லோக்பால் வந்தால் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது ? எதற்காக இவ்வளவு அவதிப்படுகிறார்கள் ?

லோக்பால் வந்தால் நமக்கு என்ன
கிடைத்து விடப்போகிறது ?
எதற்காக இவ்வளவு அவதிப்படுகிறார்கள் ?

எனக்குத் தெரிந்தவர்கள் பலர் இந்த
கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள்.
பல பேருக்கு இது நியாயமான போராட்டம்
என்று தோன்றினாலும், இதனால்
சாதாரண மக்களுக்கு எந்த விதத்தில்
பயன் ஏற்படப்போகிறது என்பது பலருக்குத்
தெரியவில்லை.

சாதாரண மனிதனின் வாழ்க்கையில்
எத்தகைய மகத்தான மாறுதல்களை இது
உண்டாக்கும் என்று மிகச்சில
உதாரணங்களை மட்டும்
சொல்லி விளக்க நினைக்கிறேன்.

அதற்கு முன்னால்,
பொது வாழ்க்கையில் ஒன்றிரண்டு  
முக்கிய பயன்கள் –

1)அரசாங்க பொறுப்புகளில் இருக்கும்
பெரிய மனிதர்கள் மீது (அமைச்சர்கள்,
அரசு செயலாளர்கள்,உயர் போலீஸ்
அதிகாரிகள் போன்றோர் )
வழக்குத் தொடுக்க வேண்டுமானால் –

இது வரை – அரசிடம்
அனுமதி பெற்ற பிறகு தான் செய்ய
முடியும். இந்த அனுமதி சாதாரணமாக
கிடைப்பதில்லை. (2 ஜி ராஜா
விஷயத்தில் இதற்காக 2 வருடங்கள்
காத்திருந்து, பின்னர் சுப்ரீம் கோர்ட் வரை
போய் போராட வேண்டி இருந்தது ).

லோக்பால் வந்து விட்டால் –
ஓரளவு ஆதாரங்கள் இருந்தாலே போதும்-
அரசு அனுமதி இல்லாமலே யார் மீது
வேண்டுமானாலும் யார்
வேண்டுமானாலும் வழக்கு தொடுக்கலாம்.

2)இப்போது புலன் விசாரணை செய்யும்
அமைப்பான சிபிஐ யும், விஜிலன்ஸ்
கமிஷனும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்
இருக்கின்றன. எனவே விசாரணையை
இழுத்தடிக்கவும் முடிகிறது.

புகாருக்கு போதிய முகாந்திரம் இல்லை
என்று சொல்லி வழக்கை முடிக்கவும்
முடிகிறது.(உம் – குவாட்டரோச்சி )

மத்திய அரசு தனக்கு வேண்டாத நபர்களை
பயமுறுத்தவோ, தனக்கு சாதகமாக
செயல்பட வைக்கவோ முடிகிறது.
(உம் – லாலு பிரசாத், மாயாவதி,
முலாயம் சிங், அமர் சிங், சிபு சோரன் )

லோக்பால் வந்து விட்டால் – இந்த
இரண்டு அமைப்புகளும் – அரசாங்கத்தின்
கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு,
சுதந்திர அமைப்பான (தேர்தல் கமிஷன்
போன்றது ) லோக்பால் கட்டுப்பாட்டில்
வந்து விடும்.

லஞ்ச ஊழல் வழக்குகள் எதுவாக
இருந்தாலும், உடனடியாக விசாரணை
துவக்கப்பட்டு, ஒரு வருடத்திற்குள்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு,
அடுத்த ஒரு வருடத்திற்குள் விசாரணை
முடிவடைந்து தீர்ப்பு சொல்லப்பட்டாக
வேண்டும். ஆக மொத்தம் எந்த வழக்காக
இருந்தாலும் 2 வருடங்களுக்குள் தீர்ப்பு
கிடைத்து விடும்.

அதற்குப் பிறகு ஒரு முறை மட்டுமே,
அதுவும் சுப்ரீம் கோர்ட்டில் தான்
மேல்முறையீடு அனுமதிக்கப்படும்.

மத்திய அரசு வலுவான லோக்பாலை
கொண்டு வராமல் இழுத்தடிப்பதற்கு
இவை முக்கியமான காரணங்கள்.
இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன !

மற்றபடி தனி மனிதனின் வாழ்வில்
ஏற்படக்கூடிய விடியல்கள் –

குடிமக்களின் உரிமைகள்
(citizens charter ) என்கிற
தலைப்பில் அரசாங்க இலாக்காக்களுக்கு
சில கட்டளைகள் பிறப்பிக்கப்படும்.

பொது மக்களோடு தொடர்புடைய
ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலும்
ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்படும்.

