துக்ளக் “சோ” மாறித்தான் போய் விட்டார் …!!

துக்ளக் “சோ” மாறித்தான் போய் விட்டார் …!!

cho -the young.jpg-2 cho_ramaswamy -new foto

நான் இந்த இடுகையை எழுத முற்பட்டதற்கான
முக்கிய காரணங்கள் இரண்டு.
ஒன்று – எனது முந்திய இடுகைக்கு நண்பர் எழில்
அனுப்பிய பின்னூட்டம்.
(“எனக்கு என்னவோ நீங்கள்
சோ ராமசாமியை மிகவும் உயரத்தில் தூக்கி
வைத்திருப்பது போல் தோன்றுகிறது.
விட்டு விடுங்கள். அவர் அந்த அளவுக்கு
உரித்தானவர் இல்லை!)
இரண்டு – பொங்கலன்று நிகழ்ந்த “துக்ளக்”
ஆண்டுவிழா கூட்டத்தில் சோ அவர்களின் பேச்சு.

நண்பர் எழில் -என்ன செய்யட்டும். நான் முந்திய
தலைமுறையைச் சேர்ந்தவன்.
என் இன்றைய சிந்தனைகள், எண்ணங்கள் எல்லாம் –
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட
தமிழக, இந்திய – அரசியல் மற்றும் சமுதாய
நிகழ்வுகளால் உருவாக்கப்பட்டவை.

40 வருடங்களாக -கிட்டத்தட்ட சோ அவர்கள்
பொது வாழ்வில் தெரிய ஆரம்பித்த நாட்களிலிருந்து,
அவரை நெருக்கமாக கவனித்து வந்திருக்கிறேன்.
சில சமயங்களில் அவரிடம் பேசவும், விவாதிக்கவும்
கூடச் செய்திருக்கிறேன்.(இருந்தாலும் இன்றைய
“என்னை” அவருக்கு அடையாளம் தெரியாது !)

துக்ளக் இதழ் தோன்றிய காலத்திலிருந்து – இந்தியாவின்
எந்த மூலையில் நான் இருந்தாலும் – தொடர்ந்து
படித்து வந்திருக்கிறேன்.

அந்தக் காலங்களில் அமிதாப் பச்சன் படங்களில்
காணப்பட்ட “கோபக்கார இளைஞன்” நிலையில் தான்
நானும்  என்னைப் போன்ற இன்னும் பல
“அந்தக்கால” இளைஞர்களும் இருந்தோம்.

துக்ளக் இதழும், சோ அவர்களின் நிலைப்பாடு, மற்றும்
நடவடிக்கைகளும் அதே போக்கில் இருந்ததால்
அவர் மீது எங்களுக்கு ஒரு ஈடுபாடும், ஈர்ப்பும்
இயற்கையாகவே  இருந்தன.

-எமெர்ஜென்சி காலத்தில் சோ -மற்றும் துக்ளக்
செயல்பட்ட விதமும், அந்தக்கால திமுக ஆட்சியின்போது
அடக்குமுறைக்கும், தடைகளுக்கும் அவர்  உட்பட
நேர்ந்தபோது அவர் காட்டிய தைரியமும்,புத்திசாலித்தனமும்
என்னைப் போன்ற பலரைக் கவர்ந்தன. எனவே
எங்களுக்கு அவர் ஒரு “ஹீரோ”வாகவே இருந்தார் !

அப்போதெல்லாம் –
பல விஷயங்களில் சோவின் கருத்துக்களும்,
எழுத்துக்களும், செயல்களும் –
தமிழ் நாட்டின் -மற்றும் அகில இந்திய அரசியலில்
சமுதாயநலம்/மக்களின் பொது நலம் என்கிற
அடிப்படைத் தேவையை மட்டுமே
நோக்கில் கொண்டதாக அமைந்திருந்தன.

