ப.சி.அவர்களின் பேட்டி – நேர்மையற்ற அணுகுமுறை …

ப.சி.அவர்களின் பேட்டி –
நேர்மையற்ற அணுகுமுறை …

நேற்றைய தினம் (08/06/2011)
மிகச்சரியாக மாலை 6 மணிக்கு  ப.சி.அவர்கள்
தொலைக்காட்சிகளுக்கு நேரடி (லைவ்) பேட்டி
கொடுத்தார்.  அது தொடர்பாக …

முதலில் ஒரு விஷயம். நாள் முழுவதும்
டெல்லி ஆங்கில தொலை காட்சிகள்
ராஜ்காட்டிலிருந்து அன்னா ஹஜாரேயின்
உண்ணாவிரத காட்சிகளை தொடர்ந்து
நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.
மத்திய அரசு இதனால் எரிச்சல் அடைந்திருந்தது
என்பது பேட்டியின் ஊடேயே தெரிந்தது.

மாலை 6 மணிக்கு அந்த நிகழ்வு இறுதி கட்டத்தை
எட்ட இருந்தது. அதற்கு சேனல்கள் முக்கியத்துவம்
கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்குடன்
இந்த பேட்டி அவசரமாக அதே நேரத்திற்கு
ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததை புரிந்து
கொள்ள முடிந்தது.

ப.சிதம்பரம் அவர்கள் மிக மிக புத்திசாலி.
நல்ல அரசியல் அனுபவம் உடையவர்.
நிறைய படித்தவர்.
பொருளாதார நிபுணர்.
சட்ட மேதை.
எந்த விஷயத்தையும் மிக மிக ஜாக்கிரதையாக
கையாளுவார். ஆங்கிலத்திலும் சரி –
தமிழிலும் சரி – பேசும்போது வார்த்தைகளை
தேர்ந்தெடுத்து பிரயோகம் செய்வார்.
அவரை யாரும் அவ்வளவு எளிதாக
விமரிசனம் செய்து விட முடியாது. அவ்வளவு
முன் ஜாக்கிரதையுடன் செயலாற்றுவார்.

இருந்தாலும் – சுயநலமும்,
நேர்மையற்றவர்களுக்காக வாதாடும் சூழ்நிலையும்
சேரும்போது – சில சமயம் அவரது போக்கிலும்
குறைகள் வெளிப்படவே செய்கின்றன என்பதற்கு
நேற்றைய பேட்டி ஒரு உதாரணம்.

ஒரு விஷயத்தை முதலில் தெளிவு படுத்தி
விடுகிறேன். நான் பாபா ராம்தேவின் செயல்களை ஆதரிக்கவில்லை.

ப.சி. அவர்கள் பாபா ராம்தேவ் பற்றி பேசும்போது
கூறியவை –

1)பாபா ராம்தேவின் பின்னணியில் இருப்பது
ஆர் எஸ் எஸ். இயக்கம்.

மார்ச் மாதம் 11ந்தேதி கர்நாடகாவில், புத்தூரில்
நடந்த ஆர் எஸ் எஸ் கூட்டத்தில்
ஊழலுக்கு எதிராக எந்த தனி நபர் அல்லது அமைப்பு
போராட்டம் நடத்தினாலும் அதற்கு ஆதரவு தர
வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2)பின்னர் ஏப்ரல் 2ந்தேதி  ஊழல் எதிர்ப்பு
முன்னணி ஒன்றை ஆர் எஸ் எஸ் அறிவித்தது.
அதில் ஒரு புரவலராக
பாபா ராம்தேவ் இடம் பெற்றுள்ளார்.

