உலகின் மிகப் பழமையான தொழில் – விபச்சாரம் !

உலகின் மிகப் பழமையான தொழில் –
விபச்சாரம் !

இந்த வலைத்தளத்தில் கிளுகிளுப்பான
விஷயங்கள் எதுவும் வராது என்பது
தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்கு
நன்றாகவே தெரியும்.

இருந்தாலும், புதிதாக வரக்கூடிய
நண்பர்களுக்காக, இதை முன்கூட்டியே
சொல்லி விடுவது தான் நேர்மையாக
இருக்கும் என்று நினைக்கிறேன்.

இது சமுதாய நோக்கத்துடன்
வெளியாகும் ஒரு கட்டுரை.

பல பேர் ஒரு விஷயத்தை தப்பாகவே
புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
(அந்த நாட்களில் நான் கூடத்தான் !)
Immoral Traffic (Prevension)
Act, 1956 என்பது விபச்சாரத்தை தடை
செய்யும் ஒரு சட்டம் என்பதே அது.

அது தான் இல்லை –
இந்தியாவில் விபச்சாரம் செய்வதை
சட்டம் தடை செய்வதே இல்லை. ஒரு
பெண் தானாகவே விரும்பி, காசு சம்பாதிக்க
காமத்தில் ஈடுபட்டாள் என்றால் அரசு
அதைத் தடுக்கவே இல்லை.

அப்படியானால், மேற்கண்ட சட்டம் எதற்கு
என்று கேட்கிறீர்களா ?
ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை வைத்து
விபச்சார விடுதிகள் (brothels)
நடத்துவதையும்,
இடைத்தரகர்கள் (pimps /brokers )
புகுந்து அதை வியாபாரமாக்குவதையும் தான்
சட்டம் தடை செய்கிறது.
அதாவது தொழிலா -தாராளமாக நடத்திக் கொள் !
வியாபாரமா – நோ !!-
என்கிறது நம் சட்டம் – நமது அரசாங்கம் !!!

இது சரியா, நியாயமா, தருமமா
என்றெல்லாம் நிறைய கேள்விகள் கேட்கலாம்.
அதற்கு முன்னர் ஒரு சிறிய அலசல்.

விபச்சாரம் எப்போது தோன்றியது ?
2000 ஆண்டுகளுக்கும் முன்னதாக என்று
நிச்சயமாக சொல்லலாம். மற்ற நாடுகளில்
பல கதைகள் இருந்தாலும், நம் நாட்டில்
2ம் நூற்றாண்டிலேயே நடந்ததாக வரலாற்றுக்
கதைகள் உள்ளன.  தமிழ் நாட்டில் –
சிலப்பதிகாரம்.வடக்கே வைசாலி நகரத்தில்
இருந்த “அமர்பாலி” என்கிற தாசிப் பெண் –
பின்னர் புத்த மதத்துறவி ஆன
கதை –ம்ருச்சகடிகா  !

தமிழ்நாட்டில் “தேவதாசி” (கடவுளுக்கு
அடிமை ) என்கிற பெயரில் சில குடும்பங்களில்
பொட்டு கட்டி விடும் வழக்கம் இருந்தது.
கடவுளின் பெயரைச் சொல்லி ஊரில் உள்ள
பெரிய மனிதர்களின் கைப்பாவைகளாக
அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள்.
நல்லவேளையாக இதையெல்லாம் சரித்திரம்
ஆக்கி விட்டது 1947-ல் நிறைவேற்றப்பட்ட
“தேவதாசி முறை ஒழிப்பு சட்டம்”.

மேற்கத்திய நாடுகளில் – ஏன் பிரிட்டிஷ்
ஆட்சியில் இருந்தபோது, இந்தியாவில் கூட,
இது சில சமயங்களில் இது சட்ட பூர்வமாகவே,
அரசின் கட்டுப்பாட்டிலேயே
கூட நிகழ்ந்துள்ளது.