ஆனால் – அண்மையில் சில வருடங்களாக

– தான் எழுதுவது தான்/சொல்வது தான் சரி –
தன் வாசகர்கள் தனக்கு கட்டுப்பட்டவர்கள் என்கிற
எண்ணமும், போக்கும்

– தனக்கு வேண்டியவர்கள் தவறு செய்தாலும்
கண்ணை மூடிக்கொண்டு அவற்றை ஆதரிப்பது
என்கிற போக்கும்

– தனக்கு பிடிக்காதவர்களை மனம் போன போக்கில்
கேலி பேசுவதும், மட்டம் தட்டுவது என்கிற போக்கும்

– முக்கியமாக கருத்து சொல்ல வேண்டிய சில
விவகாரங்களில்  உறுதியான பதிலைச் சொல்லாமல்
மழுப்பலாக வழுக்கிக் கொண்டு போவதும் –

அதிகரித்துக் கொண்டே போகிறது.

இவை எல்லாம் – வயது/முதுமை/தளர்ச்சி,
உடல்நிலை சரி இல்லாமை காரணமாக
ஏற்பட்டவையா அல்லது,

தான் யாருக்கும் கட்டுப்பட்டவர் அல்ல
என்கிற எண்ணமா -அல்லது

பல அரசியல் தலைவர்களிடமும் அவருக்கு
வளர்ந்து விட்ட செல்வாக்கு/தொடர்பு காரணமாக தான்
என்ன சொன்னாலும் எடுபடும் என்கிற எண்ணமா –
தெரியவில்லை !

அவரது ஆண்டு விழா பேச்சில் பல நியாயமான
விஷயங்கள் பேசப்பட்டாலும், விமரிசனம் செய்யப்பட
வேண்டிய சில விஷயங்களும் இருக்கின்றன.
நான் இங்கு குறிப்பிட விரும்பும் முக்கியமான
விஷயங்கள் இரண்டு மட்டுமே !

தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டு வரப்பட வேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்தி வாசகர் ஒருவர் கேள்வி
கேட்டபோது –

மனிதாபிமானத்தை விட,மக்கள் நலனை விட,
சமுதாய நன்மையை விட – தன் பிடிவாதமே
பெரியது என்று நிரூபிக்க முயன்றார்.

மதுவிலக்கு நடைமுறை சாத்தியமானது அல்ல
என்று வாதித்தார்.
உலகில் மது இல்லாத நாடே  இல்லை என்றார்.
அமெரிக்காவில் பல வருடங்களுக்கு முன்பே,
மதுவிலக்கைக் கொண்டு வர முயற்சி செய்து
தோல்வி அடைந்து விட்டார்கள் என்றார்.

(இதென்ன பைத்தியக்காரத்தனம் –
யாரை, எதை – எதனுடன் ஒப்பிடுவது ?
அமெரிக்க, மேற்கத்திய கலாச்சாரங்களில்
விசேஷ நாட்களில் மது அருந்துவது என்பது
அங்கீகரிக்கப்பட்ட ஒரு பழக்கம்.
அவர்கள் சீதோஷ்ண நிலையும், பண்பாடும் அப்படி.
குடியை ஒரு  குணக்கேடாகவே, சமுதாயக்கேடாகவே,
கருதும் நம் பண்பாட்டுடன் அதை ஒப்பிடுவது எப்படி
சரியாகும் ?)

தொடர்ந்து விடாப்பிடியாக – குஜராத்தில் வெற்றிகரமாக
மது விலக்கு அமுல் செய்யப்படுகிறதே என்று கேட்டதற்கு
(மோடி அவரது favourite ஆக இருந்தும் கூட) –

குஜராத்தில்
கள்ளச்சாராயம் தாராளமாக கிடைக்கிறது.
கள்ளச் சாராயத்தைகுடித்து விட்டு உடனே சாவதை விட
இங்கே நல்ல சரக்கையே குடித்து மெதுவாகவே
போகலாமே என்பது போல் பதில் சொன்னார்.

