா கட்சியின் உள் வட்டத்திலேயே இருந்தது. இதைப் பற்றியெல்லாம் தகவல்கள் இருக்கிறது.ஒரு மேற்குலக பத்திரிக்கையாளர் நினைவு கூர்கிறார்.
  Ian Jack quotes G D Birla as describing Morarji Desai’s son Kanti Desai as ‘stupid’ and Sanjay Gandhi as ‘wicked and stupid.’
  பொது வாழ்வில் இருப்பவர்களின் அனத்து பரிணாமங்களையும் அலசலாம்.

  • bandhu சொல்கிறார்:

   மொரார்ஜி மகன் குறித்த இதே போன்ற அனுபவம் திரு பாரதி மணி அவர்களுக்கும் உள்ளது. அவர் எழுதிய பல நேரங்களில் பல மனிதர்களில் – இல் அதை பற்றி குறிப்பிட்டிருக்கிறார்

 12. venkataramani சொல்கிறார்:

  அப்பன் யோக்கியன் என்றால், மகன் திருடன் என்கிறார்கள்.
  பிறிதொரு இடத்தில், அப்பனைத் திருடன் என்றால், இலலை
  இல்லை அவர் “எங்கள் இனத்தின்” மாபெரும் தலைவர்
  என்கிறார்கள். இவர்களின் “புரிதல்” வியப்பளிக்கிறது.

  மகனின் தவறுகளுக்கு (செய்திருந்தாலும் கூட) அப்பன்
  எப்படி பொறுப்பாக முடியும்? அதை வைத்து, அப்பனின்
  யோக்கியதாமசாத்தை எவ்விதம் அளவிட முடியும்? உலகில்
  எந்த மகனுக்கு அவன் அப்பனின் “குணாதிசயம்” முற்றிலும்
  அமைந்து இருக்கிறது?

  கோவையிலே ஒரு காங்கிரஸ் மேயர் இருந்தார். அவர் வார்டு
  கவுன்சிலராக இருந்த காலத்திலே, அவரை குறை சொல்ல
  ஒருவர் இல்லை. மேயர் ஆனது முதல் “குறைகளைத் தவிர”
  வேறொன்றும் இல்லை.சொத்து மதிப்பும் எகிறிவிட்டது. மக்கள்
  காரணமாக் சொன்னது, அவரது மகனை.
  அதிகார துஷ்பிரயோகம் செய்ய அல்லது தூண்ட, ஒரு மகனோ
  மகளோ ஒவ்வொரு அப்பனுக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
  என்ன செய்ய?

  தேசாயின் தலைமை பண்புகள் பற்றி வியந்து நண்பர் கா.மை
  எழுதவில்லை என்றே கருதுகிறேன். நாற்காலி “பித்து”ப்
  பிடிக்காத நலல மனிதர் என்பதே, அவரது மற்றும் சோ
  குறிப்பிடும் விஷயங்களில் தென்படுகிறது. அதை நான்
  “முழுவதுமாக” ஏற்கிறேன்.
  “தமிழ்நாட்டு தலைவர்கள்” பகன்றதை இந்திய தேசிய
  தலைவர்கள் கேட்பதும், கேட்காததும் ஒருபுறம் “கிடக்கட்டும்”.
  “உண்மையான நோக்கம் கொண்ட” ஈழத்துத் தலைவர்கள்
  சொன்னதை, போராளிகள் கேட்டார்களா? ஏன் அவர்களது
  வார்த்தைகளைக் கேளவில்லை? அந்த தலைவர்களையே
  “போட்டுத் தாக்கி” உயிர் எடுத்தார்களே? அது எவ்விதம்?
  விளக்குவீர்களா?

  • சாந்தன் சொல்கிறார்:

   இங்கே விவாதம் மொராஜி தேசாயின் தலைமைத்துவம் பற்றியது .அயல் நாட்டு விடயங்கள் பற்றிய அறிவு அதில் ஒரு பகுதி. ஈழப்போராளிகள் பற்றியதல்ல. மேலும் ஈழத்துத் தலைவர்கள்
   சொன்னது மட்டுமல்ல மக்கள் வழங்கிய ஆணைகூட சுதந்திரத் தமிழீழம்!
   (வட்டுக்கோட்டைத் தீர்மானம், அத்தீர்மானத்தினை முன்னிலைப்படுத்தி நடந்த 1977ம் ஆண்டு வாக்கெடுப்பு)
   தமிழ்த் தலைவர்கள் தேர்தலுடன் மறந்தனர் ஆனால் போராளிகள் அப்படிச் செய்யவில்லை!

 13. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களே,

  மொரார்ஜி தேசாய் குறித்து மேலேயுள்ள இடுகையில்
  நான் கூறி இருப்பதை மீண்டும் இங்கு நினைவுபடுத்தி,
  இத்தோடு இந்த விவாதத்தை முடித்துக் கொள்ளலாம்
  என்று நினைக்கிறேன்.

  ——————
  துவக்கத்தில், அவரை எனக்குப் பிடித்ததில்லை.
  அவர் conservative ஆக இருந்தார்.
  மிகவும் பிடிவாதக்காரராக இருந்தார்.

  ஆனால் அவரிடம் நேர்மை இருந்தது.
  எளிமை இருந்தது.
  சத்தியம் இருந்தது.
  தான் நினைப்பதை வெளிப்படையாகச் சொல்லும்
  தைரியம் இருந்தது.
  இந்த குணங்களே பிற்காலத்தில் நான் அவர் மீது
  பெரும் பற்று கொள்ளக் காரணங்களாக இருந்தன.
  இந்த காலத்தில் அரசியல்வாதிகளிடம் இத்தகைய
  குணங்களை எங்கே காண முடிகிறது ?
  ———————–

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.