வ ள மா ன எ ண் ண ங் க ள் …………..

வளமான எண்ணங்கள் …

விமரிசனம் வலைத்தளத்தில், இன்னுமொரு
கோணத்திலும் -சில விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள
வேண்டும் என்று தோன்றுகிறது.

வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள்.
படித்தல், பார்த்தல், கேட்டல், உணருதல் என்று !
இதில் குறிப்பிடத்தக்க சில எண்ணங்களை –

வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய எண்ணங்களை,
ஒளி சேர்க்ககூடிய எண்ணங்களை,
சமுதாயத்திற்கு வலு சேர்க்ககூடிய எண்ணங்களை –
மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று
தோன்றுகிறது.

இவை முற்றிலும் சமுதாயத்திற்கு வளமையும்,
வலிமையும் சேர்க்கக்கூடியதாகவே இருக்கும்.
எதிர்மறையான எந்த விஷயங்களும்
இதில் இடம் பெறாது.

இந்த கருத்துக்கள் அடிப்படையில் –
மிகச்சிறந்த சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள்,
சமுதாயச் சிற்பிகள், சீர்திருத்தவாதிகள்,
ஆன்மிகப் பெரியவர்கள் ஆகியோர் கூறியவை.

அவற்றை அடிப்படையாகக் கொண்டு, நான் என் வழியில்,
எனக்கு பிடித்ததை மட்டும் எடுத்துக் கொண்டு
எளிமையான வார்த்தைகளில்
மிகச் சுருக்கமாக – பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முடிந்த வரை  அடிப்படை  கருத்தை யார் சொன்னது
என்பதை தவிர்க்க விரும்புகிறேன். ஏனெனில்,
பொதுவாகவே, படிக்கும் முன்னர் –
இன்னார் சொன்னது என்று தெரிந்தாலே
அதை நாம் ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தோடு
படிக்கத் துவங்கி விடுகிறோம்.

ஈரோட்டுப் பெரியார் சொன்னது என்றால்
ஒரு கண்ணோட்டம் !
காஞ்சிப் பெரியவர் சொன்னது என்றால்
வேறோர் கண்ணோட்டம் !

எனவே, எந்தவித முன்னோட்டமும் இல்லாமலே
இதைப் படிக்க முயற்சிப்போமே !

இந்த எண்ண ஓட்டங்களை –
வளமான எண்ணங்கள் …
என்கிற தலைப்பில் அவ்வப்போது விமரிசனம்
இடுகைகளின் ஊடே சிறிது சிறிதாக
எழுதுவதாக உத்தேசித்திருக்கிறேன்.

வழக்கம் போல், இவற்றிற்கும் உங்கள்
பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.  
நல்ல கருத்துக்களை நாலு பேர்
சேர்ந்து விவாதிக்கும்போது, அதற்கு இன்னும்
வலிவும் பொலிவும் உண்டாகும் அல்லவா ?

இன்றே ஆரம்பிக்கலாமா ?

——————————————–

வளமான  எண்ணங்கள்    –  1

எண்ணங்கள்  தாம் மனிதரை உருவாக்குகின்றன.
எண்ணங்கள் தான் ஒரு மனிதரின் ஆளுமையை
(பெர்சனாலிடியை) தீர்மானிக்கின்றன.

எனவே நம் மூளையில் ஒரு விஷயம்
உதிக்கும்போதே,
நாம் ஒரு  விஷயத்தைப்பற்றி சிந்திக்கத்
துவங்கும்போதே – அது தேவையா இல்லையா
என்பதை முடிவு செய்து விட வேண்டும்.

தேவையற்ற சிந்தனைகளை முளைக்கும்போதே
கத்தரிப்பது சுலபம். வளர்ந்த பிறகு அவற்றை அகற்ற
மிகவும் சிரமப்பட வேண்டும்.

தேவை இல்லாத சிந்தனைகள்  எவை ?
எப்படி அடையாளம் கண்டு ஒதுக்குவது ?

