அப்பட்டமான கிரிமினல் குற்றம் ….

அப்பட்டமான கிரிமினல் குற்றம் ….

தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்தின்
நிர்வாகத்தில் நிகழ்ந்துள்ள அப்பட்டமான
சட்டமீறல்கள் குறித்து இன்று நிதானமாக
ஒரு தகவல் வெளியாகி  இருக்கிறது  –

8 கோட்டங்கள்-
23 மண்டலங்கள் –
206 டெப்போக்கள் –
20,000 பேருந்துகள் –
ஒரு நாளைய வசூல் சுமார் 22 கோடி –

இத்தகைய பெருமைகளையுடைய போக்குவரத்து
கழகம் டீசல் சப்ளை செய்த வகையில் இந்தியன்
ஆயில் கார்பரேஷனுக்கு வைத்திருக்கும்
கடன் சுமார் 15 கோடி.

கடந்த பல மாதங்களாக ஊழியர்களுக்கு
மாதச் சம்பளம் கொடுக்க பணம் இல்லாமல்
போக்குவரத்து கழகங்களுக்குச் சொந்தமான
சொத்துக்கள் எல்லாம் ஒவ்வொன்றாக –
வங்கிகளிடமும், நிதி நிறுவனங்களிடமும்
அடமானம் வைக்கப்பட்டிருக்கின்றன.
206 டெப்போக்களும் அடமானத்தில் இருக்கின்றன.

இந்த கடன்களுக்கான வட்டியைக் கட்ட முடியாமல்
வட்டி கட்டுவதற்காகவே புதிதாக கடன்
வாங்கி இருக்கிறார்கள்.

நஷ்ட ஈடு வழக்குகளில்  கோர்ட்டால் ஜப்தி
செய்யப்பட்டுள்ள பேருந்துகளை மீட்பதற்கே
சுமார் 100 கோடி தேவைப்படுமாம்.

இவற்றை எல்லாம் தவிர சுமார் 6150 கோடி
ரூபாய் கடன் சுமை இருக்கிறதாம்.

இதெல்லாம் சரி – இவர்கள் எங்கே
வேண்டுமானாலும், எத்தனை வேண்டுமானாலும்
கடன் வாங்கி குட்டிச்சுவராகப் போகட்டும்.

ஆனால் –

கடந்த 2 ஆண்டுகளாக போக்குவரத்து ஊழியர்களிடம்
பிடித்தம் செய்யப்பட்ட பிராவிடெண்ட் பண்டு பணத்தை –
பி.எஃப்  அலுவலகத்தில் செலுத்தாமல்
அதையும் மற்ற விதங்களில் செலவழித்திருக்கிறார்கள்.

கடந்த 6 மாதங்களாக ஊழியர்களிடம்
பிடிக்கப்பட்டிருந்த இன்சூரன்ஸ் ப்ரிமியத்தையும்
அதற்குரிய அலுவலகத்தில் செலுத்தாமல் வேறு
காரியங்களுக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள்.

சில மாதங்களாக பென்ஷனுக்காக
ஒதுக்கப்பட்ட பணமும் பென்ஷன் ட்ரஸ்டுக்கு
போய்ச்சேரவில்லையாம்.

கடன் வாங்குவது குற்றம் அல்ல.

ஆனால் – ஊழியர்களிடமிருந்து பிடித்தம்
செய்யப்பட்ட – பிராவிடெண்ட் பண்டு,
இன்சூரன்ஸ் ப்ரிமியம், பென்ஷன் பண்டு தொகை
ஆகியவற்றை உரிய அலுவலகங்களுக்கு
உடனடியாக  அனுப்பாமல் இருந்தது  
கிரிமினல் குற்றம்.இவற்றிற்கான
பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட
தனித்தனியான சட்டங்கள் இருக்கின்றன – அந்த
சட்ட விதிகளின்படி,அந்தந்த மாதங்களிலேயே
பிடித்தம் செய்யப்பட்ட தொகை உரிய அலுவலகத்தில்
செலுத்தப்பட வேண்டும்.