இங்கு சோ பேசுவது வெறும் வரட்டுப் பிடிவாதம்.
குடியால் பாதிக்கப்படாத ஏழை/நடுத்தர குடும்பமே
கிட்டத்தட்ட தமிழ் நாட்டில் இல்லை என்கிற அளவிற்கு
குடி நம் சமுதாயத்தை பாதித்திருக்கும்போது இப்படி
ஒரு வாதமா ? நம் பெண்களில் பாதிக்கும் மேலானவர்கள்
குடிப்பழக்கம் உள்ள ஆண்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான்.
ஆண்கள் சம்பாதிப்பதில் பாதிக்கும் மேல் சாராயக்கடைக்கு
போவதோடு இல்லாமல், அவர்கள் குடல் கருகி
உடல் சிதைவதோடு இல்லாமல், வீட்டில் மனைவி
குழந்தைகளும் மிக மோசமாக பாதிக்கப்படுவதை இவரால்
உணர முடியவில்லையா ? பத்தாம் வகுப்பு பையன்களை
எல்லாம் டாஸ்மாக் கடைகளில் பார்க்கும்போது எனக்கு
மனது வெடிக்கிறது.

1939-ல் பிரிட்டிஷ் ஆட்சி இருக்கும்போதே –
சென்னை மாகாணத்தில் அதிகாரத்திற்கு வந்த
ராஜாஜி அவர்கள் கள்ளுக்கடைகளை ஒழித்து மதுவிலக்கை
முதல் முதலாக அமுலுக்கு கொண்டு வந்தார். அந்த
மூதறிஞரை முட்டாள் என்கிறாரா இவர் ?
வெள்ளைக்காரர்கள் காலத்திலேயே கள்ளுக்கடைகளை
மூடக்கோரி போராடியவர்கள் எத்தனை எத்தனை பேர் –
சிறை சென்றவர்கள் எத்தனை பேர் ?
சரித்திரம் தெரியாதா சோவிற்கு ?

சோ மதுவுக்கு வக்காலத்து வாங்குவது மனசாட்சி
இல்லாத செயலாகவே எனக்குப் படுகிறது. யாருக்கு
வக்காலத்து வாங்குகிறார் இவர் ?
சாராயக்கடைகளை குத்தகைக்கு எடுத்தவர்களுக்காகவா ?
இல்லை மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளுக்காகவா ?
இவர் கொடுக்கும் தைரியம் – நேற்று தஞ்சாவூரில் விஜய்காந்த
கூடப் பேசுகிறார் “என்னைக் குடிகாரன் என்கிறார்கள் –
ஏன் – நான் கேட்கிறேன் -குடித்தால் என்ன – உனக்கென்ன
கஷ்டம் அதிலே ?”

அடுத்தது – முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு
பிறகு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உலகின்
கண்ணோட்டமே முற்றிலுமாக மாறி விட்டது.
பிரிட்டன், நார்வே,
அமெரிக்கா, மலேசியா போன்ற நாடுகள்
ஈழத்தமிழர்களின் நல்வாழ்வுக்கான நடவடிக்கைகளில்
ராஜபக்சே அரசு எந்தவித அக்கரையும் காட்டாமல்
இருப்பதற்காக கடும் கண்டனங்களை வெளியிடும்போது,
உடனடியான மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபட
வலியுறுத்தி முயற்சிகள் மேற்கொள்ளும் நிலையில் –

சோவும் சரி, அவரது பத்திரிகையும் சரி – எள்ளளவும்
மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
கண்மூடித்தனமாக இன்னும் ராஜபக்சேயின் அரசை
ஆதரிக்கும் விதமாகவே பேசியும் எழுதியும் வருகிறார்.
ஆண்டு விழாக்கூட்டத்திலும்  இந்தப் பிரச்சினை
வந்தபோது – இலங்கைத் தமிழர் பிரச்சினையை
மிகவும் அலட்சியப் படுத்திப் பேசினார்.
அதற்காக போராடும் தலைவர்களையும் மிகவும்
கேவலமாக மட்டம் தட்டிப் பேசினார்.தனக்குப்
பிடிக்காதவர்களை – அவர்கள் எவ்வளவு நேர்மையாளராக
இருந்தாலும் கூட – மட்டம் தட்டிப்பேசுவது இவருக்கு
வாடிக்கையாகி விட்டது.

எழுபதுகளிலும், எண்பதுகளிலும் நாம் பார்த்த,
பரவசம் கொண்டு பாராட்டிய “சோ” அல்ல இது.

