அமைச்சர் என்கிற பொறுப்பில் தயாநிதி மாறன் பதில் சொல்ல சில கேள்விகள் …..

அமைச்சர் என்கிற பொறுப்பில் தயாநிதி மாறன்
பதில் சொல்ல சில கேள்விகள் …..

டெஹெல்கா இதழ்  வெளியிட்ட விவரமான ஒரு
கட்டுரையை  தொடர்ந்து  அவர்களுக்கு
வக்கீல் நோட்டீஸ்  விட்டார்  அமைச்சர்
தயாநிதி மாறன்.

தொடர்ந்து  பல அரசியல் கட்சிகள்  இந்த
பிரச்சினையை தீவிரமாக எழுப்பவே –
இப்போது  ஒரு விளக்கமான  அறிக்கையை
வெளியிட்டு இருக்கிறார்.

தன் மீது எழுப்பப்படும் எந்த புகாருக்கும்
எந்தவித அடிப்படையும் இல்லை  என்றும்
வேண்டுமென்றே
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த விஷயம்
பெரிது படுத்தப்படுகிறது என்றும் கூறி இருக்கிறார்.

அவர் அறிக்கை சில தன்னிலை விளக்கங்களை
அளித்தாலும்  பல கேள்விகளுக்கு இன்னும் அவர்
பதில் சொல்ல வேண்டிய நிலையிலேயே  தான்
இருக்கிறார். அவற்றில் சில கீழே தரப்பட்டுள்ளன.

மீண்டும் வக்கீல் நோட்டீஸ்  முயற்சி  வேண்டாம்.
அது சாத்தியமில்லை.
குற்றச்சாட்டு கூறினால் தானே
அவதூறு வழக்கு,
வக்கீல் நோட்டீஸ் எல்லாம் வரும் ?

நாம் முன்  வைப்பது  கேள்விகள் மட்டுமே –
தயாநிதி அவர்கள் பெரிய மனது பண்ணி
பதில் கூறி விட்டால், இவற்றிற்கு விளக்கம்
தந்து விட்டால் – நம் பிரச்சினை தீர்ந்து விடும்.
நாம் விரும்புவது அவ்வளவே !

கேள்விகள் –

1) சன் நெட்வொர்க் தன் அண்ணனும் அண்ணியும்
மெஜாரிடி பங்குகளை வைத்திருக்கும் ஒரு நிறுவனம்.
தனக்கும் அந்த  நிறுவனத்திற்கும் என்ன
சம்பந்தம் என்று கேட்கிறார்தயாநிதி மாறன்.
உண்மை தான்.
அவர் அமைச்சராக இருக்கும் காலங்களில்
சம்பந்தம் இல்லை தான் என்றாலும்,
அமைச்சராக இல்லாத காலங்களில்
அவருக்கும் இந்த நிறுவனத்திற்கும் எந்த வித
தொடர்பும்
இருந்தது இல்லையா ?
அவர்  இந்த  நிறுவனத்தில் (ceo) தலைமை
நிர்வாக பொறுப்பை  ஒரு காலத்தில்  
வைத்திருந்தாரா இல்லையா  ?  
எனவே  நேரிடையாக இல்லாவிட்டாலும்
மறைமுகமாக இந்த நிறுவனத்தில்
அவருக்கு ஆர்வம் உண்டு தானே ?

2) சரி இவருக்கு  பங்கு இல்லை.  அவர்
மனைவிக்கோ
மைனர்  குழந்தைகளுக்கோ  சன்நெட்வொர்க்
நிறுவனத்தில் எந்த  பங்கும் இல்லையா ?

3) சன்  நிறுவனத்திற்கு  இவர் போவதே இல்லையா ?
போனதே  இல்லையா ? அது எங்கிருக்கிறது
என்றாவது தெரியுமா ?

4)டிஷ்னெட்(பிற்காலத்தில்  ஏர்செல்) நிறுவனத்திற்கு
லைசென்ஸ் வழங்காமல் 24 மாத காலம் இழுத்தடித்தது
இவருக்கு  தெரியவே தெரியாதா ?  இவருக்கு
தெரியாமலே  துறையில் செய்து விட்டார்களா ?

5)நீதிபதி ஷிவராஜ் பாடீல்  தன் அறிக்கையில் –
தேவையற்ற  கேள்விகளை கேட்டு திருப்பி
அனுப்பியும்,
வழக்கத்தில் இல்லாத  நடைமுறைகளை  
வலியுறுத்தியும்
தயாநிதி மாறன் இந்த விண்ணப்பதாரரை  அளவிற்கு
அதிகமாக  தொல்லைக்கு உள்ளாக்கி இருக்கிறார்
என்று கூறி  இருப்பதாவது தெரியுமா ?

6) நீதிபதி ஷிவராஜ் பாடீல் தன் அறிக்கையில் –
ஸ்பெக்ற்றம் விலையை நிர்ணயிப்பதில்
நிதி அமைச்சகம்
தலையிடாதவாறு  விசேஷ முயற்சிகளை தயாநிதி
மேற்கொண்டார் என்று கூறி இருப்பதாவது தெரியுமா ?

7)தயாநிதி பொறுப்பு ஏற்கும் முன்னர் மத்திய
அரசின் வழக்கமான  நடைமுறை விதிகளின்படி,  
விலைகளை நிர்ணயிப்பதில்   நிதி அமைச்சகத்தின்
சம்மதம் தேவையாக  இருந்தது  என்பது உண்மை தானே ?