அதில் ஒவ்வொரு செயலையும்
செய்து முடிக்க எவ்வளவு
கால அவகாசம் தேவைப்படும் என்பது
வெளிப்படையாக அறிவிக்கப்படும்.
(3 நாட்களோ, 5 நாட்களோ,
15 நாட்களோ, ஒரு மாதமோ
எவ்வளவாக இருந்தாலும் சரி )

உதாரணமாக  –

பிறப்பு / இறப்பு சான்றிதழ் கொடுக்க,
சாதிச் சான்றிதழ் கொடுக்க,
திருமணப் பதிவு சான்றிதழ் பெற,

அரசாங்க சலுகைகளைப் பெற,
குடிநீர் இணைப்பு பெற,
வீடு மற்றும் பம்ப் செட் மின் இணைப்பு பெற,

புதிய வீடு கட்ட அனுமதி பெற,
பாஸ்போர்ட்  பெற,
பத்திரங்கள் பதிவு செய்ய,
நகல்கள், வில்லங்க சான்றிதழ்கள் பெற,
ஓட்டுநர்  உரிமம்  பெற,

முக்கியமாக  ரேஷன் கார்டு பெற  –

இப்பொதெல்லாம் இந்த காரியங்களை
நடத்திக்கொள்வதற்கு, சாதாரண
பொது மக்கள் திரும்ப திரும்ப
அலைக்கழிக்கப்படுகிறார்கள்.லேசில் காரியம்
நடப்பதில்லை.
சில விஷயங்களுக்கு – அதிகாரிகளே
பணம் கேட்கிறார்கள்.
சில விஷயங்களுக்கு நாமாகவே கொடுக்க
வேண்டி இருக்கிறது.
ஒரு ரேஷன் கார்டு பெற ஒன்றரை
வருடங்களாக அலைகிறார் என் வீட்டருகே
வசிக்கும் ஒருவர்.
ஆறு மாதங்களாக பாஸ் போர்ட் அலுவலகம்
பின்னால்  அலையும் இன்னொருவரையும்
பார்க்கிறேன்.
அவரவர்க்கு உரிய பிராவிடெண்ட் பண்ட்
பணத்தையோ,
பென்ஷனையோ பெறுவதற்கே ஒவ்வொருவர்
படாத பாடு படுவதையும் பார்க்கிறேன்.

லோக்பால் வந்தால், அதன் பிறகு
இந்த மாதிரியான விஷயங்களுக்காக
அலையவோ, லஞ்சம் கொடுக்கவோ,
அதிகாரிகளைக் கெஞ்சவோ வேண்டியதில்லை.

விண்ணப்பம் கொடுத்தவுடன்,
தேதி குறிப்பிட்டு, ரசீது கொடுப்பார்கள்.
குறித்த நாள் முடிந்தவுடன் –
ராஜா மாதிரி (!)
போய் வாங்கிக் கொள்ளலாம்.
கிடைக்கவில்லை என்றால் –
காரியம் நடக்கவில்லை என்றால்,
புகார் மனு கொடுத்தால் – உடனடியாக
நிவாரணம் கிடைப்பதுடன், தாமதத்திற்கு
காரணமான அலுவலர் தண்டிக்கப்படுவார்.

நாம் கொடுக்கும் வரிப்பணத்தில் இருந்து,
நமக்குத் தேவையான பணிகளைச்
செய்வதற்காகத்தான் அரசு ஊழியர்கள்
பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். நமக்காக
வேலை செய்வது அவர்கள்  கடமை.
சகல மரியாதைகளுடன் –
அதைப்  பெறுவது நமது உரிமை.
அவர்கள் நம் சம்பந்தப்பட்ட
பணியைச் செய்வதற்காகத் தான் சம்பளம்
பெறுகிறார்கள். அவர்கள் லஞ்சம் கேட்பதோ –
நாம் கொடுப்பதோ –
இரண்டுமே தேவை இல்லாத  ஒரு சூழ்நிலை
ஏற்படும்.

கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா ?
இது உண்மையாக நடைமுறையிலும்
வந்தால் – இந்த நாடு எப்படி இருக்கும் ?

ஊழலற்ற  அரசும்,
சுயமரியாதையுடனும், பெருமையுடனும்,
வாழக்கூடிய ஒரு சமுதாயமும்,  
உருவாகும் இத்தகைய  நாள்
வரும்போது தான்  –

நாம் உண்மையான
சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to லோக்பால் வந்தால் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது ? எதற்காக இவ்வளவு அவதிப்படுகிறார்கள் ?

  1. bandhu சொல்கிறார்:

    நல்ல விளக்கம். எனக்கும் இதில் நிறைய தெரியாமை இருந்தது. நன்றி.