நான் மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர்
என்கிற ஊரில் பாதுகாப்புத் துறையில்
பணியாற்றி வந்தபோது  முதிர்ந்த வயதுள்ள
ஒரு ஆங்கிலோ இந்திய பெண்மணியுடன்
நல்ல பரிச்சயம் ஏற்பட்டது. என்னிடம்
மனம் விட்டுப் பேசுவார் அவர்.
அவர் கூறிய விஷயம் இது.
ஆங்கிலேயர் இரண்டாம் உலக யுத்தத்தின்
போது, இந்தியாவில்  பணியில் இருந்த
ராணுவ வீரர்களின் மனச்சோர்வை
போக்குவதற்காக, சில பெண்களை
ராணுவத்திலேயே (comfort girls ? )
பணியில் அமர்த்தி இருந்தது.
ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்துவது
தான் அவர்களின் பணியாம். அந்த
பெண்மணியும் அவர்களில் ஒருவராகப்
பணி புரிந்தவர் தான் என்றும் சொன்னார்.

எத்தகைய சூழ்நிலைகளில் பெண்கள்
இந்த தொழிலுக்கு வருகிறார்கள் என்பதை
நான் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை.
அநேகமாக அனைவரும் அறிந்ததே.

அயோக்கியர்களால் வேலை வாங்கித்
தருவதாக ஏமாற்றி அழைத்து
வரப்பட்ட ஏழைக்குடும்பத்துப் பெண்கள்,

காதலிப்பதாகச் சொல்லி
ஏமாற்றி கைவிடும் கயவர்களால் பாதிப்புக்கு
உள்ளான பெண்கள்,

சினிமா ஆசையால்
வீட்டை விட்டு ஓடி வந்து சீர்கெட்டு போன
பெண்கள்,

இந்த தொழிலில் ஏற்கெனவே
இருப்பவர்களின் சகவாசத்தால் வந்த பெண்கள்,

குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழி இல்லாமல்
இதையே தொழிலாக மேற்கொண்ட பெண்கள் –
இப்படி  எத்தனையோ விதங்கள்.

தங்கள் அழகையும், உடல் வாகையும்
முதலீடாகப் போட்டு,
ஆண்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க
முற்படும் பெண்களைப்பற்றியோ,
வசதிகள் இருந்தும், தங்கள் இச்சைக்காக
இதில் ஈடுபடும் பெண்களைப் பற்றியோ
நான் இந்த இடுகையில் ஒன்றும்
கூறப்போவதில்லை.  

நான் சொல்ல வருவது –
அறியாத வயதில், விருப்பம் இல்லாமலே
இந்த தொழிலில் வலுக்கட்டாயமாக
ஈடுபடுத்தப்பட்ட பெண்களைப் பற்றியும்,

பிழைப்பதற்கு வேறு எந்த வழியும்
இல்லாமல் – கடைசி கட்டமாக இதில்
நுழைந்த நோஞ்சான் பெண்களைப்பற்றியும் தான்.

சுடுகாட்டில் கூட ஜாதி, மதம் பார்க்கும்
இந்த நாட்டில் –
ஜாதி, மத வித்தியாசம் பார்க்காத
ஒரே தொழில், இடம் – இது தான் !

சமுதாயத்தில் உள்ள அனைத்து பிரிவினராலும்
பயன்படுத்திக் கொள்ளப்படும் (exploitation
என்பதற்கு தமிழில் எந்த வார்த்தை பொருந்தும் ?),

இந்த பெண்கள் 35 வயதிற்குள்ளேயே –
சக்கையாக்கித் தூக்கிப் போடப்படுகிறார்கள்.
அனைத்து வித வியாதிகளுக்கும் இருப்பிடம்
ஆகிறார்கள் – HIV / AIDs, TB
எல்லாமே நிரந்தரத் துணைகள் !
வேறு எந்த தொழிலுக்கும்
லாயக்கற்றவர்கள்  ஆகிறார்கள். இவர்களுக்கு
குழந்தைகள் இருந்தால், அதுவும் பெண்ணாக
இருந்தால் -கேட்கவே வேண்டாம்.
அடுத்ததாக, அந்த வாரிசை எவ்வளவு சீக்கிரம்
தயார் செய்ய முடியுமோ செய்கிறார்கள்.
இவர்களே தரகர்களாக மாறுகிறார்கள்.
இந்த சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது.
ஓடிக்கொண்டே இருக்கும் இந்த சக்கரத்திலிருந்து
அவர்களால் வெளி வர முடியவில்லை.

