இப்படி ஒரு கோயில் …. !!!

இப்படி  ஒரு கோயில் …. !!!

கீழே தந்திருக்கும் அறிவிப்புப் பலகைகளை
முதலில் படித்து விடுங்கள்.
விவரங்கள் அதற்குப்  பின்னர் !

(இந்த புகைப்படத்தில் எழுத்துக்கள்  தெளிவாக
தெரியாததால் -மீண்டும் கீழே  தட்டெழுத்தில்
தருகிறேன். )

நோக்கம் ஓராண்டாக இருந்தால் –
பூக்களை  வளர்ப்போம்.

நோக்கம் பத்தாண்டாக இருந்தால் –
மரங்களை வளர்ப்போம்.

நோக்கம் முடிவில்லாமல் இருந்தால் –
மனித குலத்தை வளர்ப்போம்.

பொதுவாக – ஆலயங்களின் நோக்கம்பக்தி,
ஆன்மிக வளர்ச்சி தொடர்புடையதாகவே இருக்கும்.
சில ஆலயங்கள் கல்விப்பணியிலும் கவனம்
செலுத்துகின்றன.

ஆனால் – சற்று வித்தியாசமாகவும், பாராட்டத்தக்க
வழிமுறைகளைக் கொண்டதாகவும்  ஒரு ஆலயம் –
அது பற்றிய சில விவரங்கள் கீழே –

சமூக சேவையை முக்கியமாக
மேற் கொண்டிருக்கிறது இந்த ஆலயம் –

கண் தானம், ரத்த தானம்,
உடல் உறுப்புகள் தானம்,
(இறப்பிற்கு பிந்தைய) உடல் தானம்
இவற்றை ஊக்குவிக்கும் விதங்களில் செயல்படுகிறது.
இவை தொடர்பான அறிவிப்பு பலகைகள் தான் மேலே
காணப்படுபவை.

இங்கு சுத்தம், ஒழுங்குமுறை  இரண்டும்
கடுமையாக வலியுறுத்தப்படுகிறது.

உள்ளே நுழையும் முன்னரே, காலணிகள் பெற்றுக்
கொள்ளப்பட்டு டோக்கன் கொடுக்கப்படுகிறது.
(இலவசம் )
கால், கைகளை சுத்தம் செய்து கொண்டு உள்ளே
போக – 3 நல்ல தண்ணீர்க் குழாய்கள்.

எந்த இடத்திலும், எந்தவித உண்டியலும் கிடையாது.
ஊழியர்கள், அர்ச்சகர் உட்பட
யாருக்கும் பணம் கொடுக்கக் கூடாது.
தீபாராதனை தட்டிலும் பணம் போடக்கூடாது.
(இது குறித்தும் அங்கங்கே அறிவிப்பு பலகைகள் !)

கற்பூரம் கொளுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆலய வளாகத்தில் மவுனம் அவசியம்.

செல்போன் பயன்படுத்தக் கூடாது. மீறி
செல்போன் அழைப்பு மணி ஒலித்தால் –
ஆலய ஊழியர்கள் செல்போனை வாங்கி
வைத்துக் கொண்டு விடுவார்கள். 24 மணி நேரம்
கழித்தே செல்போன் திரும்ப கொடுக்கப்படும்.
இது பற்றிய அறிவிப்பும் நுழை வாயிலிலேயே !

ஆலயம் முழுவதும் மணம் பரப்பும்
அருமையான மலர்ச்செடிகள்.
அருமையான  வாசகங்களைக் கொண்டு ஏகப்பட்ட
கல்வெட்டுக்கள். (பெற்ற தாயின் முக்கியத்துவத்தையும்,
கல்வி கற்றுத் தரும் ஆசிரியருக்கு காட்ட வேண்டிய
மரியாதை குறித்தும், சமூகக் கடமைகள் குறித்தும்
வலியுறுத்தி – இதில் இரண்டை நான் ஏற்கெனவே
இந்த தளத்தில் போட்டிருக்கிறேன் – சமயம் வரும்போது
இன்னும் சிலவற்றையும் போடுகிறேன் )

இந்தியா முழுவதும் உள்ள புண்ணியஸ்தலங்களிலிருந்து,
ஆறுகளிலிருந்து – எடுத்து வரப்பட்ட 1008 கற்கள்
இங்கு பதிக்கப்பட்டிருக்கின்றன. அந்த இடங்கள் பற்றிய
தகவலும் வைக்கப்பட்டிருக்கிறது.

விரும்பும் யாருக்கும், இங்கு  பிராணாயாமம்,
யோகா – தேவாரம், திருவாசகம்
(இலவசமாக) கற்றுத் தரப்படுகிறது.

உட்கார்ந்து மௌனமாக தியானிக்க அருமையான
ஒரு தியான மண்டபம்.

(நான் எப்போது திருச்சி சென்றாலும் இங்கு சென்று
ஒரு மணி நேரம் அமைதியாக அமர்ந்து விட்டு
வரத் தவறுவதில்லை !)

