ஆசைப்படு – அதை நிச்சயம் அடைந்து விடு !

ஆசைப்படு – அதை நிச்சயம் அடைந்து விடு !

சாமியாரை விட்டு நகர்ந்து வேறு பக்கம் போகலாமென்று
நாம் நினைத்தாலும், அவரது “பவர்” நம்மை நகரவிடாமல்
கட்டிப் போடுகிறது ! தன்னையும், தன் நிறுவனத்தையும்,
நிறுவனத் தயாரிப்புகளையும் “மார்க்கெட்டிங்” செய்ய
அற்புதமான குழு ஒன்றை அவர் வைத்துக் கொண்டிருக்கிறார்.
அது நன்றாக வேலை செய்கிறது.

நேற்றிரவு, நண்பர் ஒருவரை – இளைஞர் – பார்த்து
சாவதானமாக பேசிக் கொண்டிருந்தேன். அண்மையில்
நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் பெரிய நிறுவனங்கள் –
கார்பொரேட் கம்பெனிகள் – நடத்திய நிகழ்ச்சி ஒன்றுக்கு அவர்
சென்றது குறித்துக் கூறினார். அந்த நிகழ்ச்சிக்கு சாமியாரை
அழைத்திருந்தனராம். கோயம்புத்தூரிலிருந்து – நேரடியாக
(சொந்த) ஹெலிகாப்டரில் வந்தாராம் ! அவரைப்பற்றி
சொல்லி அதிசயப்பட்டுப் போனார் நண்பர்.

கார்பொரேட் கம்பெனிகளின் பணம் செலவழிவது பற்றி
நான் கவலைப்படவில்லை. ஆனால் – பல இளைஞர்கள்,
சம்சாரிகள் – இவரைப்போன்றவர்களை நம்பி ஏமாந்து
போவது தான் நமக்கு வருத்தமாக இருக்கிறது.

எனவே – அடுத்த 3 இடுகைகளிலும் இவர் தான் !!

20,000 கோடி சொத்துக்கு அதிபதி ! இந்தியாவிலேயே பெரிய பணக்கார – சாமியார்  !

20,000 கோடி சொத்துக்கு அதிபதி !
இந்தியாவிலேயே பெரிய பணக்கார –
சாமியார்  – ஆனால் சாமியாரில்லை !

இந்து மதம் மிகப் புராதனமான  மதம்.
வேதங்களும்,உபநிஷத்துக்களும்,
ஸ்மிருதிகளும், சாஸ்திரங்களும், புராணங்களும்
நிரம்பியதாக இருக்கிறது. இவை உருவான
காலத்தை இன்னும்
யாரும் சரியாக கண்டுணர முடியவில்லை
என்றாலும்
குறைந்த பட்சம் 6000 ஆண்டுகளுக்கு
முன்னராகவாவது இவை உருவாக்கப்
பட்டிருக்க வேண்டும் என்று சரித்திர ஆசிரியர்கள்
கருதுகின்றனர்.

இவற்றில் நிறைய விஷயங்கள்
புரிந்துக் கொள்ள இயலாததாகவும்,
நம்புவதற்கு இயலாததாகவும்,
கற்பனையை மீறியதாகவும்,
கருதப்படுகின்றன.

சாதாரண மக்களால் இவற்றை புரிந்து கொள்ள
முடியாமல் இருந்ததால், இவற்றை எல்லாம் நன்கு
கற்றறிந்து, தேர்ந்து, தெளிந்து மற்றவர்களுக்கு
எடுத்துச் சொல்பவர்களை மகான்கள்,முனிவர்கள்,
ரிஷிகள் என்று முற்காலத்தில் மக்கள் மதித்தார்கள்.

இந்த மகான்களும், உலகப்பற்றைத்
துறந்து, மிக எளிமையான சந்நியாச வாழ்வை
மேற்கொண்டு உதாரண புருஷர்களாக வாழ்ந்தார்கள்.
மக்கள் மேன்மை அடைய எல்லா விதங்களிலும்
அவர்கள் வழி காட்டிகளாக இருந்து உதவினார்கள்.

பதஞ்சலி என்கிற முனிவர் மனிதர்களின்
உடலையும், உள்ளத்தையும், ஆன்மாவையும்
பக்குவப் படுத்தும் விஷயங்களை  சுருக்கமான
வாக்கியங்களில் உருவாக்கிச் சொன்னார்.
34 சூத்திரங்களில் அமைந்துள்ள  இவையே
பதஞசலி யோக சூத்திரம் எனப்படுகிறது.

