அம்பானியும் அரசியல்வாதிகளும் ..
கண்ணில்லாத கபோதிகள் ..
இந்திய தேசம் தனது 65வது
சுதந்திர தின பிறப்பினை கொண்டாடிக்
கொண்டிருக்கும் வேளையில் இதை
எழுதுகிறேன்.
வாராத மாமணி போல் வந்த சுதந்திரம் –
நம் முன்னோர்கள்,தடியடி பட்டும்,
செக்கிழுத்தும், பட்டினிப்போர் செய்தும்
மேனி குலைந்தும் -மீண்டும்
கிடைக்கவொண்ணா இளமையையும் இழந்தும்
வெஞ்சிறையில் வெந்து கிடந்தும்
போராடிப் பெற்ற இந்த சுதந்திரத்தின்-
உண்மையான பலன் இந்த நாட்டின்
அனைத்து மக்களுக்கும் போய்ச் சேராமல்
கூடி நின்று, கூட்டணி சேர்ந்து –
கொள்ளை அடிக்கும்
அரசியல்வாதிகளையும், அம்பானி போன்ற
மனசாட்சி இல்லாத வர்த்தகர்களையும்
சபித்துக் கொண்டே இதை எழுதுகிறேன்.
120 கோடி மக்களைக் கொண்ட
இந்த நாட்டின் செல்வங்கள் அத்தனையும்
அதெப்படி 120 குடும்பங்களிடம் மட்டும்
போய்க் குவிந்திருக்கிறது ?
இதற்கு பெயர் சுதந்திரமா ?
இது தான் ஜனநாயகமா ?
இத்தகைய ஒரு நிலையைப் பெறவா
நம் முன்னோர்கள் அத்தனை தியாகமும்
செய்தார்கள் ?
கபோதிகள் என்று யாரைச் சொல்வார்கள் ?
கண் பார்வை அற்றவர்களைத் தானே ?
கண்கள் இருந்தும்,
எதிரே காணும் காட்சியின் பாதிப்பு
சிறிதும் இல்லாமல் இருந்தால் –
அவர்களை என்னவென்று கூறுவது ?
நேற்றைய புகைப்படங்களை பார்த்தீர்களா ?
பார்த்தாலே நெஞ்சை ஏதோ செய்யவில்லை ?
அந்த மனிதர்களின் நிலையைப் பாருங்கள் –
நம்மிடம் மட்டும் அதிகாரமோ, பணமோ
இருந்தால் நாம் செய்யக்கூடிய முதல் காரியமே
இவர்களை நல்ல நிலைக்கு
உயர்த்துவதாகத் தானே இருக்கும் ?
ஆங்கிலத்தில் food,cloth & shelter –
இந்தியில் ரோட்டி, கப்டா, மகான்.
தமிழில் – உண்ண உணவு, உடுக்க உடை,
இருக்க இடம்.
உலகில் எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும்
முதல் இடம் கொடுப்பது,
முக்கியத்துவம் கொடுப்பது
இந்த மூன்றுக்கும் தான்.
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் –
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்று
-நாம் அடிமையாக இருந்த காலத்திலேயே
பாரதி சொன்னான். ஆனால் – இன்று
சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் முடிந்த
பின்னரும் நம் சக மனிதர்கள் வசிக்கும்
இடங்களை பார்த்தீர்களா ?
அவர்களின் நிலையை, கதியை கண்டீர்களா ?
இந்த நாட்டின் முக்கிய
வர்த்தக நகரம் மும்பை.
அதில் மிக மிக விலை மதிப்பு வாய்ந்த –
மலபார் ஹில்ஸ் பகுதியில்
கட்டப்பட்டுள்ள ஒரு 27 அடுக்கு
மாளிகையையும் அதன்
உள் அலங்காரங்களையும் நேற்றைய
புகைப்படங்களில் பார்த்தீர்கள் !
இதற்கு மிக அருகிலேயே –
4 அல்லது 5 கிலோமீட்டருக்குள் தான்
நாம் காணும் காட்சிகளில் –
பாதிக்கும் மேல் இருக்கிறது.