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் –
இது முற்றிலும் தனியாரால் நிர்வகிக்கப்படும்,
ஒரு கோயில். ஆனால் பொதுமக்கள் எல்லாரும்
அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஒரு முறை சென்று வந்தால் –
ஊருக்கு ஒரு கோயில் இப்படி இருந்தால் எவ்வளவு
நன்றாக இருக்கும் என்று உங்களை அவசியம்
எண்ண வைக்கும் –

திருச்சிக்குப் போகும்போது அவசியம் சென்று வாருங்கள் –
திருச்சி கண்டோன்மெண்ட்டில், கோர்ட் வளாகத்தின்
அருகே உள்ள  –  சுவாமி ஐயப்பன் கோயில் !
இதன் முகப்பில் காணப்படும்  வாசகம்

                         ” RELIGION  UNITES – NOT DIVIDES “

பின்குறிப்பு –

ஒவ்வொரு ஊரிலும் தேர்ந்தெடுத்து,
ஒரே ஒரு கோயிலை மட்டுமாவது
இவ்வாறு பராமரிக்கலாம்.
ஆர்வம் வேண்டும் !
ஆன்மிக நோக்கமும், சமூகப் பார்வையும் உள்ளவர்கள்
ஒருங்கிணைந்து முயற்சி செய்ய வேண்டும் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், ஆன்மிகம், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to இப்படி ஒரு கோயில் …. !!!

 1. பிரபு சொல்கிறார்:

  நீங்கள் சொல்வது உண்மை.

  கோயில்கள் ஆன்மிகப் பணியோடு, சமுதாய சேவையிலும்
  ஈடுபடத்துவங்கினால் மிக நன்றாக இருக்கும்.
  கல்வி, மருத்துவம், இரண்டு துறைகளிலும் கோயில்கள்
  சிறப்பான பங்கேற்க முடியும்.

  மக்கள் பணியே மகேசன் பணி என்பதை இந்தக் கோயில்
  அமைதியாகச் சொல்கிறது.
  நல்லவர்கள் எங்கிருந்தாலும் – நல்லது செய்ய முடியும்.

  இந்தக் கோயிலை அறிமுகப்படுத்தியதற்காக உங்களுக்கு
  முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

 2. Padmanabhan Potti சொல்கிறார்:

  பொதுவாக வசதியுள்ள கோவில்களை பொறுத்த வரையில் கல்விபணி, மருத்துவ சேவை , ஆன்மீகத்தை வளர்க்கும்
  வகையில் த்வாரம், திருவாசகம் வகுப்புகள் , மேலும் கோசாலையில் பசுக்களை வளர்த்து பராமரித்து வருதல்
  மேலும் பல்வேறு கோவில்களில் அன்னதானம் செய்வதன் மூலமாக தமிழ்நாட்டில் ஆயிரகணக்கான ஏழை
  பக்தர்கள் வயிறார சாப்பிடுகிறார்கள். இருந்தாலும் தாங்கள் கூறியுள்ளதைபோல் கண் தானம் , உடல் தானம்
  போன்றவற்றை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரங்கள் போட்டு. சேவை செய்து வரும் கோவில்களை பார்த்ததில்லை.

 3. jramanujam சொல்கிறார்:

  இத்தகைய ஆலயம் தொழுவது சாலவும் நன்று தங்கள் பதிவு, பணி பாராட்டத் தக்கது!
  சா இராமாநுசம்

 4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  மதங்களை பற்றிக் கொண்டு வாழ்வது சாலச்சிறந்தது.
  மதம் பிடித்து வாழ்வது கேட்டில் முடியும்.
  ஆலயங்கள் அமைக்கப்பட்டதின் நோக்கங்களே தாங்கள் மேலே கூறியுள்ள கட்டுரையின் கருத்து. ஆனால் இன்று ஆலயங்களே மனிதர்களை பிரித்துக்கொண்டிருக்கின்றன என்பதே உண்மை.
  religion unites, not divides
  அருமையான வாசகம்.

 5. துளசி கோபால் சொல்கிறார்:

  மதம் ஏதாயிலும் சரி. மனுஷ்யன் நன்னாயால் மதி.

  கோவில் அறிமுகம் அருமை! நன்றி.

 6. srini சொல்கிறார்:

  Maintenance and sustainability are an issue to maintain temples like this. But as far as i know, this temple is there for for more than two decades. This is really an achievement. kudos to the temple management. all the temple kariyams are done in clock work fashion. day starts with Ganesh homa every day around 4.30am and ends with harivarasanam around 9.00pm. poojas are done in kerala fashion. i also understand that the namboodri who is doing the pooja is paid good salary so that he doesnt have to beg with the devotees. you dont have to drop even a single rupee anywhere as there is no hundi at all.

 7. உண்மைத் தமிழன் சொல்கிறார்:

  பண்டைக் காலங்களில் கோயில்கள் மனிதருக்கு
  பல விதங்களிலும் உதவியாக இருந்தன. அவை மக்களின்
  அன்றாட வாழ்வுடன் பின்னிப்பிணைந்து இருந்தன.