பொருந்தாத உறவுகள்,
கெட்ட பழக்கங்கள்,
நியாய விரோதமான செயல்கள்,
மித மிஞ்சிய ஆசைகள்,
நம் நற்பெயரை, மதிப்பைக் கெடுக்கக்கூடிய செயல்கள்,
சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய விஷயங்கள்,
மற்றவர்க்கு துன்பம் ஏற்படுத்தி அதன் மூலம்
நமக்கு லாபம் கிடைக்கக் கூடிய செயல்கள் –

இவற்றை முளையிலேயே கிள்ளி விடுதல் நன்று.
வளர்ந்த பிறகு அகற்றுவது மிகவும் கடினம்.

அதற்கு மாறாக –
உயர்ந்த எண்ணங்களை,
உயர்ந்த லட்சியங்களை,
நமது சுகத்தை மட்டும் நோக்கமாக
கொள்ளாமல் நம்மைச் சார்ந்த சமூகமும் பலன் பெறக்கூடிய
எண்ணங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

எண்ணங்களை துவக்கத்திலேயே வரையறுக்க
கற்றுக் கொண்டு விட்டால், நல்ல எண்ணங்களை
வளர்ப்பது சுலபமாக கைகூடும்.

அப்படி உருவெடுக்கும் நல்ல எண்ணங்களைப்பற்றி,
இரவும் பகலும்
சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
மீண்டும் மீண்டும் அசை போட்டுக்கொண்டே
இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட எண்ணங்கள் –
உயிர் பெறுகின்றன –
வாழ்கின்றன.
அப்படிப்பட்ட எண்ணங்கள் தொலை தூரம்
பயணிக்கின்றன.
பலம் பெருகின்றன.

நாம், நம் குடும்பம், நம் சுற்றத்தார் – இவர்கள்
நமக்கு முக்கியம் தான். அவர்களுக்காக நாம் உழைப்பதும்,
பாடுபடுவதும் அவசியம் தான்.

ஆனால் – நாம் வாழும் இந்த சமுதாயம்,
இந்த நாடு –  இவையும் அதே அளவிற்கு முக்கியம்.
வீட்டை கவனிக்கும் அதே அக்கரையுடன்
நாட்டையும் கவனிக்க வேண்டும்.

அதைச் செய்யத் தவறியதன் விளைவு தான்
நமது கடந்த 200 ஆண்டுக்கால அடிமை வாழ்வு !
(கூட இன்னும் 65 ஐயும் சேர்த்துக் கொள்ளலாம் !)

சுதந்திரத்திற்கு முன்னதாக
ஒரு கவிஞர் புலம்பினார் –

“கண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கருகத்  திருவுளமோ ?”

இப்போது அழுது புலம்ப எல்லாம் தேவை இல்லை.
நெஞ்சில் உரம் கொண்டு,
நேர்மைத் திறன் கொண்டு –
வஞ்சனை செய்வாரை – தட்டிக் கேட்கும் துணிவு வேண்டும்.

மோதி மிதிக்கவும்,
அவர் முகத்தில் உமிழவும் – நெஞ்சில் துணிவு வேண்டும்.
இது தனி ஒருவருக்கு கை கூடுவது கடினம்.
சேர்ந்து கொள்ள வேண்டும்.
நேர்மையாளர்கள், சமூக அக்கரை உள்ளவர்கள்
ஒன்று சேர வேண்டும்.

இது நம்முடைய பூமி.
நமது பாட்டன், கொள்ளுப்பாட்டன் வாழ்ந்த பூமி.
நமக்கென்று தனிப் பெருமை உண்டு,
அடிமை பாரம்பரியம் நமது பாரம்பரியம் அல்ல.
எட்டுத் திக்கும் சென்று வெற்றிக்கொடி நாட்டிய
பரம்பரை நம் பரம்பரை.  எண்ணையும்,
எழுத்தையும், விண் அறிவையும் பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து உலகுக்கு
சொன்னவர் நம் முன்னோர்கள்.

இந்த மண்ணை, இந்த நாட்டை,
நம் பெருமையை, நம் மண்ணின் வளத்தை –

சுயநலவாதிகளும்,
பணத்தாசை கொண்டவர்களும்,
போலி அரசியல்வாதிகளும்,
சமூக விரோதிகளும்
கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்கவும்,
தொடர்ந்து பாழ்படுத்தவும் விட மாட்டோம் –

இழந்த பெருமையை மீட்போம்  –
உலகில் முதல் தேசமாக உயர்ந்து காட்டுவோம்.

