மன்னார்குடி ….14 பேர் !!!

மன்னார்குடி ….14 பேர் !!!

ஒற்றை மனுஷியான முதல்வரைச் சுற்றி
14 பேர் கொண்ட ஒரு குடும்பம்.
பாதி பேர் வெளிப்படையாகவும் –
பாதி பேர் மறைமுகமாகவும் !

தனி பெண்மணியாக இருப்பதால்,
துணையாக இருக்கட்டும் என்று 30 ஆண்டுகள் முன்பு
சாதாரணமாக சேர்த்துக் கொண்டது இன்று எந்த அளவில்
கொண்டு போய் விட்டிருக்கிறது !

வீட்டு நிர்வாகம், கட்சி நிர்வாகம்,
சொத்து நிர்வாகம்,
ஆட்சி நிர்வாகம் – தெரிந்து சில, தெரியாமல் பல.
ஏறத்தாழ முழு கண்ட்ரோலும் இந்த கும்பலின் வசம்
இருந்திருக்கிறது!

 – எவ்வளவு அதிகார மையங்கள் ?
அவர்கள் இஷ்டத்திற்கு நியமனங்கள் –
கட்சியிலும், ஆட்சியிலும்.

தமிழ் நாட்டின் மிகப்பெரிய ஒரு கட்சியின்
தலைவிதியையும்,
ஆட்சியின் முக்கிய பங்கையும்,
இந்த குடும்பம் தான் தீர்மானித்துக்
கொண்டிருந்திருக்கிறது.

பல விஷயங்களில் பின்னிப் பிணைந்து இவர்களின்
தொடர்பு இருந்ததால், இவர்களை முற்றிலுமாக
ஒதுக்க இயலாத நிலையில் ஓரளவு கட்டுப்பாட்டில்
மட்டும் வைத்திருந்த “அம்மா”வின் நிலை
கூர்ந்து நோக்குபவர்களுக்கு புரிந்தே இருந்தது.

மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தும் –
இந்த கும்பலின் “சூழ்நிலைக் கைதி“யாக
அவர் இருந்ததும் புரிந்தே இருந்தது.

இந்த கும்பலை விரட்டி விட்டு, அதன் பிடியில்
இருந்து அவரால் வெளியே வர முடிந்திருக்கிறது
என்பதையே இன்னும் நம்ப முடியவில்லை.  

ஜெயலலிதாவின் பல குணங்கள்  
நமக்கு தெரிந்தவையே.
அவரது புத்திசாலித்தனமும் தெரியும்.
தைரியமும்  தெரியும்.
கோபமும் தெரியும்,
பிடிவாத குணமும் கூட நன்றாகத் தெரியும்.

ஆனாலும், யாருடைய ஆதிக்கமும் இல்லாத,
எந்தவித நிர்பந்தமும் இல்லாத,
உண்மையான, சுதந்திரமான ஜெயலலிதா,
அதிகாரத்தில் இருக்கும்போது  எப்படிச் செயல்படுவார்
என்பதை  காணும் வாய்ப்பு இதுவரை நமக்கு
கிடைத்ததில்லை!

இது உண்மையிலேயே
நிரந்தரமான ஒரு பிரிவாக இருந்தால் –
நாம் முற்றிலும் புதிய ஒரு ஜெயலலிதாவை
காணப்போகிறோம்.

அவரது எதிர்மறையான குணங்கள் நமக்கு
தெரிந்தே இருந்தாலும் கூட –
உண்மையான “அம்மா”
எப்படி செயல்படப்போகிறார் என்பதைக் காண
ஆவலாக உள்ளது.

சொந்தமாக எந்தவித பந்தமோ, குடும்பமோ,
தேவைகளோ, இல்லாத –

கட்சியில் தனக்கு எந்தவித போட்டியும் இல்லாத,

சட்டமன்றத்தில் தனி மெஜாரிடி உள்ள
திறமையான ஒரு தலைவராக,

ஜெயலலிதா முயன்றால் –
நிச்சயம் ஒரு நல்லாட்சியைத் தர முடியுமே –
பின் ஏன் இப்படி நடக்கிறது என்று நான் பலமுறை
நொந்து கொண்டது உண்டு.