மாறி விட்டார். நிறையவே மாறி விட்டார்.
மனிதாபிமானம்  அறவே இல்லை.
பிடிவாதமும், அகந்தையும் தலைக்கேறி இருக்கின்றன.
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று
மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

அவர் பேசும் சில நல்ல விஷயங்களில் கூட –
மக்கள் நலன் முன் நிற்பதாகத் தோன்றவில்லை.
தன் கட்சிக்காரர் ஜெயிக்க கடுமையாக உழைக்கும்-
வாதாடும் ஒரு கெட்டிக்கார வக்கீல்
தான் நம் கண் முன் காட்சி அளிப்பதாகத் தோன்றுகிறது !

நண்பர் எழிலுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் –

“ஒரு காலத்தில் அவரை உயரத்தில் வைத்திருந்தது
உண்மை தான். ஆனால் அவரை
நான் இறக்கி விட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
அவர் தானாகவே உயரத்திலிருந்து இறங்கி
சராசரியாகி – இதயத்திலிருந்தும் வெளியேறி
வெகு தூரம் போய் விட்டார்.”

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to துக்ளக் “சோ” மாறித்தான் போய் விட்டார் …!!

 1. amudhavan சொல்கிறார்:

  சோவின் இன்றைய நிலைப்பாடு பற்றி மிக நேர்மையான கணிப்பு.

 2. rathnavelnatarajan சொல்கிறார்:

  தன் கட்சிக்காரர் ஜெயிக்க கடுமையாக உழைக்கும்-
  வாதாடும் ஒரு கெட்டிக்கார வக்கீல்
  தான் நம் கண் முன் காட்சி அளிப்பதாகத் தோன்றுகிறது !

 3. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  தங்களைப் போன்றே நானும் 77 காலகட்டத்திலிருந்து சோவின் வாசகன்தான்.நானும் பல சந்தர்பங்களில் அவருடன் முரன்பட்டதுண்டு.ஆனால் அவர் சொன்னதுதான் பிறகு நடந்தது.
  தற்போது கூட தங்களைப் போல என்னால் முரண்படக்கூடிய எதையும் வைத்ததாக தெரியவில்லை.
  பார்ப்போம் காலம் என்ன சொல்கிறது என்று
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

 4. thanavanam சொல்கிறார்:

  Dear sir,
  what you wrote here ,that is 100% true.
  Me to same since year 1970 June to Until last 2011 State assembly Election.
  Now i hate him and stop reading his magazine and his all interview.
  thanavanam./
  Indonesia.

 5. Ganpat சொல்கிறார்:

  நண்பர் காவிரி மைந்தன்,

  சோ மட்டுமா? ஜெயகாந்தன்?
  எப்பேர்பட்ட தி.மு.க எதிர்ப்பாளர் அவர்.? தி.மு.க.வை ஆரம்பகாலத்திலிருந்து விஷ விருட்சம் என்று சொல்லி வந்தவர் ஆயிற்றே?இப்போ கலைஞர் கதியென ஒடுங்கி விட்டார்.
  சோ இந்த முறை மது விலக்கைப் பற்றி சொல்லியுள்ள கருத்துக்கள் உளறலின் உச்சம்.(காபி குடித்தாலும் மதுவை போன்ற ஒரு addiction ஆகி விடும் அதனால் காபியை தடை செய்ய முடியுமா ?).அவர் என்ன செய்வார் பாவம்? 40 ஆண்டுகளாக அவர் எதிர்த்து வரும் எதுவும், தண்ணீர், உரம் போட்டது போல நன்றாக வளர்ந்து வருகின்றன.சலிப்பு வருவது நியாயம் தானே!
  Time has come for Mr.Cho to switch over to religion 100%.My humble opinion ofcourse.

 6. .dhanapal சொல்கிறார்:

  I agree 100% with the view on CHO

 7. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  இதயத்திலிருந்து இறங்கி சராசரியாகி போன ஒருத்தருக்காக இரெண்டு பதிவுகள் தேவையா?
  நம்மில் பலருக்கு ஒன்று/ஒருவர் பிடித்துவிட்டது என்றால், அவர் என்ன செய்தாலும் அது பிடித்தே ஆகவேண்டும். இது ஆன்மீகத்திலும் அரசியலிலும்!
  இது யாருடைய தவறு?