“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் –
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்”

– என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னரே –
ஒரு வழிகாட்டி சொன்னார் –

ARISE, AWAKE  and STOP NOT
till the goal   is  reached

எழுந்திரு, விழித்துக் கொள், லட்சியத்தை
அடையும் வரை முயற்சியைக் கைவிடாதே -என்று.

அதைச் செயல்படுத்துவோம்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், இணையதளம், உலக நாயகன், காவிரிமைந்தன், திரைப்படம், மத உணர்வு, மனதைக் கவர்ந்தது. Bookmark the permalink.

9 Responses to வ ள மா ன எ ண் ண ங் க ள் …………..

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  நல்ல முயற்சி திரு காவிரிமைந்தன் அவர்களே!

  தவறான செயல்களுக்கு நான் வைத்துள்ள அளவுகோள்…

  தாய் தந்தை அல்லது மனைவி/கணவன் அல்லது மக்களுக்கு (தம் சொந்த மக்கள்) தெரியக்கூடாது என்று எண்ணி செய்யும் அனைத்து வஷயங்களும்.

  எண்ணம் தான் வாழ்வை தீர்மானிக்கும்.
  எனவே
  எண்ணுவதெல்லாம் உயர்வெண்ணல்

 2. Padmanabhan Potti சொல்கிறார்:

  மனித வாழ்க்கையில் பாசிடிவும் நெகடீவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் பாசிடீவை எடுத்து
  கொள்வோம். மின்சாரத்தால் நன்மையையும், உண்டு. தீமையும் உண்டு. அது போல் சில நேரங்களில்
  உடலுக்கு கசப்பு மருந்தும் பயன்படுகிறது. எனவே எது நல்லது எது கேட்டது என தெரிந்து வாழ்ந்தால் வாழ்கை
  சிறக்கும்.

 3. ரமேஷ் சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு சீக்கிரம்
  மாறுமா இந்த சமுதாயம் ? இந்த சுயநலக்கூட்டத்தை
  விரட்டுவது நடக்கக்கூடிய காரியமா ? நீங்கள் சொல்லும்
  பலன் விளைகிறதோ இல்லையோ ஆனாலும் நீங்கள்
  சொல்லும் கருத்துக்களை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

  • ஸ்ரீநிவாசன் சொல்கிறார்:

   நாம் நினைத்தால் கண்டிப்பாக முடியும். இப்படி உங்களைப்போல் ஒவ்வொருவரும் (நம்மால் என்ன செய்ய முடியும் என்று) நினைத்து ஒதுங்குவதே விஷச்செடிகளுக்கு உரமிட்டு வளர்க்கும் செயலாகும்.

   இத்தகைய மிகப்பெரிய, அரிய பணியை மேற்கொண்டிருக்கும் ஐயா வை பாராட்டவில்லை என்றாலும் எதிர்மறையான கருத்துக்களை தயை கூர்ந்து முன்வைக்காதீர்கள்.

   நன்றாக யோசித்துப்பாருங்கள்

   இணையம் இல்லாதோர், இணைய தொடர்பு இல்லாதோர், முழு நேரமும் தம் வயிற்றுக்காகவே உழைப்போர், அன்றாட நிகழ்வுகள் தெரியாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள் மற்றும் பெரும்பாலனவர்கள், நம் நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பது துளியும் தெரியாதவர்களாகவே இன்னமும் இருக்கின்றனர்.

   சற்றே சிந்தித்துப் பாருங்கள்
   நாட்டு நடப்புகளும், ஒவ்வொருவரின் சுயநலங்களும், தேவைக்கு அதிகமாக பொருள் ஈட்டியும் ஆசை அடங்காமல் மேலும் மேலும் தவறு செய்பவர்களும்….

   இப்படியே போனால் நாம் என்னாவோம் என்று சற்றேனும் சிந்தித்திருப்பீர்களா நம் எதிர்காலத்தைப்பற்றி.

   முடிந்தால் நம் நாட்டைப்பற்றிய உண்மைநிலையை சில/பல பேருக்கு கொண்டு செல்லும் முயற்சிகளை மேற்க்கொள்ளுங்கள்.

