இறைவா – இவர்கள் மாறவே மாட்டார்கள் – மாறி விடுவார்கள் என்று நினைத்த எம்மை மன்னித்து விடும் !

இறைவா – இவர்கள் மாறவே மாட்டார்கள் –
மாறி விடுவார்கள் என்று நினைத்த எம்மை
மன்னித்து விடும் !

உங்கள் மன நிலை எப்படி இருக்கிறது ?

“உனக்கு ஒரு மகள் இருந்து அவள் “செய்யாத”
குற்றத்திற்கு ” தண்டனை” அனுபவித்தால்
நீ என்ன பாடு படுவாய் ?”

சிலர்  பேசுவதிலிருந்தே  அவர் வக்கிரபுத்தி
வெளிப்படுவதை சுலபமாக புரிந்து கொள்ளலாம்.
யாராவது அனுதாபம் காரணமாக எதாவது
கேட்டாலே எடக்குமடக்காக பதில் கூறுவது.

இதற்கு முன்னாலும் சில புகழ்பெற்ற பதில்கள் உண்டு.

ரெண்டு பொம்பளைங்க பேசினாங்க – அதுல
ஒனக்கு என்னய்யா வந்துது ?”

“ஏதோ சிபி ஐ ஒன் வீட்டுலயே ரெய்டு வந்தா போல
ஏன் பதர்றே ?”

இந்த முறை கூறுவதை கவனியுங்கள்  –
கேள்வி கேட்டவருக்கே முதலில் “பிடி சாபம்” –
“உனக்கு வந்தால் தெரியும்”

பின்னர்  விளக்கம் –
“செய்யாத குற்றத்திற்கு  –  தண்டனை”

பல  கட்ட விசாரணைகளுக்குப் பிறகு,
பல சான்றுகளையும்,  ஆதாரங்களையும்
சேகரித்த பிறகு, சட்டப்படி, முறைப்படி,
சிபி ஐ வழக்கு தொடுத்திருக்கிறது.

இந்தியாவிலேயே  புகழ் பெற்ற வக்கீல்
முன் ஜாமீன் பெற வாதாடி இருக்கிறார்.

சிபி ஐ கோர்ட்  நீதிபதி நீண்ட ஆலோசனைக்கு பிறகு,
நிறைய அவகாசம் எடுத்துக்கொண்ட பிறகு,
144 பக்கம் கொண்ட  விளக்கத்தை வெளியிட்டு,
 தகுந்த காரணங்களைக் காட்டி ஜாமீன் மனுவை
நிராகரித்திருக்கிறார்.
குற்றப்பத்திரிகை  இவர்கள் என்ன செய்தார்கள்,
எப்படி எல்லாம் செய்தார்கள்
என்பதை வெட்ட வெளிச்சமாக்கி விட்டது.

இதற்கு அப்புறமும்  இவர் சொல்கிறார்” செய்யாத”
குற்றத்திற்கு  “தண்டனை”  
(இது தண்டனையே அல்ல-
சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள்
என்பதற்காக
தடுத்து, காவலில் வைத்திருக்கிறார்கள் –
அவ்வளவே )
“தண்டனை” என்பதெல்லாம் வழக்கு நடந்து முடிந்த
பிறகு தானே ?
(அதை எங்கே ஒழுங்காக நடக்க விடப்போகிறார்கள்?)

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் முதல் தடவையாக
ஓய்வு பெறுவதைப் பற்றி அறிவித்தார்.
அப்போதே, அதை நிஜமாகவே செய்திருந்தால்,
அதிகாரத்தை (மற்றவர்களிடம் கொடுக்க மனம்
வரா விட்டாலும் ) மகனிடமாவது அளித்திருந்தால் –

இன்று இத்தனை அவமானங்களையும் சந்தித்திருக்க
வேண்டாம்.
தேர்தல் தோல்விகளுக்கு இவர் காரணமாகி
இருக்க  மாட்டார்.  
இத்தகைய பெருந்தவறுகளைச்செய்ய
மகளுக்கோ,
அவரது  நண்பருக்கோ  துணிச்சலும்
வந்திருக்காது – வாய்ப்பும்  கிடைத்திருக்காது.

ஆனால் ஆசை – பதவி மீது ஆசை, பணத்தின் மீது ஆசை,
புகழின் மீது ஆசை,  குடும்பத்தின் மீது ஆசை
இறுதி வரை அதிகாரம் தன் கையிலேயே இருக்க
வேண்டும் என்று ஆசை …..