இது தொழிலாளர்களுக்குரிய பணம்.  இதை வேறு
வகையில் செலவிட யாருக்கும் (அமைச்சருக்கோ,
முதலமைச்சருக்கோ கூட ) அதிகாரம் இல்லை.

இந்த விதி மீறல் அதிகாரிகள் மட்டத்தில்
நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை. நடந்திருந்தால்
கம்பி எண்ணப் போக வேண்டும் என்பது அவர்களுக்கு
தெரியும்.
அந்த துறைக்கான அமைச்சரின் உத்திரவு இல்லாமல்,
இது நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை.

சட்டமன்ற தேர்தல்கள்  முடியும் வரை
பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று
முந்திய அரசு முடிவெடுத்திருக்கலாம்.

ஆனால் அதற்கான வழிமுறை இது அல்ல.
இன்னும் கூடுதல் கடனுக்கு வழிவகை செய்திருக்க
வேண்டும் அல்லது அரசிடமிருந்து மான்யத் தொகை
கிடைக்க்ச் செய்திருக்க வேண்டும்.

கடன் வாங்குவது வேறு –
ஊழியர்களின் பணத்தை திசை திருப்பி செலவழிப்பது
வேறு. இதைச்செய்ய எவருக்கும் அதிகாரம் இல்லை.

சட்டப்படி ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட
பிராவிடெண்ட் பண்டு,இன்சூரன்ஸ், பென்ஷன்
பணத்தை உரிய அலுவலகத்தில் செலுத்தாமல்
வேறு வகையில் செலவழித்தது கிரிமினல் குற்றம்.

யார் மட்டத்தில் இந்த குற்றம் நடைபெற்றுள்ளது
என்று கண்டு பிடித்து உடனடியாக நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும். ஊழியர்களின் பணம்
மீட்கப்பட்டு உரிய இடத்தில் செலுத்தப்பட வேண்டும்.

அடியிலிருந்து முடி வரை தமிழ் நாடு அரசு
போக்குவரத்து கழகம் சீர்செய்யப்பட வேண்டும்.
இல்லையேல் எத்தனை கட்டண உயர்வுகள்
செய்தாலும் -மீண்டும் மீண்டும் இதே கதை தான்
தொடரும்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to அப்பட்டமான கிரிமினல் குற்றம் ….

 1. bandhu சொல்கிறார்:

  மிகப்பெரிய அநியாயம். அதுவும் அரசு துறையிலேயே நடந்துள்ளது நிர்வாகம் எந்த அளவிற்கு புரயோடிப்போயிருக்கிறது என்பதையே காட்டுகிறது!

 2. bandhu சொல்கிறார்:

  இது ஒரு பெரிய குற்றம் என்றாலும், தமிழகத்தில் இத்தனை நாள் இதை எந்த பத்திரிக்கையுமே எழுதவில்லையே, அது ஏன்? பெரிய அளவு எழுதியிருந்தால் மக்கள் விலையேற்றத்தை எதிர்பார்த்திருப்பார்கள். அது மட்டுமில்லாமல், தவறு செய்வதும் தடுக்கப்பட்டிருக்கும்!

 3. ramanans சொல்கிறார்:

  ஆக, தமிழகத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ”மூல காரணம்” யார் என்பது இப்போது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இப்படி ஒவ்வொரு துறையையும் நாசமாக்கி, கடன் மேல் கடன் பெற்று தமிழகத்தை திவாலாக்கி விட்டு, “தமிழர்களே தமிழர்களே” என்று எப்படி இவர்களால் பேச முடிகிறது?

  தமிழகத்தை ஆள் நிர்வாகத் திறமையுள்ள, மக்களை பாதிக்காத வகையில் திட்டங்களை நிறைவேற்றி, அவற்றை தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து நிறைவேற்ற யாருமே இல்லை என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.

