அற்புதங்கள் !

அற்புதங்கள் !

நேற்றைய  தினம்  வாடிகன் நகரில்  15 லட்சம்
கத்தோலிக்க  கிறிஸ்தவ மக்கள்  உணர்ச்சிப் பெருக்குடன்
கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று –

6 வருடங்கள் முன்பு மறைந்த போப் ஜான் பால் -II அவர்களது
சடலம்  வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை மீண்டும்
வெளியே  எடுத்து, லட்சக்கணக்கான  மக்கள்  தரிசனம்
செய்த பிறகு  அதை அருகில் இருக்கும்  சாப்பல் ஒன்றில்
இன்னும்  உயர்வான அந்தஸ்து கொடுத்து அடக்கம் செய்ய
இருக்கிறார்கள்.

காரணம் – மறைந்த போப் ஜான் பால் அவர்களுக்கு
“புனிதர்” பட்டம் அளிக்கப்படுவதற்கான முதல் படியாக
“ஆசீர்வாதம் பெற்றவர்” என்கிற அந்தஸ்து அளிக்கப்படும்
நிகழ்ச்சி நடைபெறுகிறது.  அற்புதங்களை நிகழ்த்தும்
ரோமன் கத்தோலிக்க மதப்பெரியவர்களை  “புனிதர்” என்று
அறிவிக்கப்படுவதற்கு சில சம்பிரதாயங்கள்  இருக்கின்றன.

சைமன் பியர் நார்மண்ட் என்கிற – பிரான்ஸ்  நாட்டைச்
சேர்ந்த கன்னியாஸ்திரீ ஒருவர்,  பார்க்கின்ஸன் நோயால்
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார்.

குணப்படுத்த இயலாத நிலையில் அவர் இருப்பதாக
மருத்துவ நிபுணர்களால் முற்றிலுமாக  கைவிடப்பட்ட நிலையில்,
தன் பிரார்த்தனை மூலம் அவரை நோயிலிருந்து விடுவித்து,
முற்றிலுமாக குணம் பெறச்செய்தார் மறைந்த போப்
ஜான் பால் அவர்கள் என்பது கத்தோலிக்க மதத்தலைவர்களால்
மனப்பூர்வமாக,
ஆதாரபூர்வமாக, ஏற்றுக்கொள்ளப்பட்டு,
அதன் விளைவாக –  போப் ஜான் பால் -II அவர்களுக்கு
“புனிதர்” அந்தஸ்து கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதே போல்  இன்னொரு  மத நம்பிக்கை –

இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரெஹ்மான்  அவர்களது  தாயாரின்
வார்த்தைகளில் –

“எங்களுடைய “பஞ்சதன் ரெக்கார்டிங்  ஸ்டுடியோ”வை
கட்டியவுடன் பூஜை போட எங்கள் குடும்பத்து
முதல் குரு “கரிமுல்லா ஷா காதிரி”யைக் கூப்பிட்டோம்.
வந்தார். கண்களால் ஒருமுறை ஸ்டுடியோவை
சுழற்றிப் பார்த்து விட்டு, “இங்க  என்ன செஞ்சாலும்
அது உலகம் எல்லாம் பரவப்போகுது” என்று சொன்னார்.

அவர் சொன்னது எனக்கும் ரெஹ்மானுக்கும் அன்று
புரியவில்லை. அன்னியிலிருந்து இன்னி வரை
எங்களை வழி நடத்திச்செல்வது  குருமார்கள்  தான் –
அல்லாஹ்  விருப்பப்படி தான் எல்லாமே  நடக்குது.

அவர் மறைந்த பிறகு,  அடுத்த குருவை
தேடிக்கொண்டிருந்தபோது, நானும் ரெஹ்மானும்
நாகூர்  தர்காவில்  மூணு வருஷம் முன்னாடி
“முஹம்மது ஹுசேன் சிருஷ்டி காதிரி” என்பவரை சந்தித்தோம்.