  2. vinayagam சொல்கிறார்:

    super answer

  3. BALAMURUGAN சொல்கிறார்:

    Thanks for this clarification. But one dobt i had: Even though the ‘Time Limit has been fixed for all activities of TNEB’, they could not followed it since the monitering persons also from TNEB. Then this JANLOKPAL bill how will works? If any third party will be monitered that bill, there is possibe to compel/ thretenin the official/ staff as they like. Isn’t it? is there any gurantee to be CLEAN SLATE persons will be the Monitering committee? Pl tell.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் பாலமுருகன் / ரிஷி,

      அட்டவணையில் குறிப்பிட்டுள்ள
      காலத்திற்குள் காரியம் முடிக்கப்படவில்லை
      என்றால்,
      யார் அந்த அலுவலகத்திற்கு பொறுப்பான
      உயர் அதிகாரியோ, அவரிடம் தான் புகார்
      கொடுக்க வேண்டும்.

      அந்த கால தாமதத்திற்கான
      காரணத்தை உடனடியாக கண்டறிந்து
      நிவர்த்தி செய்வது அவரது பொறுப்பு.

      தாமதத்திற்கு அலுவலர் யாருடைய
      பொறுப்பின்மையாவது காரணமாக இருந்தால் –
      சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை
      எடுக்கப்பட வேண்டும்.

      தாமதத்திற்கு நியாயமான காரணங்கள்
      இருந்தால் – மனு கொடுத்தவருக்கு அது
      தெரிவிக்கப்பட வேண்டும்.

      அப்படியும், மனு கொடுத்தவருக்கு
      திருப்தி ஏற்படவில்லை என்றால் –
      அவர் லோக்பால் சட்டத்தின் கீழ்
      நிர்ணயிக்கப்பட உள்ள சுயேச்சையான,
      சுதந்திரமான, அமைப்பிடம்
      புகார் கொடுக்கலாம்.

      அவரது புகார் நியாயமான முறையில்
      பரிசீலிக்கப்பட்டு குறிப்பிட்ட
      கால கெடுவுக்குள் நிவாரணம் கிடைக்க
      வழி செய்யப்படும்.

      இங்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
      இந்த citizens charter என்கிற
      அமைப்பினைப் பற்றி –

      அண்ணா ஹஜாரேயின் 240 மணி நேர
      உண்ணாவிரதம் கொடுக்கும்
      அழுத்தத்தால் –

      முதல் முறையாக நாளை தான்
      பாராளுமன்றம் விவாதிக்கப் போகிறது.

      பாராளுமன்றத்தில் இது குறித்த
      தீர்மானம் நிறைவேறினால் தான் –
      மேலே கூறப்பட்டுள்ளவை நடைபெற
      வாய்ப்பு ஏற்படும்.

      நம்முடைய மேன்மை பொருந்திய
      பாராளுமன்ற உறுப்பினர்கள் (!)
      இவற்றில் எல்லாம்
      எந்த அளவிற்கு அக்கரை காட்டுகிறார்கள்
      என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  4. ரிஷி சொல்கிறார்:

    //காரியம் நடக்கவில்லை என்றால்,
    புகார் மனு கொடுத்தால் – உடனடியாக
    நிவாரணம் கிடைப்பதுடன், தாமதத்திற்கு
    காரணமான அலுவலர் தண்டிக்கப்படுவார்.//

    எப்படி?? யாரிடம் கொடுப்பது?? அவரும் அரசாங்க ஊழியர்தானே??

  5. sathi62 சொல்கிறார்:

    லோக்பால் சாதரண குடிமக்களுக்கு என்ன நன்மையேற்படுத்தும்? தற்போதுள்ள நுகர்வோர் சட்டங்கள், தகவலறியும் சட்டங்கள் இவைகளிலிருந்து எவ்வாறு மாறுபட்டது என்பதையும் சொன்னால் நன்றாயிருக்கும்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பரே,

      லோக்பால் பற்றிய விவரங்கள் தான்
      சுருக்கமாக மேலே கொடுத்திருக்கிறேன்.

      நுகர்வோர் சட்டம் – நாம் பயன்படுத்துகின்ற
      பொருட்களில், மற்றும் சேவைகளில்,
      நமக்கு ஏற்படும் குறைகளுக்கு
      உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள்
      ஆகியோரிடமிருந்து தீர்வும்,
      பரிகாரமும்(compensation) காண உதவும்
      ஒரு சட்டம்.

      தகவல் அறியும் சட்டம் –
      அரசாங்க இலாகாக்களிலிருந்து நாம் பெற
      விரும்பும் சில குறிப்பிட்ட தகவல்களை
      பெற உதவும் சட்டம்.

      இந்த இரு விஷயங்களைப் பற்றியும்,
      ஏற்கெனவேயே வலைத்தளங்களில்
      நிறைய விவரங்கள் கிடைக்கின்றன.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  6. Albert Arockiaraj.d சொல்கிறார்:

    really very use full for every one…….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.