இந்த யோக சாஸ்திரத்தில்,  உடலை மட்டும்
பக்குவப்படுத்த, வலிமைப்படுத்த
வல்லவை –  யோக ஆசனங்கள்(யோகாசனம் )
என்னும் பல்வேறு உடற்பயிற்சி முறைகள்.

உடலையும், உள்ளத்தையும், ஆன்மாவையும்
சேர்த்து பக்குவப்படுத்த  வல்லது
அஷ்டாங்க யோகம் என்னும் ராஜயோகம்.

யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்,
பிரத்தியாஹாரம், தாரணை, தியானம்,
சமாதி என்கிற 8 பகுதிகளைக் கொண்டதால்
இது அஷ்டாங்க யோகம் என அழைக்கப்பட்டது.
(எட்டு அங்கம் – அஷ்டாங்கம் )

கடந்த 40 – 50 ஆண்டுகளாக  யோக
ஆசனங்களை மட்டும் கற்று,  அவற்றை
மற்றவர்களுக்கு கற்றுத்தருவதை ஒரு
தொழிலாகவே பலர் மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

யோகாசனம் கற்றுத்தர பணமும் பெற்றுக்கொள்ள
ஆரம்பித்தனர்.இதன் மூலம் ஒரு புதிய
தொழில் துறையே உருவாகி விட்டது.
இந்தியாவிலும், மேற்கத்திய நாடுகளிலும்
இதற்கான மார்க்கெட் மிகப்பெரிய அளவில்
உருவானது.

இது வரை கூட இதில் தவறேதும் இல்லை.

நமக்கு உபயோகமான,ஆனால் தெரியாத
ஒரு விஷயத்தை
அவர்கள் கற்றுக்கொண்டு நமக்கு சொல்லித்
தருகிறார்கள். அதற்காக ஊதியம் பெற்றுக்
கொள்கிறார்கள்.

சாதாரணமாக நாம் வாழ்க்கையில் பல விஷயங்களை
மற்றவர் மூலமாகத் தான் தெரிந்து கொள்ள
வேண்டி இருக்கிறது. அடிப்படைக் கல்வியறிவை
பள்ளிகளில் கற்கிறோம். இவற்றை நமக்கு
கற்றுத்தருபவரை நாம் ஆசிரியர் என்று கூறி
அவருக்கு உரிய  மரியாதையையும்,
மதிப்பைபும் தருகிறோம்.

இதற்கு மேலும், இசை, நடனம், ஓவியம்,
சிலம்பம், கராத்தே போன்ற  சில குறிப்பிட்ட
விஷயங்களில் தேர்ச்சி பெற விரும்பும்போது
அதற்கேற்ற நபர்களை அணுகி பயிற்சி பெறுகிறோம்.

இவர்களை நாம் பாட்டு வாத்தியார்,
டான்ஸ் மாஸ்டர், கராத்தே மாஸ்டர்  என்றெல்லாம்
அழைக்கிறோம்.

இதே நிலையில்  தான் இருக்கிறார்கள்
இன்றைய தினத்தில் யோகாசனம் கற்றுக்
கொடுப்பவர்களும். அவர்கள் யோகாசனம் கற்றுக்
கொடுப்பதால் – யோகா மாஸ்டர் – அவ்வளவே !

ஆனால்  மற்ற எந்த
ஆசிரியர்களுக்கும் கொடுக்காத
ஒரு அதிகப்படியான
மரியாதையை சிலர் இந்த யோகா மாஸ்டர்களுக்கு
கொடுக்க ஆரம்பித்த விபரீதம் தான் இன்றைய
தினத்தில் இத்தனை போலிச் சாமியார்கள்
உருவாக அடிப்படைக் காரணம் !

சாதாரண யோகா மாஸ்டர்களுக்கும் –

தர்ம சாஸ்திரங்கள் அனைத்தையும் அறிந்து,
தேவைகளைக் குறுக்கிக்கொண்டு,
மிக மிக எளிமையான வாழ்க்கையையும்,
துறவறத்தையும் மேற்கொண்டு,
மக்களின் மேன்மைக்காக உளமாறப்  பாடுபடும்
சந்நியாசிகளுக்கும் –

உள்ள மகத்தான வேறுபாடுகளை உணராமல் –

சாதாரண யோகா மாஸ்டர்களை எல்லாம் பெரிய
சாமியார் போல கொண்டாட ஆரம்பித்தார்கள்
நம்மில் சிலர்.