இனியாவது –
நல்ல பின்னணி கொண்ட அதிகாரிகளை,
அனுபவம் வாய்ந்த நபர்களை,
தூய்மையானவர்களை – தேர்ந்தெடுத்து,
அரசில் தனக்கு ஒரு நல்ல
“டீமை”அமைத்துக் கொண்டு
ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான
ஒரு அரசை அவர் நடத்திச் செல்ல வேண்டும்.

கடந்த காலங்களை மறப்போம்.
இந்த புதிய சூழ்நிலையை தக்க வைத்துக்கொள்ளும்
முயற்சியில் அவர் வெற்றி பெறவும் –

இந்த மாறுதல்களின் மூலம் தமிழ் நாட்டில்
ஒரு நல்ல அரசு அமையவும்,
தமிழ் மக்களுக்கு (தமிழ் நாட்டு மக்களுக்கு
மட்டுமின்றி –ஈழத்தமிழர்களுக்கும் சேர்த்தே)
நன்மைகள் விளையவும்
ஒரு வாய்ப்பு கிடைக்கட்டும் என்று மனதார
வாழத்துவோம்.

நம்பிக்கை  தானே  வாழ்வு !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to மன்னார்குடி ….14 பேர் !!!

  1. சிவா சொல்கிறார்:

    இது மட்டும் நாம் எதிர்பார்ப்பது போல் நடந்துவிட்டால் நமது நம்பிக்கையான ” இன்றில்லாவிட்டாலும் நாளையாவது மாறும் ” என்பது பலித்து நமக்கு ஒரு நிஜ நம்பிக்கையை தரும் என இறைவனை வணங்குவோம். நமது நாளை என்பது இன்றாகிவிட்டதாக நிம்மதி அடைவோம்

  2. செழியன் சொல்கிறார்:

    வணக்கம் காவிரிமைந்தன் அவர்களே,

    நீங்கள் “ஜெ”யை எப்படி
    நம்புகிறீர்கள் ? அவரது கடந்த
    காலங்கள் நம்பிக்கையை தரவில்லையே ?

    அன்புடன்
    செழியன்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் செழியன்,

      நம்பிக்கை தான் உலகம்.

      அண்மையில் நடந்த தேர்தலில் மக்களின்
      பெருத்த ஆதரவோடு ஜெயலலிதா
      முதலமைச்சராகி இருக்கிறார்.

      அடுத்த நாலரை வருடங்களுக்கு அவர் தான்
      முதலமைச்சர். அவர் கட்சியில்,
      அவரைக் கேள்வி கேட்க ஆள் கிடையாது.
      அவர் தான் கட்சி.

      தன் நிலை குறித்த எந்தவித டென்ஷனும்
      இல்லாமல் ஆட்சியை நடத்தலாம்.
      இது அவருக்குள் பெருத்த தன்னம்பிக்கையை
      உண்டாக்கும்.

      அடுத்து – அவரது குணாதிசயங்களைப் பற்றி
      நான் மேலே எழுதி இருப்பதை மீண்டும்
      ஒருமுறை படியுங்களேன்.
      இயற்கையாகவே அவர் நல்ல புத்திசாலி,
      துணிச்சலானவர்.

      தகுதிகள் பொருந்திய ஒரு நபர்.
      சுய தேவைகள் இல்லாத ஒரு நபர்.
      நிச்சயமாக நல்லாட்சியைத் தர முடியும் –
      விரும்பினால் !

      ஒரு “நல்ல” சர்வாதிகாரி –
      “ஜெ”க்குள் இருக்கிறார் என்பது என் கணிப்பு.

      நல்லதே நடக்கும் என்கிற
      நம்பிக்கையுடன் பொறுத்திருந்து தான் பார்ப்போமே !

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  3. ramanans சொல்கிறார்:

    “அவரவர் பிராரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது, என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என் தடை செயினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆகலின், மௌனமாயிருக்கை நன்று”

    – பகவான் ரமணர்

    இதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாட்டைப் பிடித்த பிணிகள் ஒவ்வொன்றாக விலகி இனி நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

    2012 நல்லதாக, நல்லவர்களுக்கு மேலும் நன்மை பயப்பதாக அல்லாதவர்களையும் நல்லவர்களாக மாற்றுவதாக அமையட்டும்.