அந்த ஆசைகள் – அவை நிறைவேறுவதற்காக
எதையும்  செய்யத் துணிய வைத்தன.
அதற்காக எதையும் விலையாகத் தர
தயாராக இருந்தன.
லட்சக்கணக்கான  தமிழர்கள்-  பெண்கள், குழந்தைகள்,
முதியவர்கள்,  கால்  இழந்து, கை இழந்து,  கொத்து
கொத்தாக  விழுந்த  குண்டுகளில் –
அக்கரையில் துடிக்கத் துடிக்க உயிரை இழந்து
கொண்டிருந்தபோது –

இவர் ஆசையின் பின்னால்
அலைந்து கொண்டிருந்தார். தன் பிள்ளைக்கும்,
பெண்ணுக்கும், பேரனுக்கும்  பதவி தேடி அதன்
பின்னால் அலைந்து கொண்டிருந்தார்.

அந்த மக்கள்  விட்ட கண்ணீர்,  விடுத்த சாபம்
தானோ – இன்று நிகழ்வது ?
இவற்றால் எல்லாம் இவர்களுக்கு புத்தி வந்திருக்கும்,
இனியாவது திருந்தி விடுவார்கள்  –
மாறி விடுவார்கள்  என்று நாம் யாராவது நினைத்தால்
நம்மை மேலும் மேலும்  மடையராக்கவே
இவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு வாரமோ பத்து நாளோ –
இவர்களுக்கு ஆளா இல்லை ?
உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் பெற்று வெளிவந்து
விடுவார்கள்.  அதன் பின்னர் – இருக்கவே இருக்கிறது
நம் நாட்டு நீதி மன்ற வழி முறைகள்.
18 ஆண்டுகளுக்கு பிறகு  ஒருவழியாக, போபர்ஸ்  வழக்கையே இப்போது தானே  முடித்தார்கள்.
இந்த விஷயத்தில் இவர்களின் முன்னோர்கள் –
லாலு பிரசாத் யாதவ்,  முலாயம் சிங்  யாதவ்,
மாயாவதி  இன்னும் எவ்வளவோ பேர் இருக்கிறார்களே-
அவர்களைப் பார்த்து தெரிந்து கொண்டால் போகிறது
எப்படி இழுத்தடிப்பது என்று.

பி.கு.
சீரியஸாக  சொல்லிக்கொண்டே இருந்தால் எப்படி-
ஒரு ஜோக்  கேளுங்கள் –
பெரியவர் காலையிலிருந்தே  டிவி முன்னால்
அமர்ந்து  டெல்லி செய்திகளைப் பார்த்துக்கொண்டே
இருந்தாராம்.  ஜாமீன் விவகாரம் முடிவு கேட்டு
அவருக்கு உடல்நிலையில் எதாவது பாதிப்பு
வந்து விடப்போகிறதே என்கிற கவலையில் அவரது
விசேஷ  மருத்துவர் –  டாக்டர் கோபால், அவர் கூடவே
இருந்திருக்கிறார்.  மதியம் முடிவு வெளிவந்தவுடன்
அதிர்ச்சியில்  நெஞ்சு வலி வந்து உடனடியாக
அவசர அவசரமாக  மருத்துவமனைக்கு கொண்டு
சென்றிருக்கிறார்கள்  ————— டாக்டர் கோபாலை !

———————————————————————————————————–
இது என் கற்பனை என்று
நினைத்து விடாதீர்கள் –

ஆதாரம் – கீழேயுள்ள தினமணி செய்தியை
பாருங்கள் !

“கருணாநிதியின் மருத்துவர் கோபாலும்
காலையிலிருந்தே சி.ஐ.டி.  நகர் வீட்டிலேயே
இருந்து கருணாநிதியைக் கவனித்துக் கொண்டார்.
கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி
செய்யப்பட்டு  கைது செய்யப்படுவதாக
அறிவிக்கப்பட்டதும் கலைஞர் உள்பட
அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் . டாக்டர் கோபாலுக்கு திடீர்
நெஞ்சுவலி ஏற்பட்டது.  இதனால் அவர் காரில்
ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.”

——————————————————————————–
தொடர்ச்சி ….. (22/05/2011)
——————————————
மேலே உள்ளது நேற்றிரவு (21/05/2011)
எழுதியது.

