இது தாண்டா டெல்லி போலீஸ் !!!

இது தாண்டா டெல்லி  போலீஸ்  !!!

டாக்டர் ராஜசேகர் இந்த தலைப்பில்
ஒரு  படம் எடுத்தது சில பேருக்கு இன்னும்
நினைவிருக்கலாம். அதே தலைப்பு
பிரமாதமாக பொருந்துவது போல்
இப்போது ஒரு நிகழ்வு.

2008ஆம் ஆண்டு – மத்தியில் இருந்த
காங்கிரஸ் கூட்டணிக்கு இடதுசாரி கட்சிகள்
ஆதரவை விலக்கிக் கொண்டபோது,
நம்பிக்கை ஓட்டில், மன்மோகன் சிங்
தலைமையிலான மத்திய அரசு
கவிழும் நிலை உருவானது.

காங்கிரஸ் தன் ஆட்சியைத் தக்க
வைத்துக்கொள்ள இயன்றது அத்தனையையும்
முயன்றது. வெட்டல், ஒட்டல், பிரித்தல்,
மாற்றுதல் எல்லா வேலைகளும் நடந்தன.

எம்பி க்களிடையே குதிரை பேரமும்
நடந்தது. எம்பி க்கள் கட்சி மாறி ஓட்டளிக்க
விலை பேசப்பட்டார்கள்.
(இறுதியில், ஓட்டெடுப்பின் போது
19 எம்பி க்கள் தங்கள் கட்சி கட்டளையை
மீறி காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக
ஓட்டளித்ததால் மன்மோகன் சிங் அரசு
தப்பியது )

அந்த சமயத்தில், எம்பி க்களை விலைக்கு
வாங்க முயற்சி நடக்கிறது என்பதை
நிரூபிப்பதற்காக, ஒரு தொலைக்காட்சி சேனல்
உதவியுடன், பாஜக ஒரு (ஸ்டிங் ஆபரேஷன்)
நாடகத்தை நிறைவேற்றியது.
முன்கூட்டியே திட்டமிடப்பட்டு,
தொலைக்காட்சி நிறுவனத்தால், முழுவதும்
ஒளி/ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

அந்த சமயத்தில், காங்கிரசுக்கு ஆதரவாக
செயல்பட்டுக்கொண்டிருந்த சமாஜ்வாதி கட்சியின்
செயலாளராக இருந்த அமர்சிங் தான் இந்த
கட்சி மாறி ஓட்டு போட வைக்கும் முயற்சியில்
தீவிரமாக  ஈடுபட்டு காங்கிரஸ் அரசைக்
காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அமர்சிங்கின் உதவியாளர் சஞ் சீவ் சாக்ஸனா
அமர்சிங்கின் வீட்டிலிருந்து பணப்பெட்டியுடன்
கிளம்பி வந்து பாஜக எம்பிக்கள் குலஸ்தே,
பகோரா ஆகிய இருவருக்கும் பணம் கொடுத்த
நிகழ்ச்சி முழுவதும் பதிவு செய்யப்பட்டு
அப்போது, பரபரப்பாக வெளியானது.

இதைப்பற்றி விசாரணை நடத்திய பின்
பாராளுமன்ற அவைத்தலைவர், இது குறித்து
போலீசுக்கு புகார் கொடுத்து மேல் நடவடிக்கை
எடுக்கச் சொல்வது என்று முடிவாகி,
புகாரும் கொடுக்கப்பட்டது.

ஆனால் 2 வருடங்களுக்கு மேல் ஆகியும்
போலீஸ் உருப்படியாக எந்த நடவடிக்கையையும்
எடுக்காததால் –

முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்
லிங்டோவும் மற்றும் சிலரும் சேர்ந்த ஒரு
அமைப்பு, இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில்
ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தது.

மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட
சுப்ரீம் கோர்ட், 2 வருடங்களாக வழக்கில்
ஒரு முன்னேற்றத்தையும் காணாத டெல்லி
போலீசுக்கு (மத்திய உள்துறை அமைச்சகத்தின்
கட்டுப்பாட்டில் இருப்பது ) கடும் கண்டனத்தை
தெரிவித்தது. உடன்டியாக, உருப்படியாக
நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்திரவும்
போட்டது.

இங்கே தான் வருகிறது – டெல்லி போலீசின்
இது தாண்டா போலீஸ் நடவடிக்கை.

கோர்ட் உத்திரவால் கடுப்பான போலீஸ் –
லஞ்சம் கொடுத்த அமர்சிங்கின்
உதவியாளர் சஞ் சீவ் சாக்ஸனா, அமர்சிங்
ஆகியோரை கைது செய்ததோடு நில்லாமல்,

இந்த ஸ்டிங் ஆபரேஷனை டிவி மூலம்
பதிவு செய்து வெளியிடச் செய்த பாஜக
எம்பி க்கள்  இரண்டு பேரையும் சேர்த்து
கைது செய்து உள்ளே தள்ளி விட்டார்கள்.

அதாவது குற்றவாளியைப் பிடி என்று
சுப்ரீம் கோர்ட் சொன்னால் –
குற்றவாளியை கண்டுபிடித்து அடையாளம்
காட்டியவர்களையும் பிடித்து உள்ளே
போட்டு விட்டது டெல்லி போலீஸ் –
(- யூனியன் பிரதேசம் என்பதால்
டெல்லி போலீஸ் மத்திய உள்துறை
அமைச்சகத்தின் கண்ட்ரோலில்
வருகிறது) !!

சபாஷ் இது தாண்டா போலீஸ் !!

லஞ்சம் கொடுத்ததாக உள்ளே போனார்
அமர்சிங் – ரொம்ப சரி !
ஆனால் அவர் அதை எதற்காக கொடுத்தார் ?
யாரை காப்பாற்ற கொடுத்தார் ?
அதனால் யார் அரசு காப்பாற்றப்பட்டது ?
அவர் கொடுத்தது யார் பணம் ?
யார் கணக்கிலிருந்து வந்தது அந்த பணம் ?
யார் சொல்லி அவர் இதைச் செய்திருப்பார் ?

இதை எல்லாம் முயற்சி செய்து
கண்டு பிடித்திருந்தால் – நாமே சொல்லி
இருப்போமே –

இது தாண்டா டெல்லி போலீஸ்  என்று !!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, அருவாருப்பு, இணைய தளம், ஒளிபரப்பு, காமெடி, சாட்டையடி, தமிழ், மடத்தனம், Uncategorized. Bookmark the permalink.