  மிகப்பெரிய இயற்கைப் பேரிடர் ஒன்று வந்தபோது,
  திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி-ஜம்புகேஸ்வரர்
  கோயில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு
  பல நாட்களுக்கு புகலிடம் கொடுத்து, சோறும்
  கொடுத்து காப்பாற்றி இருக்கிறது. ஒரு வரலாற்றுக்
  கதையில் இதைப்பற்றி விரிவாக படித்த ஞாபகம் இருக்கிறது.

  கோயில் நிர்வாகத்தில் இருப்பவர்கள் கோயிலில் உள்ள
  வசதிகளை (network) பயன்படுத்தி சமுதாயத்திற்கு,
  மக்களுக்கு, எந்தெந்த விதங்களில் எல்லாம் உதவ முடியுமோ
  அப்படி எல்லாம் உதவ முயற்சி எடுக்க வேண்டும்.

  முதலில் அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து கோயில்களை
  விடுவித்து சமுதாய நோக்குடன் செயல்படக்கூடிய
  ஒழுக்கமுள்ள நல்ல மனிதர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

  முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை என்பதற்கு
  இந்த கோயில் ஒரு எடுத்துக்காட்டு.
  ஒரு நல்ல சிந்தனையை தூண்டிய காவிரிமைந்தனுக்கு
  பாராட்டுக்கள்.

 8. CDR சொல்கிறார்:

  இந்த ஆலயத்தின் தூய்மையும், அமைதியும், மற்றும் நிர்வாகத்தையும் பல முறை கண்டு வியந்திருக்கிறேன். நான் திருச்சிக்காரன் என்பதால் அடிக்கடி இங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 9. venkataramani சொல்கிறார்:

  ஆலயங்கள் மனித குல மேம்பாட்டிற்காகவும், தனிமனித
  உயவுக்கும் உயர்வுக்குமே ஏற்படுத்தப்பட்டன.இதனால் சமூக
  சமுதாய ஒழுங்கும் வளர்ந்து வந்தது. அதன் பொருட்டே
  செல்வந்தர்கள் காணிகளை கோவிலுக்கு எழுதினர். ஆலய
  நிர்வாகம் இறை நம்பிக்கையும் ஒழுக்கமும் மிகுந்தவர்களிடமும்
  இருந்தது.

  நாகரிகமும் (?!) இறை மறுப்பு கொள்கைகளும் தமிழகத்திலே
  தலை தூக்கிய பின்பு எல்லாம் தலை கீழ் ஆனது போலவே,
  ஆலய நிர்வாகமும் ஆகிவிட்டது. இறை பற்றிய அறிவும்
  அனுபவமும் இல்லாத, இறை பயமும் பக்தியுமற்ற கயவர்களிடம்
  ஆலய நிர்வாகம் போனதின் விளைவாக, ஆலயம், அதன் சொத்துகள்
  எதற்காக அமைக்கப்பட்டதோ அதற்கு நேரெதிர் காரியங்ககளுக்காக,
  சொந்தங்களின் மேம்பாட்டிற்காக, பயன்பட்டு வருகிறது.

  திராவிட கட்சிகளின் ஆட்சியில், அற நிலைய ஆட்சித்துறை
  அமைச்சராக பதவி வகித்த பலரும் (மறைந்த பி டி ஆர் பழனிவேல்ராஜன் விதிவிலக்கு), அவர் தம் உறவுகளும் நட்புகளும் ஆலய சொத்துகளை
  அனுபவித்து சுய சொத்துகளைப் பெருக்கிக் (பொறுக்கிக்) கொண்டவர்கள்
  தான்.

  செந்தூர் முருகன் வேலை கையாண்டுவிட்டார். வேலை முருகனிடம்
  திரும்ப சேர்ப்பித்தே ஆக வேண்டும் என பாதயாத்திரை போனவ்ரும் குற்றச்சாட்டுக்கு ஆளானவரும் இப்போது முருகனால் கூட பிரிக்க
  முடியாத “நட்போடு” வலம் வருகின்றனர்.

  நித்தியானந்தானின் ஒழுங்கையும் தகுதியையும் பேசும் பலருக்கும்
  அருணகிரியாரின் தகுதியும் ஒழுங்கும் தெரியாது. சரியான சமய
  பின்புலம் இல்லாத அருணகிரியாருக்கு நித்தியானந்தரை விட
  உயர்வான மனிதர் கிடைத்துவிடுவாரா என்ன?

  இந்த சூழலில் இம்மாதிரி ஆலயங்கள்தான் பக்தர்கலளுக்கு ஆறுதல்.

 10. N.Rathna Vel சொல்கிறார்:

  அருமையான பதிவு. கோவில் எப்படி எல்லாம் சேவை செய்கிறார்கள். ஒரு முன் மாதிரி.
  தகவலுக்கு நன்றி திரு காவிரி மைந்தன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.