   ==================================================
   ஒன்று சேர்வோம் நிச்சயம் மாற்றிக்காட்டி வெல்வோம்.
   ==================================================

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நன்றி நண்பர் ஸ்ரீநிவாசன்.

    இந்த நம்பிக்கை தான் முக்கியம். நாம் தனியாக
    இல்லை. நம்மைப் போல் பலர் இந்த நாடு முழுதும்
    நினைக்கிறார்கள். ஆனால் இன்னும் பலருக்கு –
    நீங்கள் சொன்னது போல் செய்தி போகவில்லை –
    போய்ச்சேர வாய்ப்பில்லை.

    எனவே இதை ஒவ்வொருவரும் -இன்னும் பலருக்கு,
    தமக்குப் பழக்கமானவர்களுக்கு எல்லாம் –
    இவற்றைப் பற்றி எல்லாம்
    எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த செய்திகள்
    எல்லாம் பரவலாக பலருக்கும் போய்ச்சேர வேண்டும்.

    வெள்ளைகாரர்கள் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு
    நம்மை அடிமைப்படுத்தினார்கள்.
    இப்போதோ – நம்மில் பலர், சுயநலம் காரணமாக,
    பதவி ஆசை காரணமாக, சூடு சொரணை இல்லாமல் –
    தானாகவே அந்நிய நாட்டினருக்கு அடிமைப்பட்டுக்
    கிடக்கிறார்கள். பத்தாது என்று நம்மையும் சேர்த்து அடகு
    வைத்திருக்கிறார்கள். இந்த நாட்டின் மீது அக்கரை உள்ள
    அனைவரும் இது விஷயத்தில் ஒன்றுபட வேண்டும்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நடக்கும். நண்பர் ரமேஷ் –
   நிச்சயம் நடக்கும்.

   உடனே நடக்க வாய்ப்பு இல்லை -உண்மை தான்.
   ஆனால், புயலுக்கான அறிகுறிகள்
   தோன்ற ஆரம்பித்து விட்டன.
   கூடிய விரைவில் இது நடக்கும் என்பது உறுதி.

   நடக்கும் என்கிற நம்பிக்கையோடு
   தொடர்ந்து முன் செல்லுங்கள்.
   உங்களால் இயன்றதைச் செய்யுங்கள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • இரா. கண்ணன் சொல்கிறார்:

    காவிரி மைந்தன்,
    இது ஒரு அருமையான துவக்கம், முதல் கோணல் சரியாக அமைந்துவிட்டது
    மனித எண்ணங்களை சீர்படுத்தினால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அடைய முடியும்.
    உங்களுடைய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

    இரா. கண்ணன்

 4. D. Chandramouli சொல்கிறார்:

  Great thoughts in very few words! As Stephen Covey (recently passed away) of “7 Habits of Highly Effective People” said, we have to start everything from inside out. Thinking on more and more good thoughts and positive feelings about men and matters – “abundance mentality” – might help in arresting bad thoughts.

 5. Ganpat சொல்கிறார்:

  காவிரிமைந்தன்,
  உங்கள் சீரிய முயற்சிக்கு ஏன் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்.
  +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
  உங்கள் எண்ணங்களில் கவனமாய் இருங்கள்
  ஏனெனில்,
  அவையே உங்கள் சொற்களாக மாறுகின்றன

  உங்கள் சொற்களில் கவனமாய் இருங்கள்
  ஏனெனில்,
  அவையே உங்கள் செயல்களாக மாறுகின்றன

  உங்கள் செயல்களில் கவனமாய் இருங்கள்
  ஏனெனில்,
  அவையே உங்கள் நடத்தையாக மாறுகின்றன

  உங்கள் நடத்தையில் கவனமாய் இருங்கள்
  ஏனெனில்,
  அவையே உங்கள் குணமாக மாறுகின்றன

  உங்கள் குணத்தில் கவனமாய் இருங்கள்
  ஏனெனில்,
  அவையே உங்கள் விதியை நிர்ணயிக்கின்றன
  +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
  ஒரு குழுவாக நாம் உள்ளூர் பள்ளிகளுக்கு சென்று,அங்கு 8~10 வயது உள்ள
  மாணாக்கர்களிடம் நல்லெண்ணம்,நேர்மறை சிந்தனை இவற்றையெல்லாம்
  போதிக்கலாமே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.