    தர்மத்தின் காவலன் சனைச்சரனின் அருள் நல்லோர் அனைவருக்கும் கிட்டட்டும்.

    ஓம்

  4. Ponraj Mathialagan சொல்கிறார்:

    அன்பான தமிழா உறவுகளே சாவுத தண்டனையை எதிர் நோக்கி இருக்கும் குற்றமற்ற சாந்தன், முருகன், பேரறிவாளனை காப்பாற்ற விரும்பினால் நீங்கள் ஒரே ஒரு கீழ் கண்ட எண்ணுக்கு (“மிஸ்டு கால்” ) அழைப்பு கொடுத்து துண்டிக்கவும் .

    9282221212

    நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு அழைப்பும் மூவர் உயிரை காப்பாற்ற நிச்சயம் உதவும். உங்கள் அழைப்பு தானியங்கி முறையில் தானாகவே இணைப்பு துண்டிக்கப்படும்.

    நம்பிக்கையோடு உடனே துவக்குங்கள் உங்கள் பணியை…

  5. V.MATHIVANAN சொல்கிறார்:

    Idhanaal yaarukku nanmai, namakka, cho ponrorukka.
    Mathi

  6. dhinakar சொல்கிறார்:

    that is why she met nirupama menon rao to co operate with RAJAPAKSE.

  7. ரிஷி சொல்கிறார்:

    காவிரி மைந்தன்,
    அதிமுக எனும் கட்சியில் இருந்து நீக்கி விட்டால் போதுமா? ஜெயா எண்டர்பிரைஸ், ஜெயா பப்ளிகேஷன்ஸ், ஜெயா டிவி, கொடநாடு எஸ்டேட், ஐதராபாத் திராட்சை தோட்டங்கள், சீமைச்சாராய ஃபேக்டரிகள் ….. இன்னும் நிறைய நிறைய தொழில்கள் மன்னார்குடி கும்பலின் வசம் உள்ளன. அவற்றில் இருந்தும் சசிகலா கோஷ்டியை விரட்டியடிக்க முடியுமா?

    மேம்போக்காக இந்த ‘வெளியேற்றல் நாடகத்தை’ நான் நம்பவில்லை. இது தற்காலிகம்தான். ஒருவேளை சனிப்பெயர்ச்சியின்போது இவர்களை விலக்கி வைத்தால் நல்லது என்று ‘சோ’ போன்றவர்கள் ஆருடம் சொல்லியிருக்கக்கூடும்.

    மிகப்பெரிய நெட்வொர்க்கை ஒருநாளில் கலைத்துவிடுதல் என்பது நடக்கவே நடக்காது. ஜெயாவிற்குப் பின் மன்னார்குடி கும்பலிடம்தான் அதிமுக கட்சி அதிகாரங்கள் பகிரங்கமாக எழுதி வைக்கப்படும். பல ஆயிரம் கோடிகளில் குளித்துக் கொண்டிருப்பவர்கள் அவ்வளவு எளிதில் அதிகார மையத்தை விட்டுத் தரவோ, ஒதுங்கிச் செல்லவோ மாட்டார்கள்.

  8. Ganpat சொல்கிறார்:

    அன்பின் கா.மை,

    1991 இல் முதன் முறையாக பதவி ஏற்றதிலிருந்து, மக்களுக்கு தீமை மட்டுமே செய்து வந்த ஒருவரை நல்ல புத்திசாலி,துணிச்சலானவர், என்று உங்களால் எப்படி நினைக்க முடிகிறது என்பது எனக்குப்புலப்படவில்லை!இவர் ஆட்சிக்கு வருவதற்கு அவர் காரணம்;அவர் ஆட்சிக்கு வருவதற்கு இவர் காரணம் என்றே இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன இவர்கள் இருவரும் அழிய யார் காரணம் என்று தமிழக மக்களுக்கு இன்னும் புரியவில்லை.இவை ஒரு புறம இருக்கட்டும்

    சசிகலாவிற்கும் தமிழக மக்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயாவின் தோழி மற்றபடி ஜெயாவின் அனைத்து செயல்பாட்டிற்கும் ஜெயாவே பொறுப்பேற்க வேண்டும்.