8) தொலைதொடர்பு நிறுவனங்களில்  அதற்கு முன்னர்
அந்நிய  நிறுவனங்களுக்கு இருந்த 49 %  என்கிற
உச்ச அளவு  முதலீட்டு கட்டுப்பாடு தயாநிதி காலத்தில்
74 %  என்கிற அளவிற்கு  உயர்த்தப்பட்டது
(தளர்த்தப்பட்டது ) உண்மை தானே ?

9)  அதன் பயனாகத்தான், மலேசிய தொழில் பிரமுகர்
அனந்த கிருஷ்ணன்  ஏர்செல்  நிறுவனத்தில் 74 %
முதலீடு செய்து, அதை தன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வர முடிந்தது என்பது  உண்மை தானே ?

10)அனந்த கிருஷ்ணன் ஏர்செல்  உரிமையாளர்
ஆனதும், அதற்கு மேற்கொண்டு உடனடியாக
14 தொலை தொடர்பு மாவட்டங்களுக்கு அதிகப்படி
லைசென்ஸ்  கொடுக்கப்பட்டதும்  உண்மை தானே ?

11)  அதே  அனந்தகிருஷ்ணனின் SAEHL (south asia
entertainment holding ltd.) நிறுவனம்,
சன் நெட்வொர்க்கின்
dth – ல் 20 % பங்குகளுக்காக சுமார் 700 கோடியை  
முதலீடு செய்தது என்பது  உண்மை தானே ?

அவர் முதலீடு செய்த சமயத்தில் சன்  dth  
வருடத்திற்கு  73.27 கோடி ரூபாய் நஷ்டத்தில்
இயங்கிக் கொண்டிருந்தது என்பதும் அந்த பங்கின்
சந்தை விலை அதைவிட மிக மிக குறைவு என்பதும்
உண்மை தானே ?

12) பிற்காலத்தில்  ராஜா காலத்தில் தெரிய வந்த
db realtors, cineyug,  கலைஞர்  டிவிக்கு  இடையே
ஏற்பட்ட  தொடர்புக்கும்
உங்கள் காலத்தில் நிகழ்ந்த
Aircel-Maxis-Sun  Direct TV
தொடர்பும்  கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை தான்
என்று  உங்களுக்கு தோன்றவில்லையா ?

முதலாவதில்  பணம் வாங்கப்பட்டு  பின்னர்
சிபி ஐ நடவடிக்கை வந்ததும் கடன் என்று சொல்லி
திரும்ப கொடுக்கப்பட்டது.
இரண்டாவதில் 10 ரூபாய் பங்கு 700 ரூபாய் என்கிற
அளவிற்கு அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டது.
இது தானே  வித்தியாசம் ?

நீதிபதி  ஷிவராஜ் பாடீலுக்கும் உங்களுக்கும்
முன் விரோதம் ஏதாவது உண்டா ? உங்கள் மீது
அநியாயமாக அவர் புகார் கூற வாய்ப்பு உண்டா ?

கடைசியாக  ஒரே ஒரு கேள்வி –  
ஆமாம் – காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி
அவர்களை  சந்தித்து நீண்ட நேரம்
பேசிக்கொண்டிருந்தீர்களாமே ? நக்கீரனில்
போட்டிருந்தார்கள்.    எதாவது  விசேஷமா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலாநிதி மாறன், சன் டிவி, சோனியா காந்தி, தமிழ், நக்கீரன், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அமைச்சர் என்கிற பொறுப்பில் தயாநிதி மாறன் பதில் சொல்ல சில கேள்விகள் …..

 1. RAJASEKHAR.P சொல்கிறார்:

  அய்யா ….
  நீங்கள்-
  கேட்ட கேள்விகள்
  அனைத்தும் அபாண்டமானவைன்னு
  அவர்-
  பதில் சொன்ன…
  நீங்க-
  எதுன்ன
  வக்கீல் நோட்டீஸ்
  அனுப்புவீங்களா…?????
  இல்லை..
  அவதூறு கேஸ் போடுவீங்களா??????

  THANKS& BLESSINGS
  RAJASEKHAR.P

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இப்போது தான் – கொஞ்ச நேரம் முன்னாடி
  தயாநிதி தொலைக்காட்சிகளுக்கு சென்னை
  விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.
  அவர் சொன்னது –
  “நான் ஒரு அரசியல் அநாதை !
  தீண்டத்தகாத அரசியல்வாதி !
  விசாரிக்காமலே எனக்கு தண்டனை
  அளித்து விட்டார்கள் !
  என்னையும், என் கட்சியையும் (?),
  என் குடும்பத்தையும் அவமானப்படுத்த
  திட்டமிட்டு வேலை செய்கிறது
  ஒரு கும்பல் !
  இதற்கெல்லாம் அஞ்சுபவன் நானல்ல !”

  – ஜஸ்டிஸ் ஷிவ்ராஜ் பாடீலின் அறிக்கை
  தான் தயாநிதி மாறன் மீது இப்போது
  புகார்கள் எழ முக்கிய காரணம்.
  ஆனால் – அதைப்பற்றி வாயே
  திறக்கவில்லை மனிதர் !

  ராஜா சிறை செல்வதற்கு முன்னர்
  பேசியது இதே சாயலில் தான் இருந்தது !

  இருந்தாலும் இவருக்கு “அன்னை”யின்
  அருள் இருப்பதால் – இன்னும் கொஞ்ச
  நாள் ஓட்ட முடியும் என்றே தோன்றுகிறது!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.