  கோடி கோடியாக தாங்களும், தங்கள் குடும்பமும் மட்டும் சொத்து சேர்த்து விட்டு, கொள்ளையடித்த பணத்தில் இவர்கள் லண்டன், நியூசிலாந்து என்று எங்காவது செட்டிலாகி விடுவார்கள். இளிச்சவாய்த் தமிழர்கள், ஓட்டுக்கு ஒரு 200 ரூ ஆவது தேறுமா, க்வார்ட்டர் விலை ஏறாம இருக்கணுமே என்று நித்ய கவலையில் ஆழ்ந்திருப்பார்கள்!

  தமிழகத்தை யாரால் சீர் செய்ய முடியுமோ தெரியவில்லை!
  ;-(

 4. Ganpat சொல்கிறார்:

  தேசீய நாளிதழ் என்று தன்னை கூறிக்கொள்ளும் ஹிந்து போன்ற ஊடகங்கள் கூட “Why this Kolaveri?” என்ற ஒரு “முக்கியமான ” பாடலைப்பற்றி முதல் பக்கத்தில் எழுதும் இந்த பொற்காலத்தில்,நமீதா குட்டைப்பாவாடை கட்டுவது பற்றி பதிவுகள் போடும் பதிவர்கள் எழுதும் இந்த பொற்காலத்தில்,சமூக பொறுப்புடன் ஏழை எளியவர்களின் அன்றாட இன்னல்களையும்,அரசு செய்யும் அக்கிரமங்களையும் முனைந்து பதிவு செய்யும் நண்பர் காவிரி மைந்தனுக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.
  நான் முன்னமே சொன்னது போல நம் நாடு சீராவது இன்னும் பற்பல ஆண்டுகள் ஆகும்.இந்த அரசியல் சட்டத்தையும்,குற்றவியல் சட்டத்தையும் வைத்து நாம் எதுவும் சாதிக்க வழியில்லை.நம் மாநிலத்தை பொருத்தவரை தி.மு க,அ(தே) தி.மு.க இருவரும் இரண்ய கசிபு, இரண்யாட்சகன் போன்றவர்கள்.மக்கள் நரசிம்ம அவதாரம் எடுத்தால்தான் இவர்களை ஒழிக்க முடியும்.

 5. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  உங்களின் சமூகச் சிந்தனை பிரமிக்கச் செய்கிறது நண்பரே!
  இது அடி நுனி வேர் வரை புரையோடிப்போன விஷயம். இதற்கு முதலில் விழிப்புணர்வு தான் தேவை.
  இந்த விஷயத்தை அனைத்து மட்டத்திலும் பரவச்செய்வோம்.
  ஏன் இது போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தெரியாமலா இருக்கும்? தீபாவளிக்கு போனஸ் கிடைக்கவில்லையெனில் வேலை நிறுத்தம் செய்யும் இவர்கள், தன்னுடைய PF, பென்ஷன் மற்றும் இன்ஷூரன்ஸ் தொகை கட்டாமல் இருப்பதை எப்படி பொருத்துக்கொண்டுள்ளனர்?
  ஒரு சிறு எறும்புகூட தன் எதிர்காலத்திற்காக சேமித்து வைக்க தெரிந்திருக்கும் போது, நாம், மனிதர்கள், நம்முடைய எதிர்காலத்தை சுரண்டுபவர்களை எதிர்க்காமலிருப்பதற்கு என்ன கேடு வந்தது?

 6. பலே பிரபு சொல்கிறார்:

  இத்தனை நடந்து இருந்து இருக்கா? இதுல கட்டணம் உயர்த்துனதுக்கு எதிர்ப்பு வேற.

 7. rathnavel சொல்கிறார்:

  நல்ல பதிவு.
  எனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

 8. தமிழ்கிழம் சொல்கிறார்:

  இப்பத்தான் தெரியுது,என்னுடைய மாமனார் பணம் எல்லாம் எங்கே சென்றது என்று…. [அவர் retd கண்டக்டர்,(D.M.K. ஹி ஹி)]

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.