இதில் பெரும் ஆதாயம் கண்ட அவர்களும்
இதையே  சுகமாக ஏற்றுக்கொண்டு
எந்த வித உறுத்தல்களும் இன்றி,
தங்களை பெரிய சாமியார்
அளவிற்கு உருவகப்படுத்திக் கொள்ள ஆரம்பித்து
விட்டார்கள்.

வெறும் யோகா மாஸ்டர்களாக இருந்தவர்கள்,
சாமியார்களாகி,பின்னர் – தங்களை
மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள பாலம்
என்று  கூற ஆரம்பித்து, பிறகு
தான் கடவுளின் அவதாரம் எனக்கூறத் துவங்கி,
இப்போது கடைசியாக  நான் தான் கடவுள் என்றே
சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

இதில் பாவம் இடையில் அகப்பட்டுக்கொண்டு
தவிப்பவர்கள் ஆன்மிக உரையாளர்கள் தான்.
இந்து மதத் தத்துவங்களை எளிமையான
உரை நடையில், விளக்கமாகவும்,
இலக்கியச் சுவை ததும்பவும்
உரையாற்றக்கூடிய  அருமையான பல
தமிழ் அறிஞர்கள்  கூசிப்போய்
ஒதுங்கி நிற்கும் நிலை இன்று
உருவாகியுள்ளது.

நான் இந்த இடுகையில்
சொல்லவிருக்கிற செய்திகள்  எந்த விதத்திலும்
இந்த தமிழறிஞர்களை பாதித்து விடக்கூடாது
என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
நான் எழுதுவது அவர்களைப் பற்றி அல்ல.
இத்தகைய தமிழறிஞர்களின் மீதும்,
உண்மையான துறவிகளின் மீதும் பெரும் மதிப்பும்,
மரியாதையும் எனக்கு என்றும் உண்டு.

 

சில சமயங்களில் நிஜம் – கற்பனையை விட
ஆச்சரியமாக இருக்கிறது !

ஒரு சின்ன உதாரணத்தைக் கொடுத்து
கோடி காண்பித்து விட்டு, பிறகு மேலும் விவரமாகத்
தொடருகிறேன்.

7 நாளில் யோகா கற்றுத்தரும் ஒரு பாடத் திட்டம் !
நபர் ஒருவருக்கு கட்டணம் ரூபாய் தொள்ளாயிரம் !
ஒரு குழுவில் 150 பேர். அப்படியானால் ஒரே ஒரு
இடத்தில், 5 நாள் வகுப்பிற்கு ஆகும் வசூல் எவ்வளவு ?
900 x 150 = 1,35,000/- ஆம் –
ஒரு லட்சத்து முப்பத்தையாயிரம் ரூபாய் !!
அதிர்ச்சி அடையாதீர்கள் – ஒரு ஊரில் ஒரு இடத்தில்
மட்டும் ஒரு வகுப்பில் மட்டும் வசூலாகும் தொகை இது.
நாடெங்கும் எவ்வளவு பயிற்சி வகுப்புகள் நடைபெறு
கின்றன. இதில் மாதந்தோரும் எவ்வளவு வசூல்
ஆகும் என்பதை யாரும் யூகித்துக் கொள்ளலாம்.

(நிகழ்ச்சியை நடத்தவும், விளம்பரங்களுக்கும்
செலவு ஆகுமே என்று நினைக்கலாம். அதையெல்லாம்
கழித்துக் கொண்டு பார்த்தால் கூட -தொகை அதிகமாகத்
தெரியவில்லை ?
நிஜமாகவே மக்களுக்கு நல்லது சொல்லிக் கொடுப்பது தான்
நோக்கம் என்றால் – அதை நடைமுறை செலவுகளுக்காக –
நூறோ, இருநூறோ –
வாங்கிக் கொண்டு சொல்லிக் கொடுக்க முடியாது ?)

இதில் இன்னும் ஒரு முக்கியமான விஷயம். கட்டணம்
என்று குறிப்பிட்டால் வரி பிரச்னை வரும். எனவே
வசூலிக்கும் பணத்தை நன்கொடை என்றே கூறுகின்
றார்கள்.ரசீதிலும் (ரசீது கொடுக்கிறார்கள் !)
நன்கொடை என்றே குறிப்பிடப்படுகிறது.

நன்கொடை என்றால் மனமுவந்து ஒருவர்
கொடுப்பது.  அது எப்படி அத்தனை பேரும் ஒரே
சமயத்தில், ஒரே அளவு தொகையை
நன்கொடையாகக் கொடுப்பார்கள்
என்று அரசாங்கமோ, வரி வசூலுக்குப் பொறுப்பு
வகிப்பவர்களோ கேட்கவே மாட்டார்கள் !
காரணம் –

– தொடர்கிறேன்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ஆசைப்படு – அதை நிச்சயம் அடைந்து விடு !