–  இது குறித்து நான் கேட்க விரும்பும் கேள்வி
ஒன்றே ஒன்று தான்.  ஆர் எஸ் எஸ் பற்றிய
தகவல்கள் எதுவாக இருந்தாலும் உடனே அது
உளவுத்துறை மூலம் உள்துறை அமைச்சகத்தை
அடைந்து விடும்.
எனவே மேற்குறித்த 2 தகவல்களும் ப.சி.
அவர்களுக்கு உடனுக்குடனே தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் – ஜூன் 1ந்தேதியும்,
3ந்தேதியும் மத்திய கேபினட் அமைச்சர்கள்
( பிரனாப் முகர்ஜி உட்பட )  பாபாவுடன்
ஆறு மணி கால அவகாசத்திற்கு நீண்ட
பேச்சு வார்த்தை நடத்தியது ஏன் ?

ஜூன் 3ந்தேதி டெல்லி விமான நிலையத்தில்
அவருக்கு 4 மத்திய மந்திரிகள் சிவப்பு கம்பள
வரவேற்பு கொடுத்தது ஏன் ?

பாபா ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம்
இருப்பது சட்டவிரோதமானது என்று
முன்கூட்டியே அறிவிக்காதது ஏன் ?

சனிக்கிழமை மாலை 5 மணிக்கு “அன்னை”
சோனியா காந்தியின் ஆலோசனைக்கு ஏற்பவே
நள்ளிரவு அதிரடிக்கு ப.சி.ஏற்பாடு செய்தார்
என்கிற நிலையில்,

மீண்டும் மீண்டும்
டெல்லி போலீஸ் தீர்மானித்தது –
நடவடிக்கை எடுத்தது –
என்று கூறி நிகழ்ந்த
விளைவுகளுக்கு பொறுப்பு ஏற்காமல்  
வழுக்குவது ஏன் ?
டெல்லி போலீஸ்  கமிஷனர் இத்தகைய ஒரு
அதி முக்கியமான முடிவை தானாகவே
எடுத்திருக்க முடியுமா ?
அத்தனை பெரிய ஆளா அவர் ?

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
அன்னா ஹசாரே மற்றும் சிவில் சொஸைடி
இயக்கத்தினர் ஊழல் ஒழிப்பு மசோதாவை
(ஜன் லோக் பால்) வலியுறுத்த அவர்களுக்கு
எந்த உரிமையும் இல்லை. நமது நாடு
அரசியல் சட்டப்படி பாராளுமன்ற ஜனநாயகத்தை
ஏற்றுக்கொண்டுள்ளது. சட்டம் இயற்றும் உரிமை
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் தான்
உண்டு. அதை வேறு யாரும் கோரி போராட
முடியாது. இத்தகைய போராட்டங்களை
மீடியாக்கள் (தொலைக்காட்சிகள்) ஆதரிப்பது
ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று
கூறி இருக்கிறார்.

எந்தவித சந்தேகத்திற்கும் இடம் இல்லை –
சட்டம் இயற்றும் உரிமை பாராளுமன்றத்திற்கு
மட்டும் தான் உண்டு.

ஆனால் –  எந்த வித சட்டங்கள் தேவை
என்பதை வலியுறுத்தும் உரிமை இந்த நாட்டின்
ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு தானே ?

46 ஆண்டுகளாக ஊழல் ஒழிப்பு மசோதாவை
நிறைவேற்றாமல் பாராளுமன்றம் தவிர்ப்பது ஏன் ?

இது வரை 8 முறை  நகல் மசோதாக்கள் தாக்கல்
செய்யப்பட்டும் ஒரு முறை கூட நிறைவேற்றப்
படாதது ஏன் ?

ஊழல் அரசுகள் தங்களை தண்டிக்கும் சட்டங்களை
தாங்களே எப்படி இயற்றும் ?

திருடனை பிடிக்கும், தண்டிக்கும்  பொறுப்பை
திருடனிடமே விட்டால் ?

கறுப்புப் பணத்தை கொண்டு வர மந்திரக்கோல்
எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்கிறார்
அதிசயமனிதர்  மன்மோகன் சிங்.

ஊழல்  மந்திரிகளை ஏன் கட்டுப்படுத்தவில்லை ?
அவர்களை  ஏன் தொடர்ந்து பதவியில்
இருக்க அனுமதித்தீர்கள் என்றால் –கூட்டணி தர்மம்
என்கிறார் ?
தர்மம் என்கிற வார்த்தைக்கே அவமானம்
இழைக்கப்படுகிறது இவர்களால் !