இன்றைய தினம் இந்தியாவில் எவ்வளவு
பாலியல் தொழிலாளர்கள் இருப்பார்கள் ?
2007ல் மத்திய பெண்கள் மற்றும்
குழந்தைகள் நலத்துறை (!)  அளித்துள்ள
அறிக்கையின்படி சுமார் 30 லட்சம் பெண்கள்
இதில் ஈடுபட்டுள்ளார்கள். இது மிக மிகக்
குறைந்த மதிப்பீடு என்று சொல்பவர்களும்
இருக்கிறார்கள். இதில் 35.47 % பெண்கள்
18 வயதுக்குள்ளாகவே இந்த தொழிலுக்கு
வந்து விடுகிறார்களாம்.

இந்த தொழிலில் ஆசியாவிலேயே
மிகப்பெரிய தொழில் நகரம் என்று
மும்பையை  சொல்கிறார்கள் !

அதிருஷ்டவசமாக தமிழ் நாட்டில் இந்த
தொழிலை வெளிப்படையாகச் செய்யும்
குறிப்பிட்ட ஊர்களோ, இடங்களோ
எனக்குத் தெரிந்து -இப்போது எதுவும் இல்லை.
(முன்னர் இருந்தது )

ஆனால் மற்ற மாநிலங்களில்,
அநேக நகரங்களில் – வெளிப்படையாக
அனைவருக்கும் தெரியும்படி, கூட்டம்
கூட்டமாக ரெட்லைட் ஏரியா என்று
ஒரு குறிப்பிட்ட இடத்தில்
வாழ்பவர்கள் இந்த தொழிலில்
ஈடுபட்டிருக்கிறார்கள்.

மும்பையில் – காமாத்திபுரா, சாங்லி
கல்கத்தாவில் – சோனாகாச்சி
டில்லியில் –  ஜி.பி.ரோடு
குவாலியரில் – ரேஷம்புரா
புனாவில் – புத்வார்பெட்
ஆந்திராவில்  – பெத்தாபுரம் & குடிவாடா
மீரட்டில் – கபாடி பஜார்
நாக்பூரில் – கங்கா ஜமுனா
(முன்னர், சமயம் வாய்த்தபோது,
புனாவிலும், மீரட்டிலும் -இந்த மக்களின்
பின்னணியை அறிந்து கொள்வதற்காக,
இந்த இடங்களை நான் நேரிலேயே சென்று
பார்த்திருக்கிறேன் )

இங்கு, இவர்கள்  வாழும் நிலை
படு கேவலமாக இருக்கிறது. சாக்கடைகள்
ஓடும் குறுகிய தெருக்கள்,
பன்றிகளும், தெரு நாய்களும் சர்வ
சகஜமாக சுற்றித்திரிகின்றன. சாக்குப்பைகளே
வாசலில் தொங்கும் திரைச்சீலைகள் !
அறைகுறையான, மலிவான உடைகள்,
மட்டமான லிப்ஸ்டிக் – மேக் அப்,
இடையிடையே  இரண்டுங்கெட்டான் வயதில்
சிறுமிகள் -குழந்தைகள்.
தெருவில் போகும் வாடிக்கையாளர்களை
கையை பிடித்து இழுக்கும் அளவுக்கு –
அவர்களிடையே போட்டி !
இதை சுகம் என்று நம்பி, வேண்டி,விரும்பி,
தேடிப் போகிறவர்களை விடுங்கள்.

மனசாட்சி உள்ள மற்ற மனிதர்கள் யாரும்
மனம் கலங்காமல் இந்த இடங்களைக் கடந்து
போக முடியாது.

என்ன பாவம் செய்தார்கள் இவர்கள் ?
இவர்கள் ஏன் இப்படி வாழ வேண்டும் ?
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இதே அவலம் தொடரும் ?
நாம் இதைப் பார்த்துகொண்டு இப்படியே
இருப்பது சரியா ?