    இந்த நிலையில் நான்கு சாத்திய கூறுகள் உள்ளன.

    ஒன்று ஜெயா சசி இருவரும் நல்ல மனதுடையவர்கள்:
    இது நிச்சயமாக இருக்க முடியாது.ஏனெனில் 1991 முதல் ஜெயா அற்புத நேர்மையான ஆட்சியை கொடுத்திருக்க வேண்டும்.அது அறவே இல்லை

    இரண்டு:ஜெயா நல்லவர்; சசி தீய மனத்தினர்:
    இவ்வாறு இருக்கும் பட்சத்தில்,ஜெயா எடுத்த அனைத்து தவறான முடிவிற்கும் சசியே காரணம் என முடிவாகிறது.அலுத்துப்போன ஜெயா இப்பொழுது அவரை வெளியேற்றி இருக்கிறார்.எனவே உடனடியாக ஜெயா மக்களுக்கு நன்மை பயக்கும் வண்ணம் பல முடிவுகள் எடுத்தால் இந்த நிலை உண்மையென ஆகிறது.இல்லையெனில் இந்த கோட்பாடு பொய்

    மூன்று:சசி நல்லவர்; ஜெயா தீய மனத்தினர்:
    இவ்வாறு இருக்கும் பட்சத்தில்,ஜெயா எடுத்த அனைத்து தவறான முடிவுகளையும் ஓரளவு எதிர்த்து கட்டுப்படுத்தியது சசியே என முடிவாகிறது.எரிச்சலுற்ற ஜெயா இப்பொழுது அவரை வெளியேற்றி இருக்கிறார்.எனவே உடனடியாக ஜெயா மக்களுக்கு தீமை பயக்கும் வண்ணம் பல முடிவுகள் எடுத்தால் இந்த நிலை உண்மையென ஆகிறது.இல்லையெனில் இந்த கோட்பாடும் பொய்

    நான்கு:சசி ஜெயா இருவரும் தீய மனத்தினர்:
    இவ்வாறு இருக்கும் பட்சத்தில்,ஜெயா எடுத்த அனைத்து தவறான முடிவுகளையும் ஆதரித்தவர் சசியே என முடிவாகிறது.எதோ ஒரு தீய திட்டத்தின் அடிப்படையில் இவர்கள் பிரிவது போல ஒரு நாடகம் ஆடுகிறார்கள்.எனவே ஜெயாவின் போக்கில் எந்த மாற்றமும் இன்றி சில மாதங்களில் இருவரும் மீண்டும் சேர்ந்து விட்டால் இந்த நிலை உண்மையென ஆகிறது.இல்லையெனில் இந்த கோட்பாடும் பொய்

    பொறுத்திருந்து கவனிப்போம்.வேறு வழி??

    பி.கு:இந்த வெளியேற்றத்தை தாத்தா வரவேற்பார் என சிலர் கூறுகிறார்கள்.அது தவறு.இருவரும் சேர்ந்து இருந்தால்தான் அவருக்கு நல்லது.அதற்கு அவர் தேவையான முயற்சிகளையும் செய்வார்.

  9. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    வருக நண்பர் கண்பத்,

    எனக்குத் தெரிந்து 100 % நல்லவர்
    யாரும் கிடையாது.

    100% கெட்டவரும்
    யாரும் கிடையாது.

    (சந்நியாசிகளை விட்டு விடுங்கள் !)

    அதே போல் – எப்போதுமே கெட்டவர்களாக
    இருந்தவர்களும் கிடையாது.

    எப்போதும் நல்லவர்களாகவே
    இருந்தவர்களும் கிடையாது !

    கெட்டவற்றின் நடுவே நல்லவைகளும்
    நடந்திருக்கின்றன –
    நான் பட்டியலிட வேண்டாம். நீங்களே
    யோசித்துப் பாருங்கள் – புரியும் !

