அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா
திருமதி சோனியா காந்தி ?
அன்னா ஹஜாரே ஊழல் ஒழிப்புக்கான
கடுமையான லோக் பால் மசோதாவை
வலியுறுத்தி தீவிரமாக போராடுவதும்,
பொது மக்கள் பெரும் அளவில் திரண்டு,
அவருக்கு ஆதரவு அளித்து வருவதும்
காங்கிரஸ் கட்சிக்கு பெரும் திகிலை
உண்டு பண்ணி இருப்பது வெளிப்படையாகவே
தெரிகிறது.
இந்த போராட்டத்தை பலவீனமாக்க,
பிசுபிசுக்க வைக்க, அவப்பெயர் உண்டுபண்ண –
தன்னால் ஆனது அனைத்தையும் செய்து
வருகிறது காங்கிரஸ் கட்சி.
நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்
கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர்
பிரனாப் முகர்ஜி ஊழலுக்கு எதிராக போராட்டம்
நடத்துபவர்களை மிகக் கேவலமான முறையில்
பேசியுள்ளார்.
ஏளனப்படுத்தும் விதத்தில் –
அவரது முகபாவமும்,
உடல் மொழியும் (body language)
ஒரு மூத்த மத்திய அமைச்சருக்கு
உரித்தானதாக இருக்கவில்லை.காங்கிரஸ்
தலைமைக்கு தான் எந்த அளவிற்கு
விசுவாசமான அடிமை என்பதை வெளிப்படுத்தும்
விதத்தில் தான் இருந்தது அவரது பேச்சும்,
போக்கும் !
சட்டம் கொண்டு வருவது பார்லிமெண்டின்
தனிப்பட்ட உரிமை. தேர்தலில் நின்று
பாராளுமன்றத்திற்கு வராத அன்னா ஹஜாரே
போன்றவர்களுக்கு
எத்தகைய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்
என்று சொல்ல எந்த அருகதையும் கிடையாது
என்று ஆத்திரமாகப் பேசுகிறார் பிரனாப் முகர்ஜி.
ஊழ்லை ஒழிக்க மக்கள் ஒன்று திரண்டால்
காங்கிரஸ்காரர்கள் குலை நடுங்குவானேன் ?
மடியில் கனமில்லை என்றால், அவர்களே
முந்திக் கொண்டு கடுமையான சட்டத்தை
கொண்டு வர வேண்டியது தானே ?
பிரனாப் முகர்ஜி இந்த நாட்டின்
நிதி அமைச்சர். பாராளுமன்றத்தில்,ஆளும்
காங்கிரஸ் கட்சியின் அவை முன்னவர்.
எனவே மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு
பதில் சொல்ல அவர் கடமைப்பட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை
மிரட்டுவதையும், கேவலப்படுத்துவதையும்
விட்டு விட்டு முதலில் மக்கள் எழுப்பும்
கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லட்டும்.
அவருக்கு சில கேள்விகள் –
1) திருமதி சோனியா காந்தி இந்திய அரசில்
அதிகாரபூர்வமாக என்ன பதவி வகிக்கிறார் ?
2) அவர் தலைமை தாங்கும்
யுபிஏ சேர்மன் பதவிக்கு அரசியல் சட்டத்தில்
எங்கே இடம் இருக்கிறது ?
3) அரசியல் சட்டத்தில் இல்லாத ஒரு பதவியை
உருவாக்கி, அதில் காங்கிரஸ் தலைவியை
அமர்த்தி, அவருக்காக இந்திய அரசு
செய்யும் செலவுகள் எல்லாம் எந்த விதத்தில்
நேரடியானவை ? நியாயமானவை ?
4) கடந்த 2 வருடங்களில் திருமதி சோனியா
காந்தி, இந்த பதவியை பயன்படுத்தி, சென்ற
வெளிநாட்டு பயணங்கள் எத்தனை ?
எந்தெந்த நாடுகளுக்கு அவர் சென்று வந்தார் ?
அதற்காக ஆன செலவு எத்தனை கோடிகள் ?
5) கடந்த இரண்டு வருடங்களில் அவர்
எவ்வளவு முறை அமெரிக்காவிற்கு
சென்று, நோய்வாய்ப்பட்டுள்ள தன் வயதான
தாயைப் பார்த்து விட்டு வந்தார் ?
அதற்கான செலவுகளை அவரே செய்தாரா?
இல்லை அரசு செலவா ?
அவருடன் எவ்வளவு பணியாளர்கள்,
பாதுகாவலர்கள் சென்றார்கள் ?
கூடச் சென்றவர்களுக்கான
செலவுகளை யார் மேற்கொண்டார்கள் ?
6) அன்னா ஹஜாரேக்கு ஊழல் ஒழிப்பு சட்டம்
கொண்டு வரும்படி வற்புறுத்த உரிமை இல்லை
என்றால் – அரசியல் சட்டத்தில் இல்லாத
ஒரு பதவியை வகிக்கும் திருமதி சோனியா
காந்திக்கு மட்டும் எத்தகைய சட்டங்கள்
உருவாக்கப்பட வேண்டும் என்று வழிகாட்ட
சட்டப்படி எப்படி உரிமை வரும் ?
7) திருமதி சோனியா காந்தி அவர்களின்
தலைமையில் அரை டஜனுக்கும் மேற்பட்ட
அறக்கட்டளைகள் (டிரஸ்ட்)
செயல்படுகின்றனவாமே !
உண்மையில் அவை எத்தனை ?
அவற்றிற்கு நன்கொடை கொடுக்கும்
நிறுவனங்கள்/ தனிப்பட்ட நபர்கள்
யார் யார் ?
8) மிகப்பெரிய நிதி ஆதாரத்தை
கொண்டிருக்கும், சோனியா காந்தி
அவர்களின் “ராஜீவ் காந்தி பவுண்டேஷன்”
அறக்கட்டளைக்கு
இது வரை மத்திய அரசு தானமாக
கொடுத்திருக்கும் நிலம், நிதி எவ்வளவு ?
இந்த அறக்கட்டளையை நிர்வகிப்பவர்களே
இதன் மூலம் எதாவது நிதி உதவி,
போக்குவரத்து செலவு என்று எதாவது
தொகை பெற்றிருக்கிறார்களா ?
9) இது வரை இந்த அறக்கட்டளைகளுக்கு
கொடுக்கப்பட்டிருக்கும் வரி விலக்குகளின்
மொத்த மதிப்பு எவ்வளவு ரூபாய் ?
10) கடைசியாக ஒரு பெர்சனல் கேள்வி –
அது எப்படி முந்தாநாள் வரையில் மத்திய
அரசு அதிகாரியாக பணி புரிந்து வந்த
உங்கள் மகன் திடீரென்று காங்கிரஸ்
கட்சியில் சேர்ந்து,தேர்தலில் நின்று,வென்று,
மம்தா கூட்டணியில் மந்திரியும்
ஆகி விட்டாராமே ? என்ன மாயம்
செய்தீர்கள் ?
யாரையாவது கண்டுகொண்டீர்களா ?
இல்லை யாரையாவது கண்டு கொள்ளாமல்
இருந்ததற்காக கிடைத்த பரிசா ?
ஏதாவது பொதுநல வழக்குப் போட்டு இந்தக் கேள்வியெல்லாம் கேட்டா நல்லாருக்கும். ப்ளாக்குல எழுதி நமக்குள்ள ஷேர் பண்ணிக்கறதால என்னாகப்போவுது? மற்றபடி உங்கள் கருத்தாக்கங்களுக்கு என் வாழ்த்துக்கள்!