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  ஆனால் மற்ற எந்த
  ஆசிரியர்களுக்கும் கொடுக்காத
  ஒரு அதிகப்படியான
  மரியாதையை சிலர் இந்த யோகா மாஸ்டர்களுக்கு
  கொடுக்க ஆரம்பித்த விபரீதம் தான் இன்றைய
  தினத்தில் இத்தனை போலிச் சாமியார்கள்
  உருவாக அடிப்படைக் காரணம் !

  நிஜம் தான்.
  இன்றைய அதிரடி வியாபாரம்.
  கல்வி, கோவில்.
  கல்வி மூலம் நிறைய இடங்களை அரசு மூலம் வளைத்துப் போட்டுக் கொள்ளலாம்.
  கோவில் & ஆசிரமங்கள்:
  இதுவும் அதே நோக்கம் தான். ஆனால் எல்லோரும் வந்து காலில் விழுவார்கள். யானை போகும் பாதையில் ஆசிரமம் கட்டினாலும் யாரும் கேட்க மாட்டார்கள். எதிர்க் கட்சிக்காரர்களும் வருவார்கள், ஆளும் கட்சிக்காரர்களும் வருவார்கள், எனவே இவர்களுக்கு தொந்தரவு இல்லை.

  அருமையான பதிவு எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி.
  மின்சாரம் எங்களை பாடாய்ப் படுத்துகிறது. 10 மணி நேரங்கள் தான் இருக்கிறது. நமக்கு சென்னை தனி நாடு; சென்னை தவிர மற்ற இடங்கள் பாவப்பட்ட ஜனங்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ரத்னவேல்.

   ஜூன் மாதம் நிஜமாகவே மின்பிரச்சினை
   தீர்ந்து விடும் என்று தெரிகிறது.நீங்கள் படும் துன்பத்தை
   நானும் அனுபவிக்க அடுத்த 2 மாதங்கள் –
   திருச்சியில் இருப்பதாக உத்தேசம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. Ganpat சொல்கிறார்:

  மிகவும் பொறுப்பான, நேர்மையான, மனித நேயம் மிகுந்த
  உங்களைப்பார்த்து நான் பெருமை கொள்கிறேன்.
  உங்கள் பதிவுகள் மாறாதவர்களை மாற்ற முடியாவிடினும்,
  மாறியவர்களை மீண்டும் மாறாமல் பார்த்துக்கொள்ளும்
  எனவே தொடருங்கள்.
  இன்று நம் நாட்டில் ஊழலின் ஆதிக்கம் BC முதல் DC வரை .வியாபித்துள்ளது.
  நல்ல தலைவர் நாட்டை வழிநடத்த இறைவன் அருளை இறைஞ்சுகிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி கண்பத்.

   எங்கே உங்களை நீண்ட நாட்களாகக் காணோம் ?
   எங்காவது வெளியூர்ப் பயணமா ?
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. venkataramani சொல்கிறார்:

  எல்லாம் சரிதான். ஆரம்பம் முதலே இவர் தன்னை சாமியார் என்று
  சொல்லிக் கொண்டதில்லை. நம் ஆட்கள் தான், தாடி வளர்த்துக் கொண்டு
  ஆன்மீகம் பேசிவருவதால் இவரை சாமியாராக்கி விட்டனர்.

  கோயம்புத்தூர் போத்தனூர் செட்டிபாளையத்தில், தன் மனைவி மகளோடு,
  இவர் பயிற்றுவிக்க ஆரம்பித்த காலத்திலே (ஏதோ அனாதி காலம் என எண்ண
  வேண்டாம்.சுமார் இருபதாண்டுகளுக்கு முன்னர்தான்) இவருக்கும், இவரது
  STYLE OF YOGA-வுக்கும் பெரிய மவுசு இல்லை.

  அப்போதெல்லாம் இருபது முப்பது பேர் இவரை சுற்றி இருந்தாலே பெரிது.
  மனைவியின் “அசாதாரண மரணமே” அன்னார் இருக்கிறார் என்பதை
  வெளியுலகத்திற்குக் காட்டிக் கொடுத்தது. பெங்களூருவில் எங்கோ இருக்கும்
  மாமனார் கொடுத்த கேஸ் இன்னமும் பைசல் ஆகாமல் இருக்கிறது.மகள்
  ஊட்டியில் ஒரு கான்வெண்டில் பயின்று வருகிறார். (முடித்திருக்கக் கூடும்.)