அவரை சந்திச்சவுடனேயே என் பிள்ளைக்கு இவர் தான்
நம் குரு என்று தோன்றி விட்டது. அவரும் புன்னகையுடன்
ஏத்துக்கிட்டார்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் கடப்பா போய் அவரைப்
பார்க்கிறோம்.  25 வயது தான் ஆகுது. சொன்னால்  
உங்களால் நம்ப முடியாது. ரெஹ்மானுக்கு ஆஸ்கர், குளோப்,
பாப்டா, கிராமி எல்லாமே  அவரோட “துஆ”வில்
(பிரார்த்தனையில்) தான் கிடச்சுது.”

இது போல் இன்னொரு  நம்பிக்கை –

ஒடுங்கிய,  வற்றலான   உடல்  –
பிரகாசமான  கருணை நிறைந்த  கண்கள் –
யாரைக் கண்டாலும்  பாசம் நிறைந்த பார்வை –
துறவி  என்கிற  சொல்லுக்கே ஒரு  இலக்கணமாகத் திகழ்ந்தவர் –
அவ்வளவு  எளிமையானவர் !
மறைந்த  காஞ்சி முனிவர் –  பெரியவர் !
வெளிப்படையாக அற்புதங்கள்  எதையும் இவர்  நிகழ்த்தியதில்லை
என்றாலும் –   இவரை தரிசனம்  செய்து அவரது  கருணையால்
வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து  விடுபட்டவர்கள் பலர் உண்டு.
அவரவர்  கர்ம வினையை  அனுபவித்து தான் கழிக்க வேண்டும்
என்று  பெரியவரே கூறினாலும் –  ஒரு குருவின்  கருணையுடன்,
துணையுடன், அதை  எதிர்கொள்ளும்போது –   
சந்திக்கும் சங்கடங்கள் –
சுலபமாகின்றன   என்பது அனுபவம்.

இவ்வாறு  ஒவ்வொரு மதத்திலும் –
மதப்பெரியவர்கள்  மக்களை
நல்வழிப்படுத்துவதில் முக்கிய பங்கு  வகிக்கிறார்கள்.
தங்கள்  கருணையால்,  தங்களை அணுகுபவர்களின்
துன்பங்களின்  சுமையைக் குறைக்கிறார்கள்.

இதில்  முக்கியமான  விஷயம்  நம்பிக்கை தான்.
மருந்தை விட,   டாக்டரிடம்   கொண்டுள்ள
நம்பிக்கை தான்
நோயாளியை சீக்கிரம் குணமாக்குகிறது.
நல்ல டாக்டர் நமக்கு சிகித்சை செய்கிறார் –
நாம் நிச்சயம் குணமாகி விடுவோம் என்கிற  நம்பிக்கை –
நோயாளி  குணமடைவதை துரிதப்படுத்துகிறது.

அனைத்து மதங்களும்  ஒரே திசையை நோக்கி தான்
பயணிக்கின்றன.
வழிகள்  தான் வேறு – வேறு.
வழிகாட்டிகள்  தான்  வித்தியாசமானவர்கள் !
யாரும்  கெட்டதை சொல்லித் தருவதில்லை.
உண்மை,  நேர்மை, இரக்கம், அன்பு,  கருணை, எளிமை,
பக்தி – இறைவனிடம்  நம்பிக்கை –  இவற்றை தான்
அனைத்து மதங்களும்,
மதத்தலைவர்களும்  போதிக்கிறார்கள்.

முன் காலங்களில் – மதத் தலைவர்களிடையே  போலிகள் யாரும்
இருந்ததில்லை.  தங்களை விளம்பரப்படுத்திக்கொண்டவர்கள்
யாரும் இருந்ததில்லை.  மதத்தை  வியாபாரப் பொருளாக்கி,
பணம்  சம்பாதித்தவர்களும் யாரும் இல்லை.

இன்றைய  நவீன உலகத்தில்,  விளம்பர யுகத்தில் –  
போலிகள்  தலையெடுப்பது சுலபமாகி விட்டது. எந்தவித  தகுதியும்  இல்லாத  அசல்  வியாபாரிகள்   எல்லாம்  
தங்களைத் தாங்களே  
குரு  என்று விளம்பரப்படுத்திக்கொண்டு, தங்களை  சுற்றி
ஒரு கூட்டத்தை உருவாக்கிக்கொண்டு,  லட்சக்கணக்கில்,
கோடிக்கணக்கில்   பணத்தை சேர்ப்பதில் குறியாக
ஈடுபட்டிருக்கிறார்கள்.  கீதையும்,  யோகாவும் –
இவர்களுக்கு  வியாபாரப் பொருளாகி விட்டது.