 8. எழில் சொல்கிறார்:

  ஐயா, முதலில் என் பின்னூட்டம் உங்கள் மனதை நோகடித்திருக்குமானால் தயவு கூர்ந்து மன்னியுங்கள். உங்களின் இளவயது ‘ஹீரோ’ வாக இருந்தவரை நகையாடும் எண்ணம் எனக்கு இம்மியளவும் இல்லை. அதே வேளை சிறியவனின் இரு வரி பின்னூட்டத்தின் அடிப்படையில் ஒரு பதிவு இட்டு விளக்கமளித்திருக்கும் உங்களின் பரந்த மனதை எண்ணி வியப்படையாமல் இருக்கவும் முடியவில்லை!
  .
  நீங்கள் கூறியிருப்பதை போலவே நான் துக்ளக்கை பார்த்து படிக்க ஆரம்பித்து இருபது வருடம் கூட ஆகியிருக்காத உங்களுக்கு அடுத்த தலைமுறையை சேர்ந்தவன். ஆரம்பத்தில் அவரை ஒரு அரசியல் ‘கை காட்டி மரம்’ போல தான் எண்ணி படித்தேன். சிறிது காலம் போக, நிகழ்வுகளை சீர் தூக்கி பார்க்கும் அறிவு வளரும் போது அவர் கருத்துக்களில் தடுமாற்றங்கள் (inconsistencies ) இருப்பது போல் தெரிந்தது. அந்த தடுமாற்றங்கள் அவர் அரசியல் சார்பு, அவர் சமூகம், மதம் போன்ற கோட்பாடுகள் சார்ந்தவை என்று வைத்து கொண்டாலும், என்னை மிகவும் மன வருத்தத்திற்கு தள்ளியது ஈழ பிரச்சனையில் ராஜபக்சேவின் தமிழக கொள்கை பரப்பு செயலர் போல செயற்பட்டமை தான். உதாரணமாக ,ஆரம்பத்தில் இருந்தே எந்த கட்சியிலும் நிலையாக இராத, சுயேச்சையாக 1000 ஒட்டு கூட வாங்க முடியாத ‘ஆனந்தசங்கரி’ எனும் ஒரு ஈழத்து அரசியல்வாதியை வைத்து, சிங்கள அரசுக்கு ஆதரவான கட்டுரை தொடர்களை வெளியிட்டு தள்ளியது வெறுக்க தக்க ஒன்று. சாதாரண ஈழ மக்களின் நாடி துடிப்பின் பிரதிநிதி போல எழுதிய அந்த அரசியல் வாதியின் இன்றைய நிலை என்ன என்பதே அவர் யார் என்பதை எடுத்து காட்டும்.

  உலகெங்கும் இருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள், போர் குற்ற விசாரணைக்குட்படுத்த வேண்டும் என கோரும் ராஜபக்சேவுக்கு வக்காளத்து வாங்குபவர், மக்களின் அறியாமையும் பேராசையையும் குறிவைத்து கொள்ளையடிக்கும் ஒரு மனிதனின் விளம்பரத்தை எப்படி முடக்குவார் என்ற எண்ணத்தின் அடிப்படையில் மிக சுருக்கமாக எழுத முனைந்ததின் விளைவே முந்தய உங்கள் பதிவுக்கான எனது பின்னூட்டம். அது எவ்விதமாகவேனும் உங்கள் மனதை புண் படுத்தியிருந்தால் மீண்டும் ஒரு முறை மன்னிக்க வேண்டுகிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் எழில்,

   நீங்கள் எந்த விதத்திலும் வருந்தத் தேவை இல்லை.
   நான் துவக்கத்தில் இருந்து படம் பார்த்த கண்ணோட்டத்தில்
   இருந்தேன். நீங்கள் இடைவேளைக்குப் பிறகு
   இரண்டாம் பாதியை மட்டும் பார்த்திருக்கிறீர்கள். எனவே –
   உங்கள் கண்ணோட்டத்தில், அனுபவத்தில் – நீங்கள்
   எழுதியது மிகச்சரியே. நான் இன்றைய என் மன நிலையை
   விளக்க உங்களது அந்த பின்னூட்டம் மிக உதவியாக இருந்தது.
   அதற்காக, உண்மையில் நான் தான் உங்களுக்கு
   நன்றி சொல்ல வேண்டும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. Sugan சொல்கிறார்:

