“ஜெ” தொலைக்காட்சி பேட்டி – எப்படி இருந்தது ?

“ஜெ” தொலைக்காட்சி பேட்டி –
எப்படி இருந்தது ?


நேற்றைய தினம்(27/06/2010) டெல்லி
ஆங்கில செய்தி தொலைக்காட்சி சேனல்
“டைம்ஸ் நவ்” அதன் செய்தி ஆசிரியர்
அர்னாப் கோஸ்வாமி – தமிழக முதல்
அமைச்சர் ஜெயலலிதாவுடன் நிகழ்த்திய
உரையாடலை (பேட்டி) மிகுந்த
முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பியது.

ஒரு மணி நேர அளவிற்கு நீண்ட இந்த
பேட்டி பல விதங்களில் சுவையாக இருந்தது.

ஏனோ தெரியவில்லை – பல முக்கிய,
பரபரப்பான கருத்துக்கள் வெளியாகிய
இந்த பேட்டி தமிழ் செய்தித்தாள்கள்
எதிலும் -முழுமையாக வெளியிடப்படவில்லை !
(ஆங்கில பத்திரிகை ஹிந்துவில் மட்டும்
கொஞ்சம் விவரமாக வந்திருக்கிறது )

“ஜெ” வெளியிட்ட சில முக்கியமான
கருத்துக்கள் –

1) ராஜாவின் மீது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்
விஷயமாக – மத்திய அரசு எந்தவித
நடவடிக்கையும் எடுக்காதபோது – திமுக
மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக்
கொள்ளுமோ என்கிற தயக்கம் அதற்கு காரணமாக
இருந்தால் – அந்த இழப்பை அதிமுக ஆதரவு
கொடுத்து சமன் செய்யும் என்று  
தான் நவம்பர் 2010ல் சொன்னது இப்போது
எந்தவிதத்திலும்  பொருந்தாது.

இன்றைய சூழலில், 2ஜி வழக்குகளுக்குப் பிறகும் –
திமுக கூட்டணியுடன் தமிழக தேர்தலில்
படுதோல்வியை சந்தித்த பிறகும் –அதே கூட்டணி
தொடரும் என்று காங்கிரஸ் கட்சி கூறி விட்டதால்
இப்போதைக்கு அதிமுக வுக்கும் காங்கிரசுக்கும்
எந்தவித உறவும் இல்லை.
(எதிர்காலத்தைப் பற்றி இப்போது எதுவும்
சொல்வதற்கில்லை ! )

2) பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டோ,
மூன்றாவது அணியோ – எந்தவித
சாத்தியக்கூறையும் தான் உறுதி
செய்யவும் இல்லை, அதே சமயத்தில் –
மறுக்கவும் இல்லை.

3) மத்தியில் ஒரு கட்சி ஆட்சி என்பது இனி
எதிர்காலத்தில் நிகழக்கூடியதாக தோன்றவில்லை.
கூட்டணிகளின்  ஆட்சி தான் தொடரும்.

4) அடுத்த பாராளுமன்ற தேர்தல்  வர
2014 -ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்
என்பது அவசியமில்லை ! இப்போதிருக்கிற
சூழ்நிலையில் அதற்கு முன்னரே
எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

5) மக்கள்  மாற்றத்தை விரும்புகிறார்கள்.
மத்தியில் பலவீனமான ஆட்சியை
வெறுக்கிறார்கள்.  ஒரு பலம் வாய்ந்த,
உறுதியான  தலைமை மத்திய அரசுக்கு இப்போது
அவசியம் தேவைப்படுகிறது.

6) எனக்கு எல்லா க்ட்சியிலும் நண்பர்கள்
இருக்கிறார்கள். நரேந்திர மோடி, ஷீலா தீட்சித்,
சுஷ்மா ஸ்வராஜ், ரவிஷங்கர் பிரசாத் –
இவர்கள் அனைவரும் என்னை சந்தித்துப்
பேசியது பொதுவான நட்பு முறையில் தான்.
என்னைப் பொறுத்த வரை –
இதற்கு அரசியல் காரணங்கள்  இல்லை.
(நீங்களாவது எதாவது நினைத்துக்கொண்டால்
அதற்கு நான் பொறுப்பில்லை !)

7) பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர்
மத்தியில் 1999ஆம் ஆண்டு பாரதீய ஜனதா
ஆட்சி கவிழக் காரணமான சூழ்நிலை இப்போது
இருந்தால் – என் அணுகுமுறை மாறுபட்டிருக்கும்.
நான் வேறு விதமாக செயல்பட்டிருப்பேன்.

