மனசாட்சி பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது …..
நம் மனதில் தோன்றும் அதே எண்ணங்கள்
இன்னொருவர் மனதிலும் தோன்றி அதை அவர்
மிக அழகாக வெளிப்படுத்துவதைக் காணும்போது –
எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது !!
எழுத்தாளர் – இயக்குநர் ராஜூ முருகன்
எழுதி இருப்பதைப் படிக்கும்போது என் மனசாட்சியே
என்னிடம் பேசுவது போல் இருக்கிறது.
உங்களில் பலருக்கு கூட இதே போல் தோன்றலாம் !
என்னமா எழுதுகிறார் – பாருங்களேன் ….!
—————-
அன்றைக்கு அடையாறில் இருந்து நந்தனத்துக்கு
பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன். பத்து, இருபது
பையன்கள் ஏறி ஏக ரகளை பண்ணிக்கொண்டு
இருந்தார்கள். அவ்வளவும் ஆபாசப் பேச்சு. காது
கொடுத்து கேட்க முடியாத பேச்சு. அத்தனை
பேரையும் தொந்தரவு பண்ணிக்கொண்டு வந்தார்கள்.
ஒருத்தரும் வாய் திறக்கவில்லை.
ஒரு ஸ்டாப்பிங்கில் அவர்கள் இறங்கிப் போனதும்
ஒருவர் சத்தமாக, “போங்கடா.. ஒருத்தனும் உருப்பட
மாட்டீங்கடா” என்றார். யாரிடமும் பெரிதாக எந்த
ரீயாக் ஷனும் இல்லை.
யோசித்தால் – அந்த பேருந்து இந்த தேசமாகவும் –
நாம் அந்தப் பயணிகளாகவும் தான் இருக்கிறோம்.
பெட்ரோல் விலை உயர்ந்து,பெட்ரோலும் கிடைக்காமல்
போனால், பங்க்குகளில் கூடி அட்மாஸ்பியரில்
அடித்துக் கொள்கிறோம்.
ஈமு கோழிக்கடையைத் திறந்து வைக்க நமீதா வந்தால்,
கூட்டம் கூட்டமாக வந்து ஜாலியாகிறோம்.
“நீயா-நானா”வில் பவர் ஸ்டாரைப் பார்த்து
குதூகலிக்கிறோம்.
“இந்த நித்தியானந்தாவை தூக்கிட்டு வந்து கொரில்லா
செல்லுல போடணும்யா” என்கிற கோபம் பலருக்கும்
இருக்கிறது.
“ஊழல் வழக்குல உள்ளே போயிட்டு ஜாமீன்ல
வந்தவருக்கு தார தப்பட்ட வரவேற்பாய்யா ?”
“ஈபி பில்லு, பால், பஸ் டிக்கெட்டு எல்லாத்தையும்
இந்தம்மா ஏத்திட்டு, பெட்ரோல் விலை உயர்வை
கண்டிக்கறாங்களே…என்னங்க அநியாயம் இது ?”
“ப.சிதம்பரம் பாதி கஜினி ஆன பிறகும்
அமைச்சராவே இருக்காரேய்யா?”
“எதுக்கு இந்த இங்கிலீஷ் சேனல் எல்லாம் இப்பிடிக்
கதர்றானுங்க... பிரணாப் ஜனாதிபதியானா ?…
நாட்ல புரட்சி வந்துருமா ?”
-என்றெல்லாம் எல்லாருக்கும் எல்லா கோபங்களும்
இருக்கின்றன. ஆனால் எந்த ரீயாக் ஷனும்,
வசனங்களும் இல்லாமல்
கூட்டம் கூட்டமாக காமெடி பண்ணி,
கூட்டம் கூட்டமாக கடந்து போகிறோம்.
ஏனென்றால் – நாம் எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்டுகள்.
ஜூனியர் ஆர்டிஸ்டுகளால் என்ன செய்ய முடியும் ?
ஒயின் ஷாப்புகளில் கூட முடியும் –
புலம்ப முடியும்.
லஞ்ச் பிரேக்கில் உட்கார்ந்து வதந்தி பேச முடியும்.
எல்.கேஜி அட்மிஷனுக்கு ராத்திரியே போய்
விடிய விடிய ஸ்கூல் வாசலில் தூங்காமல் கிடக்க முடியும்.
கல்விக்கும், மருத்துவத்துக்கும் எந்த கேள்வியும்
கேட்காமல் டவுசர் கிழியக் கிழியச் செலவு பண்ண முடியும்.