இந்த மாளிகையின் மாடியிலிருந்து பார்த்தாலே –
நாம் காணும் சேரிகளில் பாதி கண்ணுக்குத்
தெரியும்.
மனசாட்சி உள்ள மனிதன் எவனாவது
இதைச் செய்வானா ?
இவ்வளவு அருகிலேயே –
சக மனிதர்கள் பன்றிகளைப் போல்
சாக்கடையில் உழலும்போது ஐந்து பேர்
மட்டுமே கொண்ட தன் குடும்பம் வசிக்க
இத்தகைய மாளிகை ஒன்றை மெனக்கெட்டு
கட்ட மனசு வருமா ?
இந்த அம்பானிகளுக்கு இத்தனை பணம்
எங்கிருந்து வந்தது ?
அத்தனையும் இந்த நாட்டு மக்களிடமிருந்து
வந்தது தானே ?
பல்வேறு விதங்களில் சுரண்டிப் பறித்தவை
தானே ?
துணி ஆலைகள்,(textile)
இயற்கை எரிவாயு(natural gas),
எண்ணை (petrol),
தொலைபேசி (phones),
தொலைக்காட்சி சேனல்கள
(satellite chanels)
சில்லரை வணிகம் (retails –
super markets)-
ஏன் – காலணிகளைக் கூட விட்டு
வைக்கவில்லை இந்தக் களவாணிகள் …
ஒரே குடும்பத்திற்கு
எப்படிக் கிடைத்தது இத்தனை வர்த்தகம் ?
இவை அனைத்தும் நேர்மையாகத்
துவக்கியவையா ?
99.9 % ஏமாற்றி சம்பாதித்தது.
இவர்களின் தந்தை திருபாய் அம்பானி
ரிலயன்ஸ் கம்பெனியை
தொடங்கியபோது 60களில் என்னென்ன
தகிடுதத்தங்கள் எல்லாம் செய்தார் என்பதை
அந்த காலத்திய(1965-70) இந்தியன்
எக்ஸ்பிரஸ் நாளிதழ் கிடைத்தால்
நீங்களும் காணலாம்.(சிறு வயதில்
நான் படித்த கட்டுரைகளில் சில
இன்னும் நினைவில் இருக்கிறது )
(“குரு” படத்தின் கதையை நம்பாதீர்கள் –
அது இவர்களின் தந்தையை ஜெகதலப்
பிரதாபனாக உருவகப்படுத்திக் காட்ட
இவர்களே பைனான்ஸ் பண்ணி
எடுத்த படம் !)
கோதாவரி ஆற்றுப் படுகை
(godhavari basin)-ரகசியங்கள்
இப்போது தான் கொஞ்சம் வெளியே வர
ஆரம்பித்திருக்கிறது. முழுதும் வெளியே
வர விடுவார்களா ? – தெரியாது !
தந்தை இறந்தபோது,
ஒன்றாக இருப்பதை விட
இரண்டாகப் பிரிந்தால் இன்னும் அதிகம்
சம்பாதிக்கலாம் என்று பேசி வைத்துக்கொண்டு
சண்டை போட்டு பிரிவது போல் பாவ்லா
காட்டிப் பிரிந்தனர்.அதே மாதிரி
சம்பாதிக்கவும் செய்தனர் !
மத்திய மந்திரிகளில் பெரும்பாலோர்
இவர்களது சம்பளப் பட்டியலில்
(pay roll) இருப்பவர்கள்.
இவர்கள் நினைத்தால் மந்திரி சபையையே
மாற்றக்கூடிய அளவிற்கு சக்தி கொண்டவர்கள்.
இவர்கள் நினைத்தால் மத்தியிலோ,
மாநிலத்திலோ சாதிக்க முடியாதது
எதுவுமே இல்லை.
அந்த அளவிற்கு கோடி கோடியாக
பணம் விளையாடுகிறது.
பணம் சம்பாதிப்பதையோ,
பணம் வைத்திருப்பவர்களையோ –
எல்லாரையும் நான் குறை சொல்லவில்லை.