லட்சக்கணக்கில் இல்லாவிட்டாலும்,
வெளிப்படையாக அதிகம் இல்லாவிட்டாலும்,
தமிழ் நாட்டிலும் நிறைய அளவில் பெண்கள்
இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஆனால், வடநாட்டு நகரங்களைப் போல –
கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில்
வசிப்பதில்லை.

எனக்குத் தெரிந்து பல தொண்டு நிறுவனங்கள்
இவர்களின் நிலை சீர்பட முயற்சி செய்கின்றன.
இவர்களுக்கு HIV / AIDS பற்றி
விளக்கிச் சொல்ல முயற்சி செய்கிறார்கள்.
காண்டோம் உபயோகிக்க வேண்டிய அவசியத்தை
விளக்குகிறார்கள். மருத்துவ முகாம்கள்
நடத்தவும் முயற்சி செய்கிறார்கள்.

இருந்தாலும், விபச்சார விடுதிகளின்
உரிமையாளர்கள், தரகர்கள், ரவுடிகள்
ஆகியோரின் கட்டுப்பாட்டிலிருந்து  தைரியமாக
விடுபட்டு வெளிவரும் அளவிற்கு அவர்களுக்கு
கல்வியறிவோ, துணிச்சலோ, சமுதாயத்தின்
மீது நம்பிக்கையோ இல்லை. விட்டு விலகி
வெளியே வந்தால் தங்கள் எதிர்காலம்
எப்படி இருக்கும் ? என்ன தொழில் செய்ய முடியும் ?
சாப்பாட்டிற்கே வழி இல்லை என்றால் என்ன
செய்வது ? சமுதாயம் எப்படி தங்களை
ஏற்றுக் கொள்ளும் – என்பது போன்ற பயங்கள்.

இந்த நிலை மாற வேண்டும் –

தெரியாமலோ, வேறு வழி இல்லாமலோ,
வறுமை காரணமாகவோ -இந்த புதைகுழியில்
விழுந்து விட்ட பெண்களை  அபயக்கரம்
கொடுத்து வெளியே கொண்டு வர
அரசாங்கம் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும்.
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள்
நலத்துறை அமைச்சர் அடரத்தியாக  மேக்கப்
போட்டுக்கொண்டு தொலைக்காட்சிக்கு
பேட்டி கொடுப்பதோடு மட்டும்
நிறுத்திக்கொள்ளாமல்
தன் சமுதாயக் கடமையையும் கொஞ்சம்
செய்ய வேண்டும்.

தொண்டு நிறுவனங்களின் உதவியோடு,
இந்தப் பெண்களை –
வெளியே வர விருப்பம் உள்ளவர்களை –
மறுகுடியமர்த்தி அவர்களுக்கு தேவையான
உதவிகளை அளிக்க வேண்டும்.

அதே ஊரில் இருந்தால், அவர்கள்
நிம்மதியாக வாழ முடியாது.பழைய தொடர்புகள்
அவர்களை விடாது.

இந்தப் பெண்களுக்கான மறுவாழ்வு இல்லங்களை
அதிக அளவில் உருவாக்கப்பட வேண்டும்.
அவை நகரங்களுக்கு தொடர்பில்லாத தொலை
தூரத்தில் இருக்க வேண்டும்.
அங்கு அவர்களுக்கு கௌரவமான முறையில்
வாழ முடியும் என்பது சொல்லிக் கொடுக்கப்பட
வேண்டும் (counselling ).

இருக்க இடம், உடுத்த உடை, உண்ண உணவு
பாதுகாப்பான சூழ்நிலை அவர்களுக்கு
கிடைக்கச் செய்ய வேண்டும். அடிப்படைக்
கல்வியும், நல்ல மருத்துவ வசதியும்,
தொழில் கல்வியும் அவர்களுக்கு அளிக்கப்பட
வேண்டும்.

ஒரு வருடமோ, இரண்டு வருடமோ,
அவர்களுக்கு தன்னம்பிக்கை வரும் வரை
அங்கே தங்கி இருக்க அனுமதிக்க வேண்டும்.

அதன் பின் – உடல் நலத்தோடும்,
மனோபலத்தோடும் வெளியே வருபவர்களுக்கு
தகுந்த வேலை வாய்ப்போ, சுயவேலைக்கான
வசதிகளோ செய்து தரப்பட வேண்டும்.

அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வி
அளிக்க வேண்டும்.  அடுத்த தலைமுறை
நிச்சயம் அதே தொழிலுக்கு போகாமல் இருக்க
தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும்.

இவை அனைத்தையும் அரசாங்கத்தால்
செய்ய முடியாது. ஆண்கள் சம்பந்தப்பட்ட
அமைப்புகளாலும் செய்ய முடியாது.
பெண்களால் நடத்தப்படும் தொண்டு நிறுவனங்கள்
இந்த பொறுப்பினை மனமுவந்து ஏற்றுக் கொள்ள
வேண்டும்.

வித்யாகர் என்கிற தனி மனிதர்
“உதவும் கரங்கள்” அமைப்பின் மூலம்
3000 அபலைகளை மீட்டு, காப்பாற்ற
முடியும் என்றால், ஊருக்கு ஒரு
“உதவும் கரங்கள்” ஏன் தோன்றக்கூடாது ?

இதற்கான நிதி உதவி அனைத்தும்,
அரசாங்கத்தால் அளிக்கப்பட  வேண்டும்.
இது அரசாங்கத்தின் கடமை.

இவை எல்லாம் எப்படி நடக்கும் என்கிறீர்களா ?
இதற்காக, அரசாங்கம் புதிதாக சட்டங்கள் எதையும்
இயற்றத் தேவை இல்லை.

ஏற்கெனவெ, Immoral Traffic
(Prevention) Act -பிரிவு 21ல்
இதற்கான விதிகள் உள்ளன.

—————————–
Rule 21 – Protective homes –
The State Government may in its
discretion esablish as many
protective homes and
corrective institution under
this Act as it thinks fit.
———————————

அப்படியானால் என்ன தான்  தேவை ?

நல்ல உள்ளங்களைக் கொண்ட,
உண்மையாகவே சமூக சேவை செய்ய வேண்டும்
என்ற நோக்கம் கொண்ட,
முற்றிலும் பெண்களால்
இயக்கப்படும் தொண்டு நிறுவனங்கள்
தான் தேவை.

அவை முயற்சி எடுத்தால் –
அரசின் துணையோடு, நிதி உதவியோடு,
இந்த நிர்க்கதியான பெண்களை
வெளிக்கொண்டு வர முடியும்.
கௌரவமாகவும், ஆரோக்கியத்துடனும்
இவர்களையும் இவர்களது வாரிசுகளையும்
வாழ வைக்க முடியும்.
குறைந்த பட்சம்- இன்னொரு தலைமுறை
இந்த தொழிலில் நிச்சயம் ஈடுபடாது என்கிற
நிலையை உருவாக்க இயலும்.

நல்ல உள்ளங்கள்  முன் வருமா ?
முயற்சி எடுக்குமா ?
(இந்த இடுகை அதிக எண்ணிக்கையில்,
பெண்களிடம், பெண்கள் நடத்தும்
தொண்டு நிறுவனங்களிடம் போய்ச்சேர
வேண்டும் என்று விரும்புகிறேன்.
இதைப் படிப்பவர்கள் அதற்கு
தங்களால் இயன்ற விதத்தில் உதவ
வேண்டுகிறேன் )

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தொண்டு நிறுவனங்கள், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to உலகின் மிகப் பழமையான தொழில் – விபச்சாரம் !

 1. hajasulthan சொல்கிறார்:

  கண்டிப்பாக இந்த சமுதாயம் செய்யவேண்டும்

 2. bharathi kannamma சொல்கிறார்:

  அண்ணா வணக்கம்.

  பெண்களே சீரியஸாக எடுத்துக் கொள்ளாத
  இந்த விஷயத்தை நீங்கள் இவ்வளவு

  வருந்தி, மனம் நெருடும் விதத்தில் சொல்லி
  இருக்கிறீர்கள்.
  ஒவ்வொரு பெண்ணும் தன் இனத்தைச்
  சேர்ந்த இன்னொரு உயிர் இவ்வளவு
  துன்பங்களை அனுபவிப்பதை
  பார்த்தும் சும்மா இருக்கலாமா ? உங்கள்
  எழுத்துக்கு நிச்சயம் சிறிய அளவிலாவது
  பலன் இருக்கும் என்றே நினைக்கிறேன்.
  நானும் எனக்குத் தெரிந்தவர்களிடம் அவசியம்
  இதைப்பற்றி பேசுவேன்.