    ஆமாம் – உங்கள் ரோல் மாடல் மோடியின்
    துணையுடன் தான் எல்லாம் நடக்கின்றது
    என்று தெரிந்துமா உங்களுக்கு இவ்வளவு
    அவநம்பிக்கை ?

    நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புவோம் –
    பிறகு நடப்பது நடக்கட்டும் !

    little optimism please !

    -வாழ்த்துக்களுடன்
    காவிரிமைந்தன்

    பின்குறிப்பு –
    உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் !
    எனக்கு ஹிட்லரைக் கூட –
    அவரது சில குணங்களுக்காகப் பிடிக்கும் !!

  10. Ganpat சொல்கிறார்:

    அன்பின் கா.மை,

    கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை பொய்த்து விட்டது ஆனால்
    இந்த ஆண்டு நன்கு பெய்யப்போகிறது-இது optimism

    கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை பொய்த்து விட்டது அதனால் இந்த ஆண்டும் பெய்யாது -இது pessimism

    கடந்த இருபது ஆண்டுகளாக கருணா/ஜெயா கோஷ்டி அடித்த லூட்டிகள் கொஞ்ச நஞ்சமல்ல ஆனால்
    இந்த ஆண்டு ஜெயா மாறிவிடுவார் -இது prayer

    கடந்த இருபது ஆண்டுகளாக கருணா/ஜெயா கோஷ்டி அடித்த லூட்டிகள் கொஞ்ச நஞ்சமல்ல அதனால்
    இந்த ஆண்டும் ஜெயாவிடம் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை -இது prediction

    நல்ல சக்திகளிடம் எதிர்பார்க்கவேண்டும்/ஆதரிக்கவேண்டும்
    தீய சக்திகளை அழிக்க வேண்டும்
    இதுவே ஒரு ஜனநாயகத்தில் மக்கள் கடமை.

    ஜெயா ஒரு deranged fascist..இது என்னுடைய தனிப்பட்ட கருத்து

    நன்றி!

  11. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இறைவா –

    நண்பர் கண்பத்தின் எதிர்பார்ப்பு –
    நிறைவேறாமல் போகச் செய்வது
    உன் பொறுப்பு !.
    இதில் எனக்கொன்றுமில்லை –
    இதில் தோற்பதோ-ஜெயிப்பதோ
    இரண்டும் உன்னையே சாரும் !!

    – உன் மீது நிறைய நம்பிக்கைகளுடன்
    காவிரிமைந்தன்

  12. Ganpat சொல்கிறார்:

    இந்த நாட்டை இறைவன்தான் காப்பாற்றவேண்டும் என்பது உங்கள் முடிவாக இருந்தால் அதற்கு நானும் இசைகிறேன்.அதே சமயம் இறைவனுக்கு நாம் ஒன்றும் நிலைமையை விளக்கவேண்டிய அவசியமும் இல்லை.கருணாவும் ஜெயாவும் அவரால் படைக்கப்பட்டு அவர் விருப்பப்படி நடப்பவர்கள்.தேவைப்படும்போது அவர்களை கூட்டிக்கொள்ளும் சக்தியும் அவரிடம் உள்ளது.எனவே என்று நம் துன்பங்கள் நீங்கும் என்பது விதியோ அதுவரை (யாரையும் எதுவும் சொல்லாமல்)
    அனுபவிப்போம்.
    என்ன சரியா சார்? :-))

  13. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    வருக கண்பத்,

    நான் எழுதுவதோ – சும்மா இருப்பதோ
    என் கையிலா இருக்கிறது ?

    நானா எழுதுகிறேன் ?

    சொல்பவன் அவன் –
    செய்பவன் இவன்.
    எல்லாம் அவன் செயல் !

    நன்றி, வணக்கம்,
    – வருகிறேன் !

    -வாழ்த்துக்களுடன்
    காவிரிமைந்தன்

  14. nesavali சொல்கிறார்:

    இது உண்மையா என்ன ??? கர்நாடக கோர்ட்- வழக்குகளை திசை திருப்ப- இழுத்தடிக்க – ஒரு பாவனை நாடகமோ ???????????

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.