மருந்துக்கு கூட மனிதாபிமானம் இல்லாத
மனிதர்களைத் தான் நான் ஏசுகிறேன்.
“ஊருணி நீர் நிறைந்தற்றே – உலகவாம்
பேரறி வாளன் திரு”
என்றார் வள்ளுவர்.
ஊர் நடுவே இருக்கும்
நல்ல தண்ணீர்க் குளம் எப்படி ஊர் மக்கள்
அனைவருக்கும் பயன்படுகிறதோ-அது போல்
நல்ல மனிதர்களிடம் உள்ள செல்வம்
ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் படும்
என்பதே இதன் பொருள்.
“யாம் பெற்ற இன்பம் பெறுக
இவ்வையகம்” – என்கிற உணர்வு
உள்ளத்தில் இருக்க வேண்டாமா ?
சம்பாதிக்கும் பணத்தில்
ஒரு பகுதியையாவது-
ஏழைகளுக்கு பயன்படும் விதத்தில் –
நல்ல இலவச மருத்துவ மனைகளையோ,
தரமான உயர் கல்வி நிலையங்களையோ,
ஆதரவற்றோர் இல்லங்களையோ,
முதியோர் இல்லங்களையோ –
சமுதாயத்தின் அடிமட்டத்தில் உழல்கின்ற
ஏழை மக்களுக்கு கொஞ்சமாவது
நிம்மதி கொடுக்கக் கூடிய திட்டங்களையோ
-செயல்படுத்துவதில் செலவிட வேண்டாமா ?
(அதிருஷ்டவசமாக தமிழ் நாட்டில் நிறைய
செல்வந்தர்கள் நெஞ்சில் ஈரத்துடன்
இருக்கிறார்கள். பல தொழில் அதிபர்கள்
தாராள மனதுடன் சமுதாயத்திற்கு உதவிகள்
செய்கிறார்கள் – ஆனால் இப்போது
இவர்களையும் அரசியல்வாதிகள் ஆக்கிரமிக்கத்
துவங்கி விட்டார்கள் !)
அம்பானி சகோதரர்கள்
பார்த்துக்கொண்டு தானே இருந்தார்கள் –
போகும்போது எதைக் கொண்டு போனார்
இவர்களது தந்தை –
மூடிய கைகளைத் தவிர ?
இவர்கள் எல்லாம் வெறும் பணம் உற்பத்தி
செய்யும் இயந்திரங்கள் மட்டும் தானா ?
சக மனிதர்களின் சுக துக்கங்களில்
பங்கு கொள்ளும் மனமே
இவர்களுக்கு இல்லையா ?
அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்தால் –
இங்கே வேண்டுமானால் லைசென்ஸ்
கிடைக்கலாம் –
முடிவில் – மேலே போகும்போது
யார் லைசென்ஸ் கொடுப்பார்கள் ?
நான் சாடுவது இதற்காக மட்டுமில்லை.
மேலே நீங்கள் பார்த்த 27 அடுக்குமாடி
வீட்டிற்கு பெயர் வேறு ஒரு கேடு
–“அண்டில்லா”.இதன்
சொந்தக்கார சீமான் முகேஷ் அம்பானி !
மும்பை மல்பார் ஹில்ஸில் பரந்து விரிந்து
கிடக்கும் அரபிக்கடலை நோக்கி பார்வையை
விரித்திருக்கும். இந்த வீட்டின்
இன்றைய மதிப்பு சுமார்
1000 கோடி ரூபாய் !!!!!!!!!!!!!
இந்த வீட்டைக் கட்டியதிலும்
ஒரு பெரிய வில்லங்கம் –
மும்பை நகரத்துக்குள்ளாக இடம்
கிடைப்பது குதிரைக் கொம்பு.
அதுவும் மல்பார் ஹில்ஸ் பகுதியில் –
ஊஹூம் வாய்ப்பே இல்லை.
அது மற்றவர்களுக்கு.
அம்பானிகளிடம் அது நடக்குமா ?
இருக்கவே இருக்கிறது –
இவர்களது பிரத்யேக வழி !