 3. tamilan சொல்கிறார்:

  I have been thinking to post a blog post like this for a long time. You did it.

 4. kavirimainthan சொல்கிறார்:

  வருக நண்பரே,

  மிக்க நன்றி.
  உங்கள் மறுமொழி அடுத்த இடுகைக்கானது.
  (உலகின் மிகப்பழமையான தொழில் ….)
  இடம் மாறி விட்டது. மாற்ற முயற்சி
  செய்கிறேன். முடியவில்லையென்றால்,
  அங்கேயே பார்க்கலாம்.

  வாழ்த்துக்களுடன்
  காவிரிமைந்தன்

  வருக நண்பரே,

  நண்பர் யாத்ரிகனிடமிருந்து …….

  வணக்கம் காவிரிமைந்தன்,

  நிறைய பெண்கள் சமூக சேவையில்
  ஈடுபட்டிருக்கிறார்கள்.
  சிலர் நடுத்தர குடும்பத்தினர்.
  அவர்கள் சிறிய அளவில் தங்களுக்கிடையிலேயே
  குழுக்களாக செயல்பட்டு ஒருவருக்கொருவர்
  உதவி வருகிறார்கள்.

  நிறைய – படித்த, செல்வந்தர் குடும்பத்துப்
  பெண்களும் சமூக சேவையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
  ஆனால் அவர்கள் பொதுவாக கல்வி, மருத்துவ
  பணிகளிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.

  இந்த மாதிரி விஷயங்களில் சேவை செய்ய முடியும்,
  செய்ய வேண்டும் – என்பது பொதுவாக பலருக்கு
  தோன்றவில்லை என்று நினைக்கிறேன். தோன்றினால்,
  நிச்சயம் செய்வார்கள்.

  வசதியான நிலையில் உள்ள படித்த பெண்களின்
  அமைப்புகள் தான் அரசாங்கத்தில் அதிகாரத்தில்
  இருப்பவர்களிடம் பேசி இது மாதிரி விஷயங்களில்
  பலனுள்ள வகையில் செயல்பட முடியும்.

  எனக்கு தெரிந்த அமைப்பினரிடம் நான் கூட
  இது பற்றி பேச விரும்புகிறேன்.

  சிறிய அளவிலாவது, முயற்சிகள் தொடங்கட்டுமே.

  நல்ல முயற்சி. இது போன்ற அவசியமான
  விஷயங்களை அடிக்கடி எழுதுங்கள்.

  யாத்ரிகன்
  http://yatrigan.wordpress.com

 5. Ganpat சொல்கிறார்:

  அன்பின் கா.மை.