8) காலமும், கடந்த கால அனுபவங்களும்,
மனிதரிடையே  மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
நானும் மாறித்தான் இருக்கிறேன்.
ஒருவித நெகிழ்வுத்தன்மை (flexibility )
இருந்தால் தான் மனிதர்  வளர முடியும்.  

அதுவும்  ஒரு அரசியல்வாதி
வெற்றிகரமாக செயல்பட – விட்டுக்கொடுக்கும்
தன்மையும், நெகிழ்வான அணுகுமுறையும்
மிகவும் அவசியம்.
சூழ்நிலை  மாறுவதற்கேற்ப  நாமும் நம்மை
மாற்றிக்கொண்டு செயல்படத்தயாராக இருக்க
வேண்டும் !

9) தமிழ்நாட்டில் ஒரு எதிர்க்கட்சித்தலைவராக
நான் முன்பு செயல்பட்டது போல் இன்று
செயல்பட முடியாது.
இன்றைய தினம் – தமிழ் நாட்டின் தேவைகளை
நிறைவேற்ற மத்திய அரசின் உதவிகள்
தேவைப்படுகின்றன.
எனவே – நான் மத்திய அரசுடன் அனுசரித்துப்
போகவே  விரும்புகிறேன்.

10) பாபா ராம்தேவ் தொடர்புள்ள நிகழ்ச்சிகளில்
மத்திய அரசு இவ்வளவு கடுமை காட்டி இருக்கத்
தேவையில்லை.

11) ஆனால் பிரதமர் பதவியை லோக்பால்
அமைப்புக்கு உள்ளாக கொண்டு வருவதில்
எனக்கு உடன்பாடு இல்லை.பிரதம மந்திரி
பதவியை அது பலவீனப்படுத்தி விடும்.
அது அந்நிய சக்திகளால் நம் நாட்டை
சீர்குலைக்க பயன்படுத்திக் கொள்ளப்படக்கூடும்.

12) தேசீய அளவில் எனக்கு பதவிகள்
குறித்த திட்டங்கள் எதுவும் இல்லை. ஆனால்
என் தேசத்தைப் பற்றிய உறுதியான எண்ணங்கள்
உண்டு. இந்தியா ஒரு வல்லரசாக, உலகின்
முதல் வல்லரசாக மாற வேண்டும் என்கிற
உறுதியான எண்ணம் உண்டு.

13) என் மீது நம்பிக்கை வைத்து தேர்வு
செய்திருக்கும் என் மக்களுக்கு உண்மையாக
இருக்க விரும்புகிறேன்.  அவர்களின்
வளத்திற்காகவும், நல்வாழ்வுக்காகவும் நான்
எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறேன்.

—————————

பேட்டி நிச்சயமாக ஒரு வித்தியாசமான
ஜெயலலிதாவை வெளிக்காட்டியது.

சிரித்துக் கொண்டும், கிண்டல் பண்ணியும்,
கலகலப்பாகவும்,
சமயோசிதமாகவும் பதில் கூறும்
ஜெயலலிதாவை
நான் இப்போது தான் பார்க்கிறேன்.

தான் முன்போல் இல்லை. காலமும்,
அனுபவமும் தனக்கு முதிர்ச்சியையும்,
பக்குவத்தையும், அனுசரித்துப் போகும்
குணத்தையும் கொடுத்திருக்கின்றன என்று
அவரே  தன் வாயால் வெளிப்படையாக
சொல்வதைக் காண ஆச்சரியமாக
இருந்தது.

அவரிடம் இந்த குணம் தொடர்ந்து இருந்தால்,
அவரது அரசியல் வாழ்வில் அவர் மிகப்பெரிய
உயரத்தை அடைய இயலும்.

அவரது பேட்டியில் – என்னைப்
பொறுத்த வரையில் தவறாக  தெரிந்த
ஒரு கருத்து –  

பிரதமர் பதவி லோக்பால் வரம்பிற்குள்
வரக்கூடாது என்று கூறியதும், அதற்காக
அவர் முன் வைத்த காரணங்களும்
பொருத்தம் அற்றவை.இது அநேகமாக
அவருக்கே  தெரிந்திருக்கும்.