மும்பை ஆதர்ஷ் அடுக்குமாடி,
காமன்வெல்த் போட்டி,
2 ஜி அலைக்கற்றை,
ராஜா, கனிமொழி, தயாநிதி மாறன் என்று
தொடர்ந்து இத்தனை ஊழல்கள்
வெளிவந்திருக்கின்றனவே – இவற்றில்  எதாவது
ஒன்றிலாவது அரசாங்கம்  தானாக முன்வந்து
நடவடிக்கை எடுத்திருக்கிறதா ?

எதிர்க்கட்சிகளோ, மீடியாவோ,
சுப்ரமணியன் சுவாமி போன்ற தனி மனிதர்களோ
தொடர்ந்து மாதக்கணக்கில், வருடக்கணக்கில்
போராடிய பின்னர் தானே,
அதுவும் சுப்ரீம் கோர்ட் தலையிட்ட பிறகு தானே
இவர்கள் மீது நடவடிக்கை
துவங்கி இருக்கிறது ?

இந்த லட்சணத்தில் இவர்களே மீண்டும்  ஊழல்
தடுப்பு சட்டத்தை கொண்டு வந்தால் அது எப்படி
இருக்கும் ?

சுப்ரீம் கோர்ட்டில் ஊழல் வழக்கு காத்திருக்கும்
நிலையில் இருந்த தாமசை ஊழல் கண்காணிப்பு
கமிஷனராக அமைத்தவர்கள் தானே இவர்கள் ?
அதற்கு ப.சிதம்பரம் அவர்கள் தானே பொறுப்பு ?

இந்த நிலையில் –
நாங்களும் உங்களுடன் சேர்ந்து
உட்காருகிறோம் –
கடுமையான,
ஊழல்வாதிகள் யாரும் தப்ப முடியாத அளவில்
ஒரு மசோதா வரைவை  தயாரிக்கலாம்
என்று தானே சிவில்
அமைப்பினர் கூறுகின்றனர். வரைவு மசோதா
தயாரிக்கலாம் என்று தானே அவர்கள்
கூறுகின்றனரே தவிர  தாங்களே சட்டத்தை
நிறைவேற்றுவோம்
என்று எப்போது அவர்கள்  கூறினார்கள் ?

அடுத்த கட்டமாக -வரைவு மசோதா
பாராளுமன்றத்திற்கு தானே  போகப்போகிறது.
பாராளுமன்றம் தானே  அதை நிறைவேற்ற
வேண்டும் ?
இதில் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்கிற
பதட்டம் எதற்கு ?

ஊழல்வாதிகளை உடனடியாக பிடியுங்கள்,
ஒரு வருடத்திற்குள் விசாரணையை முடியுங்கள்,
இரண்டு வருடங்களுள் வழக்கை நடத்தி முடித்து
தீர்ப்பை அறிவியுங்கள் என்றால் இவர்கள் எல்லாம்
பதறுவது ஏன் ?

ப.சி. அவர்கள் “பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு
ஆபத்து” என்று சொல்வது  –

“எங்களை  போன்ற அரசியல்வாதிகளுக்கு
ஆபத்து”  என்று கூறுகிறாரோ என்று
நினைக்கத் தோன்றுகிறது !

– அல்லவா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகா கேவலம், மன்மோகன் சிங், raja, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ப.சி.அவர்களின் பேட்டி – நேர்மையற்ற அணுகுமுறை …

  1. arivazhagan சொல்கிறார்:

    subramaniyan samy also wasted rs.4500 crores( i am not sure the exact amout, but some how its huge)by file case against sedusamuthira plan with a silly reason, is this not waste of people money and stopped that plan. is this not come around in corruption.

    Actually parliment made by people, and then how can u said the members are thieves, actually those thieves are made by people,

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.