  நல்ல கட்டுரை. தமிழருவி மணியன் சோ பற்றி ஒரு உண்மையை ஒரு முறை கூறியிருந்தார், அதாவது துக்ளக் லாபகரமாக செல்லும் வரை தான் அதை நடத்துவேன், மற்றபடி எந்த ஒரு சமுதாய பணிக்காகவும் அதை செய்யவில்லை என்று. ஆக பத்திரிகை என்பது தொழில், அது ஒரு வேள்வி அல்ல, ஆக நீங்கள் வருந்துவதில் எந்த பயனும் இல்லை.

 10. K. Jayadev Das சொல்கிறார்:

  அருமையான பதிவு, குறிப்பாக மதுவிலக்கு பற்றி நீங்கள் சொன்ன கருத்துகள் அத்தனையும் அருமை.

 11. Padmanabhan Potti L சொல்கிறார்:

  ஜெயலலிதா தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டுவர போகிறார் என்ற ஒரு செய்தி தங்களது விமர்சனம் பகுதியில் ஒருமுறை பார்த்தேன். அதற்கு ஆதரவு தெரிவித்து எழுதியிருந்தேன் தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில்
  நிலவும் மின்சார பற்றாக்குறை காவேரி தண்ணீர் பிரச்சனை மத்திய அரசு அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை
  புறக்கணிக்கும் போக்கு மத்திய அரசில் தமிழ்நாட்டு அமைச்சர்கள் தமிழக அரசுக்கு ஒத்துழைக்காமை
  தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றை பார்க்கும்போது இந்தியா முழுமைக்கும் மதுவிலக்கு கொண்டுவந்தால் ஒழிய வேறு எந்த மாநிலத்தில் மதுவிலக்கு இருந்தாலும் தமிழ்நாட்டில்இலவசங்கள் கொடுத்தாலும் அதை இங்கு மட்டும் அமுல் படுத்துவது அரசை மேலும் பலவீனமாக்கும் என்பது கருத்து .

 12. Bala சொல்கிறார்:

  மிக நன்றாகவே திருவாளர் “சோ” அவர்களின் முகமூடியை கிழித்துள்ளீர்கள். அவர் நடுனிலையாய் இருப்பதாய் காட்டிக் கொண்டு எப்போது ராஜபக்சவை ஆதரிக்க ஆரம்பித்தாரோ அன்றெ அவரது சுயரூபம் வெளிப்படையாக எல்லாருக்கும் தெரிய ஆரம்பித்துவிட்டது. அவர் எப்போதும் அப்படித்தான். ஆனால் நாம் தான் லேட்டாகப் புரிந்து கொண்டோம்! எனக்கு வயது நாற்பதிற்கும் மேல்…ஆனால் இப்போதெல்லாம் ஒரு பயம் வந்து விட்டது. வயது ஆக ஆக நானும் ஒர் சுயந‌லமியாக மிகக் கேவலமாக கருணானிதி மற்றும் சோ போல ஆகிவிடுவேனோ என்பதுதான் அது! என் கண்கூடாகவே நான் போற்றி பெரிய மனிதர் என நினைத்து வந்தவர்கள் எல்லாருமே தங்கள் சுயந‌ல மனநிலையை போட்டுடைத்து விட்டனர். ஒரே ஒருவர் தவிர. அவரளவிற்கேனும் எனக்கு மனத் திடம் வாய்க்க வேண்டும் என்பதே என் அவா! பார்ப்போம்!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் பாலா,

   இரண்டு விஷயங்கள்-

   1) வயதாகி விட்டால் எல்லாரும் சுயநலவாதிகளாகி
   விடுவார்கள் என்று நினைக்கவே நினைக்காதீர்கள்.
   சிலர் மாறி விடுகிறார்கள் -அவ்வளவே !

   2) தங்கள் அபிமானத்தைப் பெற்ற அந்த
   தலைவர் யார் என்பதையும் சொல்லலாமே !

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.