திமுக, பிரதமர் பதவி லோக்பால்
வரம்பிற்குள் கொண்டு வரப்பட வேண்டும்
என்று சொன்னதால் –
அதற்கு எதிரான ஒரு நிலையை எடுக்க
வேண்டும் என்பதும், இந்த நிலை காங்கிரஸ்
கட்சி நெருங்கி வர ஒரு விதத்தில்
உதவியாக இருக்கக்கூடும் என்றும்
அவர் கருதி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

பொதுவாக முழு பேட்டியை கண்ட பிறகு
எனக்கு தோன்றுவது –

அவரது இப்போதைய நோக்கம் –
திமுக வை காங்கிரசிடம் இருந்து
எப்படியாவது பிரித்து – அவர்களிடம் இருக்கும்
சொச்ச அதிகாரத்தையும் பறிப்பது.
அதற்காக தேவைப்பட்டால் இப்போதைக்கு
(அடுத்த பாராளுமன்ற தேர்தல்
அறிவிக்கப்படும் வரை மட்டும்)
காங்கிரஸ் கட்சிக்கு மத்தியில் ஆதரவு
கொடுக்கலாம். அதன் மூலம் தமிழ் நாட்டின்
தேவைகளுக்கு மத்திய அரசிடம் வேண்டியதை
சுலபமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

பாராளுமன்ற தேர்தல் வரும்போது –
காங்கிரசிடமிருந்து பிரிந்து வந்து விடலாம்-
என்பதாக இருக்கலாம்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அதிமுக, அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்து நாளிதழ், கருணாநிதி, ஜெயலலிதா, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to “ஜெ” தொலைக்காட்சி பேட்டி – எப்படி இருந்தது ?

 1. RAJASEKHAR.P சொல்கிறார்:

  அன்புள்ள-
  கா.மை அவர்களுக்கு…

  கடந்த
  ஒரு ஆண்டுகளுக்கு மேலாக
  ஜெ வின்
  நடவடிக்கைகளை கவனித்து
  admk கூட்டணிக்கு
  196 சீட்டு கிடைககும் என்று கணித்தேன்
  என்ன நடந்தது…?

  அதேபோல்
  ஜெ வின்
  நடவடிக்கை-

  ”முன்போல் இல்லை.
  காலமும்,
  அனுபவமும்
  தனக்கு முதிர்ச்சியையும்,
  பக்குவத்தையும்,
  அனுசரித்துப் போகும்
  குணத்தையும் கொடுத்திருக்கின்றன”

  குணத்திலும் நிறைய
  மாற்றம் தெரிகிறது …

  இன்றைய-
  நிலை நீடித்தால்…

  MGR ஆசியும்……
  MGR ஆட்சியையும்……
  நிலைப்பது உறுதி …..

  thanks & blessings all of u
  rajasekhar.p

 2. nivisugi சொல்கிறார்:

  ஆட்சி ஆரம்பித்து நாற்பது நாள்தான் ஆகிறது. அதற்குள் கல்வி திட்டத்தில் மிகவும் குழப்பமான சூழ்நிலை. இன்னும் நாலே முக்கால் வருடம் இருக்கிறது . எத்தனை குழப்பங்கள் வரப் போகிறதோ!? ஆனால் அவர் தெளிவான சிந்தனையில் உள்ளதாக நீங்கள் சொல்கிறீர்கள். பொறுத்திருந்து பார்ப்போம். ஒன்று மட்டும் உண்மை . அவர் கூட தெளிவாகலாம் ! அவர் அமைச்சர்கள் யாரும் தெளிவில்லை என்பது உண்மை .

 3. Ganpat சொல்கிறார்:

  //அவர் கூட தெளிவாகலாம் ! அவர் அமைச்சர்கள் யாரும் தெளிவில்லை//

  என்ன சொல்கிறீர்கள் nivisugi ?

  என்று கழகம் ஆட்சிக்கு வந்ததோ (1967) அன்று முதல் இன்றுவரை முதலமைச்சர் தானே சகலமும்! மற்ற அமைச்சர்கள் டம்மி பீஸ் தானே!

  என்ன,தி மு கழக அமைச்சர் என்றால் சுய மரியாதை குறைவாகவும்,ஊழல் அதிகமாகவும் இருத்தல் அவசியம்.

  அதுவே அம்மா கட்சி அமைச்சர் என்றால் சுய மரியாதை அறவே இல்லாமலும் ,ஊழல் சற்று குறைவாகவும் இருத்தல் அவசியம்.

  மேலும் முக்கிய வித்தியாசம்..

  தி மு கழக அமைச்சர்,பதவி பறிபோனால்,அவர் அமைச்சராக இருந்தது அவரைத்தவிர வேறு யாருக்கும் ஞாபகம் இருக்காது.

  இதுவே அம்மா கட்சி அமைச்சர் என்றால் அது அவருக்கே ஞாபகம் இருக்காது..

  உலகிலேயே கடினமான தேர்வு எனக்கருத்தப்படுவது IIT நுழைவு தேர்வு.அதில் மிகவும் கடினமான கேள்வியை விட கடினமானது “அம்மா அமைச்சரவையில் உள்ளவர்கள் பெயர் மற்றும் அவர் துறை என்ன?” எனும் கேள்வி!

  சும்மாவா இந்தியாவை உலகின் மிகப்பெரிய democrazy என்று சொல்கிறோம்?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.