  ஆரம்பத்தில் பயிற்சி சிஷ்யார்களால் தான் நடத்தப்படும். முதலில் கோவையிலும், சுற்று வட்டார நகரங்களிலும் பயிற்சி முகாம்கள் நடந்து வந்தன. பின்னர், வளர்ந்து பிற நகரங்களுக்கும் வேர் விடத்தொடங்கியது. அப்போதெல்லாம் “தியானலிங்க” பிரதிஷ்டை மட்டும் தான் என் லட்சியம். ஈஸ்வரன் அதற்காகத்தான் என்னை சிருஷ்டித்து இருக்கிறான் என சொல்லிக் கொண்டிருந்தார்

  முதலில் பயிற்சி சிஷ்யார்களால் தான் நடத்தப்படும். காலம் பதினைந்து நாட்கள். முதல் நாள் INTRO. அடுத்தடுத்த நாட்களில் பயிற்சி, தன் அனுபவம், உள் எழும் கேள்விகள் என்றெல்லாம் போய் இறுதி நாளன்று, வெள்ளியங்கிரி மலை
  (உண்மையில் ஈசன் வாசம் செய்யும் கைலாசம்தான்) அடிவாரத்தில், குருவோடு
  நேர்முகமாகி முடியும். பெரும்பாலான பயிற்சி முகாம்கள், முன் பயிற்சி பெற்ற
  பிரபலஸ்தர்களின் ஸ்தாபனங்கள் மூலமாகவே நடக்கும்.

  ஓரளவு பிரபலமான பின்னர் குரு, தனது இளம்பிராய யோக அனுபவங்கள்,
  தேடல்கள் குறித்தெல்லாம் ஆங்கிலத்தில் “எழுதி” குவித்தார். இப்புத்தகங்கள்
  (பக்கங்கள் குறைவு விலையோ அதிகம்) பெரும்பாலும் பம்பாயில் அச்சடிக்கப்பட்டு விற்பனைக்கு வரும்.விளைவாக அயல்நாடுகளிலெல்லாம் அன்னாரின் புகழ் பரவியது. கோவை வட்டாரத்தில் மிகவும் பிரபலமான “மரபின்மைந்தன்” முத்தையாதான் முதலில் இவரது நூல்களை தமிழ்ப்படுத்தினார். பின்னர், சிறுகதைகள், நாவல்கள், மாத (பாக்கெட்) நாவல்கள் என சரக்கு தீர்ந்து போன “சுபா” விகடனில் எழுதி தீர்த்தார். “குரு” மிகவும் பிரபலமானார்.

  இந்தியாவில் பெரு நகரங்கள் தோறும் பரந்து கிடக்கும் MNCs, CORPORATE COs,
  BPOs மற்றும் பிற பெரும் தொழிலமைப்புகள், வேலைப் பளு காரணமாக STRESS
  ஏற்பட்டு தொழிலாளர்கள் சோர்ந்து போவதாக கண்டறிந்து, மேற்படி சோர்வு போக அன்னாரின் யோகா உதவும் என்பதைக் கண்டறிந்து, பயன்படுத்திக் கொள்ள “முன்”வந்தார்கள். அடடா காலுக்கு கீழுள்ள குப்பைமேணியை கண்டு கொள்ளாதது போல இருந்து விட்டோமே என பரிதவித்த கோவைக்காரர்கள் (குறிப்பாக அதிகம் படித்த பணக்கார வீட்டு யுவன்களும் யுவதிகளும்) யோகாவிற்குள் நுழைந்து குளிர்ந்தார்கள்.

  குரு சத் குருவானார். கால தேச வர்த்தமானமென்பார்களே அதற்கொப்ப யோக
  பயிற்சி ஒரு வாரமாகி, இப்போது ஐந்து நாட்களகிவிட்டது. இந்த பாக்கியம் நம்மூருக்கு வராதா என யாரும் கலங்க வேண்டாம். ஒவ்வொரு ஊருக்கும் “குருவின் வித்தை” வந்து கொண்டிருக்கிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நண்பர் வெங்கட்ரமணி.

   அற்புதமான பின்னூட்டம்.
   நிறைய கூடுதல் தகவல்களைக்
   கொடுத்திருக்கிறீர்கள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. c.venkatasubramanian சொல்கிறார்:

  we “ll have to suffer as we do not know our cultutr,The age old British installed education systm
  spoiled our guruglavasam kalvi murai

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.