முஸ்லிம் சமுதாயத்தினரின்
வக்ப் போர்டுக்கு சொந்தமான இடம் –
கோஜா முஸ்லிம் சமுதாயத்தினரின்
குழந்தைகளுக்கான படிப்பிற்கான
இடமாக ஒதுக்கப்பட்டிருந்தது.
கரிம்பாய் இப்ராஹிம் பாய் கோஜா
ஆதரவற்றோர் அமைப்பிடம் இருந்த –
இன்றைய தினம் 500 கோடி ரூபாய்
பெறுமானமுள்ள –
இந்த இடத்தை அம்பானியின் கம்பெனி
2002ஆம் ஆண்டு வெறும் 21.5 கோடி
ரூபாய் கொடுத்து வாங்கியது.
வக்ப் போர்டின் அனுமதி இல்லாமலேயே
இந்த இடத்தை வாங்கியது சட்டப்படி
செல்லுமா என்று அப்போதிருந்தே
அடிக்கடி கேள்வி கிளம்புவது வழக்கம் !
நானும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
எழும்பிய வேகத்திலேயே அது
அடங்கியும் விடும் !
அவ்வப்போது இத்தகைய கேள்விகளை
எழுப்புபவர்கள் எல்லாம் அம்பானி
குழுவினரால் தகுந்தபடி
“கவனிக்கப்படுகின்றனர்”.
எனவே சப்தம் கிளம்பிய வேகத்திலேயே
அடங்கி விடுகிறது.
இப்போது மீண்டும் ஒரு முறை –
குரல் எழும்பி உள்ளது. இந்த முறை –
மராட்டிய மாநில சட்ட மன்றத்திலேயே !
அதனால் என்ன ?
இவர்கள் பார்க்காத அரசாங்கமா ?
மாற்றாத மந்திரிகளா ?
இதுவும் தானாகவே அடங்கி விடும்
பாருங்கள் !
போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள –
உலகத்தின் மிகப் பெரிய பணக்காரர்களின்
பட்டியல் –
அதில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ள
இந்த மனிதரால்
இந்த சமுதாயத்திற்கு ஐந்து காசுக்காவது
பயன் உண்டா ?
காவிரிமைந்தன் அண்ணா,
இது வரை அவ்வப்போது பிச்சைக்காரர்களை
பார்த்தால் ஒரு ரூபாய் கொடுப்பேன்.
கண் தெரியாதவர்களாக இருந்தால்
ஐந்து ரூபாய் கொடுப்பேன். மற்றபடி வேறு
எதுவும் செய்ததில்லை. உங்கள் கட்டுரையை
பார்த்த பிறகு ஒரு உறுதி எடுத்துக் கொண்டுள்ளேன்.
என் மாதச் சம்பளம் சுமார் 20,000/-.
இதில் இனிமேல் மாதா மாதம் ரூபாய் 100/-
ஏழை எளியவர்களுக்கு எந்த விதத்திலாவது
நிச்சயமாக உதவி செய்வேன். யாரும் என்னைக்
கேட்கா விட்டாலும், வாலண்டியராக நானாகவே
இதைச் செய்வேன்.
இந்த உறுதியை நான் எடுக்க காரணமாக இருந்த
உங்களுக்கு என் நன்றி.
தொடர்ந்து இது மாதிரி நிறைய எழுதுங்கள்.
எங்களுக்கு நல்ல ஆலோசனை கூறுங்கள்.
வணக்கம்.
பட்டுக்கோட்டையார் சொன்னார் –
“திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது.
அதை சட்டம் போட்டு தடுக்கிற
கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது”
இங்கு பிரச்சினையே மாறி விட்டது.
திட்டம் போட்டு திருடும் கூட்டமும்,
சட்டம் போட்டு தடுக்கும் கூட்டமும்,
கூட்டணி போட்டு விட்டன.
“திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்-
திருட்டை ஒழிக்க முடியாது ”
இங்கு திருடனையே ஒழித்தால் ஒழிய
திருட்டை ஒழிக்க முடியாது.