உண்மையில்  தவறு   நம்மிடம்  தான் இருக்கிறது.
அசலையும் –  நகலையும்,
நிஜத்தையும் – போலியையும்,
உண்மையையும் – பொய்யையும்,
இனம் பிரித்துப் பார்க்க  நம்மில் பலருக்குத் தெரியவில்லை.
போலியை   நிஜம்  என்று நம்பி அவர்கள் பின்னால் போகிறோம்.
பாதி வழி போகும்போது  அது போலி என்று தெரிய வருகிறது.
விளைவு – எல்லாவற்றின் மீதும்  நம்பிக்கையை  இழக்கிறோம்.

மதங்கள்  மக்களை  நல்வழிப் படுத்த தான்   உருவாயின.
அதே  போல் உண்மையான  ‘குரு’  என்பவர் மக்களை
மேம்படுத்தவே முயல்வர். தன்னை முன்னிருத்தி   
பணம் சம்பாதிக்க  அல்ல.

உண்மை எது – போலி எது என்று எப்படி கண்டு பிடிப்பது ?

குருவைத் தேடுவதில்   அவசரமே வேண்டாம் –  
விளம்பரம் செய்து கொள்பவர்களை  –
நம்மிடமே  பணம் கேட்பவர்களை –
குறுகிய காலத்தில்  முன்னுக்கு வருபவர்களை –
தவிர்த்தால்   போதும்.
போலிகள்    உருவாவது  குறைந்து  விடும்.

தகுதி உள்ளவர்கள்  தானாக  அடையாளம் காட்டப்படுவார்கள்.
விழித்திருப்பது  நம்  பொறுப்பு  தான்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அடுத்த சாமியார், அரசியல், ஆத்திகன், ஆத்திகர், ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், தமிழ், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அற்புதங்கள் !

 1. ramanans சொல்கிறார்:

  //எந்தவித தகுதியும் இல்லாத அசல் வியாபாரிகள் எல்லாம்
  தங்களைத் தாங்களே
  குரு என்று விளம்பரப்படுத்திக்கொண்டு, தங்களை சுற்றி
  ஒரு கூட்டத்தை உருவாக்கிக்கொண்டு, லட்சக்கணக்கில்,
  கோடிக்கணக்கில் பணத்தை சேர்ப்பதில் குறியாக
  ஈடுபட்டிருக்கிறார்கள். //

  //தவறு நம்மிடம் தான் இருக்கிறது.
  அசலையும் – நகலையும்,
  நிஜத்தையும் – போலியையும்,
  உண்மையையும் – பொய்யையும்,
  இனம் பிரித்துப் பார்க்க நம்மில் பலருக்குத் தெரியவில்லை.//

  மிக மிக உண்மை. ஆனா இதைச் சொன்னா திட்டுறாங்க. கைக்கூலி, பணத்துக்காக ‘ப்ளாக்’ எழுதுறேன், நாசமாய் போய் விடுவேன் என்றெல்லாம் சொல்லிப் பாராட்டுறாங்க. ஆசிர்வதிக்கிறாங்க. பின்னூட்டம் போடறாங்க.

  அசலுக்கும் நகலுக்கும் வித்தியாசம் புரியாத சகோதரர்களிடம் நாம் என்னத்தச் சொல்ல?

  “தன்னை அறிவது தான் அறிவு.
  பின்னை எல்லாம் பேயறிவு” என்று சொன்னார் சிதம்பர சுவாமிகள்.

  ”நான் யார்? என்று ஆராய்ந்து பார். உண்மை புரியும் என்றார் ரமணர்.

  அதையே அனைவருக்கும் வழிமொழிகிறேன்.

 2. RAJASEKHAR.P சொல்கிறார்:

  கத்தியை-
  கையில் எடுத்தவன்
  கத்தியாலேயே அழிவான்,
  அந்த பழமொழிக்கான பாடம்தான்
  ஒசாமா பின்லேடன்- வாழ்க்கை
  என்று முதலமைச்சர்
  கருணாநிதி கூறியுள்ளார்.
  அய்யா பெரியவரே
  கொள்ளையடிப்பவர்களை பற்றி ………………………………

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.