கோர்ட்டில் தீர்ப்பும் சொல்ல முடியாமல்,
கோர்ட்டுக்கு வெளியே ரெண்டு பேரைப்
போட்டுத்தள்ளவும் முடியாமல் – தினமும்
நியூஸ் பார்த்துப் பொருமத்தான் முடியும்.
ஜூனியர் ஆர்டிஸ்டுகளால் வேறு என்னதான் செய்ய முடியும் ?
எனக்கு “சாகும்போதும் நான் தர்மனா,
துரியோதனனான்னு தெரியலையே தம்பி” என்ற
நடராஜப்பிள்ளையின் குரல் உள்ளே ஒலித்தது.
“தர்மனாகவும், துரியோதனனாகவும் சாவதை விட,
அபிமன்யுவாகச் சாவது தான் பெரிய விஷயம்” –
–இல்லையா ?
அருமை.
தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என முழுமையாக புரியாவிட்டாலும் தீமையை கண்டால் எதிர்க்க ஆளில்லையே
என்ற ஆதங்கம் தெரிகிறது. ஒவ்வொரு மனிதருக்கும் தீமையை கண்டால் எதிர்க்கும் மனப்பான்மை வரும் வரை
அவரவருக்கு அதற்காக மனது உறுத்தும் நாள் வரை இப்படித்தான் இருக்கும் , அது இந்த நாட்டின் சாபக்கேடு. காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
நண்பர் காவிரிமைந்தன்,
இதே தான். நிறைய பேருக்கு இதே எண்ணம் தான்.
சுற்றி நடக்கும் அநீதிகளைக் கண்டால் சுட்டெரிக்க வேண்டும்
போல் இருக்கிறது. ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
“கோர்ட்டில் தீர்ப்பு சொல்லக் கூடிய
இடத்திலும் நாம் இல்லை.
கோர்ட்டுக்கு வெளியே ரெண்டு பேரைப்
போட்டுத்தள்ளவும் நம்மால் முடியவில்லை.
தினமும் நியூஸ் பார்த்துப் பொருமத்தான் முடிகிறது.”
என்ன செய்யலாம். நீங்கள் தான் ஒரு வழி சொல்லுங்களேன்.
வணக்கத்துடன் – பிரபு
மனசாட்சி எப்போதும் உள்ளததை தான் பேசும்.
ஆனால், வெளிப்படையாக பேச மனிதன் வலிமையானகவோ
வசதியானவாகவோ இருக்க வேண்டியது காலத்தின்
கட்டாயம்.
அன்று இசிஆரில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
நடிவில் ஏறிய ஒருவர் நோஞ்சனான ஒருவரைத் தள்ளி
உட்கார சொல்லுகிறார். “நீ எங்கே போறே. நீ உள்ள ஒக்காரு”
என்று மறுக்கிறார். மறுப்பை எற்க மறுத்து, பளாரென அறைகிறார்.
“ஒன்ன என்ன சொன்னேன். அடிக்கிற” என்கிறார் கன்னத்தைத்
தடவிக் கொண்டு..
“மரியாதையா பேசுடா. எதுனா பேசின ஸ்டேஷன்ல ஒக்கார
வச்சுடுவேன்” அறைந்தவர். பக்கத்திலிருந்தும் யாராலும் ஒன்றும்
கேட்க முடியவில்லை. இதனிடையே அடித்தவர் என்னருகில்
வந்து அமர்கிறார். கொஞ்ச நேரம் விறைப்பாகவே இருந்து விட்டு
அவராகவே “ரெண்டு விட்டால் தான் ஸார் இவனுகளுக்கு புத்தி
வரும். பேசும் போது இது ஞாபகத்துக்கு வரும்” என்றார்.
“ஸார். நீங்க போலீசா? நான் …..ல இருக்கேன். நல்ல வேளை.
நானே கேட்கலாம்னு இருந்தேன். நீங்க அவர அடிச்சது தப்பு. அது
அவரது லாங்குவேஜ். வீட்டுல அப்பா-அம்மா கிட்டேயே இப்படித்தான்
பேசுவாங்க. இதுக்கு மேல மரியாதையா பேச கத்துக் கொடுத்து…”
என்றேன்
அவர் அதை காதில் போட்டுக் கொள்ளாது, “ஸ்டேஷன்ல
ஒக்காற வச்சு நாலு சாத்தினா மரியாத தானா வரும்” என்று விட்டு
இறங்கி போனார். (முதலில் அவருக்குத்தான் மரியாதையான வார்த்தைப்
பிரயோகத்தை கற்றுத் தர வேண்டுமென நினைத்துக் கொண்டேன்)
பிறகு எல்லோருமாய் அடி வாங்கியவரைத் தேற்றினோம்.