இன்று காலை செய்தித் தாள்களில் புதிதாக
“சுயபுராணம்” என்றே தலைப்பிட்டு
எழுதி இருக்கிறார். அவர் சொன்ன பேச்சைத்
தட்டாமல் கேட்டு கலைஞர் தொலைக்காட்சியில்
20 சதவீத பங்கு வாங்கியதைத் தவிர
வேறு எந்த பாவமும் அறியாதவராம் “மகள்”.

சிபி ஐ கோர்ட் நீதிபதி செய்தது
சட்ட விரோதமாம்.

தன்னையும் திமுக வையும் அழிப்பதற்காகவும்
அழித்த இடத்தில் “தர்ப்பைப்புல்” வளரவும்
காஷ்மீர் முதல்  கன்யாகுமரி வரை  பரவியுள்ள
துரோகிகள் செய்யும் சதி இது என்று
வர்ணித்து இருக்கிறார்.

நமக்குத் தெரிந்து இவர் சொல்வது
ஜெயலலிதாவை அல்ல. அவர் நேரிடையான
எதிரி.

மற்றபடி  காங்கிரஸ் ஒன்று தான் இவரை
செல்வாகிழந்தவராக, செல்லாக்காசாக
ஆக்க தீவிரமாக முயற்சி செய்து கொண்டி
ருப்பதாகத தெரிகிறது. இவர் எழுதி இருப்பதும்
காங்கிரஸ்  குறித்து தான் என்று தெரிகிறது.
அப்படியானால் காங்கிரசில் யார் ?

சோனியா காந்தியோ,  ப.சிதம்பரமோ
பூணூல் அணிபவர்கள்  அல்லவே !

அந்த காலத்தில் தமிழில் பாட புத்தகங்களுக்கு
அர்த்தம் புரிய வைக்க பதவுரை, பொழிப்புரையுடன்
“கோனார் நோட்ஸ்”  வரும்.
இனி  கலைஞரின்  கடிதங்களுக்கும்,
அறிக்கைகளுக்கும் “கலைஞர் நோட்ஸ்”
வரும்  என்று  தோன்றுகிறது !
ஆள் ஆளுக்கு விபரீதமாக அர்த்தம்
செய்து கொள்வதைத் தடுக்க கலைஞரே
கூடவே  “நோட்ஸ்” வெளியிடவும் ஏற்பாடு
செய்து விடுவது நல்லது !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கனிமொழி, கருணாநிதி, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, ஸ்டாலின், ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to இறைவா – இவர்கள் மாறவே மாட்டார்கள் – மாறி விடுவார்கள் என்று நினைத்த எம்மை மன்னித்து விடும் !

 1. Narasimhan சொல்கிறார்:

  இது மட்டும் தானா . “வா இரண்டு பேரும் தீ குளிக்கலாம்”, ” நீதான் கொலை பண்ணினாய்”. இந்த வசனங்களுடன் “புகழ்” பெற்ற சென்னை அடை மொழியும் சேர்த்து மஞசத் துண்டு பேசியதை மறக்க முடியுமா?

 2. ramalingam சொல்கிறார்:

  இவர் கூட இருந்தால் சித்ரகுப்தனுக்கே மாரடைப்பு வரும்.

 3. Ezhil சொல்கிறார்:

  “அவர் சொன்ன பேச்சைத் தட்டாமல் கேட்டு கலைஞர் தொலைக்காட்சியில் 20 சதவீத பங்கு வாங்கியதைத் தவிர
  வேறு எந்த பாவமும் அறியாதவராம் “மகள்””- What a farce. If you listen to Neera Radia’s telephone conversation with Kani, Rasa, Poongothai etc. you’ll know it was Kani who is plotting and hiding matters from the old man. Old man is the epitome of lying.

 4. விஞ்ஞானி சொல்கிறார்:

  ஒரு விஷயம் எவரும் சுட்டிக் காட்ட வில்லையே? கனிக்கு ஜாமீன் கேட்டு வாதாடிய ஜெத்மலானி, கூறிய வாதங்களுள் ஒன்று: கனி மெஜாரிட்டி பங்குதாரர் இல்லையே? அவரை என் காவலில் வைக்க வேண்டும்? என்று. அதாவது தயாளுவை அல்லவா காவலில் வைக்க வேண்டும் என்பது தான் அவர் வாதமா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.