  வழக்கம்போல சமூக கரிசனம் கொண்ட பதிவு ஒன்றை இட்டுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.
  நம் நாட்டை பீடித்துள்ள உயிர்கொல்லி நோய்கள
  பெருகி வரும் ஜனத்தொகை
  ஏழ்மை
  இதில் முதலாவது மக்களின் அறியாமையால் ஏற்படுகிறது.
  ஆனால் இரண்டிற்கும் காரணம் கடந்த அறுபது ஆண்டுகளாக நம்மை ஆண்டு வரும் பொறுப்பற்ற ஊழல மிகுந்த அரசுகள்.
  இவைகளின் வீரியம் இருபது ஆண்டுகளுக்கு முன் தாராளமாக்கல் என்ற மன்மோகன் சிங்கின் கொள்கையால்
  விஷ விருட்சம் போல வளர்ந்து விட்டது.
  இதற்கு ஒரு முடிவு கட்டாமல் வெறு எந்த பிரச்சினையும் நாம் அணுகுதல் பயனற்றது.மன்னித்துக்கொள்ளுங்கள்.I am extremely pessimistic about this country’s future.எதோ கார்களையும் கம்ப்யூட்டர்களையும் பார்த்து மயங்கி நாடு முன்னேறி விட்டது என்று பலரும் நினைக்கிறார்கள்.இது ஒரு மாயத்தோற்றம்.சமுதாய ஏற்ற தாழ்வுகள் தான் மிகப்பெரும் அளவில் வளர்ந்துள்ளன.இதனின் வெளிப்பாடுதான்..விபசாரம்..சிறார்கள் பணி அமர்த்தல்.பெருகி வரும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள்.தோற்று நோய்கள ஆகியன
  இதற்கெல்லாம் காரணம் ஊழல மிகுந்த எந்த வேலையும் செய்யாத மத்திய மாநில அரசுகள்.இவை தொட்டியில் உள்ள பெரும் ஓட்டைகள் இவற்றை அடைக்காமல் நாம் தொட்டியை நிரப்ப முயலும் எந்த ஒரு திட்டமும் கால விரயமே.கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை கொள்ளை அடித்த ஜனார்த்தன் ரெட்டி,எடுரப்பா,கருணாநிதி மாயாவதி சோனியா போன்ற அரசியல்வியாதிகளை தண்டித்து அவர்கள் மீண்டும் அரசியலுக்கு வராமல் செய்ய ஆவன செய்வதே இப்போது நம் தலையாய பனி என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.
  இதை செய்தால் மற்ற எல்லப்ப்ரச்சினைகளும் தானே நீங்குவதை காண்போம்.
  நன்றி.

 6. Ganpat சொல்கிறார்:

  சில எழுத்துப்பிழைகளை மன்னிக்க்கவும்…
  பணி என்பது பனி என்றும்,
  எல்லாப்ப்ரச்னைகளும் என்பது எல்லப்ப்ரச்சினைகளும் என்றும்,
  பதிவாகி உள்ளன

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக நண்பர் கண்பத்,

   நம்மிடையே நிறைய கருத்துகள்
   ஒத்துப் போகின்றன.

   ஆனால் நீங்கள் pessimistic
   அணுகுமுறை என்று சொல்லும் அதே
   பாதையில் தான் நான் optimistic ஆக
   பயணிக்க முயற்சிக்கிறேன்.

   எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
   கஜினி முகம்மதும், கோரி முகம்மதும்,
   அவுரங்கசீபும், ராபர்ட் க்ளைவும், டூப்ளேயும்
   அடிக்காத கொள்ளையா ?

   இன்னும் எத்தனையோ செல்வங்கள்
   இந்த நாட்டில் மிச்சமிருப்பதால் தானே
   அம்பானிகளும்,
   ரெட்டிகளும் தொடர்கிறார்கள் ?

   மன்மோகன் சிங், சோனியா காந்தி
   ………….
   எல்லாரையும் கடந்து நாம் பயணிப்போம்.
   நம்மால் முடிந்ததை செய்து கொண்டே
   பயணிப்போம்.

   இந்த நாடு நிச்சயம் இவை அனைத்தினின்றும்
   மீண்டு வரும்.

   எல்லாம் கடந்து போகும் !

   -வாழ்த்துக்களுடன்
   காவிரிமைந்தன்

 7. seenu சொல்கிறார்:

  வணக்கம்.
  நல்லமுயற்சி.வழ்த்துக்கள் பல.

 8. நாஞ்சில் ஜெபா சொல்கிறார்:

  நண்பர் காவிரி மைந்தன் அவர்களுக்கு நன்றிகள், படிக்கும் போதே கண்ணீர் வருகிறது, தாங்கள் செய்வது தவறு, அவமானம் என்று தெரியாமலேயே இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அபலைப் பெண்கள் மீட்கப் பட வேண்டும், குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும். என்னைப் பொறுத்தவரை இது ஊழலை விட கொடூரமான பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி, குளு குளு அறைகளில் மீட்டிங் போட்டு பெண்ணியத்தைப் பற்றி நாள் முழுதும் பேசும் பெண்ணியவாதிகள் இதற்காக என்ன செய்தார்கள். ஊழலை எதிர்க்க அன்னா ஹசாரேவுக்கு குரல் கொடுக்கும் கிரண் பேடி போன்றவர்களாவது இதற்காக போராடவேண்டும்.

  – நாஞ்சில் ஜெபா

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.